Saturday, 16 November 2013

மனதே மயங்காதே

சியாமளாவுக்கு இப்பொழுதெல்லாம் இதயம் அடிக்கடி வேகாமாக்த் துடிக்கிறது. எத்தனைதான் மனத்தைக் கட்டுப்படுத்த முயன்றாலும் முடியவே இல்லை. கண்களை கண்ணீர் மறைக்க, தன்னிலையை எண்ணித் தானே கழிவிரக்கம் கொண்டாள். என்னால் இந்த வேதனையைத் தாங்க முடியவில்லையே. யாரிடம் போய் இதைச் சொல்வது. யார் என்றாலும் எனக்குக் காறித் துப்புவார்களே. ஏன் நான் இப்படி ஆனேன் என எண்ணியே மனது குமைந்ததில் தலைவலி இன்னும் அதிகமாகியதே அன்றிக் குறையவில்லை.

எல்லோரும் போல் என் வாழ்வும் நன்றாகத்தானே போய்க்கொண்டிருந்தது. யார் கண் பட்டதனால் இப்படி ஆனதோ என எண்ணியவளின் மனம், தன் கணவனையும் இரண்டு பிள்ளைகளையும் எண்ணிப் பார்த்தது. கணவன் தனக்கு என்ன குறை வைத்தார்?. என் விருப்பம் எல்லாம் நிறைவேறியதே அன்றி ஒருநாளாகிலும்  நிறைவேறாது விட்டதில்லையே. இல்லை நிறைவேற்றாது கணவர் விட்டதில்லையே. மற்றைய கணவர்கள் போல் சியாமளாவின்மேல் சந்தேகம் கூட இதுவரை கணவனுக்கு ஏற்படவில்லையே. எத்தனை சிறந்த கணவன். பிள்ளைகள் மட்டும் குறைவா என்ன. மகன் அர்விந்த்,மகள் தட்சா இருவருமே தாய்மேல் கொள்ளை அன்பு கொண்ட சுட்டிகள்.

படுக்கையிலும் கூட கணவன் அவள் விருப்பின்றி எதையும் செய்ததில்லையாயினும், அவனின் சீண்டல்களும், தீண்டல்களும் அவளை நிறைவாகத்தானே வைத்திருந்தன. அப்படியிருந்தும் ஏன் என் மனம் இன்னொருவனை நாடியது. சிலநேரம் அவளது இரசனைகள் சிலவற்றுடன் ஒத்துப்போக முடியாதவனாக தன் கணவன் இருந்ததுதான் காரணமோ? அவள் கணவனின் கதைக்கு உறவினர்கள் எல்லோரும் இரசிகர்களாய் இருந்தனர்.அப்படியிருக்க அவள் மட்டும் இன்னொருவனின் கதையில் மயங்கவேண்டி எப்படி வந்தது என யோசித்ததில் விடைதான் இதுவரை கிடைக்கவில்லை.

முகப் புத்தகம் என்னும் மாய வலையில் சிக்குண்டதனால் அவள் வாழ்வு இன்று சிக்கித் தவிக்கின்றது. எத்தனையோ பேர் முகப்புத்தகத்தில் நண்பர்களாக இருக்கிறார்கள்தான். ஆனால் யாரும் அவளுடனோ அல்லது அவள் யாருடனுமோ இதுபோல் பேச்சை வளர்த்ததும் இல்லை.நின்மதியைத் தொலைக்கவும் இல்லை. அவன் தூர தேசத்தில் இருந்தாலும் அவனுடன் அருகில் இருந்து கதைப்பதுபோல் அவள் உணர்ந்து குதூகலித்தாள். கணவன் மாலையில் வேலைக்குச் சென்றுவிட, பிள்ளைகளை பாடசாலையிலிருந்து கூட்டிக்கொண்டு வந்தபின் அவர்களுக்கு உணவு கொடுத்து தொலைக்காட்சிப் பெட்டியின் முன் இருத்திவிட்டு இவள் கணனியே கதியெனக் கிடந்தாள்.

