Saturday 16 November 2013

காதல் கடிதம் - 2

எங்கள் ஊரில் ஒருவர் டுவிஸ்ட் நடனம் ஆடி கின்னஸ் சாதனை படைப்பதற்கு முடிவெடுத்து அதற்கான ஒழுங்குகள் கே கே எஸ் வீதியில் உள்ள சந்தி ஒன்றில் ஆயத்தங்கள் நடைபெற்றுக்கொண்டு இருந்தன. அப்போது நான் காபொத உயர்தரம் முதலாம் ஆண்டு படித்துக்கொண்டு இருந்தேன். எங்கள் ஊரில் உள்ளவர்களுக்கெல்லாம் அது பெரிய வியப்பூட்டும் விடயமாக இருந்ததால், மாலையில் ஒரே சனக்கூட்டமாக இருக்கும்.

தொடர்ந்து பத்து நாட்கள் விடாமல் ஆடுவதுதான் சாதனை. ஏற்கனவே ஒருவர் ஆடி சாதனை படைத்திருந்தார். அவரை முறியடிப்பதற்காய் இது.

முதல் இரண்டுநாட்கள் என்னால் போக முடியவில்லை. மூன்றாம் நாள் நானும் தம்பி தங்கையும் அம்மாவுடன் போனோம். அங்கே மேடையில் பலர் நின்று ஆடிக் கொண்டிருந்தனர். எனது டியூசன் நண்பிகளும் பலர் வந்து நின்று பார்த்துக்கொண்டிருந்ததால் நான் அவர்களுடன் சென்று நின்று பார்ப்பதும் கதைப்பதும் பகிடிவிடுவதுமாக நின்றுகொண்டிருந்தோம்.


சிறிது நேரத்தில் போட்டிக்கு ஆடுபவர் சிறிது ஓய்வெடுப்பதற்காக கதிரையில் இருக்க, இன்னும் இருவர் புதிதாக மேடைக்கு வந்து ஆடத் தொடங்கினர். ஒருவன் நன்றாக ஆடுவதாக எண்ணிக்கொண்டு உடலை வளைத்து நெளித்து எதோ கோமாளித்தனம் செய்துகொண்டிருந்தான். மற்றவன் உண்மையிலேயே மிக நன்றாக இசைக்கேற்ப ஆடினான். அனைவரும் கதையைக் குறைத்து அவனது ஆட்டத்தையே பார்த்துக்கொண்டு இருந்தனர்.

ஒரு அரைமணி நேரமாவது அவன் ஆடியிருப்பான். அதன்பின் போட்டியாளன் மீண்டும் மேடைக்கு வர நன்றாக ஆடும் இவன் மேடையை விட்டுக் கீழே இறங்கினான். அவன் மேடையை விட்டு இறங்கியதும் வெளிச்சமாக இருந்த மேடையில் வெளிச்சம் குறைந்த மாதிரி இருந்தது. நானும் நண்பிகளும் அவனின் ஆட்டத்தைப் பற்றிக் கிலாகித்தோம் கொஞ்ச நேரம். யாரடி அவன் எங்கள் ஊர் தானா என்று ஒருத்தியைக் கேட்டேன். ஓமடி எங்கள் வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கிறான். பெயர் ராம். அனால் நாங்களும் அவர்கள் வீடும் கதைப்பதில்லை என்றாள். பின் மேடையைப் பார்ப்பதை நிறுத்திவிட்டு வேறு கதைகள் பேச ஆரம்பித்தோம்.

என் தங்கை அம்மா வீட்டுக்குப் போக வரும்படி அழைப்பதாகக் கூறியவுடன், சரியடி நான் போகப் போறான் என்றுவிட்டுக் கிளம்ப இன்னும் கொஞ்ச நேரம் நின்றுவிட்டுப் போபடி என்றனர் எல்லோரும். உந்த விசர் ஆட்டத்தைப் பார்க்க நான் இனி நிக்க மாட்டன் என்றுவிட்டு அம்மாவைத் தேடித் போக, அம்மா சக ஆசிரியை ஒருவருடன் கதைத்துக்கொண்டு இருந்தார்.

