Tuesday 29 December 2020

நான் வசந்தன் - சிறுகதை அம்மாவின் அன்பான அழைப்பும் துயில் எழுப்பலும் எதுவும் இல்லை. தங்கையின் அலட்டல் ஆர்ப்பாட்டம் இல்லை. அப்பாவின் கம்பீரக் குரல் இல்லை. எனக்குப் பிடித்த இன்னும் பலதும் இங்கில்லைத்தான். ஆனாலும் அவர்கள் எல்லோருடனும் இருக்கும்போது இல்லாத ஒருவித நிம்மதியும் அதனூடே தெரியும்  வெறுமையுமே இப்ப எனக்கு இருந்தாலும் சுவாசக் காற்றில் எதோ ஒரு சுகத்தை கவலையினூடும் என்னால் உணர முடியிது.

நான் இரண்டு நாட்களாக என் அறையில் ஒருவித இலயிப்போடு சுருண்டு படுத்திருக்கிறேன். ஏழாம் மாடியின் அறை ஒன்றில் திரைச்சீலையற்ற யன்னலினூடே தெரியும் வானத்தையும் அப்பப்போ கடந்து போகும் மேகங்களையும் சில பறவைகளையும் கூட பல காலத்துக்குப் பின்னர் இப்பிடிப் படுத்தபடியே பார்த்து இரசிக்க முடியும் என்று ஒரு இரு மாதங்களுக்கு முன்புவரை நான் கனவில் கூட எண்ணியதில்லை.

அம்மா அப்பா தங்கை எல்லோரையும் விட்டுவிட்டு இந்த அறைக்கு நான் வந்து ஒரு வாரம் தான் ஆகிறது. வீட்டில் இடம் இல்லாமலோ அல்லது அம்மா அப்பாவோட பிரச்சனை என்றோ நான் வீட்டை விட்டு வரவில்லை. எத்தினை நாட்களுக்குத்தான் அவைக்கு என் விடயம் தெரிஞ்சிடுமோ தெரிஞ்சிடுமோ என்று பயந்து பயந்து இருக்கிறது. மற்றவைக்காக என் உணர்வுகளையும் மகிழ்ச்சியையும் ஏன் நான் விட்டுட்டு இருக்கோணும்.

சிலநேரம் அம்மாவோ அப்பாவோ என் பிரச்சனையைச் சொன்னால் விளங்கிக்கொண்டிருப்பினம் தான். ஆனால் சொன்ன பிறகு அவை அதிர்ச்சியில ஏதும் சொல்லிவிட்டால் என்னால அதைத் தாங்கேலாமல் இருந்திருக்கும். அதால நான் எடுத்த முடிவு சரிதான் என்று என் மனம் சொன்னதை ஏற்றுக்கொண்டுவிட்டேன்.

நான் வசந்தன். வயது 24. நல்ல உயரமான ஆண் அழகன். என்னைப் பற்றி  நானே பீத்திறன் என்று நீங்கள் நினைக்கக் கூடாது. என்னோட கதைக்க ஆசைப்படும் பெண்களை வரிசையில் நிக்கவைக்கலாம். நான் கேட்காட்டிக் கூட பெண்கள் விடாமல் என்னைத் துரத்தினால் நான் அழகன் தானே. ஆறடிக்கு மேல் இருப்பேன். தலை நிறைந்த அடர் முடி. கருப்பும் இல்லாமல் மா நிறமும் இல்லாமல் நல்ல ஒரு நிறம் எனக்கு. அம்மாவின் நிறம் தான் நீ என்று என் தங்கை குறைப்பட்டுக்கொள்வாள். அதற்குக்  காரணமும் இல்லாமல் இல்லை.

பெண் பிள்ளைகள் வெள்ளையாக இருந்தால் தானே எங்கள் பெடியளுக்குப் பிடிக்கும். என் தங்கையோ அப்பாவைப் போல கருமை நிறம். அதற்காக அவளுக்கு என்னிலோ எனக்கு அவளிலோ எள்ளளவும் எரிச்சலோ கோபமோ இருந்ததில்லை. என்னிலும் பார்க்க என்றுதான் சொல்லமுடியும்…. அவளுக்கு என்னில் அளவுகடந்த பாசம். ஒருநாள் கூட பகிடிக்குத் தன்னும் நான் அவளின் நிறம்பற்றிக் கதைத்தது கிடையாது. அம்மாதான் திவாவுக்கு உன்ர நிறம் வந்து உனக்கு அப்பாவின்ர  நிறம் வந்திருக்கலாம். ஆம்பிளையள் கறுப்பாய் இருக்கிறதுதான் களை என்று  தங்கை இல்லாத நேரம் என்னிடம் தன் ஆதங்கத்தைக் கொட்டும்போது எனக்கும் வருத்தமாகத்தான் இருக்கும். இருந்தாலும் அதை மறைத்துக்கொண்டு என்னம்மா கதைக்கிறீங்கள். தங்கச்சி என்னிலும் எவ்வளவு வடிவு  என்பேன். அம்மா ஒரு சிரிப்புச் சிரித்துவிட்டு நீ தங்கச்சியை விட்டுக்கொடுக்க மாட்டாய் என்பார்.

எனக்கு சின்னனா நினைவு தெரிஞ்ச நாள்முதல் பெட்டையள் எண்டாலே சரியான விருப்பம். என் அயலட்டையில் ஆறேழு சின்னன்சிறிசுகள் இருக்கினம் தான். மீனாவோடையும் செல்லாவோடயும் சேர்ந்து விளையாடுவதுதான் விருப்பம் எனக்கு. அதிலும் அந்த மீனாவோடையே எப்போதும் இருக்கவேணும்போல, கதைக்கவேணும் போல என் உள்ளக்கிடக்கையைச் சொல்லவேணும்போல ஆசையா இருக்கும். ஆனா அம்மா ஏன்ரா பெட்டையளுக்குப் பின்னால திரியிறாய் என்று அவளவைக்கு முன்னாலேயே ஏசேக்குள்ள அளவேணும்போல இருக்க கண்ணெல்லாம் குளமாயிடும். பொம்பிளைப்பிள்ளை போல அழாதை என்று சொன்னதும் கண்ணீரும் வெளியில வராமல் நிண்டிடும்.

பள்ளிக்கூடம் போனாலும் பெட்டையளோடயே கதைக்கவேணும்போல இருக்கும். ஆனா பெடியள் என்னை இழுத்துக்கொண்டு போவிடுவாங்கள். அதிலும் அந்தக் கரன் அடிக்கடி என்னைக் கட்டிப்பிடிச்சு கடுப்பேத்துவான். என்பாட்டில ஒரு பக்கமாய் போய் நிண்டாலும் விடான். எடேய் வாடா எண்டு என்னைப்  பந்தடிக்க கூட்டிக்கொண்டு போயிடுவான். இருந்தாலும் மார்க்கண்டு வாத்திக்கும் அம்மாவுக்கும் பயந்து விருப்பம் இல்லாமல் விளையாடிக் கொண்டிருப்பன். வாத்தி அம்மாவின் ஒன்றுவிட்ட சகோதரன். தான் தான் எனக்குப் பள்ளிகூடத்தில் காவல்போல அம்மாவைக் காணும்நேரம் ஏதும் வத்திவைப்பார். அதுக்குப் பயந்து அவதானமாக இருப்பன்.

அப்பா வெளிநாடுபோய் எங்களையும் ஸ்பொன்சரில கூப்பிட்ட பிறகு ஊரும் இல்லை அயலுமில்லாமல் நான் சரியாக் கஷ்டப்பட்டுப்போனன். இங்க வந்து மொழி படிக்கிறது கஷ்டம் எண்டா ஒரு சின்ன வீட்டுக்குள்ள அக்கம்பக்கம் எங்கடை ஆட்களும் இல்லாமல்….. அதுகும் ஒருவகையில நின்மதியாத்தான் இருந்துது.

படிக்கட்டும் பிள்ளை எண்டு அப்பா வாங்கித் தந்த கணனியாலதான் என்ர சலிப்பான சிறிய  உலகமே மாறிப்போச்சு. அதுக்காக நான் படிப்பைக் கோட்டை விடேல்லை. அப்பா தான் பாவம். இரண்டு வேலை செய்து என்னையும் தங்கையையும் டியூசனுக்கு அனுப்பி ........ நான் அவையின் நம்பிக்கையைக் கெடுக்காமல் ஒருமாதிரிப் படிச்சு யூனியும் முடிக்கப்போறன். இவ்வளவு நாளும் அரசாங்கம் படிக்கக் காசு தந்தாலும் அம்மாவோடையே மூண்டு வருடங்களும் இருந்து கொஞ்சக் காசும் மிச்சம் பிடிச்சிட்டன். அதிலேதான் இனி மாஸ்டர்ஸ் செய்யவேணும். வீட்டில இருக்கிறது பல விதத்தில நன்மை. சாப்பாடு அந்தந்த நேரத்துக்கு பாசத்தோடு வரும். ஒதுக்குற வேலை, உடுப்புத் தோய்க்கிற வேலை, அதை அயர்ண் பண்ணுற வேலை எதுமே இல்லை. ஆனா ஆம்பிளைப் பிள்ளையாய் பிறந்திட்டு நெடுக அம்மா அப்பாவின் காசில வாழக் கூடாதுதானே. 

இப்ப பகுதி நேர வேலையும் செய்துகொண்டு தான் படிக்கிறன். அந்த வேலை செய்யப் போய்த்தான் எனக்கு அகிலோட பழக்கம் ஏற்பட்டுது. நாங்கள் இருவரும் ஒரே உணவகத்தில் பகுதிநேர வேலை செய்ய ஆரம்பிக்க, என்னுடன் தானே வந்து வலியக் கதைக்கவாரம்பிச்சது அகில்தான். பார்க்கப் பார்க்கப் பாத்துக்கொண்டே இருக்கலாம் போல் அழகு. நல்ல சுருள் முடி. எகிப்து நாட்டின் ஒரு தங்க நிறமும் உயரமும் கூர்மையும் என்னை மட்டுமல்ல யாரையுமே ஈர்க்கத்தான் செய்யும். வேலை முடிந்த பின்னரும் இருவரும் எங்காவது அமர்ந்து ஏதாவது குடித்தபடி பேசவாரம்பித்தது படிப்படியாக அதிகரித்து நான் வீட்டில் வந்து இரவு தூங்கிவிட்டு காலையில் மட்டும் வீட்டில் உணவருந்துவது என்றாகி இப்ப கொஞ்ச நாட்களாக அம்மாவும் தங்கையும் கூட "நீ இப்ப முன்னை மாதிரி இல்லை" என்று சொல்லுமளவு அகிலின் நெருக்கம் அதிகமாகி ...... அப்போதுதான் அகிலுடனேயே எந்நேரமும் இருக்கவேண்டும் என்ற எண்ணமும் ஏற்பட்டுப்போனது. 

அகிலின் எண்ணம் எதுவென வடிவாத் தெரியாது நானாக வாய் திறந்து ஏதும் கேட்டு அது தப்பாகி அகிலின் நட்பையே இழந்திடுவேனோ என்ற பயமும் கூடவே இருக்க, அன்று என் அதிட்டம்... நாங்கள் பேசிக்கொண்டிருந்தபோது அகிலே என்னை அணைத்து முத்தமிட்டபோது எல்லாமே எங்கள் இருவருக்கும் புரிந்துபோனது.

அதன் பின்தான் அகிலே நாங்கள் இருவரும் ஒரு தனி வீடு எடுத்து இருந்தால் என்ன என்று கேட்டபோது குப்பென்று மனதில் ஒரு இனம்புரியாத மகிழ்ச்சியை நான் உணர்ந்தேன். அப்பவும் மனம் பயத்தில் திக் திக் என்று அடித்துக்கொண்டதுதான். தங்கை இருக்கிறாள். அம்மா என்னைத் தனியா இருக்க விடுவாவோ? அவர்களைவிட்டு வந்து இருப்பது சரிதானா? என்று ஒருவாரமாக மண்டையைப் போட்டு உருட்டியதில்த்தான் அந்த ஐடியாவை அகிலே தந்தது. ஆனாலும் அகிலைப் பிரிந்து இருப்பதிலும் பார்க்க பெற்றோரையும் தங்கையையும் பிரிந்து இருக்க முடியும் என்று மனம் அல்லாடிப் பின் வெல்ல, சரி இரண்டுபேரும் தனியாக வாழ ஆரம்பிக்கலாம் என்று முடிவெடுத்ததுதான். எனது மாஸ்டர்ஸ் படிப்பை தூரவாக ஓர் இடத்தில் தெரிவு செய்து அங்கு எனக்கு இடமும் கிடைத்தது என் நல்ல காலம்.

அழைப்பு மணி அடிக்க அகிலுக்கு  இதே வேலையாய் போச்சு என்று மனதுக்குள் திட்டியபடி கதவைத் திறக்கிறேன்.