தருண், அவனுடன் கதைக்காது இப்போதெல்லாம் இவளுக்கு விடிவதே இல்லை. இத்தனைக்கும் அவனுக்கும் இரண்டு பிள்ளைகளும் மனைவியும் இருக்கின்றனர். ஆனாலும் அவளுக்கு அவன் தந்த மயக்கம் அதை எல்லாம் பெரிதாக எண்ண விடாது செய்தது. எப்போதும் அல்ல இப்போதுகூட கணவனுக்குத் தெரிந்தால் என்று என்னும்போதே நெஞ்சு பதைத்தது. இன்றுவரை அவளுக்குத் தன் கணவன் மேலும் எவ்வித வெறுப்பும் எழவில்லை என்பதே உண்மை. கணவனின் அன்பான பேச்சைக் கேட்கும் போதெல்லாம் மனதுள் ஒரு குற்ற உணர்வு ஓடும். ஆனாலும் தருணின் முன்னால் எல்லாம் ஒன்றுமில்லை என்றாகிவிடும்.

தருணுடன் கதைக்கும்போதெல்லாம் இருவருமே இதுபற்றி நிறைய விவாதித்தும் இருக்கின்றனர். அவனும் தன் மனைவிமேல் அளவிலா அன்புதான் கொண்டுள்ளான் . ஒரே  நேரத்தில் இருவர்மேலும் அன்பு கொள்வது என்பது இருவர் வாழ்விலும் ஒரே நேரத்தில் நடைபெறுகிறதுதான் என்றாலும் இது எப்படிச் சாத்தியமாகிறது என தன்னைத் தானே வியந்தும் கேட்டிருக்கிறாள். இன்றுவரை கணவனின் அணைப்பு அவளுக்கு விருப்புள்ளதாகவே இருக்கிறது. கணவனுடன் நிறைவாக இயங்கவும் முடிகிறது. இப்படித்தான் பலரின் வாழ்வும் இருக்கிறதோ?? எனக்குத்தான் தெரியவில்லையோ என்று எல்லாம் தன் மனத்தைக் கேட்டுக் கேட்டு அவளுக்கே சலித்துவிட்டது.

தருணை மறப்பதும் அவனைத் தன் வாழ்வில் இருந்து அகற்றுவதும் அவளால் முடியவே முடியாததாகிவிட்டது. ஒரு நாள் அவன் குரல் கேட்கமுடியாது போனால் அவள் மனம் அன்று முழுதும் எதையோ பெரிதாக இழந்துவிட்டதுபோல் துடிக்கும். மீண்டும்  அவன் குரல் கேட்கும் வரை நின்மதியற்று,  பயித்தியம் பிடித்ததுபோல் ஆகிப்போவாள் அவள்.

நான்கு தடவைகள் அவர்கள் இருவரும் தனியே சந்தித்தனர். வாழ்வில் மறக்க முடியாத அந்த நாட்களை எண்ணி எண்ணி மகிழ்வதாக மிகுதி நாட்கள் கழிந்தன. அந்த இருதடவையும் அவனும் அவள்பால் ஈர்ப்புக் கொண்டவனாகவே இருந்தான். அவள்மேல் தான் எத்தனை அன்பு வைத்துள்ளேன் என்று அவளுக்கு விளங்கவில்லை என்று அவன் கூறிய வார்த்தையில் அவள் மயங்கித்தான் போனாள். அவனுக்குத் தன்மீதான காதல் அப்படியே இருக்கும் என்றும் அசைக்கமுடியாத நம்பிக்கை ஏற்பட்டதும் அப்போதுதான்.

இருந்தாலும் அப்பப்ப அருண் என்னை மறந்துவிடுவானோ என்பதுபோல் அவளுக்குச் சந்தேகம் எழும். என்னை மறந்துவிட மாட்டீர்கள் தானே என்று அப்பாவித்தனமாய் அவனைக் கேட்டு அவன் மறக்க மாட்டேன் என்று கூறும் பதிலில் அவள் மனம் நிறைவு கொள்ளும். எத்ததனை நாள் இது தொடர முடியும் என்பதையோ அவன் அப்படியே மாறாமல் இருப்பானோ என்பதில் எல்லாம் அவளுக்கு சந்தேகம் ஏற்படவில்லை.

தொடரும் ..........

