Saturday 16 November 2013

நினைவு சுடும்

சுசீலாவுக்கு இன்று கொஞ்சம் மனதுக்கு மகிழ்வாக இருந்தது. ஒரு வருடமாக
கொழும்பில் இந்தா அனுப்புறன் அந்தா அனுப்பிறன் என்று சொன்ன வெளிநாட்டு முகவர் இன்றுதான் இரண்டு நாளில் யேர்மனிக்கு அவளையும் மகளையும் அனுப்பி வைப்பதாக கூறியுள்ளான். கணவனுக்கு இன்று தொலைபேசியில் விடயத்தைச் சொன்ன போது அவனுக்கும் நின்மதியாகத்தன்  இருந்தது. இரண்டு மூன்று முறை முகவர்களுக்குக் காசு கட்டி ஏமாந்து இப்பதான் ஒரு நம்பிக்கையான ஆள் கிடைத்துள்ளான். அரைவாசிக் காசு முதல் குடுத்தால் சரி. மிச்சம் மனைவி வந்து
சேர்ந்தபிறகுதான். அதுகும் மனைவியின் தாயாரை கொழும்பில் பொறுப்புக்கு
விட்டுவிட்டுத்தான் வரவேணும்.

ஒரு வருடமாக மனிசி கொழும்பில வீடெடுத்துத் தங்கிஇருக்கிற செலவு இனி இல்லை என்று காந்தனுக்கும் சற்று ஆறுதலேற்பட்டது. இரண்டு பேரிடம் கடனும் வாங்கியாச்சு. நிரந்தர வதிவிடஉரிமை கிடைத்தபின் மனிசியைக் கூப்பிடலாம் என்றாலும் உங்களை விட்டிட்டு என்னால் இருக்க ஏலாது என்று ஒரே அழுகை. ஊரில போய் கலியாணம் செய்துபோட்டு வந்தாச்சு. மகள் ஒன்று பிறந்து மகளுக்கும் 3 வயதாகப் போகுது. மனிசி அழாமல் என்ன
செய்யும். மகளின் படத்தைப் பார்த்தாலே இவனுக்கு உடனே இலங்கைக்குப்
போகவேணும் போல இருக்கும். மகளின் கதைகளை ஒன்றும் விடாமல் சுசீலா ஒவ்வொரு வாரமும் எடுத்துக் கணவனுக்குக் கூறுவாள். அப்பா என்னும் மகளின் மழலைப் பேச்சைக் கேட்டுக்கொண்டிருக்கலாம்போல் இவனுக்கு இருக்கும். தொலைபேசியை வைத்தபின்னர், அன்றுமுழுவதும் மனம் சுசீலாவையும் பிள்ளையையுமே சுற்றிவந்து மனச் சோர்வை உண்டாக்கும்.  ஒரே பிரச்சனைகள். அங்கு தொடர்ந்து சுசி நிற்பதும் ஆபத்து என்பதால் இவன் நண்பர்களிடம் புலம்ப அவர்கள் தான் இந்தப் புது ஏயென்சியை  அறிமுகப் படுத்திவிட்டது. அவனின் நம்பிக்கை வீண்போகவில்லை விரைவிலேயே மனைவியை அனுப்பப் போகிறான் என எண்ணி தனதும் சுசீலா பிள்ளையுடனுமான ஆனந்தமான வாழ்வைக் கற்பனை செய்தபடியே வேலைக்குச் சென்றான்.

கனக்க ஒண்டும் கொண்டு வரவேண்டாம் எண்டு ஏயென்சி சொன்னதால பிள்ளைக்கு மட்டும் கொஞ்சம் தேவையானதை எடுத்த சுசீலா தனக்கு மிகச் சொற்பமான ஆடைகளையும் மிக அத்தியாவசியமான பொருட்களை மட்டும்தான் அடுக்கியிருந்தாலும் அதுவே ஒரு சூட்கேஸ் வந்துவிட்டது. மிகுதியாக இருந்த தனது ஆடைகளை எல்லாம் எடுத்து அனுப்புவதற்கு வசதியாக  அம்மாவிடம் கொடுத்துவிட்டாள். என்னதான் ஏயென்சி
அனுப்பிறன் எண்டு நம்பிக்கையாச் சொன்னாலும் போய் சேரும் மட்டும் அவளுக்கு நம்பிக்கை இல்லை. தப்பித் தவறி போறது சரிவராவிட்டால் பிறகு எல்லாம் புதிதாய் வாங்க வேண்டும். நானாவது சமாளிக்கலாம் மகள் சின்னப்பிள்ளை கஷ்டம். அதோட காந்தனும் பாவம்தானே என்னால அவருக்கு எவ்வளவு காசு நட்டம் எனத் தனக்குள் எண்ணிக் கொண்டாள்.