அம்மாவுக்காகக் காத்துநின்ற வேளை பாடல் மாற ஆட்டமும் மாறுவது தெரிந்தது. நானும் திரும்பி மேடையைப் பார்க்க ராம் மேடையில் ஆடிக்கொண்டு நின்றான். எனக்கு அவனின் ஆட்டத்தைப் பார்க்கவேணும் போல் இருக்க, அம்மா இன்னும் கொஞ்சநேரம் பார்த்துவிட்டுப் போகலாமோ என அம்மாவைப் பார்த்துக் கேட்டேன். அம்மாவும் கதை ருசியில் சரி என்று தலையை மட்டும் ஆட்டிவிட்டு கதைப்பதைத் தொடர்ந்தார்.

நான் மீண்டும் நண்பிகள் இருக்கும் இடம் தேடிச் செல்ல, என்னைக் கண்டதும் எல்லோரும் சிரித்தார்கள். ஏன் சிரிக்கிறியள் என்று நான் கேட்டதற்கு, உன்ர  பேரைச் சொல்லி  திரும்பவும் ஆடச்சொல்லி இவள்தான் தன தங்கையிடம் சொல்லி விட்டவள் என்றுவிட்டு மீண்டும் சிரிக்கவாரம்பித்தனர் நண்பிகள். இவர்கள்  சும்மா கூறுகிறார்கள் என எண்ணிக்கொண்டு நானும் அவனின் ஆட்டத்தை இரசிக்க ஆரம்பித்தேன்.

ராமும் அடிக்கடி நாம் இருக்கும் பக்கம் பார்த்தபடி ஆடுவதுபோல் எனக்குப் பட்டாலும், இவர்கள் நக்கலடித்தபடியால் எனக்கு அப்படித் தோன்றுகிறதோ என எண்ணியபடியே ஆட்டத்தை இரசித்தேன். மீண்டும் கால் மணி நேரம் கழிந்தபின் தங்கை வந்தாள். சரியடி அம்மா கூப்பிடுறா நான் போறான் என்றுவிட்டு அவர்களின் பதிலையும் எதிர்பார்க்காது வந்துவிட்டேன்.

தொடரும் ..............



அடுத்த நாள் என்னால் நடனத்தைப் பார்க்கப் போக முடியவில்லை. மறுநாள் சென்றபோது நண்பிகளும் ஏற்கனவே வந்திருந்தனர். என்னடி நேற்று உன்னைக் காணாமல் எங்கே நீ வரவில்லையா என்று ராம் இரண்டு மூன்று தடவை என்னைக் கேட்டுவிட்டான் என்றாள்  ராம் வீட்டுக்குப் பக்கத்தில் இருப்பவள். சும்மா பகிடி விடாதை என்றுவிட்டு நான் மேடையைப் பார்க்க ராம் உற்சாகமாக எம்மைப் பார்த்தபடி ஆடிக்கொண்டிருந்தான். ஆள் பார்க்க நன்றாகத்தான் இருந்தான். அனால் வயது கூட இருக்கும் போல் இருக்கே என நான் மனதில் எண்ணிக்கொண்டேன். எடி கவி நான் இவனை முன்பு ஒருநாளும் காணவில்லையே. எந்தப் பள்ளியில் படித்தான் என்று கேட்டேன். அவனின் தகப்பன் திருகோணமலையிலோ மட்டக்களப்பிலோ வேலை செய்ததாம். அங்க இருந்து இரண்டு வருசத்துக்கு முந்தித்தான் இங்க வந்தவை என்றாள். என்னடி உனக்கும் அவனில ஏதும் ....என்று அவள் இழுக்க, புதிதாக இருக்கிறானே என்றுதான் கேட்டேனே ஒழிய வேறு ஒன்றுமே இல்லையடி என்று கூறியும் அவள் என்னை நம்பாததுபோல் பார்த்தாள். அவளுக்கு என்னில் சந்தேகம் வந்துவிட்டது என்று எனக்கு விளங்கியது.
அதனால் அடுத்து வந்த நாட்களில் நான் நடனம் பார்க்கப் போகவே இல்லை.