இப்ப கொஞ்ச நாட்களாக அவனிடம் மாற்றங்கள் தெரிகின்றன. அதை அவளால் சீரணிக்க முடியவில்லையாயினும் தன்   நிலையை எத்தனையோ தடவைகள் அவனுக்கு எடுத்துரைக்க முயன்றும் அவன் அவற்றைக் காது கொடுத்துக் கேட்காமல் தன் எண்ணப்படியே செய்கிறான். முன்பு காலை மாலை என தொலைபேசியில் சிரித்துப் பேசி மகிழ்ந்தவனுக்கு இப்போதெல்லாம் அவளுடன் பேசுவதற்கு  நேரமே இல்லை என்பதற்குமப்பால் விருப்பம் இல்லை என்றே இவள் கருதவேண்டி இருந்தது. முன்பெல்லாம் மணிக்கணக்காகப் பேசுவார்கள். இப்போது மணி தேய்ந்து நிமிடங்களாகிச் செக்கன்களில் வந்து நிற்கிறது.

ஆரம்ப நாட்களில் அவளுக்காக வீட்டுக்குக் கூடச் செல்லாது  வேலை இடத்திலேயே அதிகநேரம் நின்று மேலதிக வேலை என்று மனைவிக்குப் பொய் சொல்லி மணிக்கணக்காக இவளுடன் கதைத்த நேரங்கள் எல்லாம் நினைவில் மட்டுமேயாகிப் போனதில் இவளுக்கு நினைவே நிந்தனையானது. மனைவி பிள்ளைகளை பக்கத்தில் வைத்துக்கொண்டே இவளுக்கு செய்திகள் அனுப்பிப் பூரிக்க வைப்பான். இன்று கனவில் கூட அவன் அப்படிச் செய்வதில்லை. அவனின் அலட்சியம் புரிந்தாலும் அவன் மேல் இவள் கொண்ட அளவிலா அன்பின் முன், இவளால் அதை எல்லாம் பெரிதாக எண்ணவிடாது செய்தது. அவனின் அலட்சியத்தை எல்லாம் ஓரம்தள்ளி வைத்து விட்டு அவனிடம் பழி கிடந்தாள்  இவள். அவனின் அலட்சியம் இவளை எதுவும் செய்யவிடாது இவள் நம்பிக்கைகளைத் தகர்த்து இவள் சக்தியை எல்லாம் இழக்க வைத்து

 
இரவில் இவள் தூக்கம் தொலைத்து அருணின் தொலைபேசிச் செய்திக்காய் காத்திருக்க, எல்லாம் மறந்து அவன் இன்பமாகத் தூங்கினான்.காலையில் அவன் தொலைபேசிக்காகக் காத்திருக்க, எனக்கு காலையில் யாருடனாவது கதைப்பதென்றால் பிடிக்கவே பிடிக்காத விஷயம் என்று அவன் கூறியதை இவள் மனம் ஏற்க மறுத்தது. ஏனெனில் இத்தனை நாட்கள் பிடித்த விடயம் எப்படித் திடீரெனப் பிடிக்காது போயிற்று என்ற கேள்வி இவள் மனதில் எழுந்து இவள் நின்மதியைத் தொலைத்தது. முன்பெனில் மணிக்கணக்காக எந்தவிதச் சலிப்புமின்றி பேசிக்கொண்டே இருப்பார்கள் இருவரும்.

இப்பொழுது போனில் கடமைக்கு மூன்று நான்கு நிமிடங்களில் அவசரமான பேச்சுக்களுடன் இவள் பதிலுக்குக் கூடக் காத்திருக்காது முடித்துக்கொள்வது அவன் வழக்கமாகி விட்டிருந்தது. இவள் தன் மனக் கிடக்கையை இவனிடம் கூறினாலும் நீ அப்படி நினைத்தால் நான் ஒன்றும் செய்ய முடியாது என்று சாதாரணமாகக் கூறிவிட்டு, அவளைச் சமாதானப் படுத்தக் கூட ஒரு வார்த்தையும் சொல்லாது சும்மா இருப்பான். அவளுக்கு அப்பொழுதெல்லாம் வனாந்தரத்தில் யாருமற்றுத் தனியாக இருப்பது போன்ற வெறுமை தோன்றும்.

