Tuesday 25 August 2015

உருவமில்லா ஓசை

Nivetha Uthayan's photo.

உருவமில்லா ஓசை கேட்டு மனம்
உன்னிடம் பித்தாய் ஆனது
உவப்புடன் தினமது ஓங்காரமாகி
உறவு கண்டிட உன்மத்தம் கொண்டு
உன்னைத் தினம் எதிர்பார்த்தது

உயிரின் நிகரிலா உணர்வாய்
உரிமைகொண்டே நீ வந்தாய்
உயிரில் கலந்த உறவே என்றாய்
உயிர் தினம் உனக்காய்த் துடிக்கிறதென்றாய்
உன்முகம் காணத் தவிக்கிறதென்றாய்

உண்மை என்றெண்ணி உயிர் துடிக்க நான்
உன்னில் அன்றே கலந்துவிட்டேன்
உலகு முழுதும் எனக்காய் என்று
உயிர்ப்புடன் நானும் உலவிவந்தேன்
உளம் எங்கும் உவகை கொண்டிட
உற்றவனாய் உட்பொருளாய் கண்டிட
உயிர் கூடி உணார்வுகொண்டிட
உனையே நானாய்க் கண்டிருந்தேன்

ஊனமுற்றதாய் ஆனதுன் உறவு
உயிர் குடிக்கும் விதமாய் மனது
உண்மை கொன்று உள்ளம் தின்று
ஊசலாடும் மனதும் கொண்டு
உணர்வுகளைத் தினமும் கொன்று
உள்ளத்தின் இரக்கம் துறக்க
உயிரின் வலி அறிய மறுத்து
உயிர்ப்பிழந்து உடல் சுமக்க
உறுதுணையாய் நிற்கின்றாய்

உனைத் துறந்து நிதமும் நான்
உயிர் காவும் வழியும் இன்றி
உடல்க் கூண்டு ஓசை இழக்க
ஒப்பாரியின் ஓசைகளில்
உறக்கமின்றித் தவிக்கின்றேன்

No comments:

Post a Comment