நான்கு நாட்கள் கடந்திருக்கும். நான் குசினிக்குள் கை கழுவிக்கொண்டு இருந்தபோது தற் செயலாகப் பார்த்தால் சயிக்கிளில் என் வீட்டைக் கடந்து சென்றுகொண்டிருந்தான் ராம். எனக்கு ஒரு செக்கன் நெஞ்சு திக்கென்றது. அவன் என்னைக் காணவில்லை. சில நேரம் தற்செயலாக எங்கள் வீதியால் செல்கிறானாக்கும் என எண்ணிக்கொண்டு உணவு அறைக்குச் சென்று திரை மறைவில் நின்று பார்த்தேன். என்வீட்டிலிருந்து இரண்டு வீடு வரை சென்றவன் சயிக்கிலைத் திருப்பிக்கொண்டு மீண்டும் வருவதைக் கண்டதும் எனக்குக் கொஞ்சம் பயம் வந்தது. ஏனெனில் முன்வீட்டுப் பாட்டியும் என் அம்மம்மாவும் எங்கள் வீட்டுத்திண்ணையில் அமர்ந்து கதைத்துக்கொண்டிருந்தனர். என் அம்மம்மாவுக்குக் கண் பார்வை மிகக் கூர்மை அறுபத்தியைந்து வயதிலும் ஒவ்வொருநாளும் பேப்பர் படிப்பார். அதுகும் முன்வீட்டுப் பாட்டி உப்பிடியான விடயங்கள் என்றால் வாசம் பிடித்துவிடுவார். அதனால் எனக்குப் பயம் ஏற்பட்டது.

அடுத்தநாள் காலை பள்ளிக்குச் செல்ல பஸ்சுகாகக் காத்து நின்றால் முன்னால் உள்ள தேநீர்க் கடையில் ராம் அமர்ந்திருந்தான். இது என்னடா தலை வலி என்று எண்ணிக்கொண்டு என்பாட்டில் நின்றேன். நல்ல காலம் கவி என் பள்ளியில் படிக்காததால் தப்பினேன் என எண்ணி கொஞ்சம் ஆறுதலடைந்தேன். அதன் பின் ஒரு வாரம் எனைக் கடந்து ராம் சைக்கிளில் செல்வது அதிகரித்தது. . எனக்கு அவன் என்பின்னே திரிவது தெரிந்தாலும் நன் ஏன் வீணாக வாயைக் குடுப்பான் என்று பேசாமல் இருந்தேன். அடுத்த வாரம் என் பெரியம்மா ராம் வீட்டுக்குப் பக்கத்தில் உள்ள பிள்ளையார் கோவிலுக்குப் பொங்கல் வைக்கத் திட்டமிட்டு என்னை அழைத்தார். நான் மறுத்தாலும் அம்மா விடவில்லை. என் பெரியம்மாவுக்கு இரண்டும் ஆண் பிள்ளைகள். அக்காவுக்கு நீங்கள்தானே பெண் பிள்ளைகள் போய் உதவி செய்யுங்கோ என்று கூறியபடியால் வேறு வழியின்றிச் செல்லவேண்டியதாகி விட்டது.

