Sunday 30 November 2014

வசந்தங்களாய்த் தொடரும் - கவிதை


வசந்தங்களாய்த் தொடரும்
வாழ்வின் அத்தியாயங்கள்
அப்பப்போ ஊடல் என்னும்
கீறல் விழுவதாய் மாறிப்போகிறது

நித்தமும் காணும் முகங்களுள்
நித்தியமாகிப்போன நிதர்சனம்
நம்பிக்கையின் கயிற்றால்
இறுக வரிந்து கட்டியபடி

எதிர்பார்ப்பின் ஏக்கத்தில் எழும்
முரண்பாடுகளின் மயக்கம்
முட்களாய் நாக்கின் மீதமர்ந்து
வார்த்தைகள் விதைக்கின்றன

வினைகளின் ஆழம் அறியாது
எதிர்ப்படும் எல்லாம் எதிராகி
எங்குமாய் சலசலத்து ஓடி
எல்லை தாண்டி நிறுத்துகின்றன

மனமே நீ மகிழ்வை மட்டும் நினை
மனது தாண்டி மதில் உடைத்து
இருப்பதை இழந்து ஏங்காது
நிறை கண்டு குறை கொன்று
நித்தமுமாய் மகிழ்ந்திடு நீ

நிவேதா உதயன்
13.11.2014

மனதில் நாம் போடும் கோடுகள் - கவிதை


மனதில் நாம் போடும் கோடுகள்
மற்றவர் அறிவதில்லை

எமக்குள் எப்போதும் தோன்றும்
எண்ணத்தின் குவியல்களில்
எதிரும் புதிருமாய் பல
கோடுகளை வரைகிறோம்


நேராகி நீண்டு சிலவும்
நெளிதல்களோடு பலவும்
நெட்டிப் பாய்ந்தபடி சிலதுமாக
எப்படியெல்லாமோ வரைகின்றோம்

காரண காரியங்கள்
அறிந்திடாத மனத்தடத்தில்
தண்டவாளமற்றுப் பல
வண்டிகள் ஊர்ந்தபடி எப்பொழுதும்

மீட்சியற்ற வலைப்பின்னல்களாய்
எப்போதும் எம்மனதின்
நம்பிக்கை தகர்த்து
வலை பின்னும் சிலந்தியாய் வதை

புரிந்தும் புரிய மறுக்கும்
நிதர்சனம் கொல்லும் உண்மையின்
நீட்சியில்லா வாழ்தலில்
நித்தமும் கொடுக்குகளாய்
கொட்டியவண்ணம் மனம்
குருடாய் வெளிச்சம் தேடுகின்றது

16.11.2014
நிவேதா உதயன்

உயிரின் வலி அறிவாயோ - கவிதை


உயிரின் வலி அறிவாயோ மானிடா
ஊனுருக்கி உடல் கருக்கி
உள்ளனவெல்லாம் மறக்கும்
உயிரின் வலி அறிவாயோ

உள்ளக் கருவறுத்து
ஒவ்வொரு நொடிப்பொழுதும்
உயிர் வதைத்து உணர்வு கொல்லும்
உயிரின் வலி அறிவாயோ

எதுவுமற்று ஏதுமற்று
எங்கெங்கோ மனம் அலைத்து
ஏக்கங்கள் கொள்ளவைக்கும்
உயிரின் வலி அறியாயோ

எதிரியாய் எமை வதைத்து
எட்டி நின்றே வகுத்து
எல்லையில்லா துன்பம் தரும்
உயிரின் வலி அறியாயோ

எண்ணத்தை எதிரிகளாக்கி
எல்லையற்று ஓடவைத்து
என்புகள் மட்டுமே ஆனதாய் என்
உயிரின் வலி அறியாயோ

சரணடைந்து சரணடைந்து
சர்வமும் இழக்க வைத்து
சக்தியெல்லாம் துறந்து நிற்கும்
உயிரின் வலி அறியாயோ மானிடா
உயிரின் வலி அறிவாயோ
18.11.2014
நிவேதா உதயன்

ஒன்றுமில்லாத வெற்றிடமாய் - கவிதை


ஒன்றுமில்லாத வெற்றிடமாய்
ஓலமிடுகிறது மனம்
ஓய்வே இன்றி
ஒருமுகப்படுத்தமுடியாது
ஓதல்கள் செவிகளை நிறைக்க

வார்த்தைகளின் வடிவமைப்பில்லா
கோர்வைகளில் நிதம்
கொலைக்கருவிகளின்
கூர்தீட்டல்கள் எனை
குற்றாமல் குற்றி வதைத்தபடி

