Wednesday 29 July 2020

கண்காணிப்பது அவசியம்-நிவேதா உதயராஜன்




    உலகிலேயே மிகவும் கொடுமையான செயல்கள் எனப் பட்டியலிடப்பட்டால்  அதில் முதன்மையாக இருப்பது பாலியல் வன்கொடுமை என்பதாகத்தான் இருக்கும். அன்றுதொட்டே பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகிவந்துள்ளனர்தான் எனினும் அண்மைக்காலங்களில் பாலியல் துன்புறுத்தல் பற்றிக் கேள்விப்படுவது அதிகரித்துள்ளது. அதற்கு முக்கிய காரணம் ஊடகங்கள், இலத்திரணியல் சாதனங்கள், தேவையற்ற காணொளிகள் எனப் பலவற்றைக் கூறினாலும் அதன் ஒட்டுமொத்தப் பெயர்  தொழில் நுட்ப வளர்ச்சியே எனலாம். இருபத்தியோராம் நூற்றாண்டில் கூட பெண்களுக்கான ஒரு சமத்துவம், சுதந்திரம் என்பன  பேணப்படாத நிலையில் வன்கொடுமை என்பதும் அதிகரித்து எத்தனையோ பேரின் வாழ்வைத் தினம் தினம்  சிதைத்தபடி இருக்கிறது.  அதிலும் சிறுவர் வன்கொடுமை என்பது மிகவும் அதிகரித்துள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன.
    உலக நாடுகளெல்லாம் எத்தனையோ சட்ட வரைபுகளைப் பெண்களுக்காக ஏற்படுத்தியுள்ளபோதும், பெண்களுக்கான , சிறுவர்களுக்கான பாலியல் துன்புறுத்துதல் இன்னும் தொடர்வதற்கான காரணம் அதுபற்றி உண்மைகள் வெளியே சரியானபடி தெரிவதில்லை. வெளியே சொல்ல வெட்கப்படுகின்ற பெண்கள்,  பாதிக்கப்பட்ட சிறுவர்களின் பெற்றோர்கள், சமூகம் என பெரிய தடைகளைத் தாண்டும் மனோதிடம் பலருக்கும் இல்லாதிருப்பதே இத்தகைய செயலைச் செய்யும் காட்டுமிராண்டிகளை இனங்காண முடியாததாகவும் இருக்கிறது.
    பெரிய பெண்கள் தமக்கு நடைபெறும் வன்கொடுமைகளை உணரவும் , எதிர்க்கவும் முடிகின்ற சூழலில் இருக்கின்றபோதும் அதையும் மீறி நடக்கின்ற வன்முறைகள் கொடுமைமிக்கது என்றால், எதுவும் தெரியாத சிறுவர்கள்  தமக்கு நடப்பது வன்முறை என்றே தெரியாது அதற்குப் பலியாகிப் போவது கொடுமையிலும் கொடுமை. அதற்குக் காரணம் இலகுவாக சிறுவயதினர் மிரட்டிப் பயன்படுத்தப்படுவதும், என்ன நடக்கிறது என்பது புரியாததாலும், இப்படியானது சாதாரணமாக எல்லோருக்கும் நடப்பது போன்று அவர்கள் நம்பவைக்கப்படுவதும் காலங்காலமாக நடந்துதான் வந்திருக்கிறது. அதிலும் தம் வீட்டில் இருக்கும் உறவினர், நண்பர்கள், வீட்டில் வாடகைக்குத் தங்கி இருப்போர், பாடசாலை ஆசிரியர்கள், ஏன் உரிமையாய் வீட்டுக்குள்ளேயே நடமாடும் தாயாரின் தந்தையாலோ அல்லது தந்தையின் தந்தையாலோ, அதைவிடக்கொடுமையாக பெற்ற தந்தையாலும் கூட பலர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியபடிதான் இருக்கின்றனர்.
