Tuesday 25 August 2015

உருவமில்லா ஓசை

Nivetha Uthayan's photo.

உருவமில்லா ஓசை கேட்டு மனம்
உன்னிடம் பித்தாய் ஆனது
உவப்புடன் தினமது ஓங்காரமாகி
உறவு கண்டிட உன்மத்தம் கொண்டு
உன்னைத் தினம் எதிர்பார்த்தது

உயிரின் நிகரிலா உணர்வாய்
உரிமைகொண்டே நீ வந்தாய்
உயிரில் கலந்த உறவே என்றாய்
உயிர் தினம் உனக்காய்த் துடிக்கிறதென்றாய்
உன்முகம் காணத் தவிக்கிறதென்றாய்

உண்மை என்றெண்ணி உயிர் துடிக்க நான்
உன்னில் அன்றே கலந்துவிட்டேன்
உலகு முழுதும் எனக்காய் என்று
உயிர்ப்புடன் நானும் உலவிவந்தேன்
உளம் எங்கும் உவகை கொண்டிட
உற்றவனாய் உட்பொருளாய் கண்டிட
உயிர் கூடி உணார்வுகொண்டிட
உனையே நானாய்க் கண்டிருந்தேன்

ஊனமுற்றதாய் ஆனதுன் உறவு
உயிர் குடிக்கும் விதமாய் மனது
உண்மை கொன்று உள்ளம் தின்று
ஊசலாடும் மனதும் கொண்டு
உணர்வுகளைத் தினமும் கொன்று
உள்ளத்தின் இரக்கம் துறக்க
உயிரின் வலி அறிய மறுத்து
உயிர்ப்பிழந்து உடல் சுமக்க
உறுதுணையாய் நிற்கின்றாய்

உனைத் துறந்து நிதமும் நான்
உயிர் காவும் வழியும் இன்றி
உடல்க் கூண்டு ஓசை இழக்க
ஒப்பாரியின் ஓசைகளில்
உறக்கமின்றித் தவிக்கின்றேன்

எனக்காக

 Nivetha Uthayan's photo.


எனக்காக நீ என்றும் தவித்ததில்லை
எனக்காக எதையும் நீ இழந்ததில்லை

உனக்காக நான் என்றும்
நினைவுகளுடன் போராடி
உன் துயரில் நான் அழுது
உன் நோயில் நான் துவண்டு
நீ நனைந்தால் நான் குளிர்ந்து
நெருப்பின் சுவாலைக்குள் தினம்
நீந்தியபடி நடக்கின்றேன்


உனக்காக என்னை நான்
இழந்தது போதும்
உன்னிடம் என்றும் நான்
தோற்றதும் போதும்
உயிர் கொல்லும் நோயாய்
உன் செயல்களில் தினம்
வலிதாங்கி வலிதாங்கி
ஊனுருக்கி உருக்குலைந்து
உணர்வுகளின் எச்சங்களில்
உயிர் வாழ்ந்ததும் போதும்

இனி எனக்காக நான் வாழ்ந்து
என் நினைவில் நான் எரிந்து
உன் நினைவை உருக்கிவிட
எப்போதும் போலன்றி
எல்லைகள் தாண்டியும்
எதிரியாகும் உன்னினைவை
ஏதுமற்ற வெளி தாண்டி
எண்ணதுளியின் சுவடு கூட
எதுவுமின்றித் தொலைத்துவிட
இடம் தேடி அலைகின்றேன்

Friday 14 August 2015

ஏக்கம் சுமந்து







உரிமையற்ற ஒன்றிற்காய்
உளம் ஏங்கி உயிர் துடிக்கும்
கருணையற்ற மனிதருக்கு
காணும்வலி
கணம்கூட உணராது

நெஞ்சில் வெடித்தெழும்
நேசத்து  நிகழ்வுகளின்
சொல்லொணாத் துயர் சுமந்து
சொல்லி அழாச் சுமைகளுடன்
காத்திருக்கும் கணங்கள் கவி
சொல்லிட முடியாது

