Saturday, 16 November 2013

மனம் என்னும் மாயம்

இரவு முழுவதும் அவள் தூங்கினாளா என்று அவளுக்கே தெரியவில்லை. ம் ..... கூட்டிக் கழித்துப் பார்த்தால் ஒரு மூன்று மணி நேரம் தூங் கியிருப்பாளா??? நீண்ட நாட்களின் பின் மனவருத்தம், மட்டற்ற மகிழ்ச்சி,எல்லையில்லா நின்மதி என மாறி மாறி அவளை அலைக்களித்தபடிதான் அந்த இரவு நகர்ந்தது. ஆனாலும் அவளின் மனம் இத்தனை சீக்கிரம் இவ்வளவு தெளிவடையும்  என்று அவளே நினைத்துப் பார்க்கவில்லை. கடந்த காலங்களை எண்ணிப்பார்த்தபோது வரிசையாய் எல்லாம் வந்து போயின.

என்னிடம் என்னதான் இல்லை என்று இவ்வளவு  நாட்கள் இத்தனை கேவலப்பட்டேன்  என்று எண்ணியபோது பெருமூச்சு ஒன்றும் நீண்டதாய் வந்தது. எல்லாம் விதியின் செயல்தான் அன்றி வேறென்ன என்று மனம் நின்மதி அடைந்தது. அவனுக்கும் அவளுக்குமான நெருக்கம், இல்லை நெருக்கம் என்று சொல்வதை விட இருவருக்குமான ஒரு தேவை, மனப் பகிர்வு இருவருக்குமே தேவைப்பட்டதாகவே அவள் எண்ணினாள். அவளது பயித்தியக்காரத்தனமான ஆசைகளை தானே தனக்குள் நியாயப்படுத்தியும் இருக்கிறாள். எனக்கு என் கணவன் மேல் அன்பு இருக்குத்தானே. அதனால் இது துரோகமாகாது என்றுகூட எண்ணியிருக்கிறாள். அவனின் வார்த்தைகளில் மயங்கி வார்த்தைகளுக்காகவே அவனுடன் கதைக்கும் நேரங்களுக்காக மணிக்கணக்காக காத்திருந்து தான் வீணாக்கிய நேரங்களை எண்ணினால் இப்பொழுது சிரிப்பாகவே இருக்கிறது.

நேற்று நடந்ததை எண்ண ஒருகணம் உடல் அதிர்ந்து மீண்டும் சமநிலை கொள்கிறது. கடந்த நாட்களாக அவனிடமிருந்து தொலைபேசி அழைப்பு இல்லாமல் இவள் தூக்கம் தொலைத்து பயித்தியக்காரிபோல் தான் ஆகிப் போனாள். தொலைபேசி கூட வேண்டாம். ஒரு செய்தியை எழுதி அவளை சமாதானப் படுத்தக்கூட அவன் முயலாதது அவளை எதை எதையோ எண்ண வைத்தது.

அவன் மட்டும் என்னை இப்படியே விட்டுவிட்டால் நிட்சயமாக நான் இறந்து விடுவேன் என அவள் மனம் உறுதியாக நம்பியது. மற்ற எதைப்பற்றியும் எண்ணிப்பார்க்காத அவளின் சுயநலம் கண்டு அவளுக்கே வெறுப்பும் ஏற்பட்டது. காலையில் எல்லாம் அவனுடன்  இரண்டு நிமிடமாவது பேசி அவன் முகத்தைப் பார்த்த பின்னர்தான் அவளுக்கு வேலையே ஓடும். அப்படிபட்டவன் மூன்று நாட்களாக இவளுடன் பேசாது எதுவும் எழுதாது இவளை அசட்டை செய்வது இவளால் தாங்க முடியாததாகி, எத்தனை தரம் அழுதிருப்பாள் என்று எண்ண முடியாது அழுகையில் கழித்தாள்.

இவள் தன் தொலைபேசியில் செய்திகளை மன்றாட்டமாக அனுப்பிக்கொண்டே இருந்தாள் அவனை ஒருமுறை தன்னும் தன்னுடன் கதைக்கும் படி. இனி எழுதி என்ன செய்வது. என்னை இப்படி வெறுக்கும்படி என்ன செய்தேன் என்று தானே தன்னைக் கேட்டும் பதில் கிடைக்கவில்லை. நேற்று கணவன் இவளை அவதானித்துவிட்டான். உனக்கு என்ன பிரச்சனை என்றான் முதல்லில். இவளுக்கு நெஞ்சு பயத்தில் திடுக்கிட்டதுதான் எனினும் அவனுக்கு முகத்தில் எந்த உணர்வையும் காட்டாமல் எனக்கு என்ன பிரச்சனை வரப்போகிறது என்று அடித்து அமர்த்திவிட்டாள். அவனும் விடவில்லை. உன்னுடன் இத்தனை நாள் வாழ்கிறேன். எதையோ பறிகொடுத்தது போல் இருக்கிறாய். முகம் எல்லாம் வீங்கின மாதிரி இருக்கு.  என்ன என்று சொல்லு என்றான். ஒரு நிமிடம் எல்லாவற்றையும் கணவனிடம் கூறிவிடுவோமா என்று எழுந்த சுய பட்சாதாபத்துடன் கூடிய எண்ணத்தை  மறுகணமே அடக்கிக் கொண்டாள்.

பாவம் கணவன். இப்ப எதோ சாதாரண விடயம் என்று கூறச் சொல்கிறான். நான் கூறினால் அவனால் தாங்க முடியுமா ??? ஒரேயடியாய் என்னை விட்டுவிட்டுப் போய் விடுவான். அதன் பின் அவளின் நிலை???? ஊரெல்லாம் விடயம் தெரிந்து, அவளைப் போற்றுபவர்கள் எல்லோருமே காறித் துப்புவார்கள் என்று எண்ணியபோதே மனம் நடுங்கியதுதான். ஆனாலும் மற்றவனைத் தூக்கிப் போட மனம் இடங்கொடுக்கவே இல்லை. இப்படியான உறவுகள் கட்டு இல்லாத கிணற்றின் கரையில் நடப்பது போன்றது என்பதை அவள் உணரவே இல்லை. எந்த நேரமும் எதுவும் நடக்கலாம். எங்கு பார்த்தாலும் இப்படியான விடயங்கள் கடைசியில் இரு பக்கத்திலும் பலத்த சேதாரத்தைத்தான் கொண்டுவர முடியும் என்பது தெரிந்தும் அவள் மனம் அவனிடமிருந்து மீளவே இல்லை.

அடிக்கடி தொலைபேசியை எடுத்துப் பார்த்துக்கொண்டே இருந்தாள். வேலை முடிய என்னுடன் கதைத்துவிட்டுப் போகிறீர்களா என்று இவள் அனுப்பியிருந்த செய்திக்கு, அவன் போட்ட பதில் வெறும் M என்ற வார்த்தை தான். அது அவளை அந்தரத்தில் பறக்க வைத்தது. மூன்று நாட்களின் தவிப்பு அடங்கப் போகிறது. அவனுக்கு என்மேல் கோபம் எதுவும் இல்லை என்று தன்னுக்குள் மகிழ்வடைந்தவளாக நேரத்தைப் பார்த்தாள். இன்னும் ஒரு மணிநேரம் இருக்கிறது. அவளின் வேலை நேரம் முடிவடைந்து விட்டது. அவள் பேருந்து எடுத்து வீட்டுக்குப் போய்ச் சேர ஒரு மணித்தியாலம் ஆகிவிடும். அவன் இவளுடன் பேசப்போவது வெறும் பத்தோ பதினைந்தோ நிமிடங்கள் தான். ஆனாலும் அதுவே அவளுக்கு நாள்முழுவதும் என்ன அடுத்தடுத்த நாட்களுக்கும் போதுமானதாக இருந்திருக்கிறது.

வாகன நெரிசலும் பேருந்தின் நெரிசலிலும் அவனுடன் நின்மதியாகக் கதைக்க முடியாது எனத் தோன்ற பக்கத்தில் இருந்த ஒரு கடைக்குள் புகுந்து அத்தனை துணிகளையும் ஒன்றும் விடாது புரட்டிப் பார்த்தாள். பெரிய கடை என்றதனால் யாரும் இவளை அசட்டை செய்யவில்லை. நேரம் குறைந்துகொண்டுவர மனம் அவன் குரல் கேட்கத் தயாரானது. இதோ அவன் அழைக்கிறான். ஸ்கைப்பில் ஹெட்போன் பொருத்தி தயாராக இருந்தவள் பதட்டமானாள். அவளுக்கு அவன் குரல் கேட்கவில்லை. மீண்டும் அவன் அடித்தபோதும் அதே நிலை தான். ஸ்கைப் வேலை செய்யாவிட்டால் போன் செய்யவென்று இன்னொரு தொலைபேசியும் தயாராவே வைத்திருந்தாள். அதில் அவனுக்கு போன்செய்ய அவனின் தொலைபேசி பிசி என்று கூறி இவள் இதயத்துடிப்பை அதிகரிக்கச் செய்தது. நான் எடுக்கிறன் என்று பதில் அனுப்பினாள். அவனிடமிருந்து திங்கள் மாலை எடுக்கிறேன் என்ற வரிகளோடு செய்தி வந்தது. இன்று வெள்ளிக் கிழமை. திங்கள் என்றால் இன்னும் மூன்று நாட்களா??? என்னும் பரிதவிப்பு ஏற்பட மீண்டும் மீண்டும் அவனுடன் தொடர்பு கொண்டாள். அவன் யாருடனோ பேசிக்கொண்டிருப்பதை தொலைபேசியின் செய்தி சொல்லியது. மாறி மாறி இரு தொலை பேசிகளிலும் அடித்தும் எந்தப் பயனும் இல்லை.

என்னை வேண்டுமென்றே இவன் தவிர்கிறானா??? ஒரேயடியாக என்னை கைவிட்டுவிடப் போகிறானா ??? அவனுக்கு வேறு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டுவிட்டதா ??? ஏன் என்னைத் தவிர்க்க வேண்டும். இத்தனை நாட்களில் இப்படி அவன் செய்ததே இல்லையே. அவனுடன் கதைக்காது எப்படி உயிர் வாழப்போகிறேன் என்றெல்லாம் மனம் ஏதேதோவெல்லாம்  எண்ணி ஓலமிட்டுப் பேதலித்தது.

இவளுக்கு ஏமாற்றம் கோபம் எல்லாம் சேர்ந்து அழுகையை வரவழைத்தன. பொது இடம் என்றுகூடப் பார்க்காது பலத்து அழ ஆரம்பித்தாள். எங்கு நிற்கிறோம்  என்ன செய்கிறோம் என்றெல்லாம் அவளுக்குப் புரியவே இல்லை. கடைச் சிப்பந்திப் பெண் வந்து இவள் தோளைத் தொட்டு உனக்கு ஏதும் வருத்தமா என்று கேட்டபோதுதான் இவளுக்குச் சுய நினைவு வந்தது. கடகடவென கடையை விட்டு வெளியே வந்தவளுக்கு மூளை மரத்துப்போனது போல் உணர்வு ஏற்பட்டது. எங்கே போகிறோம் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் வீதியில் இறங்கினாள்.

காது கிழியும் கோர்ண் சத்தங்கள். இவள் சுய நினைவு வரப்பெற்றவளாக தலையைத் திருப்பினால், பயத்தில் இதயம் வேகமாக அடிக்க மனதில் உறை நிலை அதிர்வுகள் ஏற்பட்டது. கையிலிருந்த பை அதிர்ச்சியில் கீழே விழ இன்னும் வினாடி நேரத்தில் நான் இறந்துவிடுவேன் என குரல் ஒன்று காதில் நாராசமாக ஒழிக்க அப்படியே அசைவற்று  நின்றாள் அவள்.

அவளை அப்படியே பற்றி இழுத்தது ஒரு கை. அதன் பின்னரே சுய நினைவு வரப்பெற்று பார்த்தாள் அவள். ஒரு கறுப்பினப் பெண்மணி இவளை இழுத்து வீதி ஓரத்தில் விட்டுவிட்டு வீதியில் விழுந்த இவளது  கைப்பையை எடுத்துவந்து இவள் கைகளில் கொடுத்து என்ன மை சயில்ட். என்ன பிரச்சனை உனக்கு என்று இவளை கைகளை பிடித்து கூட்டிப் போய் அண்மையில் இருந்த பஸ்தரிப்பு நிலையத்தில் அமரவைத்தாள். அதன் பின் தான் இவள் திரும்பிப் பார்த்தாள். அரை அடி தூரத்தில் இருந்த விளக்குக் கடவையில் அந்த ஜீப் மோதி நிற்க பின்னால் வந்த இரு கார்கள் அடுக்கடுக்காய் ஒன்றுடன் ஒன்று மோதி வாகனங்கள் மூன்று இவளின் கண்மூடித்தனத்தால் நாசமாகி இருந்தன.

ஜீப் காரன் கூட அதிர்ந்துபோய் இருந்ததாகவே இவளுக்குப் பட்டது. அவர்களுக்கு ஒன்றும் நடக்கவில்லையா என்று இவள் அந்தக் கிழவியைக் கேட்டாள். நல்ல காலம் யாருக்கும் ஒன்றும் நடக்கவில்லைப் போல் தெரிகிறது. எதோ உன் அதிட்டம் உயிர் தப்பினாய் என்றுவிட்டு டேக் கேர் என்று கூறியபடி வந்த பஸ்ஸில் ஏறிச் சென்றுவிட்டாள்  அவள். அவர்களில் மூன்றாவது கார்க்காரன் மாடும் இவளைப் பார்த்து எதோ எல்லாம் திட்டினான். இவள் எந்த உணர்வுமின்றிப் பார்த்துக்கொண்டே இருந்தாள்.

அடுத்த பஸ் வர இன்னும் பத்து நிமிடங்கள் இருக்கின்றது என எண்ணியபடி பார்வையைத் திருப்பியவள் தனக்குப் பக்கத்தில் அந்தக் கிழவி இருந்த இடத்தில் ஒரு SCRATCH CARD இருப்பதைக் கண்டதும் கைகளில் எடுத்துப் பார்த்தாள். அது இன்னும் சுரண்டிப் பார்க்கப்படாமல் புதிதாகவே இருந்தது. பாவம் அந்தப் கிழவியினுடையதாய்த்தான்  இருக்க வேண்டும். என்னுடன் கதைத்துவிட்டுக்  கைதடுமாறி வைத்துவிட்டுச் சென்றுவிட்டாள்.  நாளை வரும் போது கண்டால் கொடுப்போம் என எடுத்துப் பத்திரப் படுத்திக் கொண்டாள். அவள் இருந்த மனநிலையில் அவளுக்கு வீட்டுக்குப் போய்ச் சேர்ந்தால் போதும் என்றே இருந்தது.

வீட்டுக்கு வந்தபின் மனம் அவனால் ஏற்பட்ட ஏமாற்றத்திலிருந்தும் விபத்தினால் ஏற்பட்ட பாதிப்பிலிருந்தும் முற்றாக இல்லாவிட்டாலும் கொஞ்சம் சமநிலை அடைந்திருந்தது. அவன் திங்கள் போன் செய்கிறேன் என்றுதானே எழுதினான். நான் ஏன் என்னிலை மறந்து வீதிஎன்றும் பாராது அழுது என்னை நானே கேவலப்படுத்திக் கொண்டேன் என வெட்கமும் வந்தது. தொலைபேசி அடிக்க, எடுப்பதற்கு முன்னர் நின்றும் விட்டது. யார் என்று பார்ப்பதற்காக தொலைபேசியை எடுக்க, அந்த ஸ்க்ராட்ச் காட்டும் சேர்ந்து விழுந்து இவளைப் பார்த்துச் சிரித்தது. சரி வீதியில் கிடைத்தது. யாரும் உரிமை கொண்டாடலாம் தானே. அந்தக் கிழவியின் காட் தான் என்று என்ன நிட்சயம் என்று எண்ணியபடி காட்டை சில்லறைக் காசை எடுத்து சுரண்டியவளுக்கு மயக்கம் வராத குறை.

என்ன செய்வது எது செய்வது என்று மனம் படபடக்கத் தொடங்க, அவனின் இலக்கங்களைத்தான் கைகள் முதலில் அழுத்தின. அவனிடமிருந்து எந்தப் பதிலும் வராது போக, அவள் மனம் கொந்தளிப்புக்களின் வீரியத்தைத் தாங்க முடியாது தனக்கிருக்கும் ஒரே நம்பிக்கையானவன் கணவன் மட்டுமே என எண்ணி மனம் தெளிவடைய, யாரோ ஒருவனுக்காக இறந்து போயிருந்தால் என் குடும்பம் அனாதையாகி நடுத்தெருவில் நின்றிருக்குமே என எண்ணி மனதைத் துடைத்தவளாக கணவனுக்கு போன் எடுத்து தன் மகிழ்வைப் பகிர்ந்து கொண்டதுமன்றி மனதுள் ஒரு தெளிவான தீர்மானத்தையும் எடுத்துக்கொண்டாள்.


யாவும் கற்பனை

23 March 2014         

இன்று கூட நாம் காத்திருக்கிறோம்

புத்தாண்டே நீ புதிதாய் வருகின்றாய்
அத்தனை பேரும் ஆவலுடன் உனக்காய்
அகமகிழ்ந்து எங்கும் காத்திருக்க
எத்துனையும் அலுக்காது எப்படி
நீயும் எழில் பொங்க வருகின்றாய்

சாதிமத பேதமின்றி  சண்டைகள் ஏதுமின்றி
சமத்துவத்தோடு நீயும் சரிநிகராக
சகலருக்குமாக  எப்படி வருகின்றாய்

புத்தாண்டிலாவது புதுவழி பிறக்குமென
நம்பிக்கை கொண்டோரின் கனவை நனவாக்க
நாடுகள் தோறும் நீ  நளினத்துடன் வருகின்றாய்

எத்துன்பம் வந்தாலும் அத்தனையும் களைய
ஆவலுடன் உன்னை அத்தனை பேர் பார்த்திருக்க
ஏற்றமுடன் நீயும் எப்படியோ  வருகின்றாய்

ஆனாலும் நாமும்தான் ஆசையுடன் உன்னை
ஆண்டாண்டாய்ப்  பார்த்திருந்தோம்
ஆறுதல் தேடி ஊரூராய் அலைந்திட்டோம்
ஆழக்கடல் கடந்து அகதியாய் அலைந்திட்டோம்
ஊரெல்லாம் கூடி ஒப்பாரி வைத்திட்டோம்
உலகெல்லாம் கூட்டி நீதி கேட்டிட்டோம்
ஒன்றும் நடக்கவில்லை ஒன்றும் நடக்கவில்லை

ஆயிரம் ஆயிரம் அருமை உயிர்கள்
அணுவணுவாக  அழிந்தொழிந்தது
ஆசையாய் வாழ்ந்த எங்கள் ஊர்கள்
அந்நியன் கைகளில் வீழ்ந்து போனது
ஆடு மாடுகள் வீடு வேலிகள்
அத்தனையும் அழிந்து போனது
எத்தனை காலமாய் இருந்த ஏக்கம்
இடிவிழுந்ததால்  இல்லாமல் போனது

இன்று கூட நாம் காத்திருக்கிறோம்
இனிவரும் ஆண்டின் புதிய வருகையில்
எமக்காய் ஏதும் ஏற்றம் வருமென
செத்து மடிந்தவர் சிந்தையின் நோக்கம்
சிறப்பாய் எம்மைச்சேர்க்கும் என்று
சுதந்திரக் காற்றை சுவாசம் காண
சுடர்மிகு ஆண்டாய் நீ பிறப்பாயென
சிந்தை முழுதும் செங்குருதியோடு
சோகம் சுமந்து காத்திருக்கின்றோம்

ஆழிக் கடலடி

ஆழிக் கடலடி ஆட்டம் கண்டதால்
ஆழப் பெருங்கடல் மேலெழுந்தது
அதிர்வின்றி அமைதியாக
ஆழ்கடல் அசைந்து வந்து
ஓசையற்று ஒட்டுமொத்தமாய்
ஒன்றுமிலாது கொண்டு போனது

அன்னை மடியென ஆடிக் கழித்தவர்
அலைகடலோடு கூடிக் கழித்தவர்
ஆவலோடு உனைப் பார்த்திருந்தவர்
அத்தனை போரையும் அரை நொடியுள்
அள்ளிக் கொண்டு சென்று விட்டாய்


அந்த நொடிவரை ஆயிரமாய்
அகம் முழுதும் ஆசைகளோடு
அடுத்தநாளின் கனவுகளோடு
ஆடிப் பாடிக் களித்திருந்தார்
அனைவர் மீதும் கோபமென்ன
அடித்துக்கொண்டு சென்றுவிட்டாய்

பத்து மாதம் சுமந்த பிள்ளையை
பள்ளிக்கனுப்பிய பாலகனை
கட்டிய கணவனை காதலனை
அத்தனை உறவையும் அக்கணமே
அகதியாக்கிச் சென்றுவிட்டாய்

எத்தனை ஆண்டுகள் வாழ்ந்த வீடுகள்
காந்தமாய்த் திரிந்த வீதிகள்
எழில் பொங்கும் எங்களின் ஊர்கள்
நீண்டு வளர்ந்த நெடு மரங்கள்
அத்தனையும் அழித்துவிட்டாய்

தமிழன் மட்டும் தரணியில்
தவிப்பதற்கே பிறந்தவனா
திண்தோள் கொண்டு திரட்டியதை
தேவையற்றுக் கொடுப்பவனா
தீரும் பகை மறந்து தினவறுந்து
தேரில் உலாச் செல்பவனா

மீண்டும்  வதைப்பவரை
மன்னித்தே ஏற்பவனா
பாரெங்கும் பரந்திருந்து
பகை மறந்து வாழ்பவனா
இனம் துறந்து ஏதிலியாய்
எட்டப்பனாய்  வாழ்பவனா

எத்தனை திங்களாய்
எல்லாம் கொடுத்திட்ட
ஏழைகள் தானடி நாங்கள்
ஏனடி நீயும் எங்களை மட்டும்
எப்போதும் அழிக்கின்றாய்
எல்லைகள் தாண்டி வந்து
எல்லாமே செய்கின்றாய்

எமக்கது சாபமடி எப்போதும்
தமிழனாய்ப் பிறந்திட்ட
எம்மினத்தின்  சாபமடி
முயல்கின்றோம் முதிர்கின்றோம்
மூலமெல்லாம் தொடுகின்றோம்
மீண்டு வரத்தான் எம்மால்
இன்னும் முடியவில்லைநீங்கள் கடிச்சிட்டுத் தாங்கோ

நான் வெளிநாடு வந்து பதினைந்து வருடமாச்சு. இத்தனை நாள் அம்மா சகோதரங்கள் எண்டு ஊரிப்பட்ட பிரச்சனை. மூன்று தங்கைகளுடனும் ஒரு பொறுப்பில்லாத ஊதாரி அண்ணனுடனும் பிறந்தால் இப்பிடித்தான். வயதும் முப்பத்தஞ்சு ஆச்சு. நானும் அண்ணன் மாதிரி இருந்திருந்தால் எப்பவோ குழந்தை குட்டி பெற்று சந்தோசமா இருந்திருப்பன். அனால் என்னால முடியேல்லை அண்ணை  மாதிரி பொறுப்பற்று இருக்க. கூடிப் பிறந்தவையை எப்பிடி நடுத்தெருவில விடுறது. சரி ஒரு மாதிரி எல்லாரையும் கரை சேர்த்தாச்சு. இப்பவாவது அம்மாக்கு என்ர வாழ்க்கையைப் பற்றி ஞாபகம் வந்திது. செல்வன் தனக்குத் தானே நினைத்துக்கொண்டான்.

