Tuesday 23 June 2015

நிலக்குமிழி




அத்தனையும் ஓய்ந்து போனதாக
எதுவுமற்று வெற்றிடமாய்
தெரிகிறது மனம்

மரண வீட்டின் ஒலியடங்கலாக
ஒவ்வொரு மூலையும் எதுவுமற்று
வேறுவழி அற்றதான நிலையில்
வெம்பல் அடங்கி வேதனை அடக்கி
வெற்றிடங்கள் மட்டுமே கொண்டதாய்
மன வீட்டின் ஒவ்வொரு மூலையும்
முடங்கிப்போய் இருக்கிறது

போதும் இப்பிறப்பின் போராட்டம்
வாழ்தலின் வழிகள் இருந்தும்
வேரறுந்து வீழ்ந்த மரமாய் மனம்
வேதனையின் விக்கலடக்கி
விதியின் வலிந்த வீழ்த்தலில்
வழிகள் எல்லாம் அடைபட
மூழ்க ஆரம்பித்திருக்கும்
கடல் சூழ்ந்த தீவின் நடுவே
கதியற்று நிற்கிறேன் நான்

ஓய்ந்துவிட்ட கனவு

 Nivetha Uthayan's photo.

தெருவோரம் வீசிய காற்றில்
தென்னை மர ஓலைகளாய்
மனம் அசைந்தாட
தேங்கிக் கிடக்கும்
பழைய பக்கங்கள் எல்லாம்
ஒவ்வொன்றாய் புரள்கின்றன


பட்டம் விட்ட காலம்
பள்ளிப் பருவ நாட்கள்
பதின்ம வயதின் காதல்
பாலியத்தின் நட்பு
கிளித்தட்டு விளையாட்டு
பார்வையின் பரிமாறல்
பண்படாத நெஞ்சம்
பேருந்துப் பயணம் என
பழையனவெல்லாம் வந்து
படம் காட்டிச் செல்கிறது

மீட்டவே முடியாத அந்த
முடிவாகிப் போன நாட்கள்
மூச்சின் முடிவு மட்டும்
முகம்மோதி அப்பப்போ
முட்டும் காற்றாய் நின்று
முகவரி தொலைத்ததை
முடிவற்ற வலிகளின்
முற்றுப்பெறாத வரிகளாய்
முட்களாய்த் தைத்தபடி

தீரா ஆசை - கவிதை

 


எப்போதும் மழைத் தூறலாய்
மனதெங்கும் உன் நினைவு
அப்பப்போ இடிமின்னல்
சூறைக்காற்றுடன் மழை தான்
ஆனாலும்
நனைவதர்க்கே மனம்
ஆசை கொள்கின்றது


சிரிப்புடன்பேச வந்தால் 
சிறுகற்கள் கொண்டு 
சினத்துடன் எனைத் தாக்கி
சிறகொடிய வைக்கிறாய்
ஆனாலும்  உன் அன்பில் 
சிதறிப்போகவே 
மனம் ஆசை கொள்கிறது 

அடை மழையில் நனைந்து
ஆடை குளிர நான் 
ஆசையாகப்பேச வந்தால்
அப்போதும் கதவடைத்து 
அல்லலுற நீ வைத்தாலும் 
உன் அன்பில் திளைத்து 
திணறவே திண் மனம் 
தீரா ஆசை கொள்கிறது 

மூடனே மனதைப் படிக்கா
மனதற்ற மூர்க்கனே
மனதிருந்து மருவின்றி
உன் நினைவழிக்க மனம்
மட்டிலா ஆசை கொள்கிறது
மறுபடியும் மறுபடியும்
மனவறையின் பக்கமெல்லாம்
மிச்சமின்றி அமர்ந்திருக்கும்
மூச்சுக் காற்று நீயாகி
மெய்மறந்து போகிறது மனது





யாதுமாகி - kavitha


 

நினைவுகளில் எல்லாம்
நிமிடத்தில் தீ மூளும்
நெஞ்சம் படபடத்து
நிலையின்றிக் கனவுகாணும்


மனதடக்க முடியாது
மட்டிலா மகிழ்வுகொண்டு
மிதக்கும் மனது கொண்டு
மேகத்தில் நடமாடும்

காட்டாற்று வெள்ளமாய்
காட்சிகள் சுழன்றாடும்
கவலைகள் சேர்ந்ததனால்
கள்ளம் குடிகொள்ளும்

