Saturday, 16 November 2013

நிறம் மாறும் உறவு

சாந்தினிக்கு இப்போதெல்லாம் அடிக்கடி தூக்கம் வருகிறது. இரவில் பலநாட்கள் படுத்ததும் தூங்கிவிடுகிறாள். காலையில் அடித்துப் போட்டது போல் இருக்கும். ஆனாலும் காலையில் மணிக்கூடு அலறும் சத்தம் காதைத் துளைக்க எழும்பியே தீரவேண்டும் என்னும் கட்டாயத்தால் எழுகிறாள்.

அதன்பின் பல் துலக்கி, பால் காய்ச்சி, கணவனுக்குக் கோப்பி போட்டு, பிள்ளைகளுக்கு பால்த்தேநீர் போட்டு தானும் குடித்துவிட்டு, ஒவ்வொருவராக மூன்று பிள்ளைகளையும் எழுப்பி வெளிக்கிடுத்தி, அவர்களை காலை உணவு உண்ணச் செய்து, தேநீரைக் குடிக்கச்  செய்து, பாடசாலையில் விட்டுவிட்டு வருவதற்கிடையில் வாழ்க்கை வெறுத்துவிடும்.

கணவன் செந்தில் ஒருநாளும் கட்டிலை விட்டு அசைய மாட்டான். எத்தனையோ தரம் கேட்டும் பயனில்லை. காதலித்து மணந்திருந்தாலாவது ஒரு உரிமை, துணிவு தானாக வந்திருக்கும். இது பெற்றோர் பேசி செய்த திருமணம். என்ன செய்வது. பயந்தபடியே வாழவேண்டிக் கிடக்கிறது என
மனதில் எண்ணியவளுக்கு மனதில் சலிப்பேற்பட்டது. மூத்த மகளுக்கு பன்னிரண்டு வயது முடியப் போகிறது எனில் பதின்நான்கு வருடமாகிவிட்டதா  திருமணமாகி என எண்ணியவளுக்கு மலைப்பாக இருந்தது.

இத்தனை ஆண்டுகள் செந்திலுடன்  வாழ்கிறேனே.  இப்போது இந்த எண்ணம் சரிதானா என்ற பயமும் கூடவே எழுந்தது. என்ன நான் மனதுள் ஒன்றை நினைக்கவே பயப்படுகிறேன். இன்னும் எத்தனை கால வாழ்க்கை இருக்கிறது என்று நினைவைக் கலைத்துவிட்டு எழுந்தாள் சாந்தினி.

மூத்த மகள் இப்போதெல்லாம் எழும்பப் பஞ்சிப் படுகிறாள். பெரியவளாகும் வயதும் வந்துவிட்டதனாலோ  என்னவோ தெரியவில்லை. வேலைக்கும் நேரமாகிவிட்டது. செந்திலுக்கு கோப்பியைக் குடுப்பம். கொஞ்சம் ஆறினாலே திட்டுவான் என எண்ணியபடி கோப்பியை எடுத்துக்கொண்டு படுக்கை அறைக்குச் சென்றாள்.

செந்தில் வேலைக்குச் சென்று ஆறு வருடங்கள் இருக்கும். ஆள் பார்க்க அழகானவன்தான். ஆறு மொழிகள் பேசத் தெரிந்தவன்தான். நல்ல ஒரு வேலையிலும் இருந்தான்தான். ஆறு வருடங்களுக்கு முன் பிடித்த சனிதான் இன்னும் விடவில்லை.

இவள் ஒரு பெரிய கடையில் வேலை செய்கிறாள். கணவனுக்கு வேலை இல்லை என்றதும் வீட்டுக்கும் பிள்ளைகளுக்கும் அரச உதவிப் பணம் வருகிறது. அதனால் அவன் மேற்கொண்டு வேலை தேடாமல் இரவிரவாக கணனியின் முன் இருந்துவிட்டு பகல் பதினொன்று, பன்னிரண்டு மணிவரை தூக்கம். அதன்பின் ஆடிப் பாடி எழுந்து முதல் நாள் சாந்தினி சமைத்து வைத்ததை மூக்குமுட்ட உண்டுவிட்டு மீண்டும் தொலைக் காட்சி கணணி என்று அவன் வாழ்க்கை போகிறது.