பலவித கற்பனைகளுடன் விமானத்தில் ஏறிய சுசீலாவுக்கு சிதம்பர சக்கரத்தைப் பேய் பார்த்தது போல் இருந்தது. இன்னொருவரின் மனைவியின் பாஸ்போட்டில் தான் அவளைக் கூட்டிக்கொண்டு போகிறார். அவளைக் கதைக்க வேண்டாமென்றும் இமிகிறேசனில் கேட்ட எல்லாவற்றிற்கும் இவள்
பெயரில் அவரே பதிலும் சொல்கிறார். விமானத்தில் ஏறி இறங்கும் வரைதான்
என்றாலும் இவளுக்கு அப்படி நடிக்கவே எதோ போல்தான் இருக்கு. ஆனாலும் என்ன செய்வது. கணவரிடம் போய் சேரவேண்டுமே. அதனால் எதையும் தாங்க வேண்டியதுதான். ஆனாலும் விமானத்தில் அந்த ஆளுக்குப் பக்கத்தில் இருக்க என்னவோ போல்தான் இருக்கு. அந்த ஆளும் பிரச்சனை இல்லைத்தான். ஆனால் தொண தொணவென்று ஏதாவது
கதைத்தபடி இருக்க இவளுக்கு எரிச்சலாக இருந்தது. கணவன் மனைவியாக நடிக்கிறம் அவங்களுக்குச் சந்தேகம் வரக்குடாது அதுதான் இப்பிடிக் கதைக்கிறன் குறை நினைக்காதைங்கோ என்றதும் நான் குறை நினைக்கவில்லை என்று இவள் உடனே கூறினாள். அதன்பின் மனம் கொஞ்சம் இலேசாகியது போன்று இருந்ததால் பொது விடயங்களைப்
பற்றி எல்லாம் கதைத்துக் கொண்டு வர முடிந்தது.

விமானம் நேரே யெர்மனிக்குத்தான் போவதாக மகிழ்வோடு இருந்த இவளுக்கு ரஷ்யாவில் இறங்கவேண்டும் என்றதும் இருந்த சந்தோசமெல்லாம்  வடிந்துவிட்டது. அப்ப எப்ப யேர்மனிக்குப் போவது என்று இவள் கேட்க, அதுபற்றி எனக்குத் தெரியாது. நான் உங்களை இறக்கிவிட்டுப் போய்விடுவன். அங்கு நிக்கும் மற்ற ஏயென்சிதான் உங்களை அங்காலை அனுப்புவார். ஆனால் வச்சு மினைக்கெடுத்த மாட்டினம். இரண்டு
மூன்று நாளில் அனுப்பிப் போடுவினம் என்று கூறியதும் மனம் நின்மதியடைந்தது.

அம்மாவும் பாவம் நான் போய்ச் சேர்ந்தால்தான் அவவுக்கும் நின்மதி. ஒரு வாருசமா வீடுவாசலை விட்டிட்டு என்னோடையே நிக்கிறா. அப்பாவும் ஊரில தனிய. தம்பியும் அப்பாவும் சாப்பிடுறதுக்கு என்ன கஷ்டப்படீனமோ. சரி இன்னும் இரண்டு மூண்டு நாள்தானே. கண்ணை மூடி முழிக்கப் போய்விடும் என்று எண்ணிக் கொண்டாள்.



சோபாவில் இருந்துகொண்டு எங்கோ வெறித்துப் பார்த்துக்கொண்டிருக்கும் மனைவியை தோளைப் பிடித்து உலுக்கினான். என்னப்பா நான் எத்தினை தரம் வீட்டு மணியை அடிச்சனான். நீர் திறக்கேல்லை. திறந்துகொண்டு வந்தா பிள்ளை அழுது கொண்டு இருக்கு எனக் கோபத்துடன் ஏசிய கணவனை நிமிர்ந்து பார்த்தாள் சுசீலா. நான் மகளை நினைச்சுக்கொண்டு இருந்தனான் என்று கூறிய மனைவியின் அருகில் அமர்ந்து அவள் தோளை ஆதரவுடன் அணைத்தான் காந்தன். மனைவியின் மேல் வந்த கோபம் உடனே பறந்தோடி விட்டது. இன்னும் நீர் அதை மறக்கேல்லையோ. உதையே நினைச்சுக்கொண்டு  இருந்தால் நீர் வருத்தக் காறியாவதுதான் மிச்சம். அதுதான் இப்ப சின்னவன் இருக்கிறானே அவனைப் பாத்து மனதை ஆற்றிக் கொள்ள வேண்டியதுதான் என்றான்.