எட்டாத கோட்டை எல்லாம்
எப்படியோ கட்டவைத்து
எதிர்பார்ப்பை ஏணியாக்கி
எங்கெங்கோஅலையவைக்கும்

பசிமறந்து தூக்கம் கெடும்
பலபாடல் மனமிசைக்கும்
பார்க்காதிருந்தாலே
பயித்தியம் பிடித்துவிடும்

கற்பனைக் குதிரைகளை
கணக்கின்றி அவிழ்த்துவிடும்
கடிவாளம் அற்றதாய்
காததூரம் ஓடவைக்கும்

உறவுகள் கண்மறைக்கும்
உற்றவர் தான் மறக்கும்
பெற்றவர் என்றாலும்
பேரிடராய்த் தோன்றிவிடும்

நித்தம் நினைவிழந்து
பித்தம் தலைக்கேறி
மற்றதெல்லாம் மறக்கவைத்து
சித்தம் கலங்கவைக்கும் காதல்
செத்தொழிந்து போனாலும்
சொத்தழிந்து போனாலும்
சித்தம் நிறைந்து சொர்க்கம் திறந்து
சொக்கவைப்பது காதல்

வானம் வசப்படும் - கவிதை

 

மண்ணில் நாம் வந்து
பிறந்துவிட்டோம்
வாழ்வு எது என்றும்
அறிந்துவிட்டோம்
எண்ணிலாத ஏக்கங்களை
எம்மைச் சூழ ஏற்றிவிடோம்


பொன்னின் ஆசைகள் போதையாகிட
பொருள் மட்டுமே வாழ்வுமாகிட
பேரவா கொண்டு பேதைமை கொண்டு
போட்டிகள் கொண்டிங்கு
போதையிலேயே வாழுகிறார்

மண்ணின் ஆசைகள்
மனதெங்கும் மாய்த்திட
மானமிழந்து மதிகெட்டலைந்து
சுற்றமிழந்து சுறுசுறுப்பிழந்து
சொந்தமிழந்து சொத்துமிழந்து
செக்குமாடுகளாய் வாழுகிறார்

பெண்ணின் ஆசையில்
கண்ணும் குருடாகிட
பேரிடர் பல தாங்கியே நிதம்
பெண்டிர் மறந்து பெருமை மறந்து
பித்தராய்ப் பலர் வாழுகிறார்

உயிர் காக்க உணவே இன்றி
உடல் காக்க உடையும் இன்றி
உறவேதும் உதவிட இன்றி
உணர்வு கொன்று உயிர் காவ
உள்ளம் வென்று உணர்வு காக்கும்
உருக்குலைந்த உண்மை மாந்தர்

இத்தனையும் இதயம் கொண்டு
இன்னுயிரில் இரக்கம் கொண்டு
அறிவு கொண்டு ஆசை வென்று
இறைமை கண்டு இரக்கம் கொண்டு
எளிமை கொண்டு எதுவும் செய்தால்
வானம் என்றும் நம் வசப்படும்

சோதனைச்சாலை - கவிதை



எப்போதும் நான் அப்படியே இருக்கிறேன்

மற்றவரைப் புரியமுடியாது
உற்றவரின் துயரம் அறியாது
கற்பனை வானில் பறந்துகொண்டே
கடிவாளமற்ற சிந்தனையோடு


என்னைக் காயப்படுத்துவோரை
கழற்றி எறிய முடியாதவளாய்
மீண்டும் மீண்டும் மனதில்
விழுப்புண் தாங்கியபடி விழுங்க முடியாதைதை எல்லாம்
எப்படியோ விழுங்கியபடி .........