செல்வனின் தாயார் இப்போதுதான் அவனின் சாதகத்தைக் கையில் தூக்கியிருக்கிறார். அதுக்கும் சுவிசில் இருக்கும் மகள் சொல்லி. மகள் கூடத் தானாகச் சொல்லவில்லை. வீட்டுக்கு வரும் உறவினர்கள் தமையனைப் பற்றிக் கதைத்து, இனியாவது அவனுக்கு ஒரு கலியாணத்தைக் கட்டி வையுங்கோவன் எண்டு சொன்னதாலதான். செல்வனுக்கு எழில்  செவ்வாய். அதுக்கேத்த செவ்வாய்க் குற்றம் உள்ள பெண்ணைத்தான்  பாக்கவேணும் என்று தாய்க்கே கொஞ்சமும் அக்கறை இல்லை. ஆனால் உராரின் ஏச்சுக்கும் நாக்குவளைப்புக்கும் முற்றுப் புள்ளி வைக்கவாவது ஒரு கலியாணத்தை செய்து வைக்க வேணும் என எண்ணி பெண் தேட ஆரம்பித்துள்ளார்.

இன்று செல்வன் கன நாளின் பின் மகிழ்வோடு நித்திரை விட்டு எழுந்தான். அம்மா நேற்று தொலைபேசியில் அழைத்து இப்பதான் ஒரு செவ்வாய் குற்றம் உள்ள சாதகம் ஒண்டு பொருந்தியிருக்கு. படம் அனுப்புறன் பாத்திட்டுப் பிடிச்சிருந்தால் மேற்கொண்டு கதைக்கிறன் என்று கூறியிருந்தா. பிள்ளையை நீங்கள் பாத்தனீங்கள் தானே அம்மா என்று கேட்டான். ஓம் தம்பி எனக்குப் பிடிச்சிருக்கு என தாய் கூறியதும் நீங்கள் எனக்குப் பொருத்தமான பெண்ணைத்தானே பாப்பியள் அம்மா அதனால படம் பாக்க வேணும் எண்டு இல்லை. ஆனால் படத்தை அனுப்பிப் போட்டு மிச்ச அலுவலைப் பாருங்கோ என்றுவிட்டான்.

படம் இன்றுதான் வந்தது. வச்சுத் திரும்பத் திரும்ப எத்தின தரம்தான் பாத்தாலும்  பாக்கவேணும் போல இருந்தது. என்ர வாழ்க்கையிலும் ஒரு பெண் வரப் போறாள். நல்ல வடிவான ஆளத்தான். அம்மா நல்லாத்தான் தெரிவு செய்திருக்கிறா. அவனுக்குள் ஏதேதோ கற்பனைகள் உள்ளத்தில் ஊற்ரெடுத்தன. ஒருக்கால் தொலைபேசியில் கதைத்தால் என்ன என எண்ணவே எப்படி அம்மாவிடம் கேட்பது. இப்படி அலைகிறான் என அம்மா எண்ணினால் என்னசெய்வது என்றெல்லாம் எண்ணிவிட்டு சரி இருந்ததுதான் இருந்தம். வருமட்டும் பொறுமையா இருப்பம் என எண்ணியவாறே தன்  ஆசையை அடக்கிக் கொண்டான்.

அம்மா நேற்று எடுத்து, பெண்ணுக்கு எழு இலட்சம் காசும் வீடுவளவும் நகையும் போடீனமாம் என்றதும் இவனுக்குக் கோபம் வந்தது. ஏனம்மா சீதனம் கேக்கிறியள் என்று எசியவனை சும்மா இரு நீ. சீதனம் வேண்டாம் எண்டால் மாப்பிளைக்கு ஏதும் குறை எண்டுதான் இங்க நினைப்பாங்கள். உதில நீ தலையிடாத என்று கூறிவிட்டா. இவன்  அம்மா எனக்கு கூப்பிட ஏலாது. ஏஜென்சி மூலம் தான் கூப்பிட வேணும். சீதனம் வாங்கினால் நாங்கள் தானம்மா கூப்பிட வேண்டும் என்றவுடன் அம்மா அப்ப வீட்டை மட்டும் தாங்கோ, பொம்பிளையை அவையை அனுப்பச் சொல்லிக் கேக்கிறன் என்றவுடன் இவனும் ஓம் என்று கூறி விட்டுவிட்டான்.

ஆறு மாதங்கள் பெண் இன்று வருகிறாள் நாளை வருகிறாள் என்று அம்மா சொல்லிச் சொல்லி இவனுக்கு மிஞ்சியது ஏமாற்றம் தான். ஒருவாறு நாளை ஏஜென்சி அனுப்புவதாகக் கூறுகிறான் என்று அம்மா சொன்னது மனதுக்கு நின்மதி தந்தாலும் நூறு வீதம் நம்பிக்கை தரவில்லை. வந்த பிறகுதான் நம்பலாம் என எண்ணிக்கொண்டான். என்ன வாழ்க்கை இது நின்மதியா ஒண்டும் செய்ய முடியாமல். நாடு ஒழுங்கா இருந்தாலாவது உடன போய் கலியாணம் கட்டிக்கொண்டு வந்திருக்கலாம். ம்......... என்ர  விதி என்று பெருமூச்சும் விட்டபடி தூங்கிப்போனான்.

விடிய வேலைக்குப் போவதற்காக வைத்திருந்த அலாம் அடிக்கிறது என்று எழுந்த செல்வனுக்கு அடிப்பது தொலைபேசி என்றதும் என்ன இந்த நேரம் யார் தொலைபேசியில் என்று யோசனையோடு எடுத்தால், தம்பி மோசம் போட்டமடா என்று அழுதபடி அம்மா. இவனுக்கும் பதட்டம் தொற்றிக்கொள்ள என்னம்மா விளங்கிற மாதிரிச் சொல்லுங்கோ என்றான். உனக்கு அனுப்பின பொம்பிள வந்த கப்பல் இத்தாலியில தாண்டிட்டுதாமடா என்றபடி குழற இவனுக்கு நெஞ்சுப்பரப்பெல்லாம் காலியானது போன்ற எண்ணம். நெஞ்சை ஒருமுறை தொட்டுத் தொட்டுப் பார்த்துக் கொண்டான். அம்மாவுக்கு முன் அழ மனம் இடம் தரவில்லை. நான் பிறகு அடிக்கிறான் என்றுவிட்டு தொலைபேசியை வைத்தபின்னும் அலை அடித்து ஓய்ந்த நிலமாக அவன் மனம் வெறுமையானது.

விதி என்னை விடுதே இல்லையே. எழுந்து சென்று அந்தப் பெண்னின் படத்தை எடுத்துப் பார்த்தான். அவனறியாது கண்ணீர் கைகளை நனைத்தது. உன்னுடன் என்னை எப்படியெல்லாம் எண்ணிக் கற்பனை செய்து வைத்திருந்தேன். ஏன் என்னை விட்டுப் போனாய் என மனம் ஓலைமிடுவதையும் தடுக்க மனமின்றி அப்படியே இருந்தான். மீண்டும் கட்டிலில் வந்து விழுந்தான். வேலைக்குப் போவதற்கும் மனமில்லை. அடித்து வரவில்லை என்றும் சொல்லவில்லை. நேரம் தவறாமையைக் கடைப்பிடிப்பவன் இன்று  எல்லாம் மறந்துபோக மரத்துப் போனவனாகக் கட்டிலில் கிடந்தான்.

தொடரும்...............

பகுதி 2

செல்வன் மீண்டும் பழைய நிலைமைக்குத் திரும்பிவிட்டான். அந்தப் பெண்ணுடன் தொலைபேசியில் கூடக் கதைக்கவில்லை எனினும் படத்தைப் பார்த்து மனதுள் கட்டிய கோட்டை இடந்து வீழ்ந்தது மனதில் பெரிய தாக்கம்தான். மனத்தால் அவளோடு பேசிச் சிரித்து கொஞ்சி மகிழ்ந்து இவள்தான் எனக்கு என எண்ணியதில் உணர்வும் உரிமையும் கூடிப்போயிருந்தது. இப்பதான் கொஞ்சம் அவளை மறக்கத் தொடங்கியிருக்கிறான். அவளைப்பற்றி நினைப்பதே இல்லை என்று மனதில் சபதம் எடுத்து படத்தையும் கிழித்து வீசிவிட்டு நின்மதியாக இருக்க முயற்சி செய்கிறான்.

தங்கை நேற்று கதைக்கும் போது அம்மா உனக்கு இரண்டு மூன்று பொருத்தங்கள் பார்த்தவா என்று கூறினாள். இவனுக்கு நம்பிக்கை இல்லை. அதற்கான பதிலைத் தங்கைக்கும் கூறவில்லை. நடப்பது நடக்கட்டும் என்று விட்டுவிட்டான். அம்மா ஊரில் வீடு வாசல் இருக்க தனக்கு முதுகு வருத்தம் என்று சாட்டிக் கொண்டு வெள்ளவத்தையில் ஒரு வீட்டில் வாடகைக்கு இருக்கிறா. எல்லாம் இவன் அனுப்பும் பணம் செய்யும் வேலை. இவனும் இரண்டு மூன்று முறை தாய்க்குச் சொல்லிப் பார்த்துவிட்டான் ஊருக்குப் போங்கோவன் என்று. தாய் கேட்பது மாதிரி இல்லை. இன்னும் இரண்டு மூன்று ஊராட்கள் வெளிநாட்டுக் காசில்  வெள்ளவத்தையில் வீடெடுத்து ஊதாரித்தனம் பண்ணிக்கொண்டு இருக்கினம். அம்மாவும் அவர்களுடன் சேர்த்தி. கொஞ்சம் ஊண்டிச் சொன்னால் அம்மா என்னில ஒருத்தருக்கும் அக்கறை இல்லை என்று அழுவா. அதுக்குப் பயந்து இவன் இப்போ ஒன்றும் கதைப்பதில்லை.

அம்மா வழமைபோல் நேற்று போன் எடுத்து எங்கட ஊர் இல்லை. ஆனால் நல்ல வடிவான பெட்டை. பெரிசா சீதனம் ஒண்டும் இல்லை. ஆனால் செவ்வாய் குற்றம் உள்ளது. பொருத்தம் பார்த்தேன் பொருந்துகிறது. நீ ஓம் எண்டா நான் மிச்ச வேலை பாக்கிறன் என்று சொல்ல என்னெண்டாலும் செய்யுங்கோ என்று சொல்லிவிட்டான். பெண் வரட்டும் படம் வேண்டாம் என்றும் விட்டான். அம்மா இவனைப் பற்றிக் கழிவிரக்கம் கொண்டாவோ என்னவோ பெண்ணை அனுப்ப அவவே முன்னின்று எல்லா அலுவலும் முடிச்சிட்டு நாளைக்கு உங்கு வருகிறாள். என்னொரு ஆள்தான் தன்  மனைவியின் பாஸ்போட்டில் கூட்டிக்கொண்டு வரப் போறார். அதனால எயாப்போட்டால வெளியில வந்த உடன உனக்கு போன் செய்வார். நீ நேரத்துக்குப் போய் நில் என்றுவிட்டு வைத்துவிட்டா.

வேலைக்கு லீவு சொல்லவேணும். அம்மா பாத்த வேலை என மனதில் சிறு சலிப்பு எட்டிப் பார்த்தாலும் சலிப்பை மீறிய ஒரு மகிழ்ச்சியும் மனதில் உதித்தது. அந்த மகிழ்ச்சி அவன் வேலைக்குச் சென்ற போதும் தொடர்ந்தது. வேலையிடத்து நண்பன்  என்ன செல்வன் இண்டைக்கு என்ன ஏதும் விசேசமே. நல்ல சந்தோசமாய் இருக்கிறாய் என்றதும் என்ன என் முகம் இப்பிடிக் காட்டிக் குடுக்கிறதே என எண்ணி கூச்சமடைந்தவனாய் ஒன்றும் இல்லை என்று விட்டு தன் அலுவலைப் பார்க்கத் தொடங்கினான். மனதுக்குள் பழைய  கீறல்களில் வலி எட்டிப் பார்க்க கடவுளே இந்த முறை என்னைக் கைவிட்டுடாதை என மனம் கடவுளை வேண்டியது.

இந்த இரவு அவனின் தூக்கம் தொலைந்து போக, பலதை எண்ணியபடி விடிந்தபின்னும் கட்டிலில் கிடந்தான். நேரத்தை நிமிர்ந்து பார்த்தபோது இன்னும் விமான நிலையத்துக்குப் போவதற்கு நேரம் இருக்கு. எதுக்கும் அம்மாவுக்கு ஒருக்கா அடிச்சுப் பாப்பம் என்று எண்ணியபடி எழுந்து காலைக் கடன் முடித்து அம்மாவை அழைத்தான். அம்மா இன்னும் நீ எயாப்போட் போகவில்லையா என்றதற்கு இனித்தான் போகவேணும் என்றுவிட்டு, ஒரு பிரச்சனையும் இல்லைத்தானே. ஏத்தியாச்சுத் தானே அவையை என அம்மாவிடம் விசாரித்தான். ஒண்டுக்கும் பயப்பிடாதை ஏறிவிட்டினம் வந்து சேர்ந்தாப் பிறகு எனக்கு போன் பண்ணு என்றுவிட்டு அம்மா வைத்துவிட்டார்.

காலை பதினோரு மணிக்குத்தான் விமானம் வருகிறது. ஆனாலும் இவன் பத்து மணிக்கே போய்க் காவலிருந்தான். என்னத்துக்கு நான் இப்பிடி வேலைக்கு வந்தனான் என தன்னைத் தானே கேட்டவனுக்கு சிரிப்பு எட்டிப் பாத்தது. சரி வீதியில் ஏதாவது விபத்து நடந்து வரப் பிந்தினாலும் எண்டுதான் வேளைக்கே வந்தனான் என தன்னைச் சமாதானப் படுத்திக் கொண்டு எழிலினி எப்பிடி இருப்பாள் என தன் மனச் சிறகை விரித்துப் பார்த்தான். ஒன்றுமே அகப்படவில்லை. சரி இன்னும் ஒரு மணி நேரத்தில் பார்க்கத்தானே போறன் என்று மனதை அடக்கிக் கொண்டு விமானங்கள் வந்து இறங்குவதையும் ஏறுவதையும் பார்த்துக் கொண்டு நின்றான்.

இவனின் தொலைபேசி அடிக்கத்தான் சுய நினைவு பெற்றவன், காதில் அதை வைக்க நீங்கள் தான் செல்வனோ என ஒரு ஆண்  குரல் கேட்டது. ஓம் நீங்கள் என்று இவ இழுக்க, எழில் எண்ட பிள்ளை என்னுடன் வந்தவா என்று அவர் கூறு முன்னரே வந்திட்டீங்களோ எங்க நிக்கிறியள் என இவன் கேட்டபடி வெளியே வரும் பாதை நோக்கி விரைந்தான். தம்பி நாங்கள் வெளியில டாக்ஸி நிக்கிற இடத்தில நிக்கிறம் வாங்கோ என்று அவர் கூறிவிட்டுத் தொடர்பைத் துண்டித்து விட்டார்.

வெளியே விரைந்து வந்து பார்த்தவனுக்கு ஒரு இமைப்பொழுது தலை சுற்றியது. வாகனத் தரிப்பிடத்தின் அருகே இரு சோடிகள் நின்றன.  இருபத்தெட்டு முப்பது வயது மதிக்கத்தக்க ஒரு பெண்ணும் இருபத்திநாலு இருபத்தைந்து மதிக்கத்தக்க ஒரு பெண்ணும் நின்றனர். இருவரும் அழகாய் இருந்தாலும் சிறிய வயதுக்காறியிலேயே இவன் பார்வை நின்றது. பிறகும் இது வயது குறைவாய் இருக்கு என் வயதுக்கு மற்றதுதான் போல என்று எண்ணியவன், அடுத்த கணமே என்னிடம் தான் தொலைபேசி இருக்கே வந்த இலக்கத்துக்கு போன் அடிச்சால் தெரிஞ்சு போகுது என எண்ணியபடி போனை அழுத்த சிறிய வயதுப் பெண்ணின் பக்கத்தில் நின்றவர் தொலை பேசியை எடுக்க இவன் மட்டிலா மகிழ்ச்சியுடன் அவர்களுக்குக் கிட்டப் போய்  வணக்கம் என்றான்.

எழில் வந்து இன்றுடன் மூன்று நாட்களாகிவிட்டன. வந்த அன்றே தங்கையும் கணவரும் வந்து எப்ப திருமணத்தை வைக்கலாம் எனக் கதைத்துவிட்டுச் சென்றனர். மண்டபம் மற்றைய அலுவல் எல்லாம் பார்க்க ஒரு மாதமாவது வேணும் என்று தங்கை கூற இவனும் சம்மதிக்க, இவன் செய்ய வேண்டிய வேலைகளையும் அவர்கள்  செய்ய வேண்டியதையும் பேசிக் கதைத்துவிட்டு நாளையே நல்ல நாள் பார்ப்பதாகக் கூறிச் சென்றபின் இவன் எழிலைக் காதலோடு பார்த்தான். இன்னும் ஒரு மாதத்தில் இவள் என் மனைவி. நீண்ட அடர்ந்த கூந்தலும் எடுப்பான மூக்கும் பெரிய கண்களும் அவளைப் பார்க்கப் பார்க்கத் திகட்டவில்லை அவனுக்கு. மனதில் இவளுக்கு நான் ஏற்றவன் தானோ என்னும் எண்ணமும் கூடவே எட்டிப் பார்க்க அவளருகில் சென்று என்னை உமக்கு உண்மையிலேயே  பிடிச்சிருக்கா என்று கேட்டுவிட்டு அவளைப் பார்த்தான். தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்த எழில் தலையைத் திருப்பி இவனைப் பார்த்துவிட்டு உந்தக் கேள்வியை நான் வந்ததுக்கு  எத்தினை தரம் கேட்டுட்டீங்கள் என அலுத்தபடி மீண்டும் தொலைக்காட்சியில் பார்வையைப் பதித்தாள்.


தொடரும்........

ஒரு பெண் வாழ்வில் வருவது எவ்வளவு வசந்தம் என்று செல்வன் நினைத்து நினைத்து சந்தோசப்பட்டான். நாங்கள் ஆண்கள் என்னதான் விதவிதமா உடுத்தாலும், எதை வாங்கிச் சமைச்சாலும் ஒரு பெண் வீட்டில் இருப்பதுபோல் வராது. அதுக்கும் எழில் போல் அழகிய பெண் சுறுசுறுப்பான பெண் இதுவரை அவன் காணவில்லை. தன்  சகோதரிகளுடன்  ஒப்பிட்டுப் பார்த்தான்.

எல்லாம் அழுமூஞ்சியள். நான் என்னவெல்லாம் அவர்களுக்குச் செய்திருப்பன். யாராவது என்னில அக்கறை காட்டினவையே. ஒரு நாளாவது ஒரு உடுப்புக் கூட எடுத்துத் தந்ததில்லை. அண்ணா உனக்கு என்ன விருப்பம் என்று கேட்டுச் சமைச்சும் தந்ததில்லை. எழில் நல்லாச் சமைக்கிறா. வந்து ரண்டு நாள்தான் நான் சமைச்சது. அதுக்குப் பிறகு விடுங்கோ நான் சமைக்கிறன் என்றுவிட்டு அவளே சமைக்கிறாள். அம்மாவின் சாப்பாட்டுக்குப் பிறகு இப்பதான் ஒரு ரண்டு நாள் நல்ல சாப்பாடு சாப்பிடுறன். இப்படி செல்வன் எண்ணும்போதே ஏன் நீ உன் சகோதரிகளிடம் போகும் வேளையில் அவர்கள் உனக்கு நல்ல உணவே தரவில்லையா? அவர்கள் உன்னிடம் அன்பாக நடக்கவில்லையா என மனச்சாட்சி இடித்தது.

என்ன இருந்தாலும் எழில் போல் வராது என மனம் பிடிவாதமாய் எண்ணிக்கொண்டு இருக்கும் போதே எழில் படுக்கை அறைக் கதவைத் திறந்துகொண்டு வந்தாள். ஓ நீங்கள் எழும்பிவிட்டியளே  என்னை எழுப்பியிருக்க வேண்டியதுதானே. கன நேரம் படுத்திட்டன் என்றவளை இடைமறித்து ராத்திரி நீர் படுக்க லேற் அதுதான் பாவம் எண்டு எழுப்பவில்லை என்றான். சரி நான் அரை மணித்தியாலத்தில குளிச்சு வெளிக்கிட்டு வாறன். நேற்றுக் கதைச்ச மாதிரி முதல் கடைக்குப் போவம் என்றுவிட்டு குளியலறைக்குள் சென்றுவிட்டாள். நேற்று அவனது ஆடைகளைப் பார்த்து என்ன நீங்கள் இவ்வளவு பட்டிக்காடா உடுப்புப் போடுறீங்கள். நாளைக்கு கடைக்குப் போய் முதல் வேலையா உங்களுக்கு கொஞ்சம் மொடேனான உடுப்புக் வாங்கவேணும். விடியக் கடைக்குப் போட்டு வந்துதான் மற்ற வேலை என்றுவிட்டாள். இவனும் எழுந்து ஆடை மாற்றி அவளுக்காகக் காத்திருந்தான்.

அவள் இவனுக்காக தெரிவு செய்த ஆடைகளைப் பார்த்த செல்வனுக்கு கொஞ்சம் கூச்சமாகவும் இருந்தது. பெடியள் போடுமாப்போல இருக்கு என இழுத்தவனை சும்மா இருங்கோ ஒழுங்கா உடுப்புப் போட்ட நீங்கள் எவ்வளவு சிமாட்டாத் தெரிவீங்கள் தெரியுமே. இவளவு நாளும் விடுங்கோ இனி நான் வந்திட்டன் வடிவா உடுப்புப் போட்டுக்கொண்டு திரியுங்கோ எண்டு நாலைந்து சோடி உடுப்புகளைத தெரிவு செய்தாள் எழில்.  மற்றப் பெண்கள் எண்டால் தங்களுக்குத்தான் வாங்கிக் குவிப்பினம். இவள் தனக்கென்று ஒன்றையும் எடுக்கவில்லை. நீரும் உமக்கு உடுப்பு எடுமன் எண்டதுக்கு நான் கொழும்பில வாங்கினது கிடக்குக் காணும். பிறகு பாப்பம் எண்டாள். செல்வனுக்கு மகிழ்வாகவும் பெருமிதமாகவும் இருந்தது.

இவளுக்கு நான் இன்று ஒரு சப்ரைஸ் குடுக்க வேணும் என எண்ணியபடி பணத்தைச் செலுத்திவிட்டு அவளைக் கூட்டிக்கொண்டு நகைக் கடை ஒன்றுக்குச் சென்றான். நகைகள் மேல் பெண்களுக்கு உள்ள ஈடுபாட்டை அவள் முகத்தில் தெரிந்த மென்னகை  காட்டியது. உமக்கு விருப்பமான எதுவெண்டாலும் நீர் எடுக்கலாம் என்றான் அவளைப் பார்த்து. மற்றப் பெண்கள் போல் அவள் நகையைத் தெரிவு செய்வதற்கு அதிக நேரத்தைச் செலவு செய்யவில்லை. ஒரு சோடி காப்பை எடுத்து வடிவாயிருக்கோ என்று இவனுக்குக் காட்டிக் கேட்டாள். வடிவாயிருக்கு உமக்குப் பிடிச்சால் சரி என்று முறுவல் காட்டிவிட்டு இன்னும் இரண்டு சோடி எடும் என்றான். இன்னும் இரண்டு சோடியா என்று அவளின் ஆச்சரியத்தை அடக்க மாட்டாமல் இவனைக் கேட்டவள் இவன் சிரித்துக்கொண்டு ஓம் எனத் தலை ஆட்டியதும் இன்னும் இரண்டு சோடி தாங்கோ என்று கடைப் பெண்ணிடம் கூறிவிட்டு இவனுக்குக் கிட்ட வந்து தாங்க்ஸ் செல்வா என்று ஒரு கிறங்கும் பார்வை பார்த்தாள். இவனுக்கு உச்சியிலிருந்து உள்ளங்கால் வரை எதோ செய்தது.

