Sunday 21 April 2013

நினைத்தாலே நெஞ்சு பக் பக்

கடந்த வருடம் நானும் என் கணவரும் இரண்டு பிள்ளைகளும் விடுமுறையில் இத்தாலி சென்று இருந்தோம். கணவரின் ஒன்றுவிட்ட சகோதரன் தினேஷ் அங்கிருந்தான். இத்தாலி பற்றி பல கதைகள் கேள்விப்பட்டிருந்தாலும் அவன் இருக்கும் துணிவு ரோமில் போய் இறங்கியாச்சு. எங்க பாத்தாலும் கூடுதலா சிங்களவங்கள்தான். கூடிக் கூடி நிண்டு கதைச்சுக்கொண்டு நிண்டாங்கள். அவங்கள் எங்களப் பாத்து நக்கலடிச்சுச் சிரிச்சமாதிரி இருந்திது. அவங்களுக்கு முன்னாலை கேவலப்பட்டுப் போனது போலை அவமானமா இருந்திது.
கணவரின் தம்பியை பத்து வருடம் கழித்துப் பார்த்தபடியால் என்ர மனுசன் குடும்பக் கதையள் கதைக்கத் தொடங்கீட்டார்.  

போலி எண்ட இடத்திலதான் தம்பி இருந்தபடியால் அங்க போற பஸ்சில ஏறி இருந்தாச்சு. பஸ் வெளிக்கிட முதல் ஒரு தமிழர் ஓடி வந்து ஏறினார். இவர் பரம் என்ர பிரென்ட் ,ரூம் மேட் எண்டு தம்பி அறிமுகப் படுத்தினார். நான் வடிவா ஆளைப்பாத்தன். முதல் பார்வையிலேயே எனக்கு அவரப் பிடிச்சுப் போச்சு எண்டு சொல்லுவன் எண்டுதானே நினைக்கிறியள். அதுதான் இல்ல. பாத்தஉடனேயே எனக்கு அவனப் பிடிக்கேல்லை.
என்ர மனுசனும் தம்பியாரும் முன்சீற்ரில நானும் பிள்ளையளும் பின்சீற்ரில. எங்களுக்குப் பக்கத்தில இருந்த சீற்றில அவன் வந்து இருந்திட்டான். சீற் இருந்தா ஆரும் எங்கயும் இருக்கலாம்தானே எண்டு நீங்கள் நினைக்கிறது விளங்கிது. முன்னுக்கு நிறைய சீற்றுகள் இருந்தது. என்ர கணவரைப் பாத்து கலோகூடச் சொல்லேல்லை. என்னைப் பாத்து எத்தனை மணிக்கு வந்தனியள்? ரோம் எப்பிடி இருக்கு? சாப்பிட்டியளோ? இப்பிடி கேள்விமேல கேள்வி கேட்டது மட்டுமில்லாமல் இரண்டு மூன்றுதரம் என்ர மகளின் கையைப் பிடிக்க மகள் கையை இழுக்க, பாத்த எனக்குக் கோவம் வந்திட்டிது. அண்ணை மகளை விடுங்கோ அவ அழப்போறா எண்டு அவன்ர குரங்குச் சேட்டைக்கு முற்றுப்புள்ளி வச்சன்.

பஸ் ஒரு மணித்தியாலமா போகுது போகுது அனுராதபுரக் காட்டுக்குள்ளால போன மாதிரி எனக்குப் பயம் பிடிச்சிட்டுது. என்ன வீடுகள் ஒண்டையும் காணேல்ல காட்டுக்குள்ளேயோ இருக்கிறனியள் எண்டன் தம்பியைப் பார்த்து . பயப்பிடதைங்கோ வீட்டிலதான் இருக்கிறம் எண்டார் மச்சான். கொஞ்ச நேரத்தில வீட்ட போட்டம். அக்கம் பக்கத்தில ஒண்டுரண்டு வீடுகள் மாத்திரம்தான். ஆனால் வீடு நல்ல அழகாக இருந்ததால் மனதுக்குக் கொஞ்சம் ஆறுதலாக இருந்தது. முதல்ல சாப்பிடுவம் நீங்கள் பசியோட இருப்பீங்கள் என்று அழைத்தார்கள். சாப்பாட்டு மேசைக்குப் போனால் அழகாக அலங்கரிச்சிருந்தார்கள். முதலில வயின் குடியுங்கோ என்று சொல்லியபடி பிள்ளைகள் உட்பட எல்லோருக்கும் தந்தார் மச்சானின் நண்பன். நான் மட்டும் கொஞ்சம் குடிக்கிறன் அவைக்கு வேண்டாம் என்றார் என் கணவர்.  

வெளிநாட்டில இவ்வளவு காலம் இருக்கிறீங்கள் இதெல்லாம் பழகியிருக்க வேண்டாமோ என்றார் நண்பன். எவ்வளவு காலம் இருந்தால் என்ன கட்டாயம் பழகவேணுமோ என்றேன் நான். வெள்ளைக்காரர் கூட சின்னப்பிள்ளயளுக்குக் குடிக்கக் குடுக்கிறேல்லை என்றேன் தொடர்ந்து. எங்கள் பிள்ளைகளின் வயது நான்கும் ஏழும். நண்பரின் முகம் ஓடிக் கறுத்துவிட்டது. மிகுதியாக இருந்த மூன்று கிளாசையும் எடுத்துக்கொண்டு உள்ளே போனார். அதன்பின் பெரிதாகக் கதைக்கவில்லை. என் கணவர் தான் அவரிடம் வலியக் கேள்விகள் கேட்டு நிலைமையைச் சுமுகமாக்கினார்.
 
அடுத்தநாள் காலை எழுந்து கடன்கள் முடித்து வரவேற்பறைக்கு வந்தால் கையில் சிகரெற்றுடன் சோபாவில் இருக்கிறார் மச்சானின் நண்பன். எனக்கு சும்மாவே சிகரெட் பிடிப்பவர்களைக் கண்டால் எரிச்சல் வரும். வீட்டுக்குள்ள பிடிச்சுக்கொண்டு நிக்க கோவம்தான் வந்திது. அனால் அது என்னுடைய வீடு இல்லையே அதனால் வாய் மூடிக்கொண்டு இருப்பம் என்று நினைத்துக்கொண்டு இருக்க மச்சான் உள்ளுக்குள் வந்து சின்னப்பிள்ளயளுக்கு முன்னால சிகரெட் பிடிக்காத வெளியில போய் பிடி என்றார். மச்சானை ஒரு கோபப் பார்வை பார்த்துவிட்டு வெளியே போனார் நண்பர். எங்களுக்கு முன்னால ஏன் அப்பிடிச் சொன்னனி என்றார் என் கணவர். அவனை விடு உங்கட ப்ளான் என்ன என்று கேட்க நாங்கள் இன்று ரோமைச் சுற்றிப் பார்ப்பம் என்று கூறினோம். அந்தப் பரதேசியும் சேர்ந்து வெளிக்கிட்டுது.
 