"நான் எங்காவது போயிருந்தால் என்ன செய்வாய்? திறப்பை மறக்காமல் எடுத்துக் போ என்று எத்தனை தடவை சொன்னாலும் கேட்கமாட்டியா" 

"நான் எப்ப வருவேன் என்று நீ எனக்காகக் காத்திருப்பாய் என்று எனக்குத் தெரியுமே" என்றபடி வசந்தனை ஆசை தீர இறுக அணைக்கிறான் அகில்.

 

 

 

Wednesday 26 August 2020


  

                                  நானா ??? அவளா ???

        


என் வீட்டிலிருந்து கொஞ்சத் தூரம் சென்றால் அந்தப் பெருவெளி கண்ணுக்கு எட்டிய தூரம்வரை  பரந்து விரிந்திருந்தது. அந்த வெளியின் நடுவே புற்களைத் தவிர வேறு எதுவும் இல்லை. ஆனால் சுற்றிவர பெரு மரங்கள் கிளைபரப்பி கோடையில் இலைகள் நிறைந்துபோய் பார்ப்பதற்கு மிகவும் ரம்மியமான காட்சி.

காலையில் நடப்பது எனக்கு மட்டுமல்ல பலருக்கும் விரும்பியோ விரும்பாமலோ செய்யவேண்டிய ஒரு கடனாக மாறியிருந்தது. எனக்கு மற்றவர்களுடன் சேர்ந்து நடப்பதும் சரிவராது. ஏனெனில் எப்படியும் இருவர் அமைதியாக நடக்கவே முடியாது. ஏதாவது ஒரு கதையில் ஆரம்பித்து மற்றொன்றில் தாவித் தொடரும்.  நான் இரு கைகளையும் அரைவாசி தூக்கியபடி விசுக் விசுக்கென நடக்கத் தொடங்கி  இருப்பது ஆண்டுகளாவது ஆகியிருக்கும்.

எப்போதுமே மற்றவர்களுக்காக பலதையும் விட்டுக்கொடுக்காத என் மனம் இதற்கும் இசைவதில்லை. அதனால் காலை ஆறுமணிக்கே எழுந்து தனியாகச் சென்று நடக்கவாரம்பித்துவிடுவேன். அநேகமாக அந்த நேரம் ஒரு இரண்டு மூன்றுபேர் தான் தூரத்தில் நடந்துகொண்டிருப்பார்கள். அது மனதுக்கு ஒரு துணிவையும் கொடுக்கும். மழைக்காலங்களில் சோம்பலில் வழிந்தபடி படுத்துக்கிடப்பதையே பலரும் விரும்புவதால் நானும் சிலநேரம் கடமை தவறாது  எழுப்பும் மணிக்கூட்டை நிறுத்திவிட்டுப் படுத்தாலும் என்கணவர் எழும்பு என்று அரியண்டப்படுத்தியே எழுப்பிவிடுவார்.

அவர் ஒண்டும் என்னில உள்ள கரிசனையால் என்னை எழுப்புவதில்லை. நான் ஆறுக்கு எழும்பி அவருக்கு வேலைக்குச் சாப்பாடு கட்டிவைத்து, பாலைக் காய்ச்சி தண்ணி எதுவும் கலக்காமல் கோப்பி போட்டு வைத்துவிட்டு நடையைக் கட்டுவேன். முன்னர் எல்லாம் ஒருசில நாட்கள் நான் எழும்பாது விட்டால் மனிசன் தானாகத் தேநீரைப் போட்டுக் குடிக்காமல் போயிடுவார். அன்று முழுதும் எனக்கு எதோ குற்ற உணர்வாகவே இருக்கும். ஆனா இப்ப அதை எல்லாம் கடந்து வந்தாச்சு. எனக்கு காலையில் படுக்கவேணும் போல இருந்தால் யாரையும் பற்றிக் கவலை கொள்ளாமல் படுக்க முடிகிறது. நானும் மனிசிதானே. நெடுக எல்லாருக்கும் வேலை செய்துகொண்டு இருக்க ஏலுமே. சரி சொல்லவந்த விசயத்துக்கு வாறன்.

கொரோனாக் காலத்தில ஆறு மணிக்கு எழும்பிப் போனால்த்தான் குறைவான ஆட்கள் நடந்துகொண்டிருப்பினம். ஒரு ஏழு மணிக்குப் போனால் அந்தப்பக்கம் இந்தப்பக்கம் என்று எக்கச்சக்கமான சனம். என்னடா இது என்று அடுத்தநாள் முகக் கவசம் அணிந்துகொண்டு போனால் என் வேக நடைக்கு முகக்கவசம் நனைந்து மூச்சும் அடைப்பதுபோல் இருக்க, அடுத்த நாளில் இருந்து ஆறுமணிக்கே எழுந்து நடப்பது. இல்லையென்றால் படுத்தே இருப்பது என்றாகிவிட மனிசனின் புறுபுறுப்பு அதைவிட அதிகமாகிப் போனது. வேலைவெட்டியும் இல்லை. உள்ள சாப்பாடெல்லாம் செய்து யூடியூப்பில் போடுறன் எண்டு சாப்பிட்டுத் தள்ளுறாய். உடம்பு வைக்கப் போகுது எழும்பு எழும்பு என்று ...... அந்தக் குத்தல் கதையைக் கேட்பதிலும் எழும்பி நடக்கிறதே மேல் என்று நடக்கப் போக புதிதாக எனக்கொரு பிரச்சனை அங்கேயும்.

கூடுதலாக அங்கே நடப்பவர்கள் இடதுபக்கமாகவே நடந்து போக ஒரு சிலர்தான் எதிர்ப்பக்கமாக வருவினம். நான் யாரும் இடப் பக்கமாகத் தூரத்தில் வருவது தெரிந்தால் வலப்பக்கமாக மாறி நடக்கத் தொடங்குவன். என் கண்கள் பார்க்கின் தூரத்தை மனதால் அளந்து அவர்கள் அதிக தூரம் என்றால் நான் மாறி நடப்பன். நான் அதிக தூரம் நடந்திருந்தால் அதே பக்கமாக எள்ளளவும் நகராமல் நடந்துகொண்டிருப்பன். வாறவை என்னை விலத்தி நடக்க வேண்டியதுதான். அவள் ஒருத்தி இப்ப புதிதாக நடக்கவாரம்பித்து நான் போகும் நேரத்துக்கு வருவதுமில்லாமல் நான் நடக்கும் இடப்பக்கமாகவே எதிர்ப்புறம் நடந்து வருகிறாள்.

ஒருநாள் இரு நாட்கள் புதியவள் என்பதனால் விட்டுக்கொடுத்து நான் விலகி நடந்தால் அவவுக்கு தான்பெரிய மகாராணி எண்ட நினைப்பு. தொடர்ந்து ஒரு வாரமா அந்தப் பக்கமிந்தப்பக்கம் போகாமல் அதே நடை.  நானும் எத்தனை நாள் தான் பொறுமையாய் நடப்பது ? இண்டைக்கு இவவை ஒருகை பார்ப்பதாக மனதில் எண்ணிக்கொண்டு குனிந்ததலை நிமிராமல் நடந்துகொண்டிருக்க, எனக்கு முன்னாள் அவள் வருவதை என் கண்கள் கண்டுகொண்டவுடன் அவள் என்னை இடித்துவிட்டுச் சென்ற இடியில் என் தேசம் குலுங்கிப் போக மனதில் கோபம் கோபுரம்கட்ட ஆரம்பிச்சிட்டுது.

இரண்டாவது சுற்று நடக்கும்போதும் பார்த்தால் நான் அதே பக்கமாக அதிக தூரம் நடந்திருக்க இடையில் இருந்த சிறிய நடை பாதையில் வந்து நான் நான் நடந்துவந்துகொண்டிருந்த பாதையில் ஏறியவளுக்கு நான் நடந்துகொண்டிருப்பது தெரிந்ததுதானே இருக்கவேணும். ஆனால் அவவோ எதுவும் தெரியாததுபோல் நடந்து வர, நானும் மற்றப்பக்கம் மாறி நடக்காமல் தொடர்ந்து நடக்க இன்னும் ஒரு மூன்று மீற்றர் தூரம்தான் இருக்கு அவளுக்கும் எனக்கும். என் மனம் இம்முறை விட்டுக்கொடுக்க முடியவே முடியாது எண்டு அடம்பிடிக்க, அவள் இம் முறையும் இடித்துக்கொண்டு போனால் அவமானம்போக அவளை இடிக்கும் அளவு எனக்கும் வலுவில்லை என்பது அவள் முதல் சுற்றில் இடித்த அனுபவம் சொல்ல, மனம் ஒரு செக்கனில் முடிவெடுக்க நான் களராத காலனியின் நூலைக் கட்டுவதற்காய் குனிய அவள் வேறு வழியேயின்றி என்னை விலத்திக்கொண்டு மற்றப்பக்கமாகப் போக, மனதில் ஒரு நின்மதியும் மகிழ்வும் ஏற்பட அந்தப் பெருவெளியின் மரங்களினூடே கைவீசி முகம் கொள்ளாச் சிரிப்புடன் நடக்கிறேன் நான் .

Wednesday 29 July 2020

நினைவுகளின் அலைதல்

பேராசிரியர் அ . ராமசாமி - இந்தியா


ஒருவரின் கவிதைகளை அவ்வப்போது வரும் பருவ இதழ்களிலோ,இணைய இதழ்களிலோ வாசித்து நினைத்துக்கொள்ளும் அனுபவமும்,மொத்தமாக அவரின் கவிதைகளைத் தொகுப்பாக வாசிக்கும் அனுபவமும் ஒன்றாக இருக்க முடியாது. அவ்வப்போது வாசிக்கும்போது வாசிக்கப்பட்ட சூழலிலிருந்து கவிதைதரும் அர்த்தம் சுவாரசியமானது. அந்த அர்த்தம் மொத்தமாக வாசிக்கும்போது கிடைக்காமல்கூடப் போகலாம். காரணம் சூழல். இலக்கியப்பிரதிகள் சூழலில் தனக்கான அர்த்தங்களை உருவாக்குகின்றன  சூழல் என்பது கவிதை உருவான சூழலாகவும் வாசிப்பவரின் சூழலாகவும் இருக்கிறது.
 
வாசிக்கப்படும் கவிதைக்குள் செயல்படும் மொழிப்பயன்பாடு,உண்டாக்கப்படும் உருவகம் அல்லது படிமம் போன்றன அந்தக் கவிதையை நின்று நிதானமாக வாசிக்கவும் யோசிக்கவும் தூண்டும்.அப்படித் தூண்டக்கூடிய கவியின் கவிதைகள் கண்ணில் பட்டால்போதும் உடனடியாக வாசிக்க நினைப்பதே வாசக மனம். திரும்பத்திரும்ப வாசிக்க நேரும்போது, ஏற்கெனவே வாசித்த அதே கவியின் கவிதைகள் நினைவுக்கு வந்துவிட்டால், அந்தக் கவியின் பெயர் வாசிப்பவரின் மனதில் தங்கும் பெயராக ஆகிவிடும். அதன் மூலம் ஒருகவி வாசகர்களிடம் தனது பாணியைக் கடத்தியவராக ஆகிவிடுவார். தொடர்ந்து அவரை வாசிக்கும்போது வாசகர்களுக்குப் பிடித்த கவியாக அவர் மாறிவிடுவார். அப்போது அந்த வாசகரால், நமது மொழியின் முக்கிய கவிகளில் இவரும் ஒருவர் என்று நம்பப்படுவார்;சொல்லப்படுவார். தொடர்ச்சியான வாசிப்புகளைக் கருத்தாக முன்வைக்கும் திறனாய்வாளராக இருந்தால் கவிக்கு ஒரு பிம்பம் உருவாகிவிடும். நிவேதா உதயனின் இந்தக் கவிதைகளுக்குள் ஒருவர் திரும்பத் திரும்ப நினைத்துக்கொள்ளத்தூண்டும் தன்மைகளும், மனதில் தங்கிவிடத்துடிக்கும் நிகழ்வுகளும் இருக்கின்றன. அந்தக் கூறுகள் எவையெனத் தேடிப்பார்க்கலாம்.
ஒருவர் தன்முன்னால் பரப்பப்படும் கவிதைகளை எப்படி வாசிப்பது என்ற கேள்வியைக் கேட்கும் ஒருவர்,  ஒரு கவியைச் சந்தித்தால், உங்களிடம் கவிதைகள் எவ்வாறு பிறக்கின்றன ? அல்லது உருவாகின்றன? என்று கேட்கக்கூடும். தான் எழுதி முடித்த ஒவ்வொரு கவிதையும் எப்படி உருவானது என்று சொல்லமுடியாமல் ஒரு கவி திணறவும்கூடும் ஆனால் கவிதையைத் தொடர்ந்து வாசித்து அர்த்தப்படுத்தும் கவிதை வாசகர் தன்னிடம் வைக்கப்பட்ட கேள்விக்கு விரிவான பதிலைத் தரவே செய்வார். வாசிக்கும் கவிதைக்குள் இருக்கும் பாத்திரத்தை/கவிதைசொல்லியைத் தேடிக் கண்டுபிடிப்பது வாசிப்பவரின் முதல்வேலை. அந்தத் தேடலில் கவிதைக்குள் அலைவது ஆண் தன்னிலையா? அல்லது பெண் தன்னிலையா? இரண்டுமற்ற பொதுத்தன்னிலையா? என்பதை  முதலில் கண்டுபிடித்துக் கொள்ளவேண்டும். அதன்பிறகு அந்தச் சொல்லிகள் யாரோடு உரையாடுகிறார்கள் என்பதும், எவை பற்றிப் பேசுகிறார்கள் என்பதும் வாசகர்களுக்குப் பிடிபடத் தொடங்கிவிடும். ஆணென்றாலும் பெண்ணென்றாலும் முதலில் உடல், சமூக அடையாளங்களால் அர்த்தப்படுத்திக் கொள்வது நடக்கும்.அவ்விரண்டும் சேர்ந்து எழுதும் கவியின் தன்னிலைகளின் உளவியலைக் கட்டமைத்துக் கொடுக்கும். நிகழ்காலக் கவிதைகளை வாசிக்க விரும்புபவர்கள் இந்த எளிய சூத்திரத்தைப் பின்பற்றினால் போதும் எந்தவிதமான கவிதைகளையும் சுலபமாகப் புரிந்துகொள்ளலாம். 


