Saturday 6 February 2016

அவன்









அவனை எல்லாருக்கும் பிடிக்கும். ஏனென்றால் எப்போதும் அவன் மற்றவர் முன் முகம் சுளித்ததே இல்லை. எப்போது பார்த்தாலும் முகத்தில் ஒரு புன்சிரிப்பு. உதவி என்று கேட்கத் தேவையே இல்லை. அதை எந்தக் கஷ்டம் வந்தாலும் செய்து முடித்துவிட்டுத்தான் மறு வேலை பார்ப்பான். யாருமே அவனை வெறுத்ததேல்லை. சிறு வயதில் இருந்தே கஷ்டப்பட்டும் இப்ப கொஞ்சக்காலம்தான் காசு கையில் தங்குகிறது.

சொந்தமாகக் கடை வைத்திருக்கிறான் தான். ஆனாலும் கடன் கேட்பவர்களுக்குக் குடுத்து, பிள்ளைகள் ஆசைப்பட்டது எல்லாம் வங்கிக் கொடுத்து, பிள்ளைகளுக்கு டியூசன் காசும் கட்டவே காசு கரைந்துவிடுகிறது. இத்தனை நாளும் இருந்தது வாடகை வீட்டில் தான். இவனுக்கேற்ற மனைவி பிள்ளைகள். சொந்த வீடு வேண்டும் என்று மனைவி என்றும் கேட்டதே இல்லை. ஆசை அவளுக்கும் இல்லாமல் இராது. இருந்தும் கணவனிடம் கேட்டும் பயன் இல்லை என்று அவளுக்குத் தெரிந்ததில் ஏன் கணவனின் மனதை நோகடிப்பான் என்று தன் ஆசையைத் தன்னுள்ளே புதைத்துக்கொண்டு இத்தனை நாள் இருந்துவிட்டாள். திருமணம் செய்தும் இப்ப இருபது ஆண்டுகள் முடியப்போகின்றன. பத்தொன்பது வயதில் மூத்த மகளும் பதினாறில் இரண்டாவதும் பதினொன்றும் மூன்றுமாக அடுத்த இரு ஆண் பிள்ளைகளுமாய் வாழ்வு மகிழ்வாகத்தான் போய்க்கொண்டு இருக்கிறது.

ஒரேயொரு தங்கையும் அக்காவும். அக்கா வேறு நாட்டில் இருக்க தங்கை மட்டும் இவனுக்குக் கிட்ட இருக்கிறாள். ஒவ்வொருநாளும் தங்கை வீட்டுக்குப் போய் அவள் கையால் ஒரு தேநீர் வேண்டிக் குடிக்காவிட்டால் அவனுக்குப் பொச்சம் தீராது. தங்கையும் அண்ணனில் பாசம் தான். தன் பிள்ளைகளுக்கு என்ன வாங்கினாலும் அண்ணனின் பிள்ளைகளுக்கும் சேர்த்தே வாங்குவாள். சின்ன வயதிலேயே தந்தை இல்லாக் குறையை அண்ணன் தான் தீர்த்தான் என்று அவனில் அளவுக்கதிகமான அன்பு.

இப்ப கொஞ்ச நாட்களாக உடம்பைக் குறை அண்ணா என்று தங்கை திட்டவே தொடங்கிவிட்டாள். காசு சேரச் சேர வருத்தங்களும் சேரும் போல. உடம்பில் கொழுப்பும் கூடி உயர் இரத்த அழுத்தமும் ஏறி இருந்தது. வைத்தியர் மருந்துகள் குடுத்தார் தான் என்றாலும் அவனுக்கு மருந்து என்றாலே சத்திராதிதான். எல்லாரும் ஒருநாள் சாகிறது தானே என்பான். மனைவி மருந்தைக் கையில் எடுத்துக் குடுத்தால் மட்டும் வேறு வழியின்றிப் போட்டுக்கொள்வான்.

அவனின் தலை தெரிந்தாலே பொருட்கள் தேவை இல்லை என்றாலும் கூட சனம் கடைக்கு வந்து இவனின் முகத்துக்காக வாங்கிக்கொண்டு போகும். வேலை செய்பவர்களும் குட்டி அண்ணா என்று இவனில் அத்தனை உயிர் தான். எப்பிடி அந்தக் குட்டி என்ற பெயர் வந்தது என்று அவனுக்குத் தெரியாது. பெரும்பாலானவர்களுக்கு அவனின் சொந்தப் பெயர் கூடத் தெரியாது. இந்தப் பெயரே அவனுக்கு நிலைத்து விட்டது. குட்டி என்றவுடன் ஆள் எதோ சிறிதாக இருப்பான் என்று மட்டும் நினைத்துவிடாதீர்கள். ஆள் பார்க்க வாட்டசாட்டமாக ஐந்து அடியில் கம்பீரமாக இருப்பான்.