காலாண்டு கூடவில்லை
கடல்போல் அன்பு

காட்டாற்று
வெள்ளமாய்
கரையுடைக்க
காலத்தின் வரவுக்காய்
காத்திருக்க மட்டுமே
முடிகிறது முடிவின்றி

முடிவேதுமில்லா
அண்டப் பெருவெளியில்
அரவமற்று அனாதையாய்
நிற்பதாய் உணர்கையில்
உள்ளத்தெழும் உணர்வின்
கொடுமையில்
உறக்கம் மட்டுமா
தொலைந்து போவது???

காதலின் சரணடைவு




 காதல்

கற்பனையில் எண்ணியவை
உன்னிடம் கண்டதனால்
காதல் கொண்டேனடா
காலமெல்லாம் காத்திருந்து
உன்னைக் கண்டேனடா

கண்ணிமை மூடினும்
என்முன்னே நின்று
காதல் செய்கிறாய்
காதினிக்க  வந்து
காதல் மொழி பேசுகிறாய்

கயவனே உன்னைக்
காணாதிருந்திருந்தால்
காலமெல்லாம் நான்
கற்பனையில் வாழ்ந்திருப்பேன்

கண்டதனால்
நிதம் என் உயிர் துடிக்க
நினைவு நிதம் வதைக்க
நேர காலம் தெரியாது
நெகிழ்ந்து போய் கிடக்கிறேன்.

நெருப்பாய் இருந்தவள்
நெக்குருகி நிற்கிறேன்
நெஞ்சம் முழுதும்
உன்னை நிரப்பி
நினைவில் உன்னை முகர்ந்து
நித்தம் உனக்காய்
காத்திருக்கிறேன்

முகம் பார்க்க முடியாமல்
சத்தமிலா முத்தமின்றி
சர்வமும் இழந்து
சரணடயக் காத்திருக்கிறேன்
உணர்வாயா ?????????



யாதுமாகி நிற்பான் அவன்


எனக்கே ஒண்டுமா விளங்கேல்ல. உங்களுக்கு விளங்குதோ ?????



யாதுமாகி நிற்பான் அவன்
எதுமாகி நிற்பான் அவன்
எனக்குள்ளே அவனாகி
எதற்குள்ளும் அவனேயாகி
உயிரின் உணர்வாகி
உணர்வெல்லாம் அவனாகி
ஊக்கியாய் ஆக்கியாய்
அகமெங்கும் நிறைப்பவன்
அருமருந்தாகி அரிதாகி
ஆட்கொள்ளும் விடமாகி
அகடனாய் அறிவொழுக
ஆட்கொண்டு நிற்பான் அவன்
என் ஆகுபொருள் அவனேயாக

feeling confused.

01.07.2015

விலக மறுக்கும் கிரகணங்கள்



 



அன்பென்னும் வார்த்தையை
ஆயுதமாக்கி மூடர்
ஆசை என்னும் வினை விதைத்து
எம்மை அடக்கிடுவார்

ஆதி மூலமே நீ என்பார்
அடியில் கிடக்கும் மலர் தாம் என்பர்
முற்பிறப்பு தொடருதென்பார்
முடிவின்றி முடிவுவரை
மூலாதாரமாய் இருப்பேன் என்பார்

தேவைக்காய் தேடிவந்து
திக்குமுக்காட்டி எமை
தெருவில் விடுவதற்காய்
தெவிட்டத் தெவிட்டப் பேசி
தம்மை எம்முள் விதைத்திடுவார்

தேவைகள் முடிந்தபின்னே
தெரியாத யாரோபோல்
திடமுடிவெடுத்து எம்மைத்
திக்குமுக்காட வைப்பார்
தெருவிலும் விட்டுடுவார்