17350020_1328202143883074_7630200362623513370_o.jpg


கவி நிவேதா உதயனின் மொத்தக் கவிதைகள் என் முன்னால் பரப்பிக் கிடக்கின்றன.இப்போதுதான் அக்கவிதைகளை வாசிக்கிறேனா என்றால் நிச்சயம் இல்லை. அவரை,அவரது சில கவிதைகளை அவ்வப்போது முகநூலில் வாசித்திருக்கிறேன். அதற்கு முன்பு அவரது பதிவுகளை வாசித்திருக்கிறேன். அவர் விவரிக்கும் ஐரோப்பிய நிலவெளியில் நானும் இருந்தவன் என்பதால் அந்தப் பதிவுகள் என்னை ஈர்ப்பனவாக இருந்தன. அந்த பதிவுகள் வழியாக  அவரைப் பற்றிய சித்திரம் எனக்குள் உருவாகி இருக்கிறது. அந்தச் சித்திரத்தோடு இப்போது அவரது மொத்தக் கவிதையின் மொழிதல் முறையையும் அதற்குள் இருக்கும் கவியின் / கவிதை சொல்லியின் இருப்பையும் வாசிக்க முடிகிறது.அதன்வழியாக இந்தக் கவிதைத்தொகுப்பைப் பற்றிப் பேசமுடிகிறது.
நிவேதாவின் கவிதைமொழிதல் எளிமையான வடிவம் கொண்டது. தொடங்கும்போது சொல்பவர் யாரெனக் காட்டிக்கொள்ளக்கூடாது என நினைப்பது எளிய கவிதையின் எதிர்நிலை. ஆனால் நிவேதா அப்படி நினைக்கவில்லை. இவர்தான் இதைச் சொல்கிறார் அல்லது முன்வைக்கிறார் என்பதை வெளிப்படையாகக் காட்டியபடியே தொடங்கும் எளிமை. அந்த எளிமை, கவிதையை இசையின் ரூபமாக நினைக்கிறது.மொழியின் அடுக்குகள் வழியாக உருவாக்கப்படும் தாளலயத்துக்குள் கவிதை இருப்பதாக நம்பும் கவிமனம் அது.அந்த மனத்திற்குத் தன்னைப் பற்றியும் தன்னைச் சுற்றி இருப்பவர்களைப் பற்றியும் சில எளிமையான கேள்விகளும், ஆச்சரியங்களும், குழப்பங்களும் இருக்கின்றன. அவற்றிற்கு விடைகளைத் தேடும் முயற்சியும் இருக்கிறது. இவ்விரண்டின் விளைவுகளால் உருவாகும் எண்ண ஓட்டங்களே அவரது கவிதைகள். எளிமையான கேள்விகளுக்குக் கிடைக்கும் எளிமையான பதில்கள் போதாது என்று நினைக்கும்போது எளிய கேள்விகள் கேள்விகளாகவே நிற்கின்றன கவிதைகளில். இத்தொகுப்பில் பாதிக்கும் மேலான கவிதைகள் அத்தகைய கேள்விகளை எழுப்பிப் பதில் சொல்லும் மொழிதல் முறையையே கொண்டிருக்கின்றன. எடுத்துக்காட்டுக்கு ‘எல்லை அற்ற மனம்’  என்ற தலைப்பில் எழுதப்பட்ட கவிதையை வாசித்துப் பார்க்கலாம்
புலன்களின் புரிதலற்ற பதுங்குதல்களில்
பிடிவாதமாய் பின்னி நிற்கும் படிநிலைகளின் பக்குவமற்ற பதங்கள்
பாகுபாடற்று என்றும்
பாழ்மனதைப் பலமிழக்கச் செய்து பரிகாரம் தேடித் தேடியே பரிவறுக்கச் செய்கின்றன நிதம்
என்பதான வரிகளை வாசிக்கும்போதும், ஊமைக் காயங்கள் என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்ள
மனத்தின் அடங்கா மாயைகள்
வாழ்வின் நாட்கள் எங்கும்
மர்மங்கள் புரிந்திட முடியாது
மயக்கம் தந்தபடி இருக்கின்றன
 
உறவின் உயிர் நாடியை
உலுப்பிப் பார்ப்பினும்
உண்மை உணரமுடியாதபடி
ஊமைக் காயங்களை
காலம் முழுவதும் விதைப்பினும்
உணர்தலுக்கான வலுவை
மழுங்கச் செய்கின்றது மனது
என்பதான வரிகளை வாசிக்கும்போதும் உருவாகும் சித்திரம், தனது அகத்தைத் தேடும் ஒருவரின் சித்திரமே. தனது அகநிலையைத் தேடும் இத்தகைய கவிதைகளில் இருக்கும் அதே மனம்தான்
நான் மரமாக நீ காற்றாகி மனதின்வழி
நாதங்கள் கேட்க வைத்தாய்
நான் நிலமாக நீ நீராகி நிதம் எனை
நெக்குருகியே நெகிழவைத்தாய்
காற்றின் ஒலியாகி கார்கால மழையாகி
காணும் இடமெங்கும் என்மனவீட்டில்
எங்கும் உன் ஒளியாக ஒளிரவைத்தாய்
என இன்னொரு தன்னிலையோடு உறவாடுவதையும் வாசிக்க முடிகிறது. அத்தகைய இன்னொரு மனம், இன்னொரு தன்னிலை, இன்னொரு ஆளுமை என்பன நட்பாக, காதலாக, உறவாக, பகையாக என எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். எப்படி இருந்தாலும் கவியின் மனம் இன்னொரு உயிரியோடு உறவாடும் மனமாகவே இருக்கிறது. மனிதர்கள் தவிர இயற்கையோ, வாழிடமோ, பிரபஞ்சத்தின் சிக்கல்களோ எல்லாம் நிவேதாவின் கவிதைப் பரப்பிற்குள் வரவில்லை. மனிதர்களை நேசித்தும், கேள்விகேட்டும், கோபித்தும், விளக்கம் சொல்லியும், அரவணைத்தும் செல்லும் அவரது கவி மனத்திற்கு  இன்னொரு வெளி ஒன்றும் இருக்கிறது. கவிதைக்குள் அலையும் அந்த மனம், தனது பால்ய நினைவுகளின் அலையும் மனம்.
பால்ய வயது நிலப்பரப்பையும், தோட்டவெளிகளையும் வீட்டையும் விட்டுப் பிரிந்து விலகிநிற்கும் மனம்திரும்பவும் தேடுகிறது. அந்த விலகலுக்கான காரணத்தை நேரடியாக அனுபவித்தறியாத அந்த மனத்திற்குக் காரணங்கள் தெரிந்திருந்தாலும் கவிதையாகச் சொல்லத்தெரியவில்லை.  தனது சின்ன வயது நினைவாக இருக்கும் அந்த நிலப்பரப்பு எப்படி இருக்கும்? என்ற கேள்வியைத் திரும்பத் திரும்பக் கேட்டுக் கொள்கிற ஒரு மனதைப் பல கவிதைகளில் வாசிக்க முடிகிறது.
கால்கள் புதையும் கனவுகளோடு
கண்விழித்த காட்சிகள் இன்னும்
பசுமை குலையாத பச்சை வயலாய்
பள்ளிகொள்ளும் போதில் வந்து போகின்றன
என்கிறது ஓரிடத்தில். இன்னோரிடத்தில்
காரணங்கள் அற்று நானும்
காணவே முடியாதனவற்றை
காண்பதான மாயை சுமந்து
மீண்டுவரா நாட்களின் தகிப்பில்
மனதின் மகிழ்வு தொலைய
எந்நேரமும் விடுபட எண்ணிடும்
நூலிழை பற்றியே நிதமும்
எழுந்துவர எத்தணித்தபடியே
எதுவும் முடியாது காத்திருக்கிறேன்
என்று புலம்புகிறது. அலைவதாகவும் காத்திருப்பதாகவும் சொல்லும் அந்த மனத்திற்குரிய நபர் இலங்கையில் நடக்கும் உள்நாட்டுப் போரால் புலம்பெயர்ந்தவரா? என்று தேடினால் அதற்கான ஆழமான பதிவுகள் எதையும் கவிதைக்குள் காணமுடியவில்லை. அதைப் பதிவுசெய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும் எப்படிப்பதிவு செய்வது என்ற குழப்பம் இருக்கிறது. அந்த மனத்திற்குத் தனது சொந்த பூமியில் நடக்கும் போரும், போரினால் ஏற்படும் அழிவுகளும், மனிதர்கள் படும் துயரங்களும் தொடர்ச்சியான தகவல்களாய்க் கேட்டுக்கொண்டே இருக்கின்றன. ஆனால் அவையெல்லாம் கேள்விப்படும் சங்கதிகள் மட்டுமே. அவரது அனுபவங்களல்ல.
கேள்விப்படும் சங்கதிகளும் தகவல்களும் உருவாக்கும் மனக்கொதிப்பு கவியின் தவிப்பாக ஆகாமல், இரக்கமாக மாறித் தன்னிரக்க வெளிப்பாடுகளாக மாறியுள்ளன.  இந்தக் கவிதைக்குள் வெளிப்படும் அந்த மனத்தை நீங்கள் வாசிக்கும்போது எளிதாகப் புரிந்துகொள்ளலாம்.
ஏனோ எம் மண்ணின் நினைவு
எப்போதும் எம்முடனே இருக்கின்றது
ஆனாலும் எந்தையர் எமக்காய் வாழ
ஏதுமற்று ஏதிலியாய் இருக்கின்றது
காய்ந்து போன காட்சிகள் மட்டும்
கனவுகளின் மீட்டல்களோடு
கந்தலாகிப் போன சுற்றங்களுடன்
காற்றில் மட்டுமே கேட்கும் கானமாய்
கைவிட்டுப் போன எம் கனவுகள் போல
எப்போதாவது வரும் ஏக்கங்கள் தாங்கி
நிலையான நினைவாகி நிலைத்துப் போனது
(நினைவுகளாய் வீடும் அயலும் )
தனது அகத்தை நோக்கிய கேள்விகளே ஆயினும், புறத்தை - சூழலை நோக்கிய கேள்விகளே ஆயினும், எல்லாமே எளிமையான கேள்விகள் தான். ஆழப்பதிந்து கிடக்கும் சொந்தத் தேசத்து நிலப்பரப்பு பற்றிய நினைவலைகளும்கூட நேரடியனுபவமற்ற எளிய ஞாபகங்கள் தான்.  நிவேதாவைப் போன்ற கவிகள் ஒவ்வொரு மொழியிலும் இருக்கவே செய்கின்றனர். எப்போதும் எளிய வாழ்க்கையை, எளிமையான மொழியால் சொல்லிவிடும் திறமைகொண்ட கவிகளுக்கும் ஒரு மொழிப் பரப்பில் இடம் இருக்கவே செய்கின்றன. எளிமையின் அழகை  ரசிக்க முடிந்தால், நிவேதா உதயனின் கவிதைகளை ரசிக்க முடியும். எளிமையான கேள்விகளுக்கான விடையை நீங்களே உருவாக்கிக்கொள்ள முடிந்தால் நிவேதாவின் கவிதைகள் உங்களுக்குக் கவிதையனுபவத்தையும் ருசியையும் உண்டாக்கும். ருசியை உருவாக்கிக் கடத்த அவர் பெரிதும் நம்பியிருப்பது ஒருவிதச் சந்தலயத்தை. ஆற்றிலிருந்து பிரிந்து வாய்க்கால் வழியாக ஓடும் நீரோட்டம் எழுப்பும் ஒலியலைகளைப்போல இந்தக் கவிதைக்குள் இருக்கும் சந்தலயம், மென்மையாக ஓடிக் கொண்டிருக்கிறது. லயத்தோடுகூடிய எளிய ஓட்டத்தை ரசிக்கும் விருப்பம் உள்ளவர்களுக்குத் தேவையான/உத்தரவாதமான கவிதைகள் இத்தொகுப்பில் உள்ளன.
 