வீட்டுக்கு வந்தவுடன் காப்புகளைக் கைகளில் போட்டு அழகு பார்த்தவள் இவனருகில் வந்து உண்மையில் எனக்குப் பிடிச்சிருக்கு என்றாள்.
அப்ப எனக்கு ஒண்டும் கிடையாதோ என்று அவளை நெருங்கியவனை இடை மறிப்பதுபோல், நேற்று உங்களுக்கு என்ன சொன்னனான். வெளிநாட்டுக்கு வந்தாலும் எங்கட கலாச்சாரத்தை நாங்கள் மறக்கக் கூடாது. நீங்கள் முறைப்படி எனக்கு தாலி கட்டின பிறகுதான் என்னைத் தொடலாம். அதுவரை இப்பிடி ஆளை ஆள் பாத்துக்கொண்டிருக்கிறதே எவ்வளவு சந்தோசம். இன்னும் மூண்டு கிழமைதானே என கெஞ்சுவதுபோல் கேட்பவளை ஒன்றும் சொல்ல மனமில்லாமல் சரி உம்மடை விருப்பம் என்றுவிட்டு இருக்கையில் அமர்ந்தான்.

இன்னும் இரண்டு கிழமைதான் இருந்தது திருமணத்துக்கு. மண்டப ஒழுங்கு சரி அழைப்பிதழும் எல்லாருக்கும் குடுத்தாச்சு. உணவுகள் எல்லாத்துக்கும் கூட ஒழுங்கு செய்தாகிவிட்டது. நேற்றுத்தான் மாற்றுச் சேலையும் தங்கையைக் கூட்டிக்கொண்டு போய் எடுத்துக் கொண்டுவந்து சட்டையும் தைக்கக் குடுத்தாச்சு. கூறைச் சேலை வேட்டி எல்லாம் அம்மா கொழும்பிலை இருந்து அனுப்பியிருக்கிறா. நேற்று மாலை வந்த தங்கை அண்ணி என்ன நகை வச்சிருக்கிறியள் எண்டு காட்டுங்கோ எனக் கேட்க இவனுக்கே கொஞ்சம் எரிச்சல் தான். இவளுக்குத்தானே எல்லா நகையும் நான் வாங்கிக் குடுத்தனான் என மனதுள் எண்ணியவன் ஒன்றும் சொல்ல முடியாமல் நின்றான்.

எழில் உள்ளே சென்று தன்னிடம் இருந்த நான்கு சோடி காப்புகளையும் ஒரு அட்டியலையும் பழைய டிசயினில ஒரு பதக்கத்தையும் கொண்டுவந்து காட்டினாள். என்ன அண்ணி பதக்கம் உங்கட அம்மாவின்ர போல என்று கேட்க எழிலும் ஓம் எனத் தலை ஆட்ட, இவன் ஏன் அம்மாவின்ரை எண்டால் போடக் கூடாதோ என அவிக் என்று கேட்டான். இவன் கேட்ட விதம் தங்கைக்கே ஒருமாதிரியாகிவிட்டதை அவள் முகம் காட்டியது. அண்ணா நான் நக்கலுக்குக் கேட்கேல்லை. இப்ப இங்க உள்ளவை விதவிதமா நகை போடுவினம். என்னட்டையே எவ்வளவு கிடக்கு. அண்ணி கலியாணப் பொம்பிளை அண்ணியைக் கூட்டிக்கொண்டு போய் நல்ல ஒரு பதக்கம்..... வேண்டாம் நாளைக்கு நானும் வாறன். போய் நல்ல ஒரு நகை எடுப்பம் என்றதும் தன் அவசர புத்தியை எண்ணி செல்வனுக்கே வெட்கமாகப் போய்விட்டது.

அடுத்தநாள் நகைக்கடையில் பத்துப் பவுனில் அழகிய நகை ஒன்றைத் தங்கை தெரிவு செய்தபோது செல்வனுக்கே ஆச்சரியமாகப் போய்விட்டது. ஒரு பெண் இன்னொரு பெண்ணுக்கு விலை உயர்ந்த நகையைத் தெரிவு செய்வதை அவனால் நம்பமுடியாமல் இருந்தது. எழில் கூட கூச்சமடைந்தவளாய் எனக்கு ஏன் இது என மறுக்கவும் கேட்காமல் அவள் கழுத்தில் போட்டு அழகு பார்த்தாள் தங்கை. நகையால் அவள் அழகு கூடியதா அவளுக்குப் போட்டதால் நகை அழகாகத் தெரிந்ததா என்று அவனுக்குச் சந்தேகம் வந்தது. எத்தனை தரம் அவளைப் பார்த்தாலும் அவனுக்குத் திகட்டவில்லை.

இன்னும் ஒருவாரம் தான். கல்யாண வேலைகளில் ஓடியோடிக்  களைத்துவிட்டான். தங்கையும் கணவனும் முன்னின்று செய்தாலும் எத்தனையோ அலுவல்கள் காத்துக் கிடந்தன. ஊரில் சுற்றம் கூடி எல்லாம் செய்வதால் சுமைகள் தெரிவதில்லை. இங்கு இவனுக்கு நண்பர்களும் பெரிதாக இல்லாதபடியால் இவனே மற்ற எல்லாவற்றுக்கும் ஓடவேண்டியதாகிவிட்டது. வாகனத்தை தரிப்பிடத்தில் நிறுத்தியவன் வாங்கிய பொருட்களை தூக்கமுடியாமல் தூக்கிக் கொண்டு போய் வாசலில் வைத்துவிட்டு மணியை அழுத்தினான். கதவு திறக்கவில்லை. எழில் பகல் தூங்கும் வழக்கமுடையவள். தூங்கிவிட்டாள் போல. சரி அவளை எழுப்பவேண்டாம் என எண்ணியவனாக கதவைத் தன்னிடமுள்ள திறப்பால் திறந்துகொண்டு மூன்றாம் மாடிவரை பொருட்களை இழுத்துக்கொண்டு தன் வீடுவரை கொண்டுபோய் சேர்த்தான்.

பள்ளியால் பிள்ளையை அழைத்துக்கொண்டு வந்த தங்கை வீட்டு மணியை தொடர்ந்து அழுத்த சுய நினைவு வரப்பெற்றவனாக எழுந்து சென்று கதவைத் திறந்துவிட்டு தங்கையை வா என்றும் கூறாமல் சென்று கதிரையில் அமரும் தமயனை வியப்புடன் நோக்கினாள் தங்கை.
ஏனண்ணா  உடன வரச்சொன்னனி. அண்ணி எங்க. அண்ணிக்கு ஏதும் வருத்தமே என்று விடாமல் கேள்விகேட்ட தங்கையிடம் நான் ஆருக்கு என்ன செய்தனான். ஏனடி எனக்கு மட்டும் இப்பிடி நடக்கவேணும். ஐயோ ஐயோ என்று தமையன் தலையில் அடித்து அழ தமையன் இதுவரை அழுதே பார்த்திராத தங்கைக்கும் அழுகை வந்தது.

அண்ணா என்னெண்டு சொல்லிப்போட்டு அழுங்கோ என இவள் கேட்க நேற்றுக் கூட நான் மாம்பழம் வாங்கிக் கொண்டு வந்தனானடி. வெட்டிக் கொண்டுவந்து வச்சிட்டு நீரும் சாப்பிடும் எண்டதுக்கு நீங்கள் கடிச்சிட்டுத் தாங்கோ எண்டாளே. இன்டைக்கு இப்பிடிச் செய்து போட்டுப் போட்டாளடி. நான் என்னெண்டு ஆக்களிண்ட கண்ணில முழிக்கிறது என்று விட்டு அழும் தமயனை எப்படித் தேற்றுவது என்ன நடந்தது என்று தெரியாமல் என எண்ணியபடி அண்ணா விசயத்தை சொன்னால் தானேயண்ணா எனக்குத் தெரியும் என்ற தங்கையை  கண்களில் நீருடன் செல்வன் பார்த்தான். நான் கடைக்குப் போட்டு வர அவள் வீட்டில் இல்லை. நான் எல்லா இடமும் தேடிப்போட்டு நீ வந்து கூட்டிக் கொண்டு போனாயோ என்று உனக்கு போன் பண்ண வெளிக்கிட எனக்கு ஒரு போன் வந்திது. எடுத்தால் ஒருத்தன் கதைக்கிறான். நானும் எழிலும் போறம் எங்களைத் தேட வேண்டாம் என்று சொல்லிப் போட்டு போனை வச்சிட்டான். நான் பதட்டத்தில யாரோ அவளுக்கு ஏதும் செய்திட்டாங்களோ எண்டு ஒரு நிமிஷம் நினைச்சிட்டு போய் அறைக்குள்ள பாத்தால் அவளின் சூட்கேஸ் ஒண்டும் இல்லை. பிறகுதான் வடிவாப் பாத்தன் நான் வாங்கிக் குடுத்த நகையள் கூட ஒண்டும் இல்லை என்று கூறிவிட்டு அழும் தமயனை என்ன சொல்லித் தேற்றுவது எனத் தெரியாமல் இரக்கத்தோடு பார்த்தபடி நின்றாள் தங்கை.

முடிந்தது

பெண் - கதை 1

கபிலனுக்கு மனம் நிறைந்த சந்தோசம். மதுவின் சம்மதம் இன்றுதான் கிடைத்தது. ஒருமாதமாக தூக்கமில்லை, ஒழுங்காக உண்ண  முடியவில்லை, ஏன் மற்றவர்களுடன் கதைத்துச் சிரிக்கக் கூட முடியாமல் தன்னுள் தானே  அவஸ்தையில் மூழ்கியிருந்தான். மதுவைக் கண்ட நாள் முதல் மனம் கிடந்தது அடித்துக் கொண்டது. இவள் தான் எனக்கு ஏற்றவள் என மனம் சொன்னாலும் அவள் அதை ஏற்பாளா என்னும் தவிப்பு. அந்தத் தவிப்புக்கும் காரணம் இருந்தது. கபிலன் சாதாரணமான ஒருவன். மிகவும் அமைதியானவன். நண்பர்கள் பலர் இருந்தாலும் அவர்களுடன் இவனாக அரட்டை அடிக்க மாட்டான். அவர்களின் பம்பலில் தானும் பங்குகொள்வானே தவிர தானாக எதுவும் பெரிதாகக் கதைக்க மாட்டான். நண்பர்கள் இவனை வம்புக்கிழுத்தாலும் என்னை விடுங்கோடா என்பான் அல்லது ஒரு சிரிப்பை பதிலாகத் தந்துவிட்டு இருந்துவிடுவான்.
நண்பன் ஒருவனுடன் ஒரு வீட்டுக்கு சட்லையிட் பூட்டப் போன போதுதான் மதுவை அங்கு கண்டான். பார்த்தவுடன் கண்களை எடுக்க முடியவில்லை. நண்பனிடம் சாடைமாடையாக விசாரித்த பொழுது இப்ப கிட்டடியில் நாட்டில்  இருந்து வந்திருப்பதாகக் கூறினான். இவனுக்கு மீண்டும் அவளைப் பார்க்கவேண்டும் என்று ஆசை வந்தாலும் நண்பனிடம் கூற வெட்கமாகவும் இருந்ததால் கூறவில்லை. ஒரு வாரமாக மண்டையைப் போட்டு உடைத்ததுதான் மிச்சம். எந்த வழியும் தென்படவில்லை. இனியும் தாங்காது நண்பனிடம் கூறவேண்டியதுதான் என இவன் நினைத்த வேளையில் நண்பனிடமிருந்து தொலைபேசி அழைப்பு. காசி அண்ணன் வீட்டில் திருப்பவும் சனல் ஒன்றும் வேலை செய்யுதில்லையாம். எனக்கு தனியப் போக விசராக் கிடக்கு நீயும் வாறியோ என நண்பன் கேட்க இவனுக்கு தன்னை அறியாமலே சந்தோசத்தில் வாயெல்லாம் பல்லானது. நண்பனுக்கு விளங்கிவிட்டது என்னடா ஏதும் பிரச்சனையோ என்று கேட்க ஒன்றுமில்லை என வழமையான மழுப்பல் சிரிப்புடன் நண்பனின் வண்டியில் ஏறினான். வண்டியிலும் வேகமாக அவன் மனம் மதுவிடம் பறந்தது. அவள் வீட்டில் நிப்பாளோ அல்லது எங்காவது போயிருப்பாளோ என மனம் நிலைகொள்ளாது தவித்தது. ஏன்டா கொஞ்சம் பாஸ்ட்டா காரை உடன் என்று சொன்ன இவனை நண்பன் நக்கல்ச் சிரிப்போடு திரும்பிப் பார்த்தான். விளங்கிவிட்டுதடா எனக்கு சரியான கள்ளன்ரா நீ என்று நண்பன் கூற இவன் வெட்கச் சிரிப்பு மட்டும் பதிலாகத் தந்தான். பூனை மாதிரி இருந்துகொண்டு எடேய் அவள் சின்னப் பெட்டை போல கிடக்கு என்று நண்பன் இழுத்தான். அதுக்கென்ன என்ர அம்மாவுக்கும் அப்பாவுக்கும் 12 வயது வித்தியாசம். கனபேர் ஊரில அப்பிடித்தானே கட்டிறவை என்றான். முதல் பேட்டை ஓம் எண்ண வேணுமெல்லோ அதுக்கு முதல் வீணா ஆசையை வளர்க்காதே என்றுவிட்டு அதற்குமேல் நண்பன் ஒன்றும் கூறவில்லை.

வீட்டு மணியை அடித்ததும் திறந்தது மதுதான். கபிலன் துணிவுடன் அவளைப் பார்த்தான். அவளும் இவனைப் பார்வையால் அளந்தது தெரிந்தது. சித்தப்பா இப்ப  வந்திடுவார் என்றபடி இவர்களை உள்ளே வரவிட்டு கதவைப் பூட்டினாள் மது. தேத்தண்ணி போடவோ என்று கேட்டவளை முடிக்க விடாமல் ஓம் என்றான் இவன். அவள் தேநீர் போட்டுக்கொண்டு வரும் வரை இவனுக்கு இருப்புக் கொள்ளவில்லை. நண்பனும் இவனைக் கடைக் கண்ணால் பாத்துக்கொண்டுதானிருந்தான். தேநீர் வந்தது. அவளைப் பார்த்துக்கொண்டே எடுத்தான். அவள் கண்களிலும் ஒரு படபடப்பு அது தன் பிரமையோ என்று இவனுக்குச் சந்தேகம். ஊரில நீங்கள் எந்த இடம் என அவள் உள்ளுக்குள் சென்றாலும் என்ற அவசரத்தில் கேட்டான். அவளும் அவனுக்கு முன்னாள் இருந்த கதிரையில் அமர்ந்து அவனுடன் கதைக்க வெளிக்கிட நண்பனும் அவர்களைக் கவனிக்காததுபோல் ஆனால் காதால் கேட்டுக்கொண்டே தன்  அலுவலைப் பார்த்தான். ஒரு கட்டத்தில் காருக்கு போட்டுவாறன் என்றுவிட்டு நண்பன் சென்றுவிட கபிலன் மனதுக்குள் நண்பனுக்கு நன்றி கூறிக் கொண்டான். மது எனக்கு உங்களைப் பாத்த நாள் முதல் பிடிச்சுப் போச்சு. மற்றவை மாதிரி எனக்கு சினிமாக் காதலும் வராது. ஒரு மாசமா
உங்களை நினச்சு நித்திரை கொள்ளவில்லை. உங்களுக்கும் என்னைப் பிடிச்சிருந்தா நான் உங்கட சித்தப்பாவோடை கதைக்கிறன். விருப்பமில்லாட்டிலும் சொல்லுங்கோ என்றுவிட்டு அவளைப் பார்த்தான். அவள் கண்களில் காதல் வழியவில்லை ஆனால் வெறுப்பும் இல்லை என்பது மன நின்மதியைத் தந்தது. நீங்கள் இப்பிடி உடன கேட்டா நான் என்ன சொல்லுறது. ஒரு கிழமை டைம் தாங்கோ சொல்லுறன் என்றவுடன் சரி யோசிச்சு எனக்கு சாதகமான பதிலைச் சொல்லுங்கோ என்றுவிட்டு அதற்குமேல் அங்கு நிற்க முடியாமல் கீழே வரத் திரும்பியவனை உங்கள் போன் நம்பரைத் தந்துவிட்டுப் போங்கோ என்ற அவள் வார்த்தை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. தொலைபேசி எண்ணைக் கொடுத்துவிட்டு உடனே வந்துவிட்டான். என்னிலும் பார்க்கத் துணிவுதான் ஆளுக்கு என மனம் எண்ணினாலும் ஒரு வாரமாக என்ன சொல்லுவாளோ என்று பதட்டம். இன்றுதான் மதுவிடமிருந்து தனக்குச் சம்மதம் என போன் வந்தது. உடனே தன்  நண்பனிடம் தொலைபேசியில் மகிழ்வைப் பகிர்ந்து கொண்டான். கெட்டிக்காரன் தான்ரா நீ. உன்னை நானும் குறைச்சு எடை போட்டுவிட்டன் என்று நண்பன் கூற இவனுக்கு பெருமையாக இருந்தது.

அதன்பின்னர் அவன் தாமதிக்கவில்லை. கபிலனின் தாயார் இரண்டு வருடங்களின் முன் தான் இறந்துவிட்டார்.
தந்தை தானும் தன்பாடும். ஒரு மூத்த சகோதரி திருமணமாகி குழந்தைகளுடன் கொழும்பில் வாழ்வதால் இவன் திருமணத்தில் எந்தப் பிரச்சனையும் எழவில்லை. மதுவின் சிறிய தந்தையும் தன் பெரும் பொறுப்பு தானாகக் குறைந்ததில் கபிலன் மேல் நல்ல மரியாதையும் மதிப்புமாக திருமணத்தை நடத்தி முடித்துவிட்டார். கபிலனும் வேலை செய்வதால் தனிய வீடும் எடுத்து மதுவுக்கு விரும்பியது போலவே கதிரை மேசை கட்டில் என வாங்கிப் போட்டு மதுவை தலையில் தூக்கி வைக்காத குறைதான். மதுவும் நல்ல மனைவியாக வாழ்க்கையை நன்றாகவே இரசித்து அனுபவித்தனர். பலருக்கு கபிலன் மேல் சிறு பொறாமை கூட எட்டிப் பார்த்தது. இவனுக்கு இவ்வளவு இளம் மனைவியா என்று. ஒரு வருடத்தில் அவர்களின் அன்பின் சாட்சியாக ஒரு மகனும் பிறந்துவிட்டான். பெயர் வைத்தது கூட மதுதான். மதனுக்கு இப்ப வேலையும் அதிகம். மகன் பிறந்தபின் செலவும் அதிகமானதால் தவிர்க்க முடியாததாகி விட்டது. காலையில் போனால் இரவு எழு மணியாகும் வர. நான் நாள்முழுதும் தனிய இருக்கிறன் என்ற மதுவின் புலம்பலுக்கு அதுதான் பெடியன் இருக்கிறானே துணைக்கு என்று சிரித்துச் சமாளித்தாலும் மனம் வருந்தத்தான் செய்தது.

மது உமக்கு கம்பியூட்டர் தெரியும் தானே. அதில கொஞ்சம் பழகின்னீர் எண்டா எனக்கு வீடியோ எடிட் செய்ய உதவிசெய்யலாம். சனி ஞாயிறுகளில் வீடியோ எடுக்கப் போனால் நல்ல காசுவரும் என்றான். ஏற்க்கனவே வீட்ட வாறது பிந்தி. இதுக்குள்ள சனி ஞாயிறு வேற போகப் போறியளே என மது சலிப்புடன் கேட்டாள். எல்லாம் உம்மை சந்தோசமா வச்சுக் கொள்ளத்தானே. சொந்த வீடு வாங்கவேணும் என்று சொன்னனீர் எல்லோ. கொஞ்சம் காசு இருந்தாத்தானே கடன் தருவான் என்றவுடன் மதுவும் ஒன்றும் கூறவில்லை. பின்னர் வந்த நாட்களில் மது கொஞ்சம் கொஞ்சமாக கணனியில் பழகிவிட்டாள். கபிலனுக்கு ஆச்சரியம் இவ்வளவு விரைவாக எல்லாம் பழகிவிட்டாளே  என அதை அவளிடமே மகிழ்வோடு கூறினான். தம்பி தன்ர பாட்டில விளையாடுவான். நான் என்பாட்டில கொம்பியூட்டரில செய்வான் என மது கூற கபிலனுக்கு மனது நின்மதியாகிப் போனது. இவளுக்குப் பொழுது போகிறது பிரச்சனை இல்லை என எண்ணி நின்மதிடைந்தான். ஆனால் அந்த நின்மதி இன்னும் கொஞ்ச நாட்கள் வரைதான் என பாவம் அவன் அறியவில்லை.

தொடரும்............மதுவுக்கு இப்ப நேரமே கிடைப்பதில்லை. காலையில் எழுந்து மகனின் அலுவல்கள் பாத்து சாப்பாடெல்லாம் கொடுத்து கொட்டுக்குள் விளையாட்டுப் பொருட்களைப் போட்டுவிட்டால் அவன் தன்பாட்டில் விளையாடுவான். பிறகு கொஞ்ச நேரம் டிவியில் போகும் நாடகங்கள் பார்ப்பது, சமைப்பது எனப் போய்விடும்.மதியம் சமைத்துச் சாப்பிட்டு மகனை வெளியில் கொண்டுபோட்டு வீட்டுக்குள் வந்தால் பிறகு face book. படம் ஏதாவது இருந்தால் பார்ப்பாள். அல்லது இருக்கவே இருக்குக் கணணி. நல்ல காலம் ஒண்டும் தெரியாமல் விசரி மாதிரி இருந்திருப்பன். கபிலனுக்குத்தான் நன்றி சொல்ல வேணும் என மனதில் அடிக்கடி நினைத்துக் கொள்வாள். இதுக்கும் இல்லாவிட்டால் என் நிலை என்ன ஆகியிருக்கும். தமிழ் குடும்பங்கள் கொஞ்சம் அங்கங்கே இருக்கிறார்கள் தான். அனால் எல்லாம் பட்டிக்காட்டுக் கூட்டம். மொடே னான குடும்பங்கள் ஒன்றும் இல்லை. அதனால் மதுவும் அவர்களுடன் பழகுவதற்கு பெரிதும் விரும்புவதில்லை. கணனியில் ஆர்வம் இல்லாமல் இருந்த மதுவை கபிலன் தான் கட்டாயப்படுத்தி கணணியைப் பழக்கி விட்டது.