எதற்காய் எம்மைப் படைத்தான்
எதுவுமற்று ஏங்கிடச் செய்து
இரக்கமற்று இதயம் உடைத்து
தயக்கமற்று தடைகள் கொண்டு
சிலதுக்காகச் சிந்தை தகர்த்து
மனது கொன்று மகிழ்வு கொன்று
திடம் கொண்டு திறமை தகர்த்து
வதை கொண்டு வாழ்வு தகர்க்க
எதற்காய் எம்மைப் படைத்தான்
02.07.2015

ஒவ்வொரு தடவையும்



 

ஒவ்வொரு தடவையும் உன் அலட்சியம்
என் மனதை உருக்குலைக்கவே செய்கிறது.
ஆனாலும் என் அன்பின் அச்சாணியும்
கூடவே உன்னுடன் இறுக்கமாக
பிணைக்கப்பட்டுள்ளதால்
உன்னைத் தூக்கி எறிந்து விட்டு
என்பாட்டில் இருந்துவிட முடியாது
என்னை நானே வருத்தியபடி
தவமிருக்கிறேன் உனக்காக

ஆனாலும் ஏமாற்றமும்
அதன் எதிர்வினைகளும்
எனக்கு மட்டுமே சொந்தமாக
எக்கணமும் அத்தனையும் விழுங்கி
என் மனம் கொண்டிடும் ஏக்கம் எப்போதுமாக
எதுவும் செய்வதற்று ஏங்கும் மனதின் மூச்சடக்கி
ஏமாற்றத்தின் ஒலியடங்க
எண்ணப்பிரளயத்தின் நடுவில் நிற்கிறேன் நான்

ஆனாலும் எப்போதும்போல்
அந்தரத்தில் ஆடும் ஊஞ்சல்
கேட்டுக்கொண்டே இருக்கிறது
தோற்றுக்கொண்டிருப்பது நானா நீயா என ??????
06.07.2015

வானவில்லின் நிறங்களாய்




 வானவில்லின் நிறங்களாய்
உன்னில் பல வர்ணம்
நேரத்துக்கொன்றாய்
நாளுக்கொன்றாய்
நிறம்மாறிக்கொண்டிருக்கிறாய் நீ

உன்மீது கொண்ட நம்பிக்கைகள்
இன்னும் வெள்ளை நிறமாகவே
என்னுள் இருக்கின்றன

காற்றடிக்கும் போதும்
கடும் மலையின்போதும் கூட அவை
நிறம்மாறும் நிலையற்று நிற்கின்றன

ஆனாலும் மனம் என்னும்
மாயக்கண்ணாடி
சூறைக் காற்றின் வாடையில் மெலிந்து
சுழல் காற்றில் சிக்கித் தவித்து
இழப்பை எதிர் நோக்கும் வலுவற்று
ஓடி ஒளிந்துகொள்ள இடம்தேடி
ஒற்றைக்காலில் நின்றுகொண்டிருக்கிறது

மீட்க முடிந்தவன் நீ மட்டுமே
எனினும் பிடிப்பு எதுவுமற்று
பேரன்பு சிறிதுமற்று
பருவம் தப்பிக் காய்க்கும் மரமாய்
பார்த்துக்கொண்டிருக்கிறாய் நீ

என்ன சொல்லி என்ன
இயல்பே அற்ற உனக்கு
ஏற்புரை எது சொல்லினும்
எள்விளையா நிலமாய் உன்மனம்
இரக்கமற்றிருக்க எப்போதும்போல் நான்
எதுவுமே செய்ய முடியாது
பார்த்துக்கொண்டிருக்கிறேன்


08.07.2015

நெஞ்சக் கூட்டில் பிரளயம்





கோபத்தின் ஆணிவேர் அசைக்கப்பட்டு
கோடுகிழித்து நிறுத்தமுடியாதவாறு
கற்பனைகளின் கதவுகள் திறந்து
கடிவாளமற்றுக் குதிரைகள் பாய்கின்றன