இவனை நினைத்து நினைத்தே சாந்தினிக்கு அரைவாசி நாள் வருத்தம். ஆனாலும் யாரிடமும் இந்த வெக்கம் கெட்ட கதையைப் சொல்லத்தான் முடியுமா? உம்மட மனிசனுக்கு வேலை கிடைத்துவிட்டதோ
என்று தெரிந்தவர்கள் விசாரித்தால் இல்லை என்று சொல்லி முடியும் முன்னரே கூனிக் குறுகிவிடுவாள். ஆனாலும் கணவனை மற்றவர்முன் விட்டுக் கொடுப்பதில்லை. அவருக்கு ஏழரைச் சனி நடக்குது. அது ஒரு வேலையையும் கிடைக்க விடுதில்லை பார்ப்போம் என்றுவிட்டு அந்த இடத்தில் நிற்காது   சென்று விடுவாள்.  செந்திலால் மற்றவர் வீடுகளுக்குச் செல்வதைக் கூட இப்பொழுதெல்லாம்குறைத்து விட்டாள்.
 
 
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
 
 
 
சாந்தினி இயல்பிலேயே அமைதியானவள். எந்தப் பிரச்சனைக்கும் போகமாட்டாள்.யாழ் இந்து மகளிர் கல்லூரியில் படித்திருந்தாலும் துணிவு என்பது கொஞ்சம் கூட இல்லாதவள். அதற்காக அவள் பேசா மடந்தையும் இல்லை. தன் வீட்டில் சகோதரர்களுடன் அயலவர்களுடன் எல்லாம் சுவாரசியமாகப் பேசிச் சிரித்துமிருக்கிறாள். ஏன் செந்திலைத் திருமணம் செய்து இரு வருடங்கள் வரை அவன்கூட நன்றாகத்தான்
இருந்தான்.எங்கே தவறு நேர்ந்து தன் வாழ்வு இப்படியானது என்று இன்னும் விளங்கவில்லை.

சாந்தினிக்கு மூத்ததும் இரண்டாவதும் மகள்கள். மூன்றாவது மகன். மூத்தவள் ஏழாம் வகுப்புப் படிக்கிறாள். இரண்டாவது மகள் நான்காம் வகுப்பும், பெடியன் இரண்டாம் வகுப்பும் படிக்கிறார்கள். கடவுள்
புண்ணியத்தில் பிள்ளைகள் ஒழுங்காகப் படிக்கிறார்கள். மற்றவர்கள் போல் அவள் பிள்ளைகளை டியூசனுக்கு விடுவதில்லை. மாலையில் வேலையால் வந்த களைப்பையும் பார்க்காது ஒரு மணிநேரம் கட்டுப்பாட்டுடன் பிள்ளைகளைப் படிக்க வைத்துவிட்டுத்தான் விளையாட அனுமதிப்பாள். அதன்பின் இரவுக்கும் அடுத்த நாளுக்குமான சமையல்  செய்ய ஆரம்பிப்பாள்.
 
செந்தில் சில நேரம் மாத்திரம் தானே சமைக்கின்றேன் என்று வருவான். உருசியாகச் சமைப்பான் தான் ஆனாலும் இரண்டு நாட்கள் சமைக்க வேண்டியதை ஒரே நாளில் சமைத்துவிட்டு கொஞ்சம்கூடக் கூச்சமின்றி அளவுக்குமீறிச் சாப்பிடும் குணம். பார்த்துக் கொண்டிருக்கவே எரிச்சல் வரும்.
அவன் சமைக்கும் நாளில் எல்லாப் பாத்திரங்களையும் எடுத்து பரப்பி, சமைத்து முடிய அப்படியே விட்டுவிட்டு போயும் விடுவான். அதன்பின் அத்தனை பாத்திரங்களையும் கழுவி வைக்கவே அவள் நேரம் சரியாக இருக்கும்.

