Saturday 16 November 2013

நீங்கள் கடிச்சிட்டுத் தாங்கோ

நான் வெளிநாடு வந்து பதினைந்து வருடமாச்சு. இத்தனை நாள் அம்மா சகோதரங்கள் எண்டு ஊரிப்பட்ட பிரச்சனை. மூன்று தங்கைகளுடனும் ஒரு பொறுப்பில்லாத ஊதாரி அண்ணனுடனும் பிறந்தால் இப்பிடித்தான். வயதும் முப்பத்தஞ்சு ஆச்சு. நானும் அண்ணன் மாதிரி இருந்திருந்தால் எப்பவோ குழந்தை குட்டி பெற்று சந்தோசமா இருந்திருப்பன். அனால் என்னால முடியேல்லை அண்ணை  மாதிரி பொறுப்பற்று இருக்க. கூடிப் பிறந்தவையை எப்பிடி நடுத்தெருவில விடுறது. சரி ஒரு மாதிரி எல்லாரையும் கரை சேர்த்தாச்சு. இப்பவாவது அம்மாக்கு என்ர வாழ்க்கையைப் பற்றி ஞாபகம் வந்திது. செல்வன் தனக்குத் தானே நினைத்துக்கொண்டான்.

செல்வனின் தாயார் இப்போதுதான் அவனின் சாதகத்தைக் கையில் தூக்கியிருக்கிறார். அதுக்கும் சுவிசில் இருக்கும் மகள் சொல்லி. மகள் கூடத் தானாகச் சொல்லவில்லை. வீட்டுக்கு வரும் உறவினர்கள் தமையனைப் பற்றிக் கதைத்து, இனியாவது அவனுக்கு ஒரு கலியாணத்தைக் கட்டி வையுங்கோவன் எண்டு சொன்னதாலதான். செல்வனுக்கு எழில்  செவ்வாய். அதுக்கேத்த செவ்வாய்க் குற்றம் உள்ள பெண்ணைத்தான்  பாக்கவேணும் என்று தாய்க்கே கொஞ்சமும் அக்கறை இல்லை. ஆனால் உராரின் ஏச்சுக்கும் நாக்குவளைப்புக்கும் முற்றுப் புள்ளி வைக்கவாவது ஒரு கலியாணத்தை செய்து வைக்க வேணும் என எண்ணி பெண் தேட ஆரம்பித்துள்ளார்.

இன்று செல்வன் கன நாளின் பின் மகிழ்வோடு நித்திரை விட்டு எழுந்தான். அம்மா நேற்று தொலைபேசியில் அழைத்து இப்பதான் ஒரு செவ்வாய் குற்றம் உள்ள சாதகம் ஒண்டு பொருந்தியிருக்கு. படம் அனுப்புறன் பாத்திட்டுப் பிடிச்சிருந்தால் மேற்கொண்டு கதைக்கிறன் என்று கூறியிருந்தா. பிள்ளையை நீங்கள் பாத்தனீங்கள் தானே அம்மா என்று கேட்டான். ஓம் தம்பி எனக்குப் பிடிச்சிருக்கு என தாய் கூறியதும் நீங்கள் எனக்குப் பொருத்தமான பெண்ணைத்தானே பாப்பியள் அம்மா அதனால படம் பாக்க வேணும் எண்டு இல்லை. ஆனால் படத்தை அனுப்பிப் போட்டு மிச்ச அலுவலைப் பாருங்கோ என்றுவிட்டான்.

படம் இன்றுதான் வந்தது. வச்சுத் திரும்பத் திரும்ப எத்தின தரம்தான் பாத்தாலும்  பாக்கவேணும் போல இருந்தது. என்ர வாழ்க்கையிலும் ஒரு பெண் வரப் போறாள். நல்ல வடிவான ஆளத்தான். அம்மா நல்லாத்தான் தெரிவு செய்திருக்கிறா. அவனுக்குள் ஏதேதோ கற்பனைகள் உள்ளத்தில் ஊற்ரெடுத்தன. ஒருக்கால் தொலைபேசியில் கதைத்தால் என்ன என எண்ணவே எப்படி அம்மாவிடம் கேட்பது. இப்படி அலைகிறான் என அம்மா எண்ணினால் என்னசெய்வது என்றெல்லாம் எண்ணிவிட்டு சரி இருந்ததுதான் இருந்தம். வருமட்டும் பொறுமையா இருப்பம் என எண்ணியவாறே தன்  ஆசையை அடக்கிக் கொண்டான்.

