நானா ??? அவளா ???
என் வீட்டிலிருந்து கொஞ்சத் தூரம் சென்றால் அந்தப் பெருவெளி கண்ணுக்கு எட்டிய தூரம்வரை பரந்து விரிந்திருந்தது. அந்த வெளியின் நடுவே புற்களைத் தவிர வேறு எதுவும் இல்லை. ஆனால் சுற்றிவர பெரு மரங்கள் கிளைபரப்பி கோடையில் இலைகள் நிறைந்துபோய் பார்ப்பதற்கு மிகவும் ரம்மியமான காட்சி.
காலையில் நடப்பது எனக்கு மட்டுமல்ல பலருக்கும் விரும்பியோ விரும்பாமலோ செய்யவேண்டிய ஒரு கடனாக மாறியிருந்தது. எனக்கு மற்றவர்களுடன் சேர்ந்து நடப்பதும் சரிவராது. ஏனெனில் எப்படியும் இருவர் அமைதியாக நடக்கவே முடியாது. ஏதாவது ஒரு கதையில் ஆரம்பித்து மற்றொன்றில் தாவித் தொடரும். நான் இரு கைகளையும் அரைவாசி தூக்கியபடி விசுக் விசுக்கென நடக்கத் தொடங்கி இருப்பது ஆண்டுகளாவது ஆகியிருக்கும்.
எப்போதுமே மற்றவர்களுக்காக பலதையும் விட்டுக்கொடுக்காத என் மனம் இதற்கும் இசைவதில்லை. அதனால் காலை ஆறுமணிக்கே எழுந்து தனியாகச் சென்று நடக்கவாரம்பித்துவிடுவேன். அநேகமாக அந்த நேரம் ஒரு இரண்டு மூன்றுபேர் தான் தூரத்தில் நடந்துகொண்டிருப்பார்கள். அது மனதுக்கு ஒரு துணிவையும் கொடுக்கும். மழைக்காலங்களில் சோம்பலில் வழிந்தபடி படுத்துக்கிடப்பதையே பலரும் விரும்புவதால் நானும் சிலநேரம் கடமை தவறாது எழுப்பும் மணிக்கூட்டை நிறுத்திவிட்டுப் படுத்தாலும் என்கணவர் எழும்பு என்று அரியண்டப்படுத்தியே எழுப்பிவிடுவார்.
அவர் ஒண்டும் என்னில உள்ள கரிசனையால் என்னை எழுப்புவதில்லை. நான் ஆறுக்கு எழும்பி அவருக்கு வேலைக்குச் சாப்பாடு கட்டிவைத்து, பாலைக் காய்ச்சி தண்ணி எதுவும் கலக்காமல் கோப்பி போட்டு வைத்துவிட்டு நடையைக் கட்டுவேன். முன்னர் எல்லாம் ஒருசில நாட்கள் நான் எழும்பாது விட்டால் மனிசன் தானாகத் தேநீரைப் போட்டுக் குடிக்காமல் போயிடுவார். அன்று முழுதும் எனக்கு எதோ குற்ற உணர்வாகவே இருக்கும். ஆனா இப்ப அதை எல்லாம் கடந்து வந்தாச்சு. எனக்கு காலையில் படுக்கவேணும் போல இருந்தால் யாரையும் பற்றிக் கவலை கொள்ளாமல் படுக்க முடிகிறது. நானும் மனிசிதானே. நெடுக எல்லாருக்கும் வேலை செய்துகொண்டு இருக்க ஏலுமே. சரி சொல்லவந்த விசயத்துக்கு வாறன்.
கொரோனாக் காலத்தில ஆறு மணிக்கு எழும்பிப் போனால்த்தான் குறைவான ஆட்கள் நடந்துகொண்டிருப்பினம். ஒரு ஏழு மணிக்குப் போனால் அந்தப்பக்கம் இந்தப்பக்கம் என்று எக்கச்சக்கமான சனம். என்னடா இது என்று அடுத்தநாள் முகக் கவசம் அணிந்துகொண்டு போனால் என் வேக நடைக்கு முகக்கவசம் நனைந்து மூச்சும் அடைப்பதுபோல் இருக்க, அடுத்த நாளில் இருந்து ஆறுமணிக்கே எழுந்து நடப்பது. இல்லையென்றால் படுத்தே இருப்பது என்றாகிவிட மனிசனின் புறுபுறுப்பு அதைவிட அதிகமாகிப் போனது. வேலைவெட்டியும் இல்லை. உள்ள சாப்பாடெல்லாம் செய்து யூடியூப்பில் போடுறன் எண்டு சாப்பிட்டுத் தள்ளுறாய். உடம்பு வைக்கப் போகுது எழும்பு எழும்பு என்று ...... அந்தக் குத்தல் கதையைக் கேட்பதிலும் எழும்பி நடக்கிறதே மேல் என்று நடக்கப் போக புதிதாக எனக்கொரு பிரச்சனை அங்கேயும்.