கவி நிவேதா உதயனுக்கு வாழ்த்துக்கள்
 
மார்ச்,2017

உணர்வுகள் கொன்றுவிடு '' சிறுகதைத்தொகுதி - ஒரு விமர்சனம்

நன்றி கலாபூஷணம் .திருமதி கோகிலா மகேந்திரன்


 
நிவேதா உதயராயனின் ,''உணர்வுகள் கொன்றுவிடு '' சிறுகதைத்தொகுதி -ஒரு விமர்சனம்

சிறுகதை எழுதுவது ஒரு கலை .ஒரு உணர்வினை அல்லது பெறுமானத்தினை வெளிப்படுத்துவதிலும் ,தொடர்புறுத்துவதிலும் மனிதத்திறன் வெளிப்படும் ஒரு முறை என்று கூறலாம் .சிறு கதை வாழ்வின் ஒரு வெட்டுமுகமாக அமைய வேண்டும் என்பது அன்டன் செக்கோவின் கருத்து .          நிவேதா உதயராயன் ''உணர்வுகள் கொன்றுவிடு ''என்ற தனது இரண்டாவது சிறுகதைத் தொகுதியை புலம்பெயர் எழுத்தாளர் என்ற வகையில் பிரித்தானியாவில் இருந்து தந்துள்ளார் ''.உணர்வுகள் ''உடன் வந்திருக்க வேண்டிய ,'' ''வேற்றுமை உருபை த் தவிர்த்து வித்தியாசமாய் ஒரு தலைப்புடன் வந்திருக்கும் இந்த நூல் ,புலம்பெயர் வாழ்வுக்கும் தாயக வாழ்வுக்கும் இடையே பல வேறு தளங்களில் தத்தளிக்கும் வாழ்வின் ஒரு வெட்டுமுகம் என்பதில் ஐயமில்லை .
      எழுத்தாளர் ஒருவர் தனது படைப்பை மக்கள் முன் வைக்கும் நோக்கம் என்ன ?இப்போது வாழும் மனித குலம் இன்னும் சிறிதளவு சிறந்ததாக இன்னும் கொஞ்சம் மனிதப் பண்பு மிக்கதாக மேலும் சற்றுக் கூரப்படைந்ததாக மாற அந்தப் படைப்பு உதவுமாக இருந்தால் அது படைப்பாளியின் வெற்றிப்படி என்று கருதலாம் .கதையின் உள்ளடக்கம் தருகின்ற செய்தி வாசகர் ஒருவரிடமாவது இந்த மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்
உருவம் கலைநயம் மிக்கதாக அமைந்து ரசிகரை மகிழ்ச்சிப்படுத்த வேண்டும் .உதாரணமாக இந்நூலில் 'ஆசை மனதளவு 'என்ற கதையின் நாயகி விழுமியமும் அறமும் மாறுபட விரும்பாதவளாய் உயர்ந்து நின்று உள்ளடக்க நோக்கத்தை நிறைவு செய்கிறாள் .

Rocco Fumento என்ற ஆய்வாளர் சிறுகதை நாலுவகை என்பார் .
1.நிகழ்ச்சியால் சிறப்பெய்தும் கதை
2.சூழலால் சிறப்பெய்தும் கதை
3.கதை மாந்தரின் பண்பால் சிறப்பெய்தும் கதை
4.உரிப்பொருளால் சிறப்பெய்தும் கதை

 
'பணத்துக்காக எதுவும் செய்யலாம் 'என்ற கலாசாரம் தமிழர் மத்தியில் மிக வேகமாகப் பரவுகிறது .இனியாளின் அக்கா அதற்கான ஒரு வகை மாதிரி .அதனால் அது கதைமாந்தரின் பண்பால் சிறப்புப்பெறுகிறது .என்ஜினியர் கதை கலாசார அதிர்ச்சியை அழகாகச் சொல்லுகிற அதே நேரம் தாயகத்தில் வளர்ந்த ஆண் ,வெளிநாட்டில் வளர்ந்த பெண் ஆகியோரின் பாத்திரப் படைப்பை மிக இயல்பாகத்தந்து அத்தகைய திருமணத்தில் வரக்கூடிய நெருக்கீட்டை கதை மாந்தர் சித்திரிப்பால் சிறப்புறச் சொல்கிறது
பெண்மனது கதை முதுமையில் வரும் இயலாமை ,வன்முறை ஆகியவற்றைக் காட்டினாலும் தேவகி என்ற பாத்திரத்தினால் சிறப்புறுகிறது .தேவகியை வகைமாதிரிப் பாத்திரம் எனப்பார்க்கலாம் .
வேப்பங்காய்கள் அழகான தலைப்பு .நீளமான கதை.சிறுகதைக்கட்டமைப்பு ப் பேணப்படுகிறதா உடைந்துவிடுகிறதா என்ற ஐயம் ஏற்பட்டாலும் சிந்தியா பாத்திரத்தால் உயர்வடைகிறது .
விடுதலை தொகுதியின் நல்ல கதைகளில் ஒன்று .நந்தா என்கிற அருமையாக வார்க்கப்பட்ட பாத்திரம் அதற்கான காரணம் .சம்பவங்கள் இதனை இயற்பண்பு கொண்ட கதை ஆக்கி விடுகின்றன .
நிகழ்வுகளால் சிறப்பெய்தும் கதைகளில் உறவுகள் ஒன்று.ஒருவனுக்கு ஒருத்தி என்ற வாழ்வு முறையின் மாற்றம் பற்றி அது பேசுகிறது .மகனுடைய நடத்தை நிறையவே சிந்திக்க வைக்கிறது .அவன் உணர்வு பூர்வமாகச் சந்தோஷிக்கிறானா ?தனது எதிர்ப்பைக் கோபமாக வெளிப்படுத்தாவிட்டாலும் உறுதியாகவேனும் புலப்படுத்தா காரணம் என்ன ?பயமா ?அசௌகரியமான சூழலை எதிர்கொள்ளும் தயக்கமா ?எதிர் காலத்தில் தனக்கான முன்மாதிரி என்று நினைக்கிறானோ ?விவாதிக்கத் தூண்டும் பாத்திரம் .
எப்போதும் இரவு நல்ல தலைப்பு .நிகழ்வுகளால் உயரும் மற்றோர் கதை .பெண்கள் மீதான வன்முறை கலை நயத்துடன் வெளிப்படுகிறது .ஆயினும் வாசகர் திருப்திப்பட முடியவில்லை .
தொகுதியின் தரமான கதைகள் வரிசையில் வரக்கூடிய மற்றொன்று வரம் வேண்டினேன் .நிகழ்வுகளால் மேலேவருவது .மருத்துவருக்கு இந்த மாற்றம் சாதாரணமாக இருக்கலாம் .ஆனால் இவ்வளவு கஷ்டப்பட்ட பெற்றோரின் உணர்வு ?எமது மரபணு குழந்தைக்கு வராவிட்டால் உயிரியல் தொடர்ச்சி என்ற திருப்திக்கு என்ன ஆவது ?இதுதான் நியதி என்றால் குழந்தை ஒன்றைத் தத்து எடுத்திருக்கலாமே ?இவ்வளவு செலவும் துன்பமும் ஏன் ?விடை இல்லாத வினாக்கள் .
உணர்வுகள் கொன்றுவிடு என்ற தலைப்புக் கதை உரிப்பொருளால் சிறப்புப் பெறுவது .நேரில் பார்க்காத ,பழகாத ,முகப் புத்தக உறவுகளின் கொடுமை பற்றி அழகாகப் பேசுவது இக்கதை .அண்மையில் தாயகத்தில் இருந்து ஒரு பெண் ,நிஜத்தில் இத்தகு உறவைத்தேடி இந்தியா சென்று தற்கொலையில் தன் வாழ்வை நிறைவு செய்திருப்பது பத்திரிகைச் செய்தி .முடிவாகிப்போனது என்ற கதையும் தற்கொலையில் முடிகிறது .நல்ல அன்பு என்றால் உயிர் ஒன்றாகப் போகுமா ?அல்லது முறையற்ற உறவு அகால மரணத்தில் தான் முடியுமா ?எழுத்தாளரின் தொனி காதலரின் முடிவுக்குச் சாதகம் போலத் தெரிகிறது .
அநீதியை எதிர்ப்பது கனவில் தான் முடியும் என்கிறதா ரயில் பயணம் ?வாழ்வு வதையாகி என்ற கதை Euthanasia கருப்பொருளைக் கொண்டது .உலக சரித்திரத்தில் இது புது விடயம் .தமிழ்ச் சிறுகதை ஒன்றில் இக்கருப்பொருளைக் கலைத்துவமாகக் கையாண்டமை எழுத்தாளரின் பலம் .ஆனாலும் இனிமேல் மாற்றவே முடியாத கடும் வேதனையைத் தருகிற நோய்களுக்குத்தான் Euthanasia சாத்தியப்படும் .பாரிசவாதம் மெல்ல மெல்லக் குணமடைவதும் உண்டு .கடும் வேதனை தராத அந்த நோயுடன் பத்து வருடத்துக்கு மேல் வாழ்பவர்களும் உண்டு .கதையின் யதார்த்தப் பண்பு கேள்வியாகிறது .
மனம் எனும் மாயம் என்ற கதையில் பலவீனமான மனம் ஒன்று அழகாகக் காட்டப்பட்டாலும் முடிவு நம்பும்படி இல்லை .
ஆசிரியரின் சில இடங்களில் இவர் எழுத்தாளர் தான் என்பதை உறுதி செய்கிறது .உதாரணமாக ,'வானமும் நிலமும் வெயில் குடித்துக் கிடந்தது '(கிடந்தன ?)ஆயினும் மொழி இன்னும் சிறக்கலாம் .
படைப்பு வட்டம் என்பது தயாராதல் ,அடைகாத்தல் ,உந்தல் ,சரிபார்த்தல் ,என நாலு நிலைகளைக் கொண்டது .சரிபார்த்தல் என்ற நிலையில் எழுத்துப் பிழைகள் ,இலக்கண வழு ஆகியனவும் கவனிக்கப் படவேண்டும் .நின்மதியா ?நிம்மதியா ?ஏஜென்சியா ?ஏயென்சியா?
கதையோடு கதையாகச் சொல்லிச் செல்லும் சில விடயங்கள் மனதில் நிற்கின்றன .காசுக்காகப்  புருஷனைவிவகாரத்துச் செய்துவிட்டு ஒன்றாக வாழும் மேல்நாட்டுக் கலாசாரம் ஒரு வகைமாதிரி .
மனதுக்கு நிறைவு தரும் தொகுப்பு .
கலாபூஷணம் .திருமதி கோகிலா மகேந்திரன்
இலங்கை 