******************************************

இப்ப கொஞ்ச நாட்களாகவே நெஞ்சில் ஒரே நோ. பாரங்களைத் தூக்க முடியாமல் எதற்கு எடுத்தாலும் எரிச்சல் எரிச்சலாக வர அவனுக்கே யோசனையாகத்தான் இருந்தது. ஒரே சளியாகவும் இருமலாகவும் இருக்க வைத்தியரிடம் சென்று தன நிலையைக் கூறினான். அவரும் குட்டியின் கையைக் கூடத் தொட்டுப் பாக்காமல் அன்ரிபயோரிக்கைக் கொடுக்க, வாங்கி வந்து இரண்டு நாள் எடுக்கக் கொஞ்சம் குறைந்துவிட்டது. மூன்றாம் நாள் மறந்துவிட நான்காம் நாள் மனைவி திட்டித்திட்டி மருந்தைக் குடுக்கக் குடிச்சிட்டுக்கடைக்குப் போனான். ஒரு கிழமையாகியும் நெஞ்சுநோக் குறையவில்லை. மீண்டும் நாளைக்கு அதே வைத்தியரிடம் நேரம் பதிவு செய்துவிட்டு "நாளைக்கு டொக்டரிட்டைப் போவேணும். மத்தியானம். ஞாபகப் படுத்து" என்று மனைவியிடம் கூறிவிட்டுப் போய்விட்டான். இரவு கடையைப் பூட்டிவிட்டு வர பன்னிரண்டு மணியாகிவிட்டது. வந்த களைப்புக்கு ஒரு தேத்தண்ணி குடிச்சால் நல்லாய் இருக்கும் என்று நினைத்தவன், அயர்ந்து தூங்கும் மனைவியை எழுப்ப மனமின்றிப் பக்கத்தில் சென்று படுத்துக்கொண்டான்.

காலை ஆறுமணிக்கு எழுந்த மனைவி பிள்ளைகளுக்கு சாப்பாடுகள் கட்டித் தயார் செய்து, ஒவ்வொருவர் ஒவ்வொருவராக எழுப்பிப் பள்ளிக்கு அனுப்பிவிட்டு எழுமணிக்குக் கோப்பி ஊத்திக்கொண்டு போய்க் கணவனை எழுப்ப, அவனுக்குக் கண்ணையே திறக்க முடியாமல் எதோ செய்தது. கடை திறக்க வேணும். எதோ செய்யுதடி என்றவன், கடைக்கு அருகே இருக்கும் இன்னொரு வேலையாளைக் கடை திறக்க ஏலுமோ என்று கேட்க, அவனும் சரியென்று கூற மனைவியிடம் கோப்பியை வங்கிக் குடிக்க, மூச்சு விட முடியாமல் நெஞ்சை எதோ செய்தது. அவன் மூச்செடுக்கச் சிரமப்படுவதைக் கண்டவள் உடனே ஓடிப்போய் தன அஸ்மாப் பம்பை எடுத்து வந்து "இதை அடியுங்கோ அப்பா" என்று அவனை அடிக்க வைத்து நெஞ்சைத் தடவி அவனை மீண்டும் படுக்கையில் கிடத்திவிட்டு இண்டைக்கு நானும் உந்த மனிசனோட டொக்டரிட்டைப் போகவேணும் என்று எண்ணியபடி மிச்ச வேலையைப் பார்க்கப் போக, குட்டிக்கு மூச்சு சீராக வந்து தூங்கத் தொடங்கிவிட்டான்.