அம்மா நேற்று எடுத்து, பெண்ணுக்கு எழு இலட்சம் காசும் வீடுவளவும் நகையும் போடீனமாம் என்றதும் இவனுக்குக் கோபம் வந்தது. ஏனம்மா சீதனம் கேக்கிறியள் என்று எசியவனை சும்மா இரு நீ. சீதனம் வேண்டாம் எண்டால் மாப்பிளைக்கு ஏதும் குறை எண்டுதான் இங்க நினைப்பாங்கள். உதில நீ தலையிடாத என்று கூறிவிட்டா. இவன்  அம்மா எனக்கு கூப்பிட ஏலாது. ஏஜென்சி மூலம் தான் கூப்பிட வேணும். சீதனம் வாங்கினால் நாங்கள் தானம்மா கூப்பிட வேண்டும் என்றவுடன் அம்மா அப்ப வீட்டை மட்டும் தாங்கோ, பொம்பிளையை அவையை அனுப்பச் சொல்லிக் கேக்கிறன் என்றவுடன் இவனும் ஓம் என்று கூறி விட்டுவிட்டான்.

ஆறு மாதங்கள் பெண் இன்று வருகிறாள் நாளை வருகிறாள் என்று அம்மா சொல்லிச் சொல்லி இவனுக்கு மிஞ்சியது ஏமாற்றம் தான். ஒருவாறு நாளை ஏஜென்சி அனுப்புவதாகக் கூறுகிறான் என்று அம்மா சொன்னது மனதுக்கு நின்மதி தந்தாலும் நூறு வீதம் நம்பிக்கை தரவில்லை. வந்த பிறகுதான் நம்பலாம் என எண்ணிக்கொண்டான். என்ன வாழ்க்கை இது நின்மதியா ஒண்டும் செய்ய முடியாமல். நாடு ஒழுங்கா இருந்தாலாவது உடன போய் கலியாணம் கட்டிக்கொண்டு வந்திருக்கலாம். ம்......... என்ர  விதி என்று பெருமூச்சும் விட்டபடி தூங்கிப்போனான்.

விடிய வேலைக்குப் போவதற்காக வைத்திருந்த அலாம் அடிக்கிறது என்று எழுந்த செல்வனுக்கு அடிப்பது தொலைபேசி என்றதும் என்ன இந்த நேரம் யார் தொலைபேசியில் என்று யோசனையோடு எடுத்தால், தம்பி மோசம் போட்டமடா என்று அழுதபடி அம்மா. இவனுக்கும் பதட்டம் தொற்றிக்கொள்ள என்னம்மா விளங்கிற மாதிரிச் சொல்லுங்கோ என்றான். உனக்கு அனுப்பின பொம்பிள வந்த கப்பல் இத்தாலியில தாண்டிட்டுதாமடா என்றபடி குழற இவனுக்கு நெஞ்சுப்பரப்பெல்லாம் காலியானது போன்ற எண்ணம். நெஞ்சை ஒருமுறை தொட்டுத் தொட்டுப் பார்த்துக் கொண்டான். அம்மாவுக்கு முன் அழ மனம் இடம் தரவில்லை. நான் பிறகு அடிக்கிறான் என்றுவிட்டு தொலைபேசியை வைத்தபின்னும் அலை அடித்து ஓய்ந்த நிலமாக அவன் மனம் வெறுமையானது.

விதி என்னை விடுதே இல்லையே. எழுந்து சென்று அந்தப் பெண்னின் படத்தை எடுத்துப் பார்த்தான். அவனறியாது கண்ணீர் கைகளை நனைத்தது. உன்னுடன் என்னை எப்படியெல்லாம் எண்ணிக் கற்பனை செய்து வைத்திருந்தேன். ஏன் என்னை விட்டுப் போனாய் என மனம் ஓலைமிடுவதையும் தடுக்க மனமின்றி அப்படியே இருந்தான். மீண்டும் கட்டிலில் வந்து விழுந்தான். வேலைக்குப் போவதற்கும் மனமில்லை. அடித்து வரவில்லை என்றும் சொல்லவில்லை. நேரம் தவறாமையைக் கடைப்பிடிப்பவன் இன்று  எல்லாம் மறந்துபோக மரத்துப் போனவனாகக் கட்டிலில் கிடந்தான்.

தொடரும்...............