அவனுக்கும் ஒன்று இரண்டு நண்பர்கள் இருக்கிறார்கள் தான். ஆனாலும் அடிக்கடி அவன் அவர்களுடன் கூடிக் குலாவுவதில்லை. அவன் அவர்களைத் தவிற்கிறானா? அவர்கள் அவனைத் தவிற்கின்றார்களா?
என்பதில் சாந்தினிக்கு இன்னும் சந்தேகம்தான். செந்திலிலும் ஒரு கெட்ட குணம். வாயில் வந்ததை எல்லாம் புளுகுவது. திருமணமான புதிதில் இவளுக்கு அவன் கூறியவை எல்லாம் வேத வாக்காக இருந்தது. திருமண மயக்கம் மற்றதை யோசிக்க விடாதும் செய்தது. போகப் போகத்தான் அவனின் குணம் தெரிய ஆரம்பித்தது. அவனின் பொய்களால் மற்றவர்களுக்கு ஏதும் நட்டம் இல்லைத்தான். ஆனாலும் இவன் பொய் சொல்கிறான் என்று விளங்காமல் இருக்க எல்லோரும் இவள் போன்றவர்கள் இல்லையே.

ஒருநாள் இவன் கூறும் பொய்களைக் கேட்டுப் புளித்துப் போய் நீங்கள் பொய் சொல்கிறீர்கள்  என்று எனக்குத் தெரியும் பொய் சொல்லாதேங்கோ என்று இவள் கூறி முடிக்கும் முன்னரே கன்னத்தில் இடி இறங்கி காதில் தேனீக்கள் வட்டமிட்டன. வீங்கிய கன்னம் வற்ற இரண்டு நாள் எடுத்தது. நான்கு நாட்கள் அந்தக் காதால் ஒன்றையும் கேட்கவும் முடியவில்லை. வேலைக்கு விடுப்பு எடுத்துவிட்டு வீட்டில் இருந்தாள். அவளால் அதைத் தாங்க முடியவில்லையாயினும் அதன்பின் அவனை எதிர்த்து ஒரு வார்த்தை தன்னும் பேசவும் முடியவில்லை.

மூன்று நாட்கள் அவனுடன் எதுவும் பேசாது இருந்தாள். அவனோ ஒன்றுமே நடவாததுபோல் அவளை
அது கொண்டுவா இது கொண்டுவா என மேய்த்துக் கொண்டிருந்தான். மன்னிப்புத் தான் கேட்கவில்லை பிறகும் என்னை ஒரு வேலைக்காரி போல் அதட்டுகிறானே என உள்ளுக்குள் எண்ணம் தோன்றினாலும் வெளியே சொல்ல நா எழவில்லை.

அம்மா சகோதரர்கள் இருக்கிறார்கள் தான். அம்மா கூட என்னை ஒருநாளும் அடித்ததில்லை. அனால் இதைப் போய் அவர்களிடம் சொல்ல முடியுமா. மகள் நன்றாக வாழ்கிறாள் என்னும் அம்மாவின் நம்பிக்கையை ஏன் கெடுப்பான் என்று எண்ணி பேசாமலே இருந்துவிட்டாள். அதுமட்டுமல்லாமல் உந்தத் திரைப்படங்களில் வருவது போலா என்னைச் செந்தில் கொடுமைப் படுத்துகிறார். இல்லையே என தனக்குத் தானே சமாதானம் செய்தும் கொண்டாள்.
 
 
 ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
 
 
 
இப்போதெல்லாம் செந்தில் பிள்ளைகளை அழைத்துக் கொண்டு கடைக்குப் போய் அவர்கள்  விரும்புவதை
வாங்கிக் கொடுக்கிறான். எதற்காக வீண் செலவு என்று இவள் கேட்டதற்கு நீ உன்ர  அலுவலைப் பார். வேலை செய்யிறாய் எண்ட திமிரோ உனக்கு. வெட்டித் தாட்டுப் போடுவன் என்று கூறிய பின் இவள் மேற்கொண்டு கதைப்பதில்லை. இப்ப கொஞ்ச நாட்களாகவே சாந்தினிக்குத் தலை வலி. ஒரு பக்கக் கன்னம் எல்லாம் வீங்கி கண்கள் எல்லாம் அறுந்து விழுந்துவிடுவதுபோல் வலி. வைத்தியரிடம் போனால் ஒன்றும் இல்லை என்று தலைவலி மாத்திரையைத்தான் தருகிறார். உங்களுக்குச் சரியான வேலை போல் இருக்கு கொஞ்ச நாட்கள் ஓய்வெடுங்கள் என்கிறார். உடலுக்கு ஓய்வு கிடைத்ததாலும் மனதுக்கு ஓய்வு
கிடைக்காதென்பது அவளுக்கு மட்டுமே தான் தெரியும்.

