Saturday 16 November 2013

பெண் - கதை 1

கபிலனுக்கு மனம் நிறைந்த சந்தோசம். மதுவின் சம்மதம் இன்றுதான் கிடைத்தது. ஒருமாதமாக தூக்கமில்லை, ஒழுங்காக உண்ண  முடியவில்லை, ஏன் மற்றவர்களுடன் கதைத்துச் சிரிக்கக் கூட முடியாமல் தன்னுள் தானே  அவஸ்தையில் மூழ்கியிருந்தான். மதுவைக் கண்ட நாள் முதல் மனம் கிடந்தது அடித்துக் கொண்டது. இவள் தான் எனக்கு ஏற்றவள் என மனம் சொன்னாலும் அவள் அதை ஏற்பாளா என்னும் தவிப்பு. அந்தத் தவிப்புக்கும் காரணம் இருந்தது. கபிலன் சாதாரணமான ஒருவன். மிகவும் அமைதியானவன். நண்பர்கள் பலர் இருந்தாலும் அவர்களுடன் இவனாக அரட்டை அடிக்க மாட்டான். அவர்களின் பம்பலில் தானும் பங்குகொள்வானே தவிர தானாக எதுவும் பெரிதாகக் கதைக்க மாட்டான். நண்பர்கள் இவனை வம்புக்கிழுத்தாலும் என்னை விடுங்கோடா என்பான் அல்லது ஒரு சிரிப்பை பதிலாகத் தந்துவிட்டு இருந்துவிடுவான்.
நண்பன் ஒருவனுடன் ஒரு வீட்டுக்கு சட்லையிட் பூட்டப் போன போதுதான் மதுவை அங்கு கண்டான். பார்த்தவுடன் கண்களை எடுக்க முடியவில்லை. நண்பனிடம் சாடைமாடையாக விசாரித்த பொழுது இப்ப கிட்டடியில் நாட்டில்  இருந்து வந்திருப்பதாகக் கூறினான். இவனுக்கு மீண்டும் அவளைப் பார்க்கவேண்டும் என்று ஆசை வந்தாலும் நண்பனிடம் கூற வெட்கமாகவும் இருந்ததால் கூறவில்லை. ஒரு வாரமாக மண்டையைப் போட்டு உடைத்ததுதான் மிச்சம். எந்த வழியும் தென்படவில்லை. இனியும் தாங்காது நண்பனிடம் கூறவேண்டியதுதான் என இவன் நினைத்த வேளையில் நண்பனிடமிருந்து தொலைபேசி அழைப்பு. காசி அண்ணன் வீட்டில் திருப்பவும் சனல் ஒன்றும் வேலை செய்யுதில்லையாம். எனக்கு தனியப் போக விசராக் கிடக்கு நீயும் வாறியோ என நண்பன் கேட்க இவனுக்கு தன்னை அறியாமலே சந்தோசத்தில் வாயெல்லாம் பல்லானது. நண்பனுக்கு விளங்கிவிட்டது என்னடா ஏதும் பிரச்சனையோ என்று கேட்க ஒன்றுமில்லை என வழமையான மழுப்பல் சிரிப்புடன் நண்பனின் வண்டியில் ஏறினான். வண்டியிலும் வேகமாக அவன் மனம் மதுவிடம் பறந்தது. அவள் வீட்டில் நிப்பாளோ அல்லது எங்காவது போயிருப்பாளோ என மனம் நிலைகொள்ளாது தவித்தது. ஏன்டா கொஞ்சம் பாஸ்ட்டா காரை உடன் என்று சொன்ன இவனை நண்பன் நக்கல்ச் சிரிப்போடு திரும்பிப் பார்த்தான். விளங்கிவிட்டுதடா எனக்கு சரியான கள்ளன்ரா நீ என்று நண்பன் கூற இவன் வெட்கச் சிரிப்பு மட்டும் பதிலாகத் தந்தான். பூனை மாதிரி இருந்துகொண்டு எடேய் அவள் சின்னப் பெட்டை போல கிடக்கு என்று நண்பன் இழுத்தான். அதுக்கென்ன என்ர அம்மாவுக்கும் அப்பாவுக்கும் 12 வயது வித்தியாசம். கனபேர் ஊரில அப்பிடித்தானே கட்டிறவை என்றான். முதல் பேட்டை ஓம் எண்ண வேணுமெல்லோ அதுக்கு முதல் வீணா ஆசையை வளர்க்காதே என்றுவிட்டு அதற்குமேல் நண்பன் ஒன்றும் கூறவில்லை.

வீட்டு மணியை அடித்ததும் திறந்தது மதுதான். கபிலன் துணிவுடன் அவளைப் பார்த்தான். அவளும் இவனைப் பார்வையால் அளந்தது தெரிந்தது. சித்தப்பா இப்ப  வந்திடுவார் என்றபடி இவர்களை உள்ளே வரவிட்டு கதவைப் பூட்டினாள் மது. தேத்தண்ணி போடவோ என்று கேட்டவளை முடிக்க விடாமல் ஓம் என்றான் இவன். அவள் தேநீர் போட்டுக்கொண்டு வரும் வரை இவனுக்கு இருப்புக் கொள்ளவில்லை. நண்பனும் இவனைக் கடைக் கண்ணால் பாத்துக்கொண்டுதானிருந்தான். தேநீர் வந்தது. அவளைப் பார்த்துக்கொண்டே எடுத்தான். அவள் கண்களிலும் ஒரு படபடப்பு அது தன் பிரமையோ என்று இவனுக்குச் சந்தேகம். ஊரில நீங்கள் எந்த இடம் என அவள் உள்ளுக்குள் சென்றாலும் என்ற அவசரத்தில் கேட்டான். அவளும் அவனுக்கு முன்னாள் இருந்த கதிரையில் அமர்ந்து அவனுடன் கதைக்க வெளிக்கிட நண்பனும் அவர்களைக் கவனிக்காததுபோல் ஆனால் காதால் கேட்டுக்கொண்டே தன்  அலுவலைப் பார்த்தான். ஒரு கட்டத்தில் காருக்கு போட்டுவாறன் என்றுவிட்டு நண்பன் சென்றுவிட கபிலன் மனதுக்குள் நண்பனுக்கு நன்றி கூறிக் கொண்டான். மது எனக்கு உங்களைப் பாத்த நாள் முதல் பிடிச்சுப் போச்சு. மற்றவை மாதிரி எனக்கு சினிமாக் காதலும் வராது. ஒரு மாசமா
உங்களை நினச்சு நித்திரை கொள்ளவில்லை. உங்களுக்கும் என்னைப் பிடிச்சிருந்தா நான் உங்கட சித்தப்பாவோடை கதைக்கிறன். விருப்பமில்லாட்டிலும் சொல்லுங்கோ என்றுவிட்டு அவளைப் பார்த்தான். அவள் கண்களில் காதல் வழியவில்லை ஆனால் வெறுப்பும் இல்லை என்பது மன நின்மதியைத் தந்தது. நீங்கள் இப்பிடி உடன கேட்டா நான் என்ன சொல்லுறது. ஒரு கிழமை டைம் தாங்கோ சொல்லுறன் என்றவுடன் சரி யோசிச்சு எனக்கு சாதகமான பதிலைச் சொல்லுங்கோ என்றுவிட்டு அதற்குமேல் அங்கு நிற்க முடியாமல் கீழே வரத் திரும்பியவனை உங்கள் போன் நம்பரைத் தந்துவிட்டுப் போங்கோ என்ற அவள் வார்த்தை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. தொலைபேசி எண்ணைக் கொடுத்துவிட்டு உடனே வந்துவிட்டான். என்னிலும் பார்க்கத் துணிவுதான் ஆளுக்கு என மனம் எண்ணினாலும் ஒரு வாரமாக என்ன சொல்லுவாளோ என்று பதட்டம். இன்றுதான் மதுவிடமிருந்து தனக்குச் சம்மதம் என போன் வந்தது. உடனே தன்  நண்பனிடம் தொலைபேசியில் மகிழ்வைப் பகிர்ந்து கொண்டான். கெட்டிக்காரன் தான்ரா நீ. உன்னை நானும் குறைச்சு எடை போட்டுவிட்டன் என்று நண்பன் கூற இவனுக்கு பெருமையாக இருந்தது.

அதன்பின்னர் அவன் தாமதிக்கவில்லை. கபிலனின் தாயார் இரண்டு வருடங்களின் முன் தான் இறந்துவிட்டார்.
தந்தை தானும் தன்பாடும். ஒரு மூத்த சகோதரி திருமணமாகி குழந்தைகளுடன் கொழும்பில் வாழ்வதால் இவன் திருமணத்தில் எந்தப் பிரச்சனையும் எழவில்லை. மதுவின் சிறிய தந்தையும் தன் பெரும் பொறுப்பு தானாகக் குறைந்ததில் கபிலன் மேல் நல்ல மரியாதையும் மதிப்புமாக திருமணத்தை நடத்தி முடித்துவிட்டார். கபிலனும் வேலை செய்வதால் தனிய வீடும் எடுத்து மதுவுக்கு விரும்பியது போலவே கதிரை மேசை கட்டில் என வாங்கிப் போட்டு மதுவை தலையில் தூக்கி வைக்காத குறைதான். மதுவும் நல்ல மனைவியாக வாழ்க்கையை நன்றாகவே இரசித்து அனுபவித்தனர். பலருக்கு கபிலன் மேல் சிறு பொறாமை கூட எட்டிப் பார்த்தது. இவனுக்கு இவ்வளவு இளம் மனைவியா என்று. ஒரு வருடத்தில் அவர்களின் அன்பின் சாட்சியாக ஒரு மகனும் பிறந்துவிட்டான். பெயர் வைத்தது கூட மதுதான். மதனுக்கு இப்ப வேலையும் அதிகம். மகன் பிறந்தபின் செலவும் அதிகமானதால் தவிர்க்க முடியாததாகி விட்டது. காலையில் போனால் இரவு எழு மணியாகும் வர. நான் நாள்முழுதும் தனிய இருக்கிறன் என்ற மதுவின் புலம்பலுக்கு அதுதான் பெடியன் இருக்கிறானே துணைக்கு என்று சிரித்துச் சமாளித்தாலும் மனம் வருந்தத்தான் செய்தது.