நம்பிக்கைகள் சிதைவதான கற்பனையில்
நலிந்து குலைந்து நகர்வதற்கே
நாதியற்று நிற்கையில்
விருப்பும் வெறுப்புமாய் விதைக்கப்படுகின்றன
விளைய முடியாத விதை நாற்றுக்கள்

வார்த்தைகளும் அகராதியில் காணமுடியா
அதன் அர்த்தங்களும் கடைபரப்ப
இதயச் சுவர்கள் எங்கும் இடிமுழக்கங்களாய்
இல்லாத வார்த்தைகள் எல்லாம் கூடி
இதயத் துடிப்பை இரட்டிப்பாக்குகின்றன

துடிப்பின் ஒலி காதில் வேகமாய் மோத
விரைந்து பாயும் இரத்தத்தின் வேகம்
நரம்புக் குழாய்களில் நகரும் வேகத்தில்
நாடிகள் எல்லாம் வலுவிழந்து
நடுக்கங்களை உடலெங்கும் பரப்ப
மூளையின் கதவுகள் வலுவுடன் திறக்க
நரம்பின் வெடிப்பில் நனைந்த தசைகள்
கடிவாளமிடவே முடியாதனவாகி
கால்கள் மடிந்து கண்கள் சொருக
காற்றின் கனதி கலைந்து போகிறது


09.07.2015

இமை மூடா நினைவுகள்





நினைவுகளின் நிர்வாணத்தை
மறக்க மறுக்கும் மனதை
என்ன செய்வது

மறுதலித்தே தொகுத்து
மீண்டும் மீண்டுமாய்
மாயக்கண்ணாடியில் பார்ப்பதாய்
நிழல் பிம்பத்தைத் தோற்றுவித்து
நிலைதடுமாற வைக்கிறது

காரணமின்றி கண்முன் தோன்றும்
கனவற்ற காட்சிகளின் சாட்சி
வேண்டுவன எல்லாம் எப்போதும்
காரியங்களோடு கைகோர்த்தபடி
காயங்களை காணும் இடமெங்கும்
கண்மூடி விதைத்தபடி செல்கின்றன

காரணங்கள் அற்று நானும்
காணவே முடியாதனவற்றை
காண்பதான மாயை சுமந்து
மீண்டுவரா நாட்களின் தகிப்பில்
மனதின் மகிழ்வு தொலைய
எந்நேரமும் விடுபட எண்ணிடும்
நூலிழை பற்றியே நிதமும்
எழுந்துவர எத்தணித்தபடியே
எதுவும் முடியாது காத்திருக்கிறேன்


18.07.2015

மனவானம் இன்று



மனவானம் இன்று
மகிழ்வாய் இருக்கிறது
மனதோடு பாடல்
மிதமாய் ஒலிக்கிறது

கனவான அன்பின் நெகிழ்வில்
கடிமனம் கசிவுகொள்ள
காலத்தில் கொடுமையைத்
தினம் தினம் கொன்று
கல்லாய் மாறிய மனம்
காற்றுப்பட்ட மரணத்தின்
கடைசி மூச்சின் ஒலியாய்
கண்விழித்தே கனவு காண
கூதல் குறைந்த மனம்
குதூகலத்தின் கடிவாளம் சுமந்து
குதிரைகளாய் சவாரி செய்ய
தொடரும் நாட்களும் தொலைந்திடாது
தென்றலாய் வீசும் நம்பிக்கையில்
துளிர்விடும் கனவுகளைத்
தூக்கமுடியாது தூக்கியபடி
தொலைதூரம் நடக்கிறேன்


27.07.2015 

வானவெளியின் வண்ணமேகங்களாய்



வானவெளியின் வண்ணமேகங்களாய்
மனதெங்கும் காட்சிகள் வியாபிக்க
வசந்தங்களின் வரிசைகளில் மனம்
வசமிழந்து போகின்றது