கூடுதலாக அங்கே நடப்பவர்கள் இடதுபக்கமாகவே நடந்து போக ஒரு சிலர்தான் எதிர்ப்பக்கமாக வருவினம். நான் யாரும் இடப் பக்கமாகத் தூரத்தில் வருவது தெரிந்தால் வலப்பக்கமாக மாறி நடக்கத் தொடங்குவன். என் கண்கள் பார்க்கின் தூரத்தை மனதால் அளந்து அவர்கள் அதிக தூரம் என்றால் நான் மாறி நடப்பன். நான் அதிக தூரம் நடந்திருந்தால் அதே பக்கமாக எள்ளளவும் நகராமல் நடந்துகொண்டிருப்பன். வாறவை என்னை விலத்தி நடக்க வேண்டியதுதான். அவள் ஒருத்தி இப்ப புதிதாக நடக்கவாரம்பித்து நான் போகும் நேரத்துக்கு வருவதுமில்லாமல் நான் நடக்கும் இடப்பக்கமாகவே எதிர்ப்புறம் நடந்து வருகிறாள்.
ஒருநாள் இரு நாட்கள் புதியவள் என்பதனால் விட்டுக்கொடுத்து நான் விலகி நடந்தால் அவவுக்கு தான்பெரிய மகாராணி எண்ட நினைப்பு. தொடர்ந்து ஒரு வாரமா அந்தப் பக்கமிந்தப்பக்கம் போகாமல் அதே நடை. நானும் எத்தனை நாள் தான் பொறுமையாய் நடப்பது ? இண்டைக்கு இவவை ஒருகை பார்ப்பதாக மனதில் எண்ணிக்கொண்டு குனிந்ததலை நிமிராமல் நடந்துகொண்டிருக்க, எனக்கு முன்னாள் அவள் வருவதை என் கண்கள் கண்டுகொண்டவுடன் அவள் என்னை இடித்துவிட்டுச் சென்ற இடியில் என் தேசம் குலுங்கிப் போக மனதில் கோபம் கோபுரம்கட்ட ஆரம்பிச்சிட்டுது.
இரண்டாவது சுற்று நடக்கும்போதும் பார்த்தால் நான் அதே பக்கமாக அதிக தூரம் நடந்திருக்க இடையில் இருந்த சிறிய நடை பாதையில் வந்து நான் நான் நடந்துவந்துகொண்டிருந்த பாதையில் ஏறியவளுக்கு நான் நடந்துகொண்டிருப்பது தெரிந்ததுதானே இருக்கவேணும். ஆனால் அவவோ எதுவும் தெரியாததுபோல் நடந்து வர, நானும் மற்றப்பக்கம் மாறி நடக்காமல் தொடர்ந்து நடக்க இன்னும் ஒரு மூன்று மீற்றர் தூரம்தான் இருக்கு அவளுக்கும் எனக்கும். என் மனம் இம்முறை விட்டுக்கொடுக்க முடியவே முடியாது எண்டு அடம்பிடிக்க, அவள் இம் முறையும் இடித்துக்கொண்டு போனால் அவமானம்போக அவளை இடிக்கும் அளவு எனக்கும் வலுவில்லை என்பது அவள் முதல் சுற்றில் இடித்த அனுபவம் சொல்ல, மனம் ஒரு செக்கனில் முடிவெடுக்க நான் களராத காலனியின் நூலைக் கட்டுவதற்காய் குனிய அவள் வேறு வழியேயின்றி என்னை விலத்திக்கொண்டு மற்றப்பக்கமாகப் போக, மனதில் ஒரு நின்மதியும் மகிழ்வும் ஏற்பட அந்தப் பெருவெளியின் மரங்களினூடே கைவீசி முகம் கொள்ளாச் சிரிப்புடன் நடக்கிறேன் நான் .