நீங்கள் அனியோட இருக்காதபடியால் உங்களுக்கு கவலை இல்லை
என்றவளை இடைமறித்து அவள் எனக்கும் பிள்ளை தானப்பா. நேர பாக்காட்டி என்ன. போனில குரலைக் கேட்டுக் கேட்டு எப்ப அவளைப் பாக்கப் போறன் எண்டு நானும்தான் ஏங்கிக் கொண்டு இருந்தனான். நீராவது உருப்படியா வந்து சேர்ந்தீரே என நான் சந்தோசப்பட்டுக் கொண்டன். உமக்கும் ஏதாவது ஆகியிருந்தால் என்ர நிலைமையை யோசிச்சுப் பாத்தனீரே. எனக்குப் பயித்தியம் தான் பிடிச்சிருக்கும். எதோ கடவுள் காப்பாத்தீட்டார் என்றான்.

 கடவுள் என்னைக் காப்பாத்திக் காலம்முழுக்க கண்ணீர்வடிக்க வச்சிட்டானே. நான் ஒருத்தருக்கும் ஒண்டுமே செய்யேல்லையே என்று கேவும் அவளை எப்படி ஆறுதல்ப் படுத்துவது என எண்ணியபடி அழுது ஓய்ந்து போயிருந்த மகனை தூக்கிக் கொண்டு வந்து அவளிடம் நீட்டினான். சுசீலாவும்தான் பழசை மறக்க முயல்கிறாள். ஆனால் எப்படி முடியும். பத்துமாதம் சுமந்து முப்பத்திநான்கு மாதங்கள் கண்ணுக்குள் பொத்திவைத்து வளர்த்த மகள். நினைக்கவே நெஞ்சு பதறுவதை சுசீலாவால் தடுக்கவே முடியவில்லை.



அந்த நாளை வாழ்க்கையில் மறக்கவே முடியாது. ரைஷ்யாவில் எல்லை கடந்த அந்த நாள் அவள் எதிர்பாராத எந்தப் பெற்ற தாய்க்கும் கொடுக்கக் கூடாத மாறா வடுவை அவளுக்குக் கொடுத்துவிட்டது. எல்லோரும் காட்டுப் பாதையால் நடக்கும் படி கூறிக்கொண்டு ஏயென்சியும் இன்னும் ஒருவனும் கிட்டத்தட்ட எட்டுப் பேரைக் கூட்டிக்கொண்டு போனார்கள். எல்லாரும் பெடியள். இவளும் இன்னுமொரு இளம் பெண்ணும் ஒரு வயது போனவரும் தான் பின்னால்.

இவளது சூட்கேசை அங்கேயே வைக்கச் சொல்லிவிட்டான் ஏயென்சி. பிள்ளையின் உடைகளும் மகள் சாப்பிட சில தின்பண்டகளும் தவிர மற்றதெல்லாம் விட்டுவிட்டு வந்தாச்சு. ஆனாலும் அனியையும் தூக்கிக்கொண்டு அந்தச் சமான் பையையும் கொண்டு நடப்பது அவளுக்குச்
சிரமமாகவே இருந்தது. ஒருவயதுப் பிள்ளை எண்டால் பரவாயில்லை. மூன்று வயதுப் பிள்ளை கொஞ்சம் பாரம் கூடத்தான். இருட்டு வேறு முன்னுக்கு என்ன இருக்கு என்று தெரியாமல் மற்றவைக்குப் பின்னால் நடக்கவேணும். இல்லை இல்லை ஓடவேணும். எல்லோரும் விரைவாக நடக்க இவளுக்கு மூச்சு வாங்கியது.