எப்படி மீண்டு வருவேன் நான்

பீனிக்ஸ் பறவையாய் மீண்டும் எழ
மனம் ஆசை கொள்கின்றது ஆனாலும்
சூழ எரிந்து கொண்டிருக்கும்
நெருப்பின் வீரியத்தில்
கைகொடுக்க யாருமேயற்று
காணும் இடம் எங்கும் தீ நாக்குச் சூழ
செய்வதறியாது தவிக்கிறேன் நான்

கண்ணீரில் கலந்த கல்வாரி - கவிதை

 


உயிரின் ஓலம் ஊரெங்கும் கேட்கின்றது
ஏமாற்றங்கள் சுமந்ததான மனவெளியில்
ஒப்பாரிப் பாடலாய் ஓயாது கேட்கிறது

மீண்டிட முடியாத மரணக் கிடங்கினுள்
தெரிந்தே நான் இறங்கி நிற்கிறேன்
தெளிவற்ற மனதின் தேய்மானத்தில்
தெரிவதெல்லாம் கண்ணில் படாது
தேய்ந்துகொண்டே போகின்றது

விந்தை தெரியாது வீழ்ந்து மாழும்
விட்டில் பூச்சியாய் என் மனம்
வெடித்துச் சிதறும் விதைகளாய்
வில்லங்கமாய் மண் பற்றியபடி
வேறு வழியேயின்றி தினமும்
முளைவிடும் வேர்களை ஊன்றி
எழுவதர்க்காய் எத்தனிக்கின்றது

கலங்கிப் போன காலத்தின் விதியோ
கைகொட்டிச் சிரித்தபடி என் முன்னே
கண்கட்டு வித்தையில் கைதேர்ந்து
காவலிருக்கும் பொழுதுகளை எல்லாம்
கடிவாளமிடாது கண்டுகளிப்பதர்க்காய்
காலநேரம் பார்த்தபடி எப்போதும்
கண் முன்னே காவலிருக்கிறது

என்ன சொல்லி என்ன .... என்றோ
எழுதிவிட்ட விதியின் வலிந்த இழுப்பில்
என்னையறியாது நானும் தான்
வீழ்ந்தே கிடக்கிறேன் எழவே முடியாது
யாரும் மீட்டுவிடவே முடியாத
கற்கள் மூடிய பாறைகள் நடுவே

ஆதாரமற்ற அன்பு - கவிதை


 

ஆதாரமற்றதான அன்பின் படிகளில்
காலம் அடம்பிடித்து நகர்கிறது

பகிர்தலற்ற அன்பு என்றும்
மற்றவரைத் துன்புறுத்தி
மனதின் மகிழ்வைக் குலைத்து
மனதெங்கும் மட்டற்ற கேள்விகளை
மயக்கத்துடன் கேட்டு நிற்கும்


வியாபித்திருக்கும் எண்ணங்களின்
எழுத்துக்களற்ற வரிகள்
எதிர்பாத்திருக்கும் தருணங்களில்
ஏமாற்றத்தையும் அதனூடே
எதிர்வுகூற முடியா உணர்வுகளை
எங்கும் விதைத்துவிடுகின்றன
தீர்மானித்தவை அதன் ஒழுங்கில்
திடமற்று நகர்கையில்
ஆற்ற முடியாததாய் மனதை
அதிகமாய்த் தகிக்க வைத்து
தாண்டவத்தோடு தினமும்
தன்மையைத் தகர்க்கின்றன

தள்ளாடும் தவறுகளின் தாக்கத்தில்
சிறு சிறு சொல்லாடல்கள் கூட
சிக்கல்களில் பின்னப்பட்ட நூலாய்ச்
சத்தமிழந்த எதிரியின் ஆயுதமாக
சிந்தை குலைத்துச் செருக்குடைத்துச்
சினம் கொள்ள வைக்கின்றன

ஏன் தான் எனும் கேள்வி என்னுள்
எல்லாம் இருந்தும் எதுவுமற்றதான
எதிர்வினையின் ஈர்ப்பில்
எதிர்மறை எண்ணங்களை
எதிர்ப்பின்றிக் களைந்து என்னால்
எழுந்துவர முடியாதா என்று மனம்
ஏங்கியபடியே நகர்கிறது

Thursday 11 June 2015

ஒவ்வாமை - கவிதை





ஓய்ந்துபோய் விட்டது மனது

ஒவ்வொரு நாளின் காத்திருப்புக்களும்
முடிவில் எஞ்சிடும் ஏமாற்றமும்
எதிர்பார்த்து இழந்த ஏக்கமுமாய்
எல்லாமுமாய் ஒன்றாகி
சூறைக் காற்றொடு மழையடித்து
சுத்தமாய் ஓய்ந்து போனதுபோல்
எதுவுமற்று இருக்கிறது மனது