என்னை வழியில் கண்ட கவியும் எம்முடன் கோவிலுக்கு வந்து பொங்கல் முடியும் மட்டும் கூட இருந்தாள். பெரியம்மா பொங்கி முடிந்து காத்திருந்தும் ஐயர் வரவில்லை. அதனால் அவர் வந்து பூசை செய்து படைக்கும் மட்டும் காத்திருக்க வேண்டும் என்று பெரியம்மா கூறியதால் நானும் கவியும் கதைத்துக்கொண்டு இருந்தோம். திடீரெனக் கவி எடி நீ என் வீட்டுக்கு ஒரு நாளும் வரவில்லை. ஐயர் வருவதற்கிடையில் போட்டு வருவம் வாடி என்றாள். பெரியம்மாவிடம் சொல்லிவிட்டு அவள் வீட்டுக்குச் சென்றால் அவளது வீட்டைப் பார்த்து நான் பிரமித்துவிட்டேன். அவ்வளவு அழகாக இருந்தது வீடு. விலை உயர்ந்த பொருட்களுடன் அழகாக வடிவமைக்கப்பட்டிருந்தது. அவளின் அண்ணன் வெளிநாட்டில் இருக்கிறார். அதனால் எல்லாம் இருந்தன. குளிர்மையாக பிறிச்சிலிருந்து சோடா கொண்டுவந்து தந்தாள்.


இருவரும் குடித்துக்கொண்டு அவள் வீட்டுப் பொருட்கள் பற்றிக் கதைத்துக்கொண்டு இருக்கிறம் கதவைத் தள்ளிக்கொண்டு ராம் உள்ளே வருகிறான். எனக்குக் குடித்த சோடா புறக்கேறாத குறை. கவியின் கண்களில் அதிர்ச்சியும் ஆச்சரியமும். இவள் என்னை வேண்டுமென்றேதான் கூட்டிக்கொண்டு வந்திருக்கிறாள் என்று நான் மனதில் எண்ணிக்கொண்டு இருக்க, என்ன ராம் ஏதும் அலுவலே என்று கவி கேட்கிறாள். ஒண்டும் இல்லை சும்மாதான் வந்தனான் என்று அவன் கூறுவது கேட்கிறது. நான் குனிந்து சோ டாவுக்குள் இருக்கும் குமிழிகளை எண்ண முயல்கிறேன். கவிக்கும் மேற்கொண்டு என்ன கதைப்பது என்று தெரியவில்லை ஒன்றும் கூறாது நிற்க, சரி நான் போட்டு வாறன் என்றபடி ராம் திரும்பிப் போகிறான்.

உதுக்குத்தான் என்னை வீட்டை கூப்பிட்டனியோ என்று நான் அவளைக் கோபத்துடன் கேட்க, எடி நானே அதிர்ந்து போனன். அவையோட நாங்கள் கதைக்கிறேல்ல. சொல்லாமல் கொள்ளாமல் வீட்டுக்குள்ள வந்திட்டான். தற்செயலா அம்மா வந்தா என்ன செய்யிறது எண்டு நெஞ்சு இடிச்சுப் போச்சு. நீ வேறை என்று அவள் நின்மதிப் பெருமூச்சு விட அவள் சொல்வது உண்மை என்று புரிகிறது. சொல்லி வைத்ததுபோல் நாம் இருவரும் விழுந்து விழுந்து சிரித்தோம். பேயறஞ்ச உன்ர முகத்தை இண்டைக்குத்தானடி நான் பாத்தனான் என்று அவள் சிரிக்க, உன் முகமும் தான் என்று கூறி நானும் சிரித்துவிட்டு வாடி கோயிலுக்கே போவமேன்று அங்கு செல்கிறோம்.

அவனுக்கு உண்மையில் உன்னில விருப்பம் போலடி. அல்லது வராத எங்கட வீட்டை வந்திருப்பானோ என்று என்னைப் பார்க்கிறாள் கவிதா. அதுக்கு நான் என்னடி செய்ய நான்... என்று தொடங்கிவிட்டு அவளிடம் என் விடயத்தைக் கூறுவது நல்லதல்ல என்று பேசாமல் இருந்துவிட்டேன். அடுத்து வந்த ஒரு வாரம் மீண்டும் எனக்குப் பின்னால் அவன். நான் அவனை நிமிர்ந்தும் பார்க்கவில்லை. அதற்குக் காரணமும் இருந்தது. ஆனால் அவனாக வாய் திறக்காமல் நான் ஏன் வலியக் கதைப்பான் என்று என்பாட்டில் சென்றுவிட்டேன்.