முன்பென்றால் எந்த வேலைப் பளுவிலும் இவளுக்கு அடிக்கடி குறுஞ்செய்திகள் அனுப்புவான். அதே அவனுடன் அருகில் இருக்கும் நிறைவைக் கொடுக்கும். தனக்கு வேலை அதிகம் பொறு என்றான். இவளும் பொறுத்துத்தான் போனாள். ஆனால் தொடர்ந்தும் அவன் செயல்கள் இவள்மேல் அவனுக்கு ஈடுபாடு இல்லாமையையே காட்டியது.

இப்பொழுதெல்லாம் இவள் அனுப்பும் சாதாரண குறுஞ்செய்திகளுக்குக் கூட அவனிடமிருந்து பதில் வராது போனதில் இவள் மனம் படும் பாட்டை  அவளாலேயே தாங்க முடியாமல் இருந்தது. அவன் செய்கைகளை இவள் மனம் ஏற்றுக்கொள்ள மறுத்ததில், இவளுக்கு தன் மனதை யாரிடமாவது பகிர்ந்துகொள்ள வேண்டும்போல் தவிப்பாக இருந்ததில் நண்பி நித்தியாதான் நினைவில் வந்தாள்.

ஒருநாள் நித்தியாவுக்கு தொலைபேசியில் அவள் வீட்டில் நிற்கிறாளா என்று நிட்சயம் செய்துகொண்டு, அவள் வீட்டுக்குச் சென்று தன் நிலையை  அவளுக்குச் சொல்லிவிட்டு, அவள்முன் கூனிக் குறுகி அமர்ந்திருந்தாள். நித்தியாவுக்கு அவளைப் பார்க்கப் பாவமாக இருந்தது. எவ்வளவு நல்ல பெண் சியாமளா. இப்படியாகி விட்டாளே  என்று இரக்கம் ஏற்பட்டது. அவளுக்கு சியாமளா கூறியதை முதலில் நம்ப முடியவில்லையாயினும் அவளே கண்ணீருடன் தன்முன்னே இருந்து கூறுவதை எப்படி நம்பாது விடுவது.

இருதலைக் கொல்லி ஏறும்பானாள்  நித்தியா. இருந்தாலும் தன்னை நம்பி அவள் வந்து தன் மனக் கிடக்கையைக் கூறும்போது சரியான ஒரு பதிலையும் வலுகாட்டளையும் அவளுக்குச் சொல்லி அவள் புரிந்துகொள்ள வைக்கவேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டதனால், சரி பிரச்சனை இல்லை. முதல்ல என்ன குடிக்கிறீர். குடித்துவிட்டு ஆறுதலாகக் கதைப்பம் என்றுவிட்டு தேநீர் தயாரிக்க ஆரம்பித்தாள்.

மற்றும் நேரம் எனில் சியாமளாவும் குசினிக்கே வந்து இவளுடன் விடாது கதைத்துக்கொண்டு இருப்பாள். இன்று அவள் எழுந்து வரவுமில்லை. இவளும் கூப்பிடவும் இல்லை. தேநீர் தயாரித்து முடித்து முதல் நாள் செய்த ரோள்சும்  கொண்டுபோய் அவள்முன் வைக்க, சியாமளா நித்தியாவை நிமிர்ந்து பார்த்த பார்வையில் என்னை நீ கேவலமாக எண்ணவில்லைத்தானே என்னும் எதிர்பார்ப்புடனான கேள்வி தெரிந்தது.

நித்தியாவும் அதைப் புரிந்துகொண்டு, முதல்ல சாப்பிட்டுத் தேத்தண்ணியைக் குடியும். நாங்கள் வடிவாக் கதைப்பம் என்று அவளை இலகுவாக்க முயன்றாள். ஒருவாறு அவளின் பதட்டம் குறைந்துவிட்டது என்று அறிந்ததும், சியாமளா எதோ நடந்தது நடந்துவிட்டுது. நீர் செய்தது சரி பிழை என்பதுக்கும் அப்பால் இனியாவது நீர் உம்பாட்டில் இருப்பதுதான் நல்லது என்று கூறு முன்னரே, அதுதான் என்னால் முடியவில்லையே. என்னை தருண் ஓரம் கட்டுவதை என்னால் தாங்கவே முடியவில்லை. எப்பிடி எல்லாம்  என்னோட கதைச்சவர். இப்ப இப்பிடி இடை நடுவில விட்டா நான் செய்யிறது. எனக்கு ஒரு வேலையும் ஓடுதே இல்லை. விடிஞ்சாப் பொழுதுபட்டா இதே நினைப்பாக் கிடக்கு. இப்ப கணவர் கூட ஏன் ஒருமாதிரியா இருக்கிறாய் என்று கேட்கத் தொடங்கீட்டார். எனக்கு என்ன செய்யிறது எண்டே தெரியவில்லை என்று அழத்தொடங்கினாள்.

