Saturday, 16 November 2013

கார் வாங்கப் போறம் - நாடகம்

முகத்தார் வீடு நாடகம் வாசித்ததில் இருந்து நானும் ஒன்று எழுத வேண்டும் என்று எண்ணினேன். அதுதான்...........



சாத்தர் : முனியம்மா, முனியம்மா 

முனியம்மா : என்ன இழவுக்கு இப்பிடிக் கத்திறியள். எத்தின தரம் சொல்லிப் போட்டன் முனியம்மா எண்டு கூப்பிட வேண்டாம் எண்டு. நான் மினி எண்டு என்ர பேரை மாத்தி எவ்வளவு நாளாச்சு. 

சாத்தர் : நீ என்ன தான் மாத்தினாலும் எனக்கு நீ முனிதான். இன்னும் நீ வெளிக்கிடேல்லையே ?

முனியம்மா  : பொறுங்கோ வாறன் கொஞ்சம் வடிவா வெளிக்கிட்டுக் கொண்டு வரவேண்டாமே.

சாத்தர் : அதுசரி. என்ன கலியாணத்துக்கே போறம். கார் வாங்கப் போறமப்பா.

முனியம்மா : கொஞ்சம் வடிவா வெளிக்கிட்டுப் போனால் என்னைப் பாத்திட்டாவது காசைக் கொஞ்சம் குறைச்சுசொல்லுவான்.

சாத்தர்: நீ அடிச்சிருக்கிற லிப்ச்டிக்கைப் பாத்திட்டு அவன் கூடச் சொல்லப்போறன். 

முனியம்மா  : உங்களுக்கு எப்பவும் பகிடிதான். 

சாத்தர்: மனதுக்குள் ( உண்மையச் சொன்னாலும் பகிடியா நினைக்கிறியே ) நான் உன்னோட பகிடி விடாம ஆரோட விடுறது.

முனியம்மா  : சரி அப்பா முதல்ல எந்தக் கடைக்குப் போவம்.

சாத்தர்: என்ன நீ எதோ உடுப்புக் கடைக்குப் போற மாதிரிக் கேட்கிறாய். இது காரப்பா கார்.

முனியம்மா  : உடுப்பே நாலுகடை ஏறி இறங்கி வாங்கிறம். காரை இன்னும் எத்தினை கடை ஏறி இறங்கி வாங்.கவேணும்

சாத்தர்: என்னதான் ஏறியிறங்கி வாங்கினாலும் கடைசியில எனக்கு வந்த கதிதானே அதுக்கும்.

முனியம்மா : என்னப்பா முணுமுணுக்கிறியள். கொஞ்சம் பிலத்துச் சொல்லுங்கோ.

சாத்தர்: ஒண்டுமில்லையப்பா சும்மா என்னுக்குள்ள கதைச்சனான்.

முனியம்மா : வரவர நீங்கள் உங்களுக்குள்ளயே தனியக் கதைக்கிறியள். ஒருக்கா டாக்டர் இட்டை உங்களைக் கூட்டிக் கொண்டு போக வேணும்.

முனியம்மா காருக்குள் ஏறி கதவை அடித்துச் சாற்றுகிறார்.

சாத்தர்: மெதுவாச் சாத்தப்பா. நீ அடிக்கிற அடியில கார் கதவு களரப் போகுது.

முனியம்மா : அடிச்சுச் சாத்தினால்தான் நான் விழாமல் இருக்கலாம். எப்ப கதவு திறக்கும் எப்ப டிக்கி திறக்கும் எண்டு உங்களுக்கே தெரியாது. எதுக்கும் வடிவாக் காரை ஓடுங்கோ.

சாத்தர்: நீ சத்தம் போடாமல் வந்தாலே கார் ஒழுங்காப் போகும். வாய் திறக்காமல் வா.

முனியம்மா : எந்த இடத்துக்குப் போறியள்  எண்டு சொல்லுங்கோ. அந்த இடம்  வரும் வரை நான் கதைக்கேல்லை.

சாத்தர் : அதுதான் லண்டனிலேயே பெரிய கார் கொம்பனி. வயிற் சிற்றியில  இருக்கிறது.

