Wednesday 3 June 2015

ஓட்டமுடியாத சிறகு - கவிதை

Nivetha Uthayan's photo.

ஒவ்வொருதடவையும் உன்னால் உதிர்க்கப்படும்
என் சிறகுகளை நானே தேடி எடுத்து
ஒட்டவைக்கப் பார்க்கிறேன்
அத்தனை தடவையும் அவை
ஓட்டமுடியாது உதிர்ந்துகொண்டே இருக்கின்றன

கற்பனையின் கண்காணாத தேசத்தின் காற்றில்
கலைக்கப்பட்டுக்கொண்டிருக்கும் மனதின்
நிரவ முடியாத பள்ளங்களின் பகுதி
எப்போதும் அசைக்கமுடியாத நம்பிக்கை கொண்டு
இறுதிநேர வாக்கெடுப்புக்காகக் காத்துக்கொண்டிருக்க
எவ்வித நிர்ப்பந்தங்களுமின்றி நீயோ
எதிர்வினை புரிந்துகொண்டே இருக்கிறாய்

கண்முன்னே ஆடும் கண்ணாம்மூச்சி விளையாட்டில்
கண்கட்டி வித்தைக்கான தயார்படுத்தல்களுடன் நீ
கணக்கற்றுக் காலங்களை வகுத்தபடி இருக்க
காரணமறியாது நானும் எப்போதும்போல்
கண்களின் கரைதல்களுடன் காணாமற்போகும்
கனதியான நினைவுகளின் தொகுப்பை
கூடைகூடையாய்ச் சுமந்துகொண்டு
கடக்கமுடியாக் கனவுகளைக் கடக்கமுயல்கிறேன்

நாளும் பொழுதும் எப்போதும் உனக்கேயானதான
உயிர்ப்பில்லாச் சிந்தனையோடு என்மேல்
உருவமில்லாக் கற்களை எறிந்தபடி இருக்கிறாய்
எத்தனைதான் தாங்கும் மனம் ஏதிலியாய்
என்றோ ஓர்நாள் இதயம் இரக்கம் துறந்து
இல்லாப் பொருளின் உண்மை உணர்ந்தால்
இல்லாதொளிந்திடும் இத்தனை இடர்களும்
அப்போது எல்லாம் இருந்தும் இல்லாதவனாய்
என்றும் மீளா துயர் சுமந்து நீ காத்திருக்க
எல்லை கடந்து நான் இல்லாதிருந்திடுவேன்

No comments:

Post a Comment