Saturday, 16 November 2013

எத்தனை மரங்கள் தாவும்

தர்சினி லண்டனில் பிறந்து வளர்ந்தவள். அழகானவள். தன்னம்பிக்கை மிக்கவளும் கூட. ஆனால் இப்ப ஒரு மாதமாகத்தான் அவளது நம்பிக்கை தடம்புரண்டு போனதில் தன்மீதே நம்பிக்கை அற்றவளாகி செய்வது அறியாது தவிக்கிறாள்.

பெற்றோர்கள் அவளை எப்படிப் பொத்திப் பொத்தி வளர்த்தனர். அவளும் பெற்றோர் சொல் கேட்டு ஒழுங்காக வளர்ந்தவள் தான். இப்ப கொஞ்ச நாட்களாக குற்றம் செய்யும் உணர்வு. சதீசை என்று சந்தித்தாலோ அன்று பிடித்தது சனி. அடிக்கடி தாய் சொல்வதுதான் உந்த பேஸ் புக் நல்லதில்லை அம்மா. நெடுக உதுக்குள்ள கிடக்காதேங்கோ என்று. அப்ப விளங்கவே இல்லை.

பேஸ் புக் இல் சதீசை பார்த்த உடனேயே இவளுக்கு மனம் தடுமாற தொடங்கிவிட்டது. அவனும் எப்ப பார்த்தாலும் சற் பண்ண தயாராக இருப்பான். இவளும் நிர்பாட்டுவதில்லைத்தான். ஆனாலும் எந்நேரமும் அவனுடன் உரையாடச் செல்வதில்லை. இவளைச் சீண்டியபடி சதீசிடமிருந்து குறுந்தகவல்கள் வந்தவண்ணம் இருக்கும். இவள் எல்லாவற்றுக்கும் பதில் போடவில்லையாயினும் தொடர்ந்து அனுப்பிக்கொண்டே  இருப்பான்.

இவள் இத்தனை காலத்தில் பெற்றோரை விட்டுப் பிரிந்து வந்திருப்பது இதுவே முதற் தடவை. அவளுக்கு பல்கலைக்கழகம் தூர இடத்தில் கிடைத்தது அவளது துரதிஸ்ரம்தான் என்று இப்பதான் விளங்குகிறது. சதீஸ் கூட நகரத்தின் ஒரு  பல்கலைக்கழகத்தில் பயில்வதாகவே இவளுக்குக் கூறியிருந்தான். அவன் கூறியவற்றை எல்லாம் மடைத்தனமாக எப்படி எல்லாம் நம்பினாள்.

நல்ல காலம் இந்த  அளவில் தப்பித்ததே பெரிதுதான். அம்மாவுக்கு இந்த விடயம் தெரிந்தால் ........ நினைக்கவே பயமாக இருந்தது தர்சினிக்கு. முதலில் தொலை பேசி எண் கேட்டு அவன்தான் எழுதினான். இவள் முதலில் கொஞ்சம் யோசித்தால்தான். பிறகும் அவனின் குரலைக் கேட்போமே என அடிமனத்து ஆசை வெல்ல இலக்கத்தைக் கொடுத்தவள்தான். இன்று இப்படி வந்து நிற்கிறது.

இரவு பதினொன்று பன்னிரண்டு ஏன் விடிய மூன்று மணிவரை கூடத் தூங்காது அவனுடன் கதைத்ததை நினைக்க இப்ப வெறுப்பாக இருக்கிறது அவளுக்கு. எப்படி எல்லாம் பேசி என் மனத்தைக் கரைத்தான். அவனில் மட்டும் பிழை சொல்லி என்ன என்னிலும் தவறுதான். அம்மாவைப்போல் இலங்கையில் பிறந்த பெண்ண என்றாலும் பரவாயில்லை. இந்த நாட்டில் பிறந்துவிட்டு நல்ல பாடசாலையில் படித்தது நல்ல மதிப்பெண்களோடு பல்கலைக்கழகம் சென்ற எனக்கு சிந்திக்கத் தெரியவில்லையே என தன் மேலேயே கழிவிரக்கம் தோன்ற கண்களில் நீர் முட்டியது.