செந்திலுக்கு கணனியுடன் கூடிய அறை ஒன்று உண்டு. என் அறைக்குள் ஒருத்தரும் வரவேண்டாம்
என்று அவன் கூறியதால் இவள் பிள்ளைகளைப் போக விடுவதில்லை.. தானும் போவதில்லை. பிள்ளைகளைப் பற்றித் தெரியும்தானே. ஒன்றைச் செய்யாதே என்றால்தான் செய்ய முனைவார்கள். அதிலும் கடைசி மகன் சொல்லத் தேவை இல்லை. அவனுக்குக் கணணி என்றால் போதும். அனால் ஒருநாள் அவன் மாறி எதையோ செய்து ஒருநாள் முழுவதும் செந்தில் அதனுடன் மல்லுக்கட்டி சரி செய்தானாயினும் மகனுக்கு முதுகில் கொடுத்த அறையில் அதிர்ந்த மகன் அப்பாவின் அறைப்பக்கம்
எட்டியும் பார்ப்பதில்லை.

ஆனால் இப்ப கொஞ்ச நாள் பெண் பிள்ளைகள் இருவரும் சாதாரணமாக அவனறைக்குப் போய் வருவதைப் பார்த்து அவளுக்குப் பதைபதைப்பு. அப்பா திட்டப் போறார் என்று இவள் கூறியதற்கு அப்பா
எங்களுக்குத் திட்ட மாட்டார் என்றது இரண்டாவது மகள். தந்தைமாருக்கு  பெண் பிள்ளைகளில் பாசம் இருப்பது இயல்புதான் என இவளும் இருந்துவிட்டாள்.


கடந்த வாரம் இப்பிடித்தான் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தாள். இரண்டாவது மகள் தகப்பனின் அறைக்குள் இருந்து சிரித்தபடி ஓடிவந்தாள். இவள் ஏன் சிரிக்கிறீர்கள் என்று கேட்டதற்கு சின்ன மகள் சொல்லிவிட்டு ஓடிய வார்த்தைகளைக் கேட்ட   இவளுக்கு அதிர்ச்சியில் ஒன்றும் ஓடவில்லை. தன் மகள் என்ன சொன்னாள் என்றதில் கூட சந்தேகம் வந்துவிட்டது. அவள் எதோ சொல்ல எனக்குத்தான் மாறி
விளங்கியதா என்று புரியவுமில்லை. எல்லாமே மரத்துப் போனதுபோல் இருந்தது அவளுக்கு. அவசரப்பட வேண்டாம் என மூளை எச்சரித்தாலும் மனம் கிடந்தது அடித்துக் கொண்டது. 
 
அதன் பின் தொலைக் காட்சி ஓடிக்கொண்டிருந்ததே தவிர அவள் மனம் எதை எதையோ கற்பனை செய்ததில் கண்ணை கட்டிக் காட்டில் தனித்து விடப்பட்டதுபோல் இருந்தது. மூத்த மகளை கூப்பிட எண்ணினாலும் கூப்பிட அச்சமாகவும் இருந்தமையால் கொஞ்ச நேரம் அப்படியே இருந்தாள். ஒரு அரை மணி நேரம் போயிருக்கும். நேரம் செண்டு போச்சு வாங்கோ பிள்ளையள் படுக்க என்று  தன் துணிவை எல்லாம் திரட்டிக் கூப்பிட்டவள் மகள் அறையிலிருந்து வந்ததும் அவர்களது அறையில் படுக்க விட்டுவிட்டு தன்அறைக்குச் சென்றாள். இரவு முழுதும் தூங்க முடியவில்லை.
 