மது உமக்கு கம்பியூட்டர் தெரியும் தானே. அதில கொஞ்சம் பழகின்னீர் எண்டா எனக்கு வீடியோ எடிட் செய்ய உதவிசெய்யலாம். சனி ஞாயிறுகளில் வீடியோ எடுக்கப் போனால் நல்ல காசுவரும் என்றான். ஏற்க்கனவே வீட்ட வாறது பிந்தி. இதுக்குள்ள சனி ஞாயிறு வேற போகப் போறியளே என மது சலிப்புடன் கேட்டாள். எல்லாம் உம்மை சந்தோசமா வச்சுக் கொள்ளத்தானே. சொந்த வீடு வாங்கவேணும் என்று சொன்னனீர் எல்லோ. கொஞ்சம் காசு இருந்தாத்தானே கடன் தருவான் என்றவுடன் மதுவும் ஒன்றும் கூறவில்லை. பின்னர் வந்த நாட்களில் மது கொஞ்சம் கொஞ்சமாக கணனியில் பழகிவிட்டாள். கபிலனுக்கு ஆச்சரியம் இவ்வளவு விரைவாக எல்லாம் பழகிவிட்டாளே  என அதை அவளிடமே மகிழ்வோடு கூறினான். தம்பி தன்ர பாட்டில விளையாடுவான். நான் என்பாட்டில கொம்பியூட்டரில செய்வான் என மது கூற கபிலனுக்கு மனது நின்மதியாகிப் போனது. இவளுக்குப் பொழுது போகிறது பிரச்சனை இல்லை என எண்ணி நின்மதிடைந்தான். ஆனால் அந்த நின்மதி இன்னும் கொஞ்ச நாட்கள் வரைதான் என பாவம் அவன் அறியவில்லை.

தொடரும்............



மதுவுக்கு இப்ப நேரமே கிடைப்பதில்லை. காலையில் எழுந்து மகனின் அலுவல்கள் பாத்து சாப்பாடெல்லாம் கொடுத்து கொட்டுக்குள் விளையாட்டுப் பொருட்களைப் போட்டுவிட்டால் அவன் தன்பாட்டில் விளையாடுவான். பிறகு கொஞ்ச நேரம் டிவியில் போகும் நாடகங்கள் பார்ப்பது, சமைப்பது எனப் போய்விடும்.மதியம் சமைத்துச் சாப்பிட்டு மகனை வெளியில் கொண்டுபோட்டு வீட்டுக்குள் வந்தால் பிறகு face book. படம் ஏதாவது இருந்தால் பார்ப்பாள். அல்லது இருக்கவே இருக்குக் கணணி. நல்ல காலம் ஒண்டும் தெரியாமல் விசரி மாதிரி இருந்திருப்பன். கபிலனுக்குத்தான் நன்றி சொல்ல வேணும் என மனதில் அடிக்கடி நினைத்துக் கொள்வாள். இதுக்கும் இல்லாவிட்டால் என் நிலை என்ன ஆகியிருக்கும். தமிழ் குடும்பங்கள் கொஞ்சம் அங்கங்கே இருக்கிறார்கள் தான். அனால் எல்லாம் பட்டிக்காட்டுக் கூட்டம். மொடே னான குடும்பங்கள் ஒன்றும் இல்லை. அதனால் மதுவும் அவர்களுடன் பழகுவதற்கு பெரிதும் விரும்புவதில்லை. கணனியில் ஆர்வம் இல்லாமல் இருந்த மதுவை கபிலன் தான் கட்டாயப்படுத்தி கணணியைப் பழக்கி விட்டது.

இப்ப எனக்கு எத்தனை நண்பர்கள். வாழ்வு எவ்வளவு ஆனந்தமாகப் போகிறது. அதுகும் இப்ப கரன் அடிக்கடி தனி மடலில் எழுதுபவற்றை வாசிக்கவே மனதெல்லாம் ஒரே படபடப்பு. என் படத்தை அனுப்பும்படி வேறு தொந்தரவு.  நான் கேட்காமலே தன படத்தை அனுப்பியுள்ளான். அழகாய்த்தான் இருக்கிறான். லண்டனில இருக்கிறபடியால் கொஞ்சம் மாடர்ன் ஆகவும் தெரிகிறான். இப்போதெல்லாம் அவனுடன் கதைக்காமல் இருக்கவே முடியவில்லை. ஸ்கைப் எவ்வளவு உதவி செய்கிறது. யாரிடமும் மாட்டத் தேவை இல்லை. பண விரயமும் இல்லை. ஆனா .......மனம் ஒரே தடுமாற்றமாகவும் இருக்கே. கபிலனுக்கு நான் துரோகம் செய்கிறேனோ? ஒருவருடன் கதைப்பது தவறில்லை. நானும் தான் என்ன செய்வது நாள் முழுவதும் வீட்டுக்குள் தனியே இருந்து இது என் குற்றம் இல்லை என தன்னைத் தானே சமாதானம் செய்துகொண்டாள் மது. இது ஒன்றும் தெரியாது கபிலனும் தன் வேலை வீடு என நாட்கள் நகர்ந்தன. மதுவுக்கும் கரனுக்குமான நெருக்கமும் கூடிக்கொண்டு போனது. மனைவியுடன் அதிக நேரம் செலவிடாததாலும் வேலைக் களைப்பாலும் மதுவிடம் ஏற்பட்ட மாற்றங்களை கபிலன் அவதானிக்கவில்லை. வேலையால் வந்தால் மகனுடன் செலவழிக்கவே நேரம் போய்விடும். மகனும் இப்ப தத்தி நடை போடுவதால் அதைப் பார்க்கவே ஆனந்தம் தான். ஞாயிற்றுக் கிழமைகளில் வெளியே எங்காவது போவோம் என்றாலும் மது அதை விரும்புவதில்லை.

மது பாடு இப்ப பெரிய திண்டாட்டம். கரன் காதல் மழையில் தினமும் குளிக்க வைக்கிறான். தன்னிடம் வரும் படி ஒரே கரைச்சல். மதுவுக்கு என்ன முடிவு எடுப்பதென்றே தெரியவில்லை. பாவம் கபிலன் என்னை விரும்பிச் செய்தவர் அவருக்கு சரியான ஏமாற்றமா இருக்கும். ஆனால் அதுக்காக நான் என் சந்தோசத்தை இழப்பதா. மகனையும் கொண்டு போகவேணும். அதிலும் இப்ப பெரிய தலைவலி பிள்ளையையும் விட்டுவிட்டு வரச்சொல்லி கரன் கூறுகிறான். அதுதான் யோசனை. பாவம் சின்னப் பிள்ளை. ஆனால் பிள்ளையைக் கொண்டு போனாலும் மற்றவை கேள்வி கேட்பார்கள். ஒருவாரச் சிந்தனையின் பின் மகனை விட்டுவிட்டுப் போவது தான் சிறந்தது என மது முடிவெடுக்கிறாள். எல்லாத்துக்கும் துணிஞ்சாச்சு. இனி யோசிச்சுப் பலனில்லை. கபிலனோட கதைக்கத்தான் வேண்டும் என எண்ணியபடி அவனுக்காகக் காத்திருந்தாள் மது.

கபிலன் வேலையால் வந்து சாப்பிட்டு முடிச்சு மகனுடன் விளையாடி மகன் தூங்கும் வரை பார்த்துக்கொண்டிருந்தவள் அதன் பின் கபிலன் நான் உங்களுடன் கதைக்க வேணும் என்றாள். கதையுமன் எதோ அந்நிய ஆக்களுக்குச் சொல்லுற மாதிரிச்சொல்லுறீர் என்றான். மதுவிடம் எந்தவிதச் சிரிப்பையும் காணவில்லை. அவனுக்கு யோசனையாக இருந்தது. தாய்க்கு காசு அனுப்பக் கேட்டகப் போறாளோ என . என்ன பேச்சை காணேல்லை என்ன எண்டு சொல்லுமன் என்றான். என்னை மன்னிச்சுக் கொள்ளுங்கோ. நான் உங்களை ஏமாத்திப் போட்டன் என்றாள். என்ன என்னைக் கட்ட முதல் யாரையாவது காதலிச்சனீரோ? அதை என்னிடம் சொல்லவில்லையோ இத்தனை நாள் அதுதானே? நீர் என்னைக் கட்டமுதல் யாரைக் காதலிச்சிருந்தாலும் எனக்கு அதைப்பற்றிக் கவலை இல்லை. நீர் ஒண்டுக்கும் யோசிக்க வேண்டாம் என்றான். நான் மற்ற ஆம்பிளையள் மாதிரி இல்லை மது உமக்குத் தெரியும் தானே என்றுவிட்டு நிமிர்ந்து அவளைப் பார்த்தான். அவனின் பார்வையைத் தவிர்த்தபடி என்னை மன்னிச்சிடுங்கோ நான் இரண்டு மாதமா நால்லா யோசிச்சிட்டுத்தான் இப்ப கதைக்கிறன். உங்களை நான் வெறுக்கேல்லை ஆனால் எனக்கும் காரனுக்கும் இப்ப 3 மாதமா பழக்கம். நாங்கள் இரண்டுபேரும் விரும்பிறம் என்றுவிட்டு நிமிர்ந்து கபிலனைப் பார்த்தாள். கபிலன் அதிர்ந்துபோய் இருப்பது தெரிந்தது. ஆனாலும் என்ன செய்வது. உங்களுக்கு அதிர்ச்சியா இருக்கும் என்று எனக்குத் தெரியும். ஆஅனால் உங்களை ஏமாற்றிக் கொண்டு தொடர்ந்து என்னால் இருக்க முடியாது என்றாள். கபிலன் திட்டுவான் அடிப்பான் என எதிர் பார்த்தவளுக்கு அவன் ஒன்றும் பேசாமல் இருந்தது ஒரு குற்ற உணர்வைத் தோற்றுவித்தது. கொஞ்ச நேரம் சத்தம் ஒன்றும் இல்லை அமைதியிலேயே கழிந்தது. அவநின் அதிர்ச்சி தெரிந்தாலும் மீண்டும் கபிலன் கபிலன் என அவனை இருமுறை கூப்பிட்டு அவனுக்கு ஒன்றுமில்லை என்பதை  நிச்சயம் செய்து கொண்டாள்.