இலக்குகள் அற்று எல்லாம்
இங்கொன்றும் அங்கொன்றுமாய்
எதிர் திசைகளை ஈர்த்தபடி
எதிரி கைகளில் அகப்பட்ட
எதிர்ப்பே இல்லாக் கைதிபோல்

மனம் எட்டும் தீர்மானங்கள்
மற்றவர் மனதின் சூழ்வினைகளாய்
மார்க்கமேதுமற்று மடிந்துபோக
நிர்க்கதியாகி நிற்கும் மரம் போல்
இலைகள் உதிர்த்து வேர்கருக

வேதனையின் வரம்பு தாண்டி
வெம்பித் துடிக்கும் மனதை
வரவேற்பார் யாருமின்றி
வனாந்தரத்தின் வெளிகளில்
வெடிப்புக்கள் ஊடே
வேகும் கால் பதிய நடக்கின்றேன்



20.11.2014
நிவேதா உதயன்

மண்ணிலிருந்து மரணம் வரை - கவிதை


மண்ணிலிருந்து மரணம் வரை

எங்களுக்காகத் தங்களை உதிர்த்து
எம்மினம் காத்திடத் தம்மைத் தந்து
உயிர் என்னும் கொடை தந்து
தம் உணர்வுகள் துறந்து நின்றார்

தாய் மண்ணின் தடையகற்ற
மன ஓசை அடக்கி மகிழ்வாய்
ஆசைகள் தாண்டி வந்தார்

பருவ வயதில் பாசம் அடக்கி
பசியடக்கிப் பலதும் அடக்கி
எதிரி அடக்கும் ஆசை கொண்டார்

எங்கள் நிலம் எமதேயாக
தங்கள் நிலம் தான் துறந்து
காடுமேடெல்லாம் கால் பதித்தார்

எத்தனை உயிர்கள் எம்மினமானதில்
அத்தனை பெரும் அவலம் தாங்கி
எத்தனை ஈனமாய் எருக்களாயினர்

எத்தனை தடைகள் எங்கு தாண்டியும்
அத்தனை பேரையும் ஆண்டுகள் தோறும்
ஓர்மத்துடன் நாம் எண்ணிடுவோம்

தோல்வி கண்டு துவண்டோமாயினும்
தோள்கள் துடிக்க திருக்களமாடிய
துணிந்தவர் உம் புகழ் பாட மறந்திடோம்

மண்ணை இழந்து மறுகினோமாயினும்
உதிரமிழந்து ஊனமாகி உருக்குலைந்து
மானம் காக்க மடிந்ததவர் மறந்திடோம்

வன்மம் கொண்டு விடுதலை மூச்சுடன்
வேங்கையானவர் வீரம் மறந்திடோம்
கொடும் பகை வென்று கொடியது ஏற்றிய
கோட்டையின் வீரம் மறந்திடோம்
தோல்வி கண்டும் துவள்தல் இன்றி
துணிவுடன் இறந்த உம்மை மறந்திடோம்
மண்ணிலிருந்து மரணம் வரை மாவீரரே
21.11.2014
நிவேதா உதயன்

முந்தை வினை - கவிதை


முந்தை வினை முழுதும்
மூர்க்கத்துடன் அறுக்க முனைகிறேன்
ஆனாலும் முடிச்சவிழ்க்க முடியா
முடிவுகள் அற்றதாய் வாழ்வு
நீண்டுகொண்டே செல்கின்றது

பிறவிப் பயன் அறிந்திடா
பித்தம் தலைக்கேறிய மானிடராய்
பேசுபொருளாய் ஆனதில் வாழ்வு
படிந்தும் படியாமல் எப்பொழுதும்
பயத்துடனே நகர்கின்றது

பூனையில் காலின் எலியாய்
அகப்பட்டுக்கொண்டிருக்கும்
அர்த்தமற்ற வாழ்வின் நகர்வில்
அகலமாகிக் கொண்டே செல்கின்றது
ஆழ்மனதில் அசைக்கமுடியாது
வேர்விட்ட நம்பிக்கைகள்

இறுகப் பற்றியிருக்கும் இளையின்
இறுமாப்பும் இன்னும் சிறிது நாளில்
இல்லாமல் போய்விடுவதற்கான
எல்லாக் காரணங்களும் எதிரிகளாகி
என் மனத்துடன் ஏளனமாய்ச் சிரித்தபடி
எதிர் யுத்தம் செய்கின்றன எனக்காகவே