உவனும் வாரானோ எண்டு கணவரிடம் முணுமுணுத்தேன். வந்தனாங்கள் சமாளிச்சுக்கொண்டுதான் போகவேணும் வாயை ரண்டு மூண்டு நாளைக்குத் திறக்காதை என்றார். சரி பார்ர்க்கலாம் என்று நானும் பொறுமையாய் இருந்தேன். பஸ்ஸில் கணவர் எமக்கு அரணாக இருந்தபடியால் அவனுடைய தொல்லை பஸ்சில இல்லை. இரண்டு மூன்று இடங்கள் பாக்கவே நேரம் போனது தெரியவில்லை. சரியான பசி. எங்கயாவது நல்ல இத்தாலிச் சாப்பாடு சாப்பிடுவம் என்று என்கணவர் கூறினார். நான் ஒரு நல்ல இடத்துக்குக் கூட்டிக்கொண்டு போறான் எண்டு முன்னால் போக விதவிதமான இத்தாலி
நின்மதியா எல்லா இடமும் திரிஞ்சம். அடுத்த நாள் பீசா கோபுரம் பார்க்கப் போவதாக முடிவெடுத்தம்.

காலை எழுந்து சந்தோசமா வெளிக்கிட்டுக்கொண்டு இருக்கிறம் அறைக்கு வெளியில தம்பியாரும் பரமும் எதோ வாக்குவாத்ப்படுற மாதிரி இருந்திது. என்னெண்டு போய்ப் பாருங்கோவன் எண்டு மனிசனைக் கலைச்சன். அவர் போக நானும் பின்னால போனால் இண்டைக்கு எனக்கு வேலை நீங்கள் நாளைக்கு பீசாக்குப் போனால் நானும் வரலாம். என்னை விட்டிட்டு எப்பிடி நீ போவாய் எண்டு பரமு சொல்லிக்கொண்டிருந்துது. நான்தான் இண்டைக்குப் போவம் எண்டனான். நாளைக்கு என்ர பிரெண்ட் ஒருத்தனிட்ட வாறன் எண்டு சொன்னனான் என்று கணவர் சொன்னதும் ஒன்றும் பேசவில்லை பரமு. அன்று உலக அதிசயம் ஒன்றைப் பார்க்கப்போகிறோம் என்ற பிரமாண்ட எதிர்பார்ப்புடன் தொடருந்தில் பயணித்தோம். அங்கு போய்ப்பார்த்தால் நாம் நினைத்தது போல் பெரிதாக இருக்கவில்லை சாய்ந்த கோபுரம். இருந்தாலும் சாய்ந்தும் இன்னும் விழாதிருக்கும் அதிசயம் உண்மைதானே என மனதைத் தேத்திக்கொண்டு அன்று முழுவதும் அங்கேயே கழித்தோம். மாலை நான்கு மணிக்கு அங்கிருந்து கிளம்பி ரோமுக்கு வந்தோம். ரோமில் ஒரு பிரபல்யமான பீட்சா கடைக்குக் கூட்டிக்கொண்டு போனார் தம்பி. ஐரோப்பிய நாடுகள் எல்லாவற்றிலும் விதவிதமாக பீட்சா சாப்பிட்டிருக்கின்றோம். ஆனால் தக்காளியும் கத்தரிக்காயும் பெரிதாக வெட்டிப் போட்டு மிகவும் உருசியாக இன்றுவரை எங்குமே அதுபோல் பீட்சா சாப்பிடவில்லை. இப்பொழுது நினைத்தாலும் வாயில் எச்சில் ஊறுகிறது. பின்னர் ஒருமணிநேரம் இரவு வெளிச்சத்தில் ரோமில் திரிந்துவிட்டு மிக்க மகிழ்வோடு வீடு வந்து சேர்ந்தோம்.

வாசலில் சிகரெட்டும் கையுமாக நிக்கிறார் பரமு. அன்றைய பொழுது நன்றாகப் போனதால் எனக்குப் பரமுவின் சிகரெட் புகைகூட ஒன்றும் செய்யவில்லை. வாங்கோ சாப்பிடுவம் என்றார் பரம். சின்னப்பிள்ளயளோடை எட்டு மணிவரை சாப்பிடாமல் இருக்கேலுமே. அதாலை அங்கேயே சாப்பிட்டாச்சு என்று மச்சான் கூற உடுப்பு மாத்திற சாட்டில நாங்கள் அறைக்குள்ள போட்டம். நான் விசரன் மாதிரிச் சமைச்சு வச்சிட்டுப் பாத்துக்கொண்டு இருக்கிறன். நீ உன்ர ஆக்களக் கண்டஉடன கடையில நக்கீற்று வாறியோ நாயே எண்டு திட்டின சத்தமும் டேய் அண்ணாக்கள் முதல்முதல் என்னட்டை வந்திருக்கினம். இன்னும் ஒருநாள்த்தானடா உன்ர புத்தியைக் காட்டாதை என்று தம்பியார் சொல்வதும் கேட்டது. அதுக்குப் பிறகு நாங்கள் வெளியில போகவில்லை. மனிசன் கதவைத் திறந்து தினேஷ் நாங்கள் படுக்கப்போறம். நாளைக்கு விடிய வேளைக்கு எழுப்பு என்று சொல்லிவிட்டு வந்து படுத்துவிட்டார். அன்றைய சந்தோசமெல்லாம் வடிந்துபோனத்தில் மீண்டும் பரமுவில் எரிச்சல்தான் வந்திது. அலைஞ்ச களைப்புத்தீர வடிவா குளிச்சிட்டுப் படுத்திருக்கலாம். எந்தப் பரதேசியால அப்பிடியே படுத்தாச்சு எண்டு மனிசனுக்கு சொன்னன். நாளைக்கு விடிய எழும்பி வடிவாக் குழி எண்டு சொல்லிப்போட்டு மனிசன் படுத்திட்டார். கொஞ்ச நேரத்தில நானும் நித்திரை கொண்டிட்டன்.

டோம் டாம் டும் எண்டு எதோ சத்தமெல்லாம் கேட்க திடுக்கிட்டு எழும்பினால்இரவுபதினொன்றேகால். கனவுதான் எதோ கண்டிருக்கிறான் எண்டு நினைச்சுக்கொண்டு திரும்பவும் படுக்கையில திரும்பிப் படுக்க இன்னும் பெரிய சத்தம். பேய் கீய் வாறதெண்டாலும் பன்னிரண்டு மணிக்கல்லோ வரும் இன்னும் பன்னிரண்டு ஆகேல்லையே எண்டு நினைச்சுக்கொண்டு மனிச்சனைத் தட்டுறன். வாறஇடத்திலையும் மனிசரைப் படுக்க விடுகிறாய் இல்லை எண்டு திட்டிக்கொண்டே மனிசன் எழும்புது.