கபிலனுக்கோ பூமிஒஇ பிளந்து தன்னை மூடிக் கொள்ளக் கூடாதா என மனம் ஏங்கியது.கத்தி அழவேண்டும் போல் மனம் ஆர்ப்பரித்தது . ஆனாலும் தன்னை அடக்கிக் கொண்டான். நான் உமக்கு என்ன பிழை விட்டனான் மது என தோய்ந்துபோன குரலில் கேட்டான் மதுவுக்கு அதற்குமேல் அடக்க முடியவில்லை. அவள்  என்னை மன்னிச்சுக் கோளுங்கோ என்று கூறியபடி பெலத்து அழத்தொடங்கினாள். அவள் அழுது முடியுமட்டும் அவனும் ஒன்றும் கதைக்கவில்லை. அழுது முடிய சரி நீர் முடிவெடுத்து விட்டீர். விருப்பம் இல்லாத ஒரு ஆளை கட்டாயப் படுத்தி இருக்க வைக்க முடியாது. எனக்கு உம்மில இப்பகூடக் கோவம் வரேல்லை. அவ்வளவு நான் உம்மில அன்பு வச்சிருக்கிறன. இண்டைக்கு வேறை ஒண்டும் கதைக்க வேண்டாம் . இரவு முழுவதும் நாளை பகல் முழுதும் யோசியும். நாளைக்கு கதைப்பம் என்றுவிட்டு எழுந்து போய்ப் படுத்துவிட்டான்.

தொடரும் .............


 பகுதி 3

மதுவுக்கு முன் ஒன்றையும் காட்டாமல் கபிலன் வந்துவிட்டானே தவிர அறைக்குள் வந்தவுடன் கத்தி அழவேண்டும் போல் இருந்தது. ஆனால் அடக்கிக் கொண்டான். மது கூறியவை மீண்டும் மீண்டும் மனதில் வந்து சூறாவளியாய்ச் சுழல எங்கே தவறு விட்டேன் என மீண்டும் மீண்டும் தன்னைத் தான் கேட்டும் விடை கிடைக்கவில்லை. அவளுக்கு என்ன குறை வைத்தேன். கேட்காமலே எல்லாம் வாங்கிக் குடுத்தேன். என்னைக் கலியாணம் கட்ட விருப்பமோ என்று கேட்டுத்தானே அவளைச் செய்தனான். அப்ப அவள் என்னைக் காதலிக்கவில்லையோ? சித்தப்பனுக்குப் பாரமாக இருக்கக் கூடாது என்று என்னைக் கட்டியிருக்கிறாள். அப்பிடிக் கட்டியிருந்தாலும் கலியாணக் கட்டி ஒன்றரை வருடத்தில் அதுக்கும் பிள்ளை இருந்தும் என்னில அன்பு ஏற்படேல்லை என்றால் .......எல்லாம் எண்ர பிழைதான். எல்லாம் அவளைக் கேட்டுச் செய்திருக்க வேணும். அவளை ராணிமாதிரி வச்சிருக்க வேனுமேண்டுதானே ஓவர் டைம் வேலை கூடச் செய்தனான். அவள் வேண்டாம் வேண்டாம் எண்ண கணணி பழக்கினது என்ர பிழை. மற்றத் தமிழ் ஆட்களோட பழகாமல் ஒதுங்கி இருந்ததும் பிழை. நான் என்ன செய்ய இப்ப. எதுக்கும் நேசனிடம் தான் கதைக்க வேணும். என்னைப் பற்றி எல்லாம் தெரிஞ்சவன் அவன்தான் என எண்ணிக் கொண்டே எழுந்தவன் மீண்டும் கட்டிலில் விழுந்தான். எதுக்கும் நாளை மது என்ன சொல்கிறாள் என்று பாப்போம் என எண்ணியபடி விடிய விடிய கட்டிலில் புரண்டு புரண்டு படுத்தும் எந்த முடிவையும் எடுக்க முடியாமல் சோர்ந்துபோய் படுத்திருந்தான். என்னதான் நினைத்தாலும் தனக்குள் அவமான உணர்வு வந்தாலும் மதுவின்மேல் கோபமோ அளவுகடந்த வெறுப்போ எழாதது அவனுக்குத் தன்மேலேயே கோபத்தை ஏற்படுத்தியது. இதுவரை மது அறைக்குள் வரவில்லை. சோபாவில் இருக்கிறாளோ அல்லது படுக்கிறாளோ என நினைத்தாலும் எழுந்து சென்று பார்க்க மனம் வரவில்லை. பக்கத்தில் தூங்கிக் கொண்டிருக்கும் மகனை எட்டிப் பார்த்தான். இவனை நான் தான் வைத்திருக்க வேணும். இவனை விட்டுவிட்டு மது எப்பிடிப் போறாள் எண்டு பார்ப்போம் என எண்ணியபடி மகனின் பிஞ்சு விரல்களைப் பற்றி தன் விரல்களால் வருடியபடி இருக்க மகன் தூக்கத்தில் சிரிப்பதைப் பார்த்துக்கொண்டு தற்காலிகமாக தன் கவலையை மறக்க மகனை தூக்கித் தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டான். மகனை நெஞ்சில் போட்டபடி தூங்கிவிட்டவன்  மகனின் அழுகைச் சத்தத்தில் கண்விழித்தான்.

கட்டிலின் நேரே மணிக்கூடு நேரம் 6 மணி காட்டியது. மகனின் அழுகைச் சத்தம் கேட்டு அறைக்குள் வந்த மது ஒன்றும் பேசாது இவனையும் நிமிர்ந்து பார்க்காது மகனை இவனிடமிருந்து வாங்கிக் கொண்டு வெளியே செல்ல இவன் எழுந்து குளியலறைக்குச் சென்று  பல் விளக்கி முகம் கழுவி வந்து தானே குசினிக்குள் சென்று தனக்கும் மதுவுக்குமாகத் தேநீர் தயாரித்து வந்து அவளின் முன் வைத்துவிட்டு தானும் கதிரையில் அமர்ந்துகொண்டான்.


கொஞ்சநேரம் தேநீரை உறிஞ்சுவதும் மதுவைப் பார்ப்பதுமாக இருந்த கபிலன் மது வாய் திறக்காமல் இருப்பதைக் கண்டு தானே ஆரம்பித்தான். என்ன முடிவேடுத்திருக்கிறீர் என்றான். கொஞ்சநேரம் ஒன்றும் கூறாது சும்மா பார்த்துக் கொண்டிருந்துவிட்டு  நான் லண்டன் போகப் போறன் என்றாள் மது. இரவு யோசித்துவிட்டு மன்னிச்சுக் கொள்ளுங்கோ என்றுதான் சொல்லுவாள் என்று எதிர்பார்த்திருந்த கபிலன் உள்ளுக்குள் நிலை குலைந்தாலும் வெளியே காட்டாது மகனை நான் தான் வைத்திருப்பேன் உம்மிடம் தரமுடியாது என்றான். நானும் கொண்டுபோக முடியாது என்று சாதாரணமாகக் கூறிவிட்டு தலையைக் குனிந்துகொண்டாள் மது. பிள்ளையை சாட்டியாவது அவளை நிப்பாட்டலாம் என்ற அற்ப ஆசையிலும் மண்விழ  எப்ப போகப் போறீர் என்றான் குரல் தொய்ந்துபோய். டிக்கெட் ஒன்று கீத்துரோவுக்குப் போட்டுத் தாங்கோ என்றால். உன்னைக் கட்டினதுக்கு இன்னும் என்னென்ன இருக்கோ என மனதுள் நினைத்தபடி சரி நான் இப்பவே பாக்கிறன் என்றுவிட்டு அறைக்குள் சென்று கணனியின் முன் அமர்ந்தான். சீ இவளுக்காக என்ன எல்லாம் செய்தன் என்று நினைக்கையிலேயே அழுகை எட்டிப் பார்த்தது. இவளுக்கு முன்னால்  அழவே மாட்டன் என தனக்குத் தானே சபதம் எடுத்துக் கொண்டான்.  அடுத்த நாளே  டிக்கெற்ரை  போட்டு போடிங் பாசையும் பிரிண்ட் செய்து அவளுக்கு முன்னால்  கொண்டுவந்து வைத்தான்.

