Saturday 26 July 2014

காத்திருப்பு - கவிதை


காலங்களின் காத்திருப்புகளில்
கருணைக் கொலையாய் அன்பும்
வேண்டியோருக்கு இல்லாமலும்
வேண்டாதோர்க்கு இருப்பதுமாய்
மனதின் உணர்வுகளை எல்லாம்
மழுங்கவைக்கின்றன

பகிர்தலற்ற பக்குவமாய்
பாறாங்கல்லாய் மனிதர்கள்
மிகைப்படுத்தப்படும் மனத்தின்
மீட்சியற்ற எண்ணங்களிநூடே
மறுதலித்து மனம் கொள்ளும் நினைவுகள்

நிமிடங்கள் நாட்களாகி
மாதங்கள் ஆண்டுகளாகி
அடைகாத்துவைத்த எண்ணக் குவியலில்
ஏமாற்றத்தின் உத்தரிப்பில்
அத்தனையும் அர்த்தமற்றதாகின்றன

இனிவரும் காலங்களின் வகுத்தல்
எதுமற்றதாகி இயலாமை நிறைந்ததாய்
எதிர்மறை எண்ணங்களின் எக்களிப்பில்
எல்லைகள் கடந்தும் எங்கும்
எல்லாமே இல்லாதாகின்றன

இருளற்ற காலங்களில் தெரியும்
தெளிவான காட்சிகள் கூட
தேவைகளின் நிர்ப்பந்தங்களில்
நிகரான நகர்த்தல்களின் காட்சி
இருப்பின் அர்த்தத்தைத் தகர்ப்பதாய்
எப்போதும்போல் ஏகாந்தத்தை
எட்டவே நிறுத்தியபடி

No comments:

Post a Comment