எனக்கே சந்தேகம் வந்திட்டுது. ரண்டு மூண்டு நிமிசம் ஒரு சத்தமும் இல்லை.சத்தியமா எதோ சத்தம் கேட்டதப்பா. நான்பொய் சொல்லேல்லை எண்டு சொல்ல பே பிசாசு வந்தாலும் உன்னக்கடசிவரையும் தூக்காது படு என்றுசொல்லிக்கொண்டு மனிசன் திரும்பிப் படுக்க எதோ எறியிறமாதிரி பெரிய சத்தம். இந்தமுறை எனக்குமுதல் மனிசன் எழும்பி இருந்திட்டுது. நான் பயத்தில மனிச்சனுக்குப் பக்கத்தில போய் இருந்தன். என்ன சத்தமப்பா எண்டு திரும்பவும் கேட்டன். வாறன் வெளியில போய்ப் பாக்கிறன் எண்டு மனிசன் எழும்பினார். என்னெண்டு தெரியாமல் போகாதைங்கோ எண்டு நான் தடுத்தன். அடிபடுறாங்கள் எண்டு சொல்லிக்கொண்டு கதவைத் திறந்துகொண்டு போக தனியனிக்கப் பயத்தில நானும் பின்னால போய்நிக்க தினேஷ் என்னடா சத்தம் எண்டு இவர் கேட்கிறார்.

 அண்ணா எனக்கொண்டுமில்லை நீ போய்ப் படு என்று தினேஷ் சொல்ல மீண்டும் அடி விழும் சத்தம் கேட்கிறது. இவர் கதவைத் தள்ளுகிறார்.கதவு உள்ளே பூட்டியிருக்கு. கதவுக்கு முனால் ஏதேதோ பொருட்கள் விழும் சத்தம். தினேஷ் முதல்ல கதவைத்திறடா என்றபடி இவரும் கதவைத் தட்டிக்கொண்டிருக்கிறார். அண்ணா நீ போ அண்ணா.இவன் இப்பிடித்தான் காலமை சரியாவிடும் என்றி தினேஷ் கூற உண்ட ஆக்களைக் கண்டஉடன உனக்கு நான் விசரனாப் போனான் என்ன. தொடர்ந்து காதால் கேட்கமுடியாத அளவு தூசன வார்த்தைகள் கேட்கின்றன. வாங்கோ அப்பா போவம் எனநான்

 தினேஷ் நீ எண்ட தம்பியடா ஆரோ உன்னை அடிக்க நான் பாத்துக்கொண்டு பேசாமல் போகட்டோ என்று இவர் கேட்டதுதான் தாமதம் மீண்டும் அடிகள் பலமாக விழும் சத்தம் கேட்கிறது. இவர் கதவை உடைப்பதுபோல் இடிக்கிறார். டேய் கத்தியால குத்திப்போடுவன். ஏற்க்கனவே ஒருதனக் குத்த்ப்போட்டு ஜெயில்ல இருந்தனான் நான் என்று கூறிக்கொண்டு அடிக்கிறான்.எனக்கு அவன் கத்தி எண்டதும் பயம் பிடிச்சிட்டுது.மனிசன்ர கையைப் பிடிச்சு உள்ளுக்கை இழுத்துக்கொண்டு போறான். பிள்ளையளும் நீயும் இருக்கிறியள் எண்டு பாக்கிறன் இல்லாட்டி நாய முறிச்சுப்போடுவன். மனிசன் கோவத்தில கத்துது. இவர் எதுக்கும் துணிஞ்ச ஆள்.அதாலை நான் சொன்னன் அவன் ஜெயிலுக்குப் போனதெண்டுவேற சொல்லுறான்.ஏனப்பா தேவையில்லாத வேலை. நாளைக்கு விடிய எழும்பிப் போவிடுவம். இந்தக் காட்டுக்கை கூப்பிட்டாலும் ஒருத்தரும் வரமாட்டினம். அவன் கோவத்தில எங்களை வெட்டிப் புதைச்சாலும் ஒருத்தருக்கும் தெரியாது எண்டு புலம்பியபடி கதவின் கொண்டியைச் சரிபார்க்கிறேன். 

கதவுக்குத் திறப்பு இல்லை. நினச்சா கதவை உடைத்துக்கொண்டு அவன் உள்ளுக்குள் வரலாம் என ஏதேதோ கற்பனை செய்தபடி படுக்கையில் வந்து இருக்கிறேன். மனிசனும் படுக்கவில்லை. எனக்கு வாய் திறந்து மனிசனோட கதைக்கவே பயமா இருக்கு. நல்லவேளை பிள்ளையால் நித்திரை. சிறுநீர் கழிக்கவேணும் போல் இருந்தாலும் பயத்தில போகவில்லை. கொஞ்ச நேரத்தில ஒரு சத்தமும் இல்லை. எம் அறைக்குள் என் இதயத் துடிப்பும் மனிசனின் இதயத் துடிப்பும் பெரிசாக் கேட்குது. படு நான் முழிச்சுக்கொண்டு இருக்கிறன் என்று மனிசன் சொல்ல நான் சரிஞ்சு படுக்கிறன். ஆனால் கண்ணை மூட முடியேல்லை. காதுகள் இரண்டும் கதவுப்பக்கமே காவல் காக்கின்றன. கொஞ்சம் கொஞ்சமா மனிசன் இருக்கும் தயிரியத்தில் கண்ணயர்ந்து போகிறேன். இருந்தாலும் தொடர்ந்து தூங்க முடியவில்லை. கனவில் அவன் கத்தியுடன் கலைப்பது போல் இருக்கு.  

திடுக்கிட்டு எழும்பிப் பாத்தா மனிசன் படுக்கையில் சாய்ந்துகொண்டு சுவரோடு தலை சாய்த்துப் படுத்திருக்கிறார்.எத்தினை மணி எண்டு நான் கேட்கிறேன். அஞ்சு மணியாகுது ஆறு மணிக்கு எழும்பி வெளிக்கிடுவம் என்கிறர். ஒரு நாளைக்கு இரண்டு பஸ் எண்டு சதீஸ் சொன்னமாதிரி இருக்கு. பிறகு ஏதும் சத்தம் கேட்டதோ என்கிறேன். பிறகு ஒண்டும் கேட்கேல்லை விடியட்டும் என்கிறார். நான் நிற்கவும் முடியாமல் இருக்கவும் முடியாமல் வெளியில போகவும் பயத்தில இருப்பதைப் பர்ர்த்து வா டொயிலற்றுக்கு என்று மனிசன் கொண்டியை மெதுவாத் திறந்து வெளியில போக நானும் போறன். எவ்வளவு கெதியா அலுவலை முடிக்கேலுமோ அவ்வளவுகெதியா அலுவலை முடிச்சது அண்டைக்குத்தான்.  