அத்துவானக் காட்டில் தனிய விட்டது போல பயமும் வேறை. என்ன செய்வது நடக்க வெளிக்கிட்டாச்சு. என்றாலும் இப்பிடிக் கொடுமையான பயணம் என்றால் காந்தனுக்கு விசாக் கிடைக்குமட்டும் இருந்திருக்கலாம் என அந்த நேரமும் அவள் மனம் ஏங்கியது. மற்றவர்கள் தூரத்தில் போவது தெரிகிறது. நில்லுங்கோ என இவள் கத்துகிறாள். இவளின் கத்தலை யாரும் கவனித்ததாகத் தெரியவில்லை. அந்த வயதுபோனவர் மட்டும் இவளைத் திரும்பிப் பார்த்தது போல் இருந்தது. இவளுக்கு சுய பச்சாதாபத்தில்  தொண்டை எல்லாம் அடைத்து அழுகை வந்தது. பை வைத்திருந்த
கையைத் தூக்கி ஆடினாள். அந்த நேரம் அந்த முதியவரும் இவளைத் திரும்பிப் பாத்தார். அவருக்கு அவளின் நிலைமை பரிதாபத்தைக் கொடுத்திருக்க வேண்டும் இவளிடம் திரும்பி வந்தார்.

தங்கச்சி, பிள்ளையையும் தூக்கிக் கொண்டு இவ்வளவு தூரம், இவங்கள் ஓட்டமும் நடையுமாப் போறாங்கள். பிள்ளையை என்னட்டைத்
தாங்கோ. கொஞ்ச நேரம் நான் கொண்டுவாறன் என்று கையை நீட்டினார். இவளுக்குக் கொடுக்க மனமில்லைத் தான். ஆனாலும் கைகளும் முதுகும் வலித்த வலியில் பிள்ளையைக் கொடுத்தாள். நல்ல காலம் அனி நித்திரை. அல்லது ஒருத்தரிட்டையும் போகாது அழுகையாகத்தான் இருந்திருக்கும். வயது போனவர் பிள்ளையை வாங்கிக் கொண்டு விரைந்து நடக்க இவளால் நடக்கவே முடியவில்லை. காற்பாதங்கள் இரண்டும் வீங்கிப் போய் வலியெடுத்தது. கிட்டத்தட்ட ஒருமணி நேரம் இருக்குமா நடக்கத் தொடக்கி.

வெளிநாடு போக எண்டு வாங்கின செருப்பும் புதிதென்பதால் காலிரண்டும் வெட்டி செருப்பைக் கழட்டிக் கொண்டு நடக்க முற்பட்டாள். கொஞ்சத்தூரம் போனதுமே கல்லோ முள்ளோ குற்றி இன்னும் வலித்ததால் மீண்டும் செருப்பைப் போட்டுவிட்டு நிமிர்ந்தால் ஒருவரையும் காணவில்லை. அவள் கால் நோவையும் பொருட்படுத்தாது  விரைந்து ஓடியபடி எங்க நிக்கிறியள் எண்டு கத்தினாள். ஒரு பதிலும் இல்லை. ஐயா  ஐயா என்று அந்த முதியவர் எப்படியும் தன்னை விட்டுவிட்டுப் போயிருக்க மாட்டார் என்னும் நம்பிக்கையில் கத்தினாள். ஒரு பதிலும் இல்லை. எங்க நிக்கிறியள் எங்க நிக்கிறியள் என்று பாதி அழுகையுடன் ஓடியோடி தடக்கி விழுந்துவிட்டாள். சுற்றிவர ஒரே இருட்டு. தட்டுத்தடுமாறி எழுந்து ஓட வெளிக்கிட்டவள் அப்படியே மயங்கிச் சரிந்தாள்.

எவ்வளவு நேரம் அப்படியே கிடந்தாளோ, அவளை யாரோ பிடித்து உலுக்குகிறார்கள். கஸ்ரப்பட்டு கண்ணைத்திறந்து பார்த்ததும் முதல் கேட்டதே எங்க அனி என்றுதான். ஏஜென்சியுடன் வந்த மற்றவன் தான் இவளை உலுப்பியிருக்கிறான். நீங்கள் தானே கொண்டு வந்தனீங்கள் என்று அவன்கூற இவள் பதறியபடியே எழ  முயல்கிறாள். எழ  முடியவில்லை. அவன்  சுசீலாவின் கைகளைப் பிடித்து இழுத்து எழுப்புகிறான். அந்த வயது போனவர் தான் மகளைத் தூக்கிக் கொண்டு வந்தவர் என்று
அவர் எப்படியும் இவர்களிடம் போயிருப்பார் என்னும் நம்பிக்கையில்
சொல்கிறாள்.

