Saturday 16 November 2013

அந்த மூட்டைப் பூச்சி

 Bed_bugs.jpeg?1349479894


இந்த மூட்டைப் பூச்சி பற்றிய விடயம் ஒரு சிறியதே என்றாலும், இன்றுவரை அதன் நினைவு என் நெஞ்சை விட்டு அகல மறுத்து ஆழப் பதிந்ததனால் கட்டாயம் இது பற்றியும் எழுத வேண்டும் என்றுமுடிவெடுத்தேன். ஆனால் பலருக்கு மூட்டைப் பூச்சி பற்றித்  தெரிந்தே இருக்காது.

எங்கள் வீடு மிகச் சுத்தமானது என்பதால் வீடுத் தளபாடங்களும் சுத்தமாகவே
இருக்கும். நான் நான் வேம்படிக்குப் படிக்கப் போனதன் பின்னர் எனக்காகப் படிப்பதற்குத் தனி மேசை கதிரை கட்டிலுடன் தனி அறை இருந்தது. அது எனக்குப்
பதவி உயர்வு கிடைத்தது போன்றது.

எனக்குப பல நண்பிகள் இருந்தனர். அவர்கள் வந்தால் நாம் வீட்டு முற்றத்தில் இருந்து கதைப்போம். முற்றத்தில் வேறு யாராவது வந்தால், ஏதாவது பகிடியாகக் கதைப்பதெனில் என் அறைக்குள் போய் இருந்து கதைப்போம். எனது அம்மம்மா எப்போதும் வீட்டுக்கு முன்னால் தான் அமர்ந்திருப்பார். பெடியளின் கதை ஏதும் என்றால் அம்மம்மாவுக்கு கேட்டாலும் என்ற பயத்தில் என் அறைதான் தஞ்சம்.

எனது வீடுதான் சுத்தமே ஒழிய எனது இரு நண்பிகளின் வீடுகளில் மூட்டைப் பூச்சியின் தொல்லை இருந்தது. அதனால் அவர்கள் வீட்டுக்குப் போனால் நான் கதிரைகளில் இருப்பதைத் தவிர்த்து விடுவேன். வெளியில் சீமெந்துத் திண்ணைகளில் இருந்துவிடுவேன். சிலவேளைகளில்  அவர்களின்  தாய்மார்  உள்ளுக்குள்ள வந்து கதையுங்கோவன் என்றால் வெளியே தான் நல்ல காற்று வரும் என்று விடுவேன். மூட்டையின் தொல்லையால் தான் வெளியே இருக்கிறேன் என்று கூற ஏனோ மனம் வருவதில்லை.

காலை ஐந்தரைக்கு எழுத்து ஒரு மணி நேரம் படிக்க வேண்டும் மாலையும் ஒருமணி நேரம் கட்டாயம் படித்தே ஆகவேண்டும். என்னறையில் என்மேசையில் தம்பி தங்கைகளைv அறைக்குள் அனுமதிக்காது இருந்து படிப்பது. ஏன் அவர்களை விடுவதில்லை எனில் சிலவேளை படிக்கும் மனோ நிலை வராது. அப்போதெல்லாம் பாடப் புத்தகத்துள் கதைப் புத்தகத்தை மறைத்து வைத்துத் தான் வாசிப்பது. அம்மாவும் பிள்ளை மும்மரமாகப் படிப்பதாக நம்பிக் கொண்டு போய்விடுவா. ஆனால் தம்பி தங்கை என்றால் பக்கத்தில் வந்து நின்று நோண்டுவார்கள். என்னக்கா படிக்கிறீர்கள் என்று எட்டிப் பார்ப்பார்கள். கதைப் புத்தகத்தைக் கண்டால் உடனே அம்மாவிடம் கோள்மூட்டி விட்டுத் தான் மறு வேலை. அதனால் பாதுகாப்புக்கு அம்மாவிடம் இவர்கள் என்னைப் படிக்க விடாமல் இடைஞ்சல் தருகிறார்கள் என்று நான் கோள் மூட்டியதில், நான் படிக்கு நேரம் அவர்கள் என் அறைக்குள் வரத் தடை.

சரி இனி விசயத்துக்கு வாறன். ஒரு நாள் மாலையில் படிப்பதற்கு இல்லை இல்லை கதைப் புத்தகம் வாசிப்பதற்கு ஆவலா புத்தகத்துக்குள்ள புத்தகம் வைத்துக்
கொண்டு என் கதிரையில் அமர்ந்தால் இரு நிமிடமாகவில்லை தொடையின் கீழ்
பகுதியில் ஊசியால் குற்றுவது போல் இருக்க நானும் எதோ என்று விட்டு
மீண்டும் புத்தகத்துள் ஆழ்ந்துவிடுகிறேன். மீண்டும் அதே ஊசிக் குற்றல்.
என்ன இது என்று ஏதும் சிராம்பு என் உடையுடன் ஒட்டிக் கொண்டதோ என்றுவிட்டு
எழுந்து என் பாவாடையை உதறிவிட்டு இருக்கிறேன்.