சியாமளா நீர் ஒண்டை வடிவா விளங்க வேணும். அவனும் ஏற்கனவே கலியாணம் கட்டி இரண்டு பிள்ளை இருக்கு எண்டு சொல்லுறீர். மனைவி பிள்ளையில அன்பும் இருக்கெண்டு சொல்லுறீர். இப்ப அவனுக்குத் தான் செய்யிறது பிழை  எண்டு  படுதோ தெரியாது. அதுக்குப் பிறகு நீர் அவனை போஸ் பண்ணுறது நல்லதில்லை.

நான் என்ன அவரை மனிசி பிள்ளையளை விட்டுவிட்டு வாங்கோ என்றா சொல்லிறன். என்னோட கதைச்சதுபோல தொடர்ந்தும் கதையுங்கோ அன்பு செலுத்துங்கோ எண்டுதானே. உப்பிடிப் பட்டவர் ஆரம்பிக்க முதல் எல்லோ யோசிச்சிருக்க வேணும்.என்னால அருணை மறக்க முடியேல்லை. எனக்கு உதவி செய் நித்தியா என்று கெஞ்சு  பவளுக்கு  எப்படிப் புரியவைப்பது என்று நித்தியாவுக்குப் புரியவில்லை.

நான் ஒன்று சொன்னால் அது உமது நன்மைக்கே என்று நினைத்து நான் சொல்லுறதை வடிவாக் கேளும் சியாமளா. நீர் தருணை மறக்கிறதுதான் நல்லது. உமக்கு ரண்டு பிள்ளைகள் இருக்கினம். அவர்கள் பாவம். நீர் உவனை நினைச்சு அதுகளைத் தண்டிக்கப் போறீரோ?? நித்தியா நிறுத்தமுதல் மீண்டும் அழுகையுடன் அவனை மறக்கவே என்னால் முடியாது அதைவிடச் செத்துப் போகலாம் என்றவளை, என்ன விசர்க் கதை எல்லாம் கதைக்கிறீர். கடவுள் உமக்கொரு நல்ல வாழ்க்கையைத் தந்திருக்கிறார். அதைக் காப்பாற்றிக்கொள்ளும். எனக்குத் தெரிஞ்ச ஒரு இந்தியப் பெண் இருக்கிறார். நன்றாகக் கவுன்சிலிங் செய்வார். நீர் அவனை முற்றாக மறக்க கட்டாயம் முடியும். நானே உம்மை அவவிடம் கூட்டிக் கொண்டு போறான். என் கணவருக்குக் கூட இந்த விசயத்தைச் சொல்ல மாட்டன் என்றதும் எனக்குச் சத்தியம் செய்யும் என்று சிறு பெண்போல் கையை நீட்டினாள். அவள் நம்பிக்கையைக் கெடுப்பான் எனென நித்தியாவும் சத்தியம் செய்து கொடுத்தது மட்டுமன்றி, அவள் மேல் அக்கறை கொண்டு அவளைக் கவுன்சிலிங்குக்கும்  கூட்டிக் கொண்டு போனாள்.


தொடரும் ..........