ஆசைகளும் கனவுகளும்
ஆழக்கடலின் பேரலையாய்
ஆழ்மனதைப் புரட்டிப் போட்டு
சூறாவளியாய் சுழன்றடித்து
கரைகடந்து மேலும் கீழுமாய்
காணுமிடமெல்லாம் கரகமாடி
காற்றின் வேகம் கடந்து போனதும்
வேரறுந்து வீழ்ந்த மரமாய்
வெளியாக்கிக் கிடக்கிறது

ஓய்ந்த மனதின் ஓசை அறுந்து
ஓங்காரத்தின் நாதமாய் ..........
எதுவும் அசைத்திட முடியா
அடங்கல்களுடன் ஆழ்மனம்
எதுவும் தாங்கி எல்லாம் தாங்க
எஞ்சியவை எப்படியும் நடக்கட்டும்
என்னும் ஏகோபித்த முடிவாய்
எதிர்ப்பதற்கு எதுவுமேயற்று
எதிர்பார்ப்பின்றிக் கிடக்கின்றது

நேசமாய் - கவிதை

Nivetha Uthayan's photo.


நீர் சுமந்த காற்று நேசமாய் உடல் தழுவ
குளிர்ந்து மனம் குதூகலிக்கிறது

மனதின் மட்டற்ற மகிழ்வு
திறந்த பறவைக் கூண்டாய்
விரிந்து பறவையாய் சிறகடிக்க
வானவெளியின் மேகப்பொதிகளிடை
புதைந்தும் புதையாது பறந்தோடிப் போகிறேன்

எண்ணற்ற கற்பனைக் குவியல்களில்
எண்ணங்கள் சிதறிப் பறந்திட
சூரியக் கதிர்களின் தெறிப்பில் மனம்
வானவில்லின் வண்ணங்கள் கண்டு
வரிசையாய் சதிராடி ஒளிர்கின்றன

மனதின் பசுமை மகரந்தங்களாய் நிறைய
காண்பதெல்லாம் கனவுக்குவியல்களாய்
கண்சிமிட்டிக் கடந்து போகையில்
நீயும் நானும் மட்டுமேயான வெளியில்
நிலவின் பூரிப்பில் நின்மதி கொள்கிறேன்

Monday 8 June 2015

வெறுப்பு - கவிதை

 https://encrypted-tbn0.gstatic.com/images?q=tbn:ANd9GcSuVtkM2hV_MTX_GkbJxtHvHxj2CcSRRa5NwbnFzDqm-Xd0QMnR
ஆத்மாவின் அல்லோலகல்லோலங்கள் 
என்றும் அடங்கிடப்போவதில்லை
ஆதரவே அற்றதான அன்பில்
அடிமுடி தேடியும் எதுவுமே
அகப்படப் போவதுமில்லை

என் மீதான உச்சபச்ச வெறுப்பில்
உள்ளமெங்கும் வியாபித்திருக்கும்
உன்மத்தங்களை உடைத்தெறிந்து
உயிர் கொல்லும் ஊனங்களை எல்லாம்
உயிரற்ரதாக்கவே மனம் ஆசை கொள்கிறது

உறங்கா மனதில் எந்நாளும் எழும்
எண்ணிலடங்கா எதிர்ப்பார்ப்புக்களை
எதுவுமற்றதான எதிர்வினைகளால்
எள்ளளவேனும் இடைவெளியின்றி
ஏமாற்றம் எப்போதும் நிரப்பிவிட
எள்ளல்களின் எதிரொலியில் மனம்
எதுவுமற்றதாகி விடுகின்றது

காரணகாரியங்கள் என்றைக்குமாய்
காத்திருக்கவே போவதில்லை 
காலங்கள் கதியில் மாறினும்
கோலத்தில் குறுக்காய்க் கனவெழுதி
கொடுந்துயர் கொண்டு கணக்கெழுத 
கண்விழித்தே நான் காணும் கனவில்
கணக்கில்லா கண்டுபிடிப்புக்களும்
கண்முன்னாலே காணாமற் போகின்றன 

