Tuesday 17 February 2015

காத்துக் கிடக்கின்றனர் - கவிதை








காத்துக் கிடக்கின்றனர் அவர்கள்

அவளின் ஒவ்வொரு வரிகளுள்ளும்
பிரவகித்து ஓடும் காதலிக்கப்படுவதான
பிம்பங்களின் நிழலில் குளிர் காய்தலில்
தம் இழந்து போனவைகளையும்
கனவுகளுள் புதைந்து போனதையும்
எச்சங்களின் படிமங்களில் 
எப்படியோ காண்பதான பிரமைகளையும்
துலாவமுடியாத இருட்டில் தினம்
குருடாகிப் போன கண்களின் வெளிச்சத்தில்
தேடியபடியே இருக்கின்றனர்

கண்முன்னே காத்திருக்கும் 
காரணமற்ற வெளிச்சங்களை
பார்த்திட முடியாத மனக்குருடாய்
மடை திறந்தோடும் மனவாற்றின் வழியே
ஆசையின் அகல்விளக்கேற்றி
அடைந்திடமுடியாததான அகத்தின் அருகே
சஞ்சரிப்பதான பிரமை கூட்டியபடி
வீழ்ந்திடாத பழமரங்களுக்காய்
கற்களைத் எந்நாளும் எறிந்தபடி   

நிவேதா உதயன்
17.02.2015

Sunday 8 February 2015

என்னை நானே எழுதப் பார்க்கிறேன் - கவிதை


என்னை நானே எழுதப் பார்க்கிறேன்
எல்லைகள் அற்றவளாய்
ஏக்கங்கள் இல்லாத எண்ணிலடங்கா
மாற்றங்கள் மனதடைந்து
மீட்கவியலாத முடிவிலாத் தூரமதை
மனதின் மந்தகாரமில்லா
முடிவே அற்றதான முடிதல்களுடன்
மிகைப்படுத்த முடியாதபடி

புலன்களின் புரிதலற்ற பதுங்குதல்களில்
பிடிவாதமாய் பின்னி நிற்கும்
படிநிலைகளின் பக்குவமற்ற பதங்கள்
பாகுபாடற்று என்றும்
பாழ்மனதைப் பலமிழக்கச் செய்து
பரிகாரம் தேடித் தேடியே
பரிவறுக்கச் செய்கின்றன நிதம்

காலங்களின் ஆற்றவும் முடியாததான
மாற்றங்களை நிதம் நம்பி
மீண்டு வரவே முடியாததான நிலையின்
மிகைப்படுத்தப்படும் மிதப்பில்
மாயைகளில் மதம்பிடித்தாடும் மனதின்
மார்க்கங்கள் என்றும் அறியோராய்
மீட்பர்கள் போல் மந்தகாசித்தபடி மனிதர்கள்

மாறுகின்ற காட்சிகளின் மனதோடு
முகம் முழுதும் மாயத்தோல் போர்த்து
மின்மினிகளாய் வானம் எங்கணும்
வரலாறு பாடுகின்றன வண்ணத்துப்பூச்சிகள்
மனம் என்னும் பாறையில் மட்டும்
மாற்றமே நிகழ்த்த முடியாததாய்
மடிந்தபடி இருக்கிறது வசந்த காலம்


08.02.2015
நிவேதா உதயன்

Tuesday 3 February 2015

தேவைகளுக்காய் மனிதர் - கவிதை





தேவைகளுக்காய் மனிதர்
தினந்தோறும் திரை மனிதராய்
நடித்தபடியே நடமாடுகின்றனர்

மனதின் ஆழத்தின்
அல்லல்கள் அறியாதவராய்
சுயநல ஆடையணிந்து
நிதம் மாறும் சுவரொட்டிகளாய்
காட்சி தருகின்றனர்


புரிதல் என்பது புனைதலாகி
புரையோடிப்போனதான பந்தங்களின்
புனிதமற்ற புழுக்களின் நகர்விலான
பாதைகளில் புற்றீசலாய்
புறப்பட்டபடி தினமும்

பரிதவிப்பும் பயமும் கோபமும்
பார்க்கும் இடம் எல்லாமாக
பயன் விளையா நிலமாய் நிதம்
பக்குவம் கெட்டபடி மனதில்
பாறைகளைத் தோற்றுவித்தபடி

மனதே நீ மாந்தரை தெரிந்தே
மீண்டும் மயக்கம் கொள்ளாதிரு
சுயநலம் கொண்ட மாந்தர்
சுயத்தை அறிந்தபின்னும்
சொப்பன வாழ்வில் வீழ்ந்து
சோர்வு கொள்ளாதிரு
சிந்தை கொன்று சிறுமை கண்டு
சித்தம் கலங்காதிரு மனமே

02.02.2015
நிவேதா உதயன்