அடுத்து வந்த சனிக்கிழமை கவி என் வீட்டுக்கு வந்தாள். எடி உவன் றாமின்ர தொல்லை தாங்க முடியவில்லை. உன்னைக் கேட்டுச் சொல்லும்படி ஒரே கரைச்சல். அவன் என்னை மறிச்சுக் கதைக்க ஆரேனும் கண்டால் எனக்கல்லோ கதை கட்டி விடுவினம் என்று அங் கலாய்த்தாள். எனக்கு விருப்பம் இல்லையெண்டு போய் சொல்லடி என்றேன். பாவமடி என்றால் கவி. அதுக்கு நான் என்ன செய்யிறது என்றுவிட்டு அத்தோடு அக்கதையை நிறுத்திவிட்டேன். அவள் சொல்லியிருப்பாள். இனிமேல் அவன் தொல்லை இல்லை என்று நினைத்து அடுத்த நாள் பள்ளிக்குச் சென்றால் தரிப்பிடத்துக்கு முன் சைக்கிளோடு நிக்கிறான். நான் தூரத்திலேயே கண்டுவிட்டதனால் அவன் பக்கம் திரும்பாமலே நின்றுகொண்டேன். இரண்டு நாளின் பின் அவனைக் காணவில்லை. நானும் அவனை மறந்து நின்மதியாக இருக்க நாட்கள் ஓடிப் போனது.


தொடரும் ......


நாளைக்குத் தைப்பொங்கல். வீடுவாசல் எல்லாம் ஒட்டடை அடிச்சு வளவெல்லாம் கூட்டி நெருப்புவச்சு இண்டைக்கு வீடெல்லாம் அம்மாவும் நானும் சேர்ந்து கழுவிக்கொண்டு நிக்கிறம். என்ர சட்டை, அம்மாவின் ரெசிங்கவுண் எல்லாம் நனைந்சுபோய் மும்மரமா வேலை செய்துகொண்டிருக்கிறம் கேற் திறபடும் சத்தம் கேட்கிறது.

யாரென நான் எட்டிப் பார்க்கிறேன். இளவதுடைய இருவர் நிற்கின்றனர். அதனால் அம்மாவைக் கூப்பிடுகின்றேன். அம்மா வந்து பார்த்துவிட்டு வாங்கோ. என்ன வேணும் என்கிறார். நான் யேர்மனியில் இருந்து வருகிறேன். இவன் என் நண்பன். எனக்கு இடம் வடிவாத் தெரியாததால இவனையும் கூட்டிக்கொண்டு வந்தனான் எனத் தன்னை அறிமுகம் செய்கிறான் அவன்.
 யேர்மனியில் இருந்து என்று சொன்னதும் என் அம்மாவினதும் எனதும் முகங்களில் மலர்ச்சி. என் தந்தை யேர்மனியில் இருப்பதால் அப்பாவிடமிருந்து செய்தி எதோ வந்திருக்கிறது என்று அம்மா அவர்களை முக மலர்ச்சியுடன் இருக்கைகளில் அமரும்படி கூறுகிறார்.

நானும் அம்மாவுடன் நிற்கிறேன். ஏதும் கடிதம் இவர் தந்துவிட்டவரோ ?? இவரோடையோ நீங்களும் இருக்கிரநீங்கள் என்று அம்மா தொடர்ந்தும் கேள்விகளைக் கேட்கிறா. ஓம் அக்கா நான் மாஸ்ரருடன்தான் இருக்கிறனான். இரண்டு மாத லீஎவில இங்க வந்தனான். உங்களுக்கு என்ன எலெக்றிக் பொருட்கள் தேவை என்றாலும் என்னை வாங்கிக் குடுக்கச் சொன்னவர் டியூட்டி பிரீல என்கிறான். ஏற்கனவே எம்மிடம் வீட்டுக்குத் தேவையானவற்றை அப்பா முன்னர் வந்தவர்களிடம் கொடுத்துவிட்டார். இனி எந்தத் தேவையும் இல்லை. எனவே அம்மா அவர் எனக்கு இதுபற்றி ஒன்றும் சொல்லவில்லை. அவரிடம்தான் கேட்கவேண்டும் என்கிரா.