ஒரு மணித்தியாலம் ஒண்டும் பேசாமல் படுத்திருந்தம். பிறகு எதோ சத்தங்கள் கேட்டுது.பத்து நிமிசத்தில யாரோ கதவைத்திறந்துகொண்டு வெளியில போற சத்தம்.மனிசன் எங்கட கதவைத் திறந்துகொண்டு வெளியே போய் சதீஸ் எண்டு மெதுவாக் கூப்பிட்டார். சதீஸ் வெளியில வந்து தலையைக் குனிஞ்சுகொண்டு நிக்கிறது எனக்குக் கதவிடுக்கால் தெரியுது. நாங்கள் இப்ப வெளிக்கிடப்போறம்.பஸ் எத்தின மணிக்கு. காலை எழு மணிக்கும் பின்னேரம் நாலு மணிக்கும் தான் அண்ணா எண்டு எதோ சொல்ல வெளிக்கிட நீயும் எங்களோட வாறியோ எண்டு மனிசன் கேட்டஉடன சதீஸ் மெதுவா ஓமெண்டு தலையாட்டுவது தெரிகிறது. நான் உடனே பல் தீட்டி முகம் கழுவி வெளிக்கிட்டிட்டன்.  

கொண்டுபோன இரண்டு சூட்கேசுகளையும் அடுக்கி மனிசன் பாத்ரூமால் வர பிள்ளைகளையும் வெளிக்கிடுத்தியாச்சு. இன்னும் பஸ்சுக்கு முக்கா மணித்தியாலம் இருக்கு பிள்ளையளுக்கு சான்விச் குடுங்கோ என்று சதீஸ் கொண்டுவந்து தந்திட்டுப் போனான். நானோ மனிசனோ சாப்பிடவில்லை. பிள்ளைகளும் அரைவாசி சாப்பிட்டபடி வச்சிட்டினம். எனக்கு அவன் திரும்ப வாறதுக்கிடையில வீடைவிட்டுப் போய்விட வேண்டும்போல் இருந்ததால் போய் பஸ்கோல்டில நிப்பம் எண்டு சொன்னன். சரியெண்டு எல்லாரும் வெளிக்கிட்டம். ஒரு பதினைந்து நிமிடம் நடந்தால் றோட்டுக்குப் போய்விடலாம்.  
மனிசன் ஒரு சூட்கேசை இழுக்க சதீஸ் மற்றதைக் கொண்டுவர நான் கடைசி மகளைக் கையில பிடித்தபடி சுற்றிவரப் பார்த்துக்கொண்டு போறம். அங்கங்கே கிவித் தோட்டம். பார்க்க மனதை இலகுவாக்குகிறது. இத்தனை நாட்களாக கிவி மரத்தில்தான் காய்ப்பதாக எண்ணியிருந்த எனக்கு முந்திரிகைப் பந்தல் போட்டதுபோல் போட்ட பந்தலில் கொடிஎங்கும் காய்கள் தொங்கிக்கொண்டிருந்தன. தற்செயலாகப் பார்வையைத் திருப்பினால் முன்னால பரம் வந்துகொண்டிருக்குது. எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. மற்ற மகளையும் கையில பிடித்தபடி மனிசனுக்குப் பக்கத்தில் ஒட்டிக்கொண்டு நின்றேன்.

 அவன் கிட்ட வர மனிசன் முந்திக்கொண்டு நாங்கள் கிளம்பிறம் என்றதுதான் தாமதம் பாஞ்சு போய் சதீசுக்கு அடிக்கத்தொடங்கிவிட்டான். அவையை நாளைக்கு எல்லே போகச் சொன்னனான் நாயே நீ சொல்லேல்லையே என்று மீண்டும் அடிக்க பிள்ளையள் அழத்தொடங்கிவிட்டினம். மனிசன் சூட்கேசை கீழே வைத்துவிட்டு அவர்களை நோக்கிப் போக நான் வேண்டாமப்பா நாங்கள் போவம் என்று சொல்ல பிள்ளையளும் போவம் எண்டு அழ அவன் சதீசை விட்டிட்டு வீட்டை நோக்கிப் போகத்தொடங்கினான். சதீசின் கண்ணாடி உடைந்து சேட்டெல்லாம் கிழிஞ்சு பாக்கவே பரிதாபமாக இருந்திது. நீ போ அண்ணா நான் சேட் மாத்திக்கொண்டு வாறன் என்று சதீஸ் திரும்ப எடேய் enra சேட் போடலாம் நில் எடுத்துத் தாறன் எண்டு சூட்கேசைத் திறக்கவெளிக்கிட இல்லை அண்ணா நீ போ வாறன் எண்டு எமது பதிலுக்குக் காத்திருக்காமல் போக நான் இரண்டு பிள்ளைகளையும் கையில் பிடித்துக்கொண்டு ஓட்டமும் நடையுமாக போக மனிசன் இரண்டு சூட்கேசுகளையும் இழுத்துக்கொண்டு ஒருமாதிரி பஸ் போற வீதிக்கு வந்தாச்சு.  

நான் நேரத்தைப் பார்த்தேன்.இன்னும் அரை மணித்தியாலம் இருக்கு பஸ்வர. அவன் திரும்ப வாறானோ என்ற பயத்துடன் நான் நிற்கிறேன். ஏனம்மா சித்தப்பாக்கு அடிச்சவர் என மூத்த மகள் கேட்க அவனுக்கு விசர் என நான் கோவத்தோடு சொல்ல பிள்ளயளோட உப்பிடிக்க் கதைக்காதை என்றபடி அவை சும்மா விளயாடுக்குச் செய்தவை என்று கணவர் பிள்ளைக்குக் கூறுகிறார்.