பகுதி 2

செல்வன் மீண்டும் பழைய நிலைமைக்குத் திரும்பிவிட்டான். அந்தப் பெண்ணுடன் தொலைபேசியில் கூடக் கதைக்கவில்லை எனினும் படத்தைப் பார்த்து மனதுள் கட்டிய கோட்டை இடந்து வீழ்ந்தது மனதில் பெரிய தாக்கம்தான். மனத்தால் அவளோடு பேசிச் சிரித்து கொஞ்சி மகிழ்ந்து இவள்தான் எனக்கு என எண்ணியதில் உணர்வும் உரிமையும் கூடிப்போயிருந்தது. இப்பதான் கொஞ்சம் அவளை மறக்கத் தொடங்கியிருக்கிறான். அவளைப்பற்றி நினைப்பதே இல்லை என்று மனதில் சபதம் எடுத்து படத்தையும் கிழித்து வீசிவிட்டு நின்மதியாக இருக்க முயற்சி செய்கிறான்.

தங்கை நேற்று கதைக்கும் போது அம்மா உனக்கு இரண்டு மூன்று பொருத்தங்கள் பார்த்தவா என்று கூறினாள். இவனுக்கு நம்பிக்கை இல்லை. அதற்கான பதிலைத் தங்கைக்கும் கூறவில்லை. நடப்பது நடக்கட்டும் என்று விட்டுவிட்டான். அம்மா ஊரில் வீடு வாசல் இருக்க தனக்கு முதுகு வருத்தம் என்று சாட்டிக் கொண்டு வெள்ளவத்தையில் ஒரு வீட்டில் வாடகைக்கு இருக்கிறா. எல்லாம் இவன் அனுப்பும் பணம் செய்யும் வேலை. இவனும் இரண்டு மூன்று முறை தாய்க்குச் சொல்லிப் பார்த்துவிட்டான் ஊருக்குப் போங்கோவன் என்று. தாய் கேட்பது மாதிரி இல்லை. இன்னும் இரண்டு மூன்று ஊராட்கள் வெளிநாட்டுக் காசில்  வெள்ளவத்தையில் வீடெடுத்து ஊதாரித்தனம் பண்ணிக்கொண்டு இருக்கினம். அம்மாவும் அவர்களுடன் சேர்த்தி. கொஞ்சம் ஊண்டிச் சொன்னால் அம்மா என்னில ஒருத்தருக்கும் அக்கறை இல்லை என்று அழுவா. அதுக்குப் பயந்து இவன் இப்போ ஒன்றும் கதைப்பதில்லை.

அம்மா வழமைபோல் நேற்று போன் எடுத்து எங்கட ஊர் இல்லை. ஆனால் நல்ல வடிவான பெட்டை. பெரிசா சீதனம் ஒண்டும் இல்லை. ஆனால் செவ்வாய் குற்றம் உள்ளது. பொருத்தம் பார்த்தேன் பொருந்துகிறது. நீ ஓம் எண்டா நான் மிச்ச வேலை பாக்கிறன் என்று சொல்ல என்னெண்டாலும் செய்யுங்கோ என்று சொல்லிவிட்டான். பெண் வரட்டும் படம் வேண்டாம் என்றும் விட்டான். அம்மா இவனைப் பற்றிக் கழிவிரக்கம் கொண்டாவோ என்னவோ பெண்ணை அனுப்ப அவவே முன்னின்று எல்லா அலுவலும் முடிச்சிட்டு நாளைக்கு உங்கு வருகிறாள். என்னொரு ஆள்தான் தன்  மனைவியின் பாஸ்போட்டில் கூட்டிக்கொண்டு வரப் போறார். அதனால எயாப்போட்டால வெளியில வந்த உடன உனக்கு போன் செய்வார். நீ நேரத்துக்குப் போய் நில் என்றுவிட்டு வைத்துவிட்டா.

வேலைக்கு லீவு சொல்லவேணும். அம்மா பாத்த வேலை என மனதில் சிறு சலிப்பு எட்டிப் பார்த்தாலும் சலிப்பை மீறிய ஒரு மகிழ்ச்சியும் மனதில் உதித்தது. அந்த மகிழ்ச்சி அவன் வேலைக்குச் சென்ற போதும் தொடர்ந்தது. வேலையிடத்து நண்பன்  என்ன செல்வன் இண்டைக்கு என்ன ஏதும் விசேசமே. நல்ல சந்தோசமாய் இருக்கிறாய் என்றதும் என்ன என் முகம் இப்பிடிக் காட்டிக் குடுக்கிறதே என எண்ணி கூச்சமடைந்தவனாய் ஒன்றும் இல்லை என்று விட்டு தன் அலுவலைப் பார்க்கத் தொடங்கினான். மனதுக்குள் பழைய  கீறல்களில் வலி எட்டிப் பார்க்க கடவுளே இந்த முறை என்னைக் கைவிட்டுடாதை என மனம் கடவுளை வேண்டியது.

