Saturday 16 November 2013

ஆழிக் கடலடி

ஆழிக் கடலடி ஆட்டம் கண்டதால்
ஆழப் பெருங்கடல் மேலெழுந்தது
அதிர்வின்றி அமைதியாக
ஆழ்கடல் அசைந்து வந்து
ஓசையற்று ஒட்டுமொத்தமாய்
ஒன்றுமிலாது கொண்டு போனது

அன்னை மடியென ஆடிக் கழித்தவர்
அலைகடலோடு கூடிக் கழித்தவர்
ஆவலோடு உனைப் பார்த்திருந்தவர்
அத்தனை போரையும் அரை நொடியுள்
அள்ளிக் கொண்டு சென்று விட்டாய்


அந்த நொடிவரை ஆயிரமாய்
அகம் முழுதும் ஆசைகளோடு
அடுத்தநாளின் கனவுகளோடு
ஆடிப் பாடிக் களித்திருந்தார்
அனைவர் மீதும் கோபமென்ன
அடித்துக்கொண்டு சென்றுவிட்டாய்

பத்து மாதம் சுமந்த பிள்ளையை
பள்ளிக்கனுப்பிய பாலகனை
கட்டிய கணவனை காதலனை
அத்தனை உறவையும் அக்கணமே
அகதியாக்கிச் சென்றுவிட்டாய்

எத்தனை ஆண்டுகள் வாழ்ந்த வீடுகள்
காந்தமாய்த் திரிந்த வீதிகள்
எழில் பொங்கும் எங்களின் ஊர்கள்
நீண்டு வளர்ந்த நெடு மரங்கள்
அத்தனையும் அழித்துவிட்டாய்

தமிழன் மட்டும் தரணியில்
தவிப்பதற்கே பிறந்தவனா
திண்தோள் கொண்டு திரட்டியதை
தேவையற்றுக் கொடுப்பவனா
தீரும் பகை மறந்து தினவறுந்து
தேரில் உலாச் செல்பவனா

மீண்டும்  வதைப்பவரை
மன்னித்தே ஏற்பவனா
பாரெங்கும் பரந்திருந்து
பகை மறந்து வாழ்பவனா
இனம் துறந்து ஏதிலியாய்
எட்டப்பனாய்  வாழ்பவனா

எத்தனை திங்களாய்
எல்லாம் கொடுத்திட்ட
ஏழைகள் தானடி நாங்கள்
ஏனடி நீயும் எங்களை மட்டும்
எப்போதும் அழிக்கின்றாய்
எல்லைகள் தாண்டி வந்து
எல்லாமே செய்கின்றாய்

எமக்கது சாபமடி எப்போதும்
தமிழனாய்ப் பிறந்திட்ட
எம்மினத்தின்  சாபமடி
முயல்கின்றோம் முதிர்கின்றோம்
மூலமெல்லாம் தொடுகின்றோம்
மீண்டு வரத்தான் எம்மால்
இன்னும் முடியவில்லை



No comments:

Post a Comment