இப்ப எனக்கு எத்தனை நண்பர்கள். வாழ்வு எவ்வளவு ஆனந்தமாகப் போகிறது. அதுகும் இப்ப கரன் அடிக்கடி தனி மடலில் எழுதுபவற்றை வாசிக்கவே மனதெல்லாம் ஒரே படபடப்பு. என் படத்தை அனுப்பும்படி வேறு தொந்தரவு.  நான் கேட்காமலே தன படத்தை அனுப்பியுள்ளான். அழகாய்த்தான் இருக்கிறான். லண்டனில இருக்கிறபடியால் கொஞ்சம் மாடர்ன் ஆகவும் தெரிகிறான். இப்போதெல்லாம் அவனுடன் கதைக்காமல் இருக்கவே முடியவில்லை. ஸ்கைப் எவ்வளவு உதவி செய்கிறது. யாரிடமும் மாட்டத் தேவை இல்லை. பண விரயமும் இல்லை. ஆனா .......மனம் ஒரே தடுமாற்றமாகவும் இருக்கே. கபிலனுக்கு நான் துரோகம் செய்கிறேனோ? ஒருவருடன் கதைப்பது தவறில்லை. நானும் தான் என்ன செய்வது நாள் முழுவதும் வீட்டுக்குள் தனியே இருந்து இது என் குற்றம் இல்லை என தன்னைத் தானே சமாதானம் செய்துகொண்டாள் மது. இது ஒன்றும் தெரியாது கபிலனும் தன் வேலை வீடு என நாட்கள் நகர்ந்தன. மதுவுக்கும் கரனுக்குமான நெருக்கமும் கூடிக்கொண்டு போனது. மனைவியுடன் அதிக நேரம் செலவிடாததாலும் வேலைக் களைப்பாலும் மதுவிடம் ஏற்பட்ட மாற்றங்களை கபிலன் அவதானிக்கவில்லை. வேலையால் வந்தால் மகனுடன் செலவழிக்கவே நேரம் போய்விடும். மகனும் இப்ப தத்தி நடை போடுவதால் அதைப் பார்க்கவே ஆனந்தம் தான். ஞாயிற்றுக் கிழமைகளில் வெளியே எங்காவது போவோம் என்றாலும் மது அதை விரும்புவதில்லை.

மது பாடு இப்ப பெரிய திண்டாட்டம். கரன் காதல் மழையில் தினமும் குளிக்க வைக்கிறான். தன்னிடம் வரும் படி ஒரே கரைச்சல். மதுவுக்கு என்ன முடிவு எடுப்பதென்றே தெரியவில்லை. பாவம் கபிலன் என்னை விரும்பிச் செய்தவர் அவருக்கு சரியான ஏமாற்றமா இருக்கும். ஆனால் அதுக்காக நான் என் சந்தோசத்தை இழப்பதா. மகனையும் கொண்டு போகவேணும். அதிலும் இப்ப பெரிய தலைவலி பிள்ளையையும் விட்டுவிட்டு வரச்சொல்லி கரன் கூறுகிறான். அதுதான் யோசனை. பாவம் சின்னப் பிள்ளை. ஆனால் பிள்ளையைக் கொண்டு போனாலும் மற்றவை கேள்வி கேட்பார்கள். ஒருவாரச் சிந்தனையின் பின் மகனை விட்டுவிட்டுப் போவது தான் சிறந்தது என மது முடிவெடுக்கிறாள். எல்லாத்துக்கும் துணிஞ்சாச்சு. இனி யோசிச்சுப் பலனில்லை. கபிலனோட கதைக்கத்தான் வேண்டும் என எண்ணியபடி அவனுக்காகக் காத்திருந்தாள் மது.

கபிலன் வேலையால் வந்து சாப்பிட்டு முடிச்சு மகனுடன் விளையாடி மகன் தூங்கும் வரை பார்த்துக்கொண்டிருந்தவள் அதன் பின் கபிலன் நான் உங்களுடன் கதைக்க வேணும் என்றாள். கதையுமன் எதோ அந்நிய ஆக்களுக்குச் சொல்லுற மாதிரிச்சொல்லுறீர் என்றான். மதுவிடம் எந்தவிதச் சிரிப்பையும் காணவில்லை. அவனுக்கு யோசனையாக இருந்தது. தாய்க்கு காசு அனுப்பக் கேட்டகப் போறாளோ என . என்ன பேச்சை காணேல்லை என்ன எண்டு சொல்லுமன் என்றான். என்னை மன்னிச்சுக் கொள்ளுங்கோ. நான் உங்களை ஏமாத்திப் போட்டன் என்றாள். என்ன என்னைக் கட்ட முதல் யாரையாவது காதலிச்சனீரோ? அதை என்னிடம் சொல்லவில்லையோ இத்தனை நாள் அதுதானே? நீர் என்னைக் கட்டமுதல் யாரைக் காதலிச்சிருந்தாலும் எனக்கு அதைப்பற்றிக் கவலை இல்லை. நீர் ஒண்டுக்கும் யோசிக்க வேண்டாம் என்றான். நான் மற்ற ஆம்பிளையள் மாதிரி இல்லை மது உமக்குத் தெரியும் தானே என்றுவிட்டு நிமிர்ந்து அவளைப் பார்த்தான். அவனின் பார்வையைத் தவிர்த்தபடி என்னை மன்னிச்சிடுங்கோ நான் இரண்டு மாதமா நால்லா யோசிச்சிட்டுத்தான் இப்ப கதைக்கிறன். உங்களை நான் வெறுக்கேல்லை ஆனால் எனக்கும் காரனுக்கும் இப்ப 3 மாதமா பழக்கம். நாங்கள் இரண்டுபேரும் விரும்பிறம் என்றுவிட்டு நிமிர்ந்து கபிலனைப் பார்த்தாள். கபிலன் அதிர்ந்துபோய் இருப்பது தெரிந்தது. ஆனாலும் என்ன செய்வது. உங்களுக்கு அதிர்ச்சியா இருக்கும் என்று எனக்குத் தெரியும். ஆஅனால் உங்களை ஏமாற்றிக் கொண்டு தொடர்ந்து என்னால் இருக்க முடியாது என்றாள். கபிலன் திட்டுவான் அடிப்பான் என எதிர் பார்த்தவளுக்கு அவன் ஒன்றும் பேசாமல் இருந்தது ஒரு குற்ற உணர்வைத் தோற்றுவித்தது. கொஞ்ச நேரம் சத்தம் ஒன்றும் இல்லை அமைதியிலேயே கழிந்தது. அவநின் அதிர்ச்சி தெரிந்தாலும் மீண்டும் கபிலன் கபிலன் என அவனை இருமுறை கூப்பிட்டு அவனுக்கு ஒன்றுமில்லை என்பதை  நிச்சயம் செய்து கொண்டாள்.

கபிலனுக்கோ பூமிஒஇ பிளந்து தன்னை மூடிக் கொள்ளக் கூடாதா என மனம் ஏங்கியது.கத்தி அழவேண்டும் போல் மனம் ஆர்ப்பரித்தது . ஆனாலும் தன்னை அடக்கிக் கொண்டான். நான் உமக்கு என்ன பிழை விட்டனான் மது என தோய்ந்துபோன குரலில் கேட்டான் மதுவுக்கு அதற்குமேல் அடக்க முடியவில்லை. அவள்  என்னை மன்னிச்சுக் கோளுங்கோ என்று கூறியபடி பெலத்து அழத்தொடங்கினாள். அவள் அழுது முடியுமட்டும் அவனும் ஒன்றும் கதைக்கவில்லை. அழுது முடிய சரி நீர் முடிவெடுத்து விட்டீர். விருப்பம் இல்லாத ஒரு ஆளை கட்டாயப் படுத்தி இருக்க வைக்க முடியாது. எனக்கு உம்மில இப்பகூடக் கோவம் வரேல்லை. அவ்வளவு நான் உம்மில அன்பு வச்சிருக்கிறன. இண்டைக்கு வேறை ஒண்டும் கதைக்க வேண்டாம் . இரவு முழுவதும் நாளை பகல் முழுதும் யோசியும். நாளைக்கு கதைப்பம் என்றுவிட்டு எழுந்து போய்ப் படுத்துவிட்டான்.

தொடரும் .............


 பகுதி 3

மதுவுக்கு முன் ஒன்றையும் காட்டாமல் கபிலன் வந்துவிட்டானே தவிர அறைக்குள் வந்தவுடன் கத்தி அழவேண்டும் போல் இருந்தது. ஆனால் அடக்கிக் கொண்டான். மது கூறியவை மீண்டும் மீண்டும் மனதில் வந்து சூறாவளியாய்ச் சுழல எங்கே தவறு விட்டேன் என மீண்டும் மீண்டும் தன்னைத் தான் கேட்டும் விடை கிடைக்கவில்லை. அவளுக்கு என்ன குறை வைத்தேன். கேட்காமலே எல்லாம் வாங்கிக் குடுத்தேன். என்னைக் கலியாணம் கட்ட விருப்பமோ என்று கேட்டுத்தானே அவளைச் செய்தனான். அப்ப அவள் என்னைக் காதலிக்கவில்லையோ? சித்தப்பனுக்குப் பாரமாக இருக்கக் கூடாது என்று என்னைக் கட்டியிருக்கிறாள். அப்பிடிக் கட்டியிருந்தாலும் கலியாணக் கட்டி ஒன்றரை வருடத்தில் அதுக்கும் பிள்ளை இருந்தும் என்னில அன்பு ஏற்படேல்லை என்றால் .......எல்லாம் எண்ர பிழைதான். எல்லாம் அவளைக் கேட்டுச் செய்திருக்க வேணும். அவளை ராணிமாதிரி வச்சிருக்க வேனுமேண்டுதானே ஓவர் டைம் வேலை கூடச் செய்தனான். அவள் வேண்டாம் வேண்டாம் எண்ண கணணி பழக்கினது என்ர பிழை. மற்றத் தமிழ் ஆட்களோட பழகாமல் ஒதுங்கி இருந்ததும் பிழை. நான் என்ன செய்ய இப்ப. எதுக்கும் நேசனிடம் தான் கதைக்க வேணும். என்னைப் பற்றி எல்லாம் தெரிஞ்சவன் அவன்தான் என எண்ணிக் கொண்டே எழுந்தவன் மீண்டும் கட்டிலில் விழுந்தான். எதுக்கும் நாளை மது என்ன சொல்கிறாள் என்று பாப்போம் என எண்ணியபடி விடிய விடிய கட்டிலில் புரண்டு புரண்டு படுத்தும் எந்த முடிவையும் எடுக்க முடியாமல் சோர்ந்துபோய் படுத்திருந்தான். என்னதான் நினைத்தாலும் தனக்குள் அவமான உணர்வு வந்தாலும் மதுவின்மேல் கோபமோ அளவுகடந்த வெறுப்போ எழாதது அவனுக்குத் தன்மேலேயே கோபத்தை ஏற்படுத்தியது. இதுவரை மது அறைக்குள் வரவில்லை. சோபாவில் இருக்கிறாளோ அல்லது படுக்கிறாளோ என நினைத்தாலும் எழுந்து சென்று பார்க்க மனம் வரவில்லை. பக்கத்தில் தூங்கிக் கொண்டிருக்கும் மகனை எட்டிப் பார்த்தான். இவனை நான் தான் வைத்திருக்க வேணும். இவனை விட்டுவிட்டு மது எப்பிடிப் போறாள் எண்டு பார்ப்போம் என எண்ணியபடி மகனின் பிஞ்சு விரல்களைப் பற்றி தன் விரல்களால் வருடியபடி இருக்க மகன் தூக்கத்தில் சிரிப்பதைப் பார்த்துக்கொண்டு தற்காலிகமாக தன் கவலையை மறக்க மகனை தூக்கித் தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டான். மகனை நெஞ்சில் போட்டபடி தூங்கிவிட்டவன்  மகனின் அழுகைச் சத்தத்தில் கண்விழித்தான்.

கட்டிலின் நேரே மணிக்கூடு நேரம் 6 மணி காட்டியது. மகனின் அழுகைச் சத்தம் கேட்டு அறைக்குள் வந்த மது ஒன்றும் பேசாது இவனையும் நிமிர்ந்து பார்க்காது மகனை இவனிடமிருந்து வாங்கிக் கொண்டு வெளியே செல்ல இவன் எழுந்து குளியலறைக்குச் சென்று  பல் விளக்கி முகம் கழுவி வந்து தானே குசினிக்குள் சென்று தனக்கும் மதுவுக்குமாகத் தேநீர் தயாரித்து வந்து அவளின் முன் வைத்துவிட்டு தானும் கதிரையில் அமர்ந்துகொண்டான்.


கொஞ்சநேரம் தேநீரை உறிஞ்சுவதும் மதுவைப் பார்ப்பதுமாக இருந்த கபிலன் மது வாய் திறக்காமல் இருப்பதைக் கண்டு தானே ஆரம்பித்தான். என்ன முடிவேடுத்திருக்கிறீர் என்றான். கொஞ்சநேரம் ஒன்றும் கூறாது சும்மா பார்த்துக் கொண்டிருந்துவிட்டு  நான் லண்டன் போகப் போறன் என்றாள் மது. இரவு யோசித்துவிட்டு மன்னிச்சுக் கொள்ளுங்கோ என்றுதான் சொல்லுவாள் என்று எதிர்பார்த்திருந்த கபிலன் உள்ளுக்குள் நிலை குலைந்தாலும் வெளியே காட்டாது மகனை நான் தான் வைத்திருப்பேன் உம்மிடம் தரமுடியாது என்றான். நானும் கொண்டுபோக முடியாது என்று சாதாரணமாகக் கூறிவிட்டு தலையைக் குனிந்துகொண்டாள் மது. பிள்ளையை சாட்டியாவது அவளை நிப்பாட்டலாம் என்ற அற்ப ஆசையிலும் மண்விழ  எப்ப போகப் போறீர் என்றான் குரல் தொய்ந்துபோய். டிக்கெட் ஒன்று கீத்துரோவுக்குப் போட்டுத் தாங்கோ என்றால். உன்னைக் கட்டினதுக்கு இன்னும் என்னென்ன இருக்கோ என மனதுள் நினைத்தபடி சரி நான் இப்பவே பாக்கிறன் என்றுவிட்டு அறைக்குள் சென்று கணனியின் முன் அமர்ந்தான். சீ இவளுக்காக என்ன எல்லாம் செய்தன் என்று நினைக்கையிலேயே அழுகை எட்டிப் பார்த்தது. இவளுக்கு முன்னால்  அழவே மாட்டன் என தனக்குத் தானே சபதம் எடுத்துக் கொண்டான்.  அடுத்த நாளே  டிக்கெற்ரை  போட்டு போடிங் பாசையும் பிரிண்ட் செய்து அவளுக்கு முன்னால்  கொண்டுவந்து வைத்தான்.

சரி நீர் போறதுக்கான ஆயத்தங்களைச் செய்யும் நான் கொஞ்சம் வெளியில போட்டு வாறன் என்று கூறிவிட்டு  அவளின் பதிலுக்குக் காத்திருக்காமல் வெளியே வந்தான். காரில் ஏறி நேசனின் வீட்டுக்கு முன் நிறுத்திவிட்டு வீட்டுக் கதவைத் தட்டினான். கதவைத் திறந்த நேசனுக்கு ஆச்சரியம். என்னடா சொல்லாமல் கொள்ளாமல் வந்திருக்கிறாய் என்றவன் அவன் உள்ளே வர விட்டு கதவை மூடிவிட்டு வந்தான். கபிலனின் முகத்தைப் பார்த்தாலே எதோ பிரச்சனை என்று தெரிந்தது. கபிலன் சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு ஒருத்தரும் இல்லைத்தானே எனக் கேட்டான். எல்லாரும் வேலைக்கு போட்டினம் ஏன் அவங்கள்  நிக்க மாட்டாங்கள் என்று உனக்கும் தெரியும் தானே என்றுவிட்டு வந்த அலுவலைச் சொல்லன் எண்டான். நாளைக்கு விடிய நீ நிப்பாய் தானே. மதுவை ஒருக்கா எயாப்போர்ட் கூட்டிக்கொண்டு போக ஏலுமோ நேசன் என்றான். ஒ அதுக்கென்ன எங்க போறா மது   என்றான்.  லண்டன் போறாள் என்னும்போதே கபிலனின் குரலில் அழுகை எட்டிப் பாத்தது. ஏன் ஏதும் கலியாணவீடே என்று கேட்டதுதான் தாமதம் கபிலன் அழத் தொடங்கினான். என்னடா மச்சான் ஏன் ஏன் அழுகிறாய் என கேட்டவாறே அவனுக்கு அருகில் வந்து இருந்து கொண்டு தோளைத் தட்டிக் கொடுத்தான் நேசன். கொஞ்ச நேரம் அழுதபின் நண்பனிடம் தன் துன்பமெல்லாம் சொல்லி முடிய நீ அப்ப மதுவைப் போகச் சொல்லிப் போட்டியோ என்ற நேசனிடம் நான் போகாதை எண்டாலும் அவள் போகத்தான் போறாள் அதிலும் நானே அனுப்பி வைக்கிறதுதான் நல்லது என்றுவிட்டு உனக்கு கொண்டு பொய் விட ஒரு பிரச்சனையும் இல்லைத்தானே என்றான். எனக்கு ஒரு பிரச்சனையும் இல்லை ஆனால் நான் ஒருக்காக் கதைச்சுப் பாக்கட்டே என்ற நேசனை இடை மறித்து பிள்ளையையே விட்டுட்டுப் போகத் தயாரானவள் நீ சொல்லிக் கேட்கவே போறாள் என்றுவிட்டு நாளைக்கு  விடிய 8 மணிக்கு வீட்டை வா.12. 20 க்கு பிளைட்  என்றவன் போக வெளிக்கிட நீ என்னெண்டு பிள்ளையைத் தனிய வச்சிருக்கப் போறாய் எண்டவனிடம் எனக்கு ஒரு மாத லீவு இருக்கு. இனித்தான் அடிச்சுச் சொல்லப் போறன். பிறகு என்ன செய்யிறதெண்டு பாப்பம் என்று விட்டு கதவைத்  திறந்து கொண்டு செல்லும் நண்பனை இரக்கத்துடன் பார்த்துக் கொண்டான். எதுக்கும் நாளை மதுவோட கதைச்சுப் பாகத்தான் வேணும் என்று எண்ணியபடி கதவைச் சாத்திவிட்டு கதிரையில் வந்து அமர்ந்தான்


பகுதி 4

கபிலனுக்கு வீட்டுக்குப் போகவே விருப்பம் வரவில்லை. தன்னில் விருப்பம் இல்லாத மனைவி வீட்டில் இருக்க யாருக்குத்தான் வீட்டுக்குப் போக மனம் வரும். அதுகும் ஆசையாகக் காதலித்து மணந்தவள் இன்னொருவனிடம் மனத்தைக் கொடுத்துவிட்டு கணவனிடமே சொல்கிறாள் என்றால், என் நிலை யாருக்கும் வரக்கூடாது என்று எண்ணியபடி கடைக்குப் போய் ஒரு மாதத்துக்கு மகனுக்குத் தேவையான அனைத்துப் பொருட்களையும் வாங்கிக் கொண்டு காரில் ஏறியவன் நாளையும் அதற்கு அடுத்துவரும் நாட்களும் எப்படிக் கழியப் போகிறது என எண்ணியபடியே போய்க்கொண்டிருந்தான். மகன் தான் இன்னும் பாவம். தாயுடனேயே இருந்து பழகியவன் எப்படி இருக்கப் போகிறான். சாமாளிக்க வேண்டியதுதான். அவன் தத்தி நடைபோடும் அழகே தனிதான். எட்டுப் பற்களுடன் வாய் திறந்து சிரிப்பது அதைவிட அழகு. புரியா மொழியில் கொன்னைப் பேச்சு நினைத்தாலே எவ்வளவு மகிழ்வா இருக்குது. இதையெல்லாம் கூட விட்டுப் போவாளா ஒருத்தி. கல்மனதுக்காரி. போகட்டும் எனக்கு மகன் இருக்கிறான் என்று எண்ணிக் கொண்டிருக்கையில் தொடர்ந்து கார்க்கோண் அடிக்கும் சத்தம். அப்போதான் நினைவு வரப்பெற்று பார்த்தால் கடவை விளக்கு பச்சை காட்டியபடி நிற்பது கண்ணில் விழ உடனே காரை நகர்த்தினான்.வீட்டுக்குப் போகத்தான் வேண்டும். வேறு வழியில்லை. காரை வீட்டின் முன் நிறுத்திவிட்டு வாங்கிய பொருட்களையும் எடுத்துக் கொண்டு கதவைத் திறந்துகொண்டு உள்ளே சென்றான்.

மது குசினிக்குள் சமைத்துக்கொண்டு இருப்பது தெரிந்தது. மற்றும் வேலை என்றால் இவனும் போய் நின்று உதவுவான். இன்று தொலைக் காட்சியைப் பார்த்துக்கொண்டு இருக்க முற்பட்டாலும் மனம் அதில் பதியவில்லை. ஆனாலும் சும்மா இருப்பது சூனியம் வைத்ததுபோல் ஆகுமென்று மனதை எங்கோவிட்டு பார்வையை மட்டும் பதித்தான் தொலைக்காட்சிப் பெட்டியில். சொர்க்கமாக இருந்த வீடு சுடுகாடுபோல் ஆனது ஏன் என மனது தவிப்புடன் கேட்டாலும் விடைதான் கிடைக்கவில்லை. எவ்வளவு நேரமாக அங்கு இருந்தானோ சாப்பிடலாம் என்னும் மதுவின் குரலால் சிந்தை கலைந்திட அவளை நிமிர்ந்து பார்த்தான். அவள் தலையைக் குனிந்துகொண்டே இருப்பதைக் கண்டதும் நான் பிறகு சாப்பிடுறன் என்றுவிட்டு தொடர்ந்து தொலைக் காட்சி பார்ப்பதுபோல் பார்வையைப் பதித்தாலும் மது படுக்கை அறைக்குள் சென்று கதவைச் சாத்துவது கடைக்கண்ணில் தெரிந்தது. மகனும் நித்திரைபோல. சத்தத்தைக் காணவில்லை என்று கேட்பதற்கு வாயெடுத்தவன் ஒன்றும் கூறாமல் வார்த்தைகளை விழுங்கிவிட்டு சோபாவில் படுத்து கைகளை நெற்றியில் வைத்துக் கொண்டான். அப்படியே தூங்கியும் விட்டான்.
மகனின் கைகள் முகத்தில் அடிக்க திடுக்கிட்டு எழுந்தவன் முன்னால்  இருந்த மணிக்கூட்டில் நேரத்தைப் பார்த்தான். மாலை ஐந்தாகி  விட்டிருந்தது. இரவு தூங்காமல் இருந்தது இப்போது தன்னை அமுக்கிவிட்டது அதுக்கும் நல்லதுக்குத் தான் என எண்ணியவன் மகனை தூக்கி மடியில் வைத்துக் கொண்டு எப்ப எழும்பின்னியள். அப்பாவுக்கு இப்பவே அடி போடத் தொடங்கிவிட்டியளோ என தான் இயல்பாய் இருப்பதுபோல் மதுவுக்குக் காட்ட கொஞ்சம் பலமாகக் கூறினான். சாப்பாடு கொண்டு மது வருவது தெரிந்தது. வேண்டாம் என கூறுவோம் என மனதுள் எழுந்த நினைப்பை அடக்கிக் கொண்டு கை நீட்டி மதுவைப் பார்க்காமலே உணவுத் தட்டை வாங்கிக் கொண்டு உண்ணத் தொடங்கினான். நீ என்னை விட்டுப் போவதால் எனக்கு ஒன்றும் பாதிப்பு இல்லை என மதுவுக்குக் காட்டும் நினைப்பு. மதுவும் உணவுடன் வந்து உணவு மேசையில் இருப்பது தெரிந்தது. இவளும் இன்னும் உண்ணவில்லையோ என ஒரு சிறு பரிதாபம் எழுந்து, எழுந்த வேகத்திலேயே அடங்கியும் போனது. மற்றும் வேளை எனில் தொலைக்காட்சி பார்த்தபடி உண்ணவே மது விடமாட்டாள். உணவு மேசையில் இருந்துதான் உண்ணலாம். இன்று அவளும் ஒன்றும் கூறவில்லை. அவனும் அங்கு போகவில்லை. உண்மையில் அவனுக்கு உணவு உண்ணவே முடியவில்லை. ஆனாலும் உண்டுமுடித்து கை கழுவிக் கொண்டு வந்து மீண்டும் கொஞ்ச நேரம் தொலைக் காட்சி பார்த்துக்கொண்டு மகனுடன் விளையாடியவன் மகனை வெளிக்கிடுத்தி,  நான் மகனுடன் கொஞ்ச நேரம் வெளியில போட்டு வாறன் என்று அவளுக்குச் சொல்லிவிட்டு பதிலுக்குக் காத்திருக்காமல் வெளியே சென்றுவிட்டான்.