இந்த இரவு அவனின் தூக்கம் தொலைந்து போக, பலதை எண்ணியபடி விடிந்தபின்னும் கட்டிலில் கிடந்தான். நேரத்தை நிமிர்ந்து பார்த்தபோது இன்னும் விமான நிலையத்துக்குப் போவதற்கு நேரம் இருக்கு. எதுக்கும் அம்மாவுக்கு ஒருக்கா அடிச்சுப் பாப்பம் என்று எண்ணியபடி எழுந்து காலைக் கடன் முடித்து அம்மாவை அழைத்தான். அம்மா இன்னும் நீ எயாப்போட் போகவில்லையா என்றதற்கு இனித்தான் போகவேணும் என்றுவிட்டு, ஒரு பிரச்சனையும் இல்லைத்தானே. ஏத்தியாச்சுத் தானே அவையை என அம்மாவிடம் விசாரித்தான். ஒண்டுக்கும் பயப்பிடாதை ஏறிவிட்டினம் வந்து சேர்ந்தாப் பிறகு எனக்கு போன் பண்ணு என்றுவிட்டு அம்மா வைத்துவிட்டார்.

காலை பதினோரு மணிக்குத்தான் விமானம் வருகிறது. ஆனாலும் இவன் பத்து மணிக்கே போய்க் காவலிருந்தான். என்னத்துக்கு நான் இப்பிடி வேலைக்கு வந்தனான் என தன்னைத் தானே கேட்டவனுக்கு சிரிப்பு எட்டிப் பாத்தது. சரி வீதியில் ஏதாவது விபத்து நடந்து வரப் பிந்தினாலும் எண்டுதான் வேளைக்கே வந்தனான் என தன்னைச் சமாதானப் படுத்திக் கொண்டு எழிலினி எப்பிடி இருப்பாள் என தன் மனச் சிறகை விரித்துப் பார்த்தான். ஒன்றுமே அகப்படவில்லை. சரி இன்னும் ஒரு மணி நேரத்தில் பார்க்கத்தானே போறன் என்று மனதை அடக்கிக் கொண்டு விமானங்கள் வந்து இறங்குவதையும் ஏறுவதையும் பார்த்துக் கொண்டு நின்றான்.

இவனின் தொலைபேசி அடிக்கத்தான் சுய நினைவு பெற்றவன், காதில் அதை வைக்க நீங்கள் தான் செல்வனோ என ஒரு ஆண்  குரல் கேட்டது. ஓம் நீங்கள் என்று இவ இழுக்க, எழில் எண்ட பிள்ளை என்னுடன் வந்தவா என்று அவர் கூறு முன்னரே வந்திட்டீங்களோ எங்க நிக்கிறியள் என இவன் கேட்டபடி வெளியே வரும் பாதை நோக்கி விரைந்தான். தம்பி நாங்கள் வெளியில டாக்ஸி நிக்கிற இடத்தில நிக்கிறம் வாங்கோ என்று அவர் கூறிவிட்டுத் தொடர்பைத் துண்டித்து விட்டார்.

வெளியே விரைந்து வந்து பார்த்தவனுக்கு ஒரு இமைப்பொழுது தலை சுற்றியது. வாகனத் தரிப்பிடத்தின் அருகே இரு சோடிகள் நின்றன.  இருபத்தெட்டு முப்பது வயது மதிக்கத்தக்க ஒரு பெண்ணும் இருபத்திநாலு இருபத்தைந்து மதிக்கத்தக்க ஒரு பெண்ணும் நின்றனர். இருவரும் அழகாய் இருந்தாலும் சிறிய வயதுக்காறியிலேயே இவன் பார்வை நின்றது. பிறகும் இது வயது குறைவாய் இருக்கு என் வயதுக்கு மற்றதுதான் போல என்று எண்ணியவன், அடுத்த கணமே என்னிடம் தான் தொலைபேசி இருக்கே வந்த இலக்கத்துக்கு போன் அடிச்சால் தெரிஞ்சு போகுது என எண்ணியபடி போனை அழுத்த சிறிய வயதுப் பெண்ணின் பக்கத்தில் நின்றவர் தொலை பேசியை எடுக்க இவன் மட்டிலா மகிழ்ச்சியுடன் அவர்களுக்குக் கிட்டப் போய்  வணக்கம் என்றான்.