பதினொன்றரைக்கு டொக்டர். மூத்தவளுக்கு இண்டைக்கு பள்ளிக்கூடம் இல்லை. பதிநொண்டுக்குக் குட்டியை எழுப்பி பல்லைத் தீட்டச் சொல்லிப்போட்டு குசிணியைக் கூட்டிக்கொண்டிருந்தவளுக்கு எதோ அடிபட்ட சத்தம் கேட்க, என்னம்மா சத்தம் என்று படித்துக்கொண்டு இருந்த மகளைக் கேட்டாள். எனக்குத் தெரியேல்லை அம்மா என்றதும் இவள் தும்புத்தடியை வைத்துவிட்டு பாத்ரூம் கதவைத் தட்டி ஒகேயோ அப்பா என்று கேட்க்க எந்தச் சத்தமும் இல்லை. கதவைத் தள்ளித் திறந்தால் குட்டி நிலத்தில் விழுந்து கிடந்தான். "அய்யோ பிள்ளை ஓடி வாங்கோ. அப்பா விழுந்து போனார்" என்றுவிட்டு அவனுக்கு முகத்தில தண்ணி அடிச்சு கன்னத்தைத் தட்ட கண்கள் லேசாகத் திறக்க தாய்க்கும் பிள்ளைக்கும் நெஞ்சில் நின்மதி வந்தது. உடன மகள் அம்புலன்சுக்கு போன்செய்து விடயத்தைக் கூறிவிட்டு, தாயுடன் சேர்ந்து தந்தையை எழுப்பி ஒருவாறு கூட்டிக்கொண்டு வந்து கட்டிலில் கிடத்திவிட்டு ஒரு கொப்பி எடுத்து விசுக்கத்தொடங்க, நான் கொஞ்சம் சுடுதண்ணி கொண்டுவாறன் என்றுவிட்டு தாய் குசினிக்குள் போய் இரண்டு நிமிடமாகவில்லை வெளியே அம்புலன்சின் சத்தம் கேட்க மகளுக்கு ஆச்சரியமாகிவிட்டது.சாதாரணமா அரை மணித்தியாலமாவது செல்லும் உவங்கள் வாறத்துக்கு. இண்டைக்கு என்ன ஐந்து நிமிடத்திலையே வந்திட்டாங்களே என வியப்புடன் கதவைத் திறந்தாள்.

அவசரப்பட்டு இப்ப உவங்களுக்கு அடிச்சது. எனக்கு ஓகேதானே என்று குட்டி நினைத்துக்கொண்டிருக்கும் போதே அவர்கள் இருவர் உள்ளே வந்துவிட்டார்கள். "எனக்கு இப்ப கொஞ்ச நாளாவே நெஞ்சுநோ. போன கிழமை டொக்டர் அன்ரிபயோரிக் தந்தவர். இண்டைக்கும் திருப்ப அபொன்ற்மென்ட்இருக்கு" என்று கூறிக்கொண்டிருக்கும்போதே கண்கள் இருண்டு மயக்கம் வந்தது குட்டிக்கு. அவர்கள் குட்டியை படுக்கையிலிருந்து கீழே காபற்றில் கிடத்திவிட்டு கையில் ஊசியை ஏற்றி உடனேயே ஒரு மருந்தை ஏற்றிவிட்டு செலைனைத் தூக்கிப் பிடிக்கும்படி மனைவியின் கையில் கொடுத்துவிட்டு ரிப்போட்டை எழுதத் தொடங்கினர்.

மனைவி நீலாவுக்கு நெஞ்சு முழுதும் பயம் பரவி கைகால்கள் நடுக்கமெடுக்க, நடுங்கும் கைகளால் மருந்தை இறுக்கிப் பிடித்தபடி கண்களை நிறைக்கும் கண்ணீருடன் பார்த்துக்கொண்டு நின்றாள். ஒருநாளும் வருத்தம் எண்டு படுக்காத மனிசனுக்கு இப்பிடியாப் போச்சே என்று மனம் பதைத்தது. மாமிக்கு போன் செய்து சொல்லுங்கோ அம்மா உடன என்று மகளுக்குக் கூறிவிட்டு கீழே பார்க்க அவர்கள் குட்டியின் நெஞ்சைப் பிடித்து அழுத்திக்கொண்டிருந்தார்கள். போன் செய்து ஐந்து நிமிடத்தில் குட்டியின் தங்கையும் கணவனும் வந்துவிட நீலாவுக்குக் கொஞ்சம் தெம்பு வந்தது. அவனை உடனே வைத்தியசாலைக்குக் கொண்டு செல்ல ஆயத்தப்படுத்தத் தங்கையின் கணவனும் நீலாவுடன் அம்புலன்சில் ஏற, தங்கை அண்ணன் மகளையும் கூட்டிக்கொண்டு பின்னாலேயே மருத்துவமனைக்குச் செல்லத் தயாரானாள்.

**********************************************

கண்விழித்த அவனுக்கு இருப்புக்கொள்ளவே இல்லை. வைத்தியசாலையில் ஐந்து நாள் இருந்திருக்கின்றேனா. கடையை யார் பார்க்கிறார்கள் என்றும் தெரியவில்லை. வீட்டில் பார்த்தால் மனைவியைக் காணவில்லை. எங்கே போய்விட்டாளோ தெரியவிலையே. தங்கையின் வீட்டுக்கும் போய் ஐந்து நாட்களாகிவிட்டது. அவளுக்கும் என்னைக் காணாவிட்டால் சோறு தண்ணி இறங்காதே என தங்கை பற்றி என்னிக் கிலாகித்தவன் முதலில் அவள் வீட்டுக்குப் போய் வருவோம் என எண்ணினான். தங்கையின் மகளின் சாமத்தியவீட்டுக் கொப்பி ஒரு வருடத்துக்குப் பிறகு இப்பதான் குடுத்திருக்கிறாங்கள். இண்டைக்கு அதைக் கட்டாயம் பார்த்திட வேணும். பிறகு எனக்கு நேரம் கிடைக்காது என்று எண்ணியவன், அட தங்கை வீட்டில் நிக்க மாட்டாளே என நினைத்தவனுக்கு அவள் வீட்டுத் திறப்பு தன்னிடம் இருப்பது நினைவி வர உடனே அங்கு கிளம்பினான்.