சரி நீங்கள் அவரிட்டைக கெட்டுவிட்டே சொல்லுங்கோ. இந்தாங்கோ என்ர விலாசம். யாழ்ப்பாணத்தில முதலாம் குறுக்குத் தெருவிலதான் வீடு. அங்க வந்து சொன்னால் நான் வாங்கித் தாறன் என்றுவிட்டு எதுக்கும் உங்கட விலாசத்தியும் ஒரு துண்டில எழுதித் தாங்கோ. இண்டைக்கு இடம் பிடிக்கக் கஷ்டப்பட்டுப் போனம் என்கிறான். அம்மா என்னைப் பார்க்க நான் உள்ளே சென்று ஒரு ஒற்றையில் வீட்டு விலாசத்தை எழுதிக்கொண்டுவந்து குடுக்கிறன். அவர்களுக்குத் தேநீர் கொடுத்து உபசரித்து அனுப்புகிறோம் நாங்கள்.

என்ன பொருளை வாங்கலாம் என்று என் மனம் அசை போடுகிறது. என் மனதைப் புரிந்துகொண்ட அம்மாவும் எதுக்கும் அப்பா நாளை போன் செய்யும் போது கேட்போம் என்கிறார்.

அடுத்தநாள் அப்பா தொலைபேசியில் அழைத்தபோது நான்தான் முதலில் அப்பாவுடன் கதைக்கிறேன். நீங்கள் அனுப்பிய ஆட்கள் வந்தவை நேற்று என்று நான் ஆர ம்பிக்கவே  நான் யாரையும் அனுப்பவில்லையே என்கிறார் அப்பா. உடனே அம்மா போனை வாங்கி நேற்று நடந்தவற்றைக் கூறுகிறார். அப்பா தான் யாரையும் அனுப்பவில்லை. இனிமேல் தான் போன் செய்யாமல் யார் வந்தாலும் வீட்டுக்குள் விடவேண்டாம். வடிவாக வீதியில் வைத்தே விசாரித்து அனுப்பும்படி கூறுகிறார். வந்தது யாராயிருக்கும் என்று நானும் அம்மாவும் பலவிதமாக யோசித்தும் ஒன்றும் புரியாமல் விட்டுவிடுகிறோம்.

ஒரு மாதம் சென்றிருக்கும். பிரான்சிலிருந்து என் பெயருக்கு ஒரு கடிதம் வருகிறது. நான் அப்பாவின் கடிதம்தான் என்று ஆவலாக உடைக்கிறேன். என் உயரே...... என்று கடித வரிகள் ஆரம்பிக்க கைகாலில் நடுக்கமேடுக்க படக்கெனக் கடிதத்தை மூடி என் அறைக்குச் செல்கிறேன்.

கடிதத்தை வாசித்து முடிக்க மனதில் இப்படி ஒருவன் ரசனையாகக் எனக்குக் கடிதம் எழுதியிருக்கிறானே என்ற ஒரு மகிழ்வும் அவனை காதலிக்க முடியாது என்னால். பாவம் அவன் என்ற இரக்கமும் உண்டாயிற்று எனக்கு. அவன்தான் நடனம் நன்றாக ஆடினானே அவன். நான் ஏற்கனவே காதலில் வீழ்ந்துவிட்டிருந்தபடியால் என் மனதில் அவன் பெரிதாகப் பாதிப்பை ஏற்படுத்த முடியவில்லை. அதன்பின் அவனைக் காணும் வாய்ப்போ அன்றி அறியும் வாய்ப்போ கிடைக்கவில்லை.

No comments:

Post a Comment