எழில் வந்து இன்றுடன் மூன்று நாட்களாகிவிட்டன. வந்த அன்றே தங்கையும் கணவரும் வந்து எப்ப திருமணத்தை வைக்கலாம் எனக் கதைத்துவிட்டுச் சென்றனர். மண்டபம் மற்றைய அலுவல் எல்லாம் பார்க்க ஒரு மாதமாவது வேணும் என்று தங்கை கூற இவனும் சம்மதிக்க, இவன் செய்ய வேண்டிய வேலைகளையும் அவர்கள்  செய்ய வேண்டியதையும் பேசிக் கதைத்துவிட்டு நாளையே நல்ல நாள் பார்ப்பதாகக் கூறிச் சென்றபின் இவன் எழிலைக் காதலோடு பார்த்தான். இன்னும் ஒரு மாதத்தில் இவள் என் மனைவி. நீண்ட அடர்ந்த கூந்தலும் எடுப்பான மூக்கும் பெரிய கண்களும் அவளைப் பார்க்கப் பார்க்கத் திகட்டவில்லை அவனுக்கு. மனதில் இவளுக்கு நான் ஏற்றவன் தானோ என்னும் எண்ணமும் கூடவே எட்டிப் பார்க்க அவளருகில் சென்று என்னை உமக்கு உண்மையிலேயே  பிடிச்சிருக்கா என்று கேட்டுவிட்டு அவளைப் பார்த்தான். தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்த எழில் தலையைத் திருப்பி இவனைப் பார்த்துவிட்டு உந்தக் கேள்வியை நான் வந்ததுக்கு  எத்தினை தரம் கேட்டுட்டீங்கள் என அலுத்தபடி மீண்டும் தொலைக்காட்சியில் பார்வையைப் பதித்தாள்.


தொடரும்........

ஒரு பெண் வாழ்வில் வருவது எவ்வளவு வசந்தம் என்று செல்வன் நினைத்து நினைத்து சந்தோசப்பட்டான். நாங்கள் ஆண்கள் என்னதான் விதவிதமா உடுத்தாலும், எதை வாங்கிச் சமைச்சாலும் ஒரு பெண் வீட்டில் இருப்பதுபோல் வராது. அதுக்கும் எழில் போல் அழகிய பெண் சுறுசுறுப்பான பெண் இதுவரை அவன் காணவில்லை. தன்  சகோதரிகளுடன்  ஒப்பிட்டுப் பார்த்தான்.

எல்லாம் அழுமூஞ்சியள். நான் என்னவெல்லாம் அவர்களுக்குச் செய்திருப்பன். யாராவது என்னில அக்கறை காட்டினவையே. ஒரு நாளாவது ஒரு உடுப்புக் கூட எடுத்துத் தந்ததில்லை. அண்ணா உனக்கு என்ன விருப்பம் என்று கேட்டுச் சமைச்சும் தந்ததில்லை. எழில் நல்லாச் சமைக்கிறா. வந்து ரண்டு நாள்தான் நான் சமைச்சது. அதுக்குப் பிறகு விடுங்கோ நான் சமைக்கிறன் என்றுவிட்டு அவளே சமைக்கிறாள். அம்மாவின் சாப்பாட்டுக்குப் பிறகு இப்பதான் ஒரு ரண்டு நாள் நல்ல சாப்பாடு சாப்பிடுறன். இப்படி செல்வன் எண்ணும்போதே ஏன் நீ உன் சகோதரிகளிடம் போகும் வேளையில் அவர்கள் உனக்கு நல்ல உணவே தரவில்லையா? அவர்கள் உன்னிடம் அன்பாக நடக்கவில்லையா என மனச்சாட்சி இடித்தது.