    இந்த விடயத்தில் முக்கியமாக கவனமாக இருக்கவேண்டியது பெற்றோரின் கடமைதான் எனினும் தந்தையை விடத் தாய்க்கே அந்தப் பொறுப்பு அதிகமாகிறது. ஒரு சிறுமி தனக்கு ஏற்பட்ட கொடுமையைத் தன்  தாய்க்குச் சொல்லக்கூடிய துணிவை அவர்கள் பெறும்படி பிள்ளைகளுடன் உறவைப் பேணுவது மிக முக்கியமானது. அதைவிட பல பிள்ளைகள் குற்றச்சாட்டுகளைக் கூறும்போது பல பெற்றோர் அதைக் காது கொடுத்துக் கேட்பதும் இல்லை. அந்தப் பிள்ளை கூறுவதை நம்புவதுமில்லை. எப்போது நாம் கூறுவதை என் பெற்றோர் கேட்க்கின்றனர், அவர்களிடம் நாம் எந்த விடயத்தையும் கூறலாம், அவர்கள் மட்டும் தான் எம்மைக் காப்பாறுவார்கள் என்ற நம்பிக்கையை ஒவ்வொரு பெற்றோரும் பிள்ளைகளிடம் ஏற்படுத்தவேண்டும். பிள்ளை கூறுவதை நம்பாமல் இவள்/ இவன் பொய் கூறுகின்றனரோ என்ற சந்தேகம் ஏற்பட்டு நாம் பிள்ளைகளைக் கடிந்துகொண்டால் , பெரியோர் எம்மை நம்பப்போவதில்லை என்னும் அசைக்க முடியாத நம்பிக்கை பிள்ளைகளுக்கு ஏற்பட்டு அவர்கள் அதன்பிறகு நடக்கும் தொடர் வன்முறைகளைக் கூட எம்மிடம் பகிர்ந்துகொள்ளாது தம்முள்ளேயே போட்டு மூடி, அவர்களை மீள முடியாத இக்கட்டில் தள்ளுவதற்கு ஏதுவாகிவிடும்.
    பள்ளி சென்று வரும் உங்கள் பிள்ளைகளுடன் மனந்திறந்து உரையாடுங்கள், அவர்கள் சோர்வாகத் தெரிந்தால்  உரியவாறு அவர்களுடன் பேசிப் பிரச்சனை என்ன என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள். நண்பர்களோ உறவினர்களோ வீட்டுக்கு வந்தால் அவர்கள் மேல் ஒரு கண் வையுங்கள். உங்கள் பிள்ளைகளின் நண்பர்கள், நண்பர்களின் பெற்றோர், இன்னும் அவர்களுடன் தொடர்புடைய அனைத்து ஆண்பெண்களுடனும் அவதானமாக இருங்கள். நான் ஏன் பெண்களையும் என்று கூறுகிறேன் என்றால் சில பெண்கள் கூட தன் கணவனின் அச்சுறுத்தலுக்குப் பயந்து அவர்கள் செய்யும் வன்கொடுமைகளுக்கு உடந்தையாக இருந்திருப்பதாகச் செய்திகள் கூறுகின்றன.
    ஆகவே ஒவ்வொரு பெண்களும் விழிப்புடன் இருக்கவேண்டும். உங்கள் வீட்டில் இருக்கும் ஆண்களைக்கூட அப்பப்போ அவதானிக்கவேண்டும். என் கணவர் தானே நல்லவர் என்னும் முட்டாள்தனமான நம்பிக்கையுடனேயே பலர் நடப்பவற்றைக் கண்டும் காணாமலும் அல்லது அதை வெளியே எப்படிச் சொல்வது எண்ணம் தயக்கத்தில் பேசாமல் இருக்கின்றனர். அது மிகவும் தவறான