Wednesday 20 May 2015

இடர்கள் கடந்தபின்னும்இடர்கள் கடந்தபின்னும்
இயலாமை என்னும் விருட்சம்
என் இயல்பை நிறுத்துவதாய்
பிடிப்பற்று மனம் எங்கோ
பேரோசையுடன் அலைகிறது


அத்தனையும் கண்முன்னே ஆயினும்
அருமை தெரியாத அலைபாய்தலில்
அடுத்தவரின் அகவழி அறியார் அறிவிலர்
ஆசைகொண்டு அலைந்திடுவர்
இங்கொன்றும் அங்கொன்றும்
எங்குமாய் எதற்குமாய்
எப்போதும் இருந்ததில்லை

புதியன நாடி புதுமையில் உழன்று
புரையோடிப் போகிறார் புத்தியற்று
எப்படியாயினும் எப்போதோ
என்னிடமும் விடைபெறும்
எல்லா எதிர்ப்பும் எதிர்பார்ப்பும்
அப்போது அந்த விடுதலைக்காய்
ஆவலற்றுக் காத்திருக்க
ஆழ்மனம் ஆவல் கொள்கிறது

நினைவழியா நீண்ட காலத்தின் - கவிதை


நினைவழியா நீண்ட காலத்தின்
நெடும் பயணத்தின் வழியே
மீண்டுமொரு முறை ..........

அப்போது நீ எனக்காக இருந்தாய்
என் எண்ணங்களை உனதாக்கி
எப்போதும் நெய்தபடி இருந்தாய்
என் நினைவுக்குள் நீயே நினைவாய்
எண்ணங்களை எல்லாம் சிறைப்பிடித்து
ஏதுமற்றவளாக்கி எனைத் தினம்
ஏக்கம் கொள்ள வைத்தாய்


நான் மரமாக நீ காற்றாகி மனதின்வழி
நாதங்கள் கேட்க வைத்தாய்
நான் நிலமாக நீ நீராகி நிதம் எனை
நெக்குருகியே நெகிழவைத்தாய்
காற்றின் ஒலியாகி கார்கால மழையாகி
காணும் இடமெங்கும் என்மனவீட்டில்
எங்கும் உன் ஒளியாக ஒளிரவைத்தாய்

இன்றும் நான் நானாகவே இருக்கிறேன்
நீயோ ஒலிக்காதவனாய் ஒளியற்றவனாய்
எதிர்வினை காட்டியே எனைவிட்டு
எங்கெங்கோ எட்டாதவனாய் செல்கையில்
ஒளியிழந்த உன்மனதின் அறியமுடியாத
ஆத்மாவின் அழகைக் காணமுடியாது
நீ தூங்கும் நேரங்களிலும் உன் நினைவு சுமந்து
தூங்கமுடியாது நானும் காத்திருக்கிறேன்
கணக்கில் எழுதமுடியாக் குறிப்புக்களோடும்
விழுதுகள் அற்ற ஆலமரத்தின் வேர்களில்
இன்றும் தொங்குவதற்காய் ஆசைகொண்டபடி

Thursday 7 May 2015

எனக்குப் பிரியமான உன்னிடம் - கவிதை


எனக்குப் பிரியமான உன்னிடம்
எனக்காக எதுவுமே
எப்போதும் இருந்ததில்லை
எல்லைகளற்று என் வெளிகள்
உனக்காகக் காத்திருக்கையிலும்
பற்றேதும் அற்றவனாய்
என்முன்னே நீ

உருவமற்ற சிந்தனைகள்
உள்வெளியெங்கிலும் உன்னுடனே
ஊசலாடும் உறவின் விளிம்புகளில்
ஊமைக்காயங்களுடன் நான்
உன் சிறு பதில்தரும் பசுமைக்காக
உறக்கமிழந்து காத்திருக்கையிலும்
எதுவுமேயற்று எப்போதும் போல் நீ