அப் பல்கலைக்கழகத்தில் தமிழர்களே இல்லாததும்தான் தன்னை அவன்பால் சாய வைத்ததோ? எல்லோருமே வேற்றினத்தவர். ஒரு சீன இனத்தவளும் ஒரு மலாய் பெண்ணுமே இவளுடன் நெருக்கமாயினர். இவளுக்கு ஏனோ அவர்களிடமும் பெரிதாக ஒட்டவில்லை. அதனால்த்தான் மனம்விட்டுப் பேச ஒருவன் கிடைத்ததும் மடங்கிவிட்டேன் என தன் மனதைச் சமாதானம் செய்துகொண்டாள்.

அம்மாவும் பாவம். வேலையுடன் வீட்டுவேலை சமையல். தம்பியைப் பார்ப்பது என எத்தனை எண்டுதான் செய்ய முடியும். ஒவ்வொரு நாளும் அதிகாலையில் இவளை போனில் எழுப்பி ஐந்து நிமிடமாவது கதைத்துவிட்டு வேலைக்கு இறங்கிவிடுவார். இதைவிட ஒரு தாய் என்னதான் செய்ய முடியும். படிப்பில மட்டும் கவனத்தை வையம்மா. அதுதான் கடைசிவரை கை கொடுப்பது என அடிக்கடி தாய் கூறுவதைக் கேட்க முன்பெல்லாம் எரிச்சல் வரும். திரும்பத் திரும்ப தாய் ஏன் கூறினார் என இப்போதான் விளங்குகிறது.

அன்று பேஸ் புக் இல் நண்பி ஒருத்தி அனுப்பியிருந்த விழா அழைப்பிதழைப்  பார்த்தவளுக்கு, உடனேயே ஒரு மகிழ்ச்சி எட்டிப் பார்த்தது. சதீஸ் படிக்கும் பல்கலைக்கழகத்தில் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற இருக்கின்றன. அனைத்து பல்கலைக்கழக மாணவர்களையும் வரும்படி அலைத்திருந்தனர். உடனே சதீசுக்கு தொலைபேசி எடுத்து நீயும் எதிலாவது பங்குபற்றுகிறாயா என்று இவள் கேட்டபோது இல்லை என்று ஆர்வமின்றிக் கூறினான் இவளை பாக்கவேணும் என நச்சரிப்பவன், இன்று வா என்று எதுவுமே கூறவில்லை.

அவன் கேட்டுக் கேட்டுச் சலிப்படைந்து விட்டுவிட்டான் என்றே இவள் எண்ணினாள். இம்முறை அவனுக்குச் சொல்லாமல் போய் அவன்முன் நின்று அவனை ஆச்சரியத்திலும் மகிழ்ச்சியிலும் ஆழ்த்தவேண்டும் என அவள் முடிவு செய்து கொண்டாள். தான் விழாவுக்கு வருவதை தன் நண்பிக்கு மட்டும் சொல்லி, யாருக்கும் கூறவேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டாள்.

அன்று காலையில் எழுந்து அழகான ஆடை அணிந்து,  சதீஸின் முகம் மகிச்சியில் எப்படி மாறும், ஓடிவந்து என்னை அணைத்துக் கொள்வானா?? முத்தம் தருவானா என்றெல்லாம் கற்பனயில் மிதந்தபடியே மூன்று மணிநேரத் தொடருந்துப் பயணத்தைக் முடித்து, தரிப்பிடத்தில் இறங்கியவள் மனம் சொல்லமுடியாத மகிழ்வில் துள்ளியது.