தூரத்தில் சதீஸ் வருவது தெரிகிறது. சதீசின் பின்னால் அவன் வருகிறானா என நான் பார்க்கிறேன். அவனைக் காணாதது நின்மதியளிக்க சதீஸ் வந்தவுடன் நீ என்ரா அவனுக்குத் திருப்பி அடிக்காமல் அடி வாங்கிக் கொண்டிருந்தனி. உனக்கும் அவனுக்கும் என்ன பிரச்சன என்று இவர் கேட்க நான் முந்தி விசா இல்லாமல் இருந்தனான் அப்ப அவன்தான் என்னைப் பாத்தவன் என்கிறான் சதீஸ். அதுக்காகமட்டும் நீ பேசாமல் இருந்த மாதிரி எனக்குத் தெரியேல்லை. என்ன பிரச்சனை எண்டு சொல்லு என்ன செய்யலாம் எண்டு நான் சொல்லுறன் என்கிறார் இவர். சதீஸ் ஒன்றும் சொல்லாமல் நிற்க மனிசனுக்குக் கோவம் வந்திட்டுது. டேய் நான் கேட்கிறன் நீ வாய மூடிக்கொண்டு நிக்கிறாய் என்று சொல்லவும் அதே மவுனம். சரி நீ இனி இங்க நிக்க வேண்டாம் எண்ட பாஸ்போட்டில அண்ணியோட சுவிசுக்குப் போ. அண்ணி திரும்ப வந்து என்னைக்க் கூட்டிக்கொண்டு வரட்டும் என்கிறார் இவர். என்னால வர முடியாதண்ணா என்னும் சதீசை இவரும் நானும் கோபத்தோடு பார்க்கிறோம். ஏன் ஆரையாவது கொலகிலை செய்து அதை அவன் பாத்து பிளாக்மெயில் பண்ணுறானோ உன்னை.அல்லாட்டில் வேற என்ன பிரச்சனை எண்டு நீ சொன்னாத்தானே எனக்குத் தெரியும் என்று இவர் சொல்லிக்கொண்டிருக்க தூரத்தில் பஸ் வருவது தெரிகிறது.

 பஸ்சைக் கண்டவுடன் இதுவரை இருந்த ஒருவித பதட்டம் குறைந்ததுபோல் இருக்கிறது. பஸ்சில் ஏறியவுடன் இவர் பின்னால்ச் செல்ல முற்பாதுகாப்புடன் முன்னால் இருப்பம் என்கிறேன். முன்னிருக்கையில் ஒருபெண் இருக்க நானும் பிள்ளைகளும் அடுத்த சீற்றில் இருக்க இவரும் தம்பியாரும் எமக்குப் பின்னே இருக்கிறார்கள். பஸ் ஓடத்தொடங்க இனி ஒருநாளும் இங்கே வரப்போவதில்லை என்று எண்ணிக்கொண்டு கண்ணுக்கெட்டும் தூரம்வரை பார்க்கிறேன். அழகான கிராமம். இங்கொன்றும் அங்கொன்றுமாய் வீடுகள் வன்னியை நினைவுபடுத்துகின்றன. வசிப்பதற்க்கேற்ற இடமல்ல இரசிப்பதற்கு மட்டுமே ஏற்ற இடம் என நினைத்துக்கொண்டிருக்கும்போதே அடுத்த தரிப்பிடத்தில் பஸ் நிற்கிறதுஇரண்டு பேர் ஏறுகின்றனர். சாரதி பஸ்சை எடுத்துக்கொண்டு போக ஆரோ கைகாட்டி மறிக்கினம். பஸ் வேகம் குறைக்க நான் எட்டிப் பாக்கிறன் பரம் ஓடி வந்து ஏறிறான்.என்னையறியாமலே ஐயோ வாரான் எண்டு சொல்லிக்கொண்டு நான் எழும்பீட்டன். அண்ணி சீற்றில இருங்கோ அவன் உங்களை ஒண்டும் செய்ய மாட்டான் என்று சதீஸ் சொல்ல நான் மெதுவா இருக்கிறன். நான் பின்னுக்கு இருக்கிறன்தானே பயப்பிடாமல் இரு என்கிறார் இவர். பரம் எங்களைத் தாண்டிப் பின்னால்ப் போய் இருக்குது.

சிலோன் மாதிரி இங்கயும் கெண்டைக்ரர். சாரதிக்குப் பக்கத்தில அவருக்கும் ஒரு சீட் இருக்கு. சாரதியும் அவரும் தமது மொழியில் ஏதேதோ கதைசுச்சிரிக்கினம். அடுத்தடுத்த தரிப்பிடங்களில எறினதில பின்னுக்கிருந்த இரண்டுபேரும் இறங்கியாச்சு.நான் முன்னுக்குப் பாத்துக்கொண்டிருந்தாலும் பிடரியால பின்னுக்கும் பாத்துக்கொண்டிருந்தன். பின்னால பரம் எழும்புற அரவம் கேட்டுது. நான் உடன திரும்பினன். வந்த வேகத்தில சடபிட எண்டு தினேசுக்கு அடிச்சுப்போட்டு ஒண்டும் தெரியாதமாதிரி ஓடிப்போய் இருந்திட்டான். எனக்குச் சரியான பயமாப் போச்சு. முன்னுக்கு ரைவரிட்டச் சொல்லுங்கோ எண்டன் மனிசனைப் பாத்து. மனிசன் கெண்டைக்டரைக் கூப்பிட்டு பரமைக் காட்டி இவன் எங்களுக்குக் கரைச்சல் தாறான் எண்டு இங்கிலீசில சொல்லிச்சிது. அவங்களுக்கோ ஒண்டும் விளங்கேல்ல. 