ஆர்ப்பரிக்கும் மனதின் அவலம்
ஆழ்கடலில் மோசமாய்ச் சுழலும்
அமுக்கக் காற்றாய் அச்சமூட்டி
அசைக்கமுடியாதென எண்ணிய
ஆசைகளின் வேர்களை எல்லாம்
ஆட்டம் காண வைத்தபடியே
அடித்துச் செல்வதற்குத் தயாராய்
அங்கும் இங்கும் அலைந்தபடி
இறுதியான கணங்களை எண்ணிக்
கலக்கத்துடன் காத்திருக்கின்றன
30.11.2014
நிவேதா உதயன்

Tuesday 4 November 2014

உணர்வுகள் கொன்றுவிடு - கதை


முன்பெல்லாம் வானத்தில் நட்சத்திரங்கள் தெரியாவிட்டாலும் கூட நீலமற்ற வெண்சாம்பற் புகைகளாய்த் தெரியும் வானத்தைப் பார்த்தபடி இருக்க அருணா எப்போதும் சலித்ததில்லை. எமது ஊர் போல் வவ்வால்களும் பறப்பதில்லைத்தான். ஒரு குருவி கூடவா பறக்கக் கூடாது என்னும் ஆதங்கம் இன்று அவளுக்கு எழத்தான் செய்தது. மனதில் எழுந்துள்ள சோர்வின் வெளிப்பாடுதானோ இது என்று அவள் மனம் எண்ணியது. அங்குகூட இப்போதெல்லாம் வவ்வால்கள் பறப்பதில்லை என்று அங்கு சென்றபோது பக்கத்து வீட்டு ஜீவா கூறியது நினைவில் வந்தது. எல்லாமே கொஞ்சக் காலத்துக்குத் தானோ? மனிதர்கள் போல் பறவைகளும் மாற்றிடம் தேடிக்கொண்டு செல்லவாரம்பித்து விட்டன என எண்ணிக்கொண்டாள்.
நிர்மலன் இப்பொழுதெல்லாம் நன்றாகவே மாறிவிட்டான். வேலை முடிந்து ஆவலாக வீடு வருபவன் இப்போதெல்லாம் பிந்தியே வருகிறான்.  கேட்டால் வேலை அதிகம் என்கிறான். இரண்டு வயதாகும் ஆரணியுடன் கூடக் கொஞ்சிப் பேசுவதில்லை. எதோ கடனுக்கு அதன் தலையைக் கைகளால் தடவி விட்டபடி நிற்பான். பின் தன் அலுவல் பார்க்கப் போய்விடுவான். மகளும் தூக்கக் கலக்கத்துடன் அப்பா அப்பா என்று சொல்லிவிட்டுத் தூங்கிவிடும். அவள் அவனுக்கு உணவை எடுத்து வைக்க, அவளுடன் எதுவும் பேசாது ஹோட்டலில் உண்பதுபோல் உண்டுவிட்டு நல்லதா இல்லையா என்று கூடக் கூறாது எழுந்துவிடுவான்.
முன்பு சிறிது நாட்கள் அவன் வேலையால் வந்தவுடன் அவனுக்கு உணவு பரிமாறியபடியே அன்று நடந்த விடயங்கள் எல்லாம் இவள் சொல்ல அவனும் ஆர்வமாகக் கேட்டபடி உண்பான். போகப்போக அவள் ஏதும் சொன்னாலும் அதை அக்கறையுடன் கேட்காது "தொணதொணக்காதே. நான் களைச்சுப்போய் வந்திருக்கிறன்" என்று எரிந்து விழுந்தபின் இவள் அவனுக்கு எதுவும் சொல்வதை நிறுத்திவிட்டாள். இருவரும் படுக்கையைப் பகிர்ந்து கொண்டும் நிறைய நாட்களாகி விட்டன. இத்தனைக்கும் இருவரும் காதலித்துத்தான் திருமணம் செய்து கொண்டனர்.