கார்காலக் கடுமை கருங்குளிராகி 
குற்றும் கூர்கள் கண்முன்னேயாகிலும் 
கனவும் கற்பனையும் காத்திருப்பும்
கணப்பொழுதும் நிலைபெயராது 
கந்தகக் காற்றாய் ஆனபின்னும்
காவலற்ற மனக்குரங்கின் கதிர்வீச்சில் 
கருகும் காலங்களின் அந்தரிப்பைக்
கணக்கிடவே எப்போதும் முடிவதில்லை


உயிரிழையின் உன்னதம் - கவிதை




கற்பக விருட்சமாய் உன்மேல்
வியாபிக்கின்றது அன்பு
உணர்ந்தும் உணர மறுப்பவனாய்
ஒற்றைச் சொல்லில்
உணர்விழக்க வைக்கிறாய் நீ

கண்டுணர்ந்த பின்னும்
காண மறுக்கும் உயிரிழையின்
உன்னதம் பொசுக்கி நிற்க
சொற்பிறழ்வின் சுமை கனக்க
காவ முடியா மனதை கல்லாக்கி
காலம் முழுதும் உன்னுடனாய்
காவலிருக்க முயல்கிறேன்

நேசமறுத்து நினைவகல
நிந்திக்கும் மனது கண்டும்
நீண்டதூரம் உனக்காக நடக்கையில்
நிர்க்கதியாய் நிற்கவைத்து எனை
நெகிழ்வற்று நிதம் நீ நிற்கையில்
நஞ்சாகிப்போன நாட்களின்
நகராத பொழுதுகளின் நினைவுகளில்
நாளும் பொழுதும் நான் பொசுங்கும்
நரகத்தின் வாசல் மூடி என்
நித்தியக் கடனை அடைப்பவனாய்
நீயே எனைக் கருணைக்கொலை செய்துவிடு

Sunday 7 June 2015

நினைவுகளின் ஊர்வலங்கள் - கவிதை










நினைவுகளின் ஊர்வலங்களில் நிகழ்காலம்
இல்லாமலே போய்விடுகிறது
கனவுகளின் காந்தத்தில்
கண்ணில் தெரியும் உண்மைகளும்
காணாமலே போகின்றன

நிகழ்காலக் கவிதையாய்
நித்தம் காணும் காட்சிகள்
நிட்சயமற்றதாய் மாற
எதிர்காலத்தின் இயங்குநிலைகள் எல்லாம்
எதிர்ப்பின் பாற்பட்டு
எள்ளளவும் ஏற்றமடையாது எதிர்வீச்சின் கதிர்களில்
எச்சங்களாய் விடுகின்றன

மனக்காட்டின் அடர்த்தியில்
மிடுக்கற்றுப் போகும் மின்மினிப்
பூச்சிகளாய் மனதும் மயக்குற்று
மெல்லிழையாய் மேனிதழுவும்
வசந்தமாய் அப்பப்போ வந்துபோகும்
நினைவுக் குதிரின் சிதறல்களில்
நாளையின் நடைபெறா நெஞ்சத்து
நரக நிகழ்வுகளும் நாட்காட்டியாய்
நினைவுகூரப்படுகையில்
முக்காலமும் உணரா மூலவேராய்
மீளாநினைவுகளை மீட்டிசைக்கப் பார்க்கிறேன்

Wednesday 3 June 2015

ஊமைக் காயங்கள் - கவிதை

 Nivetha Uthayan's photo.

மனத்தின் அடங்கா மாயைகள்
வாழ்வின் நாட்கள் எங்கும்
மர்மங்கள் புரிந்திட முடியாது
மயக்கம் தந்தபடி இருக்கின்றன

உறவின் உயிர் நாடியை
உலுப்பிப் பார்ப்பினும்
உண்மை உணரமுடியாதபடி
ஊமைக் காயங்களை
காலம் முழுவதும் விதைப்பினும்
உணர்தலுக்கான வலுவை
மழுங்கச் செய்கின்றது மனது

துணிவின் அப்பாற்பட்டு
துரோகத்தின் விளைவின்
அறுவடைகள் புரியமறுக்க
துவளும் உயிரின் வதையை
யாரிடம் போய் எப்படிக் கூறினும்
தவறி விழும் புரிதலின் மர்மம்
தாங்கொணா விளைவின் நீளலாகிறது