மகனை மது வெளியே கொண்டு செல்லும்போது குழந்தைகளுக்கான வண்டிலில் வைத்துத் தான் கொண்டுபோவாள். கபிலன் மகனைக் கைகளில் தூக்கியபடி நடக்கத் தொடங்கினான். கீழே இறக்கி விடும்படி மகன் கைகால்களை அசைத்து இவனிடமிருந்து உன்னினான். கீழே மகனை இறக்கிவிட்டு சிறிய கைகளைப் பிடித்துக்கொண்டு மெதுவாக நடக்கத் தொடங்கினான். திருமணமான புதிதில் வீதியால் நடந்து போகும்போது இவன் ஆசையுடன் மதுவின் கைகளைப் பற்றினால் மது மற்றவர்கள் பார்ப்பார்கள் என்று கைகளைக் கூச்சத்துடன் இழுத்துக் கொள்வது நினைவில் வந்தது. கட்டிய கணவன் கைபிடிக்க வீதியில் கூச்சப்பட்டவள் இன்று இன்னொருவனை நாடிப் போகிறாள் என்பதை இன்னும் தான் இவன் மனம் நம்ப மறுத்தது. இருளத் தொடங்க மகனுடன் திரும்ப இனி இதுதான் எமக்கான வாழ்க்கை என மனது கூற, எவ்வளவு தான் மறைக்க நினைத்தாலும் முகத்தில் அவனை அறியாமல் சோகம் வந்து சூழ்வதைத் தவிர்க்க முடியவில்லை. தாயைக் கண்டதும் கைகளைத் தூக்கியபடி ஓடும் மகனைப் பார்த்துவிட்டு இவன் குளியலறை சென்று குளித்துவிட்டு தலையணையும் போர்வையும் எடுத்துக்கொண்டு வந்து சோபாவில் நீட்டி நிமிர்ந்து படுத்தபடி தொலைக்காட்சியை இயக்கிவிட்டு அதைப் பார்த்தபடி தனது தொலைபேசியில் காலை எழும்பவேண்டிய நேரத்துக்கு அலாம் வைத்துவிட்டுப் படுத்துவிட்டான். இந்த இரவு அவனுக்கு அவனறியாமலே தூக்கம் வந்துவிட்டது.

காலை அலாம் அடிக்க முன்பே கபிலனுக்கு முழிப்பு வந்துவிட்டது. கண்ணைத் திறந்து பார்த்துவிட்டு கொஞ்ச நேரம் அப்படியே இருந்தான். மதுவை எழுப்பிவிடுவம் என்று நினைக்க குசினிக்குள் வெளிச்சம் தெரிந்தது. அப்ப மது எழும்பிவிட்டாள். தன் அலுவலில் அவள் கவனம் தானே என எண்ணியபடி தன் காலைக் கடன்களை முடித்தான். வீட்டு மணிச்சத்தம் கேட்டதும் இவன் எழ மதுவும் குசினிக்குள் இருந்து வெளியே வந்து யார் விடிய நேரம் என்று கேட்க, உம்மை எயாப்போர்ட்டுக்குக் கூட்டிக்கொண்டு போக நேசன் வந்திருக்கிறான் என்றான். அவர் எதுக்கு நீங்கள் எங்க போறியள் என்று கேட்டவளுக்குப் பதில் சொல்லாது கதவைத் திறந்தான். உள்ளே வந்த நேசன் ஒன்றையும் காட்டிக்கொள்ளாமல் வணக்கம் மது என்ன ரெடியோ என்றான் சிரித்துக் கொண்டே. ஓம் அண்ணா பொறுங்கோ தேத்தண்ணி இருக்கு குடிச்சிட்டு வெளிக்கிடுவம் என்றபடி குசினியுள் சென்று இரு கோப்பைகளில் தேநீரைக் கொண்டுவந்து மேசையில் வைத்துவிட்டு ஒன்றை எடுத்து நேசனிடம் நீட்டிவிட்டு படுக்கை அறைக்குள் சென்றாள். கபிலன் உடைமாற்றிக் கொண்டிருந்தான். இவள் உள்ளே வருவது தெரிந்தும் கவனிக்காமல் மாற்றி முடிய வெளியே போக எத்தனிக்க, என்னை மன்னிச்சுக் கொள்ளுங்கோ என்றாள். உம்மை மன்னிச்சா என்ன மன்னிக்காட்டி என்ன நிலைமை மாறப் போறதில்லை. அதனால என்ன கதைச்சும் பிரயோசனம் இல்லை என்றுவிட்டு வெளியே வந்துவிட்டான்.

இரண்டு பயணப் பெட்டிகளில் தன் பொருட்களை அடக்கிகொண்டவள் இரண்டையும் கொண்டுவந்து வரவேற்பறையுள் வைத்தாள். பெட்டிகளைத் தூக்கப் போன கபிலனை இடைமறித்த நேசன் விடடா நானே தூக்கிறன் என்றபடி பெட்டிகளை எடுத்துக் கொண்டு நடக்க இவனைத் திரும்பிப் பாத்துவிட்டு மதுவும் நேசனைப் பின்தொடர்ந்தாள். இவன் வழியனுப்பப் போகவில்லை. அவளது பெட்டிகளை நேசன் காருக்குப் பக்கத்தில் வைத்துவிட்டு மது குறை நினைக்காதைங்கோ. உங்களை என்ர சகோதரியா நினைச்சுச் சொல்லுறன். கபிலனைப் போல ஒருத்தன் கிடைக்கக் குடுத்துவைக்க வேணும். நீங்கள் அவசரப்பட்டு உந்த முடிவை எடுத்திருக்கிறியள். எதுக்கும் ஒருக்கா யோசியுங்கோ என்றுவிட்டு மதுவைப் பார்த்தான். அவளோ யோசிச்சுத் தான் நான் முடிவு எடுத்தனான் என்று சொல்ல கபிலன் மேற்கொண்டு ஒன்றும் கதைக்காமல் அவளது பெட்டிகளைத் தூக்கி காரின் பின்பக்கம் வைத்துவிட்டு காரில் ஏறினான். விமான நிலையம் செல்ல இரண்டு மணி நேரம். மதுவோ நேசனோ எதுவும் கதைக்கவே இல்லை.

கபிலனின் வாழ்வு திசைமாறி மாதம் ஒன்று ஓடிப் போனது. மகன் இப்ப அம்மாவைத் தேடுவதில்லை. கபிலன்தான் இரு வாரங்கள் சரியாகத் துன்பப்பட்டுப் போனான். சமைப்பது  மகனுக்கு நப்பி மாற்றுவது குளிக்க வார்ப்பது என்று, அதைவிட உணவு கொடுப்பதுதான் சரியான கடினம். வீம்பில் உடனே மதுவைப் போகச்சொல்லிவிட்டன். இதுவரை மகனின் வேலைகளை அவளே செய்ததால் ஒருமாதிரி தட்டித் தடுமாறி இப்ப வடிவாகச் செய்யப் பழகிவிட்டான். மூன்று வாரங்களில் மகனைப் பார்ப்பதற்கு ஒழுங்கு செய்துவிட்டான். புதிதாகத் திருமணமான இருவர் வீடு தேடி அலைந்தபோது நேசன் தான் அவர்களிடம் கதைத்து இப்படி குழந்தையுடன் ஒருவன் இருக்கிறான். அவன் வேலைக்குப் போகும் நேரம் குழந்தையை பார்த்தால் நீங்கள் வாடகை இன்றியே அங்கிருக்கலாம் என்று அவர்களும் சம்மதித்து போன கிழமைதான் இங்கு வந்திருந்தார்கள். இவனுக்கு முன்னே தெரியாதவர்களாயினும் நேசனுக்குத் தெரிந்தவர்களாகையால் எவ்வித பயமுமின்றி அவர்களை எற்றுக்கொண்டாயிற்று. அவர்களும் தானும் தன் பாடும். இவனுக்கு நேற்றுத்தான் வேலை தொடங்கியது.  மகனும் அந்தப் பெண்ணுடன் ஒன்றிவிட்டான். இனிப் பிரச்சனை இல்லை என்று எண்ணியபடி இருக்கையில் அமர்ந்தான்.

 மகன் எழும்பும்  நேரம் எதுக்கும் பாலைக் காச்சி வைப்போம் என எண்ணியபடி எழ இவனின் கைத்தொலை பேசி அடிக்கும் சத்தம் கேட்டது. எழுந்து சென்று எடுத்தால் நின்றுவிட்டது. லண்டன் இலக்கம். யார் லண்டனில் இருந்து அதுக்கும் என் கைத்தொலைபேசிக்கு என எண்ணியவன் எண்ணம் அதிர்வோடு நிக்க மதுவாக இருக்குமோ என எண்ண முதலே நெஞ்சு படபடத்தது. திருப்ப எடுப்பமோ என என்னும்போதே வேண்டாம், தேவை என்றால் அவர்களே எடுப்பார்கள் தானே என மனதைத் தேத்தினாலும், மதுதான் எடுத்தாளோ? மகனின் நினைவு வந்திருக்கும். என்னை பற்றி அவள் நினைக்கவும் மாட்டாள் என்று எண்ணிக்கொண்டிருக்க மீண்டும் தொலைபேசி அழைப்பு. உடனே எடுக்க எண்ணிவிட்டு மூன்று  நான்கு மணிச்சத்தம் கேட்கும் வரை பொறுத்து பின் எடுத்து  வணக்கம் என்றான். சிறிது நேரம் எதுவிதச் சத்தமும் இல்லை. கலோ யார் எனக் கேட்க நான் தான் மது என அவளின் குரல் கிணற்றுக்குள் இருந்து கேட்டது. இவனுக்கு நெஞ்சின் படபடப்புக் கூடிப் போனது. ம் என்றுவிட்டு இவனும் பேசாமல் இருந்தான். மகன் எப்படி இருக்கிறான் என மெதுவாகக் கேட்டாள். அவனும் நானும் எல்லாம் மறந்து நின்மதியா இருக்கிறம். சந்தோசமாகவும் இருக்கிறம் என்றான். என்னை மன்னிக்கவே மாட்டியளோ என்றாள் மது. நீர் தந்த பரிசு வாழ்க்கை பூரா மறக்க முடியாத பரிசு. எப்பிடி உம்மை மன்னிக்கிறது என்றான். அவளின் அழுகை ஒலி கேட்டது. இவன் ஒன்றும் கூறாமல் நின்றான். என்னை நீங்கள் மன்னிக்காட்டி நான் தற்கொலை தான் செய்யவேணும் என்று மது கூறியவுடன் இவனுக்கு வந்த கோபத்தில் வடிவாத் தற்கொலை செய்துகொள் என்றுவிட்டு தொலைபேசியைத் துண்டித்தான்.

கபிலனின் கால்கள் இரண்டும் கூட நடுங்கின. வந்து கதிரையில் அமர்ந்தவன் பின்னால் சாய்ந்து கண்களை மூடினான். என்ன ஒரு சுயநலம். தப்பு எல்லாம் தான் செய்துபோட்டு இப்ப மன்னிப்புக் கேட்டால் சரியோ? மன்னிக்காட்டி தற்கொலை செய்வதாய்  மிரட்டல் வேறு. டைவேஸ் கூடப் பண்ணாமல் இவளை அனுப்பிவச்ச என்னைச் சொல்ல வேணும். இந்த ஒரு மாதமா நான் பட்ட வேதனை. ஒரு தமிழர்களின் கண்ணிலையும் படக்குடாதெண்டு வீடும் வேலையுமா இவளைப் போல ஆட்களை வெட்டிப் போட வேணும் என எண்ணி முடியவில்லை மீண்டும் அவளிடமிருந்து போன். போனை நிப்பாட்ட நினைத்தவன் சரி இதுக்கு மிஞ்சி என்னத்தைச் சொல்லப் போறாள் என்று நினைத்தபடி குரலைக் கடினமாக்கிக் கொண்டு என்ன என்றான். தயவு செய்து போனை வச்சிடாதைங்கோ நான்  உங்களோட கதைக்க வேணும். எனக்கு உங்களை விட நம்பிக்கையா சொல்ல ஒருத்தரும் இல்லை என்று அவள் சொல்ல என்ன சொல்லவேணும் என்றான். நான் திரும்பி உங்க வரப்போறான் கபில். வேண்டாம் என்று மட்டும் சொல்லிப் போடாதைங்கோ என்றுவிட்டு விக்கிவிக்கி அழுபவளை ஒன்றும் சொல்லத் தோன்றாமல் நின்றான். அவள் உரிமையுடன் முன்பு கூப்பிடுவது போல் கபில் என்றது அவனுக்கு அவள்மேல் இருந்த கோபத்தைத் தணித்திருந்தது.
ஏன் அவன் விட்டுட்டுப் போட்டானோ என்றான். இல்லை என்னால இந்த நரகத்துக்குள்ள வாழ முடியேல்லை. இப்பதான் உங்கடை அருமை எனக்குத் தெரிஞ்சுது. பிள்ளையையும் உங்களையும் விட்டுட்டு என்னால இருக்க முடியேல்லை. நீங்கள் என்னை மனைவியா நினைக்க வேண்டாம். நான் உங்களைக் குழப்பாமல் பிள்ளையை மட்டும் வேலைக்காறிபோல பாத்துக்கொண்டு இருக்கிறன் என்று அழ அவனுக்கு என்னசெய்வது என்றே தெரியவில்லை. இப்பவும் அவள் சட்டப்படி என்ர மனிசிதான். நான் வேண்டாம் என்று சொல்லி அவள் ஏடாகூடமா ஏதும் செய்தால் அதுகும் எனக்குத்தான் பழி. ஆனால் இவள் போனதுக்கே இந்தச் சனங்கள் எப்பிடி நாக்கு வளைச்சுதுகளோ இப்ப திரும்பி வந்தால் என்ன சொல்லுங்களோ என ஏதேதோ எண்ணியவன் சரி எப்பிடிப் பாத்தாலும் கெட்டபேர் வந்தது வந்ததுதான். பாவம் மனம் நொந்து அழுகிறாள். ஒரு பெண்ணுக்கு வாழ்வு குடுக்கிறதாய் எண்ணி  சரி எப்ப வாறீர் என்றான். உண்மையாத்தான் சொல்லுறியளோ என நம்பமுடியாது கேட்டவள் நீங்கள் தான் எனக்கு டிக்கெற் எடுத்து அனுப்ப வேணும் என்றவுடன் சரி தயாராய் இரும், தனிய விமான நிலையம் வரத் தெரியுமோ என்றான். கீத்துறோவுக்கு எடுத்தால் நேர ரெயின் இருக்கு வருவன் என்றவுடன் சரி டிக்கெற்றை புக் பண்ணிப் போட்டு அடிக்கிறன் என்றபடி தொலைபேசியை அணைத்துவிட்டு கணனியின் முன் அமர்ந்தான்.

மதுவுக்கு கீத்துறோ விமான நிலையம் நெருங்க நெருங்க மனம் மகிழ்ச்சியில் துள்ளியது. இன்னும் ஐந்து நிமிடங்களில் விமானம் தரை இறங்கிவிடும். ஒரு பதினைந்து இருபது நிமிடத்தில் கரனைப் பார்க்கலாம். நான்கு மாதங்களின் முன்னர் கபிலனின் நண்பனின்  திருமணம் லண்டனில் நடைபெற்றதால் அதற்கு வருவதற்காக எடுத்த விசா இன்னும் இரண்டு மாதங்கள் இருக்கு. அல்லது விசா எடுக்க என்றே இரண்டு மூன்று வாரங்கள் சென்றிருக்கும். கபிலனுக்குச் சொல்லாது விசா எடுத்திருக்க ஏலாது. எதோ என்ர நல்ல காலம். லண்டன் போன பிறகு விசாவைப் புதுப்பிக்கலாம் என்று கரன் தெரியாமலோ சொல்கிறார் என மனதுள் எண்ணியபடி விமானம் தரை தட்டி மெதுவாக ஊர்ந்து செல்வதைப் பார்த்தபடி இருந்தாள்.

எல்லோருக்கும் பின்னால் அவளும் வரிசையில் நின்று தன் கடவுச் சீட்டைக் காட்டியபோது, எதற்காக வந்தனி இங்கு எனக் கேட்டபோது என்ன சொல்வது என்று தெரியாது தடுமாற்றம் ஏற்பட்டது. விசிற் விசிற் என இருமுறை கூறியதும் அதிகாரி இவளை விட்டுவிட்டார். நல்ல காலம் முதல் முறை வந்தபோது ஏன் எதுக்கு என கேள்விமேல் கேள்வி கேட்டு குடைந்தவர்கள். இம்முறை பெரிதாகக் கேட்கவில்லை. தட்டுத் தடுமாறி மற்றவர்களின் பின் வெளியே வந்து இவளது பெட்டிகளை எடுக்கும் இடத்திற்கு வருகிறாள். பெட்டிகள் வர அரை மணி நேரம் ஆகின்றன. கரன் என்னைத் தேடப் போகிறார் என எண்ணியபடி விமானத்தினுள் நிப்பாட்டி வைத்த கைத் தொலைபேசியை எடுக்கிறாள். அவனின் இலக்கத்தை அழுத்த தொடர்பு கிடைக்கவில்லை. வெளியே வந்து அவள் கண்கள் கரனைத் தேடி அங்கும் இங்கும் அலைகின்றன. தூரத்தில் நிற்பவனா கரன். படத்தில் நல்ல குளுகுளுவென்று பார்க்க அழகாக இருந்தானே. இப்ப பார்க்க மெலிந்த தோற்றத்துடன் ஐயோ என் நெஞ்சு ஏன் இப்படிப் படபடக்கிறது.

கையைஆட்டிச் சிரித்துக் கொண்டு வருகிறான். அவன்தான். இவளும் அவனைப் பார்த்து சிரிக்கிறாள். அவன் இவளுக்குக் கிட்ட வந்தவுடன் இவளை அணைக்கிறான். இவளுக்கு பயத்தில் எவ்வித உணர்வும் தோன்றவில்லை. ஆக்கள் என்று சொல்லிக் கொண்டு தன்னை விடுவிக்கிறாள். அவனும் அதன்பின் ஒன்றும் செய்யவில்லை. இவளை தொடருந்து  நிலையத்துக்கு அழைத்துச் செல்கிறான். அதிலிருந்து இறங்கி பேருந்தில் ஒரு இருபது நிமிடம் போய் இறங்கி வீட்டுக்கு கூட்டிக்கொண்டு போகிறான். கதவைத் திறந்ததுமே சரியான புளிச்சல் மணம். இவளுக்கு அருவருப்பாய் இருக்கிறது. இங்கதான் இருக்கிறியளோ என்கிறாள். ஓம் என்றபடி படிகளில் இவளின் பிரயாணப்  பெட்டிகளை இழுத்துக் கொண்டு ஏற இவளும் பின்னால் ஏறுகிறாள். காற்றோட்டம் இல்லை, வெளிச்சம் இல்லை. அவளுக்கு மூச்சு முட்டுவது போல் இருக்கிறது.

அறையைத் திறந்ததும் அதற்குள் சென்றால் ஒரு சிறிய அறை. இவளின் பெட்டிகளே அரைவாசி இடத்தைப் பிடிக்கின்றன. பெட்டிகளை வைத்தவுடன் இவளருகில் வந்து இவளை இறுக்கி அணைக்கிறான். இவளும் அணைத்தாலும் எதோ ஒன்று முழுதும் ஈடுபட விடாது தடுக்கின்றது. இவளின் நிலை அவனுக்கு விளங்கியிருக்க வேண்டும். அவளை விட்டுவிட்டு என்ன பிடிக்கவில்லையோ என்கிறான். இப்பதானே வந்தனான் கொஞ்சம் பொறுங்கோ என்றதும் அவனும் ஒன்றும் கூறவில்லை. என்ன குடிக்கிறீர் தேநீரா குளிர் பானமா என தேநீரே தாங்கோ என்றுவிட்டு கட்டிலில் அமர்கிறாள்.

கரன் கீழே இறங்கிப் போக இவள் மனம் பலத்தையும் நினைத்துக் குழம்புகிறது. இவனை நம்பித்தானே வந்தனான். ஆனால் எதோ என்னைத் தடுப்பதுபோல் இருக்கிறதே என மனச் சஞ்சலத்தோடு இருக்க தேநீருடன் வருகிறான் கரன். எப்பிடி அங்க ஒரு பிரச்சனையும் இல்லையே எனக் கேட்ட இல்லை என்று இவள் தலையை மட்டும் ஆட்டுகிறாள். என்ன கதைக்கவே பஞ்சிப்படுகிறீர் என்றபடி இவளுடன் நெருங்கி அமர்ந்து இவளை அணைக்க இவளும் நெகிழ்ந்து போகிறாள்.

பின்னர் வந்த சில நாட்கள் இருவருக்கும் கரும்பாக இனிக்க எல்லாவற்றையும் மறந்து அவனுடன் ஒன்றிவிட்டாள் மது. கொஞ்சம் பித்தம் தெளிந்த பின்னர்தான் அவளையும் அவனையும் தவிர ஒருவரையும் அந்த வீட்டில் காணவில்லை என்பது அவளுக்கு உறைக்கிறது. ஆனால் பக்கத்து அறை பூட்டியே இருக்கிறது ஏன் என அவனைக் கேட்க நான் இந்த அறையில் வாடகைக்கு இருக்கிறன். வீட்டுக் காரர் விடுமுறைக்குப் போட்டினம் வாற மாதம் தான் வருவினம் என்கிறான். அப்ப உங்களுக்கு சொந்த வீடு இருக்கு என்று சொன்னியள் என்று அவனைப் பார்க்க, முந்தி இருந்தது. ஒரு பிரச்சனை இப்ப வித்துப் போட்டன் என்று கூறிவிட்டுத் திரும்பிக் கொள்கிறான். எத்தினை கிழமை லீவு போட்டனியள் என அவள் கேட்க ஒருமாதம் லீவு இருக்கு என்றுவிட்டு இண்டைக்கு எங்காவது வெளியில போவமோ என அவள்  கேட்டதுக்கு இண்டைக்கு நண்பன் ஒருவனை சந்திக்கிறன் என்று சொன்னனான். நாளைக்குப் பாப்பம் என்றுவிட்டு தன் அலுவலைப் பார்க்க மதுவுக்கு கொஞ்சம் கோபம் எட்டிப் பர்த்தது. வந்து ஒரு வாரமாகிறது.வெளியே போகாமல் அந்த அறை அதைவிட்டால் குசினி, வரவேற்பறை என்று மாறிமாறி அதற்குள்ளேயே சுற்றி அலுத்துவிட்டது.