என்ன இருந்தாலும் எழில் போல் வராது என மனம் பிடிவாதமாய் எண்ணிக்கொண்டு இருக்கும் போதே எழில் படுக்கை அறைக் கதவைத் திறந்துகொண்டு வந்தாள். ஓ நீங்கள் எழும்பிவிட்டியளே  என்னை எழுப்பியிருக்க வேண்டியதுதானே. கன நேரம் படுத்திட்டன் என்றவளை இடைமறித்து ராத்திரி நீர் படுக்க லேற் அதுதான் பாவம் எண்டு எழுப்பவில்லை என்றான். சரி நான் அரை மணித்தியாலத்தில குளிச்சு வெளிக்கிட்டு வாறன். நேற்றுக் கதைச்ச மாதிரி முதல் கடைக்குப் போவம் என்றுவிட்டு குளியலறைக்குள் சென்றுவிட்டாள். நேற்று அவனது ஆடைகளைப் பார்த்து என்ன நீங்கள் இவ்வளவு பட்டிக்காடா உடுப்புப் போடுறீங்கள். நாளைக்கு கடைக்குப் போய் முதல் வேலையா உங்களுக்கு கொஞ்சம் மொடேனான உடுப்புக் வாங்கவேணும். விடியக் கடைக்குப் போட்டு வந்துதான் மற்ற வேலை என்றுவிட்டாள். இவனும் எழுந்து ஆடை மாற்றி அவளுக்காகக் காத்திருந்தான்.

அவள் இவனுக்காக தெரிவு செய்த ஆடைகளைப் பார்த்த செல்வனுக்கு கொஞ்சம் கூச்சமாகவும் இருந்தது. பெடியள் போடுமாப்போல இருக்கு என இழுத்தவனை சும்மா இருங்கோ ஒழுங்கா உடுப்புப் போட்ட நீங்கள் எவ்வளவு சிமாட்டாத் தெரிவீங்கள் தெரியுமே. இவளவு நாளும் விடுங்கோ இனி நான் வந்திட்டன் வடிவா உடுப்புப் போட்டுக்கொண்டு திரியுங்கோ எண்டு நாலைந்து சோடி உடுப்புகளைத தெரிவு செய்தாள் எழில்.  மற்றப் பெண்கள் எண்டால் தங்களுக்குத்தான் வாங்கிக் குவிப்பினம். இவள் தனக்கென்று ஒன்றையும் எடுக்கவில்லை. நீரும் உமக்கு உடுப்பு எடுமன் எண்டதுக்கு நான் கொழும்பில வாங்கினது கிடக்குக் காணும். பிறகு பாப்பம் எண்டாள். செல்வனுக்கு மகிழ்வாகவும் பெருமிதமாகவும் இருந்தது.

இவளுக்கு நான் இன்று ஒரு சப்ரைஸ் குடுக்க வேணும் என எண்ணியபடி பணத்தைச் செலுத்திவிட்டு அவளைக் கூட்டிக்கொண்டு நகைக் கடை ஒன்றுக்குச் சென்றான். நகைகள் மேல் பெண்களுக்கு உள்ள ஈடுபாட்டை அவள் முகத்தில் தெரிந்த மென்னகை  காட்டியது. உமக்கு விருப்பமான எதுவெண்டாலும் நீர் எடுக்கலாம் என்றான் அவளைப் பார்த்து. மற்றப் பெண்கள் போல் அவள் நகையைத் தெரிவு செய்வதற்கு அதிக நேரத்தைச் செலவு செய்யவில்லை. ஒரு சோடி காப்பை எடுத்து வடிவாயிருக்கோ என்று இவனுக்குக் காட்டிக் கேட்டாள். வடிவாயிருக்கு உமக்குப் பிடிச்சால் சரி என்று முறுவல் காட்டிவிட்டு இன்னும் இரண்டு சோடி எடும் என்றான். இன்னும் இரண்டு சோடியா என்று அவளின் ஆச்சரியத்தை அடக்க மாட்டாமல் இவனைக் கேட்டவள் இவன் சிரித்துக்கொண்டு ஓம் எனத் தலை ஆட்டியதும் இன்னும் இரண்டு சோடி தாங்கோ என்று கடைப் பெண்ணிடம் கூறிவிட்டு இவனுக்குக் கிட்ட வந்து தாங்க்ஸ் செல்வா என்று ஒரு கிறங்கும் பார்வை பார்த்தாள். இவனுக்கு உச்சியிலிருந்து உள்ளங்கால் வரை எதோ செய்தது.