நீண்டு கிடக்கும் நெடுங்காலங்களின்
நெய்யமுடியாத காலக் கசிவை
நகர்த்தமுடியாத முடிச்சுக்களோடு
நகர்த்தி நிமிர்த்தும் முயற்சியில்
நிரந்தரமாய் நிந்திக்கும் வேளையும்
நேற்றும் இன்றும் நாளையுமாகி
நம்பிக்கைதரும் நியதிகளேயற்று
நகர்ந்துகொண்டிருக்கிறாய் என்னுடன் நீ

விட்டு விலகிடமுடியா முடிவில்
முட்கள் நடுவே நிதம் முட்டியபடி
எனைச் சுற்றிலும் எதிர்வினைகள்
எதிரும் புதிருமாய் சுழன்றாட
கூடு பாயக் காத்திருக்கும் மனம்
குற்றுயிராய் தினம் தினம்
கொடுவனத்தின் குழிநடுவே
கிடப்பதுவாய் காண்கின்றதாய்
அப்போதும் அந்தரித்து உழலும்
அல்லல் உணரா மனத்தினனாய்
அசையா மனதுகொண்டு அசைகிறாய் நீ
மனதெங்கும் - கவிதைமனதெங்கும் எத்தனையோ
மாயங்கள் அலைகளாய்
எண்ணத்தில் தோன்றுவது
எழுத்தில் வடித்திட முடியாததாய்

காணும் காட்சிகள்
கண்விட்டுப் போவதுபோல்
நினைவுகளின் நீட்சிகள்
தொடராதிருந்தால்
எத்தனை இன்பம் மனம்
எப்போதும் கொண்டிடும்

 காலத்தின் பதிவுகள்
கனவின் கோலங்களாய்
மனதில் மகிழ்வு தொலைத்து
கண்கட்டிவித்தையில்
கண் மூடும் வேளைகளில் கூட
கபடியாடுகின்றன

பகுக்க முடியாத எண்களாய்
பகிரப்படும் நாட்கள்
பம்பரமாய் சுழன்று மீண்டும்
பரிதவித்து நிற்பதுவாய்
நிமிடங்கள் நகர்த்தும் நாட்களாய்
நெடுந்தூரம் செல்கின்றன

தவிர்க்கவும் மறுக்கவும்
மறக்கவும் முடியாததான
பிணைப்பின் வலிமையில்
மறுதலிக்கும் மனதின் செயல்
எத்தனை கடிவாளமிடினும்
எதுவுமற்றதாய் ஆகிவிடுகையில்
எப்போதும் போல் என்னிலை
ஏக்கங்களை மட்டும்
எதிர்க்க முடியாது சுமந்தபடி

மனவறை - கவிதை
கனதிகள் அற்ற
காகிதக் கப்பலாய் மாறி
கவலைகள் அற்று நான்
கண்வளர வேண்டும்

நினைவின் விளிம்புவரை
நிழல்தரும் அனைத்தும்
நிர்மூலமாக்குவதாய்
நெருடலாய் நிதம் நிகழும்
நெருக்குதல்கள் நீங்க
நிழற்குடையின் கீழ் நான்
நீள்துயில் கொள்ள வேண்டும்

மனவறையின் பக்கம்
மண்டிய படி கிடக்கும்
மூச்சுப் புகமுடியாப் புதரின்
முடிவற்ற மீதங்களை
மட்டுப்படாத காலத்தால்
கருணைக் கொலை செய்திட
மனம் ஆர்ப்பரிக்கிறது

ஆயினும் அறுதியிட முடியா
ஆழத்தில் கால்பதித்து
அகக்கதவை எப்போதும்
அறைந்து சாற்ற முடியாத
அகத்தின் அறம் இழந்து
அளக்கமுடியா ஆளத்தை
அடிமுடி தேடியபடியே
அல்லலுடன் கடக்கிறேன்