கண்காணிப்பது அவசியம்-நிவேதா உதயராஜன்




    உலகிலேயே மிகவும் கொடுமையான செயல்கள் எனப் பட்டியலிடப்பட்டால்  அதில் முதன்மையாக இருப்பது பாலியல் வன்கொடுமை என்பதாகத்தான் இருக்கும். அன்றுதொட்டே பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகிவந்துள்ளனர்தான் எனினும் அண்மைக்காலங்களில் பாலியல் துன்புறுத்தல் பற்றிக் கேள்விப்படுவது அதிகரித்துள்ளது. அதற்கு முக்கிய காரணம் ஊடகங்கள், இலத்திரணியல் சாதனங்கள், தேவையற்ற காணொளிகள் எனப் பலவற்றைக் கூறினாலும் அதன் ஒட்டுமொத்தப் பெயர்  தொழில் நுட்ப வளர்ச்சியே எனலாம். இருபத்தியோராம் நூற்றாண்டில் கூட பெண்களுக்கான ஒரு சமத்துவம், சுதந்திரம் என்பன  பேணப்படாத நிலையில் வன்கொடுமை என்பதும் அதிகரித்து எத்தனையோ பேரின் வாழ்வைத் தினம் தினம்  சிதைத்தபடி இருக்கிறது.  அதிலும் சிறுவர் வன்கொடுமை என்பது மிகவும் அதிகரித்துள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன.
    உலக நாடுகளெல்லாம் எத்தனையோ சட்ட வரைபுகளைப் பெண்களுக்காக ஏற்படுத்தியுள்ளபோதும், பெண்களுக்கான , சிறுவர்களுக்கான பாலியல் துன்புறுத்துதல் இன்னும் தொடர்வதற்கான காரணம் அதுபற்றி உண்மைகள் வெளியே சரியானபடி தெரிவதில்லை. வெளியே சொல்ல வெட்கப்படுகின்ற பெண்கள்,  பாதிக்கப்பட்ட சிறுவர்களின் பெற்றோர்கள், சமூகம் என பெரிய தடைகளைத் தாண்டும் மனோதிடம் பலருக்கும் இல்லாதிருப்பதே இத்தகைய செயலைச் செய்யும் காட்டுமிராண்டிகளை இனங்காண முடியாததாகவும் இருக்கிறது.
    பெரிய பெண்கள் தமக்கு நடைபெறும் வன்கொடுமைகளை உணரவும் , எதிர்க்கவும் முடிகின்ற சூழலில் இருக்கின்றபோதும் அதையும் மீறி நடக்கின்ற வன்முறைகள் கொடுமைமிக்கது என்றால், எதுவும் தெரியாத சிறுவர்கள்  தமக்கு நடப்பது வன்முறை என்றே தெரியாது அதற்குப் பலியாகிப் போவது கொடுமையிலும் கொடுமை. அதற்குக் காரணம் இலகுவாக சிறுவயதினர் மிரட்டிப் பயன்படுத்தப்படுவதும், என்ன நடக்கிறது என்பது புரியாததாலும், இப்படியானது சாதாரணமாக எல்லோருக்கும் நடப்பது போன்று அவர்கள் நம்பவைக்கப்படுவதும் காலங்காலமாக நடந்துதான் வந்திருக்கிறது. அதிலும் தம் வீட்டில் இருக்கும் உறவினர், நண்பர்கள், வீட்டில் வாடகைக்குத் தங்கி இருப்போர், பாடசாலை ஆசிரியர்கள், ஏன் உரிமையாய் வீட்டுக்குள்ளேயே நடமாடும் தாயாரின் தந்தையாலோ அல்லது தந்தையின் தந்தையாலோ, அதைவிடக்கொடுமையாக பெற்ற தந்தையாலும் கூட பலர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியபடிதான் இருக்கின்றனர்.
    இந்த விடயத்தில் முக்கியமாக கவனமாக இருக்கவேண்டியது பெற்றோரின் கடமைதான் எனினும் தந்தையை விடத் தாய்க்கே அந்தப் பொறுப்பு அதிகமாகிறது. ஒரு சிறுமி தனக்கு ஏற்பட்ட கொடுமையைத் தன்  தாய்க்குச் சொல்லக்கூடிய துணிவை அவர்கள் பெறும்படி பிள்ளைகளுடன் உறவைப் பேணுவது மிக முக்கியமானது. அதைவிட பல பிள்ளைகள் குற்றச்சாட்டுகளைக் கூறும்போது பல பெற்றோர் அதைக் காது கொடுத்துக் கேட்பதும் இல்லை. அந்தப் பிள்ளை கூறுவதை நம்புவதுமில்லை. எப்போது நாம் கூறுவதை என் பெற்றோர் கேட்க்கின்றனர், அவர்களிடம் நாம் எந்த விடயத்தையும் கூறலாம், அவர்கள் மட்டும் தான் எம்மைக் காப்பாறுவார்கள் என்ற நம்பிக்கையை ஒவ்வொரு பெற்றோரும் பிள்ளைகளிடம் ஏற்படுத்தவேண்டும். பிள்ளை கூறுவதை நம்பாமல் இவள்/ இவன் பொய் கூறுகின்றனரோ என்ற சந்தேகம் ஏற்பட்டு நாம் பிள்ளைகளைக் கடிந்துகொண்டால் , பெரியோர் எம்மை நம்பப்போவதில்லை என்னும் அசைக்க முடியாத நம்பிக்கை பிள்ளைகளுக்கு ஏற்பட்டு அவர்கள் அதன்பிறகு நடக்கும் தொடர் வன்முறைகளைக் கூட எம்மிடம் பகிர்ந்துகொள்ளாது தம்முள்ளேயே போட்டு மூடி, அவர்களை மீள முடியாத இக்கட்டில் தள்ளுவதற்கு ஏதுவாகிவிடும்.
    பள்ளி சென்று வரும் உங்கள் பிள்ளைகளுடன் மனந்திறந்து உரையாடுங்கள், அவர்கள் சோர்வாகத் தெரிந்தால்  உரியவாறு அவர்களுடன் பேசிப் பிரச்சனை என்ன என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள். நண்பர்களோ உறவினர்களோ வீட்டுக்கு வந்தால் அவர்கள் மேல் ஒரு கண் வையுங்கள். உங்கள் பிள்ளைகளின் நண்பர்கள், நண்பர்களின் பெற்றோர், இன்னும் அவர்களுடன் தொடர்புடைய அனைத்து ஆண்பெண்களுடனும் அவதானமாக இருங்கள். நான் ஏன் பெண்களையும் என்று கூறுகிறேன் என்றால் சில பெண்கள் கூட தன் கணவனின் அச்சுறுத்தலுக்குப் பயந்து அவர்கள் செய்யும் வன்கொடுமைகளுக்கு உடந்தையாக இருந்திருப்பதாகச் செய்திகள் கூறுகின்றன.
    ஆகவே ஒவ்வொரு பெண்களும் விழிப்புடன் இருக்கவேண்டும். உங்கள் வீட்டில் இருக்கும் ஆண்களைக்கூட அப்பப்போ அவதானிக்கவேண்டும். என் கணவர் தானே நல்லவர் என்னும் முட்டாள்தனமான நம்பிக்கையுடனேயே பலர் நடப்பவற்றைக் கண்டும் காணாமலும் அல்லது அதை வெளியே எப்படிச் சொல்வது எண்ணம் தயக்கத்தில் பேசாமல் இருக்கின்றனர். அது மிகவும் தவறான அணுகுமுறையாகும். உங்களுக்கு ஒரு விடயத்தில் சந்தேகம் ஒன்று ஏற்பட்டிருப்பின் உங்களுக்கு மிக நெருக்கமானவருடன் அந்த விடயம் பற்றி உரையாடித் தெளிவுபெறுவதும், சரியான முடிவை எடுத்து செயல்படுத்துவதும் மிக அவசியமான ஒன்றாகும். அதைவிடப் பாதிக்கப்பட்டவர்களின் வலியைப் புரிந்துகொண்டு அவர்களுக்கு உடல், உளரீதியான ஒத்துழைப்பையும் பாதுகாப்பையும் ,நம்பிக்கையையும் கொடுக்கவேண்டியது மிகமிக முக்கியமானது. அதைவிடத் தவறு செய்தவர் யாராய் இருப்பினும் தண்டனை பெற்றுத் தரவேண்டியதும் மிக மிக அவசியமான ஒன்று.
    எங்கள் பிள்ளைகளை எம்மைத் தவிர எவருமே பாதுகாக்க முடியாது. பணம் பணம் எனப் பணத்தின் பின்னால் ஓடிக்கொண்டிருக்காது ஒரு குறிப்பிட்ட வயதுவரை உங்கள் பிள்ளைகளுடன் நீங்கள் இருப்பதும், அவர்களை புரிந்துகொள்வதும், அவர்களுக்கு உங்கள்பல நம்பிக்கையை ஏற்படுத்துவதும் ஒரு ஆரோக்கியமான பிள்ளை இந்தச் சமுதாயத்தில் தன்னம்பிக்கையுடன் வாழ வழிசெய்யும். உங்கள் வீடுகளில் கண்டவர்களையும் வாடகைக்கு அமர்த்தாது உங்கள் குழந்தைகள் ஓடிவிளையாடி சுதந்திரமாய் இருப்பதற்கான சுற்றுச் சூழலை உருவாக்குவது பிள்ளைகளை பெற்றவர்கள் ஒவ்வொருவரினதும் தலையாய கடமை. புலம்பெயர் சூழலில் மற்றவர்களின் வாழ்க்கைத் தராததுக்கு எம்மையும் உயர்த்தவேண்டும் என்னும் பேராசை காரணமாகவே பல பெற்றோர்கள் இரு வேலை, இரவுநேர வேலை, பிள்ளைகளை வீட்டில் தனியாக விடுதல், உறவினர்கள் நண்பர்கள் மற்றும் பாதுகாவலர்களிடம் விட்டுவிட்டு வேலைக்குச் செல்வது போன்ற தவறுகளை செய்கின்றனர். அதுவே பின்னர் பிள்ளைகளுக்கு உளவியல் பாதிப்பை ஏற்படுத்துவதற்கும் ஏதுவாகிறது. பேராசை கொள்ளாத போதும் என்ற மனமும், மற்றவர் வாழ்வோடு ஒப்பிடாத நிலையும், எளிமையான ஆரோக்கியமான வாழ்வுமே எம் புலம்பெயர் சமூகத்தை உயர் நிலைக்குக் கொண்டுவரும்.
    கொரோனாவின் பின்னாவது ஒவ்வொருவரும் உலக வாழ்வைப்பற்றிச் சிந்திக்க வேண்டும். எத்தனை பணம் வைத்திருந்தும் பயனின்றி இறந்தவர் எத்தனைபேர். நாம் எப்போதும் இறந்துபோகலாம். இறக்கும் வரை எப்படி வாழ்ந்தோம் என்பதில்தான் எம் வாழ்வின் வெற்றி அடங்கியுள்ளது. இதை நாம் ஒவ்வொருவரும் உணர்ந்து மனித நேயத்துடனும், அன்போடும், அகந்தை துறந்தும் வாழ்வோமானால் அதுவே உயரிய வாழ்வு.
     
    நிவேதா உதயராஜன்-ஐக்கிய இராச்சியம்
     

    21.07.2020
     

எனது நேர்காணல்


https://akkinikkunchu.com/?p=121613 


கேள்வி(1): எழுத்துத்துறைக்கு நீங்களா விரும்பி வந்தீர்களா அல்லது எழுத்தாளர்களின் நூல்களை வாசித்து எழுத வேண்டும் என்று ஆர்வம் ஏற்பட்டு வந்தீர்களா?
 நானாக விரும்பி இந்த எழுத்துத் துறைக்கு வந்தது கிடையாது. யாழ் இணையத்தின் வாசகியாகச் சென்ற எனக்கு அங்கு எழுதியவர்களின் எழுத்துக்களும், யாழ் இணையத்தின் மிகச் சிறந்த பகுதியான கருத்துக்களமுமே  என்னை எழுதத் தூண்டியது எனலாம்.
கேள்வி (2): நீங்கள் கவிதை, கட்டுரை, சிறுகதை, நாவல் போன்ற துறைகளில் எதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறீர்கள்.இவைகளில் ஒன்றுக்கு மேற்பட்ட துறைகளில் எவைகளில் தொடர்ந்து எழுதி வருகிறீர்கள்?
நான் மேற்கூறிய மூன்றில் சிறுகதையில் தான் அதிக ஆர்வம் காட்டி வருகிறேன். ஏனெனில் அதுதான் எழுதுவதற்கு இலகுவானது.
கேள்வி (3):  நீங்கள் கவிதை எழுதுபராகவிருந்தால் எத்தகு கவிதைகளில் நீங்கள் அதிக ஆர்வம் காட்டி எழுதி வருகிறீர்கள்?.
நான் 140 கவிதைகளை இதுவரை யாழ் இணையத்திழும் முகநூலிலும் எழுதி 80 கவிதைகளை நூல்வடிவமும் ஆக்கியுள்ளேன். அவற்றுள் பல என் மனவோட்டதத்தின் பிரதிபலிப்பாய் எழுந்த கவிதைகள். சமூகத்தின்பாலும் தனிமனித உறவுகளின்மேலும் எழுந்த கோபங்கள் கவிதையூடே வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
கேள்வி (4):எழுத்தாளர்களுக்கு இருக்க வேண்டிய முதல் தகுதி எதுவென நினைக்கிறீர்கள்.
துணிவு தான் ஒரு எழுத்தாளருக்கு இருக்கவேண்டிய முதற் தகுதி என நான் எண்ணுகிறேன். ஏனெனில் எத்தனைதான் எழுத்தாற்றல் பெற்றவராக இருந்தாலும் பொதுவெளியில் ஒருவருடைய படைப்பு வெளிவரும்போது, அதற்குப்பின்னர் வாசகர்களின் நேர், எதிர்மறைக் கருத்துக்களை உள்வாங்கவும் எதிர்கொள்ளவுமான துணிவு கொண்டவர்கள் மட்டுமே தொடர்ந்தும் எழுதமுடியும்.
கேள்வி (5): கட்டுரை தவிர்ந்து சிறுகதை, நாவல் என இவையிரண்டும் யதார்த்தக் கதை, கற்பனைக் கதை  ஆகிய இரண்டிணையும் நீங்கள் எழுதுபவராயின் யதார்த்தக் கதைகளில் கற்பனைச் சாயம் பூசப்படுவதில்லையா?.
யதார்த்தக் கதைகளில் பெரும்பாலும் கதை ஆரம்பிக்கும்போது சிலர் தேவையற்ற ஆலாபனைகளைச் சேர்ப்பதுண்டு. அது எழுதுபவரையும் வாசகரையும் சார்ந்தது. சில வேளைகளில் அக்கதையை மற்றவர்கள் ஆவலுடன் வாசிக்கச் செய்யும் நோக்கிலும் கதையை இலகுவாக நகர்த்துவதற்கும் சில சாயம் பூசுதல்கள் இருப்பதுதான். அதைத் தவறு என்று கூற முடியாது என்பதே என் கருத்து. ஆனாலும் என் கதைகளில் கற்பனைச் சாயம் பூசவேண்டிய தேவை ஏற்பட்டத்தில்லை. 
-புனைகதைகள் என்பன உண்மைச் சம்பவங்களை அடியொற்றித்தான் எழுதப்படுகின்றன என்பதை நீங்கள் மறுக்கிறீர்களா?
எல்லாப் புனைகதைகளும் உண்மைச் சம்பவங்களை அடியொற்றித்தான் எழுதப்படுகின்றன என்று கூற முடியாது. சிலரின் கற்பனை வளத்தினால் சிறந்த ஒரு கதையை, இதுவரை கேள்விப்படாத, நடக்காத ஒன்றைக் கதையாக்க முடியும். 
கேள்வி (6): நீண்ட காலமாக எழுத்துலக வெளியில் ஒரு கேள்வி கேட்கப்பட்டு வருகின்றது.அது என்னவெனில,யதார்த்தக் கதைகளில் வரும் கதைமாந்தர்கள் அன்றாடம் உரையாடல்களில் பயன்படுத்தும் சொற்களை அப்படியே எழுதுவதும்,சம்பவங்களை அப்படியே எழுதுவதும் யதார்த்தம் எனச் சொல்லப்படுவதை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?
கதைகளில் அன்றாடம் பயன்படுத்தும் சொற்களைப் பயன்படுத்துவது ஒருவித உத்தி என்பேன். பல சாதாரண வாசகர்களுக்கு அவைதான் வாசிப்பதற்கு இலகுவாகவும் சலிப்பற்றதாகவுமிருக்கும். ஆனால் எல்லாக் கதைகளிலும் அப்படி எழுதுவது சாத்தியமற்றது. அத்துடன் சாதாரனர் அல்லாத மனிதர்களுக்கு தரமான ,பொதுவான எழுத்துநடையில் வாசிப்பதே இன்பமளிக்கும். ஆகவே யதார்த்த எழுத்து ஒருபாலாருக்கும் தரமான எழுத்து இன்னொருபாலாருக்கும் பிடித்துப்போகலாம். அது வாசிப்பவருடைய மனநிலையிலும் எழுதுபவரின் எழுத்திலுமே தங்கியுள்ளது.
கேள்வி (7) உலகதர இலக்கியங்கள் என்று சொல்லப்படுபவையை அரசியல் சாராத இலக்கியங்கள்தான் என உங்களால் உறுதியாகச் சொல்ல முடியுமா?.
உலகத் தர இலக்கியங்கள் என்பது அனைவராலும் அங்கீகரிக்கப்பட்டதோ அல்லது ஏற்றுக்கொள்ளப்பட்டதோ இல்லை. ஒரு சிலரால் அல்லது குழுவினரின் அங்கீகாரத்தோடு ஏற்றுக்கொள்ளப்படுவது. அல்லது மற்றவரையும் நம்பவைக்கப்படுவது. இக்காலத்தில் அனைத்துமே அரசியல்மயப்படுத்தப்பட்டதுதான். ஆகவே என்னால் அரசியல் சார்ந்ததா இல்லையா என உறுதியாகக் கூறமுடியாதுள்ளது.
-சமூக மாந்தர்களே எழுத்துக்களில் இடம்பெறுகிறார்கள். இந்தச் சமூக மாந்தர் சமூகத்தோடு தொடர்பு பட்டிருக்கிறார்கள். இந்தச் சமூகம் அரசியல் மயப்படுத்தப்பட்டிருக்கின்றது என்பதை ஒப்புக் கொள்கிறீர்களா?.
உங்கள் வினாவிலேயே நீங்கள் கேட்ட வினாவுக்கான விடையும் அடங்கிவிட்டதே!
கேள்வி 8: பொன்னியின் செல்வன் நாவல் அரசியல் சாராத இலக்கியமா?.
 