அடுத்தநாள் இவளை கூட்டிக் கொண்டு கடைத் தெருவெல்லாம் சுற்றிய கரன் ஒரு இந்தியன் உணவகத்துக்கு அழைத்துக் கொண்டு செல்கிறான். யேர்மனி போலன்றி இங்கு பல உணவகங்களும், ஆடை விற்பனை நிலையங்களும் பார்க்க அவளுக்கு மகிழ்வாக இருந்தது. இவள் தனக்கு பூரி வேண்டுமென்று கூற, அவன் தனக்கு பரோட்டா சொல்லிவிட்டு குளிர்பானம் அருந்துகின்றனர். பார்த்துக்கொண்டிருக்க வாசல்பக்கம் நான்கு பேர் வருவது தெரிகிறது. பார்த்தால் ரவுடிகள் போல் தோற்றம். இவள் உடனே தலையைக் குனிந்துகொள்கிறாள். ஆனால் அவர்கள் இவர்கள் இருக்கும் இடம் நோக்கி வர இவளுக்கு கலவரம் உண்டாகிறது. லண்டன் இல் ரவுடிகள் அதிகம் என்று கேள்விப்பட்டிருக்கிறாள். அவர்கள் இவர்களின் மேசைக்கு அருகில் வந்து மச்சி நல்லாத்தான் பிடிச்சிருக்கிறாய் என்று கூறி கரனுடன்  கைகுலுக்குகிறார்கள். இவளுக்கு அதிர்ச்சியாக இருக்கிறது. அது முகத்திலும் தெரிய என்ன கரன் எங்களைப் பற்றி சிஸ்டருக்குச் சொல்லேல்லேயே மச்சி என்கிறான். இவை என்ர பிரெண்ட்ஸ் என்று கரன் அவளுக்கு அறிமுகப்படுத்துகிறான். அவள் ஒருமுறை தலையை நிமிர்த்திப் பார்த்துவிட்டு மீண்டும் குனிந்து கொள்கிறாள்.

இருங்கோவன் என்று கரன் கூற நாளைக்கு சந்திப்பம் மச்சி. சிஸ்டர் பயப்பிர்றா வாரம் மச்சி என்றபடி அவர்கள் போகின்றனர். ஏன் அவங்களை இருக்கச் சொன்னீங்கள் என்று மது கோபமாகவே கேட்கிறாள். நீர் வந்து ஒரு கிழமைதான். அவங்கள் என்னோட அஞ்சு வரிசமாப் பழக்கம் என்றுவிட்டு கரன் உணவும் வர உண்ண ஆரம்பிக்க இவளும் பசியில் உண்ணத் தொடங்குகிறாள். ஆனால் மேற்கொண்டு அவனுடன் எதுவும் கதைக்கவில்லை. அவனும் உண்டு முடிய கிளம்புவமா என்று கூறியபடி எழுகின்றான். சமைக்க ஏதாவது வாங்குவமா என்று கேட்க மரக்கறிகள் இறைச்சி என்பவற்றை வாங்கிகொண்டு வீடு வருகின்றனர். மாலை இடியப்பம் அவித்து கறிகளும் காச்சி முடிய வடிவா எல்லாம் துடைத்துவிடும். பிறகு வீட்டுக்கார அக்கா பேசுவா என்று கரன் கூற நான் என்ன ஒண்டும் தெரியாதனானோ என இவள் சிரிக்கிறாள்.
மதுவுக்கு அப்பப்ப கபிலனின் நினைவும் மகனின் நினைவும் எட்டிப் பாக்கும். வலிந்து அவற்றை நினைக்காது தவிர்த்துவிடுவாள். அத்துடன் கரனும் எந்நேரமும் அவளுடனேயே நின்றதும், சில்மிசங்களால் அவளை சந்தோசப்படுத்தியதும், பார்வையாலேயே கிறங்கடித்து, முத்தத்தில் மூழ்கடித்து புதிய வாழ்வின் அத்தியாயங்களைக் காட்டியதும் எல்லாவற்றையும் மறக்கத்தான் செய்துவிட்டது. மூன்று வாரங்கள் முடிந்த நிலையில் நான் விவாகரத்துக்கு விண்ணப்பிக்க வேணும். யாராவது ஒரு லோயரைப் பாப்பமா என்று இவள் கேட்க என்ன அவசரம் பொறும் என்றுவிட்டு தொலைக்காட்சி பார்க்கும் அவனை இவளால் பார்த்துக் கொண்டு இருக்கத்தான் முடிகிறது.

அடுத்தநாள் காலை தொலை பேசி ஒன்று வர இப்பவே வாறன் என்றுவிட்டு வெளியில போட்டு வாறன் என்று மட்டும் கூறிவிட்டு கரன் அவசரமாக இறங்கிச் செல்கிறான். இவள் மேற்கொண்டு ஏதும் கேட்கக் கூட முடியவில்லை. மதியம் கரன் வரவில்லை. தொலைபேசியும் நிப்பாட்டி இருந்தது.அரை மணிக்கு ஒருமுறை இவள் அழைத்தும் அவன் எடுக்கவில்லை. இவளுக்கு என்ன செய்வது என்று தெரியாது மாலைவரை தவித்துக் கொண்டிருந்தபோது வந்து சேர்ந்தான். என்ன எத்தினை தரம் போன் அடிச்சனான். எடுத்திருக்கலாம் தானே என அழுகையை அடக்கிக் கொண்டு கேட்டாள். எண்ர பிரச்சனை தெரியாமல் கதைக்காதையும். என்னை கொஞ்சநேரம் தனிய விடும் என்று அவன் கூற ஒன்றும் சொல்லாமல் வெளியே வந்து தொலைக்காட்சி பார்க்க ஆரம்பித்தாலும் மனம் அதில் ஒன்றவில்லை. கரனை நம்பி வந்திருக்கிறேன். விடியப் போய் இப்பதான் வந்திருக்கிறான். என்ன என்று கேட்டாலும் சொல்கிறானில்லை. என்னவாக இருக்கும் என்று எவ்வளவு யோசித்தும் பலனில்லை.

இரவு உணவும் கரன் வேண்டாம் என்றதால் இவளும் உண்ணவில்லை. காலையில் எழுந்து எதுவும் நடவாததுபோல் கோக் ஒன்றை உடைத்து அவன் குடிக்க விடிய வெள்ளன ஆராவது  கோக் குடிக்கிறதே என இவள் வினவ, ஏன் குடிக்கக் கூடாது என்று ஏதும் சட்டம் இருக்கே என கரன் கேட்க இவளுக்குச் சிரிப்பு வருகிறது. இண்டைக்கு வீட்டுக்கார அக்காக்கள் வருவினம் என்கிறான். எத்தினை மணிக்கு என இவள் பரபரக்கிறாள். மத்தியானம் வருவினம் அவைக்கும் சேர்த்துச் சமைச்சு விடும்.நான் வெளியில போட்டு வாறன் என அவன் முடிக்கமுதல் நேற்றும் பொய் பின்னேரம் தன வந்தனீங்கள். வீட்டுக்காற ஆக்கள் வரேக்கையாவது என்னோட நில்லுங்கோவன் என்று இவள் கெஞ்சுவதுபோல் கேட்கிறாள். அவன் கொஞ்சமும் இரங்காமல், நீர் உம்மட பாட்டில இரும் அவை தங்கட பாட்டில வருவினம் என்கிறான். நீங்கள் இல்லாமல் நான் யார் என்று கேட்டால் என்ன சொல்லுறது. என்ர கேர்ள் பிரெண்ட் எண்டு சொல்லும். நான் வருமட்டும் நீர் அறைக்குள்ளையே இரும். நான் வந்த பிறகு சொல்லலாம். என்றுவிட்டு வெளியே  போக எத்தணிக்க மீண்டும் இவள் நானும் உங்களோட வரட்டோ என்று கேட்ட நான் நண்பர்களிட்டைப் போறான் நீர் வந்து அங்க என்ன செய்யப் போறீர்,போட்டு வாறன் என்றபடி கதவைத் திறந்துகொண்டு போய் விட்டான். மதுவுக்கு அழுகை வந்தது. என்ன இவன் என்னை ஒரு பொருட்டாக எண்ணாது போய்விட்டானே. இவனை நம்பி நான் வந்திருக்கிறன் என்று எண்ணும்போதே நினைவில் கபிலன் வருகிறான், மகன் வருகிறான். நான் அவசரப்பட்டு விட்டேனோ என மனம் முதல் முறையாக அங்கலாய்க்கிறது.

வீடுக்கார அக்கா வந்து இவளின் அறைக் கதவைத் தட்ட இவள் கண்விழிக்கிறாள். எழும்புங்கோ தங்கச்சி தேத்தண்ணியையும் குளிசையையும் குடிச்சிட்டுப் படுங்கோ என்று சொல்ல வேண்டாம் அக்கா என்று இவள் முனகுகிறாள். கதவை அவவே தள்ளித் திறந்துகொண்டு வந்து இவளை எழுப்பி தேநீரை மருந்துடன் குடிக்கப் பண்ணி, குடித்து முடிந்ததும் மூண்டு நாளா படுத்தே இருக்கிறீர். இன்னும் எத்தினை நாளைக்கு இப்பிடியே இருக்கப் போறீர். பாக்கவேண்டிய அலுவலைப் பாக்க வேணும் . நான் ஒரு பொம்பிளைப் பிள்ளையை எத்தினை நாள் தான் வச்சிருக்க ஏலும். மற்ற ஆட்கள் எண்டால் உம்மைப் பிடிச்சு வெளியில விட்டிருப்பினம். நான்  பொம்பிளைப் பிள்ளையளைப் பெத்ததால உம்மை இத்தனை நாள் வச்சிருக்கிறன் என்று கூற இவள் அழவும் சக்தியற்றுக் அக்கா கூறுவதைக் கேட்டுக்கொண்டிருக்கிறாள்.

தங்கச்சி எதோ நடந்தது நடந்து போச்சு நீர் திரும்ப ஜேர்மனிக்குப் போறதுதான் நல்லது. முகம் கழுவிச் சாப்பிட்டிட்டு ஒருக்கா அங்க போன் செய்து பாரும் என்றுவிட்டுப் போய் விடுகிறார். ஒரு கிழமைக்கு முன் நடந்தது மனதில் நிழலாட கசப்பு மருந்தை விழுங்கியதுபோல் வாயும் மனமும் கசக்கிறது. உடலும் மனமும் தீப்பிடித்தது போல் தன்னையே தகிக்க எனக்குச் சரியான தண்டனையை கடவுள் குடுத்திட்டார். என்ர  சின்னப் பிள்ளையைத் தவிக்க விட்டு வந்த எனக்கு, என்ர கட்டின மனிசனுக்குத் துரோகம் செய்துபோட்டு வந்த என்னை கடவுள் இவ்வளவு கெதியா தண்டிச்சிட்டார். இப்ப தெய்வம் அன்றே கொல்லுது போல என எண்ணியவளுக்கு தன்னை நினைத்தே சிரிப்பு வருகிறது. எத்தனை பெரிய வாக்கையை இழந்துவிட்டு இந்த நரகத்தில் வந்து விழுந்தேன்.எனக்கு வேணும்தான்.

இனி எப்பிடி நான் திரும்பிப் போவன். எப்பிடி கபிலன்ர முகத்தில முழிப்பன். கபிலன் திரும்ப என்னை மன்னிப்பாரே. மன்னிச்சாக் கூட என்னை மற்ற ஆக்கள் எப்பிடிப் பாப்பினம் என எண்ணி எண்ணி குமைந்ததுதான் மிச்சம். தற்கொலை செய்வமோ என்று எண்ணினாலே அழுகைதான் வந்தது. கேடு கேட்ட எனக்கு சாகக் கூடத் துணிவில்லையே என பலதும் எண்ணி மருகியவள் என்ன நடந்தாலும் பரவாயில்லை கபிலனோட கதைப்பம் என எண்ணியபடி தொலைபேசியை  எடுக்கிறாள்.

கபிலன் அவளை மீண்டும் வரும்படி கூறியதும் அவளுக்கு இருண்ட அறையுள் இருந்த சாளரத்தை அகலத் திறந்தது போல் இருந்தது. மனதில் இருந்த இறுக்கம் கூட கொஞ்சம் தளர்ந்ததுபோல் இருந்ததால் ஒரு வாரத்தின் முன் நடந்தவற்றை மீளவும் மனம் அசைபோட்டது. வீட்டுக் காரக் குடும்பம் திரும்பி வந்த அன்று இவள் கன நேரம் அறைக்குள்ளேயே இருந்தாள். மாலை ஏழு ஆகியும் கரனைக் காணவில்லை.  இவள் தொலைபேசியில் அழைத்தும் அவன்  அழைப்பில் வரவில்லை. நான்கு ஐந்து மணிநேரமாக சிறுநீரை அடக்கி வைத்திருந்ததும் கடுத்தது. இனியும் அடக்க முடியாது எனும் நிலையில் கட்டிலை விட்டு இறங்கி கதவைத் திறந்துகொண்டு வெளியே வந்து பக்கத்தில் இருந்த மலசல கூடத்துக்குச் சென்றபின்தான் சிறிது நின்மதி பிறந்தது. கதவைத் திறந்துகொண்டு வெளியே வர படிகளில் ஏறி மேலே வந்துகொண்டிருந்த வீட்டுக்காரரின் பிள்ளை, அம்மா கள்ளன் எனக் கத்திக்கொண்டு கீழே ஓட இவள் கலவரப்பட்டு என்ன செய்வது என்று தெரியாமல் விழி பிதுங்க நிக்க, வீட்டுக்கார அக்காவும் கணவரும் கையில் பிள்ளையளையும் இழுத்துக்கொண்டு வீட்டுக்கு வெளியே ஓடுவதற்கு கதவை அவசரமாகத் திறக்க, அக்கா அக்கா நான் கள்ளன் இல்லை என இவள் கத்த, வெளியே ஓட வெளிக்கிட்ட அக்காவும் கணவரும் திரும்பி வந்து நீ என்ன இங்க செய்யிறாய் என அதட்ட இவளும் நான் கரனின் கேர்ள் ப்ரெண்ட் என கூறிவிட்டு அவர்கள் தன்னைப் பார்த்து நட்புடன் சிரிப்பார்கள் என எதிர் பார்த்தவளுக்கு அவர்கள் பார்த்த பார்வை புரியவில்லை. சரி கீழ வாரும் தங்கச்சி கதைப்பம் என்றுவிட்டு அக்கா வரவேற்பறைக்குப் போக கீழே இறங்கி வந்தவள் எதோ தனக்கு எல்லாம் தெரியும் உங்களை என்று காட்ட நீங்கள் இண்டைக்கு வருகிறீர்கள் எண்டு கரன் சொன்னவர் என்றுவிட்டு அவர்கள் இருவரையும் பார்த்தாள். அவர்கள்  முகத்தில் ஈயாடவில்லை.

நீர் எப்ப தொடக்கம் இங்க இருக்கிறீர் என்று அக்கா கேட்க மூண்டு கிழமையா என்கிறாள் மது. இங்க அப்பா நீங்கள் பிள்ளையளைக் கூட்டிக் கொண்டு மேல போங்கோ நான் இவாவோட கதைச்சுப் போட்டு வாறன் என்று அக்கா கூற கணவரும் இங்கிதத்துடன் பிள்ளைகளை அழைத்துக்கொண்டு  மேலே செல்கிறார். எப்ப தொடக்கம் உமக்கு கரனைத் தெரியும் என்று அக்கா கேட்க ஆறு மாதமாக என்று கூறிவிட்டு தலையைக் குனிகிறாள். கரன் இங்க இருக்கிறேல்லை. இங்க இருக்கிறது என்ர அக்காவின்ர மகன். அவன் இப்ப ஆஸ்பத்திரியில இருக்கிறான். அவன் கரன்ர நண்பன். அனால் அவர்கள் ஒருவரும் ஒழுங்கானவர்கள் இல்லை. கரனுக்கு கன பெண்களுடன் தொடர்பு இருக்கு என்று சொல்ல, பொய் சொல்லாதைங்கோ என்று மது கத்துகிறாள்.தலையில் பெரிய கல் விழுந்ததுபோல் இருக்கிறது. கண்ணுக்கு முன்னால் ஏதேதோ பறப்பதுபோல் முன்னால்  இருந்த எதுவுமே தெரியவில்லை அவளுக்கு. நான் ஏன் உமக்குப் பொய் சொல்ல வேணும். அவங்கள் எத்தினை தரம் சிறைக்குப் போனவங்கள் எண்டு தெரியுமே உமக்கு. என்ன நம்பிக்கையில் அவனை நம்பி வந்தனீர் என்று கூறிமுடிக்க முதலே மது ஓ என்று பெரிதாக அழுகிறாள். சிறிது நேரம் பார்த்துக்கொண்டு இருந்துவிட்டு அவன் இனி உம்மட்ட வர மாட்டான்.
இப்ப கொஞ்சம் முந்தித்தான் போன் வந்தது. நேற்று இவங்கள் ஒரு பெடியனை வெட்டிப் போட்டாங்களாம். இண்டைக்கு பொலிஸ் உவங்கள் எல்லாரையும் பிடிச்சுப் போட்டுது. மேற்கொண்டு அக்கா கதைப்பது எதுவுமே விளங்கிக் கொள்ள முடியாமல் கதிரையில் சரிகிறாள் மது.

அன்று நாம் பொங்கிடுவோம்

தை பிறந்தால் வழிபிறந்தது அன்று
எத்தனை தை பிறந்தும்
தமிழனுக்கு மட்டும்
வழி பிறக்க வில்லையே

ஏர்  கொண்டு உழுது
பயிர்கள்  தான்  செய்தோம்
ஊரெங்கும் பச்சை வயல்
பசுமைகள் கண்டோம்
எவரையும் நம்பாது
நாம் விழைத்து நம் மண்ணில்
தன்னிறைவு கொண்டோம்

செம்பாட்டு மண்ணில்
செழித்து வளர்ந்திடும்
செவ்விளநீரொடு
மா பலா வாழை என
வாயினிக்க நாமணக்க
வகை வகையாய்
வாழையிலை மஞ்சள்
வானுயர்ந்த கருப்பு கட்டிப்
பொங்கி மகிழ்ந்திட்டோம்

யார் கண்ணோ பட்டதனால்
நாமிருந்த பூமியெல்லாம்
நாசமாய் போனதனால்
நாள் கூட நமக்கின்றி
நாதியற்றுப் போனோம்
ஏர்கொண்டு ஏற்றமுடன்
எமைக் காத்தோம்  இன்று
ஏழைகளாகி எதிர்பார்த்து
ஏந்தி எம் கைகளை
எல்லோரை நோக்கி
ஏளனப் பொருளாகி
எதுமற்ரோராகி
எச்சில் இலைகளாய்
எங்கும் கிடக்கிறோம்

எது கொண்டு மறைப்பதற்கும்
எதுமின்றி நாதியின்றி
எங்களினம் வாடுகையில்
எண்ணம் ஏதுமன்றி
ஏட்டுக் கல்வியின்றி
ஏக்கம் மட்டும் இன்னும்
எல்லோரின் சொந்தமாய்
எதிலிகளாகி எழமுடியாது
எங்கும் இருக்கையில்
ஒருநேர உணவுக்கு
ஊரார் கைபார்த்து
ஏங்கித் தவிக்கையில்
எமக்கெதற்குப் பொங்கல்

எப்பதவி கொண்டு நீ
எங்கிருந்தாலும்
நாடற்றவன் நீ
நாடற்றவன்
ஏதுமற்ற தமிழா
எண்ணித் துணிந்துவிடு
எம்மினம் காக்க
ஏழைகளின்றி
ஏக்கங்களின்றி
எமக்கொரு தேசம்
என்றோ விடிந்தால்
அன்று நாம் பொங்கிடுவோம்
புதுப் பானைப் பொங்கல்

எமது பெண்கள்

எமது பண்பாடும் கலாச்சாரமும் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்தவை. எம் முன்னோர் தம் அனுபவத்திற் கண்டவற்றை அலசி ஆராய்ந்ததன் பயனாக பல கட்டுப்பாடுகளையும் பயங்களையும் ஊட்டி எம்மினத்தை ஒரு மேன்மையான இனமாக்கி, வழிவழியாக இத்தனை காலமாக வழிநடத்தியுள்ளனர். தமிழன் என்றால் அவன் தனக்கென சிறந்த பண்பாட்டினைக் கொண்டவன் என உலகே அறிந்திருந்த காலம் ஒன்றிருந்தது.

போரின் பின்னரான இடப்பெயர்வுகள் எம்மினத்தின் அனைத்தையும் புலம் பெயர் தேசங்களில் சிதைத்தது மட்டுமன்றி, தாம் வாழும் தேசத்தின் கலாச்சாரச் சூழலில் வாழ்வதால் எப்படியும் வாழலாம் எனும் கோட்பாட்டையும் பலர் மனங்களில் ஏற்படுத்தியுள்ளது. அதன் வெளிப்பாடுதான் புலம் பெயர் தேசத்தில் திருமணமான ஆண் பெண் இருபாலாரும் குடும்ப வாழ்க்கை வாழும்போதே நெறி பிறழ்ந்து மாற்றான் மனைவியுடனும், மாற்றாள் கணவனுடனும் தவறான தொடர்புகளை ஏற்படுத்தி தம் வாழ்வையும் இழந்து, மற்றவர் வாழ்வையும் சிதைக்கின்றனர்.

இதனால் புலம் பெயர் நாடுகளில் வாழும் பல குடும்பங்களின் பிள்ளைகள், பாரிய இழப்புக்களுடன் வாழவேண்டியவர்களாக, தம் சுயம் தொலைத்து வாழ்வை வீணாக்கிக் கொள்வது மட்டுமல்லாது, இளம் சமுதாயமும் அவர்களைப் பார்த்து மேற்குலக நாகரிக வாழ்வைப் பின்பற்ற வேண்டிய கட்டாயத்துக்கும் ஆளாகின்றனர். இதனை ஒரேயடியாக நிறுத்த முடியாவிட்டாலும் புலம்பெயர் தேசத்தின் எம் இளஞ்சந்ததி ஒரேயடியாக அந்நியக் கலாச்சாரத்துள் மூழ்காது தடுக்கலாம் என்னும் ஒரு நப்பாசைதான் இதை எழுதத் தூண்டியது எனலாம்.

பொதுவாகவே பெண்களிற் பலர் பேராசை கொண்டவர்கள். உணர்வுமயமானவர்கள். இலகுவில் அன்புக்கு அடிமையாகுபவர்கள், ஏமாறக் கூடியவர்கள் என்று  பலவகையினர் உள்ளனர். திருமணமான பெண் தவறு செய்ய எண்ணுகிறாள் என்றால் நாம் உடனே அப்பெண்ணை தவறாகவே பார்க்கின்றோம். அவள் அத் தவறினை ஏன் செய்கின்றாள் என ஒரு கணமேனும் எண்ணிப் பார்ப்பதில்லை. பல எதிர் பார்ப்புகளுடன் கணவனைக் கைப்பிடிப்பவள், அவனிடம் அவை இல்லை என்று தெரியும்போது எத்தனை ஏமாற்றத்துக்கு உள்ளாவாள் என நீங்கள் எண்ணிப் பார்த்ததுண்டா? ஏமாற்றத்திற்கு உள்ளானாலும் பின்னர் சுதாகரித்துக் கொண்டு வாழ முற்படும் மனைவியை கணவனின் செய்கையே அவனிடம் வெறுப்பை ஏற்படுத்திவிடுகிறது. அவளை, அவளின் உணர்வுகளை, அவளின் ஆசைகளைக் கூட பல கணவர் தெரிந்து கொள்வதில்லை. தானும் தன்சார்ந்த விருப்பு வெறுப்புக்களையும் அவளிடம் திணிப்பதும், அவளின் அபிலாசைகளுக்கு மதிப்பளிக்காததும், அவளை இன்னொருவனை நாட வைக்கின்றன.