நள்ளிரவு இரண்டு மணியாகியும் செந்தில் அறைக்குள் படுக்க வரவில்லை. என்னதான் செய்கிறான் என்று பார்ப்போமா என அவளால் எண்ணத்தான் முடிந்ததே தவிர கட்டிலை விட்டு எழவே முடியாது  உடலும் மனமும் சோர்ந்துபோய்க் கிடந்தது. நான் எந்தத் தவறும் செய்யவே இல்லை ஏன் பயப்படுகிறேன்  மனம் ஓலமிட்டது. இரவில் கடைசிவரை எதையும் பற்றி நினைக்கவே கூடாது. ஒரு சிறு துரும்பே மலையாய் பிரமாண்டமாகிப் பயம்  கொள்ள வைக்கும் தன்மை இந்த இருட்டுக்கு உண்டு. எனவே நாளை காலை பார்த்துக் கொள்ளலாம் என தன்னைத் தானே அமைதிப் படுத்தியபடி தூங்கிவிட்டாள்.



தொடரும்................

காலையில் மணிக்கூடு துயிலெழுப்ப எழுந்தவள் பக்கத்தில் கணவன் படுத்திருப்பதைப் பார்த்தாள். சின்ன மகள் சொன்னது எனக்கு விளங்கவில்லையா? நான் நினைப்பதுபோல்  இருக்காது எனத் தன்னைத்தானே சமாதானம் செய்தவளாக வழமையான வேலைகளில் ஆழ்ந்தாள்.

வேலையினூடே யோசித்ததில் முன்புபோல் தன்  கணவன் தன்னை நாடுவதில்லை  என்பதும் நினைவில் உறுத்தியது. முன்பெனில் அடிக்கடி இவளைத் தொந்தரவு செய்வான். இவளுக்குப் பிடிக்குதோ பிடிக்கவில்லையோ தன் விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்வதில் குறியாக இருப்பான்.

ஆனால் இப்ப கொஞ்ச நாட்களாக அவன் பெரிதாகத் தொந்தரவு செய்வதில்லை. இவளும் தொல்லை தீர்ந்தது என்று இருந்துவிட்டாள். இப்ப நினைத்துப் பார்த்தபோது அப்படி இருக்குமோ இப்படி இருக்குமோ என பலதையும் எண்ணி இவள் மனம் குமைந்தது. இப்படி ஒரு நிலை எந்தப் பெண்ணுக்கும் வரக்கூட்டாது என்று கடவுளை வேண்டத்தான் முடிந்தது.

ஒரு வாரம் மன உளைச்சலோடு சென்றது. பிள்ளைகள் அவன் அறைக்குச் செல்லும் போது இவளும் சும்மா போவதுபோல் எட்டிப் பார்ப்பாள். பிள்ளைகளுடன் சேர்ந்து அவன் கணனியில் விளையாட்டுகள் விளையாடிக் கொண்டிருப்பான். அவள் மேற்கொண்டு அங்கு நிற்காது வந்துவிடுவாள்.

கணவன் வேலைக்குப் போன காலங்களில் பிள்ளைகள் அவளுடனேயே தான் எப்போதும். இப்ப அவள் வேலைக்குப் போவதனால் முன்புபோல் பிள்ளைகளுடன் நேரம் செலவழிக்க முடிவதில்லை. சனிக் கிழமைகளில்  வீடு முழுதும் சுத்தம் செய்து, உடுப்புகள் தோய்த்துப் போட்டு, வீட்டுக்குத் தேவையான பொருட்கள் வாங்கிப்போட்டு, அதன்பின் சமையல் சாப்பாட்டுடன் மாலை வந்துவிடும். மகன் மட்டும் இவளுடன் தொத்திக் கொண்டு கடைக்குச் செல்வான். மற்றவர்களைக் கூட்டிப் போவதில்லை.
பிறகு அவர்கள் கேட்கும் பொருட்களை எல்லாம் வாங்கிக் கொடுக்கும் படி ஆகிவிடும். அதனால் அவர்களை விட்டுவிட்டு செல்வாள். நேற்றுப் போகும் போது வழமைக்கு மாறாக பெண் பிள்ளைகளைக் கேட்டாலும், அப்பாவுடன் நாங்கள் பிறகு போகிறோம் என அவர்கள் மறுத்தது வலிக்கத்தான் செய்தது.