************************************************************************************************************************************************************************
இவளின் அண்ணனுடன் தான் இவள் டொராண்டோவில் ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்துவந்தாள். அண்ணனும் இவளுமே குடும்பத்தில். அதனால் அண்ணன் பாசத்துடன் தங்கையை கனடாவுக்கு எடுத்துத் தன்னுடனேயே வைத்திருந்தான். இவள் கணணித்துறையில் நன்றாகப் படித்துச் சித்தியெய்தி வங்கிக் கணக்காளராக வேலைக்கும் சேர்ந்து ஒரு வருடத்தின் பின்னரே நிர்மலனை முதல் முறை வங்கியில் சந்திக்க வேண்டி வந்தது. வேறொரு வங்கியின் வேலையிலிருந்து இவளது வங்கிக்கு மேலாளராக மாற்றலாகி வந்தவனை எல்லோரும் போலத்தான் இவளும் எதிர்கொண்டது. அனாலும் முதல் சந்திப்பிலேயே இவளை அவன் பார்த்த பார்வையில் ஒரு வசீகரம் அவனிடம் இருப்பதை அவள் அவதானித்ததுதான். இவளைக் காணும் நேரங்களில் எல்லாம் அவனது கண்ணில் தோன்றும் பிரகாசத்தையும் அவதானித்தபடி இருந்தவளை அவன்தான் முதலில் கேட்டான் என்னை உனக்குப் பிடிச்சிருக்கா என்று. 
இப்படி அவன் நேரே கேட்டது அவளுக்கு மகிழ்வாக இருந்ததுதான் என்றாலும் எதற்குப் பிடிக்கவேண்டும் என்றாள் இவள் தன்னை வெளிக்காட்டாது. பிடிக்காவிட்டால் எப்படித் திருமணம் செய்வது என்று அவன் கேட்ட உடனே இவளுக்கு பதைப்புடன் மகிழ்ச்சியும் எட்டிப் பார்த்தது. முகம் உடனே செம்மை படர்ந்து தன் பூரிப்பைக் காட்டியபோதும் இவள் உடனே தன் சம்மதத்தைக் கூறாது அண்ணாவைக் கேட்கவேண்டும் என்றாள். மச்சான் மாட்டன் என்றால் என்னை கலியாணம் கட்ட மாட்டீரோ என்று அவன் கேட்டது மகிழ்வாக இருக்க இவள் சிரித்தபடி அண்ணாவை கேளுங்கள் என்றுகூறிவிட்டு நகர்ந்தாள். மச்சானின் போன் நம்பர் தராமல் எப்பிடிக் கேக்கிறது என்று அவன் சிரிக்க இவள் ஒரு தாளில் அதை எழுதி தமையனின் பெயரையும் தாசன் என்று எழுதிக் கொடுத்தாள்.
அடுத்த நாளே அவன் தாசனுடன் போனில் என்ன கதைத்தானோ தாசன் மாலை வீட்டுக்கு வரச் சொல்லிவிட்டான். இவளுக்கு மனம் நிறைந்து யாருக்கும் அதைப் பகிரவும் முடியாது கால்கள் நிலத்தில் நிற்கமுடியாது தாவின. உனக்கு நிர்மலனைப் பிடிச்சிருக்கா அருணா என்று தமையன் கேட்க ஓமண்ணா என்று வார்த்தைகள் தொண்டையில் சிக்கி வெளிவந்தன.
இவளுக்கு நண்பிகள் கிடையாது. படிக்கும் காலத்திலேயே பெரிதாக யாருடனும் பேசாது பொம்மை போல தன் படிப்புடன் இருப்பாள். கனடா வந்த பின்னும் மற்றவருடன் பெரிதாகத் தமையனும் பழகுவதில்லை. அதுவே அவளுக்கும் பழகிவிட்டது. மாலை நிர்மலன் இவளுக்கு ஒரு கொத்துப் பூக்களுடன் வந்து இவள் கையில் கொடுத்துவிட்டு என்னையே நினைத்தபடி இருக்கிறாயா என்று கேட்டவுடன், என் முகம் மகிழ்வைக் காட்டிக் கொடுக்கிறதா எனத் தன்னையே கேட்டபடி வாங்கோ என்று அவனை உள்ளே இருத்திவிட்டு அண்ணனின் அறைக்குள் எட்டிப்பார்த்து அவர் வந்துவிட்டார் அண்ணா என்றுவிட்டு குசினிக்குள் சென்று ஒரு வாசில் நீர் நிரப்பி அவன் கொண்டுவந்த பூக்களை அதில் அழகாக வைத்து வரவேற்பறையில் அவன் முன் இருந்த மேசையில் வைத்தபடி தாங்ஸ் என்று கூறிவிட்டு உள்ளே செல்ல இருந்தவளை, இரு அருணா என்று தமையன் கூற அவனுக்கெதிரில் கதிரையில் அமர்ந்தாள்.

