Saturday 7 November 2015

எல்லையற்ற ஏகாந்தவெளியில்





எல்லையற்ற ஏகாந்த வெளியில்
எண்ணங்கள் இனிமையாய்
சிறகடித்துப் பறக்கின்றன

மனதின் மகிழ்வில் வழிமாறி
வானத்தின் எல்லையெல்லாம்
தொட்டுவிட்டு நீளுகின்றன
வசந்தம் குவிந்த வாழ்வின்
வண்ணத்துப் பூச்சிகளாய்
சிறகடிக்கும் சிந்தனைக் குவியல்கள்

தேன் நிரம்பி வழியும் வதையாய்
தெவிட்டும் வாழ்வின் தென்றலில்
தத்திநடைபோட்ட காலம் கூட
தென்றல் தொட்டு நீங்கும்
தென்னைமர ஓலைகளின் தெம்மாங்காய்
திக்கெட்டும் திண்ணென்று கேட்கின்றன

பாளை வெடித்த தென்னம் பூவில்
பட்டுத் தெறிக்கும் மழை நீராய்
சிலிர்ப்பில் மனம் சிறகடித்துப் பறக்க
வாழ்வில் வந்து போனவைகள்
வெண்பஞ்சு மேகக் குவியல்களில்
விரல் தொட்டு விளையாடிட மனம்
வீணான ஆசை கொள்கின்றது

ஆனாலும் ஓர்நாள் அணைந்திடும்
அத்தனையும் எம்முள்ளே எதுவுமற்று
அந்த வேளையின் அதிர்வுகள் தாங்க
ஆர்ப்பரித்த மனதை அடக்கி
ஏற்புடைய எண்ண அதிரவைத் தாங்க
எப்பொழுதுமான இயல்பின் நாளுக்காய்
என்னை நானே இசைபாக்குகிறேன்


No comments:

Post a Comment