இப்பிடியே ஒரு மாதம் ஓடிப் போனது. அன்று இவளுக்கு வேலையும் அதிகம். தலைவலி வேறு மண்டையைப் பிளந்தது. நெடுக உந்தக் குளிசைகளைப் போட வேண்டாம் என்று வைத்தியர் கூறியதால் ஒன்றை மட்டும் போட்டுவிட்டு, தலை இடிக்குது. வெள்ளனப் படுக்கப் போறன். நீங்களே போட்டுச் சாப்பிடுங்கோ என்று கணவனின் அறை வாசலில் நின்று சொல்லிவிட்டு போய்ப் படுத்துவிட்டாள்.

இஞ்சித் தேநீர் ஒன்று குடித்தால் நன்றாக இருக்கும் தான். ஆனால் ஊத்தத்தான் பஞ்சியாக இருக்கு. சில வேளைகளில் இவள் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டு இருக்கும் வேளைகளில் தேநீர் ஊற்றிக் கொண்டு வந்து தந்திருக்கிறான்தான். அதற்காக இவளாக ஒருநாளும் கேட்பதில்லை.

கன நேரமாகத் தூங்க முடியாது புரண்டுபுரண்டு படுத்தவள் கண்ணயர்ந்துவிட்டாள். கனவுகள் அவளைத் துரத்துகின்றன. வனாந்திரத்துள் ஓடுவதாய், யாரோ துரத்துவதாய். அவளுக்கு சத்தம் கேட்கிறது. வேண்டாம் அப்பா,விடுங்கோ அப்பா என்று. யாரின் குரல்? என் மகள் போல் இருக்கிறதே!  மகளைக் காப்பாற்ற வேண்டும் என்னும் எண்ணம் உந்த எழுகிறாள். கால்களை எடுத்துவைக்க முடியவில்லை.

கனவா நனவா தனக்கு நடப்பது என்றுமே அவளால் தீர்மானிக்கவும் முடியவில்லை. எப்படி எழுந்தாள் எங்கே
வந்தாள் என்று அவளுக்குப் புரியும் முன்னர் அடுத்த அதிர்ச்சி அவளைத் தாக்கியதில் ஒரு செக்கன் அவளின் சுவாசம் நின்று மீண்டும் துடிக்க ஆரம்பிக்க டேய்..... என்று ஆவேசமாக அலறியபடி மகளின் கட்டிலில் இருந்த கணவனை இழுத்துக் கீழே தள்ளினாள். அம்மா அம்மா என்று இவளுடன் ஒன்றிய மகளை இறுக அணைத்தபடி நீயெல்லாம் ஒரு மனிசனோ வெளியில போ என்று கத்த அவன் வெளியே சென்றது தான் தாமதம் ஓடிப் போய் கதவைப் பூட்டினாள்.

இதெல்லாம் பெரிய விசயமில்லை. வெளிய சொன்னால் உனக்குத் தான் கேவலம் கதவைத் திற என்றபடி
அவன் கதவை இடிக்கத் தொடங்கினான். அவளுக்குப் பயத்தில் என்ன செய்வது என்றே தெரியவில்லை. அவன் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே வந்தால் அந்த மிருகம் என்னவும் செய்யலாம். தொலைபேசியும் அறைக்குள் இல்லை. என்ன செய்வது? என்னைக் கொன்று போட்டாலும் ஒருவரும் ஒன்றும் செய்ய முடியாது. அவளுக்குப் பதட்டத்தில் கையும் ஓடவில்லை. உடனே ஏதாவது செய் என்று மூளை கட்டளை இட
யன்னலைத் திறந்து உதவி  உதவி என்று கத்துகிறாள். நேரம் சாமமோ என்னவோ எங்கும் இருளாக இருக்கிறது. அவன் தொடர்ந்து கதவை இடிப்பதை நிறுத்திவிட்டான்.