ஒரு மாதம் சென்றிருக்கும். சியாமளா விபத்தில்  இறந்துபோயிருந்தாள். கேட்டவுடன் இவளுக்கு என்ன செய்வதெனத் தெரியாது கண்ணீர்தான் எட்டிப் பார்த்தது.
சியாமளாவின் கணவனை நினைக்கவே நித்தியாவுக்குப் பரிதாபமாக இருந்தது. அவள் வீட்டுக்குச் சென்றபோது கணவன்  இருந்த நிலையைப்  பார்க்க இவளுக்கு அடிவயிறு பிசைந்தது. பிள்ளைகள் இருவரும் முழுதாக எதுவும் விளங்காது தந்தைக்குப் பக்கத்தில் அமர்ந்திருந்தனர். கணவனுக்கு இவள் ஏதாவது கூறியிருப்பாளா???இவள் தனக்குள் தானே எண்ணிக் குழம்பிக்கொண்டு இருந்தபோதுதான் மூன்றாம் நாள் இவளுக்கு ஒரு கடிதம் வந்தது. பின் விலாசம் இடாது யாராயிருக்கும் என்று யோசனையுடன் கடிதத்தைப் பிரித்தவளுக்கு படபடப்பு ஏற்பட்டு மயிர்க்கால்கள் குத்திட்டு நின்றன.

சியாமளா தான் எழுதியிருந்தாள். நித்தியா எனக்கு இப்ப நம்பிக்கையான ஒரே ஆள் நீர்தான். தருணை என்னால மறக்கவே முடியவில்லை நித்தியா. என் நினைவு முழுவதும் அவன்தான் ஆக்கிரமித்து இருந்தான். விடிய கண் முழிச்சு இரவு நித்திரை கொண்டபின்னும் கூட அவனையே நினைத்துக்கொண்டிருந்தேன். என் நிலை உமக்குச் சொல்லி விளங்காது. அவன் என்னை வெறுத்ததைக் கூட என்னால் தாங்கிக் கொள்ள முடிந்திருக்கும். ஆனால் அவனுக்கு இன்னொரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டிருந்ததை தற்செயலாக நான் அறிய நேர்ந்தது. அதை என்னால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. எப்படி நான் அதை அறிந்தேன் என்று எண்ணுகிறாய் என்று தெரிகின்றது.

அவனது வீட்டுத் தொலைபேசி இலக்கம் தந்திருந்தான். அவனது மனைவிக்கோ அல்லது பிள்ளைகளுக்கோ எக்காரணம் கொண்டும் எதுவும் கூற மாட்டேன் என சத்தியம் செய்த பின் அவன் வீட்டில் இருக்கும் நேரத்தில் அவனுடன் அந்த இலக்கத்தில் கதைப்பேன். அவன் என் தொலைபேசிக்கு பதில் தராது விட்டபின் நானும் முகப்புத்தகம், skype என்று எதிலாவது அவனுடன் தொடர்புகொள்ளப் பார்த்தால், அதையும் தடைசெய்துவிட்டான். மெயில் ஐ வேறு புளோக் செய்துவிட்டான்.

எனக்கு வேறு வழியின்றி அவனது வீட்டு எண்ணுக்குத் தொடர்பு கொண்டேன்.என் குரலைக் கேட்டதும் உடனே நிறுத்திவிட்டான். மீண்டும் மீண்டும் நானும் போனை எடுத்தேன். இனிமேல் எடுக்காதை என்று எத்தினைதரம் சொல்லுறது என்றபடி போனைக் கட் செய்துவிட்டான். மீண்டும் நான் எடுத்தபோது கோவத்தில் அவன் மாறி வேறு பட்டினை அழுத்திவிட்டு நிற்பாட்டியதாக எண்ணிக்கொண்டு யாருடனோ கதைத்துக்கொண்டிருந்தான். அது ஒரு பெண். என்னைப் பற்றி மிகக் கேவலமாக அந்தப் பெண்ணுக்குக் கூறிக்கொண்டிருந்தான்.