முனியம்மா  : அதோ அப்பா! இண்டைக்குத் தான் நீங்கள் உருப்படியா ஒண்டு செய்யிறியள். 

சாத்தர்: உனக்கேத்ததெண்டா உந்த வசனத்தை எத்தினை தரம் எண்டாலும் சொல்லுவாய்.

முனியம்மா  : தேவையில்லாமல் கதைக்காமல் ரோட்டைப் பாத்துக் காரை ஓட்டுங்கோ.

சாத்தர்: இந்தக் காருக்கு என்னப்பா குறை. அஞ்சு வருசமா வச்சிருக்கன்.

முனியம்மா  : நீங்கள் அஞ்சு வருசமா வச்சிருக்கிரியள். கார் பத்து வரிசப் பழசு.

சாத்தர்: நீயும்தான் பத்துவரியப் பழசு. அதுக்காக நான் மாத்திப் போட்டனே? கார் ரோட்டில ஓடுதுதானே. பிறகென்ன??

முனியம்மா  : நானும் காரும் உங்களுக்கு ஒண்டாப் போட்டமே ஆ..... ஓடுதுதான்.  உதிலும் பாக்க சிலோனில இருந்து ஒரு மாட்டு வண்டில்
வாங்கிக்கொண்டு வந்து ஓட்டியிருக்கலாம். வாறவன் போறவன் எல்லாம் ஓவடேக் செய்துகொண்டு போறாங்கள்.


சாத்தர்: இப்ப உன்ர அரியண்டத்தாலதான் வேற கார் எடுக்க ஓமெண்டனான்.எனக்கு இந்தக் கார் காணும்.

முனியம்மா : அவளவள் கோவிலுக்கு பென்சிலையும், BMW விலையும் வந்திறங்க, நான் மட்டும் இந்த டப்பாக் கார்ல போறனான்.

சாத்தர்: எந்தக் கார்ல போனா என்ன உனக்கு அவை வீட்டுச் சாப்பாடே. ஒழுங்கா உழைச்சு உந்தக் காருகள் ஓடுறவை குறைவு. கள்ளக்காட் போடுறவனும், கவுன்சில் க்ளைமில இருக்கிறவங்களும் தான் சும்மா வாற காசைச் சேத்துவச்சு உப்பிடியான காறுகள் வாங்கிறது .

முனியம்மா : கள்ளக்காட் போடவும் துணிவு வேணுமெல்லோ.

சாத்தர்: என்னை உள்ள தள்ளிறதிலேயே குறியா இரு. நல்லதுக்கு இப்ப காலமில்லை.

முனியம்மா : என்னும் எவ்வளவு நேரமப்பா???

சாத்தர்: வந்திட்டம் இன்னும் நாலு மைல் தான். 


~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~


முனியம்மா:  ஐயோ இவ்வளவு காருகள் நிக்கிது.

சாத்தர்: எடி எடி ஆத்தா, காரைப் பாக் பண்ணின பிறகு இறங்கு. பிறகு உன்னை வேணுமெண்டு கொலை செய்யப் பாத்ததெண்டு நான்தான் உள்ளுக்குப் போகவேண்டி வரும்.

முனியம்மா : கெதியா வாங்கோப்பா.

சாத்தர்: அவசரப்பட்டு ஓடி என்ன செய்யப் போறாய்? ஆறுதலா ஒவ்வொண்டாப் பாப்பம்.

முனியம்மா : இன்சரப்பா இது நல்ல வடிவா இருக்கப்பா. இதை எடுப்பமே?

சாத்தர்: உது நாலாயிரம் போட்டிருக்கிறான்.உந்த விலை எங்களுக்குச் சரி வராது. அங்கால வா.

முனியம்மா : இது இன்னும் நல்லா இருக்கப்பா இதை வாங்குவம்.

சாத்தர்: கொஞ்சம் பொறப்பா. எல்லாத்தையும் பாத்திட்டு முடிவு செய்வம்.