ஏன் நிறுத்திவிட்டான் என அவள் எண்ணிக் கொண்டிருக்கும் போதே திறப்புப் போடும் இடத்தருகே கிறீச், கர், புர் என்று சத்தம் கேட்கிறது. ஐயோ அவன் கதவுப் பிடியைக் களற்றுகிறான். என்ன செய்வது? இவர்களின் அறைக்கு நேரே கீழே மற்றக் குடும்பத்தின் யன்னல். இவள் எட்டி எட்டிப் பார்த்துக் கத்துகிறாள். எந்த அசுமாத்தமும் இல்லை. மகளின் அறையில் இருந்த விளையாட்டுப் பொருட்களை யன்னலை நோக்கி எறிகிறாள். பதட்டத்தில் எறிவது எங்கோ போய் விழுகிறது. கிடந்த மேசை விளக்கை கழற்றி கவனமாக
யன்னலுக்கு எறிகிறாள். கலீர் என்று சத்தம் கேட்கிறது. காப்பாத்துங்கோ, காப்பாத்துங்கோ எனக் கத்துகிறாள்.

கீழ் வீட்டில் வெளிச்சம் தெரிகிறது. அவளின் மனதில் நம்பிக்கையின் கீறல் விழு  முன்பே  இங்கு கணவன்
கதவை நெம்பித் தள்ளியபடி உள்ளே வருகிறான். மகள் இவளை இறுகப் பற்றியபடி நிற்க ஆக்களைக் கூப்பிடுறியோ நாயே என்று உறுமியபடி இவளின் கழுத்தைநெரிக்கிறான். இவளுக்கு மூச்சு முட்டுகிறது. கத்த முனைகிறாள். விசித்திரமான சத்தம் மட்டும் கேட்கிறது. கொஞ்சம் கொஞ்சமாக அவள் கைகளும் கால்களும்
வலுவிழக்க தொப்பெனக் கீழே விழுகிறாள்.


தந்தை தாயின் கழுத்தை நெரிப்பதையும், தாய் உணர்வற்று மரம்போல் கீழே
விழுவதையும் பார்த்த அந்த மகள் பயத்தில் தன்னையும் தந்தை ஏதாவது
செய்துவிடுவார் என எண்ணி, கதவைத் திறந்து கொண்டு வெளியே ஓடியது. மகள் ஓடும்
சத்தம் கேட்ட அவன் மகளைப் பிடிப்பதற்காய் தானும் படிகளில் இறங்கி
ஓடுகிறான். மகளோ கீழ் வீட்டுக் கதவைத் தட்டுகிறாள். தகப்பன் ஓடிப்போய் மகளை
எட்டிப் பிடிக்கவும் கீழ் வீட்டினர் கதவைத் திறக்கவும் சரியாக இருக்கிறது.

ஒன்றுமில்லை என்றுவிட்டு அவன் மகளின் கையைப் பிடித்து இழுக்க, மகள் இவர்களின்

கையை எட்டிப் பிடிக்க, பயத்துடன் காணப்பட்ட அந்தப் பிள்ளையின் முகமும்,
கோபத்துடன் இருந்த அந்த காமுகனின் முகமும் அவர்களுக்கு எதோ தவறு நேர்கிறது
என்பதை சொல்லிவிடுகின்றது.

பிறகென்ன அவர்கள் உடனே போலீசுக்குத் தகவல் தர, அவர்கள் உடனே வந்ததால்  சாந்தினியின் உயிர் காப்பாற்றப்பட்டு அவனை சிறையிலும் போட்டாயிற்று. ஆனால் கவுன்சில் பிள்ளைகள் மூவரையும்
பொறுப்பெடுத்து ஆறு மாதங்கள் சாந்தினியிடமே கொடுக்காது வைத்திருந்தனர்.
பின் அவளைப் பலமுறை விசாரித்து அவளிடம் தவறில்லை என நிரூபணமான பின்னரே
பிள்ளைகளைக் கொடுத்தனர். ஆனால் சாந்தினி பாவம் நத்தை போல் ஓட்டுக்குள்
சுருங்கி யாருடனும் அதிகம் பேசாது, பழகாது தானும் தன் பாடுமாய்..........
சகோதரர்களும் பெற்றோர்களும் அப்பப்ப வந்து போவதனால் மகிழ்வாகக் கழிய
வேண்டிய அவள் வாழ்க்கை...... எதோ போகிறது.

No comments:

Post a Comment