அணுகுமுறையாகும். உங்களுக்கு ஒரு விடயத்தில் சந்தேகம் ஒன்று ஏற்பட்டிருப்பின் உங்களுக்கு மிக நெருக்கமானவருடன் அந்த விடயம் பற்றி உரையாடித் தெளிவுபெறுவதும், சரியான முடிவை எடுத்து செயல்படுத்துவதும் மிக அவசியமான ஒன்றாகும். அதைவிடப் பாதிக்கப்பட்டவர்களின் வலியைப் புரிந்துகொண்டு அவர்களுக்கு உடல், உளரீதியான ஒத்துழைப்பையும் பாதுகாப்பையும் ,நம்பிக்கையையும் கொடுக்கவேண்டியது மிகமிக முக்கியமானது. அதைவிடத் தவறு செய்தவர் யாராய் இருப்பினும் தண்டனை பெற்றுத் தரவேண்டியதும் மிக மிக அவசியமான ஒன்று.
    எங்கள் பிள்ளைகளை எம்மைத் தவிர எவருமே பாதுகாக்க முடியாது. பணம் பணம் எனப் பணத்தின் பின்னால் ஓடிக்கொண்டிருக்காது ஒரு குறிப்பிட்ட வயதுவரை உங்கள் பிள்ளைகளுடன் நீங்கள் இருப்பதும், அவர்களை புரிந்துகொள்வதும், அவர்களுக்கு உங்கள்பல நம்பிக்கையை ஏற்படுத்துவதும் ஒரு ஆரோக்கியமான பிள்ளை இந்தச் சமுதாயத்தில் தன்னம்பிக்கையுடன் வாழ வழிசெய்யும். உங்கள் வீடுகளில் கண்டவர்களையும் வாடகைக்கு அமர்த்தாது உங்கள் குழந்தைகள் ஓடிவிளையாடி சுதந்திரமாய் இருப்பதற்கான சுற்றுச் சூழலை உருவாக்குவது பிள்ளைகளை பெற்றவர்கள் ஒவ்வொருவரினதும் தலையாய கடமை. புலம்பெயர் சூழலில் மற்றவர்களின் வாழ்க்கைத் தராததுக்கு எம்மையும் உயர்த்தவேண்டும் என்னும் பேராசை காரணமாகவே பல பெற்றோர்கள் இரு வேலை, இரவுநேர வேலை, பிள்ளைகளை வீட்டில் தனியாக விடுதல், உறவினர்கள் நண்பர்கள் மற்றும் பாதுகாவலர்களிடம் விட்டுவிட்டு வேலைக்குச் செல்வது போன்ற தவறுகளை செய்கின்றனர். அதுவே பின்னர் பிள்ளைகளுக்கு உளவியல் பாதிப்பை ஏற்படுத்துவதற்கும் ஏதுவாகிறது. பேராசை கொள்ளாத போதும் என்ற மனமும், மற்றவர் வாழ்வோடு ஒப்பிடாத நிலையும், எளிமையான ஆரோக்கியமான வாழ்வுமே எம் புலம்பெயர் சமூகத்தை உயர் நிலைக்குக் கொண்டுவரும்.
    கொரோனாவின் பின்னாவது ஒவ்வொருவரும் உலக வாழ்வைப்பற்றிச் சிந்திக்க வேண்டும். எத்தனை பணம் வைத்திருந்தும் பயனின்றி இறந்தவர் எத்தனைபேர். நாம் எப்போதும் இறந்துபோகலாம். இறக்கும் வரை எப்படி வாழ்ந்தோம் என்பதில்தான் எம் வாழ்வின் வெற்றி அடங்கியுள்ளது. இதை நாம் ஒவ்வொருவரும் உணர்ந்து மனித நேயத்துடனும், அன்போடும், அகந்தை துறந்தும் வாழ்வோமானால் அதுவே உயரிய வாழ்வு.
     
    நிவேதா உதயராஜன்-ஐக்கிய இராச்சியம்
     

    21.07.2020
     

No comments:

Post a Comment