அவரையும் தான் காணேல்ல. விரைவா நடக்கச் சொல்லிஎல்லே  உங்களுக்குச் சொன்னது என்று இவளைக் குற்றம் சொல்கிறான்.
இவளுக்குப் பிள்ளையைப் பற்றிய நினைப்பில் அவன் கூறியது  எதுவுமே மனதில் பதியவில்லை. எங்க என்ர  பிள்ளை என்கிறாள் மீண்டும். முதல் வாங்கோ இன்னும் கொஞ்ச நேரம்தான் இடுக்கு. அங்க போய்த்தான் பாக்க வேணும் அந்த ஐயா அங்க வந்திருப்பார் என்று சொல்ல இவள் மனதில் நம்பிக்கை வருகிறது.

அவனுக்குப் பின்னே விரைவாக நடக்கிறாள். கொஞ்சத் தூரம் போனபின் காலில் எதுவோ குத்தியபோதுதான் உணர்கிறாள். ஒரு கால் செருப்பு இவள்
மயங்கி விழுந்தபோது களன்று  போயிருக்க வேண்டும். இத்தனை நேரம் ஒரு காலில் செருப்பின்றி  உணர்வின்றி நடந்திருக்கிறாள். மனதெல்லாம் குழம்பி தவிப்பு பயம் என்று கலவையான உணர்வுகளோடு அவர்கள் நிற்குமிடம் வந்தவுடன் தன் பிள்ளையோ அந்த முதியவரோ அங்கு  இல்லாதது கண்டு  நடுக்கத்துடன் எங்க என்ர  பிள்ளை என்று அழுகையுடன் கத்துகிறாள். அக்கா கத்தாதைங்கோ. சத்தங்கேட்டு யாராவது வந்திடப்போறாங்கள் என்றதும் அவளுக்கு கோபம் வந்துவிடுகிறது. எண்ட பிள்ளையைக் காணேல்லை. ஐயோ என்ர  பிள்ளை எங்க என்று இன்னும் பலமாகக் கத்துகிறாள். அந்த இன்னொரு பெண் அக்கா அழாதைங்கோ கண்டு பிடிக்கலாம் என்று
மெதுவாக இவளுக்குப் பக்கத்தில் வந்து சொல்லுகிறாள். நீங்கள் அழுது பிறகு
பொலிஸ்  எங்கள் எல்லாரையும் பிடிச்சா உங்கட பிள்ளையைக் கண்டு பிடிக்க ஏலாது என்றதும் அவள் கத்தல் குறைந்து அழுகையோடு நிக்கிறது.

ஏயென்சி, நான் எதுக்கும் மிச்ச ஆக்களைக் கூட்டிக் கொண்டு போறன். நீ நிண்டு அந்த ஐயாவை ஒருக்காத் தேடிப்பாத்துக் கூட்டிக் கொண்டு வா என்கிறான். நான் எண்ட பிள்ளையை விட்டிட்டு வரமாட்டன் எண்டு இவள் சொல்ல சரி அப்ப நீங்களும் நில்லுங்கோ என்றுவிட்டு அவர்கள் நடக்கத் தொடங்குகின்றனர்.  இவர்கள் வந்த பாதையில் திரும்ப்பிப் போய் ஒரு பத்து நிமிடம் நடந்திருக்க மாட்டார்கள் இரண்டு கிளை வீதிகள் தெரிகிறது.

அந்த ஐயா எந்தப்பக்கம் போனாரோ தெரியேல்லையே என அவன் அலுத்துக் கொள்கிறான். நீங்கள் உந்தப் பக்கம் போங்கோ நான் இந்தப் பக்கம் போய் பாக்கிறன் என்று  இவள் சொல்லிவிட்டு நில்லாமல் நடக்கிறாள். அக்கா எனக்கே வடிவா இடமொன்ரும் தெரியாது நீங்கள் தனியப் போய்
என்ன செய்யப் போறியள் என்று அவன் பின்னால் கூறுவது கேட்கிறது. இவள் அவன் சொல்வதைக் கேட்காமலும் தன்  நடையை நிறுத்தாமலும் வெறி பிடித்தவள் போல் நடக்கிறாள்.










No comments:

Post a Comment