அதற்கான காரணம், முன்பிருந்த எமது குமுகாய வாழ்வுமுறை இன்று புலம்பெயர் தேசத்தில் இல்லாமையும், குமுகாயத்தின்பால் இருக்கும் பயமின்மையும் பொருளாதார வாழ்வாதாரத்தை இங்குள்ள அரசுகள் தாராளமாக வழங்குவதும், அதனால் பிறர் கையை எதிர்பார்க்க வேண்டிய தேவை இல்லாதிருப்பதுவுமே பல பெண்களை துணிந்து முடிவுகளையும் எடுக்க வைக்கின்றன. அன்புக்காக எங்கும் பெண் தன் கணவனிடம் உடனே அது கிடைக்காவிடினும் காத்திருக்கிறாள். சிலருக்கு அதுவே பழகிப் போய் எதிர்பார்ப்புக்களை ஓரங்கட்டி வைத்துவிட்டு அந்த ஏதுமற்ற வாழ்விற்கு தன்னைப் பழக்கப் படுத்தியும் கொள்கிறாள். ஆனால் எல்லாப் பெண்களாலும் அப்படி இருக்க முடிவதில்லை. எங்கே அந்த அன்பு கிடைக்கிறதோ அதை முன்யோசனையின்றி பற்றியும் கொள்கிறாள். செக்ஸ் என்பதை விட தன்னில் ஒருவன் அன்பு செலுத்துகிறான், அக்கறையாக இருக்கிறான் என்பதே அவளுக்கு பெரிதாகப் படுகிறது. அதனால் தவறு என்று தெரிந்தும் அவள் மாற்றானிடம் ஆசை கொள்கிறாள்.

பல ஆண்கள், வாழ்வில் ஒரு பெண்ணை பாலினச்சேர்க்கை  மட்டுமே திருப்பதிப் படுத்தப்போதுமானது என எண்ணுகிறான். பாலினச்சேர்க்கை வாழ்க்கையில் முக்கியம்தான். அனால் கணவனின் ஆளுமை அதையும் மீறி அனைத்து விடயங்களிலும் இருப்பதையே பெரும்பாலான பெண்கள் விரும்புகின்றனர்.  படித்த கணவன் தனக்குக் கிடைக்க வேண்டும் என்பது பல பெண்களின் விருப்பமாக இருந்தாலும் கிடைக்கும் வாழ்வை மகிழ்வுடன் ஏற்று வாழும் பெண்கள் பலர் இருக்கத்தான் செய்கின்றனர்.

ஒரு ஆண் பெண்ணைக் கவர படித்தவனாக இருக்கவேண்டும் என்பது இல்லை. அவனின் பேச்சு வன்மையே ஒரு பெண்ணை வீழ்த்தப் போதுமானது. அதன்பின் அவன் சமூகத்துடுடன் பழகக் கூடிய தன்மை, ஒரு விடயத்தை எதிர்கொள்ளும் துணிவு, அவனின் நேர்மை என்பனவே ஒரு பெண்ணை, ஆணின் பால் செல்ல வைக்கிறது. ஆனால் விதிவிலக்குகள் பலவும் உண்டுதான். வெளியே மிகவும் அப்பாவிகள் போல் தோற்றமளிக்கும் பலர் இரட்டை வாழ்க்கை வாழ்வதை நான் கண்டு பிரமித்திருக்கிறேன். பல ஆண்கள் அப்படியான பெண்களைக் உலகத்தில் இல்லாத உத்தமிகள் போல் போற்றுவதும், அவர்களை உதாரணம் காட்டி, அவர்களுக்காகத் தன் மனைவியை தூற்றுவதையும் கூட பல இடங்களில் அவதானித்தும் உள்ளேன்.

பெண்கள் வீட்டுக்குள் இருக்கும் வரை, பிரச்சனைகள் இருக்காது என எண்ணி பெண்ணை வீட்டுக்குள் வைத்திருக்கும் ஆண்கள் பலர் இருக்கின்றனர். வீடுக்குத் தேவையான அனைத்தையும் தாமே வாங்கிவந்து நீ ஏன் கஷ்டப் படுவான். அதுதான்  நானே எல்லாவற்றையும் உனக்குச் செய்கிறேன் என மார்தட்டும் பல ஆண்கள், தன் மனைவியை வெளியே விட்டால் வேறு ஆண்களை பார்ப்பாளோ, வேறொருவன் என் மனைவி மனதை மாற்றிவிடுவானோ என தம்மிடமுள்ள தாழ்வு மனப்பாங்கினால், மனைவியின்பால் சந்தேகம் கொள்ளும் கணவர்களும் பலர் உள்ளனர்.  சில பெண்கள் அதை உண்மை என்று நம்பி வாக்கை பூராவும் அவனுக்கு அடிமையாக இருந்தே காலம் கழித்து விடுகின்றனர். அதை ஏற்றுக் கொள்ளாதவர்கள் வாழ்வில் சிறு சிறு பூசல்களில் தொடக்கி பெரிதாகி குடும்பம் பிரியும் நிலையும் இதனால் ஏற்பட்டுப் போகின்றது.
பல பெற்றோர் நன்மை செய்வதாக எண்ணிக் கொண்டு பல பெண்களின் வாழ்வை தாமே சீரழித்த சம்பவங்கள் கூட எத்தனையோ உள்ளன. பல பெற்றோர் சுயநலம் மிக்கவர்களாகவே இன்றுவரை உள்ளனர். எழுதுவதற்கும் பேசுவதற்கும் பெற்றோர் உத்தமர்களாக இருப்பார்கள். பெரும்பாலானவர்கள் யதார்த்த வாழ்வில் முரண்பட்டே இருக்கின்றனர். அதுவும் மூத்த பெண்கள் என்றால் அவர்கள் கீழே உள்ள சகோதரிகளுக்காக சிலவேளைகளில் விருப்பமற்ற திருமண வாழ்க்கைக்கு சம்மதித்து, காலம் முழுவதும் ஒரு இழப்பின் தாக்கத்துடனேயே வாழவேண்டிய நிர்ப்பந்தத்துக்கும் ஆளாகின்றாள்.

பல ஆண்கள், மனைவியுடன் உறவில் ஈடுபடும்போது அவளின் விருப்பு வெறுப்புகளிற்கு அப்பாற்பட்டு இயந்திரத்தனமான உறவை மேற்கொள்கின்றனர். ஓர் இனிய தாம்பத்திய உறவுக்குப் பழக்கப்படாத பெண்ணிற்கு சிலநாட்களிலேயே கணவனில் வெறுப்பு ஏற்பட்டுவிடும். அத்தகையவர்களும் வேறொருவனை நாடும் சந்தர்ப்பம் உண்டு. புலம் பெயர் நாடுகளில் வாழ்ந்தாலும் இன்னும் கட்டுப் பெட்டிகளாக இருக்கும் ஆண்கள் இங்கு நிறையவே இருக்கின்றார்கள்.

ஒரு பெண் தவறு செய்வதற்கான காரணம், அவளுக்கு தானாகவே ஒரு சந்தர்ப்பம் ஏற்படுகிறது அல்லது ஏற்படுத்தப் படுகிறது.
எப்போதும் மதுவில் மூழ்கிக் கிடக்கும் கணவன் தன்  மனைவிக்கு நியாயமான கிடைக்கவேண்டிய உடல் சார்ந்த உறவை வழங்கத் தவறிவிடும் பட்சத்தில், அவள் இன்னொருவனை நாடுவதை எப்படித் தவறென்று கூற முடியும். இப்படி நான் எழுதுவதற்கு கல்லெறியாது நியாயப்படி யோசித்தீர்களானால் உங்களுக்குக் கோபம் ஏற்படாது. ஆனாலும் பெருப்பாலான பெண்கள் அதைக் கூடச் சகித்துக் கொண்டு வாழ்கின்றார்கள். மேற்கத்தைய சமூகத்துடன் ஒப்பிடும் பொழுது தமிழ்ப் பெண்களை கணவன்மார் கும்பிடத்தான் வேண்டும். மேற்கத்தேயப் பெண்கள் போல் நாம் வாழத் தலைப்பட்டால் தமிழ் ஆண்களின் நிலை என்ன ஆகும்.

இன்னும் சில ஆண்கள் தாம் அடிக்கடி மனைவியுடன் உறவு கொள்வதை மனைவி விரும்புவதாக எண்ணிக்கொண்டு அல்லது தன் பலவீனத்தை மூடி மறைப்பதற்கு எப்போதும் விரசமாகக் கதைப்பதும், நேர காலம் பார்க்காது உறவில் ஈடுபட நிர்ப்பந்திப்பதும் கூட பெண்களுக்கு ஆணின்மேல் வெறுப்பையே வளர்க்கும். பலர் வீடியோ காட்சிகளைப் போட்டு இன்னும் வெறுப்பை அதிகரிக்கச் செய்வர். இவையெல்லாம் பெண்களுக்கு உடலுறவில் வெறுப்பைத்தான் ஏற்படுத்தும். இப்படியானவையால் நாட்  செல்லச் செல்ல ஒருவித இயந்திரத் தனம் தலை தூக்கப் பார்க்கும்  என்கின்றனர் மனோவியலாளர்கள். இப்படியான காரணிகள் கூட பெண்ணை தடம் புரள வைக்கின்றன.

பலர் வெளிநாடு தானே என எண்ணி மனைவியை மதுவகைக்களுக்குப் பழக்கப் படுத்துவதும் தன் சொற்ப நேர ஆசைக்காக குடிக்கும்படி வற்புறுத்துவதும் கட்டாயம் தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று. பெண் பெண்ணாக இருக்கும் வரைதான் ஒரு குடும்பமும் குடும்பமாக இருக்கும். நாகரிகம் என்பது வேறு பண்பாடு பழக்க வழக்கம் என்பது வேறு. எம் சமூகத்தில் அதி உன்னத குடும்ப வாழ்வியலை ஏற்படுத்தியுள்ளனர். அவற்றை உடைந்து போகாது  பாதுகாக்க வேண்டிய கடமை ஆண்  பெண் இருவருக்குமே இருந்தாலும் ஆண்கள்தான் வேலியாக இருந்து  காக்கவேண்டியவர்கள்.

ஆண்கள் தானே நாம் எதுவும் செய்யலாம் என்னும் மனப்போக்கும் பல ஆண்களுக்கு  உண்டு. உங்கள் மனைவியிடம் நேர்மையை உண்மையை எதிர் பார்க்கும் நீங்கள் உங்கள் மனைவிக்கும் உண்மையாக இருக்க வேண்டாமா. என் நண்பியின் கணவன் பொறுப்புள்ள அப்பா. நல்ல குடும்பத் தலைவன். சமுதாயத்தாலும் மதிக்கப் படும் ஒருவர். ஆனால் தன நிறுவனத்தில் வேலை செய்யும் பெண்களிடம் அவருக்குத் தொடர்பு இருப்பதாக பலர் கூறுவதைக் கேட்டு எனக்குக் கோபம் வந்தது. நண்பியிடம் கூறுவோமா? சரியாகத் தெரியாது எப்படிக் கூறுவது என எண்ணிக்கொண்டிருந்தவேளை,  எனது  தொலைபேசிக்கு நண்பியின் கணவர் அழைத்திருக்கிறார். நான் எடுக்கவில்லை என்பதால் அது தானாகவே தகவல்ப் பெட்டிக்குப் போய்விட்டது. நண்பியின் கணவர் தொலை பேசியை நிறுத்த மறந்து ஒரு பெண்ணுடன் வார்த்தைகளில் சல்லாபித்தது என் தொலைபேசியில் பதிவாகிவிட்டது.

நான் செய்திகளை உடனுக்குடன் கேட்கும் பழக்கமற்றவள் என்பதனால் ஒரு வாரம் செல்ல எல்லாச் செய்திகளையும் கேட்கும்போது இந்த செய்தி எனக்கு அதிர்ச்சியையும் மகிழ்ச்சியையும் கொடுத்தது. அன்று மாலையே என் நண்பியிடம் சென்று அதைப் போட்டுக் காட்டி உன் கணவரைக் கொஞ்சம் கவனித்துக் கொள் என்றேன். அவள் சொன்னாள் என்னுடனேயே அவருக்கு முடிவதில்லை பல நாட்கள் மற்றவர்களிடமா போகப் போகிறார். சும்மா பகிடிக்குக் கதைத்திருப்பார் என்றாள் சிரித்துக் கொண்டே. எனக்கு என்ன செய்வது என்றே தெரியாது மன்னிப்புக் கேட்டுவிட்டு வந்துவிட்டேன். இப்படிப் பட்ட அப்பாவிப் பெண்கள் இருக்கும் வரை தவறு செய்யும் ஆண்களும் இருந்துகொண்டே இருப்பார்கள் தான்.

பல ஆண்கள் பெண்ணை முழு குடும்பச் சுமையை இழுக்கும் ஒரு வண்டியாகவே இன்றும் கூட பயன்படுத்துகின்றனர். ஆண்கள் வேலைக்குப் போவது கடினம் தான் இல்லை என்று கூறவில்லை. அதைவிட பிள்ளைகளை பராமரித்து, சமைத்து, வீட்டுவேலைகள் எல்லாம் பார்த்து காலை எழுந்தநேரம் தொடக்கி இரவுவரை துன்பப்படும் பெண்களும் பலர் உள்ளனர். கணவன் மனைவிக்கு ஒரு தேநீர் கூடப் போட்டுக் கொடுப்பதில்லை. ஆனாலும் பல பெண்கள் சளைக்காமல் குடும்பத்துக்காக உழைத்துக் கொண்டே இருக்கின்றனர். கணவனுக்கு நோய் ஏற்பட்டால் அதற்காக மனைவி கணவனை விட்டுப் பிரிந்து போவதில்லை. தன் ஆசைகளை அடக்கி அவனுக்காகவே அவனுடன் வாழ்ந்தும் விடுவாள். அப்படியிருக்க பெண் பாதை மாறிப் போகிறாள் எனில் காரணம் என்னவாக இருக்க முடியும் ????நீங்கள் தான் கூற வேண்டும்.

நினைவு சுடும்

சுசீலாவுக்கு இன்று கொஞ்சம் மனதுக்கு மகிழ்வாக இருந்தது. ஒரு வருடமாக
கொழும்பில் இந்தா அனுப்புறன் அந்தா அனுப்பிறன் என்று சொன்ன வெளிநாட்டு முகவர் இன்றுதான் இரண்டு நாளில் யேர்மனிக்கு அவளையும் மகளையும் அனுப்பி வைப்பதாக கூறியுள்ளான். கணவனுக்கு இன்று தொலைபேசியில் விடயத்தைச் சொன்ன போது அவனுக்கும் நின்மதியாகத்தன்  இருந்தது. இரண்டு மூன்று முறை முகவர்களுக்குக் காசு கட்டி ஏமாந்து இப்பதான் ஒரு நம்பிக்கையான ஆள் கிடைத்துள்ளான். அரைவாசிக் காசு முதல் குடுத்தால் சரி. மிச்சம் மனைவி வந்து
சேர்ந்தபிறகுதான். அதுகும் மனைவியின் தாயாரை கொழும்பில் பொறுப்புக்கு
விட்டுவிட்டுத்தான் வரவேணும்.

ஒரு வருடமாக மனிசி கொழும்பில வீடெடுத்துத் தங்கிஇருக்கிற செலவு இனி இல்லை என்று காந்தனுக்கும் சற்று ஆறுதலேற்பட்டது. இரண்டு பேரிடம் கடனும் வாங்கியாச்சு. நிரந்தர வதிவிடஉரிமை கிடைத்தபின் மனிசியைக் கூப்பிடலாம் என்றாலும் உங்களை விட்டிட்டு என்னால் இருக்க ஏலாது என்று ஒரே அழுகை. ஊரில போய் கலியாணம் செய்துபோட்டு வந்தாச்சு. மகள் ஒன்று பிறந்து மகளுக்கும் 3 வயதாகப் போகுது. மனிசி அழாமல் என்ன
செய்யும். மகளின் படத்தைப் பார்த்தாலே இவனுக்கு உடனே இலங்கைக்குப்
போகவேணும் போல இருக்கும். மகளின் கதைகளை ஒன்றும் விடாமல் சுசீலா ஒவ்வொரு வாரமும் எடுத்துக் கணவனுக்குக் கூறுவாள். அப்பா என்னும் மகளின் மழலைப் பேச்சைக் கேட்டுக்கொண்டிருக்கலாம்போல் இவனுக்கு இருக்கும். தொலைபேசியை வைத்தபின்னர், அன்றுமுழுவதும் மனம் சுசீலாவையும் பிள்ளையையுமே சுற்றிவந்து மனச் சோர்வை உண்டாக்கும்.  ஒரே பிரச்சனைகள். அங்கு தொடர்ந்து சுசி நிற்பதும் ஆபத்து என்பதால் இவன் நண்பர்களிடம் புலம்ப அவர்கள் தான் இந்தப் புது ஏயென்சியை  அறிமுகப் படுத்திவிட்டது. அவனின் நம்பிக்கை வீண்போகவில்லை விரைவிலேயே மனைவியை அனுப்பப் போகிறான் என எண்ணி தனதும் சுசீலா பிள்ளையுடனுமான ஆனந்தமான வாழ்வைக் கற்பனை செய்தபடியே வேலைக்குச் சென்றான்.

கனக்க ஒண்டும் கொண்டு வரவேண்டாம் எண்டு ஏயென்சி சொன்னதால பிள்ளைக்கு மட்டும் கொஞ்சம் தேவையானதை எடுத்த சுசீலா தனக்கு மிகச் சொற்பமான ஆடைகளையும் மிக அத்தியாவசியமான பொருட்களை மட்டும்தான் அடுக்கியிருந்தாலும் அதுவே ஒரு சூட்கேஸ் வந்துவிட்டது. மிகுதியாக இருந்த தனது ஆடைகளை எல்லாம் எடுத்து அனுப்புவதற்கு வசதியாக  அம்மாவிடம் கொடுத்துவிட்டாள். என்னதான் ஏயென்சி
அனுப்பிறன் எண்டு நம்பிக்கையாச் சொன்னாலும் போய் சேரும் மட்டும் அவளுக்கு நம்பிக்கை இல்லை. தப்பித் தவறி போறது சரிவராவிட்டால் பிறகு எல்லாம் புதிதாய் வாங்க வேண்டும். நானாவது சமாளிக்கலாம் மகள் சின்னப்பிள்ளை கஷ்டம். அதோட காந்தனும் பாவம்தானே என்னால அவருக்கு எவ்வளவு காசு நட்டம் எனத் தனக்குள் எண்ணிக் கொண்டாள்.

பலவித கற்பனைகளுடன் விமானத்தில் ஏறிய சுசீலாவுக்கு சிதம்பர சக்கரத்தைப் பேய் பார்த்தது போல் இருந்தது. இன்னொருவரின் மனைவியின் பாஸ்போட்டில் தான் அவளைக் கூட்டிக்கொண்டு போகிறார். அவளைக் கதைக்க வேண்டாமென்றும் இமிகிறேசனில் கேட்ட எல்லாவற்றிற்கும் இவள்
பெயரில் அவரே பதிலும் சொல்கிறார். விமானத்தில் ஏறி இறங்கும் வரைதான்
என்றாலும் இவளுக்கு அப்படி நடிக்கவே எதோ போல்தான் இருக்கு. ஆனாலும் என்ன செய்வது. கணவரிடம் போய் சேரவேண்டுமே. அதனால் எதையும் தாங்க வேண்டியதுதான். ஆனாலும் விமானத்தில் அந்த ஆளுக்குப் பக்கத்தில் இருக்க என்னவோ போல்தான் இருக்கு. அந்த ஆளும் பிரச்சனை இல்லைத்தான். ஆனால் தொண தொணவென்று ஏதாவது
கதைத்தபடி இருக்க இவளுக்கு எரிச்சலாக இருந்தது. கணவன் மனைவியாக நடிக்கிறம் அவங்களுக்குச் சந்தேகம் வரக்குடாது அதுதான் இப்பிடிக் கதைக்கிறன் குறை நினைக்காதைங்கோ என்றதும் நான் குறை நினைக்கவில்லை என்று இவள் உடனே கூறினாள். அதன்பின் மனம் கொஞ்சம் இலேசாகியது போன்று இருந்ததால் பொது விடயங்களைப்
பற்றி எல்லாம் கதைத்துக் கொண்டு வர முடிந்தது.

விமானம் நேரே யெர்மனிக்குத்தான் போவதாக மகிழ்வோடு இருந்த இவளுக்கு ரஷ்யாவில் இறங்கவேண்டும் என்றதும் இருந்த சந்தோசமெல்லாம்  வடிந்துவிட்டது. அப்ப எப்ப யேர்மனிக்குப் போவது என்று இவள் கேட்க, அதுபற்றி எனக்குத் தெரியாது. நான் உங்களை இறக்கிவிட்டுப் போய்விடுவன். அங்கு நிக்கும் மற்ற ஏயென்சிதான் உங்களை அங்காலை அனுப்புவார். ஆனால் வச்சு மினைக்கெடுத்த மாட்டினம். இரண்டு
மூன்று நாளில் அனுப்பிப் போடுவினம் என்று கூறியதும் மனம் நின்மதியடைந்தது.

அம்மாவும் பாவம் நான் போய்ச் சேர்ந்தால்தான் அவவுக்கும் நின்மதி. ஒரு வாருசமா வீடுவாசலை விட்டிட்டு என்னோடையே நிக்கிறா. அப்பாவும் ஊரில தனிய. தம்பியும் அப்பாவும் சாப்பிடுறதுக்கு என்ன கஷ்டப்படீனமோ. சரி இன்னும் இரண்டு மூண்டு நாள்தானே. கண்ணை மூடி முழிக்கப் போய்விடும் என்று எண்ணிக் கொண்டாள்.சோபாவில் இருந்துகொண்டு எங்கோ வெறித்துப் பார்த்துக்கொண்டிருக்கும் மனைவியை தோளைப் பிடித்து உலுக்கினான். என்னப்பா நான் எத்தினை தரம் வீட்டு மணியை அடிச்சனான். நீர் திறக்கேல்லை. திறந்துகொண்டு வந்தா பிள்ளை அழுது கொண்டு இருக்கு எனக் கோபத்துடன் ஏசிய கணவனை நிமிர்ந்து பார்த்தாள் சுசீலா. நான் மகளை நினைச்சுக்கொண்டு இருந்தனான் என்று கூறிய மனைவியின் அருகில் அமர்ந்து அவள் தோளை ஆதரவுடன் அணைத்தான் காந்தன். மனைவியின் மேல் வந்த கோபம் உடனே பறந்தோடி விட்டது. இன்னும் நீர் அதை மறக்கேல்லையோ. உதையே நினைச்சுக்கொண்டு  இருந்தால் நீர் வருத்தக் காறியாவதுதான் மிச்சம். அதுதான் இப்ப சின்னவன் இருக்கிறானே அவனைப் பாத்து மனதை ஆற்றிக் கொள்ள வேண்டியதுதான் என்றான்.