கதவைத் திறந்து உள்ளே சென்று பார்த்தால் யாரும் இல்லை. உடனே வீடியோவைப் போட்டுவிட்டு கதிரையில் அமர்ந்து பார்க்கத் தொடங்கினான். தொலைக்காட்சியில் சத்தம் வரவே இல்லை. சத்தம் குறைக்கப்பட்டிருக்கும் என எண்ணி ரிமோட்டை எடுத்தவனுக்கு அதை எப்படிப் பாவிப்பது என்றும் தெரியவில்லை.வந்த எரிச்சலில் அதை கதிரையில் எறிந்துவிட்டுக் காட்சியை மட்டும் பார்க்கத் தொடங்கினான். எத்தனை அழகாக இருக்கிறாள் மருமகள். என் பிள்ளைகள் கூடத் தான் அழகாக இருக்கிறார்கள். காசு இருந்தால் யாரையும் அழகாக்கலாம் தான் என மனதில் எண்ணிச் சிரித்தவன் மனைவியின் அழகையும் இரசித்தான். எத்தனை அழகாக இருக்கிறாள். இவளுக்காகவாவது கட்டாயம் ஒரு வீட்டை வாங்கிக் குடுக்கத்தான் வேணும் என்று மனதில் உறுதி எடுத்தவனாக தொடர்ந்து பார்க்கத் தொடங்கினான். சொந்த பந்தங்கள் எத்தனை தேவை மனிதர்களுக்கு என எண்ணியபடியே அதில் லயித்துவிட்டான் அவன்.

************************************

அன்றுகாலை தங்கையின் வீட்டில் நிறையச் சனம். யேர்மனி சுவிசிலிருந்து எல்லாம் வந்திருக்கின்றனர். அண்ணன் மனைவி பிள்ளைகள் கூட இங்கே தான் நிக்கினம். ஒன்றுவிட்ட அண்ணா தான் நித்திரை மாடு. எட்டு மணியாகியும் எழும்பாமல் குறட்டை விட்டுத் தூங்கியபடி இருக்க, தங்கை நித்தியா சென்று அவனை எழுப்பிவிட்டு வந்தாள். பெண்கள் எல்லாரும் மேல் அறைகளில் படுத்துத் தூங்க ஆண்கள் நான்குபேரும் இரவு கோலுக்குள் தான் படுக்கை. ஒன்றுவிட்ட சகோதரர்கள் என்றாலும் சொந்தச் சகோதரர்கள் போலவே சிறுவயதில் இருந்து பழகுவது.

பல்லுத் தீட்டிவிட்டு வந்த ரவி அண்ணா குசினிக்குள் போனபோது அத்தான் தேநீர் குடித்தபடி இருந்தார். அத்தான் நீங்கள் ராத்திரி டிவியை நிப்பாட்ட மறந்து போனியளோ என்று கேட்க விசுக்கென நிமிர்ந்த அத்தானின் கண்களில் பயம் தெரிந்தது. நீயும் கண்டனியே. நான் போடேல்லையடா. எதோ காத்துப் பட்டதுபோல இருக்க கண்ணைத் திறந்து பார்க்க டிவி வேலை செய்யுது. தீபாவின்ர மகளின்ட வீடியோ கருப்பு வெள்ளையில ஓடிக்கொண்டு இருக்க நான் கண்ணை இறுக்கி மூடிக்கொண்டு பெட்சீற்றாலை முகத்தை மூடிக்கொண்டு படுத்தது தான் என்றார். உங்கடை கை தட்டுப் பட்டிருக்குமோ என்றவனுக்கு, வீடியோ இந்த அறையுக்குள்ள இல்லையே பெரியண்ணா என்று தங்கை கூற மயிர்க்கால்கள் குத்திட்டு நின்றன.

அண்ணை தான் வீடியோ பார்த்திருக்கு. அண்ணை என்னை விட்டிட்டுப் போகாதே. சுத்திச்சுத்தி இங்கேயே நிக்குமே. அய்யோ அண்ணா ஏன் எங்கள் எல்லாரையும் இப்பிடித் தவிக்க விட்டுப் போனனீங்கள் என்று குளறி அழும் தங்கையை கண்களில் நீருடன் மற்றவர்களும் பார்த்துக்கொண்டே இருந்தனர் வேறு வழியின்றி.

No comments:

Post a Comment