Wednesday 11 June 2014

ஆறாத்துயர் - கவிதை


அறுபது மாதங்களாய் ஆறாத் துயர் கடந்து
ஆற்றமுடியா வடுக்கள் சுமந்து
ஆற்றாமையுடன் காத்திருக்கின்றனர்
அடிமைகள் ஆக்கப்பட்ட எம்மக்கள்

கருகிய பூமியில் கால் பதிக்க இடமின்றி
கசங்கக் கிடக்கிறது கந்தகம் சுமந்த பூமி
கொடும் கனல் குருதி தோய்ந்து
கோரங்கள் சுமந்த நந்திக்கடல்
கேட்பார் ஏதுமற்றுக் கேவலுடன் கிடக்கிறது

வீறுநடை போட்ட வெற்றிகள் கொய்த தேசம்
ஏறுபோல் எழுந்து எதிகள் வீந்த தேசம்
எதிரி கைபட்டு எள்ளி நகைபுரியும்
எத்தர்களின் கைகளில் ஏக்கம் சுமந்து
ஏதுமற்று ஏற்றமிழந்து கிடக்கிறது

வந்தவரை வரவேற்று வயிறார வழிசெய்து
வள்ளல்களாய் வாழ்ந்தவர்கள்
வாய்க்கரிசி கூட இன்றி வக்கற்று
கருணையற்ற கயவனிடம் கையேந்தும்
கடை நிலையில் கண்ணிழந்து நிற்கின்றார்

மானத் தமிழரென மார்தட்டி வாழ்ந்தவர்
வீணாய் வீழ்ந்ததில் வலுவிழந்து வக்கற்று
விளலுக்கிறைத்தது போல் வீணாகிப் போகின்றார்
வருமுன்னே காத்து வாழ்ந்த இனம்
வந்தபின்னும் காப்பதற்கு யாருமின்றி
வருந்தி அழுதேதான் வடிகால் தேடுகின்றார்

உடலும் உயிரும் ஊரெல்லாம் இருக்கிறது
எதுவும் அற்றதாக எத்தனையோ இருக்கிறது
உணர்வைச் சொல்வதற்கு உடமை கொள்வதற்கு
உயிரோடு எரிந்தவரை உரிமையாய் நினைப்பதற்கு
உரிமையற்று நாம் உளம் எரிய நிற்கின்றோம்

நாமும் இருக்கின்றோம் நாடுகள் தோறும்
நலிந்தவர் நலம் நாடாது நிற்கின்றோம்
நாடிழந்து நமக்கானதெல்லாம் இழந்து
நாயை விடக் கேவலமாய் நாதியற்று நிற்கின்றோம்
நமக்காக எதுவுமின்றி நட்டாற்றில் நிற்கின்றோம்

எம்முறவு படும் பாட்டை ஏக்கத்துடன் கேட்டும்
கிடைக்காத நம்பிக்கையை கிடைத்ததாய் எண்ணி
வருந்தாதவர் எல்லாம் வருந்துவதாய் நடித்து
கொடுக்காததைக் கொடுத்ததாய்க் கூறி
கொட்ட முடிந்தவற்றைக் குப்பையாய் கொட்டி
மூட முடிந்தவற்றை எம்முள்ளே போட்டு மூடி
எங்கும் இருக்கின்றோம் எதுமற்றவர்களாக

No comments:

Post a Comment