முதல் நாளே தாசனும் அவனும் எல்லாம் கதைத்திருப்பார்கள் போல. முன்பே எல்லாம் தெரிந்தவர்கள் போல் கதைத்துச் சிரித்ததில் தன் திருமணம் நிட்சயமாகிவிட்டது புரிந்தது. ஒரே நாளில் எப்படி அண்ணன் ஒருவனை நம்பினான் என்று இவளுக்கு ஆச்சரியம் ஏற்பட அண்ணனை நிமிர்ந்து பார்த்த பார்வையில் அண்ணனும் இவள் மனம் புரிந்து நிர்மலனை என் நண்பன் அகிலன் குடும்பத்துக்கு நல்லாத் தெரியுமாம். நேற்றே எல்லாம் விசாரிச்சுப்போட்டுத்தான் இண்டைக்கு இவரை வரச்சொன்னனான் என்றுவிட்டு இருவரையும் பார்த்துச் சிரித்தான். அதன்பின் ஒரு மாதத்திலேயே திருமணம். நிர்மலனுக்கு தாய்தந்தை இல்லை. தமக்கை மட்டும் இலங்கையில். இங்கும் பெரிதாக யாரும் இல்லாததால் மிகச் சிக்கனமாகவே திருமணம் முடிந்தும் விட்டது. அவனின் நண்பர்கள் கொஞ்சமும் தாசனின் நண்பர்களும் இரண்டு மூன்று உறவினர்களும் மட்டுமே திருமணத்துக்கு. கோவிலிலேயே எல்லா ஏற்பாடுகளும். அதனால் இவர்களுக்கும் எந்தப் பிரச்சனையும் இல்லாமல் திருமணம் முடிந்தது.

இவளின் திருமணம் நடந்து ஒரு வாரத்தின் பின்னரே தான் அமெரிக்காவில் இருக்கும் ஒரு பெண்ணை விரும்புவதாகவும் தானும் அங்கேயே போய்விடப்போவதாகவும் தாசன் கூற, ஓ இத்தனை நாள் ஒழித்துவிட்டீர்களே அண்ணா என்று அண்ணனும் வாழ்க்கையில் இணையப்போகிறான் என்னும் மகிழ்வில் பூரிப்புடன் அருணா கூறினாள். அதன்பின் நிர்மலனுடனான அவளது வாழ்வு சொர்க்கமாகவே இருந்தது. இவளைத் தாங்கினான் என்றுதான் சொல்லவேண்டும். வயிற்றில் ஆரணி உருவானவுடனேயே வேலையை விடச் சொல்லிவிட்டான் அன்புக் கணவன். அவளுக்கும் அலைந்துகொண்டு வீட்டுக்கும் வேலைக்குமாகத் திரிய அலுப்பாகத்தான் இருந்தது.

குழந்தை பிறந்தது ஒருமாதம் லீவு எடுத்துவிட்டு இவளை ஒன்றும் செய்யவிடாமல் .... இப்ப நினைக்க கண்களில் நீர் எட்டிப் பார்த்தது. அண்ணன் திருமணமாகி அமெரிக்காவில் வசிக்க ஆரம்பித்த பின்னர் நிர்மலன் இரண்டு வார விடுமுறையில் அவளையும் அழைத்துக்கொண்டு அங்கு சென்றுவந்தான். அண்ணனின் வீட்டின் பிரமாண்டத்தைப் பார்த்து இவளுக்கு வாய் அடைத்தது. அண்ணா கட்டடக் கலைஞன் என்பதனால் திட்டமிட்டு அழகாக வீட்டைக் கட்டியிருந்தான். அண்ணி சுபத்திரா கூட நன்றாகத்தான் பழகுகிறாள். இவளுக்கு அண்ணனை எண்ணப் பெருமையாக இருந்தது. அண்ணா நன்றாக இருக்கிறது வீடு என்றாள் கள்ளங்கபடம் இன்றி. எல்லாம் உன் அண்ணியின் விருப்பப்படிதான். அவளே எல்லாம் தெரிவு செய்தாள். என் காதல் பரிசு இது அவளுக்கு என்று தாசன் சொல்ல பெருமிதமாய்ச் சிரித்துக்கொண்டு அண்ணி நின்றாள்.

அண்ணனின் நினைவு வந்து அவளுக்கு இன்னும் கண்ணீரைப் பெருக்கியது. அண்ணனிடம் மனம்விட்டுச் சொல்லிப் பார்ப்போமோ என்று எண்ணியவள், வேண்டாம் இன்னும் கொஞ்ச நாட்கள் பார்ப்போம் என்று மனதை அடக்கிக்கொண்டு படுக்கை அறைக்குச் செல்ல எழுந்தாள். அடுத்த அறையில் கணவன் கணனியில் மும்மரமாக இருக்க, துவண்ட மனதுடன் சென்று தூங்கவாரம்பித்தாள்.