சதீஸ் நீ சொல்லன்ரா எண்டு தம்பியாரப் பாத்துக் கேக்கிறார். சதீஸ் பேசாமல் இருக்கிறது.நான் உடன முன்னுக்கிருந்த பெண்ணிடம் எனது பாஸ்போட்டைக் காட்டி நாங்கள் டூரிஸ்ட். இவன் எங்களுக்கு பிரச்சனை தாறான். தயவுசெய்து போலீசைக் கூப்பிடு எண்டு சொல்லுறன். நான் போலிஸ் எண்டதுதான் தாமதம் பரம் எழும்பி எங்களுக்குக் கிட்ட வந்து எண்ட வீட்ட வந்து நிண்டு நக்கிப்போட்டு எனக்கே போலீசைக் கூப்பிடிறியோ எண்டு தொடங்க மனிசனுக்கு வந்துதே கோவம். பொத்தடா வாயை மனிசிபிள்ளயளோட தெரியாமல் இங்க வந்திட்டன் எண்டு பேசாமல் இருந்தால் என்னையும் அவன்மாதிரி விசரன் எண்டு நினைச்சியோ. காலடிச்சு முறிச்சுப்போடுவன் நாயே என்ற உடன பரமு நாய் வாலாட்டிக்கொண்டு சத்தம் போடாமல் ஒரு மூலேக்குள்ள போய்ப் படுக்குமேல்லோ அதுபோல சத்தப்பொறுதியில்லாமல் பின்னால போய் இருந்திட்டுது. என்ர மனிசன் போட்ட சத்தத்தில ரைவருக்கும் கெண்டைக்டருக்கும் எங்களுக்குள்ள எதோ பிரச்சனை எண்டு விளங்கிப்போச்சு. கெண்டைக்ரர் எழும்பி வந்து சதீசை இத்தாலிப் பாசேல ஏதேதோ கேட்கிறார். அப்பவும் சதீஸ் ஒண்டும் சொல்லாமல் இருக்குது. எனக்குக் கோவம் வந்திட்டிது. உங்கட தம்பியை நம்பி இங்க வந்ததுக்கு இது உங்களுக்கு வேணும் என்றேன். நான் எதிர்பார்த்தது நடந்திது. சதீஸ் வாயைத் திறந்து கெண்டைக்டருக்கு கடகட என்று எதோ சொல்ல அவர் பின்னால பரமைப் பாத்து எதோ சொல்ல பரம் திருப்ப எதோ பதில் சொல்லுறான். எனக்கு தினேஷ் எங்களுக்கு சார்பாக் கதைக்கிறானோ அல்லது அவனுக்குச் சார்பாக் கதைக்கிறானோ எண்டும் சந்தேகம். உடன இவரப் பாத்து எங்களுக்குப் பாதுகாப்பு வேணும். அதனால நாங்கள் இறங்கிற இடத்தில இவனை இறக்க விடவேண்டாம் எண்டு உங்கட தம்பியைச் சொல்லச்சொல்லுங்கோ என்றன். இவரும் சதீசும் பக்கத்திலபக்கத்தில தான் இருக்கினம் ஆனாலும் நான் சதீசைப் பாக்காமல் இவரைப் பாத்துச் சொன்னது சதீசுக்குச் சுட்டுப்போட்டுது. எழும்பிப் போய் ரைவரிட்ட எதோ சொல்லிப்போட்டு அண்ணி பயப்பிடாதைங்கோ. நான் ரைவருக்குச் சொல்லிப் போட்டன் அவனை இறங்க விடவேண்டாம் எண்டு. உங்களைப் பத்திரமா மகிந்தன் அண்ணா வீட்டில கொண்டுபோய் விடுறது என்ர பொறுப்பு எண்டு சொல்ல எனக்கே சதீசைப் பாக்கப் பாவமா இருந்துது.

நாங்கள் இறக்கிற இடம் வர கெண்டைக்ரர் பின்கதவில போய் நிக்கிறார். நாங்கள் முன்பக்கமாப் போய் இறங்கிறம். பரம் கொண்டைக்ரருடன் எதோ திட்டுப்படுது. எங்கள இறக்கினதோட அவனை இறக்காமல் பஸ்ஸை றைவர் எடுத்திட்டார். அவன் அடுத்த கோல்ட்டில இறங்கி வரமாட்டானோ என நான் கேட்கிறேன். மகிந்தண்ணான்ர இடத்துக்குப் போற பஸ் வர இன்னும் ஒரு மணித்தியாலத்துக்குக் கிட்ட இருக்கு. அவன் கட்டாயம் அங்க வருவான். அதனால பக்கத்தில இன்னுமொரு ரெயில்வே ஸ்டேசன் இருக்கு. அங்க போய் இருப்பம்.கா மணித்தியாலத்துக்கு முதல் பஸ் கோல்டுக்குப் போவம் என்று சதீஸ் சொல்ல நாங்களும் ஓம் எண்டு தலையாட்டிக் கொண்டு சதீசுக்குப் பின்னால நடக்கிறம். என் மூத்த மகளின் கையை சதீஸ் பிடிச்சுக்கொண்டு வரப் பார்க்க அவ கையை இழுத்துக்கொண்டு எனக்கு மற்றப்பக்கம் வந்து எண்ட கையை இறுக்கிப் பிடிக்கிற பிடியில அவவின் பயம் தெரியுது.
அத்தனை நேரம் பிள்ளைகள் இருவரும் என்னுடன் இருந்தும் அவர்களைப் பெரிதாகக் கவனிக்க ஏலாத அளவு பரம் எங்களைப் பிரச்சனையால மூடியிருந்ததை அப்பதான் நான் அவதானிச்சன். குட்டியளுக்குப் பசிக்குதா எண்டு அவர்களைப் பாத்துக் கேட்டன். ஒராள் ஓமெண்டு தலையாட்ட மற்றவ இல்லை எண்டு ஆட்டினா. அக்கம் பக்கம் கடைகள் ஒண்டையும் காணவில்லை. இஞ்சினேக்க கடைகிட ஒண்டும் இல்லையே எண்டு இவர் சதீசைப் பார்த்துக் கேக்கிறார். கொஞ்சம் தள்ளிப் போனால் ரண்டு மூண்டு கடையள் கிடக்கு. நான் உங்களை கொண்டுபோய் ஸ்டேசனில விட்டிட்டுப் போய் ஏதாவது வாங்கியாறன் என்று சதீஸ் சொல்ல எங்களைத் தனிய விட்டிட்டு எங்கயும் போவேண்டாம் நான் கைகாவலுக்கு பிஸ்கற்றும் யூசும் கொண்டுதான் திரியிறனான். ஆனபடியால் அங்க போனஉடன குடுப்பம் என்கிறேன்..
இந்தச் சனங்களுக்குக் கதைக்கிற பாசையும் விளங்குதில்ல. சதீஸ் விட்டிடுப் போனபிறகு அந்த நாய் வந்து ஏதும் பிரச்சனை பண்ணினால். இருக்கிற ஒரேயொரு துருப்புச் சீட்டு சதீஸ்தானே. அதால பசியே பொறுக்க முடியாத நான் அண்டைக்கு பயத்தில பசியே இல்லாத ஆளாகிப்போணன். நாம் எங்கேயாவது தூர இடங்களுக்குக் கிளம்பினால் உனக்குக் கொறிக்கக் கிரிக்க எல்லாம் எடுத்திட்டியோ ஒருவயதுப் பிள்ளையை கொண்டுபோகலாம். உன்னத்தான் தாக்காட்ட ஏலாது என்று இந்தாள் சொல்லும். பசி வந்தால் பத்தும் பறந்துபோகும்.பிரச்சனை வந்தால் பசிகூடப் பறந்துவிடும் என்பதை அன்று நான் உணர்ந்தேன்.

