Sunday 21 April 2013

அந்தநாள் ஞாபகம்

நாங்கள் படிக்கிறம் எண்டு அம்மா அப்பாவப் பேக்காட்டிகொண்டு திரிஞ்ச காலத்தில விடியக்காலையில நாலரை மணிக்கு டியுசனுக்குப் போவது வழக்கம். தனியப் போவதற்குப் பயம் ஆனபடியால் இரண்டு மூன்று பேராகப் போவோம். எங்கள் ஊரிநூடாக மூன்று நான்கு இளஞர்கள் சீமெந்துத்தொழிற்சாலைக்கு வேலைக்குப் போவார்கள். கொஞ்ச நாள் பேசாமல்ப்போனவர்கள் பின்னர் தங்கள் குரங்குச் சேட்டையை ஆரம்பித்தார்கள். நக்கலடிக்கிறது, சயிகிளை இடிப்பதுபோல் எமக்குக் கிட்டக் கொண்டு வருவது இப்பிடிப் பல.

நான் உதுக்கெல்லாம் பயப்பிடும் ஆள் இல்லை எனினும் எனது நண்பி சரியான பயந்தாங்கொள்ளி. எடி நீ அவங்களத்திட்டாத பிறகு அவங்கள் வேற ஏதும் செய்தாலும் ஏன் வீண் பிரச்சனை என்றாள். அப்ப அம்மாட்டச் சொல்லட்டோ என்றேன். உன்ரை அம்மா பிரச்சனை இல்லை உன்ரை அம்மா என்ரை அம்மாவுக்குச் சொன்னால் என்னை பிறகு டியுசனுக்கு விட மாட்டா என்றாள். அன்றைய டியூசன் முடிய இன்னும் நாலைந்து நண்பிகளோட மந்திராலோசனை நடத்தினம். பெற்றோரிடம் சொன்னால் எங்கள் சந்தோசதுக்குத்தான் ஆப்பு ஆனபடியால் நாங்களே களத்தில இறங்குவம் எண்டு முடிவு செய்து அந்த ஒப்பிரேசன் லிபறேசனுக்கு என்னைப் பொறுப்பாப் போட்டினம்.
என் நண்பியின் வீட்டுக்கு கொஞ்சம் தள்ளி ஒரு ஒழுங்கை. பனம்மட்டை வேலி. அக்கம் பக்கம் கிட்டவாக வீடுகள் ஒண்டும் இல்லை. அடுத்தநாள் காலையில் நண்பியின் வீட்டின் முன் நாங்கள் எழுபேர் ஒன்று கூடினம். நண்பியின் வளவுக்குள் இருந்த மூண்டு தடிகள் இரண்டு பெரிய பொல்லுகள் எண்டு ஆயுதங்கள் தயார். எங்கட கெடுகாலம் அன்று பார்த்து அவங்கள் பிந்திப்போனாங்கள். அதோட நாங்கள் மெதுவாக்கதைச்சாலும் நாலுமணிக்கு அமைதியாக இருக்கிற நேரம் எங்கள் சத்தம் கேட்டு நண்பியின் அக்கா எழும்பிவிட்டா. ஒருநாளும் நாங்கள் சேர்ந்து டியுசனுக்குப் போற பழக்கம் இல்லை. அதனாலை நாங்கள் எதோ செய்யப்போறம் எண்டுமட்டும் அவவுக்கு விளங்கிபோச்சு. ஏன் எல்லாரும் ஒண்டா நிக்கிறியள்.

அக்கம்பக்கச் சனத்தை எழுப்பாமல் டியுசனுக்குப் போங்கோ அல்லது வீட்டை போங்கோ எண்டு சொல்லிப்போட்டா. தமக்கைக்குப் பயந்து என் நண்பி ஏதும் உளறினாலும் எண்டு நான் அவளின்ர கையைப் பிடித்துக்கொண்டு நிண்டு அக்கா நாங்கள் போறம் நீங்கள் போய்ப் படுங்கோ என்றேன். அன்றயதாக்குதல் அத்துடன் இடைநிறுத்தப்பட நாங்கள் எல்லோரும் ஒருவித சோகத்தோட போனம்.

அடுத்த நாள் எல்லோரும் வெள்ளனவே வந்து தடிதண்டுகளோட ஒழுங்கைகுள்ள போய் நிண்டிட்டம். சத்தம் கேட்டு இண்டைக்கும் அக்கா எழும்பிக் குழப்பிப்போடுவா எண்டு எல்லாருக்கும் பயம். நான் மட்டும் அடிக்கடி போய் ரோட்டை எட்டிப் பாத்துபோட்டு வந்தன். பத்து நிமிடம் எங்களை டெண்சனாகிப்போட்டு விசிலடிச்சபடி வலுகூலா வந்துகொண்டிருக்கினம்.

ஒழுங்கைக்குக் கிட்ட வந்த உடன கன ஆக்கள் நிக்கிறமாதிரிக்காட்ட பனம் மட்டையில அடி அடியெண்டு அடிச்சா சத்தத்தில அவங்கள் இரண்டுபேரும் என்ன செய்யிறது எண்டு திகைத்த நேரம் எல்லாரும் ஓடிப்போய் அவங்களின்ர சயிக்கிள் சில்லுகள் கரியரிலஎல்லாம் சரியான அடி. அவங்கட கால்களில அடிபடக்கூடாது எண்டு கதைச்சனாங்கள்தான் அனால் அந்த நேரம் அதெல்லாம் ஆர் பாத்தது. காலில அடி பட்டதோ எண்டு அவங்களைக் கேட்டாத்தான் தெரியும்.

அதுக்குப் பிறகு அவங்கள் எங்கட ஊர்ப்பக்கமே வாறதில்லை. பதினாறு வருடங்களின் பின் அந்த என் நண்பியும் நானும் குடும்பமாகச் சந்தித்துக் கொண்டோம். எங்கள் பிள்ளைகளுக்கு முன் நண்பி கூறியபோது உங்களோட ஒப்பிடேக்கை நாங்கள் எவ்வளவு நல்ல பிள்ளைகள் என்றாள் என் மகள்.

No comments:

Post a Comment