நீங்கள் அனியோட இருக்காதபடியால் உங்களுக்கு கவலை இல்லை
என்றவளை இடைமறித்து அவள் எனக்கும் பிள்ளை தானப்பா. நேர பாக்காட்டி என்ன. போனில குரலைக் கேட்டுக் கேட்டு எப்ப அவளைப் பாக்கப் போறன் எண்டு நானும்தான் ஏங்கிக் கொண்டு இருந்தனான். நீராவது உருப்படியா வந்து சேர்ந்தீரே என நான் சந்தோசப்பட்டுக் கொண்டன். உமக்கும் ஏதாவது ஆகியிருந்தால் என்ர நிலைமையை யோசிச்சுப் பாத்தனீரே. எனக்குப் பயித்தியம் தான் பிடிச்சிருக்கும். எதோ கடவுள் காப்பாத்தீட்டார் என்றான்.

 கடவுள் என்னைக் காப்பாத்திக் காலம்முழுக்க கண்ணீர்வடிக்க வச்சிட்டானே. நான் ஒருத்தருக்கும் ஒண்டுமே செய்யேல்லையே என்று கேவும் அவளை எப்படி ஆறுதல்ப் படுத்துவது என எண்ணியபடி அழுது ஓய்ந்து போயிருந்த மகனை தூக்கிக் கொண்டு வந்து அவளிடம் நீட்டினான். சுசீலாவும்தான் பழசை மறக்க முயல்கிறாள். ஆனால் எப்படி முடியும். பத்துமாதம் சுமந்து முப்பத்திநான்கு மாதங்கள் கண்ணுக்குள் பொத்திவைத்து வளர்த்த மகள். நினைக்கவே நெஞ்சு பதறுவதை சுசீலாவால் தடுக்கவே முடியவில்லை.அந்த நாளை வாழ்க்கையில் மறக்கவே முடியாது. ரைஷ்யாவில் எல்லை கடந்த அந்த நாள் அவள் எதிர்பாராத எந்தப் பெற்ற தாய்க்கும் கொடுக்கக் கூடாத மாறா வடுவை அவளுக்குக் கொடுத்துவிட்டது. எல்லோரும் காட்டுப் பாதையால் நடக்கும் படி கூறிக்கொண்டு ஏயென்சியும் இன்னும் ஒருவனும் கிட்டத்தட்ட எட்டுப் பேரைக் கூட்டிக்கொண்டு போனார்கள். எல்லாரும் பெடியள். இவளும் இன்னுமொரு இளம் பெண்ணும் ஒரு வயது போனவரும் தான் பின்னால்.

இவளது சூட்கேசை அங்கேயே வைக்கச் சொல்லிவிட்டான் ஏயென்சி. பிள்ளையின் உடைகளும் மகள் சாப்பிட சில தின்பண்டகளும் தவிர மற்றதெல்லாம் விட்டுவிட்டு வந்தாச்சு. ஆனாலும் அனியையும் தூக்கிக்கொண்டு அந்தச் சமான் பையையும் கொண்டு நடப்பது அவளுக்குச்
சிரமமாகவே இருந்தது. ஒருவயதுப் பிள்ளை எண்டால் பரவாயில்லை. மூன்று வயதுப் பிள்ளை கொஞ்சம் பாரம் கூடத்தான். இருட்டு வேறு முன்னுக்கு என்ன இருக்கு என்று தெரியாமல் மற்றவைக்குப் பின்னால் நடக்கவேணும். இல்லை இல்லை ஓடவேணும். எல்லோரும் விரைவாக நடக்க இவளுக்கு மூச்சு வாங்கியது.

அத்துவானக் காட்டில் தனிய விட்டது போல பயமும் வேறை. என்ன செய்வது நடக்க வெளிக்கிட்டாச்சு. என்றாலும் இப்பிடிக் கொடுமையான பயணம் என்றால் காந்தனுக்கு விசாக் கிடைக்குமட்டும் இருந்திருக்கலாம் என அந்த நேரமும் அவள் மனம் ஏங்கியது. மற்றவர்கள் தூரத்தில் போவது தெரிகிறது. நில்லுங்கோ என இவள் கத்துகிறாள். இவளின் கத்தலை யாரும் கவனித்ததாகத் தெரியவில்லை. அந்த வயதுபோனவர் மட்டும் இவளைத் திரும்பிப் பார்த்தது போல் இருந்தது. இவளுக்கு சுய பச்சாதாபத்தில்  தொண்டை எல்லாம் அடைத்து அழுகை வந்தது. பை வைத்திருந்த
கையைத் தூக்கி ஆடினாள். அந்த நேரம் அந்த முதியவரும் இவளைத் திரும்பிப் பாத்தார். அவருக்கு அவளின் நிலைமை பரிதாபத்தைக் கொடுத்திருக்க வேண்டும் இவளிடம் திரும்பி வந்தார்.

தங்கச்சி, பிள்ளையையும் தூக்கிக் கொண்டு இவ்வளவு தூரம், இவங்கள் ஓட்டமும் நடையுமாப் போறாங்கள். பிள்ளையை என்னட்டைத்
தாங்கோ. கொஞ்ச நேரம் நான் கொண்டுவாறன் என்று கையை நீட்டினார். இவளுக்குக் கொடுக்க மனமில்லைத் தான். ஆனாலும் கைகளும் முதுகும் வலித்த வலியில் பிள்ளையைக் கொடுத்தாள். நல்ல காலம் அனி நித்திரை. அல்லது ஒருத்தரிட்டையும் போகாது அழுகையாகத்தான் இருந்திருக்கும். வயது போனவர் பிள்ளையை வாங்கிக் கொண்டு விரைந்து நடக்க இவளால் நடக்கவே முடியவில்லை. காற்பாதங்கள் இரண்டும் வீங்கிப் போய் வலியெடுத்தது. கிட்டத்தட்ட ஒருமணி நேரம் இருக்குமா நடக்கத் தொடக்கி.

வெளிநாடு போக எண்டு வாங்கின செருப்பும் புதிதென்பதால் காலிரண்டும் வெட்டி செருப்பைக் கழட்டிக் கொண்டு நடக்க முற்பட்டாள். கொஞ்சத்தூரம் போனதுமே கல்லோ முள்ளோ குற்றி இன்னும் வலித்ததால் மீண்டும் செருப்பைப் போட்டுவிட்டு நிமிர்ந்தால் ஒருவரையும் காணவில்லை. அவள் கால் நோவையும் பொருட்படுத்தாது  விரைந்து ஓடியபடி எங்க நிக்கிறியள் எண்டு கத்தினாள். ஒரு பதிலும் இல்லை. ஐயா  ஐயா என்று அந்த முதியவர் எப்படியும் தன்னை விட்டுவிட்டுப் போயிருக்க மாட்டார் என்னும் நம்பிக்கையில் கத்தினாள். ஒரு பதிலும் இல்லை. எங்க நிக்கிறியள் எங்க நிக்கிறியள் என்று பாதி அழுகையுடன் ஓடியோடி தடக்கி விழுந்துவிட்டாள். சுற்றிவர ஒரே இருட்டு. தட்டுத்தடுமாறி எழுந்து ஓட வெளிக்கிட்டவள் அப்படியே மயங்கிச் சரிந்தாள்.

எவ்வளவு நேரம் அப்படியே கிடந்தாளோ, அவளை யாரோ பிடித்து உலுக்குகிறார்கள். கஸ்ரப்பட்டு கண்ணைத்திறந்து பார்த்ததும் முதல் கேட்டதே எங்க அனி என்றுதான். ஏஜென்சியுடன் வந்த மற்றவன் தான் இவளை உலுப்பியிருக்கிறான். நீங்கள் தானே கொண்டு வந்தனீங்கள் என்று அவன்கூற இவள் பதறியபடியே எழ  முயல்கிறாள். எழ  முடியவில்லை. அவன்  சுசீலாவின் கைகளைப் பிடித்து இழுத்து எழுப்புகிறான். அந்த வயது போனவர் தான் மகளைத் தூக்கிக் கொண்டு வந்தவர் என்று
அவர் எப்படியும் இவர்களிடம் போயிருப்பார் என்னும் நம்பிக்கையில்
சொல்கிறாள்.

அவரையும் தான் காணேல்ல. விரைவா நடக்கச் சொல்லிஎல்லே  உங்களுக்குச் சொன்னது என்று இவளைக் குற்றம் சொல்கிறான்.
இவளுக்குப் பிள்ளையைப் பற்றிய நினைப்பில் அவன் கூறியது  எதுவுமே மனதில் பதியவில்லை. எங்க என்ர  பிள்ளை என்கிறாள் மீண்டும். முதல் வாங்கோ இன்னும் கொஞ்ச நேரம்தான் இடுக்கு. அங்க போய்த்தான் பாக்க வேணும் அந்த ஐயா அங்க வந்திருப்பார் என்று சொல்ல இவள் மனதில் நம்பிக்கை வருகிறது.

அவனுக்குப் பின்னே விரைவாக நடக்கிறாள். கொஞ்சத் தூரம் போனபின் காலில் எதுவோ குத்தியபோதுதான் உணர்கிறாள். ஒரு கால் செருப்பு இவள்
மயங்கி விழுந்தபோது களன்று  போயிருக்க வேண்டும். இத்தனை நேரம் ஒரு காலில் செருப்பின்றி  உணர்வின்றி நடந்திருக்கிறாள். மனதெல்லாம் குழம்பி தவிப்பு பயம் என்று கலவையான உணர்வுகளோடு அவர்கள் நிற்குமிடம் வந்தவுடன் தன் பிள்ளையோ அந்த முதியவரோ அங்கு  இல்லாதது கண்டு  நடுக்கத்துடன் எங்க என்ர  பிள்ளை என்று அழுகையுடன் கத்துகிறாள். அக்கா கத்தாதைங்கோ. சத்தங்கேட்டு யாராவது வந்திடப்போறாங்கள் என்றதும் அவளுக்கு கோபம் வந்துவிடுகிறது. எண்ட பிள்ளையைக் காணேல்லை. ஐயோ என்ர  பிள்ளை எங்க என்று இன்னும் பலமாகக் கத்துகிறாள். அந்த இன்னொரு பெண் அக்கா அழாதைங்கோ கண்டு பிடிக்கலாம் என்று
மெதுவாக இவளுக்குப் பக்கத்தில் வந்து சொல்லுகிறாள். நீங்கள் அழுது பிறகு
பொலிஸ்  எங்கள் எல்லாரையும் பிடிச்சா உங்கட பிள்ளையைக் கண்டு பிடிக்க ஏலாது என்றதும் அவள் கத்தல் குறைந்து அழுகையோடு நிக்கிறது.

ஏயென்சி, நான் எதுக்கும் மிச்ச ஆக்களைக் கூட்டிக் கொண்டு போறன். நீ நிண்டு அந்த ஐயாவை ஒருக்காத் தேடிப்பாத்துக் கூட்டிக் கொண்டு வா என்கிறான். நான் எண்ட பிள்ளையை விட்டிட்டு வரமாட்டன் எண்டு இவள் சொல்ல சரி அப்ப நீங்களும் நில்லுங்கோ என்றுவிட்டு அவர்கள் நடக்கத் தொடங்குகின்றனர்.  இவர்கள் வந்த பாதையில் திரும்ப்பிப் போய் ஒரு பத்து நிமிடம் நடந்திருக்க மாட்டார்கள் இரண்டு கிளை வீதிகள் தெரிகிறது.

அந்த ஐயா எந்தப்பக்கம் போனாரோ தெரியேல்லையே என அவன் அலுத்துக் கொள்கிறான். நீங்கள் உந்தப் பக்கம் போங்கோ நான் இந்தப் பக்கம் போய் பாக்கிறன் என்று  இவள் சொல்லிவிட்டு நில்லாமல் நடக்கிறாள். அக்கா எனக்கே வடிவா இடமொன்ரும் தெரியாது நீங்கள் தனியப் போய்
என்ன செய்யப் போறியள் என்று அவன் பின்னால் கூறுவது கேட்கிறது. இவள் அவன் சொல்வதைக் கேட்காமலும் தன்  நடையை நிறுத்தாமலும் வெறி பிடித்தவள் போல் நடக்கிறாள்.


உயிர் துடிக்கும்

Posted 31 January 2013 - 09:26 AM
உரிமையுள்ள ஒன்றிற்காய்
உளம் ஏங்கி உயிர் துடிக்கும்
கருணையற்ற மனிதருக்கு
காணும்வலி
கணம்கூட உணராது

நெஞ்சில் வெடித்தெழும்
நேசத்து  நிகழ்வுகளின்
சொல்லொணாத் துயர் சுமந்து
சொல்லி அழாச் சுமைகளுடன்
காத்திருக்கும் கணங்கள் கவி
சொல்லிட முடியாது

காலாண்டு கூடவில்லை
கடல்போல் அன்பு

காட்டாற்று
வெள்ளமாய்
கரையுடைக்க
காலத்தின் வரவுக்காய்
காத்திருக்க மட்டுமே
முடிகிறது முடிவின்றி

முடிவேதுமில்லா
அண்டப் பெருவெளியில்
அரவமற்று அனாதையாய்
நிற்பதாய் உணர்கையில்
உள்ளத்தெழும் உணர்வின்
கொடுமையில்
உறக்கம் மட்டுமா
தொலைந்து போவது???

அந்த மூட்டைப் பூச்சி

 Bed_bugs.jpeg?1349479894


இந்த மூட்டைப் பூச்சி பற்றிய விடயம் ஒரு சிறியதே என்றாலும், இன்றுவரை அதன் நினைவு என் நெஞ்சை விட்டு அகல மறுத்து ஆழப் பதிந்ததனால் கட்டாயம் இது பற்றியும் எழுத வேண்டும் என்றுமுடிவெடுத்தேன். ஆனால் பலருக்கு மூட்டைப் பூச்சி பற்றித்  தெரிந்தே இருக்காது.

எங்கள் வீடு மிகச் சுத்தமானது என்பதால் வீடுத் தளபாடங்களும் சுத்தமாகவே
இருக்கும். நான் நான் வேம்படிக்குப் படிக்கப் போனதன் பின்னர் எனக்காகப் படிப்பதற்குத் தனி மேசை கதிரை கட்டிலுடன் தனி அறை இருந்தது. அது எனக்குப்
பதவி உயர்வு கிடைத்தது போன்றது.

எனக்குப பல நண்பிகள் இருந்தனர். அவர்கள் வந்தால் நாம் வீட்டு முற்றத்தில் இருந்து கதைப்போம். முற்றத்தில் வேறு யாராவது வந்தால், ஏதாவது பகிடியாகக் கதைப்பதெனில் என் அறைக்குள் போய் இருந்து கதைப்போம். எனது அம்மம்மா எப்போதும் வீட்டுக்கு முன்னால் தான் அமர்ந்திருப்பார். பெடியளின் கதை ஏதும் என்றால் அம்மம்மாவுக்கு கேட்டாலும் என்ற பயத்தில் என் அறைதான் தஞ்சம்.

எனது வீடுதான் சுத்தமே ஒழிய எனது இரு நண்பிகளின் வீடுகளில் மூட்டைப் பூச்சியின் தொல்லை இருந்தது. அதனால் அவர்கள் வீட்டுக்குப் போனால் நான் கதிரைகளில் இருப்பதைத் தவிர்த்து விடுவேன். வெளியில் சீமெந்துத் திண்ணைகளில் இருந்துவிடுவேன். சிலவேளைகளில்  அவர்களின்  தாய்மார்  உள்ளுக்குள்ள வந்து கதையுங்கோவன் என்றால் வெளியே தான் நல்ல காற்று வரும் என்று விடுவேன். மூட்டையின் தொல்லையால் தான் வெளியே இருக்கிறேன் என்று கூற ஏனோ மனம் வருவதில்லை.

காலை ஐந்தரைக்கு எழுத்து ஒரு மணி நேரம் படிக்க வேண்டும் மாலையும் ஒருமணி நேரம் கட்டாயம் படித்தே ஆகவேண்டும். என்னறையில் என்மேசையில் தம்பி தங்கைகளைv அறைக்குள் அனுமதிக்காது இருந்து படிப்பது. ஏன் அவர்களை விடுவதில்லை எனில் சிலவேளை படிக்கும் மனோ நிலை வராது. அப்போதெல்லாம் பாடப் புத்தகத்துள் கதைப் புத்தகத்தை மறைத்து வைத்துத் தான் வாசிப்பது. அம்மாவும் பிள்ளை மும்மரமாகப் படிப்பதாக நம்பிக் கொண்டு போய்விடுவா. ஆனால் தம்பி தங்கை என்றால் பக்கத்தில் வந்து நின்று நோண்டுவார்கள். என்னக்கா படிக்கிறீர்கள் என்று எட்டிப் பார்ப்பார்கள். கதைப் புத்தகத்தைக் கண்டால் உடனே அம்மாவிடம் கோள்மூட்டி விட்டுத் தான் மறு வேலை. அதனால் பாதுகாப்புக்கு அம்மாவிடம் இவர்கள் என்னைப் படிக்க விடாமல் இடைஞ்சல் தருகிறார்கள் என்று நான் கோள் மூட்டியதில், நான் படிக்கு நேரம் அவர்கள் என் அறைக்குள் வரத் தடை.

சரி இனி விசயத்துக்கு வாறன். ஒரு நாள் மாலையில் படிப்பதற்கு இல்லை இல்லை கதைப் புத்தகம் வாசிப்பதற்கு ஆவலா புத்தகத்துக்குள்ள புத்தகம் வைத்துக்
கொண்டு என் கதிரையில் அமர்ந்தால் இரு நிமிடமாகவில்லை தொடையின் கீழ்
பகுதியில் ஊசியால் குற்றுவது போல் இருக்க நானும் எதோ என்று விட்டு
மீண்டும் புத்தகத்துள் ஆழ்ந்துவிடுகிறேன். மீண்டும் அதே ஊசிக் குற்றல்.
என்ன இது என்று ஏதும் சிராம்பு என் உடையுடன் ஒட்டிக் கொண்டதோ என்றுவிட்டு
எழுந்து என் பாவாடையை உதறிவிட்டு இருக்கிறேன்.

மீண்டும்  அதே தாக்குதல். ஆனால் இப்ப தொடையில் சரியான கடுப்பு. தாங்க முடியாமல் சொறியும் போதுதான் பார்த்தால் அந்த இடம் தடித்துப் போய் இருந்தது. உடனே எனக்கு விளங்கிவிட்டுது இது மூட்டைக் கடி என்று. உடனே ஒரு கலவரமும் வந்தது. எங்கள் வீட்டில் இது இல்லையே எப்படி வந்தது என்று. இரு நாட்களுக்கு முன் நண்பிகள்வந்து கதைத்துக்கொண்டிருந்தார்கள். யாரின் உடையுடனோ ஒட்டிக் கொண்டு வந்திருக்கிறது என எண்ணிக் கொண்டு, இருக்க எண்ணிய நான் இருக்காது கட்டிலில் போய் அமைந்தேன்.

கட்டிலில் இருந்து படிப்பதும் அப்பாவுக்குப் பிடிக்காது. முதுகு வளைந்துவிடும் கதிரையில் நேராக இருந்து படிக்க வேண்டும் என்பார். அதனால் எப்படியாவது மூட்டையை நசுக்க வேண்டும். ஆனால் அப்போது இருட்டிவிட்டபடியால் ஈர்க்குக் குச்சிக்கு  நாளை வரை காத்திருக்க வேண்டும் என எண்ணிக் கொண்டு அரைவாசிக்  கதையை வாசித்து முடித்தேன்.

அடுத்த நாள் மாலை தான் பள்ளி விட்டு வந்ததும் மிகுதிக் கதையை வாசித்து முடிக்கும் அவசரத்தில் மறந்துபோய் கதிரையில் இருந்துவிட்டேன். சரியான பசிபோல் மூட்டைக்கு. அவசரமாக ஓடிவந்து இரத்தம் குடிக்க ஆரம்பித்தது. அது என்
இரத்தத்தை உறிஞ்சுகிறதே என்னும் கோபத்தை விட என்னை கதையை வாசிக்க விடாது செய்வதுதான் கோபத்தை அதிகப்படுத்த விரைந்து சென்று ஈர்க்கு ஒன்றை எடுத்து வந்தேன்.

எனது கதிரை மரத்தால் ஆனது பிளாஸ்டிக் வயர்களால் பின்னப்பட்டிருக்கும். அந்த பின்னப்பட்ட இடைவெளிகளில் எங்கோதான் என் எதிரி ஒளிந்திருக்கிறது. எனவே எல்லா இடைவெளிகளுள்ளும் ஈர்க்கை விட்டு நன்றாகக் குத்தினேன். மும்மரமாகக் தாக்குதலை நடத்திக் கொண்டிருக்கும் நேரம் பாத்து என் கடைசித் தம்பி வந்துவிட்டான்.  என்ன அக்கா கதிரைக்குச் செய்யிறீங்கள் என்று கேள்வி வேறு. அவனுக்குத் தெரிந்தால் அதோ கதிதான். உடனே குந்தி இருந்த நான் எழுந்து எப்பிடிப் பின்னி இருக்கினம் என்று பாக்கிறேன் என்று கூறிவிட்டு மீண்டும் கதிரையில் அமர்கிறேன். ஈர்க்கால் குத்திய குத்தில் இப்போதைக்கு மூட்டை வர மாட்டுது என்ற நம்பிக்கை. அக்கா சாப்பாடு வேணும் என்கிறான் தொடர்ந்து தம்பி.

அம்மா பக்கத்து வீட்டுக்குப் போய் விட்ட படியால் தம்பிக்கு நான் தான் சாப்பாடு தீத்த வேண்டும். அவன் கடைசிப் பிள்ளை என்பதால் சரியான செல்லம். அதனால் யாராவது அவனுக்குத் தீத்தி விட வேண்டும். மனதுக்குள் எரிச்சல் வந்தாலும்  அடக்கிக் கொண்டு அவனுக்கு உணவைப்பிசைந்து ஊட்டுகிறேன். அவன் உண்டு முடிந்ததும் விளையாட ஓடியபிறகு மீண்டும்என் நாற்காலியில் வந்து அமர்கிறேன். கொஞ்ச நேரம் எந்தக் கடியும் இல்லை. ஈர்க்கு  நல்லாத்தான் வேலை செய்யுது என எண்ணியபடி அம்மா திரும்பி வருவதற்குள் கொஞ்சமாவது வாசித்து முடிக்க வேண்டும் என்ற அவசரத்துடன் வாசிக்கத் தொடங்குகிறேன்.

கதை நல்ல விறுவிறுப்பாகப் போகிறது. நாளை நண்பியின் புத்தகத்தை அவளிடம் கொடுத்தே ஆகவேண்டும். அந்த அவசரம் வேறு. மும்மரமாக வாசித்துக் கொண்டிருக்கும் போது மீண்டும் மூட்டையின் தாக்குதல். இன்று உன்னைக் கொல்லாது விடுவதில்லை எனச் சூளுரைத்த படி ஈர்க்கை எடுக்கிறேன். ஈர்க்கு ஒரு கட்டத்துக்கு மேல் உள்ளே போகவில்லை. அம்மாவின் பெரிய ஊசி ஒன்றை எடுத்துவந்து ஒவ்வொரு இடைவெளிக்குள்ளும் ஊசியை விட்டு கிண்டுகிறேன். அப்பாடா ஒன்றிலிருந்து ஊசியில் அகப்பட்டபடி மூட்டைவருகிறது . எதோ பெரிய சாதனையைச் செய்தது போல் வெளியே கொண்டு சென்று சிறிய தடியால் நசித்து எறிந்துவிட்டு நீண்ட நின்மதியுடன் கதிரையில் அமர்கிறேன்.