Saturday 26 April 2014

களவாய் ஒரு படம்

எனக்கு மனதில் பயத்துடன் கூடிய ஒரு பெருமிதமும் தோன்றியது. செய்வது திருட்டு. இதற்குள் என்ன பெருமிதம் என்று மனதில் எண்ணம் எழ மனதுக்குள்ளேயே சிரித்தும் கொண்டேன். என்றாலும் இது ஒரு அசட்டுத் துணிவு என்பதும் தெரிந்தே தான் இருந்தது.
அம்மாவுக்குத் தெரிந்தால் என்ன நினைப்பா என்று ஒரு பயம் ஏற்பட்டாலும் இப்படி திருட்டுத்தனமாய் பள்ளிக்கூடத்தைக் கட் பண்ணிவிட்டு படம் பார்க்க வருவது ஒரு திரில்லான அனுபவமாகத்தான் இருக்கு என எண்ணிக் கொண்டது மனது.

இருந்தாலும் அடிமனதில் யாராவது ஊரவர்கள் பார்த்துவிடுவார்களோ என்னும் அச்சம் ஓடிக்கொண்டே இருந்தது. தனிய நான் வரவில்லைத்தான். இன்னும் மூன்றுபேர் மாலி, நந்தினி, ஹேமா, ரதி இத்தனை பேருடன் தான் வந்திருக்கிறேன். பாடசாலைக்குப் பக்கத்தில் இருக்கும் மாலியின் வீட்டில் ஆடைகள் கொண்டுவந்து நாகரிக ஆடைகளை மாற்றிக் கொண்டு தான் வந்தது எனினும், சீற்றில் வந்து அமர்ந்ததுமே, என்னடா வகுப்பைக் கட் பண்ணிவிட்டு வந்திட்டியோ என்று பின் வரிசையில் இருந்து  ஒருவன் கூறுவது கேட்டது.

கட்டாயம் கட் அடித்துவிட்டுத்தான் இந்தப் படம் பார்க்கவேண்டும் என்றில்லை. சில நேரம் அம்மாவைக் கேட்டிருந்தால் அவவே கூட்டிக் கொண்டும் வந்திருக்கலாம். ஆனால் கமலகாசனின் வாழ்வே மாயம் படத்தை அம்மாவோட வந்து பார்த்தால் ரசிச்சே இருக்கும்  ???

அந்த வயதில் எந்த ஹீரோ என்றாலும் கற்பனை செய்து கொண்டு, மற்ற நண்பிகளுடன் அவர்களைப் பற்றி அரட்டை அடிப்பதில் உள்ள சுகம் வேறெதிலும் இல்லைத்தான்.

படம் தொடங்கி லைட் எல்லாம் நிப்பாட்டின பிறகு யாராவது தெரிஞ்ச ஆட்கள் வந்திருக்கினமோ என்று பார்க்கத் தலையைத் திருப்பி சுற்றிவரப் பார்க்க, நல்ல காலம் ஊர்க்காரர் ஒருத்தரும் இல்லை. பின்னால இருந்த ஹீரோக்கள் தங்களைத்தான் திரும்பிப் பாக்கிறன் எண்டு நிமிர்ந்து இருந்து பல்லைக் காட்டினதையும் இண்டைவரை மறக்க முடியேல்ல.

இடைவேளையின் போது நான் பயத்தில எழும்பி எதுவும் வாங்கப் போகவுமில்லை. குனிஞ்ச தலையை நிமிர்த்தவுமில்லை. மாலியும் ரதியும் தான் துணிவாப் போய் ஒறேஞ் பார்லியும் உறைப்புக் கச்சானும் வாங்கிக் கொண்டு வந்தது. எப்பிடித்தான் அவர்களுக்கு அந்தத் துணிவு அங்கே அப்பவே எண்டு எத்தனையோ நாட்கள் வியந்தும் இருக்கிறன்.

படத்தின்ர கடைசிக் கட்டத்தில படம் எண்டு தெரிஞ்சும் லேன்சி நனையும் அளவு அழுததும், இனிமேல் கமலகாசன் திரும்பி வரமாட்டார் என்ற அளவில் பீல் பண்ணியதும் இப்ப நினைச்சாலும் சிரிப்பா இருக்கு.

படம் முடிஞ்சு உடன எழும்ப கேமாதான் இழுத்து இருத்தினவள். எல்லாரும் போகட்டுமடி என்று. களவு செய்த ஆட்கள் மாதிரி ஏனடி வாறாய் இயல்பாய் இரு என்று மாலி சொன்னாலும் யாழ்ப்பாணம் பஸ்டாண்டுக்கு வந்து பஸ் எடுத்து நெஞ்சிடியோட வீட்டை போய்ச் சேர்ந்த பிறகும் பயம் போகவில்லை.

அம்மா ஏன் லேட் என்று கேட்கவில்லை. ஏனென்றால் முதல் நாளே பள்ளியில் விளையாட்டுப் போட்டிக்கு பயிற்சி என்று சொல்லி வச்சதில் தப்பினது.

அடுத்த நாள் டீச்சர் கேட்டதுக்கு முதலே பிளான் பண்ணினபடி ஒரே சாட்டுச் சொல்லாமல் ஒவ்வொருத்தர் ஒவ்வொரு மாதிரிச் சொன்னதை டீச்சர் நம்பினாவோ இல்லையோ ஒன்றும் கதைக்கவில்லை.

ஒரு வாரம் செல்ல ஒரு சனிக்கிழமை. எங்கள் ஒழுங்கைக்கு அடுத்த ஒழுங்கையில் இருக்கும் பத்மா அக்கா, நான் டியூசனுக்குப் போகும் போது  சில நேரங்களில் நின்று அவவுடன் கதைத்துவிட்டுப் போவேன். அன்றும் வழமைபோல கதைத்தபோது என்ர தம்பி உம்மை தியேட்டறால வெளியில வரேக்குள்ள கண்டவனாம் என்றவுடன் நெஞ்சு உடனே திடுக்கிட்டதுதான்.

ஆனாலும் சமாளிச்சுக் கொண்டு, ஓமக்கா நானும் இன்னும் மூண்டு பெட்டையளும் போனனாங்கள். நல்ல படம் அக்கா என்று எந்த விதப் பதட்டமும் இல்லாமல் கூறியதில் அவரின் வாய் அடைபட்டுப் போனது. அத்தோடு அடுத்த முறை எங்களோட நீங்களும் வாங்கோவன் என்று விட்டு நான் சென்றதை அவர் வாய் பிளந்தபடி பார்த்துக்கொண்டு நின்றிருப்பா என்பதிலும சந்தேகம் இல்லை.

இரண்டு நாள் போக அவவின் தம்பி ரமேஸ், என்னைப் பார்த்து ஒரு அசட்டுச் சிரிப்புச் சிரித்தபடி கடந்து போனான். நான் கூட சிரித்து வைப்போமா என்று ஒருகணம் எண்ணிவிட்டு மறுகணம் வேண்டாம் என்று மனம் சொல்ல சிரிக்காமலே அவனைக் கடந்து போனேன்.

 22 April 2014

No comments:

Post a Comment