சரி நீர் போறதுக்கான ஆயத்தங்களைச் செய்யும் நான் கொஞ்சம் வெளியில போட்டு வாறன் என்று கூறிவிட்டு  அவளின் பதிலுக்குக் காத்திருக்காமல் வெளியே வந்தான். காரில் ஏறி நேசனின் வீட்டுக்கு முன் நிறுத்திவிட்டு வீட்டுக் கதவைத் தட்டினான். கதவைத் திறந்த நேசனுக்கு ஆச்சரியம். என்னடா சொல்லாமல் கொள்ளாமல் வந்திருக்கிறாய் என்றவன் அவன் உள்ளே வர விட்டு கதவை மூடிவிட்டு வந்தான். கபிலனின் முகத்தைப் பார்த்தாலே எதோ பிரச்சனை என்று தெரிந்தது. கபிலன் சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு ஒருத்தரும் இல்லைத்தானே எனக் கேட்டான். எல்லாரும் வேலைக்கு போட்டினம் ஏன் அவங்கள்  நிக்க மாட்டாங்கள் என்று உனக்கும் தெரியும் தானே என்றுவிட்டு வந்த அலுவலைச் சொல்லன் எண்டான். நாளைக்கு விடிய நீ நிப்பாய் தானே. மதுவை ஒருக்கா எயாப்போர்ட் கூட்டிக்கொண்டு போக ஏலுமோ நேசன் என்றான். ஒ அதுக்கென்ன எங்க போறா மது   என்றான்.  லண்டன் போறாள் என்னும்போதே கபிலனின் குரலில் அழுகை எட்டிப் பாத்தது. ஏன் ஏதும் கலியாணவீடே என்று கேட்டதுதான் தாமதம் கபிலன் அழத் தொடங்கினான். என்னடா மச்சான் ஏன் ஏன் அழுகிறாய் என கேட்டவாறே அவனுக்கு அருகில் வந்து இருந்து கொண்டு தோளைத் தட்டிக் கொடுத்தான் நேசன். கொஞ்ச நேரம் அழுதபின் நண்பனிடம் தன் துன்பமெல்லாம் சொல்லி முடிய நீ அப்ப மதுவைப் போகச் சொல்லிப் போட்டியோ என்ற நேசனிடம் நான் போகாதை எண்டாலும் அவள் போகத்தான் போறாள் அதிலும் நானே அனுப்பி வைக்கிறதுதான் நல்லது என்றுவிட்டு உனக்கு கொண்டு பொய் விட ஒரு பிரச்சனையும் இல்லைத்தானே என்றான். எனக்கு ஒரு பிரச்சனையும் இல்லை ஆனால் நான் ஒருக்காக் கதைச்சுப் பாக்கட்டே என்ற நேசனை இடை மறித்து பிள்ளையையே விட்டுட்டுப் போகத் தயாரானவள் நீ சொல்லிக் கேட்கவே போறாள் என்றுவிட்டு நாளைக்கு  விடிய 8 மணிக்கு வீட்டை வா.12. 20 க்கு பிளைட்  என்றவன் போக வெளிக்கிட நீ என்னெண்டு பிள்ளையைத் தனிய வச்சிருக்கப் போறாய் எண்டவனிடம் எனக்கு ஒரு மாத லீவு இருக்கு. இனித்தான் அடிச்சுச் சொல்லப் போறன். பிறகு என்ன செய்யிறதெண்டு பாப்பம் என்று விட்டு கதவைத்  திறந்து கொண்டு செல்லும் நண்பனை இரக்கத்துடன் பார்த்துக் கொண்டான். எதுக்கும் நாளை மதுவோட கதைச்சுப் பாகத்தான் வேணும் என்று எண்ணியபடி கதவைச் சாத்திவிட்டு கதிரையில் வந்து அமர்ந்தான்


பகுதி 4

கபிலனுக்கு வீட்டுக்குப் போகவே விருப்பம் வரவில்லை. தன்னில் விருப்பம் இல்லாத மனைவி வீட்டில் இருக்க யாருக்குத்தான் வீட்டுக்குப் போக மனம் வரும். அதுகும் ஆசையாகக் காதலித்து மணந்தவள் இன்னொருவனிடம் மனத்தைக் கொடுத்துவிட்டு கணவனிடமே சொல்கிறாள் என்றால், என் நிலை யாருக்கும் வரக்கூடாது என்று எண்ணியபடி கடைக்குப் போய் ஒரு மாதத்துக்கு மகனுக்குத் தேவையான அனைத்துப் பொருட்களையும் வாங்கிக் கொண்டு காரில் ஏறியவன் நாளையும் அதற்கு அடுத்துவரும் நாட்களும் எப்படிக் கழியப் போகிறது என எண்ணியபடியே போய்க்கொண்டிருந்தான். மகன் தான் இன்னும் பாவம். தாயுடனேயே இருந்து பழகியவன் எப்படி இருக்கப் போகிறான். சாமாளிக்க வேண்டியதுதான். அவன் தத்தி நடைபோடும் அழகே தனிதான். எட்டுப் பற்களுடன் வாய் திறந்து சிரிப்பது அதைவிட அழகு. புரியா மொழியில் கொன்னைப் பேச்சு நினைத்தாலே எவ்வளவு மகிழ்வா இருக்குது. இதையெல்லாம் கூட விட்டுப் போவாளா ஒருத்தி. கல்மனதுக்காரி. போகட்டும் எனக்கு மகன் இருக்கிறான் என்று எண்ணிக் கொண்டிருக்கையில் தொடர்ந்து கார்க்கோண் அடிக்கும் சத்தம். அப்போதான் நினைவு வரப்பெற்று பார்த்தால் கடவை விளக்கு பச்சை காட்டியபடி நிற்பது கண்ணில் விழ உடனே காரை நகர்த்தினான்.வீட்டுக்குப் போகத்தான் வேண்டும். வேறு வழியில்லை. காரை வீட்டின் முன் நிறுத்திவிட்டு வாங்கிய பொருட்களையும் எடுத்துக் கொண்டு கதவைத் திறந்துகொண்டு உள்ளே சென்றான்.

மது குசினிக்குள் சமைத்துக்கொண்டு இருப்பது தெரிந்தது. மற்றும் வேலை என்றால் இவனும் போய் நின்று உதவுவான். இன்று தொலைக் காட்சியைப் பார்த்துக்கொண்டு இருக்க முற்பட்டாலும் மனம் அதில் பதியவில்லை. ஆனாலும் சும்மா இருப்பது சூனியம் வைத்ததுபோல் ஆகுமென்று மனதை எங்கோவிட்டு பார்வையை மட்டும் பதித்தான் தொலைக்காட்சிப் பெட்டியில். சொர்க்கமாக இருந்த வீடு சுடுகாடுபோல் ஆனது ஏன் என மனது தவிப்புடன் கேட்டாலும் விடைதான் கிடைக்கவில்லை. எவ்வளவு நேரமாக அங்கு இருந்தானோ சாப்பிடலாம் என்னும் மதுவின் குரலால் சிந்தை கலைந்திட அவளை நிமிர்ந்து பார்த்தான். அவள் தலையைக் குனிந்துகொண்டே இருப்பதைக் கண்டதும் நான் பிறகு சாப்பிடுறன் என்றுவிட்டு தொடர்ந்து தொலைக் காட்சி பார்ப்பதுபோல் பார்வையைப் பதித்தாலும் மது படுக்கை அறைக்குள் சென்று கதவைச் சாத்துவது கடைக்கண்ணில் தெரிந்தது. மகனும் நித்திரைபோல. சத்தத்தைக் காணவில்லை என்று கேட்பதற்கு வாயெடுத்தவன் ஒன்றும் கூறாமல் வார்த்தைகளை விழுங்கிவிட்டு சோபாவில் படுத்து கைகளை நெற்றியில் வைத்துக் கொண்டான். அப்படியே தூங்கியும் விட்டான்.
மகனின் கைகள் முகத்தில் அடிக்க திடுக்கிட்டு எழுந்தவன் முன்னால்  இருந்த மணிக்கூட்டில் நேரத்தைப் பார்த்தான். மாலை ஐந்தாகி  விட்டிருந்தது. இரவு தூங்காமல் இருந்தது இப்போது தன்னை அமுக்கிவிட்டது அதுக்கும் நல்லதுக்குத் தான் என எண்ணியவன் மகனை தூக்கி மடியில் வைத்துக் கொண்டு எப்ப எழும்பின்னியள். அப்பாவுக்கு இப்பவே அடி போடத் தொடங்கிவிட்டியளோ என தான் இயல்பாய் இருப்பதுபோல் மதுவுக்குக் காட்ட கொஞ்சம் பலமாகக் கூறினான். சாப்பாடு கொண்டு மது வருவது தெரிந்தது. வேண்டாம் என கூறுவோம் என மனதுள் எழுந்த நினைப்பை அடக்கிக் கொண்டு கை நீட்டி மதுவைப் பார்க்காமலே உணவுத் தட்டை வாங்கிக் கொண்டு உண்ணத் தொடங்கினான். நீ என்னை விட்டுப் போவதால் எனக்கு ஒன்றும் பாதிப்பு இல்லை என மதுவுக்குக் காட்டும் நினைப்பு. மதுவும் உணவுடன் வந்து உணவு மேசையில் இருப்பது தெரிந்தது. இவளும் இன்னும் உண்ணவில்லையோ என ஒரு சிறு பரிதாபம் எழுந்து, எழுந்த வேகத்திலேயே அடங்கியும் போனது. மற்றும் வேளை எனில் தொலைக்காட்சி பார்த்தபடி உண்ணவே மது விடமாட்டாள். உணவு மேசையில் இருந்துதான் உண்ணலாம். இன்று அவளும் ஒன்றும் கூறவில்லை. அவனும் அங்கு போகவில்லை. உண்மையில் அவனுக்கு உணவு உண்ணவே முடியவில்லை. ஆனாலும் உண்டுமுடித்து கை கழுவிக் கொண்டு வந்து மீண்டும் கொஞ்ச நேரம் தொலைக் காட்சி பார்த்துக்கொண்டு மகனுடன் விளையாடியவன் மகனை வெளிக்கிடுத்தி,  நான் மகனுடன் கொஞ்ச நேரம் வெளியில போட்டு வாறன் என்று அவளுக்குச் சொல்லிவிட்டு பதிலுக்குக் காத்திருக்காமல் வெளியே சென்றுவிட்டான்.