அப்பெண்ணும் என்னைப் போலவே பயித்தியம் பிடித்து இவனுக்குப் பிதற்றிக் கொடிருப்பதை கேட்டதுமுதல் என் மனம் என்னிடம் இல்லை. எத்தனை பெரிய நம்பிக்கையுடன் அவனுடன் பழகினேன். கோபம் ஆறியவுடன் மீண்டும் என்னுடன் கதைப்பான் என்று இருந்த நம்பிக்கையும் தகர்ந்து போனது. அவனை எப்படியாவது தண்டிக்க வேண்டும் என்னும் வெறிதான் எனக்கு எழுந்தது. ஆனாலும் அதனால் என் கணவரோ பிள்ளைகளோ பாதிக்கக் கூடாது என்பதாலேயே எழுதி வைத்துவிட்டுச் செத்துப் போகாது வீதியைக் கடக்கும்போது விபத்துப் போல் வீதியில் பாய்ந்தேன்.  அவனிடம் நீர்தான் கூறவேண்டும். உன்னால் ஒருத்தி தற்கொலை செய்து  கொண்டாள் என்று.  அவன் இனிமேலும் இன்னொரு பெண்ணிடம் இவ்வாறு நடந்து கொள்ளக் கூடாது. இந்த உதவியை நீர் எனக்குச் செய்தாலே என் ஆத்தமா இவ்வுலகை விட்டுப் போகும் என்று முடித்திருந்தாள்.

 தான் மடை வேலை செய்ததும் அல்லாது என்னையும் தேவை இல்லாமல் மாட்டி விடுகிறாளே என்று நித்தியாவுக்கு அவள் மேல் கோபம்தான் வந்தது. அவள்தான் இறந்துவிட்டாளே அவள் எழுதியதை பெரிதாக எடுக்கக் கூடாது என எண்ணி
பேசாதிருந்தவளுக்கு, கனவில் சியாமளா வந்து வெருட்டுவது போல் இருந்தது. தன் மனப் பயம் தான் இப்படி என்ன வைக்கிறதோ என்று எண்ணியவள், பிறகும் எதற்கும் அவனுடன் கதைத்துப் பார்ப்போம் என்று எண்ணி சியாமளா எழுதியிருந்த தொலைபேசி எண்ணுக்கு அவனுடன் கதைக்க அழுத்தினாள்.

இவள் சியாமளாவின் நண்பி என்றதும் மூன்று தடவைகள் போனை கட் பண்ணியவன், உங்கள் விலாசம் எனக்குத் தெரியும் என்று கூறியதும் தொய்ந்துபோன குரலில் என்ன என்றான். நித்தியாவும், சியாமளா போலீசுக்குக் குடுக்கச் சொல்லி எனக்கு ஒரு கடிதம் எழுதித் தந்திருக்கிறாள் என்று கொஞ்சம் மிகைப்படுத்தி அவனைத் திட்டித் தீர்த்தாள். அவனோ நான் என்ன செய்ய விருப்பமில்லாட்டி எப்பிடிக் கதைக்கிறது என்றான். அதை அவளோட கதைக்க முதலே யோசிச்சிருக்க வேணும். பெண்கள் மிகவும் மென்மையான உள்ளம் கொண்டவர்கள்.எல்லாப் பெண்களாலும் ஏமாற்றங்களை இலகுவில் ஏற்றுக்கொள்ள முடியாது. கணவன் இருக்க அவள் உங்களுடன் கதைத்தது தவறுதான். ஆனால் அதற்கு நீங்களும் ஒரு காரணம்தானே. ஒரேயடியா அவளை ஒதுக்காமல் கொஞ்சம் கொஞ்சமா குறைத்திருக்கலாம். அவளைப் போல இன்னொருத்தியையும் ஆக்கிப் போடாதேங்கோ தயவுசெய்து. உங்களுக்கும் பிள்ளைகள் இருக்கினம். இனிமேலாவது திருந்தி வாழுங்கோ. உப்பிடியான தவறுகள் ஏற்படாமல் இருக்கத்தான் எங்கட சமூகத்தில கட்டுப்பாடுகளை வச்சிருக்கினம். அது எல்லாருக்கும் நன்மைக்கே என்று தன் பிரசங்கத்தை முடித்தவள், இனியாவது உங்கள் குடும்பத்தை மட்டும் பாருங்கோ என்று கூறி வைத்துவிட்டாள். அவன் எதுவும் பேசாது எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டு இருந்தான். அவன் திருந்துவானா மாட்டான என்பதற்குமப்பால் சியாமளா சொன்னதை அவனுக்குத் தெரியப்படுத்தியதால் நித்தியாவின்  மனதில் ஒரு நின்மதி பரவியது.

முடிந்தது

No comments:

Post a Comment