Saturday 7 November 2015

முதுமை






சிந்தனை எனை விட்டு என்றோ போனதனால்
கேட்கும் எதுவும் மனதில் பதிய மறுக்கின்றது

பசிதாகம் கூட எடுக்காமல் கிடக்கின்றது
நாவின் சுவை மறந்து நாளாகி விட்டது
பச்சைத் தண்ணீர் மனம் மறுக்க எப்போதும்
பழசெல்லாம் வந்து வந்து போகின்றது

காதில் கலகலப்புக் கதைகேட்டு நாளாகி
கட்டிலே கதியென்று கிடக்கின்றேன்
தொட்டதுக்கும் துணைவேண்டி
துயரோடு தூக்கமிழந்து கிடக்கிறேன்

கடைகண்ணி சென்றும் கனகாலம் ஆகி
கண்ணாடி கூடக் கறுப்பாகிப் போச்சு
கண்பார்வை போயும் கனநாளாய்ப் போச்சு

கோயில் குளமுமில்லை கூடிப்பேச யாருமில்லை
கொண்டை மயிர் முடியக் கூந்தலில்லை
கோதிக் காயவைக்கும் நிலையுமில்லை

பத்துப் பிள்ளை பெற்றும் பசியாற வழியுமில்லை

பட்டினி கிடக்கவும் பாள்மனது கேட்குதில்லை
பக்கத்தில் இருப்போரின் பாசம் இழந்து நான்
பரிதவித்துக்கொண்டே இருக்கின்றேன்

எதிர்பார்த்து ஏங்கி நிற்க யாருமின்றி
இன்னும் ஏன் தான் இவ்வுலகில் ஆசைகொண்டு
இருப்போரை வருத்தி கூடகன்று போகாமல்
கொடும்கனலில் கூடுகாயக் காத்திருக்கிறேனோ

எல்லையற்ற ஏகாந்தவெளியில்





எல்லையற்ற ஏகாந்த வெளியில்
எண்ணங்கள் இனிமையாய்
சிறகடித்துப் பறக்கின்றன

மனதின் மகிழ்வில் வழிமாறி
வானத்தின் எல்லையெல்லாம்
தொட்டுவிட்டு நீளுகின்றன
வசந்தம் குவிந்த வாழ்வின்
வண்ணத்துப் பூச்சிகளாய்
சிறகடிக்கும் சிந்தனைக் குவியல்கள்

தேன் நிரம்பி வழியும் வதையாய்
தெவிட்டும் வாழ்வின் தென்றலில்
தத்திநடைபோட்ட காலம் கூட
தென்றல் தொட்டு நீங்கும்
தென்னைமர ஓலைகளின் தெம்மாங்காய்
திக்கெட்டும் திண்ணென்று கேட்கின்றன

பாளை வெடித்த தென்னம் பூவில்
பட்டுத் தெறிக்கும் மழை நீராய்
சிலிர்ப்பில் மனம் சிறகடித்துப் பறக்க
வாழ்வில் வந்து போனவைகள்
வெண்பஞ்சு மேகக் குவியல்களில்
விரல் தொட்டு விளையாடிட மனம்
வீணான ஆசை கொள்கின்றது

ஆனாலும் ஓர்நாள் அணைந்திடும்
அத்தனையும் எம்முள்ளே எதுவுமற்று
அந்த வேளையின் அதிர்வுகள் தாங்க
ஆர்ப்பரித்த மனதை அடக்கி
ஏற்புடைய எண்ண அதிரவைத் தாங்க
எப்பொழுதுமான இயல்பின் நாளுக்காய்
என்னை நானே இசைபாக்குகிறேன்


அன்பெனும் ஆயுதம்





அன்பெனும் ஆயுதம் கொண்டு
அடக்குமுறைகள் அத்தனைகொண்டு
அளக்கமுடியா அன்பை நாளும்
அளந்திட முனைகின்றனர்

கரைந்தும் கரைத்திட முடியா
காலம் கரகங்கள் தினம் ஆட
கனதியாகும் மனதின் பாரத்திலும்
கல்லாக மறுக்கிறது மனம்

மூச்சுப் புக முடியா முடிச்சுக்களாய்
மனவறைகள் எங்கணும் இருக்கும்
உண்மைகளின் மாயங்களால்
மண்மூடிய மேடாய் கிடக்கிறது
மனிதமற்ற மாந்தமனம்

வேடங்கட்ட முடியவில்லை
வேறுபாடு தெரிந்த பின்னால் ஆயினும்
வேரறுத்து வெளிநடப்புச் செய்ய
வித்தையும் தெரியவில்லை