மகனை மது வெளியே கொண்டு செல்லும்போது குழந்தைகளுக்கான வண்டிலில் வைத்துத் தான் கொண்டுபோவாள். கபிலன் மகனைக் கைகளில் தூக்கியபடி நடக்கத் தொடங்கினான். கீழே இறக்கி விடும்படி மகன் கைகால்களை அசைத்து இவனிடமிருந்து உன்னினான். கீழே மகனை இறக்கிவிட்டு சிறிய கைகளைப் பிடித்துக்கொண்டு மெதுவாக நடக்கத் தொடங்கினான். திருமணமான புதிதில் வீதியால் நடந்து போகும்போது இவன் ஆசையுடன் மதுவின் கைகளைப் பற்றினால் மது மற்றவர்கள் பார்ப்பார்கள் என்று கைகளைக் கூச்சத்துடன் இழுத்துக் கொள்வது நினைவில் வந்தது. கட்டிய கணவன் கைபிடிக்க வீதியில் கூச்சப்பட்டவள் இன்று இன்னொருவனை நாடிப் போகிறாள் என்பதை இன்னும் தான் இவன் மனம் நம்ப மறுத்தது. இருளத் தொடங்க மகனுடன் திரும்ப இனி இதுதான் எமக்கான வாழ்க்கை என மனது கூற, எவ்வளவு தான் மறைக்க நினைத்தாலும் முகத்தில் அவனை அறியாமல் சோகம் வந்து சூழ்வதைத் தவிர்க்க முடியவில்லை. தாயைக் கண்டதும் கைகளைத் தூக்கியபடி ஓடும் மகனைப் பார்த்துவிட்டு இவன் குளியலறை சென்று குளித்துவிட்டு தலையணையும் போர்வையும் எடுத்துக்கொண்டு வந்து சோபாவில் நீட்டி நிமிர்ந்து படுத்தபடி தொலைக்காட்சியை இயக்கிவிட்டு அதைப் பார்த்தபடி தனது தொலைபேசியில் காலை எழும்பவேண்டிய நேரத்துக்கு அலாம் வைத்துவிட்டுப் படுத்துவிட்டான். இந்த இரவு அவனுக்கு அவனறியாமலே தூக்கம் வந்துவிட்டது.

காலை அலாம் அடிக்க முன்பே கபிலனுக்கு முழிப்பு வந்துவிட்டது. கண்ணைத் திறந்து பார்த்துவிட்டு கொஞ்ச நேரம் அப்படியே இருந்தான். மதுவை எழுப்பிவிடுவம் என்று நினைக்க குசினிக்குள் வெளிச்சம் தெரிந்தது. அப்ப மது எழும்பிவிட்டாள். தன் அலுவலில் அவள் கவனம் தானே என எண்ணியபடி தன் காலைக் கடன்களை முடித்தான். வீட்டு மணிச்சத்தம் கேட்டதும் இவன் எழ மதுவும் குசினிக்குள் இருந்து வெளியே வந்து யார் விடிய நேரம் என்று கேட்க, உம்மை எயாப்போர்ட்டுக்குக் கூட்டிக்கொண்டு போக நேசன் வந்திருக்கிறான் என்றான். அவர் எதுக்கு நீங்கள் எங்க போறியள் என்று கேட்டவளுக்குப் பதில் சொல்லாது கதவைத் திறந்தான். உள்ளே வந்த நேசன் ஒன்றையும் காட்டிக்கொள்ளாமல் வணக்கம் மது என்ன ரெடியோ என்றான் சிரித்துக் கொண்டே. ஓம் அண்ணா பொறுங்கோ தேத்தண்ணி இருக்கு குடிச்சிட்டு வெளிக்கிடுவம் என்றபடி குசினியுள் சென்று இரு கோப்பைகளில் தேநீரைக் கொண்டுவந்து மேசையில் வைத்துவிட்டு ஒன்றை எடுத்து நேசனிடம் நீட்டிவிட்டு படுக்கை அறைக்குள் சென்றாள். கபிலன் உடைமாற்றிக் கொண்டிருந்தான். இவள் உள்ளே வருவது தெரிந்தும் கவனிக்காமல் மாற்றி முடிய வெளியே போக எத்தனிக்க, என்னை மன்னிச்சுக் கொள்ளுங்கோ என்றாள். உம்மை மன்னிச்சா என்ன மன்னிக்காட்டி என்ன நிலைமை மாறப் போறதில்லை. அதனால என்ன கதைச்சும் பிரயோசனம் இல்லை என்றுவிட்டு வெளியே வந்துவிட்டான்.

இரண்டு பயணப் பெட்டிகளில் தன் பொருட்களை அடக்கிகொண்டவள் இரண்டையும் கொண்டுவந்து வரவேற்பறையுள் வைத்தாள். பெட்டிகளைத் தூக்கப் போன கபிலனை இடைமறித்த நேசன் விடடா நானே தூக்கிறன் என்றபடி பெட்டிகளை எடுத்துக் கொண்டு நடக்க இவனைத் திரும்பிப் பாத்துவிட்டு மதுவும் நேசனைப் பின்தொடர்ந்தாள். இவன் வழியனுப்பப் போகவில்லை. அவளது பெட்டிகளை நேசன் காருக்குப் பக்கத்தில் வைத்துவிட்டு மது குறை நினைக்காதைங்கோ. உங்களை என்ர சகோதரியா நினைச்சுச் சொல்லுறன். கபிலனைப் போல ஒருத்தன் கிடைக்கக் குடுத்துவைக்க வேணும். நீங்கள் அவசரப்பட்டு உந்த முடிவை எடுத்திருக்கிறியள். எதுக்கும் ஒருக்கா யோசியுங்கோ என்றுவிட்டு மதுவைப் பார்த்தான். அவளோ யோசிச்சுத் தான் நான் முடிவு எடுத்தனான் என்று சொல்ல கபிலன் மேற்கொண்டு ஒன்றும் கதைக்காமல் அவளது பெட்டிகளைத் தூக்கி காரின் பின்பக்கம் வைத்துவிட்டு காரில் ஏறினான். விமான நிலையம் செல்ல இரண்டு மணி நேரம். மதுவோ நேசனோ எதுவும் கதைக்கவே இல்லை.

கபிலனின் வாழ்வு திசைமாறி மாதம் ஒன்று ஓடிப் போனது. மகன் இப்ப அம்மாவைத் தேடுவதில்லை. கபிலன்தான் இரு வாரங்கள் சரியாகத் துன்பப்பட்டுப் போனான். சமைப்பது  மகனுக்கு நப்பி மாற்றுவது குளிக்க வார்ப்பது என்று, அதைவிட உணவு கொடுப்பதுதான் சரியான கடினம். வீம்பில் உடனே மதுவைப் போகச்சொல்லிவிட்டன். இதுவரை மகனின் வேலைகளை அவளே செய்ததால் ஒருமாதிரி தட்டித் தடுமாறி இப்ப வடிவாகச் செய்யப் பழகிவிட்டான். மூன்று வாரங்களில் மகனைப் பார்ப்பதற்கு ஒழுங்கு செய்துவிட்டான். புதிதாகத் திருமணமான இருவர் வீடு தேடி அலைந்தபோது நேசன் தான் அவர்களிடம் கதைத்து இப்படி குழந்தையுடன் ஒருவன் இருக்கிறான். அவன் வேலைக்குப் போகும் நேரம் குழந்தையை பார்த்தால் நீங்கள் வாடகை இன்றியே அங்கிருக்கலாம் என்று அவர்களும் சம்மதித்து போன கிழமைதான் இங்கு வந்திருந்தார்கள். இவனுக்கு முன்னே தெரியாதவர்களாயினும் நேசனுக்குத் தெரிந்தவர்களாகையால் எவ்வித பயமுமின்றி அவர்களை எற்றுக்கொண்டாயிற்று. அவர்களும் தானும் தன் பாடும். இவனுக்கு நேற்றுத்தான் வேலை தொடங்கியது.  மகனும் அந்தப் பெண்ணுடன் ஒன்றிவிட்டான். இனிப் பிரச்சனை இல்லை என்று எண்ணியபடி இருக்கையில் அமர்ந்தான்.

 மகன் எழும்பும்  நேரம் எதுக்கும் பாலைக் காச்சி வைப்போம் என எண்ணியபடி எழ இவனின் கைத்தொலை பேசி அடிக்கும் சத்தம் கேட்டது. எழுந்து சென்று எடுத்தால் நின்றுவிட்டது. லண்டன் இலக்கம். யார் லண்டனில் இருந்து அதுக்கும் என் கைத்தொலைபேசிக்கு என எண்ணியவன் எண்ணம் அதிர்வோடு நிக்க மதுவாக இருக்குமோ என எண்ண முதலே நெஞ்சு படபடத்தது. திருப்ப எடுப்பமோ என என்னும்போதே வேண்டாம், தேவை என்றால் அவர்களே எடுப்பார்கள் தானே என மனதைத் தேத்தினாலும், மதுதான் எடுத்தாளோ? மகனின் நினைவு வந்திருக்கும். என்னை பற்றி அவள் நினைக்கவும் மாட்டாள் என்று எண்ணிக்கொண்டிருக்க மீண்டும் தொலைபேசி அழைப்பு. உடனே எடுக்க எண்ணிவிட்டு மூன்று  நான்கு மணிச்சத்தம் கேட்கும் வரை பொறுத்து பின் எடுத்து  வணக்கம் என்றான். சிறிது நேரம் எதுவிதச் சத்தமும் இல்லை. கலோ யார் எனக் கேட்க நான் தான் மது என அவளின் குரல் கிணற்றுக்குள் இருந்து கேட்டது. இவனுக்கு நெஞ்சின் படபடப்புக் கூடிப் போனது. ம் என்றுவிட்டு இவனும் பேசாமல் இருந்தான். மகன் எப்படி இருக்கிறான் என மெதுவாகக் கேட்டாள். அவனும் நானும் எல்லாம் மறந்து நின்மதியா இருக்கிறம். சந்தோசமாகவும் இருக்கிறம் என்றான். என்னை மன்னிக்கவே மாட்டியளோ என்றாள் மது. நீர் தந்த பரிசு வாழ்க்கை பூரா மறக்க முடியாத பரிசு. எப்பிடி உம்மை மன்னிக்கிறது என்றான். அவளின் அழுகை ஒலி கேட்டது. இவன் ஒன்றும் கூறாமல் நின்றான். என்னை நீங்கள் மன்னிக்காட்டி நான் தற்கொலை தான் செய்யவேணும் என்று மது கூறியவுடன் இவனுக்கு வந்த கோபத்தில் வடிவாத் தற்கொலை செய்துகொள் என்றுவிட்டு தொலைபேசியைத் துண்டித்தான்.