**************************************************************************************************************************************************************************

கணவன் சொன்னவற்றைக் கேட்டு அதிர்ச்சியில் நின்றாள் அருணா. அவனுக்கு இங்கு வேலை செய்வது பிடிக்கவில்லையாம். அதனால் வேறொரு வேலை தேடிக்கொண்டு அமெரிக்காவுக்குச் செல்கிறானாம் என்றவுடன் ஏன் இங்கு உங்களுக்கு என்ன பிரச்சனை என்று இவள் ஆரம்பிக்க முன்னரே எனக்கு இங்கு பிடிக்கவில்லை. கொஞ்சநாள் அங்க இருந்து பார்க்கப் போறன் என்று கத்துமாப்போல் சொல்பவனை வாயடைத்துப் பார்க்க மட்டுமே இவளால் முடிந்தது. நீயும் பிள்ளையும் இங்க இருங்கோ. நான் போய் பிறகு உன்னைக் கூப்பிடுறன் என்பவனை எதுவும் சொல்லாது பார்த்துக்கொண்டிருந்துவிட்டு அவன் வேலைக்குச் சென்றதும் தமையனுக்குத் தொலைபேசி எடுத்து தன் உள்ளக்கிடக்கையை எல்லாம் கொட்டி அழுது தீர்த்தாள். தமையனும் யோசனையுடன் நான் நிர்மலனுடன் கதைக்கிறன் என்றுவிட்டு போனை வைக்க, தனியாகக் காட்டில் அகப்பட்டவளாய் கலங்கும் மனதுடன் ஏதுமற்று இருக்க மட்டுமே அவளால் முடிந்தது.

அடுத்தநாள் தாசன் போன் செய்து, மச்சான் எதோ குழப்பத்தில இருக்கிறார். கொஞ்சநாள் விட்டுப்பிடிப்பம். இங்க வந்து என் வீட்டிலேயே நீங்கள் தங்கலாம் என்று சொல்ல அவர் சம்மதித்துவிட்டார். ஆனபடியால் பெரிதாக ஏதும் இருக்காது நின்மதியாய் இரு என்று அண்ணனின் ஆறுதல் வார்த்தைகள் மனதுக்குத் தெம்பூட்டின.

அவன் அமெரிக்கா சென்ற பின்னர் கூட விழுந்துகட்டி இவளுடன் போனில் பேசவோ அன்றி சுகம் விசாரிக்கவோகூட இல்லை. இவள்தான் அண்ணனுக்குப் போன் செய்து தன் ஆதங்கத்தைக் கொட்டுவாள். தாசனும் தான் என்ன செய்வது. கொஞ்ச நாளைக்கு நீ பேசாமல் இரு. என்ன செய்கிறான் பார்ப்போம் என்று கூறியபின் இவள் அண்ணனையும் தொந்தரவு செய்வதில்லை.

முன்பு அண்ணனும் பின்னர் கணவனும் இவளின் தேவைகளை எல்லாம் பூர்த்திசெய்வதால் இவள் பெரிதாக எதிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டதில்லை. இப்போ எல்லா வேலைகளையும் இவளே செய்ய வேண்டியதாகிவிட்டதில் இவளது நேரங்கள் அதில் கரைந்தனதான் எனினும் இரவில் மகள் தூங்கியபின் இவள் தூங்காது பலதையும் எண்ணி குமைந்ததில் உடல் இளைத்து பாப்பதற்கு நோயாளி போலானாள். தங்கையை ஆறுதல்ப் படுத்த வந்த அண்ணன் இவள் நிலை கண்டு கலங்கித்தான் போனான். அருமைத் தங்கை. யாருக்கும் கேடு எண்ணாதவள். ஏன் நிர்மலன் இவளிடம் பிடிப்பற்றுப் போனான் எனக் குழம்பியதில் தான் திரும்பிச் சென்றவுடன் அவனிடம் தெளிவாகவே பேசி இதுக்கு ஒரு முடிவு கட்டவேண்டும் என்று எண்ணினான்.