நிந்தனை என்மனதை நானே செய்தபடி
நித்தமும் நினைவின் கனம் துடைக்க
முத்தியடையா மனதின் மார்க்கம் தேடி
முன்வினைப் பயன் முடக்க நாளும்
முகமறுக்க முடியாது மருகுகிறேன்

ஏற்புடையதாயினும் ஏற்புடையதாகா






ஏற்புடையதாயினும் ஏற்புடையதாகா
எதிர்பாரா எதிர்வினைகள்

அதிர்வினது ஆற்பாட்டமற்ற அல்லல்
ஊழ்வினையின் ஊனுருக்கி ஊமையாக்க
ஊனறுக்கும் உணர்வின் கூற்று
ஊடறுத்து உள்ளம் கருக்கி நிற்கும்
வேரறுத்து வினைபுரியும் மரணவாசம்
வேதனையின் விளிம்புகளில் வெந்நீராய்
விழி நனைத்துத் தினம் வேடம் கட்டும்

பாரின் பாச வலையறுக்க பற்றுழன்றுகூடி
பாவச் சுமைகள் எண்ணப்படுகையில்
படிகள் கடந்து ஒவ்வொன்றாய் தாண்டி
பற்றின் பக்குவமற்ற நிணங்களின் தோற்றம்
பார்வை மறைத்துத் தினம் சுமை கூட்ட
மரணத்தின் மணம் தெரிந்து மண்டியிடுகையில்
மனக்குரங்கு ஒவ்வொன்றாய் மீட்டல் செய்யும்

என்ன எண்ணி என்ன எப்போதுமே
ஏக்கமும் கோபமும் எள்ளலும் எகிறலும்
எல்லாம் முடிந்தபின் தான் எல்லை காட்டும்

பெருவெளியின் தனிமையில்




பெருவெளியின் தனிமையில்
நான் காத்திருக்கிறேன்

ஓசைகள் அடங்கியதான
காட்சிகள் அற்றத்தான
அண்டத்தின் ஒருவெளியில்
அணைத்திடும் கைகளற்று
அலைந்திடும் மனது கொண்டு
ஆதங்கத்தில் ஆவிசோர
மீட்சியற்றுக் காத்திருக்கிறேன்

அன்பென்னும் அரிச்சுவடி


 
 
 
 
 
அன்பெனும் அரிச்சுவடி கொண்டு
அத்தனை உயிர்களும் உலகில்

ஆலமரமாய் விழுதுகொண்டு
ஆணிவேர்வரை ஊன்றியபடி
இலவம் பஞ்சாய் அப்பப்போ
இல்லாமலும் போய் விடுகிறது

ஈனர்கள் சிலர் இற்றவராய்
ஈனவே மனமற்று அன்பை
உணர்வுகள் உக்கிப்போக
உலர்ந்துபோக வைக்கின்றனர்

ஊனமுறு மனது கொண்டு
ஊழ்வினை புரிகின்றனர்
எத்தனை ஏதம் வரினும் பலர்
எந்திரங்களாய் எதுவும் தாங்கி
ஏக்கம் மட்டும் எதிர்வு கூறிட
ஏதுமற்றுக் காத்திருக்கின்றனர்

ஐயத்தின் அதிர்வுகளில் எல்லாம்
ஐம்பொறியும் அடங்கிவிட
ஒற்றை மரக் கிளையாய்
ஒன்றிணைய முடிய மனதை
ஓசையின்றி ஒடுங்கச் செய்து
ஓலங்களை ஒலியிழக்கச் செய்து
ஔடத்தின் வீரியத்தில்
ஔவியம் கொண்டபடியே தினம்

வசந்த வாழ்வில்








வசந்த வாழ்வில்
வகைப்படுத்த முடியாத
பல வண்ணங்கள்
வாழ்வின் நீட்சியைக்
கூட்டுவதும் குறைப்பதுமாய்

வேண்டுவன எல்லாம்
வந்துவிடா வாழ்வில்
வேண்டாதவையாய்
சில வல்லினங்கள்
வார்த்தை அடுக்குகளில்
வில்லங்கமாய் வந்தமர்ந்து
அவிழ்க்க முடியாத முடிச்சை
அர்த்தமற்றுப் போடுகின்றன

ஆனாலும் வாழ்வு
நியதிகளின் நிர்ப்பந்தங்களில்
நேற்றும் இன்றும் நாளையும்
சுவாசம் நிறைக்கும் காற்றாய்
நிழல்களும் நிணங்களுமாய்
மனக்கதவின் விளிம்புதடவி
முகமற்ற உருவங்களாய்த் தினம்
முட்டிமோதிப் போகின்றன