காரணங்கள் கொண்ட காரணமற்ற
சீண்டல்களும் சிதறல்களும்
சிறுகச் சிறுக மனம் சிதைக்க
செயலிழக்க ஆரம்பிக்கும் செல்லாய்
செய்வதற்றுச் சாகும் மனம்
சிதம்பிப்போகும் புண்ணின் காயமாய்
சிறுகச் சிறுக சீரற்றதாக
மாறிக்கொண்டே இருக்கின்றது

மாற்றம் கொள் மனதே இனியும்
மடிப்பிச்சை கேட்டு நீ மானமிழந்து
மங்கும் உன் நிலை உயர
மயக்கம் கொள்ளாதிரு மனமே
மானிட வாழ்வின் மகுடங்கள் இன்னும்
உனக்கானதாக உயிர்ப்புடன் காத்திருக்க
ஊனை உருக்கி நீயும் உயிர்வதை கொண்டு
ஊனமாகி மடிந்திடாது பெண்ணே
மடமாந்தர் முன்னே மிடுக்கோடிரு

ஏகாந்த விடியல் தேடி

 Nivetha Uthayan's photo.

சாய்ந்துகொள்ள எனக்குத் தோள் வேண்டும்

சாகசம் அற்றதாய் சூதுக்கள் வெல்வதாய்
சுதந்திரமாய்ச் சாய்ந்துகொள்ள
சொந்தம் கொள்வதாய் ஒரு தோள் வேண்டும்

நேர்மை கொண்டதாய் நெருப்பாய் இருந்து
நட்பாய் எனக்கான நம்பிக்கை கொள்ள
நிட்சயமானதாய் ஒரு தோள் வேண்டும்

நெஞ்சம் முழுதும் நேசத்தால் நிரப்ப
நெகிழ்வாய் என்தலை கோதி அணைக்க
நிமிர்வாய் ஒரு தோள் வேண்டும்

பழுதற்றதாய் மனம் பகிர்வதாய்
பாசம் கொண்டு நேசம் சொல்ல
பக்குவமாய் ஒரு தோள் வேண்டும்

எண்ணற்றதாய் எதிர்பார்ப்பற்றதாய்
எண்ணம் வென்று எதிவு கூறிட
எனக்காகவே ஒரு தோள் வேண்டும்

வேடமற்றதாய் வினைகளற்றதாய்
விருப்புடன் என் உறவு கொள்வதாய்
விலங்கற்ற ஒரு தோள் வேண்டும்

சரிநிகராய் மனம் படித்து சாந்தம் கொள்ளவைத்து
சலனங்கள் அறுத்திட சமதையாய் மதித்திட
சஞ்சலம் அற்றதாய் சரிநிகர் தோள் வேண்டும்

நானாய் எனக்காய் என்னுள் எரியும்
தீயின் தகிப்பை தன்னதாக்க
தாயாய் எனக்கொரு தோள் வேண்டும்
எப்போதும் எதிர்ப்பின்றிச் சாய்ந்துகொள்ள
என்னோடு எனக்காகத் தோள் வேண்டும்

ஓட்டமுடியாத சிறகு - கவிதை

Nivetha Uthayan's photo.

ஒவ்வொருதடவையும் உன்னால் உதிர்க்கப்படும்
என் சிறகுகளை நானே தேடி எடுத்து
ஒட்டவைக்கப் பார்க்கிறேன்
அத்தனை தடவையும் அவை
ஓட்டமுடியாது உதிர்ந்துகொண்டே இருக்கின்றன

கற்பனையின் கண்காணாத தேசத்தின் காற்றில்
கலைக்கப்பட்டுக்கொண்டிருக்கும் மனதின்
நிரவ முடியாத பள்ளங்களின் பகுதி
எப்போதும் அசைக்கமுடியாத நம்பிக்கை கொண்டு
இறுதிநேர வாக்கெடுப்புக்காகக் காத்துக்கொண்டிருக்க
எவ்வித நிர்ப்பந்தங்களுமின்றி நீயோ
எதிர்வினை புரிந்துகொண்டே இருக்கிறாய்