கபிலனின் கால்கள் இரண்டும் கூட நடுங்கின. வந்து கதிரையில் அமர்ந்தவன் பின்னால் சாய்ந்து கண்களை மூடினான். என்ன ஒரு சுயநலம். தப்பு எல்லாம் தான் செய்துபோட்டு இப்ப மன்னிப்புக் கேட்டால் சரியோ? மன்னிக்காட்டி தற்கொலை செய்வதாய்  மிரட்டல் வேறு. டைவேஸ் கூடப் பண்ணாமல் இவளை அனுப்பிவச்ச என்னைச் சொல்ல வேணும். இந்த ஒரு மாதமா நான் பட்ட வேதனை. ஒரு தமிழர்களின் கண்ணிலையும் படக்குடாதெண்டு வீடும் வேலையுமா இவளைப் போல ஆட்களை வெட்டிப் போட வேணும் என எண்ணி முடியவில்லை மீண்டும் அவளிடமிருந்து போன். போனை நிப்பாட்ட நினைத்தவன் சரி இதுக்கு மிஞ்சி என்னத்தைச் சொல்லப் போறாள் என்று நினைத்தபடி குரலைக் கடினமாக்கிக் கொண்டு என்ன என்றான். தயவு செய்து போனை வச்சிடாதைங்கோ நான்  உங்களோட கதைக்க வேணும். எனக்கு உங்களை விட நம்பிக்கையா சொல்ல ஒருத்தரும் இல்லை என்று அவள் சொல்ல என்ன சொல்லவேணும் என்றான். நான் திரும்பி உங்க வரப்போறான் கபில். வேண்டாம் என்று மட்டும் சொல்லிப் போடாதைங்கோ என்றுவிட்டு விக்கிவிக்கி அழுபவளை ஒன்றும் சொல்லத் தோன்றாமல் நின்றான். அவள் உரிமையுடன் முன்பு கூப்பிடுவது போல் கபில் என்றது அவனுக்கு அவள்மேல் இருந்த கோபத்தைத் தணித்திருந்தது.
ஏன் அவன் விட்டுட்டுப் போட்டானோ என்றான். இல்லை என்னால இந்த நரகத்துக்குள்ள வாழ முடியேல்லை. இப்பதான் உங்கடை அருமை எனக்குத் தெரிஞ்சுது. பிள்ளையையும் உங்களையும் விட்டுட்டு என்னால இருக்க முடியேல்லை. நீங்கள் என்னை மனைவியா நினைக்க வேண்டாம். நான் உங்களைக் குழப்பாமல் பிள்ளையை மட்டும் வேலைக்காறிபோல பாத்துக்கொண்டு இருக்கிறன் என்று அழ அவனுக்கு என்னசெய்வது என்றே தெரியவில்லை. இப்பவும் அவள் சட்டப்படி என்ர மனிசிதான். நான் வேண்டாம் என்று சொல்லி அவள் ஏடாகூடமா ஏதும் செய்தால் அதுகும் எனக்குத்தான் பழி. ஆனால் இவள் போனதுக்கே இந்தச் சனங்கள் எப்பிடி நாக்கு வளைச்சுதுகளோ இப்ப திரும்பி வந்தால் என்ன சொல்லுங்களோ என ஏதேதோ எண்ணியவன் சரி எப்பிடிப் பாத்தாலும் கெட்டபேர் வந்தது வந்ததுதான். பாவம் மனம் நொந்து அழுகிறாள். ஒரு பெண்ணுக்கு வாழ்வு குடுக்கிறதாய் எண்ணி  சரி எப்ப வாறீர் என்றான். உண்மையாத்தான் சொல்லுறியளோ என நம்பமுடியாது கேட்டவள் நீங்கள் தான் எனக்கு டிக்கெற் எடுத்து அனுப்ப வேணும் என்றவுடன் சரி தயாராய் இரும், தனிய விமான நிலையம் வரத் தெரியுமோ என்றான். கீத்துறோவுக்கு எடுத்தால் நேர ரெயின் இருக்கு வருவன் என்றவுடன் சரி டிக்கெற்றை புக் பண்ணிப் போட்டு அடிக்கிறன் என்றபடி தொலைபேசியை அணைத்துவிட்டு கணனியின் முன் அமர்ந்தான்.





மதுவுக்கு கீத்துறோ விமான நிலையம் நெருங்க நெருங்க மனம் மகிழ்ச்சியில் துள்ளியது. இன்னும் ஐந்து நிமிடங்களில் விமானம் தரை இறங்கிவிடும். ஒரு பதினைந்து இருபது நிமிடத்தில் கரனைப் பார்க்கலாம். நான்கு மாதங்களின் முன்னர் கபிலனின் நண்பனின்  திருமணம் லண்டனில் நடைபெற்றதால் அதற்கு வருவதற்காக எடுத்த விசா இன்னும் இரண்டு மாதங்கள் இருக்கு. அல்லது விசா எடுக்க என்றே இரண்டு மூன்று வாரங்கள் சென்றிருக்கும். கபிலனுக்குச் சொல்லாது விசா எடுத்திருக்க ஏலாது. எதோ என்ர நல்ல காலம். லண்டன் போன பிறகு விசாவைப் புதுப்பிக்கலாம் என்று கரன் தெரியாமலோ சொல்கிறார் என மனதுள் எண்ணியபடி விமானம் தரை தட்டி மெதுவாக ஊர்ந்து செல்வதைப் பார்த்தபடி இருந்தாள்.

எல்லோருக்கும் பின்னால் அவளும் வரிசையில் நின்று தன் கடவுச் சீட்டைக் காட்டியபோது, எதற்காக வந்தனி இங்கு எனக் கேட்டபோது என்ன சொல்வது என்று தெரியாது தடுமாற்றம் ஏற்பட்டது. விசிற் விசிற் என இருமுறை கூறியதும் அதிகாரி இவளை விட்டுவிட்டார். நல்ல காலம் முதல் முறை வந்தபோது ஏன் எதுக்கு என கேள்விமேல் கேள்வி கேட்டு குடைந்தவர்கள். இம்முறை பெரிதாகக் கேட்கவில்லை. தட்டுத் தடுமாறி மற்றவர்களின் பின் வெளியே வந்து இவளது பெட்டிகளை எடுக்கும் இடத்திற்கு வருகிறாள். பெட்டிகள் வர அரை மணி நேரம் ஆகின்றன. கரன் என்னைத் தேடப் போகிறார் என எண்ணியபடி விமானத்தினுள் நிப்பாட்டி வைத்த கைத் தொலைபேசியை எடுக்கிறாள். அவனின் இலக்கத்தை அழுத்த தொடர்பு கிடைக்கவில்லை. வெளியே வந்து அவள் கண்கள் கரனைத் தேடி அங்கும் இங்கும் அலைகின்றன. தூரத்தில் நிற்பவனா கரன். படத்தில் நல்ல குளுகுளுவென்று பார்க்க அழகாக இருந்தானே. இப்ப பார்க்க மெலிந்த தோற்றத்துடன் ஐயோ என் நெஞ்சு ஏன் இப்படிப் படபடக்கிறது.

கையைஆட்டிச் சிரித்துக் கொண்டு வருகிறான். அவன்தான். இவளும் அவனைப் பார்த்து சிரிக்கிறாள். அவன் இவளுக்குக் கிட்ட வந்தவுடன் இவளை அணைக்கிறான். இவளுக்கு பயத்தில் எவ்வித உணர்வும் தோன்றவில்லை. ஆக்கள் என்று சொல்லிக் கொண்டு தன்னை விடுவிக்கிறாள். அவனும் அதன்பின் ஒன்றும் செய்யவில்லை. இவளை தொடருந்து  நிலையத்துக்கு அழைத்துச் செல்கிறான். அதிலிருந்து இறங்கி பேருந்தில் ஒரு இருபது நிமிடம் போய் இறங்கி வீட்டுக்கு கூட்டிக்கொண்டு போகிறான். கதவைத் திறந்ததுமே சரியான புளிச்சல் மணம். இவளுக்கு அருவருப்பாய் இருக்கிறது. இங்கதான் இருக்கிறியளோ என்கிறாள். ஓம் என்றபடி படிகளில் இவளின் பிரயாணப்  பெட்டிகளை இழுத்துக் கொண்டு ஏற இவளும் பின்னால் ஏறுகிறாள். காற்றோட்டம் இல்லை, வெளிச்சம் இல்லை. அவளுக்கு மூச்சு முட்டுவது போல் இருக்கிறது.

அறையைத் திறந்ததும் அதற்குள் சென்றால் ஒரு சிறிய அறை. இவளின் பெட்டிகளே அரைவாசி இடத்தைப் பிடிக்கின்றன. பெட்டிகளை வைத்தவுடன் இவளருகில் வந்து இவளை இறுக்கி அணைக்கிறான். இவளும் அணைத்தாலும் எதோ ஒன்று முழுதும் ஈடுபட விடாது தடுக்கின்றது. இவளின் நிலை அவனுக்கு விளங்கியிருக்க வேண்டும். அவளை விட்டுவிட்டு என்ன பிடிக்கவில்லையோ என்கிறான். இப்பதானே வந்தனான் கொஞ்சம் பொறுங்கோ என்றதும் அவனும் ஒன்றும் கூறவில்லை. என்ன குடிக்கிறீர் தேநீரா குளிர் பானமா என தேநீரே தாங்கோ என்றுவிட்டு கட்டிலில் அமர்கிறாள்.