*********************************************************************************************************************************************************************

உணர்வு மழுங்கி உயிர்த்துடிப்பு அடங்கி யாருமற்ற உலகில் தன்னந்தனியனாக நிற்கும் உணர்வு ஏற்பட்டது தாசனுக்கு. இன்னுமே கூட எதையும் கிரகித்துக்கொள்ள அவனால் முடியவில்லை. ஐயோ அருணா இதை எப்படித் தாங்கிக் கொள்ளப் போகிறாள் ??? எப்பிடி இதை நான் அவளிடம் சொல்வேன் என்று எண்ணி அழுதபடி எத்தனை நேரம் இருந்தானோ தெரியவில்லை. ஆண்கள் அழுவதில்லை என்றும் அழக்கூடாது என்றும் சொல்வார்கள். ஏன் ஆண் மனிதன் இல்லையா??அல்லது மனமே இல்லாதவனா ??? என மனதில் எழுந்த நினைவில் அழுகையில் சிரிப்பும் வந்தது. தொடர்ந்து அவனது தொலைபேசி அடித்ததில் மனம் கலைந்து சிரமத்துடன் எழுந்து சென்று போனை எடுத்தான். வேலை இடத்திலிருந்து இவனைக் காணவில்லை என்ற விசாரிப்பு. எனக்கு எழும்பவே  முடியாது வருத்தம். ஒருவாரம் விடுப்பு வேண்டும் என்றுவிட்டுத் தொலைபேசியை வைத்தபின்னும் என்ன செய்வது என்றே தெரியாத நிலை.

முந்தநாள் கனடாவில் இருந்து வந்ததும் தங்கை கணவனை இருத்திவைத்து அவன் அப்படி இருப்பதற்கான காரணத்தைக் கேட்டான். என்னால் உடனே பதில் சொல்ல முடியாது. நாளை கூறுகிறேன் என்று மேற்கொண்டு இவனுடன் பேசாது எழுந்து செல்லும் நிர்மலனை எதுவும் கூறாது பார்த்துக்கொண்டு இருக்கவே இவனால் முடிந்தது. அடுத்தநாள் எப்போது விடியும் என்று சிறுபிள்ளை போல் காத்திருக்க மட்டுமே அவனால் முடிந்தது. அடுத்த நாள் காலை விடியாமலே இருந்திருக்கக் கூடாதா என்று இப்ப எண்ணம் எழ, பெருமூச்சு மட்டுமே பதிலானது.

நேற்றுக் காலை அவன் வேலைக்கு வெள்ளனவே செல்லவேண்டிய தேவை இருந்ததில் நிர்மலன் எழும்ப முதலே சென்றுவிட்டான். மாலை இருந்த வெளி வேலைகளை எல்லாம் ஒரத்தில் வைத்துவிட்டு தங்கையின் கணவன் என்ன சொல்லப் போகிறானோ என்ற பதைப்பில் வெள்ளனவே வீட்டுக்கு வந்துவிட்டான். சுபத்திராவும் அன்று வெள்ளனவே வந்துவி விட்டாள் என்பதை அவள் படுக்கை அறையில் படுத்திருந்ததிலே தெரிந்தது. என்னப்பா ஏதும் வருத்தமே என அக்கறையாக அருகில் சென்று விசாரித்தவனை, "சரியான தலையிடி. அதுதான் குளிசையைப் போட்டுக்கொண்டு படுத்திருக்கிறன்" என்று கண்ணைக்கூடத் திறக்காது அவள் சொன்ன விதம் அவளின் தலை வலியின் அளவை அவனுக்கு உணர்த்த, அவள் பாவம் படுக்கட்டும் என்று எண்ணியபடி உடைகளை மாற்றிக்கொண்டு வரவேற்பறைக்கு வந்து நிர்மலனுக்காகக் காத்திருக்கவாரம்பித்தான்.

இவனுக்குப் பசித்ததுதான் எனினும் நிர்மலனும் வரட்டும் சேர்ந்து சாப்பிட்டபடி கதைத்தால் இறுக்கம் குறையலாம் என்ற நப்பாசை எழவே மேசையில் கிடந்த ஒரு மகசினைப் புரட்டியபடி காத்திருந்தான். நிர்மலானோ வழமையாக வரும் நேரத்துக்கு வரவே இல்லை. தொலைபேசி எடுத்துப் பார்ப்போமோ என்று எண்ணியவன், அவன் என்ன சின்னப் பையனா ஏன் இன்னும் வரவில்லை என்று கேட்பதற்கு என எண்ணி அந்த நினைப்பைத் தள்ளி வைத்துவிட்டு தொலைக்காட்சியை இயக்கிவிட்டு அதில் தன் மனதைச் செலுத்தத் தொடங்கினான்.