ஒரு பத்து நிமிடம் நடந்துதான் யூனிக்கு வரவேண்டியிருக்கும் என்று நண்பி கூறியதால், தன் போனில் நவியை ஒன செய்தபடி மனதில் எதிர்பார்ப்பும் படபடப்பும் சேர விரைவாக நடந்தாள்.

தூரத்தில் வளாகம் தெரிகிறது. சதீஸ் வந்திருப்பானா?? இன்னும் வரவில்லையா?? என எண்ணியபடி  நண்பிக்கு போன் செய்தாள். நண்பி வந்து இவளை அழைத்துக்கொண்டு மண்டபத்தை நோக்கிச் செல்கையில் தூரத்தில் சதீஸ் போல் இருக்கே என எண்ணிய வினாடியே மனதெங்கும் அடைக்க மீண்டும் வடிவாகப் பார்த்தவளுக்கு நெஞ்சில் கத்திக்கொண்டு குத்தியதுபோல் வலித்தது.

சதீஸ் ஒரு பெண்ணை அணைத்து முத்தமிட்டுக்கொண்டிருந்தான். இவளுக்கு ஒருகணம் கோபம், அவமானம், ஏமாற்றம் என அத்தனை உணர்வுகளும் ஒருசேர வந்தன. உடனேயே திரும்பிவிட நினைத்தவள் நண்பியை வா என்று கூடச் சொல்லாது விரைவாக  சதீஸ் இருக்குமிடம் சென்று, நீ எல்லாம் ஒரு மனிசனா என்று மட்டும் சொல்லிவிட்டு திரும்பி நடந்தாள்.

இவளின் நண்பிதான் இவள் பின்னால் ஓடிவந்து. தர்சினி நில்லு. என்ன நடந்தது என்று சொல்லிவிட்டுப் போ என இவளைப் பிடித்து நிறுத்தினாள். அவளுக்கு கோபத்தில் முகம் சிவந்து கண்களில் நீர் முட்டியது. அவன் நிற்குமிடத்தில் அழக்கூடாது என்று, வெளியே வா சொல்லுறன் என்று நண்பியின் கையை இறுகப் பற்றியபடி நடந்தாள்.

இது நடந்து இப்ப ஒரு மாதம் ஆகிறது. ஒருவாரம் அவள் பித்துப் பிடித்ததுபோல் தான் இருந்தாள். இப்ப சதீஸ் தெளிய வைத்துவிட்டான். அடுத்தநாளே இவளது போனுக்கு அவன் அழைக்க இவள் போனை நிப்பாட்டி வைத்துவிட்டாள். அவன் பேஸ் புக்கில் அவளுக்கு செய்தி அனுப்பினான். அவள் தொலைபேசியை எடுக்காவிடில் அவள் அவனுக்கு காதல் தலைக்கேறி இருந்தபோது அனுப்பிய குறுஞ் செய்திகளை எல்லாம் எல்லோரும் பார்க்கும்படி போடப்போவதாக.

அவளுக்குக் கோபம் வந்தாலும் என்ன செய்வது ,எப்படி இவனைக் கையாள்வது எனக் குழம்பிப் போனவளாக அவன் கூறியபடி போனை இயக்கினாள். எனக்கு உன்னைத்தான் பிடித்திருக்கு. நான் சும்மா விளையாட்டுக்குத்தான் அவளுக்கு முத்தமிட்டேன். என்னை நீ கண்டிப்பாகப் பார்க்கவேண்டும் என்றெல்லாம் தொலைபேசியில் மிரட்டுவதுபோல் கூறினான்.

போயும் போயும் இப்படி ஒருவனையா காதலித்தேன் என வேதனை கொண்டவள் ஒருவாறு முடிவுக்கு வந்தாள். தவறு செய்தது அவன் நான் ஏன் பயப்பட வேண்டும் என எண்ணியவள் காவல் நிலையம் செல்ல முடிவெடுத்து வீதியில் இறங்கினாள்.

ஊரோடும் உறவோடும் உயிரிற்கு மேலான மண்வாசனையோ

No comments:

Post a Comment