முனியம்மா  : இன்சரப்பா இந்தக்கார் எவ்வளவு பெரிசு ஓடினா இப்பிடிக் காறேல்லோ ஓடவேணும்.

சாத்தர்: காரே ஓடத் தெரியாது அதுக்குள்ளே நினைப்பை பார்.

முனியம்மா : உந்தக் கார் ஓடத் தெரியாத கதை இனிமேல் கதைக்கக் கூடாதெண்டு அண்டைக்குச் சொன்னனான் எல்லே.

சாத்தர்: ஒண்டில்ல இரண்டில்ல எட்டுத் தரமெல்லெ பெயில் விட்டனி.

முனியம்மா : நான் ஒண்டும் செய்ய மாட்டன் எண்ட தயிரியம் உங்களுக்கு.

சாத்தர்: பின்ன, இஞ்ச சட்டி பானை ஒண்டும் இல்லை. காரும் வேண்டாம் ஒண்டும் வேண்டாம் வாங்கோ போவம் எண்டு சொல்லு பாப்பம்.

முனியம்மா : எனக்கென்ன விசரே. எப்பிடியும் வீட்டில வந்துதானே இருக்கப் போறியள். பிறகு பாத்துக் கொள்ளுறன்.

சாத்தர்: சரியப்பா கோவிக்காதை உன்னோட பகிடி விடாமல் நான் ஆரோட விடுறது.

முனியம்மா : இது நல்ல வடிவான காரப்பா இதைத்தான் கட்டாயம் எடுக்கிறம்.

சாத்தர்: போடி இவளே. காரின்ர  விலையைப் பாத்தனியே? வடிவாம் வடிவு. வடிவை வச்சு என்ன செய்யிறது.

முனியம்மா : ரோட்டில ஓடிக்கொண்டு போகேக்க நாலுபேர் பாப்பினமெல்லெ.

சாத்தர்: ஓ பாப்பினம். பாத்திட்டு வந்து அவதான் பெற்றோல் அடிக்கப் போயினம் உன்ர காருக்கு. இந்தக் காருக்கு பெற்றோல் அடிச்சுக் கட்டுமே. அதோட நான்  ரேசே ஓடப் போறன் இந்தக் காரை வாங்கி.

முனியம்மா : உங்களுக்கு உந்தக் கஞ்சத்தனம் போகவே போகாது.

சாத்தர்: மூவாயிரம் பவுன்ஸ் கொண்டு கார் எடுக்க வந்திருக்கிறன். என்னைக் கஞ்சன் எண்ணிறாய்.

முனியம்மா : இஞ்ச ஒரு காரையும் மூவாயிரத்துக்குள்ள காணேல்லையே அப்பா.

சாத்தர் :அதுதான் நானும் யோசிக்கிறன். வேற கடைக்குப் போவம் வா முனி.

முனியம்மா : இத்தன காருகள் இருக்கு. இத விட்டிட்டு வேறை கடையோ. இண்டைக்கு இங்கதான் கார் எடுக்கிறது.

சாத்தர் : காசில்லாமல் என்னண்டப்பா கார் தருவாங்கள் ?

முனியம்மா : காட் குடுத்தாலும்  தருவாங்கள்.

சாத்தர் : நான் காட்டைக் கொண்டு வரேல்லை.

முனியம்மா : நீங்கள் உப்பிடிச் சொல்லுவியள் எண்டுதான் உங்கட காட்டை நான் எடுத்துக் கொண்டு வந்தனான்.

சாத்தர் : மனதுள் (இவளுக்குத் தெரியாமல் ஒளிச்செல்லோ வச்சனான். என்னண்டு எடுத்தவள்) நானே காட்டைக் காணேல்லை எண்டு தேடினனான். எங்க இருந்ததப்பா.

முனியம்மா : என்ர உடுப்பு அலுமாரிக்குள்ளேயே  எனக்குத் தெரியாமல் ஒளிச்சு வைக்கிரியள்  என்ன?

சாத்தர் : நான் ஏனப்பா ஒளிச்சு வைக்கிறான். கை தடுமாறி வச்சிருப்பன்.

முனியம்மா : அப்பிடி வச்சதும் நல்லதாப் போச்சுப் பாத்தியளே.