பொன்னியின் செல்வன் அக்காலத்து அரசவாழ்வு, போர் என்பவற்றினூடாக அழகாக நகர்த்தப்பட்ட ஒரு சிறந்த பெருங்கதை. எமக்குத் தெரியாத, எம் கண்முன் நடைபெறாத,  ஒரு விடயத்தை, ஒரு வாழ்வியலை, தன் எழுத்தாற்றல் மூலம் எம்முன்னே கொண்டுவந்த கல்கி அவர்களின் சிறந்த படைப்பது. ஆனாலும் அதை அரசியல் சார்ந்த இலக்கியம் எனக் கொள்ள முடியாது.
கேள்வி (9): நீங்கள் கவிதை எழுதுபவராயின் முகநூல்களில் வரும் கவிதைகள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?.
முகநூல் என்பது துணிவுள்ள எவரும் தம் எண்ணக்கருத்தை எழுத முடிந்த ஒரு தளம். பலர் தம் உணர்வுகளை கவிதைகளாக அங்கு வெளிப்படுத்துகின்றனர். அதில் தவறென்ன? சிலர் தம்மாற்றலை முழுவதுமாய் எண்ணத்தில் வடிக்கின்றனர். சிலர் எண்ணங்களை எப்படியோ எழுத்தாய் வடிக்கின்றனர். அவர்களுக்கும் அது ஓர் அங்கீகாரம்தானே. ஒரு பத்திரிகைக்கோ அன்றி  இணையத்துக்கோ அவர்கள் தம் கவிதைகளை அனுப்பி அது கிடப்பில் போடப்படுவதும் நிராகரிப்பதுமாக இல்லாது என்னாலும் முடியும் என்னும் ஒரு ஆத்ம திருப்பதியை ஏற்படுத்தும் தளமாக முகநூல் அவர்களுக்கு இருக்கிறது. ஆனாலும் பலரின் சிறந்த கவிதைகளை முகநூலூடாகவே பார்க்க முடிந்திருக்கிறது. நல்ல கவிதைகளை நின்று ரசிக்கலாம். அல்லாதுவிடில் கடந்து செல்லலாம் அவ்வளவே.
கேள்வி (10) ஒரு கருத்தை, கவிதை மூலமோ அல்லது கதை மூலமோ அல்லது சிறுகதை மூலமோ இவற்றில் எதன் மூலம் சுலபமாகச் சொல்ல முடியும் என நினைக்கிறீர்கள்?.
சில சிறந்த கருத்துக்களை கவிதையில் சில வரிகளினூடே கூறிவிட முடியும். அனால் அது வாசிக்கும் அத்தனை பேருக்கும் விளங்குமா என்பதும் கவிதையின் வரிகள் எத்தகைய தன்மையைக் கொண்டிருக்கும் என்பதையும் பொறுத்தே அது அமையும். ஆனால் கதையூடாகக் கூறுவது அதைவிட இலகுவானது. கேட்பவர்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்துவதாயும் அந்த நேரத்திலேயே யாராலும் எவராலும் கிரகிக்கக் கூடியதாகவும் உள்ளதால் இலகுவில் பலரையும் சென்றடையக்கூடியதுமாகவும் இருக்கிறது.
கேள்வி (11) இலங்கையில், இலங்கைத் தமிழ் எழுத்தாளர்களின், எழுத்துக்களின் வளர்ச்சி பற்றி உங்கள் பார்வை?.
அக்காலத்தில் இலங்கையிலும் ஒரு குறிப்பிட்ட வகையான எழுத்துக்களே அதிககாலம் ஆதிக்கம் செலுத்திவந்தது. பின்னர் எஸ் போ அதை மாற்றியமைத்தார். அதன்பின் பல எழுத்தாளர்களும் எழுத்துக்களும் வளர்சியுற்றன. பின்னாளில் போர் காரணமாக உருவாகிய போரிலக்கியங்கள் மிக வேகமாகவும் அதிகமாகவும் வளர்ச்சியுற்றன. அக்காலத்தில் புறநானூற்றுப் பாடல்களில் கூறப்படத்திலும் பார்க்க அதிகமான இலக்கியங்கள் தாயகத்திலும் புலம்பெயர் நாடுகளிலும் இலங்கைத் தமிழர்களால் உருவானது. இது ஒரு பாரிய வளர்ச்சிதான்.
-புலம்பெயர் தமிழ் எழுத்தாளர்களின் எழுத்துக்கள் வளர்ச்சிப் பாதையில்தான் சென்று கொண்டிருக்கின்றதா?
யாரும் எவற்றையும் எழுதலாம் என்னும் நிலையும், மற்றவரின் குறுக்கீடுகளின்றி நூலாக்கப்படுவதற்கான இலகுத்தன்மை காணப்படுவதும் அதிகரித்த இணையங்களும், இணையப்பத்திரிகைகளும், தாமே தமக்காக உருவாக்கும் தளங்களும் கூட எழுத்துக்களின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகின்றன. ஆனாலும் இன்னும் சிலர் எப்போதும்போல் தரமான எழுத்துக்கள் மட்டுமே எழுத்துலகில் நிலைக்கவேண்டும் என்னும் குறுகிய நோக்கில் தடைக்கற்களாகவும் உள்ளனர். நாடுப்புறப் பாடல்கள் எப்படி இன்றும் எம் பண்பாட்டு விழுமியங்களை இலகுநடையில் சொல்கின்றனவோ அவ்வாறே அனைத்து புலம்பெயர் எழுத்துக்களும் எழுத்தாளர்களும்கூட வருங்காலத்துக்கு எம் வாழ்வியலை, எம் துன்பங்களை எடுத்துக் கூறும் இலக்கியங்களாக இருக்கப்போகின்றன என்பதை உணர்ந்து, பேதமின்றி அனைத்து எழுத்தாளர்களையும் ஊக்குவிப்பதும் ஏற்குக்கொள்வதும் புலம்பெயர் எதிர்காலச் சமூகத்துக்கு நாம் செய்யும் மகத்தான உதவியாகவும் எமக்கான ஒரு வரலாற்றுப் பதிவாகவும் இருக்கும் எனலாம்.
கேள்வி (12) நீங்கள் ஒரு கதையை எழுதிக் கொண்டிருக்கும் போது கதை மாந்தராக உங்களை நீங்கள் மாற்றிக் கொண்டு எழுதுவீர்களாயின் கதை மாந்தர்களின் பலதரப்பட்ட உணர்வுகள் உணர்ச்சிகள் போன்றவற்றை உங்களுக்குள் பிரதிபலிக்கச் செய்துதான் எழுதுவீர்களா?
அப்படிச் சிலரோ பலரோ எழுதலாம். ஆனால் நான் என் கதை தவிர்ந்த மற்றைய கதைகளுக்கு கதை மாந்தராக என்னை எண்ணுவதில்லை. அப்படி எண்ணினால் கதை இன்னும் மெருகேறக்கூடும் . ஆனாலும் என்னால் ஒரு கதையை வெளியே இருந்துதான் பார்க்கமுடிகிறது. அது என் பலமா பலவீனமா என்றும் என்னால் தீர்மானிக்கவும் முடியவில்லை.
கேள்வி (13) உங்களுடைய படைப்புக்கள் பற்றி விமர்சனம் செய்யப்படும் போது அதனை ஏற்றுக் கொள்வீர்களா?
ஏற்றுக்கொள்ள முடியாதவர்கள் சிறந்த படைப்பாளர்களாகவே இருக்கமுடியாது.
- அல்லது நிராகரிப்பீர்களா?
நிராகரிப்பதற்கான நிலை எனக்கு இன்னும் ஏற்படவில்லை.
- கவிதை, கட்டுரை, சிறுகதை, நாவல் இவைகளில் எவை அதிக விமர்சனத்துக்குள்ளாவதாகக் கருதுகிறீர்கள்?.
சிறுகதை, கவிதை போன்றவை பெரிதாக விமர்சனங்களுக்கு உட்படுத்தப்படுவதில்லை. பெரும்பாலும் கட்டுரைகளே அதிகளவில் விமர்சனத்துக்கு உள்ளாகின்றன. அதற்கான காரணம் பல கட்டுரைகள் பொதுத்தன்மை கொண்டவையாயும் சமூகம் சார்ந்த விடயங்களை அதிகம் உள்ளடக்கியவைகளாகவும் தனிமனித சார்பற்றவையாகவும் இருப்பதனால் துணிவாகப் பலராலும் விமர்சிக்கப்படுகின்றது. அதற்கு அடுத்ததாகவே நாவல்கள் விமர்சனத்துக்கு உட்படுத்தப்படுகின்றன. அவைகூட கதை சார்ந்த அளவீடாக இல்லாது தனிமனிதர், சமூகம் போற்றவையே விமர்சிப்புக்குள்ளாகின்றன.    
- படைப்புக்களில் இடம்பெறும் எழுத்துப் பிழைகள் கருத்துப் பிழைகளை ஏற்படுத்தும் என்பதை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா?
எழுத்துப் பிழைகள் கருத்துப் பிழைகளை ஏற்படுத்தாவிட்டாலும் கூட ஒரு கதையை ஆர்வமாக வாசிக்கும் ஒருவரை நிறுத்தி, சலிப்படைய வைப்பவை எழுத்துப் பிழைகள்.
கேள்வி (14) நீங்கள் ஒரு பெண் எழுத்தாளரானால், அரசியல் கட்டுரை எழுதும் ஆண் எழுத்தாளர்களைப் போல நீங்களும் அரசியல் கட்டுரைகள் எழுதியிருக்கிறீர்களா?.
அரசியல் வேலைகள் பல செய்திருந்தாலும் அரசியல் கட்டுரை எழுதுமளவு ஆர்வம் எனக்கு இருந்ததில்லை. அதனால் எழுதுவது பற்றி எண்ணிப்பார்த்ததும் இல்லை.
 கேள்வி (15) நீங்கள் இதுவரையில் எத்தனை ஆக்கங்களை எழுதியிருக்கிறீர்கள்?.
சிறுகதைகள் எத்தனை?.நாவல்கள் எத்தனை?.கட்டுரைகள் எத்தனை?.கவிதைகள் எத்தனை?.எத்தனை நூல்களை  வெளியிட்டிருக்கிறீர்கள்?.
என் எழுத்து என்று பார்த்தால் முதலாவது கவிதை ஆழிப்பேரலை அழிவு நினைவுகூரப்பட்டபோது எழுதப்பட்டது. இரண்டாவது கவிதை செஞ்சோலைப் படுகொலைக்கானது. அதன் பின் பெரிதாக எதுவும் எழுதவில்லை. ஐபிசி வானொலியில் கதிர்கள் என்னும் நிகழ்ச்சிக்காக ஒரு பத்து நாடகங்களை எழுதித் தொகுத்திருக்கிறேன். பின்னர் யாழ் இணையத்தில் இணைந்தபின்னர்தான் என் எழுத்துக்கள் வேகமெடுத்தது. அங்கு எழுதுபவர்களின் ஊக்கம் தான் என்னை இத்தனை உயர்த்தியது எனலாம். அங்கு நான் எழுதிய தமிழர்களின் தொன்மைபற்றிய சுமேரியர்கள் தான் தமிழர்கள் என்னும் கட்டுரைக்கு ஏற்படட ஆதரவும் ஊக்குவிப்பும் மகத்தானது. என்னால் எழுத முடியும் என்னும் நம்பிக்கையை ஏற்படுத்தியவர்கள்  யாழிணைய வாசகர்களும் எழுதுபவர்களும். அதன்பின்னர் என் சொந்த அனுபவத்தையே முதற் கதையாக்கினேன். தொடர்ந்து ஒரு ஆண்டில் பதினைந்து சிறுகதைகளையும் கிட்டத்தட்ட எண்பது கவிதைகளையும் பல கட்டுரைகளையும் எழுதினேன். 2013 ம் ஆண்டு டிசம்பரில் என் இரு நூல்கள் "வரலாற்றைத் தொலைத்த தமிழர்" என்னும் நூலும் "நிறம் மாறும் உறவுகள்" என்னும் சிறுகதைத் தொகுப்புக்களும் நூலாக்கம் பெற்று 2014 மே மாதத்தில் லண்டனிலும் 2015 தையில் சென்னைப் புத்தகச் சந்தையிலும் வெளியீடு செய்யப்பட்டன.