கரன் கீழே இறங்கிப் போக இவள் மனம் பலத்தையும் நினைத்துக் குழம்புகிறது. இவனை நம்பித்தானே வந்தனான். ஆனால் எதோ என்னைத் தடுப்பதுபோல் இருக்கிறதே என மனச் சஞ்சலத்தோடு இருக்க தேநீருடன் வருகிறான் கரன். எப்பிடி அங்க ஒரு பிரச்சனையும் இல்லையே எனக் கேட்ட இல்லை என்று இவள் தலையை மட்டும் ஆட்டுகிறாள். என்ன கதைக்கவே பஞ்சிப்படுகிறீர் என்றபடி இவளுடன் நெருங்கி அமர்ந்து இவளை அணைக்க இவளும் நெகிழ்ந்து போகிறாள்.

பின்னர் வந்த சில நாட்கள் இருவருக்கும் கரும்பாக இனிக்க எல்லாவற்றையும் மறந்து அவனுடன் ஒன்றிவிட்டாள் மது. கொஞ்சம் பித்தம் தெளிந்த பின்னர்தான் அவளையும் அவனையும் தவிர ஒருவரையும் அந்த வீட்டில் காணவில்லை என்பது அவளுக்கு உறைக்கிறது. ஆனால் பக்கத்து அறை பூட்டியே இருக்கிறது ஏன் என அவனைக் கேட்க நான் இந்த அறையில் வாடகைக்கு இருக்கிறன். வீட்டுக் காரர் விடுமுறைக்குப் போட்டினம் வாற மாதம் தான் வருவினம் என்கிறான். அப்ப உங்களுக்கு சொந்த வீடு இருக்கு என்று சொன்னியள் என்று அவனைப் பார்க்க, முந்தி இருந்தது. ஒரு பிரச்சனை இப்ப வித்துப் போட்டன் என்று கூறிவிட்டுத் திரும்பிக் கொள்கிறான். எத்தினை கிழமை லீவு போட்டனியள் என அவள் கேட்க ஒருமாதம் லீவு இருக்கு என்றுவிட்டு இண்டைக்கு எங்காவது வெளியில போவமோ என அவள்  கேட்டதுக்கு இண்டைக்கு நண்பன் ஒருவனை சந்திக்கிறன் என்று சொன்னனான். நாளைக்குப் பாப்பம் என்றுவிட்டு தன் அலுவலைப் பார்க்க மதுவுக்கு கொஞ்சம் கோபம் எட்டிப் பர்த்தது. வந்து ஒரு வாரமாகிறது.வெளியே போகாமல் அந்த அறை அதைவிட்டால் குசினி, வரவேற்பறை என்று மாறிமாறி அதற்குள்ளேயே சுற்றி அலுத்துவிட்டது.

அடுத்தநாள் இவளை கூட்டிக் கொண்டு கடைத் தெருவெல்லாம் சுற்றிய கரன் ஒரு இந்தியன் உணவகத்துக்கு அழைத்துக் கொண்டு செல்கிறான். யேர்மனி போலன்றி இங்கு பல உணவகங்களும், ஆடை விற்பனை நிலையங்களும் பார்க்க அவளுக்கு மகிழ்வாக இருந்தது. இவள் தனக்கு பூரி வேண்டுமென்று கூற, அவன் தனக்கு பரோட்டா சொல்லிவிட்டு குளிர்பானம் அருந்துகின்றனர். பார்த்துக்கொண்டிருக்க வாசல்பக்கம் நான்கு பேர் வருவது தெரிகிறது. பார்த்தால் ரவுடிகள் போல் தோற்றம். இவள் உடனே தலையைக் குனிந்துகொள்கிறாள். ஆனால் அவர்கள் இவர்கள் இருக்கும் இடம் நோக்கி வர இவளுக்கு கலவரம் உண்டாகிறது. லண்டன் இல் ரவுடிகள் அதிகம் என்று கேள்விப்பட்டிருக்கிறாள். அவர்கள் இவர்களின் மேசைக்கு அருகில் வந்து மச்சி நல்லாத்தான் பிடிச்சிருக்கிறாய் என்று கூறி கரனுடன்  கைகுலுக்குகிறார்கள். இவளுக்கு அதிர்ச்சியாக இருக்கிறது. அது முகத்திலும் தெரிய என்ன கரன் எங்களைப் பற்றி சிஸ்டருக்குச் சொல்லேல்லேயே மச்சி என்கிறான். இவை என்ர பிரெண்ட்ஸ் என்று கரன் அவளுக்கு அறிமுகப்படுத்துகிறான். அவள் ஒருமுறை தலையை நிமிர்த்திப் பார்த்துவிட்டு மீண்டும் குனிந்து கொள்கிறாள்.

இருங்கோவன் என்று கரன் கூற நாளைக்கு சந்திப்பம் மச்சி. சிஸ்டர் பயப்பிர்றா வாரம் மச்சி என்றபடி அவர்கள் போகின்றனர். ஏன் அவங்களை இருக்கச் சொன்னீங்கள் என்று மது கோபமாகவே கேட்கிறாள். நீர் வந்து ஒரு கிழமைதான். அவங்கள் என்னோட அஞ்சு வரிசமாப் பழக்கம் என்றுவிட்டு கரன் உணவும் வர உண்ண ஆரம்பிக்க இவளும் பசியில் உண்ணத் தொடங்குகிறாள். ஆனால் மேற்கொண்டு அவனுடன் எதுவும் கதைக்கவில்லை. அவனும் உண்டு முடிய கிளம்புவமா என்று கூறியபடி எழுகின்றான். சமைக்க ஏதாவது வாங்குவமா என்று கேட்க மரக்கறிகள் இறைச்சி என்பவற்றை வாங்கிகொண்டு வீடு வருகின்றனர். மாலை இடியப்பம் அவித்து கறிகளும் காச்சி முடிய வடிவா எல்லாம் துடைத்துவிடும். பிறகு வீட்டுக்கார அக்கா பேசுவா என்று கரன் கூற நான் என்ன ஒண்டும் தெரியாதனானோ என இவள் சிரிக்கிறாள்.
மதுவுக்கு அப்பப்ப கபிலனின் நினைவும் மகனின் நினைவும் எட்டிப் பாக்கும். வலிந்து அவற்றை நினைக்காது தவிர்த்துவிடுவாள். அத்துடன் கரனும் எந்நேரமும் அவளுடனேயே நின்றதும், சில்மிசங்களால் அவளை சந்தோசப்படுத்தியதும், பார்வையாலேயே கிறங்கடித்து, முத்தத்தில் மூழ்கடித்து புதிய வாழ்வின் அத்தியாயங்களைக் காட்டியதும் எல்லாவற்றையும் மறக்கத்தான் செய்துவிட்டது. மூன்று வாரங்கள் முடிந்த நிலையில் நான் விவாகரத்துக்கு விண்ணப்பிக்க வேணும். யாராவது ஒரு லோயரைப் பாப்பமா என்று இவள் கேட்க என்ன அவசரம் பொறும் என்றுவிட்டு தொலைக்காட்சி பார்க்கும் அவனை இவளால் பார்த்துக் கொண்டு இருக்கத்தான் முடிகிறது.

அடுத்தநாள் காலை தொலை பேசி ஒன்று வர இப்பவே வாறன் என்றுவிட்டு வெளியில போட்டு வாறன் என்று மட்டும் கூறிவிட்டு கரன் அவசரமாக இறங்கிச் செல்கிறான். இவள் மேற்கொண்டு ஏதும் கேட்கக் கூட முடியவில்லை. மதியம் கரன் வரவில்லை. தொலைபேசியும் நிப்பாட்டி இருந்தது.அரை மணிக்கு ஒருமுறை இவள் அழைத்தும் அவன் எடுக்கவில்லை. இவளுக்கு என்ன செய்வது என்று தெரியாது மாலைவரை தவித்துக் கொண்டிருந்தபோது வந்து சேர்ந்தான். என்ன எத்தினை தரம் போன் அடிச்சனான். எடுத்திருக்கலாம் தானே என அழுகையை அடக்கிக் கொண்டு கேட்டாள். எண்ர பிரச்சனை தெரியாமல் கதைக்காதையும். என்னை கொஞ்சநேரம் தனிய விடும் என்று அவன் கூற ஒன்றும் சொல்லாமல் வெளியே வந்து தொலைக்காட்சி பார்க்க ஆரம்பித்தாலும் மனம் அதில் ஒன்றவில்லை. கரனை நம்பி வந்திருக்கிறேன். விடியப் போய் இப்பதான் வந்திருக்கிறான். என்ன என்று கேட்டாலும் சொல்கிறானில்லை. என்னவாக இருக்கும் என்று எவ்வளவு யோசித்தும் பலனில்லை.

இரவு உணவும் கரன் வேண்டாம் என்றதால் இவளும் உண்ணவில்லை. காலையில் எழுந்து எதுவும் நடவாததுபோல் கோக் ஒன்றை உடைத்து அவன் குடிக்க விடிய வெள்ளன ஆராவது  கோக் குடிக்கிறதே என இவள் வினவ, ஏன் குடிக்கக் கூடாது என்று ஏதும் சட்டம் இருக்கே என கரன் கேட்க இவளுக்குச் சிரிப்பு வருகிறது. இண்டைக்கு வீட்டுக்கார அக்காக்கள் வருவினம் என்கிறான். எத்தினை மணிக்கு என இவள் பரபரக்கிறாள். மத்தியானம் வருவினம் அவைக்கும் சேர்த்துச் சமைச்சு விடும்.நான் வெளியில போட்டு வாறன் என அவன் முடிக்கமுதல் நேற்றும் பொய் பின்னேரம் தன வந்தனீங்கள். வீட்டுக்காற ஆக்கள் வரேக்கையாவது என்னோட நில்லுங்கோவன் என்று இவள் கெஞ்சுவதுபோல் கேட்கிறாள். அவன் கொஞ்சமும் இரங்காமல், நீர் உம்மட பாட்டில இரும் அவை தங்கட பாட்டில வருவினம் என்கிறான். நீங்கள் இல்லாமல் நான் யார் என்று கேட்டால் என்ன சொல்லுறது. என்ர கேர்ள் பிரெண்ட் எண்டு சொல்லும். நான் வருமட்டும் நீர் அறைக்குள்ளையே இரும். நான் வந்த பிறகு சொல்லலாம். என்றுவிட்டு வெளியே  போக எத்தணிக்க மீண்டும் இவள் நானும் உங்களோட வரட்டோ என்று கேட்ட நான் நண்பர்களிட்டைப் போறான் நீர் வந்து அங்க என்ன செய்யப் போறீர்,போட்டு வாறன் என்றபடி கதவைத் திறந்துகொண்டு போய் விட்டான். மதுவுக்கு அழுகை வந்தது. என்ன இவன் என்னை ஒரு பொருட்டாக எண்ணாது போய்விட்டானே. இவனை நம்பி நான் வந்திருக்கிறன் என்று எண்ணும்போதே நினைவில் கபிலன் வருகிறான், மகன் வருகிறான். நான் அவசரப்பட்டு விட்டேனோ என மனம் முதல் முறையாக அங்கலாய்க்கிறது.