கண்முன்னே ஆடும் கண்ணாம்மூச்சி விளையாட்டில்
கண்கட்டி வித்தைக்கான தயார்படுத்தல்களுடன் நீ
கணக்கற்றுக் காலங்களை வகுத்தபடி இருக்க
காரணமறியாது நானும் எப்போதும்போல்
கண்களின் கரைதல்களுடன் காணாமற்போகும்
கனதியான நினைவுகளின் தொகுப்பை
கூடைகூடையாய்ச் சுமந்துகொண்டு
கடக்கமுடியாக் கனவுகளைக் கடக்கமுயல்கிறேன்

நாளும் பொழுதும் எப்போதும் உனக்கேயானதான
உயிர்ப்பில்லாச் சிந்தனையோடு என்மேல்
உருவமில்லாக் கற்களை எறிந்தபடி இருக்கிறாய்
எத்தனைதான் தாங்கும் மனம் ஏதிலியாய்
என்றோ ஓர்நாள் இதயம் இரக்கம் துறந்து
இல்லாப் பொருளின் உண்மை உணர்ந்தால்
இல்லாதொளிந்திடும் இத்தனை இடர்களும்
அப்போது எல்லாம் இருந்தும் இல்லாதவனாய்
என்றும் மீளா துயர் சுமந்து நீ காத்திருக்க
எல்லை கடந்து நான் இல்லாதிருந்திடுவேன்

மாயமான் - கவிதை

 Nivetha Uthayan's photo.

மாயமானின் தோற்றம் கண்டு
மகிழ்வுகொண்டிருந்தேன் நான்

உண்மைக்கும் கற்பனைக்குமான
இடைவெளி புரியாது
இறுமாப்பு மட்டுமே வாழ்வாகி
எல்லாம் மறந்திருந்தேன்


நொண்டிக் குதிரையில் பூட்டிய
வண்டிலில் இழுப்புக்கெல்லாம்
வளைந்தும் நெளிந்தும் கோணலாயும்
செல்லும் வழியெல்லாம்
விபரமற்று மகிழ்ந்திருந்தேன்

வாழ்வு எனக்கு இப்போது வந்ததென
வண்ணக்கனவுகள் நாளும் கண்டு
ஒவ்வொரு கணமும் கற்பனையில்
ஒராயிரம் ஆசைகள் தேங்கிட
காலத்தின் கடைசிவரை கணக்கிட்டு
காயம் கசிந்துருக நேசம் கொண்டேன்

நித்தியமானது நிரந்தரம் அதுவென்று
நர்த்தனம் ஆடும் மனது கொண்டு
நாளும் பொழுதும் நகரும் கணமெல்லாம்
ஓய்ந்துபோகும் காலத்தின்
ஒவ்வா நிலையின் கணக்கெடுப்பில்
அவ்வாழ்வு கண்டு களித்திருந்தேன்

ஆனாலும் ஏன் இப்படியானது
அடிமனத்தின் வேரின் விளிம்புவரை
அசைத்து அசைத்து அறுத்து வேருடன்
ஆலமரத்தின் ஆட்டம் குலைத்து
அற்ப மனதின் ஓசைகள் வெல்ல
ஆணவம் கொண்டே சிரிக்கிறது

வலிந்த விதியின் வண்ணங்கள்
ஏற்கும் மனம் எத்தனைதான்
ஆர்ப்பரித்து அலைகளாய் எழும்
அத்தனையும் அடங்கி ஒடுங்கி
அமைதி எப்போ கொண்டுவிடும்
அந்த நாளின் வரவிற்காய்
ஆறா மனதின் வடுக்கள் சுமந்து
அமைதியற்று அலையும் மனதை
ஆற்றுப்படுத்தப் பார்க்கிறேன்

ஆழ்கடல் மனது

Nivetha Uthayan's photo.