சாத்தர் : இவளின்ர உடுப்புக்குக் கீழ வச்சால் எடுக்க மாட்டாள் எண்டு நினைச்சா. கோதாரி என்ர கேடுகாலம் போயும் போயும் கார் வாங்க வாற நேரமே இவளின்ர கையில காட் கிடைக்க வேணும்.

முனியம்மா : திரும்ப என்னப்பா முனுமுனுப்பு?

சாத்தர்: ஒண்டும் இல்ல இண்டைக்கு ஆற்ற கண்ணில முளிச்சனான் எண்டு யோசிக்கிறான்.

முனியம்மா : வீட்டில இருக்கிறது நானும் நீங்களும்தான். இதில ஒண்டில் என்னில முழிச்சிருக்க வேணும். அல்லது சுவரிலையோ முகட்டிலயோதான் முளிச்சிருப்பியள் .

சாத்தர் : இண்டைக்கு எதோ நினைப்பில உன்னில முழிச்சிட்டன் போல கிடக்கு.

முனியம்மா : என்னில முளிச்சபடியாத்தான் இண்டைக்கு புதுக் கார் வரப்போகுது.

சாத்தர்: கூடவே கடனும் ஏறப்போகுது.

முனியம்மா : உயிரோட இருக்கேக்க ஆசைப்பட்டதை  அனுபவிச்சுப் போடவேனுமப்பா.

சாத்தர் : உதச் சொல்லிச் சொல்லி நீயே எல்லாத்தையும் அனுபவிக்கிறாய். நான் உழைச்சு உழைச்சு ஒடாத் தேயிறன்.

முனியம்மா : உடன உங்கட புராணம் பாட வெளிக்கிடாதைங்கோ. வாங்கோ அங்காலையும் போய்ப் பாப்பம்.

சாத்தர் : இதோட நிப்பாட்டுவம். அங்கால சரியான விலை கூடின காருகள் தான் இருக்கு.

முனியம்மா : நெடுகவே அப்பா எடுக்கப் போறம். இங்க இதைப் பாருங்கோ. நீங்கள் சொன்ன மாதிரி டீசல் கார். எனக்குப் பிடிச்ச கறுப்புக் கலர். பிறகென்ன ? 

சாத்தர்: விலையைப் பாத்தனியே? ஐயாயிரத்தி எழுநூற்றி ஐம்பது 

முனியம்மா : அதுக்கென்ன. எனக்கு இந்தக் கார்தான் வேணும்.

சாத்தர் : மினி சின்னப் பிள்ளை மாதிரி அடம் பிடிக்காதை. உந்தக் காசுக்கு எடுத்துப் போட்டு வட்டி கட்டவே எக்கச்சக்கம் வந்திடும்.

முனியம்மா : மினி எண்டு கூப்பிட்டா நான் உடன நீங்கள் சொல்லுறதுக்குத் தலை ஆட்டுவன் எண்டு நினைச்சியளே. இந்தக் கார்தான் வேணும்.

சாத்தர் : இதுக்கு மாதா மாதம் தீனி போட்டுக் கட்டாதெடியப்பா.

முனியம்மா : நான் ஆசைப்பட்டது எதைத்தான் ஒழுங்கா வாங்கித் தந்தனியள்.

முனியம்மா கண்ணைக் கசக்குகிறார்.

சாத்தர் : ஆக்கள் பாக்கினம் அழாதை. எதோ நான் உன்னைக் கொடுமைப் படுத்திறதெண்டுநினைக்கப் போறாங்கள். அழுதழுது உன்ர ஆசை எல்லாத்தையும் நிறைவேத்திப் போடுறாய். ( நீண்ட பெருமூச்சு விடுகிறார் சாத்தர்)

முனியம்மா : நான் உங்களை விட்டா ஆரிட்டையப்பா கேக்கிறது?

சாத்தர் : இண்டைக்கு வர முதல் என்ர பலனைப் பாத்துப் போட்டு வெளிக்கிட்டிருக்க வேணும். ம் ...........



No comments:

Post a Comment