எத்தனை நேரம் தூங்கினானோ தெரியவில்லை நிர்மலன் இவன் தோளைத் தொட்டு உலுப்ப திடுக்கிட்டு விழித்தான். வாங்கோ சாப்பிடுவம் என்று அவன் அழைக்க இவனுக்கும் அப்போது தான் பசி தெரிய ம் என்றபடி அவனைத் தொடர்ந்து உணவு அறைக்குள் வந்து இருக்கையில் அமர்ந்தான்.

சுபத்திராவும் எழுந்து உணவுகளைச் சூடாக்கிக்கொண்டிருந்தாள். தலையிடி குறைஞ்சிட்டுதே என இவன் அக்கறையாகக் கேட்க ம் என்பதே அவளின் பதிலாக வந்தது. மூவருமே பசியுடன் இருந்தவர்கள் போல் உண்பதிலேயே கவனமாக இருந்தனர். யாரும் யாருடனும் பேசவில்லை. சுபத்திரா வழமையாக ஏதாவது பேசியபடி தான் சாப்பிடுவாள். அவளின் கதைகளுக்கு நிர்மலன் சிரித்துப் புரையேறியதும் உண்டு. இன்று தலைவலியின் தாக்கம் அவளுக்கு என எண்ணியபடி அவளுடன் இவனும் எதுவும் பேசாது சாப்பிட்டு முடித்தான்.

மூவரும் வரவேற்பறையில் வந்து அமர்ந்ததும் நிர்மலன் தான் பேசவாரம்பித்தான். தாஸ் உங்களுக்கு விளங்கும் எண்டு நினைக்கிறன் நான் சொல்லுறது. எனக்கு அருணாவோட வாழ இனிச் சரி வராது என்று நிர்மலன் முடிக்கும் முன்னரே ஏன் சரிவராது என்று இவன் சிறிது கோபத்துடனேயே கேட்டான். எனக்கு சரிவராது. என்றான் நிர்மலன் எதுவுமே நடக்காததுபோல். நீர்தானே வலிய வந்து அருணாவைச் செய்யப் போறன் எண்டு கேட்டுக் கலியாணம் செய்தனீர். ஒரு குழந்தையும் பிறந்தபிறகு.... யோசிச்சுத்தான் கதைக்கிறீரோ நிர்மலன் என்றான் இவன் குரலை உயர்த்தி.

நானும் சுபத்திராவும் வடிவா கதைச்சுத்தான் இந்த முடிவுக்கு வந்திருக்கிறம் என்று நிர்மலன் சொல்ல சுபத்திராவோட என்ன கதை நான் தானே அவளிண்ட அண்ணன். என்னோட கதையும் என்று மரியாதையிலிருந்து ஒருமைக்கு மாறினான் தாசன். I am so sory. நானும் நிர்மலனும் ஒரு வருடமா முகப்புத்தகத்தில பழக்கம். நானும் அவரும் சேர்ந்து வாழப்போறம். எங்களை மன்னிச்சிடுங்கோ என்று கூறும் சுபத்திராவை அதிர்ச்சியுடன் வானே இடிந்து தன்மேல் விழுந்ததான எண்ணத்துடன் அவமானம் மேலிட வார்த்தைகளின்றிப் பார்த்துக்கொண்டிருந்தான் தாசன். இவ்வளவு கேவலமானவளா நீ. உன்னாலத்தான் என் குடும்பத்தில் இருவரின் வாழ்வில் இடியா என அவன் மனம் அலறியபடி இருக்க எதுவும் பேசாது எழுந்து தோட்டத்துக்கு நடந்தான் தாசன்.

Posted 30 July 2014 - 10:03 AM

நிவேதா உதயன்

Monday 3 November 2014

நிலாவே நீ ஏன் - கவிதை


நிலாவே நீ ஏன்
நிதமும் எறிக்கின்றாய்
நீல வானின் நிமிர்வு கண்டு
நெகிழ்ந்தோ நீ வருகின்றாய்

மேகப் பொதி விலக்கி
மென் முகம் காட்டி
மதிகெட்ட மாந்தர்
மனதை மயக்குதற்கோ
மங்கையே நீ வருகின்றாய்

கோடி இன்பம் கொடுத்தே
மனம் கொள்ளை கொண்டு
மேன்மை கொள் மாந்தரை
மயக்கம் கொள்ளவைக்க
மாலையில் வருகின்றாய்

இரவின் எளிமையிலும்
இதமான தென்றலுடன்
அத்தனை பேருக்குமாய்
எதிர்பார்த்தல் எதுவுமின்றி
இத்தனை ஆண்டுகளாய்
எப்படி நீ எறிக்கின்றாய்???


நிவேதா உதயன் 
03.11.2014