வீடுக்கார அக்கா வந்து இவளின் அறைக் கதவைத் தட்ட இவள் கண்விழிக்கிறாள். எழும்புங்கோ தங்கச்சி தேத்தண்ணியையும் குளிசையையும் குடிச்சிட்டுப் படுங்கோ என்று சொல்ல வேண்டாம் அக்கா என்று இவள் முனகுகிறாள். கதவை அவவே தள்ளித் திறந்துகொண்டு வந்து இவளை எழுப்பி தேநீரை மருந்துடன் குடிக்கப் பண்ணி, குடித்து முடிந்ததும் மூண்டு நாளா படுத்தே இருக்கிறீர். இன்னும் எத்தினை நாளைக்கு இப்பிடியே இருக்கப் போறீர். பாக்கவேண்டிய அலுவலைப் பாக்க வேணும் . நான் ஒரு பொம்பிளைப் பிள்ளையை எத்தினை நாள் தான் வச்சிருக்க ஏலும். மற்ற ஆட்கள் எண்டால் உம்மைப் பிடிச்சு வெளியில விட்டிருப்பினம். நான்  பொம்பிளைப் பிள்ளையளைப் பெத்ததால உம்மை இத்தனை நாள் வச்சிருக்கிறன் என்று கூற இவள் அழவும் சக்தியற்றுக் அக்கா கூறுவதைக் கேட்டுக்கொண்டிருக்கிறாள்.

தங்கச்சி எதோ நடந்தது நடந்து போச்சு நீர் திரும்ப ஜேர்மனிக்குப் போறதுதான் நல்லது. முகம் கழுவிச் சாப்பிட்டிட்டு ஒருக்கா அங்க போன் செய்து பாரும் என்றுவிட்டுப் போய் விடுகிறார். ஒரு கிழமைக்கு முன் நடந்தது மனதில் நிழலாட கசப்பு மருந்தை விழுங்கியதுபோல் வாயும் மனமும் கசக்கிறது. உடலும் மனமும் தீப்பிடித்தது போல் தன்னையே தகிக்க எனக்குச் சரியான தண்டனையை கடவுள் குடுத்திட்டார். என்ர  சின்னப் பிள்ளையைத் தவிக்க விட்டு வந்த எனக்கு, என்ர கட்டின மனிசனுக்குத் துரோகம் செய்துபோட்டு வந்த என்னை கடவுள் இவ்வளவு கெதியா தண்டிச்சிட்டார். இப்ப தெய்வம் அன்றே கொல்லுது போல என எண்ணியவளுக்கு தன்னை நினைத்தே சிரிப்பு வருகிறது. எத்தனை பெரிய வாக்கையை இழந்துவிட்டு இந்த நரகத்தில் வந்து விழுந்தேன்.எனக்கு வேணும்தான்.

இனி எப்பிடி நான் திரும்பிப் போவன். எப்பிடி கபிலன்ர முகத்தில முழிப்பன். கபிலன் திரும்ப என்னை மன்னிப்பாரே. மன்னிச்சாக் கூட என்னை மற்ற ஆக்கள் எப்பிடிப் பாப்பினம் என எண்ணி எண்ணி குமைந்ததுதான் மிச்சம். தற்கொலை செய்வமோ என்று எண்ணினாலே அழுகைதான் வந்தது. கேடு கேட்ட எனக்கு சாகக் கூடத் துணிவில்லையே என பலதும் எண்ணி மருகியவள் என்ன நடந்தாலும் பரவாயில்லை கபிலனோட கதைப்பம் என எண்ணியபடி தொலைபேசியை  எடுக்கிறாள்.

கபிலன் அவளை மீண்டும் வரும்படி கூறியதும் அவளுக்கு இருண்ட அறையுள் இருந்த சாளரத்தை அகலத் திறந்தது போல் இருந்தது. மனதில் இருந்த இறுக்கம் கூட கொஞ்சம் தளர்ந்ததுபோல் இருந்ததால் ஒரு வாரத்தின் முன் நடந்தவற்றை மீளவும் மனம் அசைபோட்டது. வீட்டுக் காரக் குடும்பம் திரும்பி வந்த அன்று இவள் கன நேரம் அறைக்குள்ளேயே இருந்தாள். மாலை ஏழு ஆகியும் கரனைக் காணவில்லை.  இவள் தொலைபேசியில் அழைத்தும் அவன்  அழைப்பில் வரவில்லை. நான்கு ஐந்து மணிநேரமாக சிறுநீரை அடக்கி வைத்திருந்ததும் கடுத்தது. இனியும் அடக்க முடியாது எனும் நிலையில் கட்டிலை விட்டு இறங்கி கதவைத் திறந்துகொண்டு வெளியே வந்து பக்கத்தில் இருந்த மலசல கூடத்துக்குச் சென்றபின்தான் சிறிது நின்மதி பிறந்தது. கதவைத் திறந்துகொண்டு வெளியே வர படிகளில் ஏறி மேலே வந்துகொண்டிருந்த வீட்டுக்காரரின் பிள்ளை, அம்மா கள்ளன் எனக் கத்திக்கொண்டு கீழே ஓட இவள் கலவரப்பட்டு என்ன செய்வது என்று தெரியாமல் விழி பிதுங்க நிக்க, வீட்டுக்கார அக்காவும் கணவரும் கையில் பிள்ளையளையும் இழுத்துக்கொண்டு வீட்டுக்கு வெளியே ஓடுவதற்கு கதவை அவசரமாகத் திறக்க, அக்கா அக்கா நான் கள்ளன் இல்லை என இவள் கத்த, வெளியே ஓட வெளிக்கிட்ட அக்காவும் கணவரும் திரும்பி வந்து நீ என்ன இங்க செய்யிறாய் என அதட்ட இவளும் நான் கரனின் கேர்ள் ப்ரெண்ட் என கூறிவிட்டு அவர்கள் தன்னைப் பார்த்து நட்புடன் சிரிப்பார்கள் என எதிர் பார்த்தவளுக்கு அவர்கள் பார்த்த பார்வை புரியவில்லை. சரி கீழ வாரும் தங்கச்சி கதைப்பம் என்றுவிட்டு அக்கா வரவேற்பறைக்குப் போக கீழே இறங்கி வந்தவள் எதோ தனக்கு எல்லாம் தெரியும் உங்களை என்று காட்ட நீங்கள் இண்டைக்கு வருகிறீர்கள் எண்டு கரன் சொன்னவர் என்றுவிட்டு அவர்கள் இருவரையும் பார்த்தாள். அவர்கள்  முகத்தில் ஈயாடவில்லை.

நீர் எப்ப தொடக்கம் இங்க இருக்கிறீர் என்று அக்கா கேட்க மூண்டு கிழமையா என்கிறாள் மது. இங்க அப்பா நீங்கள் பிள்ளையளைக் கூட்டிக் கொண்டு மேல போங்கோ நான் இவாவோட கதைச்சுப் போட்டு வாறன் என்று அக்கா கூற கணவரும் இங்கிதத்துடன் பிள்ளைகளை அழைத்துக்கொண்டு  மேலே செல்கிறார். எப்ப தொடக்கம் உமக்கு கரனைத் தெரியும் என்று அக்கா கேட்க ஆறு மாதமாக என்று கூறிவிட்டு தலையைக் குனிகிறாள். கரன் இங்க இருக்கிறேல்லை. இங்க இருக்கிறது என்ர அக்காவின்ர மகன். அவன் இப்ப ஆஸ்பத்திரியில இருக்கிறான். அவன் கரன்ர நண்பன். அனால் அவர்கள் ஒருவரும் ஒழுங்கானவர்கள் இல்லை. கரனுக்கு கன பெண்களுடன் தொடர்பு இருக்கு என்று சொல்ல, பொய் சொல்லாதைங்கோ என்று மது கத்துகிறாள்.தலையில் பெரிய கல் விழுந்ததுபோல் இருக்கிறது. கண்ணுக்கு முன்னால் ஏதேதோ பறப்பதுபோல் முன்னால்  இருந்த எதுவுமே தெரியவில்லை அவளுக்கு. நான் ஏன் உமக்குப் பொய் சொல்ல வேணும். அவங்கள் எத்தினை தரம் சிறைக்குப் போனவங்கள் எண்டு தெரியுமே உமக்கு. என்ன நம்பிக்கையில் அவனை நம்பி வந்தனீர் என்று கூறிமுடிக்க முதலே மது ஓ என்று பெரிதாக அழுகிறாள். சிறிது நேரம் பார்த்துக்கொண்டு இருந்துவிட்டு அவன் இனி உம்மட்ட வர மாட்டான்.
இப்ப கொஞ்சம் முந்தித்தான் போன் வந்தது. நேற்று இவங்கள் ஒரு பெடியனை வெட்டிப் போட்டாங்களாம். இண்டைக்கு பொலிஸ் உவங்கள் எல்லாரையும் பிடிச்சுப் போட்டுது. மேற்கொண்டு அக்கா கதைப்பது எதுவுமே விளங்கிக் கொள்ள முடியாமல் கதிரையில் சரிகிறாள் மது.

No comments:

Post a Comment