ஸ்டேசனுக்கு வந்தாச்சு. எதிரும் புதிருமாக நிறையக் கதிரைகள். ஒன்றிரண்டு பேர் மட்டுமே தொட்டம் தொட்டமா இருக்கினம். கொஞ்சமெண்டாலும் ஆக்கள் இருக்கிறது மனதுக்கு கொஞ்சம் நின்மதி தருது. நான் பிள்ளையளுக்கு பிஸ்கற்றும் யூசும் குடுக்க அவை இரண்டுபேரும் சாப்பிட்டுச் சாப்பிட்டு ஓடி விளையாடீனம். இவர் திரும்பவும் சதீஸ் இப்பிடியே நீ எங்களோட வாடா. அண்ணியும் நீயும் போங்கோ ரெயினில ஒரு செக்கப்பும் இல்லை. உனக்கு யூரோப் பற்றித் தெரியாமல் இங்க கிடக்கிறாய். வெளி உலகத்தை வந்து பாரடா என்று கல்லையும் கரைக்கிறமாதிரி ஏதேதோ சொல்லுறார். ஆனால் சதீசோ என்னால ஏலாது அண்ணா என்று பழைய பல்லவியைத் திரும்பப் பாடுது. சதீசின்ர கன்னத்தைப் பொத்தி நாலு அறை விடவேனும்போல எனக்கு ஆத்திரம் வருது. சதீஸ் நீங்கள் ஆரையும் கற்பழிச்சுக் கொலை கிலை செய்து அதை அவன் பாத்து உங்களை பிளக்மெயில் பண்ணுறானோ? அப்பிடிஎண்டாக்கூட உங்களை நாங்கள் காப்பாத்துவம். உந்த நாயிட்டக் கிடந்தது உப்பிடிச் சீரழியிறதவிட உண்மையை ஒத்துக்கொண்டு ஜெயிலுக்குப் போகலாம் என்று சொல்கிறேன். அதுக்கும் தலையைக் குனிஞ்சுகொண்டு பேசாமல் இருக்குது சதீஸ். எடேய் இவள் சொல்லுற மாதிரி ஏதேனும் செய்து போட்டியே அப்பிடிச் செய்திருந்தால் அவனையும் சேர்த்து வெட்டித் தாட்டிருக்க வேண்டியதுதானே. எங்கட குடும்பத்தில பிறந்துபோட்டு இப்பிடி எங்களுக்கு முன்னால அவனிட்ட அடி வாங்கிறாய் என்று இவர் சொல்ல அண்ண உன்னால என்ன மீட்கேலாது. இருவது வருசமா உன்னப் பாக்கேல்ல. பாத்தது சந்தோசம். என்ன ஒரு கிழமையாவது உங்களோடையும் பிள்ளயளோடையும் சந்தோசமா இருந்தன் அது காணும். நீ சந்தோசமாப் போய்ச் சேர். முந்தி மாதிரி இரண்டோ ஒரு மாதத்துக்கு ஒருக்காலோ போன் பண்ணுறன் எண்டு சொல்லிக்கொண்டிருக்க அம்மாஆ எண்டு கத்திக்கொண்டு விளையாடிக்கொண்டு நிண்ட பிள்ளையள் பீதியோட ஓடி வரீனம். பாத்தா பரமு வெறியோட வந்துகொண்டிருக்கு. எனக்கு கை காலெல்லாம் லூசாகிப் போனாப்போல இருக்கு. பரம் தூசனத்திலேயே எங்களப் பாத்துத் திட்டுது. சதீஸ் அவனைப் பாத்து நீ போடா நான் வாறன். அவை போப்போயினம் தேவையில்லாமல் ஏன்ரா பிரச்சனை பண்ணிறாய் எண்டு சொல்ல அவனோ காதுகுடுத்துக் கேக்கேலாத வார்த்தைகள் எல்லாம் சொல்லுறான். நாலஞ்சு சனம் எங்களுக்குப் பக்கத்தில வந்து புதினம் பாக்கினம். எனக்கோ சரியான கூச்சமாக் கிடக்கு. சதீஸ் இனியும் நீ எங்களோட நிக்க வேண்டாம். எனக்கு வார கோவத்தில உவன நானே திருகிச் சாக்காட்டிப் போடுவன். கூட்டிக்கொண்டு போடா எண்டு இவர் கத்திறார். சதீஸ் அவன்ர கையை இழுத்துக்கொண்டு போக அவனோ திமிறிக்கொண்டு எங்க திருகடா பாப்பம் எண்டு வாறான். சதீஸ் மீண்டும் அவனை இழுத்துக்கொண்டு போகுது. மனிசனுக்கு லேசில கோவம் வராது வந்தால் ஏதாவது செய்யாமல் விடாது எண்டு எனக்குத் தெரியும். அதால இனி நான் இங்க ஒரு நிமிசமும் நிக்கமாட்டன் ஐயோ வாங்கோ எண்டு சொல்லிக்கொண்டே நான் கதிரையில் பொத்தெண்டு இருக்கிறன். பிள்ளையள் இரண்டும் அழுதுகொண்டிருக்குதுகள்.
மனிசனுக்கு விளங்கிப்போச்சு கோபம் எங்கேயோ காணாமல்ப் போக எனக்குக் கிட்ட வந்து என்னப்பா செய்யுது எண்டு கேட்கிறார். எனக்கு எழாமல் இருக்கு என்னை உடன எங்கயாவது கூட்டிக்கொண்டு போங்கோ எண்டு நான் அழத்தொடங்கீற்றன். மனிசன் உடன அழாத எழும்பு. வரேக்க ஒரு கோட்டல் பாத்தனான் அங்க உடன போவம் என்று என் கையப் பிடித்து எழுப்புகிறார். நான் எழும்பியும் அவன் எங்கேயாவது நிக்கிறானா என சுற்றுமுற்றும் பாக்கிறேன். அவன்ர தலை தெரியாததால் கெதியாப் போவம் என்று கூறியபடி மனிசனோட போறன். நல்லகாலம் கொட்டேல் பக்கத்தில்தான். அங்கபோய் ரூம் எடுத்து ரூமுக்குள்ள போய் அப்பிடியே கட்டிலில விழுந்ததுதான். அஞ்சாறு மணித்தியாலம் நல்ல நித்திரை சாப்பிடக்கூட எழும்பேல்லை.