அன்பின் பரிமாறல்கள் நிதமும்
அவசரமின்றி அரங்கேறி வர
அமிழ்தின் சுவை திகட்டி
ஆனந்தத்தின் அதிர்வுகள் எல்லாம்
அணிவகுத்து நிற்கின்றன

குளிர் நிலவின் ஒளிர்வாய் வீசும்
கோடையின் தென்றல் கூடி
குசுகுசுப்பாய்ச் சேதிசொல்லிக்
கூடலின்றித் தவித்த மனதை
கும்மாளமிட வைக்கின்றன

கார்காலம் மீண்டும் வரலாம்
கனவுக்காட்சிகளும் கலையலாம்
கனதியுடன் காத்திருக்கும் என்
காலாவதியாகா நம்பிக்கைகள்
கடைசிவரை எனக்கு மட்டுமாய்
கண்மூடும்வரை கலைந்திடாது
காற்றுவெளியில் காத்திருக்கும்


28.07.2015 

தத்தித் தவழ்ந்து நான்



 

தத்தித் தவழ்ந்து நான்
நடை பயில அன்று
அழகாய் கைகோர்த்து
அகமகிழ்ந்திருப்பார்
என் அப்பா

அ என நான் எழுத
என் விரல் அவர் பிடித்து
அழகழகாய் மண்ணில்
ஆசையாய் கோடுகள்
வரைந்திருப்பார்

அம்மா அப்பா எனும்
ஆரம்ப மந்திரத்தை
மழலை மொழியில்
நான் மிழற்றிடவே
மிக்க மகிழ்ந்திருப்பார்

செந்தமிழை நான் அன்று
செருக்குடன் கற்றிட
ஆக்கங்கள் பலசொல்லி
ஊக்கங்கள் தந்தெனை
அரவணைத்திட்டார்

எப்போது சென்றாலும்
இன்முகம் காட்டி
அன்பாய் அணைத்து
அகமகிழும் அப்பா
இன்றில்லை எம்மோடு

ஆனாலும் இம்முறை
அவரின்றி அவர் குரலின்றி
ஆரத்தழுவும் கைகளின்றி
பாசத்துடன் எமைப் பார்த்து
படத்தில் மட்டும் சிரித்தபடி


01.08.2015

மனதின் ஓசைகள் அடங்கிட




மனதின் ஓசைகள் அடங்கிட மறுக்கின்றன

அன்பின் கணக்குகள் அறியப்படும் நேரமெல்லாம்
ஆள்கிணறுள் தள்ளப்படுவதான உணர்வில்
அங்கவீனமாகிப் போகின்றன அத்தனையும்

நேசிப்பின் அர்த்தம் அறியா ஆணவம்
நெகிழ்வின்றி நேர்கோட்டில் செல்கையில்
நலிந்து போன நம்பிக்கைகள் யாவும்
நகர்வதற்கும் சக்தியற்றுப்போகின்றன

பொய்யிலும் புனைவிலும் பின்னப்பட்ட
புரிதலற்ற அன்பின் ஒழுங்கற்ற பிணைப்பு
எந்நேரமும் அறுவதாய் அச்சுறுத்தியபடி
நெஞ்சின் நாடிக்களில் நெருக்கமாய் ஓடியபடி
இணக்கமற்ற தண்டவாளங்களாய்
இடைவிடாது ஓசை எழுப்பியபடி
விதியின் வலிய கைகள் எனைப்பற்ற
விடாமல் துரத்தியபடியே இருக்கின்றன

என்செய்வேன் நான் நிதமும்
எரித்திட முடியா நினைவுகள் கொண்டு
எல்லைகள் அற்ற கற்பனை கண்டு
காரண காரியம் புரிந்திடா மனதில்
இடியும் மின்னலும் தொடர்ந்திடக்கண்டு
இயலாமையில் இயல்வதும் கொன்று
எண்ணங்களில் எரிதழல் மூண்டிட
ஏதுமற்றுக் காத்திருக்கிறேன் ஏதிலியாய்
02.08.2015