அதன்பின்னர் என் 80 கவிதைகளின் தொகுப்பு 2016 மார்கழியில் பூவரசி வெளியீடாக வெளிவந்து புத்தகக் கண்காட்சியில் வெளியீடு செய்யப்பட்டது. என்னால் 2014 தொடக்கம் எழுதப்பட்ட மிகுதி 14 சிறுகதைகள் "உணர்வுகள் கொன்றுவிடு" என்னும் சிறுகதைத் தொகுப்பாக ஜீவநதியின் வெளியீடாக 2019 பங்குனியில் என் ஊரான இணுவிலில் உள்ள அறிவாலய அரங்கில் வெளியிடப்பட்டது. மொத்தமாக நான்கு நூல்கள் இதுவரை வெளிவந்திருக்கின்றன. ஆனால் இதுவரை எந்த விருதையும் நான் பெற்றுக்கொள்ளவில்லை. அதற்குக் காரணம் விருதுக்காக அனுப்பப்படுமளவு என் எழுத்துக்கள் மேன்மையடையவில்லை என்றும் எண்ணலாம். அதைவிட யாரிடமும் நான் விருதுக்காக என் கதைகளை பரிந்துரைக்கவுமில்லை. மலைகள், ஜீவநதி, ஞானம் போன்றவற்றில் என் ஆக்கங்கள் சில வந்திருந்தாலும் யாழ் இணையத்தில் எழுதுவதோடு மட்டும் நான் திருப்தியடைந்துகொள்கிறேன். மற்றைய இணையத்தளங்களுக்கோ அன்றி செய்தித்தாள்களுக்கோகூட நான் எதையும் அனுப்புவதேயில்லை.
கேள்வி (16) வரலாற்றுக் கட்டுரைகளை எழுதுபவர்கள் ஒரு இனக்குழுமத்தைப் பற்றி எழுதும்போது சார்புநிலைக்குத் தக்கதாக சில வரலாற்றுத் தடங்களை தவிர்த்துவிட்டு, அந்த இனத்தின் மேன்மைமிகு நிகழ்வுகளை அல்லது சம்பவங்களை மட்டுமே எழுதுவது பற்றி உங்கள் அபிப்பராயம் என்ன?
வரலாற்றுக்கு கட்டுரைகளை எழுதுபவர்களில் பலர் அகழ்வாய்வாளராக இருப்பதில்லை. தம் அறிவுக்கு எட்டியவரை தாம் மற்றவர்களினூடாக அல்லது அறிந்துகொண்ட தகவல்களை மையமாக வைத்து தம் மனதுக்கும் காட்சிக்கும் ஏற்புடையதானத்தை மட்டும் வைத்து எழுத்துப்பரப்பில் தன்னை நிலைநிறுத்திக்கொள்ளவும் அறிவார்ந்தவராகக் காட்டிக்கொள்வதற்கு மட்டுமே எழுதுகின்றனர். அவர்கள் வேறெதையும் பற்றிச் சிந்திப்பதுமில்லை. மற்றைய இனத்தைப்பற்றி அக்கறையோ கொள்வதுமில்லை.
-ஒரு வரலாற்று ஆசிரியரும் ஊடகவியலாளருமான ஒரு கல்விமானிடம் இதே கேள்வியைக் கேட்ட போது வரலாறுகள் யாவும் சார்பு நிலையிலேதான் எழுதப்படுகின்றது. அது தவிர்க்க முடியாதது எனறு சொன்னார் அவர் கருத்துப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
அன்றுதொட்டு இன்றுவரை பலர் முறையான அகழ்வாய்வுகளினூடே உண்மைகளை நிலைநாட்ட முனைந்தாலும் பல வல்லரசுகளின் தலையீடுகளின்றி அவர்களால் எவற்றையும் சுதந்திரமாக உலகுக்கு கூற முடிவதில்லை. அதற்குக் காரணம் உலகின் தொன்மைமிக்க இனங்களாக, முதலில் நாகரீகம் அடைந்த இனங்களாக ,அறிவுபூர்வமான கண்டுபிடிப்புக்களுக்குக் காரணமானவர்களாகக் கறுப்பு இனங்களே ஆடையாளப்படுத்தப்பட்டுள்ளனர். தற்பொழுது உலக வல்லரசுகளாக இருக்கும் வெள்ளை இனத்தவருக்கு அவை ஏற்புடையதல்ல. தேவையற்றுப் பல போர்களை ஆரம்பித்து தொன்மையை அடையாளங்கள் எங்கெல்லாம் இருந்ததோ அங்கிருந்து அகழ்வுப் பொருட்களையும் செல்வங்களையும் எடுத்துவிட்டு அடையாளங்களைச் சிறிதுமின்றி அழித்தொழித்துக்கொண்டிருக்கின்றனர். இன்னும் ஒரு நூற்றாண்டின் பின்னர் உலகின் தொன்மையான இனம் வெள்ளை இனத்தவர்கள் என்று அவர்கள் கூறும்போது அதற்கு எதிர்ச் சான்றுகளாக எவையும் இருக்கப்போவதில்லை. இருப்பவர்களும் அதுபற்றிக் கவலை கொள்ளப் போவதில்லை. அதற்கான பாரிய திட்டமிடல்கள்தான் இந்த வரலாற்றுச் சார்புநிலைகளும் ஆவண அழிப்புக்களும். எம் கண்முன்னாலேயே கீழடி ஆய்வை நிறுத்த இந்திய அரசு செய்தவற்றைப் பார்த்துக்கொண்டு மட்டும்தானே எல்லோரும் இருக்கின்றனர். 
கேள்வி (17): நீண்ட காலமாக பெண்கள் மத்தியில் தாம் தொடர்ந்தம் அடிமைப்பட்ட நிலையிலேயே  இருந்து வருகிறோம் என்ற நம்பிக்கை  நீடித்துக் கொண்டே வருகின்றது.இது உலக நாடுகளில் உள்ள அனைத்து இனப் பெண்களிடமும் காணப்படுகின்றது.குறிப்பாக பெண் விடுதலையில் பாரிய வளர்ச்சியடைந்த  ஐரோப்பிய நாட்டுப் பெண்கள் தாம் இன்னும் ஆணாதிக்கத்தினாலும்  சமூகத்தினாலும்  விடுதலை அடையவில்லை இன்னமும் கருதி வருகிறார்கள்.நீங்கள் இதுவரையில் பெண் விடுதலை சம்பந்தமாக நீங்கள் ஒரு இலங்கைத் தமிழ்ப் பெண்ணாக அனுபவித்துக் கொண்ட அனுபவங்கள் ரீதியாகவும்,உலகப் பார்வையில் நீங்கள் கவனித்ததை வைத்தும் பெண்கள் தொடர்ந்தும் அடிமைப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பதை ஏற்றுக் கொள்கிறீர்களா?.
இத்தனை நூற்றாண்டுகள் கழிந்தபின்னும்கூடத் தொடர்ந்தும் பெண்கள் பலர் அடிமைப்படுத்தப்பட்டு பல கொடுமைகளுக்கு முகம்கொடுத்தபடிதான் இன்றுவரை இருக்கிறார்கள். நாகரிக வளர்ச்சசியும் பெண்களுக்குப் பாதுகாப்பான சட்டங்களும் முதன்மையாக இருக்கும் ஐரோப்பிய நாடென்றாலென்ன, உலகம் முழுவதும் கூட அடிமைநிலை தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றது. அதற்கான புறக்காரணிகளாக தொழில், ஊதியம், ஆணாதிக்க அரசியல் சமூகக் கட்டமைப்புக்களின் ஆதிக்கம் அதிகமாக இருப்பினும் குடும்ப அமைப்பு முறையில் குழந்தை பெற்றுக்கொள்வது முதற்கொண்டு குழந்தைகளை வளர்த்து ஆளாக்குவதும் பெண்தான் என்னும் நிலையில் பல தடைகளையும் அனுசரிதத்தல்களையும் பெண்கள் ஏற்கவேண்டியுள்ள அதேவேளை ஆண்களின் பாலியல் இச்சைகளுக்கு  விருப்புவெறுப்பின்றி இசைந்துபோகவேண்டிய கட்டாயத் திணிப்பும் பெண்களுக்கெதிரானதொரு பாரிய அடக்குமுறைதான். ஆனாலும் தன் கணவன் என்னும் ஆணால் அடக்கி வைக்கப்படும் ஒரு பெண், தான் பெற்ற பிள்ளைகளிடையே ஆண், பெண் பாகுபாட்டைக் காட்டியே வளர்ப்பதும், பெண்கள் மதிப்பாக நடத்தப்படவேண்டும் என்பதை தன் ஆண் பிள்ளைக்குச் சொல்லி, அப்பிள்ளையை ஒரு நல்ல ஆணாக வளர்க்காத தவறும் வீட்டில் தன் தாய் தந்தையால் நடத்தப்படும் நிலை பார்த்து, சமூகத்தின் ஆணாதிக்க  சிந்தனையோடு வளரும் ஆண்குழந்தை போற்ற காரணிகளும் முக்கியமாகப் பெண்கள், தாமே தம் சுதந்திரம் பற்றி அறியாதவர்களாகவும் அடக்குமுறைகளை உடைத்து வெளியேவரும் மனோதிடம் அற்றவர்களாக எம் சமூக அமைப்பு கட்டமைத்து வைக்கப்பட்டுள்ளதுமே பாரிய பின்னடைவுகளாகும். அத்தோடு வலுவான ஆணின் உடலமைப்பும் பின்விளைவுகளற்ற நிலையுமே அவர்களுக்குச்ச்சார்பாயும் பெண்களுக்கு எதிராகவும் உள்ளன. பெண்கள் விரும்பித் துணிவுபெற்றாலன்றி பெண்ணடிமைத்தனம் தொடர்ந்துகொண்டுதான் இருக்கப்போகின்றது.
-எழுத்துத்துறையிலிருக்கும் நீங்கள், உண்மையில் பெண்கள் விடுதலை அடையவில்லை என்பதற்கு சொல்லும் காரணங்கள் எவை?
எழுத்துத்துறையே அதற்கு ஒரு நல்ல உதாரணம். ஆண்களால் சூளப்பட்ட உலகில் அத்தனையும் ஆண்களின் கைகளிலேயே உள்ளது. பெண் எத்தனை சிறந்த எழுத்தாளரானாலும் ஆணே முதன்மைப்படுத்தப்படுகின்றான். முன்னே வரும் பெண்கள் எதோ ஒருவகையில் புறம் தள்ளப்படுகின்றனர். அதாவது ஆண் சார்ந்து நிர்ப்பவரை புகழ்வதும் எதிர்ப்பவரை இகழ்வதும் இன்றுவரை தொடர்கிறது. சமையலறை என்னும் சுரங்க அறையிலிருந்து மீண்டுவர முடியாதபடி குழந்தைகள், கணவன் என்னும் வட்டத்துள் வீழ்ந்து கிடப்பதுடன் நின்றுவிடாது பேரக்குழந்தைகள் என்றும் தற்போதைய இடம்பெயர்ந்த சமூகம் பெற்றதாயை அடிமையாக்கி மகிழ்கிறது. தான் நினைத்த நேரம் தூங்கி எழுந்து, தனக்கு விரும்பியதை சமைத்துண்டு, தனக்கு ஏற்படும் சிறிய சிறிய ஆசைகளை தன் கணவன் பிள்ளைகளிடம் கேட்காமல் நிறைவேற்ற முடிகிற பெண்ணே சுதந்திரமான பெண் என்பேன்.  இந்த சுதந்திர நிலை புலம்பெயர்ந்த பெண்கள் சிலருக்கு இருக்கின்றபோதும் பல பெண்கள் ( வெள்ளை இனப் பெண்கள் உட்பட ) இன்னும் கணவனுக்குப், பிள்ளைகளுக்கு, சமூகத்துக்குப் பயந்து அடிமைத்தனத்துடன் உலகம் முழுவதும் வாழ்ந்துகொண்டுதான் இருக்கின்றனர்.