ஆழ்கடலின் அலை அயத்தமானது

அது புரியாது நானும்
அதன் அழகில் மயங்கி
அலையின் சீற்றம் புரியாது
கடலின் ஆழம் தெரியாது
கரையின் ஓரமாய் நின்று
ஆர்ப்பரிக்கும் அலை கண்டு
அகமகிழ்ந்தே காத்திருந்தேன்


அலை உயந்து பின் தணிந்தது
சுழன்ற காற்றின் திசையெங்கும்
சுழற்றி வாரி நீரை இறைத்தது
என்மேல் தெறித்து விழுந்த
நீர்த்துளிகள் மேனி நனைக்க
அலையின் மகிழ்வில் நானும்
ஆர்ப்பரித்து நின்றேன்

எழுந்தது எதிரியாய்ப் பேரலை
என் அங்கம் அத்தனையும் சுருட்டி
ஆத்மாவின் மூச்சை நிறுத்தி
சிந்தனை எல்லாம் அழித்து
சிகரங்கள் எல்லாம் தொட்டவளை
தன்னை நம்பியே நின்றவளை
ஆழ்கடலின் இருண்ட அறையில்
எழுந்திடமுடியாப் பாறைகள் நடுவே
எதிரியாய்த் தள்ளி எக்காளமிட்டது

என்ன செய்வேன் நான்
எழுந்துவர முடியவில்லை
எள்ளளவும் இரக்கமில்லை
எதுபற்றி எழுந்திடவும் எதுவுமில்லை
நம்பிக்கை நகர்ந்துபோக
நானாய் எனக்காய்த் துடித்து
நெஞ்சக் கூண்டில் நீர் நிரம்ப
மூச்சுக் குழல் வெடித்து முகமளுத்த
முடியாத போதினில் வழியின்றி
மூச்சடங்கிப் போகிறேன் முடிவின்றி

ஆட்டம் காணும் அச்சாணி

Nivetha Uthayan's photo.

மனதினில் தோன்றும்
மாயைகள் எல்லாம்
முறியாத முட்களாகி
சிந்தை முழுதும் சிதைத்து
முந்தை வினை முழுதும்
முடிவற்றதாக்கித் தினம்
மதி கொன்று விதி வெல்ல
வேளை பார்த்திருக்கிறது


அன்பென்னும் அச்சாணி
ஆட்டம் கண்டபடி என்றும்
அச்சுறுத்தலைத் தந்து
அகத்தின் அறம் தொலைய
அல்லல் மட்டும் என்றும்
அறிதியிடா நிலமாய்
ஆணவத்தின் ஏணியில்
எப்போதும் அமர்ந்தபடி

எல்லைகள் அற்றதான
எண்ணங்கள் விதையாகி
ஏகமாய் எங்கும் பரவி
எதிர்மறை விருட்சங்களை
எங்கெங்கோ நாட்டி
ஏக்கமுறச் செய்கிறதாய்
எக்காளமிட்டபடி தினம்
எதிர்வலம் வருகின்றன

நீக்கமற நிறைந்திருக்கும்
நிகழ்வுகளில் நிழல்கள்
நாற்ற மனம் துறந்து
நேர்வழி சென்றிடினும்
நூற்பதற்கான நிலையற்று
நகர்வதற்காய்த் தினம்
நிறம் மங்கியதான நிழலில்
நிதமும் காத்திருக்கின்றன

எண்ணக் குவியல்



என் மன  வெளிகளிடையே 
என் நலிந்த நம்பிக்கைகள்
எனைப் பார்த்து ஏளனம் செய்தபடி 
எண்ணிக்கையற்று நகர்கின்றன

யாருமற்ற வனாந்தரத்தில்
நான் மட்டுமே எதிரியுடன்
தனித்திருப்பதான எண்ணம்
எல்லைகளற்று எனை நிரப்பி
என்றுமில்லாததாய் எனை அழுத்த
எதிர்பார்ப்புக்கள் எதுவுமின்றி
ஏதிலியாய் நான் மட்டும்
எண்ணக் குவியலின் நடுவே
எக்குத்தப்பாய் எனை மறந்து
எழுவதர்க்காய் எத்தனிக்கிறேன்

கட்டப்பட்ட கைகளும் கால்களும்
கருத்துகள் இன்றியே சிதைய
காலாவதியாகும் கோபமடக்கி 
கரைகின்ற கைகளின் கனவடக்கி 
கோலங்கள் காணாமற்போகும் நாளின்
கடைசித் துளிகளின் கதவடைக்கும்
கண்ணீரின் கனமடக்கி  நலியும் 
நம்பிக்கைகளில் பின்னிய கூட்டை
நெகிழ்தலின்றி நகர்த்துவதர்க்காய்
நெருப்பின் மேலே நடக்கின்றேன்