எனக்கு எமது உணவுகள் எல்லாமே பிடிக்கும். அதில் பிட்டு மிக விருப்பமானவற்றில் ஒன்று. பிட்டைக் கூட ஒவ்வொரு பெண்களும் ஒவ்வொருமாதிரி அவிப்பார்கள். நிறையக் கொதிநீர் விட்டு அவிக்கும் பிட்டு, கொதிநீர் குறைத்து விட்டு அவிக்கும் பிட்டு,வெள்ளை மாப்பிட்டு, குரக்கன்பிட்டு, கீரைப்பிட்டு என எனக்குத் தெரிந்தது.
இன்னும் வேறும் இருக்கலாம்.
இதைக் கூட பிட்டுக் குழலில் அல்லது வேறு நீராவி உட்செல்லக்கூடிய ஒரு பாத்திரத்தில் போட்டு அவிப்பார். எனதுமுறை எப்போதும் முதலாவதுதான். குழல் பிட்டுக்கென்றே தனிச் சுவை உண்டென்பது எல்லோரும் அறிந்ததுதான்.
எனக்கு குறைந்த நீர் விட்டு பஞ்சுபோல் இருக்கும் பிட்டுத்தான் பிடிக்கும். ஏனெனில் என் அம்மா அப்படி அவித்து அவித்து எனக்கும் அதுவே பழகிவிட்டது.
திருமணமான ஆரம்ப காலங்களில் நானும் அம்மாவைப் போன்றே உலிர் பிட்டை அவிப்பேன். ஒன்றிரண்டு தடவைகளின் பின் கணவர் தன் தாய் இப்படி அவிப்பதில்லை. அம்மாவைப் போல் அவி என்று ஒவ்வொரு முறையும் பிட்டவிக்கும் போதும் கூறியதனால், நானும் சரி என்று சுடுநீர் கொஞ்சம் அதிகம் விட்டு கணவருக்குப் பிடித்தது போன்றே அவித்துக் கொடுத்தேன்.
கணவருக்கோ மிகுந்த மகிழ்வு. அம்மா மாதிரியே அவிக்கிறாய் என ஒன்றுக்கு மூன்றுதரம் சொல்ல, எனக்கு உள்ளுக்குள் என் சுவையில் அவிக்க முடியவில்லையே என்ற கவலை இருந்தும் கணவர் மகிழ்வாக உண்கிறாரே என்னும் நிறைவில் அப்படியே அவிக்க ஆரம்பித்தேன்.
இருந்துவிட்டடு எப்பவாவது ஆசை வரும்போது எனது விருப்பத்துக்கு அவித்து வைத்தால் கணவர் வேண்டா வெறுப்பாகவே அதை உண்டு முடிப்பார். என் கணவரைப் பொருத்தவரை எந்த உணவெனினும் உண்ணக் கூடியவர். ஆனாலும் பிட்டு விடயத்தில் மட்டும் முரண்டு பிடிப்பார்.
இன்று காலை பிட்டு அவிக்கும் போது எனக்கு விருப்பமானதுபோல் பிட்டை அவிப்போமா? என ஒரு கணம் யோசித்துவிட்டு, எதற்கும் வேண்டாம் என மனம் சொல்ல கணவருக்குப் பிடித்த முறையில் அவித்து முடித்தேன்.
அவித்துக் கொண்டிருக்கும் போதுதான் யோசித்தேன். பெண்கள் இப்படி எத்தனையோ சின்னச் சின்ன ஆசைகளைக் கூட கணவனுக்காக விட்டுக் கொடுக்கிறார்கள் அல்லது இழக்கிறார்கள் என்று.
பிட்டு ஈழத்து உணவென இத்தனை நாள் எண்ணியிருந்தேன். இணையத்தில் படத்தைத் தேடினால் வரவே இல்லை. கேரளப் புட்டு என்று தேடியபோதே படம் வந்தது.
அதுசரி பிட்டு ஈழத்து உணவா??? கேரளத்து உணவா ???
No comments:
Post a Comment