மீண்டும்  அதே தாக்குதல். ஆனால் இப்ப தொடையில் சரியான கடுப்பு. தாங்க முடியாமல் சொறியும் போதுதான் பார்த்தால் அந்த இடம் தடித்துப் போய் இருந்தது. உடனே எனக்கு விளங்கிவிட்டுது இது மூட்டைக் கடி என்று. உடனே ஒரு கலவரமும் வந்தது. எங்கள் வீட்டில் இது இல்லையே எப்படி வந்தது என்று. இரு நாட்களுக்கு முன் நண்பிகள்வந்து கதைத்துக்கொண்டிருந்தார்கள். யாரின் உடையுடனோ ஒட்டிக் கொண்டு வந்திருக்கிறது என எண்ணிக் கொண்டு, இருக்க எண்ணிய நான் இருக்காது கட்டிலில் போய் அமைந்தேன்.

கட்டிலில் இருந்து படிப்பதும் அப்பாவுக்குப் பிடிக்காது. முதுகு வளைந்துவிடும் கதிரையில் நேராக இருந்து படிக்க வேண்டும் என்பார். அதனால் எப்படியாவது மூட்டையை நசுக்க வேண்டும். ஆனால் அப்போது இருட்டிவிட்டபடியால் ஈர்க்குக் குச்சிக்கு  நாளை வரை காத்திருக்க வேண்டும் என எண்ணிக் கொண்டு அரைவாசிக்  கதையை வாசித்து முடித்தேன்.

அடுத்த நாள் மாலை தான் பள்ளி விட்டு வந்ததும் மிகுதிக் கதையை வாசித்து முடிக்கும் அவசரத்தில் மறந்துபோய் கதிரையில் இருந்துவிட்டேன். சரியான பசிபோல் மூட்டைக்கு. அவசரமாக ஓடிவந்து இரத்தம் குடிக்க ஆரம்பித்தது. அது என்
இரத்தத்தை உறிஞ்சுகிறதே என்னும் கோபத்தை விட என்னை கதையை வாசிக்க விடாது செய்வதுதான் கோபத்தை அதிகப்படுத்த விரைந்து சென்று ஈர்க்கு ஒன்றை எடுத்து வந்தேன்.

எனது கதிரை மரத்தால் ஆனது பிளாஸ்டிக் வயர்களால் பின்னப்பட்டிருக்கும். அந்த பின்னப்பட்ட இடைவெளிகளில் எங்கோதான் என் எதிரி ஒளிந்திருக்கிறது. எனவே எல்லா இடைவெளிகளுள்ளும் ஈர்க்கை விட்டு நன்றாகக் குத்தினேன். மும்மரமாகக் தாக்குதலை நடத்திக் கொண்டிருக்கும் நேரம் பாத்து என் கடைசித் தம்பி வந்துவிட்டான்.  என்ன அக்கா கதிரைக்குச் செய்யிறீங்கள் என்று கேள்வி வேறு. அவனுக்குத் தெரிந்தால் அதோ கதிதான். உடனே குந்தி இருந்த நான் எழுந்து எப்பிடிப் பின்னி இருக்கினம் என்று பாக்கிறேன் என்று கூறிவிட்டு மீண்டும் கதிரையில் அமர்கிறேன். ஈர்க்கால் குத்திய குத்தில் இப்போதைக்கு மூட்டை வர மாட்டுது என்ற நம்பிக்கை. அக்கா சாப்பாடு வேணும் என்கிறான் தொடர்ந்து தம்பி.

அம்மா பக்கத்து வீட்டுக்குப் போய் விட்ட படியால் தம்பிக்கு நான் தான் சாப்பாடு தீத்த வேண்டும். அவன் கடைசிப் பிள்ளை என்பதால் சரியான செல்லம். அதனால் யாராவது அவனுக்குத் தீத்தி விட வேண்டும். மனதுக்குள் எரிச்சல் வந்தாலும்  அடக்கிக் கொண்டு அவனுக்கு உணவைப்பிசைந்து ஊட்டுகிறேன். அவன் உண்டு முடிந்ததும் விளையாட ஓடியபிறகு மீண்டும்என் நாற்காலியில் வந்து அமர்கிறேன். கொஞ்ச நேரம் எந்தக் கடியும் இல்லை. ஈர்க்கு  நல்லாத்தான் வேலை செய்யுது என எண்ணியபடி அம்மா திரும்பி வருவதற்குள் கொஞ்சமாவது வாசித்து முடிக்க வேண்டும் என்ற அவசரத்துடன் வாசிக்கத் தொடங்குகிறேன்.

கதை நல்ல விறுவிறுப்பாகப் போகிறது. நாளை நண்பியின் புத்தகத்தை அவளிடம் கொடுத்தே ஆகவேண்டும். அந்த அவசரம் வேறு. மும்மரமாக வாசித்துக் கொண்டிருக்கும் போது மீண்டும் மூட்டையின் தாக்குதல். இன்று உன்னைக் கொல்லாது விடுவதில்லை எனச் சூளுரைத்த படி ஈர்க்கை எடுக்கிறேன். ஈர்க்கு ஒரு கட்டத்துக்கு மேல் உள்ளே போகவில்லை. அம்மாவின் பெரிய ஊசி ஒன்றை எடுத்துவந்து ஒவ்வொரு இடைவெளிக்குள்ளும் ஊசியை விட்டு கிண்டுகிறேன். அப்பாடா ஒன்றிலிருந்து ஊசியில் அகப்பட்டபடி மூட்டைவருகிறது . எதோ பெரிய சாதனையைச் செய்தது போல் வெளியே கொண்டு சென்று சிறிய தடியால் நசித்து எறிந்துவிட்டு நீண்ட நின்மதியுடன் கதிரையில் அமர்கிறேன்.

No comments:

Post a Comment