பின்னேரம் நாலுமணிக்குத்தான் கண்விளிச்சம். மனிசன் கொட்டலில கேட்டுக்கொண்டு வாறன் சாப்பாடு ஏதும் இருக்கோ எண்டு சொல்லிக்கொண்டு கீழ போகக் கிளம்பினார். அவன் நாங்கள் இங்க வந்ததைக் கண்டானோ தெரியாது. நீங்கள் தனியக் கீழ போக வேண்டாம் என்று நான் தடுத்தன். இவர் போன் பண்ணி சாப்பாடு ஏதும் இருக்கா எண்டு கேட்டார். காலை உணவு மட்டும்தான் என்று அவர்கள் கூறினார்கள். மனிசன் தான் வெளியில போய் வாங்கிக்கொண்டு வாறன் எண்டதுக்கும் நான் விடேல்லை. பிறகு கோட்டல் ஆக்கள் ஊடாக வெளியில் உணவு ஓடர் பண்ணிச் சாப்பிட்ட பிறகுதான் கொஞ்சம் தெம்பு வந்திது.
மகிந்தன் அண்ணைக்கு போன் செய்து வரச் சொல்லுங்கோ எண்டன். சாச்சில போட்ட போனை எடுத்தனியோ எண்டு இவர் கேட்ட உடனதான் பதட்டத்தில அதை எடுக்காமல் வந்தது ஞாபகம் வந்திது. இனி என்ன செய்யிறது. திரும்பப் போய் எடுக்கவே முடியும். அதிலதானே அப்பா எல்லாற்ற நம்பரும் இருக்கு. என்ன செய்யிறது எண்டு நான் இழுக்க கொம்மாக்கு அடிச்சு மாமாவின்ர நம்பர் எடு ஒண்டும் இப்ப சொல்லிப் போடாத. கொம்மாவும் விடமாட்டா.புடுங்கிப் புடுங்கிப் புதினம் கேப்பா கவனம்.போனுக்குச் சார்ச் இல்லை எண்டு மட்டும் சொல்லு என்றார். நாங்கள் எங்கள் காரைக் கொண்டுவந்து மாமா வீட்டில் சுவிசில் விட்டுவிட்டுத்தான் தொடருந்தில் இத்தாலி வந்தோம். நாம் எங்கே சென்றாலும் போன் டயரியை காருக்குள் எடுத்துப் போட்டுவிடுவோம். அதனால் மாமாவிடம் சொன்னால் காருக்குளிருந்து டயரியை எடுத்து நம்பர் சொல்லுவார். ஆனால் நாங்கள் கொட்டேலின் போனில் அடிக்க அடிக்க அம்மாவும் அப்பாவும் வீட்டில் இல்லை. ஒவ்வொரு கா மணித்தியாலத்துக்கு ஒருக்கா அடிச்சு அடிச்சு இரவுஒன்பதரை மணிக்குத் தான் அவை வீட்டை வந்தினம். அதுக்குப் பிறகு மாமாவுக்கு அடிச்சு நம்பர் கேட்டோம். உன்ர போன் வேலை செய்யேல்லை என்னடா உவன் சதீசிட்டை இருக்குமே இப்ப நீ எங்க நிக்கிறாய் வேற நம்பர் விழுது என்றதும் மனிசன் மாமனிட்டை எல்லாத்தையும் சொல்லிப்போட்டார். மாமா உடன இந்தா வெட்டுறன் அவன கொத்திறன் உங்கயே நில் நான் நாளைக்கு விடியவே உங்க வாறன் எண்டு அந்தாளச் சமாதானப் படுத்தவே அரமணித்தியாலமாப் போச்சு. பிறகு மகிந்தன் அண்ணாவை அடுத்த நாள் காலமை வரச்சொல்லிக் கதைத்த பிறகுதான் மனம் கொஞ்சம் நின்மதியாச்சு. அந்தண்டு முழுக்க கனவில பரம்தான்.

அடுத்த நாள் காலையில் மகிந்தன் அண்ண வந்து தன்ர வீட்ட கூட்டிக்கொண்டு போனார். எங்கண்ட கதையைக் கேட்டுப்போட்டு நீங்கள் தப்பி வந்தது பெருங்காரியம். அந்த இடத்தில இத்தாலிக்காரன்களே போய் இருக்க ஆசைப்படுறேல்லை. என்ன துணிச்சலில நீ போனனி எண்டு ஏசினார். அடுத்த இரண்டு நாட்களும் அவர்களுடன் நின்று அவர்கள் அளவுக்கதிகமாக உபசரித்தாலும் எப்ப அந்த நாட்டை விட்டுப் போவோம் என்றுதான் இருந்துது. திரும்ப சுவிஸ் வந்து மாமாவும் இவரும் பலதடவை சதீசுக்கு போன் செய்தும் சதீஸ் எடுக்கவில்லை. நாங்கள் வசிக்கும் நாட்டுக்கு வந்தபின்னர் பலரிடம் விசாரித்தும் சதீஸ் பற்றி ஒருவருக்கும் தெரியவில்லை.
இவர் தனது சிறிய தாயாருக்கு போன் செய்து தெரியாததுபோல் சதீஸின் போன் நம்பரையும் விலாசத்தையும் கேட்டோம். அவன் முந்திமாதிரி இப்ப எங்களோட கதைக்கிறேல்ல. அவனோட கதைச்சால் ஒருக்கா எடுக்கச்சொல்லு தம்பி எண்டு சித்தி கவலைப்பட்டா. நாம் அவருக்கு ஒன்றுமே சொல்லவில்லை.சதீசிடம் சொல்வதாகக் கூறிவிட்டு வைத்துவிட்டோம். அதன்பின் சதீஸ் எம்முடனோ மாமாவுடனோ தன குடும்பத்தவருடன் கூட எந்தத் தொடர்பும் வைக்கவில்லை. நாம் தொடர்புகொண்டாலும் எடுப்பதுமில்லை. மகிந்தனுடன் கதைக்கும்போது சதீஸ் பற்றிக் கேட்டால் எப்பவாவது காண்பதாகக் கூறுவார். நாங்களும் சதீஸ் பற்றிக் கதைக்கத் தொடங்கினால் இப்பிடி இருக்குமோ அப்பிடி இருக்குமோ என்று மண்டையைப்போட்டு உடைப்பதுதான் மிச்சம். ஓரினச் சேர்க்கையாளராய் இருக்கலாம் என்றார் இவர். ஆறு மாதங்களின் முன் பரத்தின் சொந்தக்காரப் பெண் ஒருவரை சதீஸ் மணந்து கொண்டதாகக் கேள்விப்பட்டோம்.சதீஸ் பெற்றோர்களுக்குக் கூடச் சொல்லவில்லை.சித்தி இவரிடம் போனெடுத்து அழுத அழுகை பாவம் தான். ஒருக்கா நீ அவனப் போய்ப் பாக்கமாட்டியே என்று அழுதா. நாங்களே போய் தப்பினோம் பிழைச்சோம் என்று ஓடி வந்ததை அவவுக்குச் சொல்லமுடியுமோ. என்ர கவலை கட்டின பெண்ணையாவது ஒழுங்கா வச்சு சதீஸ் பாக்கிறானோ அல்லது பரம்தான் வச்சிருக்கிறானோ. இல்ல வெட்டிக்கிட்டிப் புதச்சுப் போட்டாங்களோ.கடவுளுக்குத்தான் வெளிச்சம். எனக்கு ஆராவது செங்கம்பள வரவேற்புத் தந்தாக்கூட நான் இத்தாலிப் பக்கம் போகவே மாட்டன்.

No comments:

Post a Comment