வீட்டுக்கு வந்தவுடன் காப்புகளைக் கைகளில் போட்டு அழகு பார்த்தவள் இவனருகில் வந்து உண்மையில் எனக்குப் பிடிச்சிருக்கு என்றாள்.
அப்ப எனக்கு ஒண்டும் கிடையாதோ என்று அவளை நெருங்கியவனை இடை மறிப்பதுபோல், நேற்று உங்களுக்கு என்ன சொன்னனான். வெளிநாட்டுக்கு வந்தாலும் எங்கட கலாச்சாரத்தை நாங்கள் மறக்கக் கூடாது. நீங்கள் முறைப்படி எனக்கு தாலி கட்டின பிறகுதான் என்னைத் தொடலாம். அதுவரை இப்பிடி ஆளை ஆள் பாத்துக்கொண்டிருக்கிறதே எவ்வளவு சந்தோசம். இன்னும் மூண்டு கிழமைதானே என கெஞ்சுவதுபோல் கேட்பவளை ஒன்றும் சொல்ல மனமில்லாமல் சரி உம்மடை விருப்பம் என்றுவிட்டு இருக்கையில் அமர்ந்தான்.

இன்னும் இரண்டு கிழமைதான் இருந்தது திருமணத்துக்கு. மண்டப ஒழுங்கு சரி அழைப்பிதழும் எல்லாருக்கும் குடுத்தாச்சு. உணவுகள் எல்லாத்துக்கும் கூட ஒழுங்கு செய்தாகிவிட்டது. நேற்றுத்தான் மாற்றுச் சேலையும் தங்கையைக் கூட்டிக்கொண்டு போய் எடுத்துக் கொண்டுவந்து சட்டையும் தைக்கக் குடுத்தாச்சு. கூறைச் சேலை வேட்டி எல்லாம் அம்மா கொழும்பிலை இருந்து அனுப்பியிருக்கிறா. நேற்று மாலை வந்த தங்கை அண்ணி என்ன நகை வச்சிருக்கிறியள் எண்டு காட்டுங்கோ எனக் கேட்க இவனுக்கே கொஞ்சம் எரிச்சல் தான். இவளுக்குத்தானே எல்லா நகையும் நான் வாங்கிக் குடுத்தனான் என மனதுள் எண்ணியவன் ஒன்றும் சொல்ல முடியாமல் நின்றான்.

எழில் உள்ளே சென்று தன்னிடம் இருந்த நான்கு சோடி காப்புகளையும் ஒரு அட்டியலையும் பழைய டிசயினில ஒரு பதக்கத்தையும் கொண்டுவந்து காட்டினாள். என்ன அண்ணி பதக்கம் உங்கட அம்மாவின்ர போல என்று கேட்க எழிலும் ஓம் எனத் தலை ஆட்ட, இவன் ஏன் அம்மாவின்ரை எண்டால் போடக் கூடாதோ என அவிக் என்று கேட்டான். இவன் கேட்ட விதம் தங்கைக்கே ஒருமாதிரியாகிவிட்டதை அவள் முகம் காட்டியது. அண்ணா நான் நக்கலுக்குக் கேட்கேல்லை. இப்ப இங்க உள்ளவை விதவிதமா நகை போடுவினம். என்னட்டையே எவ்வளவு கிடக்கு. அண்ணி கலியாணப் பொம்பிளை அண்ணியைக் கூட்டிக்கொண்டு போய் நல்ல ஒரு பதக்கம்..... வேண்டாம் நாளைக்கு நானும் வாறன். போய் நல்ல ஒரு நகை எடுப்பம் என்றதும் தன் அவசர புத்தியை எண்ணி செல்வனுக்கே வெட்கமாகப் போய்விட்டது.

அடுத்தநாள் நகைக்கடையில் பத்துப் பவுனில் அழகிய நகை ஒன்றைத் தங்கை தெரிவு செய்தபோது செல்வனுக்கே ஆச்சரியமாகப் போய்விட்டது. ஒரு பெண் இன்னொரு பெண்ணுக்கு விலை உயர்ந்த நகையைத் தெரிவு செய்வதை அவனால் நம்பமுடியாமல் இருந்தது. எழில் கூட கூச்சமடைந்தவளாய் எனக்கு ஏன் இது என மறுக்கவும் கேட்காமல் அவள் கழுத்தில் போட்டு அழகு பார்த்தாள் தங்கை. நகையால் அவள் அழகு கூடியதா அவளுக்குப் போட்டதால் நகை அழகாகத் தெரிந்ததா என்று அவனுக்குச் சந்தேகம் வந்தது. எத்தனை தரம் அவளைப் பார்த்தாலும் அவனுக்குத் திகட்டவில்லை.