கேள்வி (18) கற்பு என்பது உடல் சார்ந்ததா? மனம் சார்ந்ததா?.
கற்பு என்பது மனம் சார்ந்ததுதான். அதை தம்வசதிக்காக உடல் சார்ந்ததாக ஆண்களும் இச்சமூகமும் கட்டமைத்து வைத்துள்ளது. ஒருவர் தனக்குத்தானே நேர்மையுடன் இருக்கவேண்டும். தான் வாழும் சமூகம் உறவுகள்,குடும்பம் எல்லாவற்றையும் நேர்மையுடன் அனுசரித்து, அவர்களுக்கு எதிர்மறையான விடயங்களை, தன் குடும்பத்துக்கேனும் தீங்கு நேராத உண்மைத் தன்மையுடன் வாழ்தலே கற்பு என்பேன் நான்.
-பெண்களுக்கு மட்டுந்தான் கற்புநெறி தேவை ஆண்களுக்குத் தேவையில்லை என்று சொல்வது சரியா?
இருபாலாருக்கும் பொதுவானதுதான் கற்பு ஆயினும் உடலியல் ரீதியாக அந்தக்காலத்தில் பெண்ணை அடக்கவும் தன் உடல் இச்சைகளைத் தீர்க்கவும் தன்னை விட்டுப் பெண் வேறு ஆணை நாடாதிருக்கும் பொருட்டு ஆணால் உருவாக்கப்பட்ட சொல்லே கற்பு. கணவனை விடுத்து ஒரு பெண் இடையில் வேறு ஆணை நாடிச் செல்லும்போது அவர்களுக்குப் பிள்ளைகள் இருந்தால் அது அப்பிள்ளைகளின் வாழ்வில் பலமான அழுத்தங்களை ஏற்படுத்தும் என்பதற்காகவும் இருக்கலாம். அத்தோடு இவள் பெண் . என்னை இவள் விட்டு வேறொருவனை நாடுவதா என்னும் இறுமாப்பில் கூட ஆண்கள் பெண்ணுக்கு மட்டும் கற்பு என்று கூறியிருக்கலாம். அது ஒரு குடும்ப உறவுக்கு, சமூகத்துக்குப் பாரிய பின்னடைவை ஏற்படுத்தக் கூடும் என்னும் நல்ல எண்ணத்தில் ஏற்படுத்தப்பட்டிருந்தாலும் பின்னாளில் ஆண்களின் தவறுகள் பெண்கள்மேல் திணிக்கப்பட்டு, பெண்கள் மட்டுமே தண்டைக்குரியவர்களாகக் கருதப்பட்டனர். ஆண்கள் தப்பித்துக்கொண்டனர். பெண்கள், ஆண்கள் கற்பிழப்பதனால் எத்தனையோ குடும்பங்கள் சிதைந்துபோயுள்ளன. ஆகவே ஆணும் பெண்ணும் கற்போடிருத்தலே சிறந்தது.
கேள்வி (19) உங்களிடம் கேட்கப்பட்ட ஆறாவது கேள்விக்கான  பதிலில் சாதரணர் அல்லாதவர்களுக்கு  அவர்களுக்கு விளங்குபடி எழுத வேண்டுமென்று குறிப்பிட்டிருந்தீர்கள். சாதாரண மனிதர் நிலையிலிருந்துதான்  சாதாரண அல்லாத நிலைக்கு வந்தவர்களாதலால் சாதாரண மனிதர்கள் வாசித்து விளங்கிக் கொள்ளும் கதைகளை  சாதாரண அல்லாதவர்கள் விளங்கிக் கொள்ள மாட்டார்களா?
நான் கூறியது சாதாரணர் அல்லாதோருக்கு அவர்களுக்கு ஏற்றாற்போல் எழுதவேண்டும் என்றேன்.அவர்களால் சாதாரண கதைகளையும் வாசித்து விளங்க முடியும். எல்லோராலும் எல்லாவற்றையும் புரிந்துகொள்ள முடியாது. அதற்காக ஒரேமாதிரியான கதைகளையும் எல்லோரும் எழுத முடியாது. அவரவர் அறிவின் தரத்துக்கேற்பவே எழுத முடியும். இலக்கியம் என்றால் எல்லாமும்தான் அடக்கும். சாதாரண மக்களும் ஒளவை கூறிய ஆத்திசூடியைப் புரிந்துகொண்ட அளவு திருக்குறளையோ அன்றி தொல்காப்பியத்தையோ புரிந்துகொள்ள முடியுமா?  அதுபோன்றதுதான் கதைகளும்.
கேள்வி (20) உங்களிடம் கேட்கப்பட்ட எட்டாவது கேள்விக்கான பதிலில் "பொன்னியின் செல்வன் " ஒரு இலக்கிய நாவல் எனக் குறிப்பிட்டிருக்கிறீர்கள். மன்னர் காலத்து அரசுகளின் நிர்வாக கட்டமைப்பும் அரசியல் சார்ந்ததுதான் - அது மன்னர் காலத்து அரசியலாகும். எனவே  அரசியல் சார்ந்ததுதான் என்பதை மறுக்கிறீர்களா?
நிட்சமாக மறுக்கிறேன். அந்நூலை எழுதிய கல்கி  அவர்கள் சோழர் காலத்தில் வாழ்ந்தாரா? அல்லது அவர் எழுதியபோதுகூட சோழர் ஆட்சி இருந்ததா? அது ஒரு சிறந்த வரலாற்றுப் புனைவு. அவர் எழுதியவற்றில் 50 வீதம் கூட அக்காலத்தில் நடந்திருக்காமல் இருந்திருக்கலாம் அல்லது நடந்திருக்கலாம். அனால் அந்நாவல் அவர் எழுதியபின் அந்நாட்டு அரசியலில் ஏதும் தாக்கத்தை ஏற்படுத்தியதா அல்லது அந்நாட்டு மக்களுக்கு அரசியல்த் தெளிவை ஏற்படுத்தியதா? அன்றி அரசியல் மாற்றமேலும் ஏற்பட்டதா ? எதுவுமே இல்லையே. பாரதியார் கவிதைகள்  சுதந்திரப்போரில் பல மனங்களில் தாக்கங்களை ஏற்படுத்தி விடுதலைப்போரில் மக்களை இணைய வைத்தன. ஈழத்தில் எழுதப்பட்ட இக்கியங்கள் மக்களிடமும் அரசியலிலும் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தின. அவைதான் அரசியல் சார்ந்த இலக்கியம் எனலாமேயன்றி பொன்னியின் செல்வன் சாதாரண ஒரு வரலாற்றைப்பற்றிப் புனையப்படட சிறந்த இலக்கியம். அவ்வளவே.
கேள்வி (21) ஒரு சாதாரண குடிமகனே தனது மனைவி பலபேருக்கு  முன்னாள் அவமானப்படும்  போது உயிரைத் துச்சமென நினைத்து வெகுண்டெழுவான்.ஆனால் பலபேர் முன்னிலையில் தங்களுடைய மனைவியான பாஞ்சாலி துகிலுரியப்பட்ட போது வாழவிருந்த பஞ்சபாண்டவர்கள் கோழைகள்தானே?. உங்கள் பார்வை என்ன?
இது ஒரு உண்மைச் சம்பவமா அல்லது புனைவா என்னும் தர்க்கம் நீண்டகாலமாக நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. பஞ்சபாண்டவர்கள் எந்த இனத்தவர்? போருக்குத் துணிவுடன் தன் மகனை அனுப்பிய தாய் தொடங்கி புறநானூற்றுப் பாடல்களில் எல்லாம் தமிழர்கள் வீரம் செறிந்து கிடக்கிறது. மானத்தைப் பெரிதாகத் தமிழர்கள் மதித்து வாழ்ந்தார்கள் என்பதை பல கதைகள், பாடல்களினூடாக நாம் அறிந்துள்ளோம். மனித இனம் நாகரீகம் அடைந்த காலம் தொட்டு மனிதன் தன் இருப்பைத் தங்கவைத்துக்கொல்வதில் பாரிய முனைப்புக் காட்டியுள்ளான். அப்படி இருக்க அரசாண்ட மன்னர்கள் எதுவித சிந்தனையும் இன்றி அனைத்தையும் இழப்பதும் கட்டிய மனைவியையும்  வைத்தே சூது விளையாடினார்கள் என்பதையும் ஏற்றுக்கொள்ளவும் நம்பவும் முடியவில்லை. அப்படியாயினும் ஒரு பெண்ணை மற்றவர் துயிலுரியும்போது எதுவும் செய்யாது பார்த்துக்கொண்டிருப்பது கோழைத்தனத்தின் உச்சம் மட்டுமல்ல அவர்கள் ஆண்கள் என்பதையும் ஒத்துக்கொள்ள முடியவில்லை. சிலவேளைகளில் வேற்று இனத்தவர்களிடையே நடைபெற்ற ஒரு சம்பவத்தை வைத்து ஒரு சிறந்த எழுத்தாளரான வியாசரின் கற்பனையில் வடிவமைக்கப்பட்ட சம்ஸ்கிருத நூலைப்பற்றி நாம் கவலை கொள்ளத் தேவை இல்லை.
கேள்வி (22) சீதையை நம்பாமல் அவளின் கற்பை பரிசோதிக்க நெருப்பினுள் இறங்கச் செய்த இராமனை எவ்வாறு பார்க்கிறீர்கள்?
இதுவும் வாலமீகி என்பவரால் எழுதப்பட்ட வடமொழி நூல்தான். இந்நூலிலும் பல இடைச் சொருகல்கள் ஏற்பட்டிருக்கும். அதில் ஒன்றுதான் சீதை தீக்குளிப்பு என்பதும் என நான் எண்ணுகிறேன். ஆனாலும் ஆண்களை பொறுத்தவரை பெண்களில் சந்தேகம் கொள்வது அன்றுதொட்டு நடைபெற்று வருகிறதுதான். இச் சம்பவத்தின் மூலம் கடவுளாக இவர்கள் சித்தரித்த இராமன் என்பவன் சாதாரண மனிதன்தான் என்று அவர்களே ஒத்துக்கொள்கிறார்கள் என்று எடுத்துக்கொள்ளாமலாமா???
கேள்வி (23) நீங்கள் பெற்ற விருதுகள் எத்தனை?.எங்கெங்கு அவற்றைப் பெற்றீர்கள்?.
நான் இதுவரை விருதுகள் எவற்றையும் பெறவில்லை. என் நூல்கள் விருதுகளுக்குத் தகுதியானவையா என்பதுக்குமப்பால் நான்குபேரின் முடியில் ஒருவரின் எழுத்துத் தங்கியிருக்கும் என்பதில் எனக்கு உடன்பாடில்லை. அத்தோடு அந்த நான்குபேரின் பரிந்துரைப்பில் எனக்கு விருது கிடைக்கவேண்டும் என்று நான் எண்ணுவதும் இல்லை. அதற்காக உள்ள இணையங்களுக்கும் பத்திரிகைகளுக்கும் விருது வழங்குநர்களுக்கும் என் கதைகளை அனுப்பிக்கொண்டிருப்பதும் இல்லை. நான் யாழ் இணையத்தில் என் கதைகளை பகிர்ந்துகொள்வதுடன் திருப்தியடைகிறேன். சிலர் கேட்டால் மட்டும் சில தளங்களுக்கு என்கதையை அனுப்பிவைப்பது. மற்றப்படி தகுதியே இல்லாத சிலரின் எழுத்துக்கு அவரின் முகத்துக்காகவோ அல்லது வேறு காரணத்துக்காகவோ கிடைத்திருக்கும் விருதுகளை பார்க்கும்போது சிரிப்புத்தான் வருகிறது.