அன்று உன்னிடம்




அன்று உன்னிடம்
அன்பு மட்டுமே இருந்தது
என் உயிர்ப்பை இரட்டிபாக்குவதாய்
என் உணர்வை முழுமையாக்குவதாய்
என் அறிவை ஆராதிப்பதாய்
கருத்தின் கருவை ஆமோதிப்பதாய்
எந்நேரமும் என்னை மகிழ்விப்பதாய்
என்னை மறந்து நான் திளைக்க
எனக்காக அத்தனையும் செய்தாய்

இன்று உன்னிடம் ஒட்டியிருக்கும்
ஓரங்களில் மட்டுமானதான அன்பு
உதிரக் காத்திருக்கும் பூவின் இதழாய்
வருடலின்றி வாசனையின்றி
வருத்தம் மட்டும் தினம் தருவதாக
என் உயிர்ப்பைத் தொலைத்து
உள்ளத்தின் சுவர்களைத் தினம்
உளியாற் செதுக்குவதான வலியை
கணப்பொழுதுகளில் கூடக்
காரணமின்றித் தந்தபடி இருக்கிறது
05.08.2015

மரணத்தின் நுகரமுடியா











மரணத்தின் நுகரமுடியா வாசனையாக
வாழ்வின் பக்கங்கள் மடிக்கப்படுகின்றன
கேள்விகளும் இல்லாத பதில்களுமாய்
வசந்தங்கள் வராத நாட்களின் கணக்கு
கிடைக்காத எண்ணிக்கையைத் தினம்
தந்தவண்ணமே தடுமாறுகின்றன

அன்பின் அசைக்கமுடியாத அளவின்
காலத்தின் கணக்குகளும் என்றும்
ஏற்றுக்கொள்ளமுடியா நம்பிக்கையின்
எதிர்மறை எண்ணங்களைத் தகர்த்து
எதுவுமற்ற நிலையை எதிர்கொள்வதாய்
எண்ணக் கிடங்குகளில் எப்போதும்
நிரம்பியபடியே காத்திருக்கின்றன

மறக்கும் நிலையற்ற மனதின் மகிமை
மற்றவர் எண்ணத்தை மலிந்ததாக்க
பெறுமதியற்ற காலங்களின் நேரங்கள்
பெருவாரியாக இறைக்கப்பட்டபடி
முகிழ்ந்திடமுடியா மனப்பாறையை
மீண்டும் மீண்டும் தகர்க்க முயன்று
தோற்றுக்கொண்டே இருக்கின்றன
10.08.2015

நிற்கதியாகி நிற்பதான




நிற்கதியாகி நிற்பதான உணர்வில்
நெஞ்சக் கூட்டில் நிதம்
பாறாங்கல்லாய் அடைக்கிறது
சுவாசத்தின் காற்று

அன்பின் வெளிப்பாடற்ற அசைவு
அங்கத் திசுக்களில் எல்லாம்
அசைக்கமுடியாத வலியை
நினைக்காத நேரத்திலும் தந்து
நெருப்பின் சுவாலை ஆகிறது

அதீத உணர்வின் வெளியில்
இதயத்தின் குருதிப் பாதைகளில்
இசைப்பு இறுமாப்பிழந்து நிற்க
எதிர்வலுவற்று இயங்க மறந்து
ஏக்கங்களை மட்டும் மூச்சாய்
எங்கும் பரவவிட்டபடியே தினம்
எதிர்நீச்சல் போடுகின்றன

மனவெளி எங்கும் உன் ஓசை
கேட்டுக்கொண்டே இருக்க
மரத்துப்போகா மாய மனதை
எது செய்தும் மாற்ற வழியின்றி
எதிரொலித்து வஞ்சம் புரிய
மரணத்திடம் மீள்வதற்காய்
தினம் என்னைத் தயார் செய்கிறேன்
11.08.2015