இன்னும் ஒருவாரம் தான். கல்யாண வேலைகளில் ஓடியோடிக்  களைத்துவிட்டான். தங்கையும் கணவனும் முன்னின்று செய்தாலும் எத்தனையோ அலுவல்கள் காத்துக் கிடந்தன. ஊரில் சுற்றம் கூடி எல்லாம் செய்வதால் சுமைகள் தெரிவதில்லை. இங்கு இவனுக்கு நண்பர்களும் பெரிதாக இல்லாதபடியால் இவனே மற்ற எல்லாவற்றுக்கும் ஓடவேண்டியதாகிவிட்டது. வாகனத்தை தரிப்பிடத்தில் நிறுத்தியவன் வாங்கிய பொருட்களை தூக்கமுடியாமல் தூக்கிக் கொண்டு போய் வாசலில் வைத்துவிட்டு மணியை அழுத்தினான். கதவு திறக்கவில்லை. எழில் பகல் தூங்கும் வழக்கமுடையவள். தூங்கிவிட்டாள் போல. சரி அவளை எழுப்பவேண்டாம் என எண்ணியவனாக கதவைத் தன்னிடமுள்ள திறப்பால் திறந்துகொண்டு மூன்றாம் மாடிவரை பொருட்களை இழுத்துக்கொண்டு தன் வீடுவரை கொண்டுபோய் சேர்த்தான்.

பள்ளியால் பிள்ளையை அழைத்துக்கொண்டு வந்த தங்கை வீட்டு மணியை தொடர்ந்து அழுத்த சுய நினைவு வரப்பெற்றவனாக எழுந்து சென்று கதவைத் திறந்துவிட்டு தங்கையை வா என்றும் கூறாமல் சென்று கதிரையில் அமரும் தமயனை வியப்புடன் நோக்கினாள் தங்கை.
ஏனண்ணா  உடன வரச்சொன்னனி. அண்ணி எங்க. அண்ணிக்கு ஏதும் வருத்தமே என்று விடாமல் கேள்விகேட்ட தங்கையிடம் நான் ஆருக்கு என்ன செய்தனான். ஏனடி எனக்கு மட்டும் இப்பிடி நடக்கவேணும். ஐயோ ஐயோ என்று தமையன் தலையில் அடித்து அழ தமையன் இதுவரை அழுதே பார்த்திராத தங்கைக்கும் அழுகை வந்தது.

அண்ணா என்னெண்டு சொல்லிப்போட்டு அழுங்கோ என இவள் கேட்க நேற்றுக் கூட நான் மாம்பழம் வாங்கிக் கொண்டு வந்தனானடி. வெட்டிக் கொண்டுவந்து வச்சிட்டு நீரும் சாப்பிடும் எண்டதுக்கு நீங்கள் கடிச்சிட்டுத் தாங்கோ எண்டாளே. இன்டைக்கு இப்பிடிச் செய்து போட்டுப் போட்டாளடி. நான் என்னெண்டு ஆக்களிண்ட கண்ணில முழிக்கிறது என்று விட்டு அழும் தமயனை எப்படித் தேற்றுவது என்ன நடந்தது என்று தெரியாமல் என எண்ணியபடி அண்ணா விசயத்தை சொன்னால் தானேயண்ணா எனக்குத் தெரியும் என்ற தங்கையை  கண்களில் நீருடன் செல்வன் பார்த்தான். நான் கடைக்குப் போட்டு வர அவள் வீட்டில் இல்லை. நான் எல்லா இடமும் தேடிப்போட்டு நீ வந்து கூட்டிக் கொண்டு போனாயோ என்று உனக்கு போன் பண்ண வெளிக்கிட எனக்கு ஒரு போன் வந்திது. எடுத்தால் ஒருத்தன் கதைக்கிறான். நானும் எழிலும் போறம் எங்களைத் தேட வேண்டாம் என்று சொல்லிப் போட்டு போனை வச்சிட்டான். நான் பதட்டத்தில யாரோ அவளுக்கு ஏதும் செய்திட்டாங்களோ எண்டு ஒரு நிமிஷம் நினைச்சிட்டு போய் அறைக்குள்ள பாத்தால் அவளின் சூட்கேஸ் ஒண்டும் இல்லை. பிறகுதான் வடிவாப் பாத்தன் நான் வாங்கிக் குடுத்த நகையள் கூட ஒண்டும் இல்லை என்று கூறிவிட்டு அழும் தமயனை என்ன சொல்லித் தேற்றுவது எனத் தெரியாமல் இரக்கத்தோடு பார்த்தபடி நின்றாள் தங்கை.

முடிந்தது





No comments:

Post a Comment