எமது பண்பாடும் கலாச்சாரமும் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்தவை. எம்
முன்னோர் தம் அனுபவத்திற் கண்டவற்றை அலசி ஆராய்ந்ததன் பயனாக பல
கட்டுப்பாடுகளையும் பயங்களையும் ஊட்டி எம்மினத்தை ஒரு மேன்மையான இனமாக்கி,
வழிவழியாக இத்தனை காலமாக வழிநடத்தியுள்ளனர். தமிழன் என்றால் அவன் தனக்கென
சிறந்த பண்பாட்டினைக் கொண்டவன் என உலகே அறிந்திருந்த காலம் ஒன்றிருந்தது.
போரின் பின்னரான இடப்பெயர்வுகள் எம்மினத்தின் அனைத்தையும் புலம் பெயர்
தேசங்களில் சிதைத்தது மட்டுமன்றி, தாம் வாழும் தேசத்தின் கலாச்சாரச்
சூழலில் வாழ்வதால் எப்படியும் வாழலாம் எனும் கோட்பாட்டையும் பலர் மனங்களில்
ஏற்படுத்தியுள்ளது. அதன் வெளிப்பாடுதான் புலம் பெயர் தேசத்தில் திருமணமான
ஆண் பெண் இருபாலாரும் குடும்ப வாழ்க்கை வாழும்போதே நெறி பிறழ்ந்து மாற்றான்
மனைவியுடனும், மாற்றாள் கணவனுடனும் தவறான தொடர்புகளை ஏற்படுத்தி தம்
வாழ்வையும் இழந்து, மற்றவர் வாழ்வையும் சிதைக்கின்றனர்.
இதனால் புலம் பெயர் நாடுகளில் வாழும் பல குடும்பங்களின் பிள்ளைகள், பாரிய
இழப்புக்களுடன் வாழவேண்டியவர்களாக, தம் சுயம் தொலைத்து வாழ்வை வீணாக்கிக்
கொள்வது மட்டுமல்லாது, இளம் சமுதாயமும் அவர்களைப் பார்த்து மேற்குலக நாகரிக
வாழ்வைப் பின்பற்ற வேண்டிய கட்டாயத்துக்கும் ஆளாகின்றனர். இதனை ஒரேயடியாக
நிறுத்த முடியாவிட்டாலும் புலம்பெயர் தேசத்தின் எம் இளஞ்சந்ததி ஒரேயடியாக
அந்நியக் கலாச்சாரத்துள் மூழ்காது தடுக்கலாம் என்னும் ஒரு நப்பாசைதான் இதை
எழுதத் தூண்டியது எனலாம்.
பொதுவாகவே பெண்களிற் பலர் பேராசை கொண்டவர்கள். உணர்வுமயமானவர்கள். இலகுவில்
அன்புக்கு அடிமையாகுபவர்கள், ஏமாறக் கூடியவர்கள் என்று பலவகையினர்
உள்ளனர். திருமணமான பெண் தவறு செய்ய எண்ணுகிறாள் என்றால் நாம் உடனே
அப்பெண்ணை தவறாகவே பார்க்கின்றோம். அவள் அத் தவறினை ஏன் செய்கின்றாள் என
ஒரு கணமேனும் எண்ணிப் பார்ப்பதில்லை. பல எதிர் பார்ப்புகளுடன் கணவனைக்
கைப்பிடிப்பவள், அவனிடம் அவை இல்லை என்று தெரியும்போது எத்தனை
ஏமாற்றத்துக்கு உள்ளாவாள் என நீங்கள் எண்ணிப் பார்த்ததுண்டா?
ஏமாற்றத்திற்கு உள்ளானாலும் பின்னர் சுதாகரித்துக் கொண்டு வாழ முற்படும்
மனைவியை கணவனின் செய்கையே அவனிடம் வெறுப்பை ஏற்படுத்திவிடுகிறது. அவளை,
அவளின் உணர்வுகளை, அவளின் ஆசைகளைக் கூட பல கணவர் தெரிந்து கொள்வதில்லை.
தானும் தன்சார்ந்த விருப்பு வெறுப்புக்களையும் அவளிடம் திணிப்பதும், அவளின்
அபிலாசைகளுக்கு மதிப்பளிக்காததும், அவளை இன்னொருவனை நாட வைக்கின்றன.
அதற்கான காரணம், முன்பிருந்த எமது குமுகாய வாழ்வுமுறை இன்று புலம்பெயர்
தேசத்தில் இல்லாமையும், குமுகாயத்தின்பால் இருக்கும்
பயமின்மையும் பொருளாதார வாழ்வாதாரத்தை இங்குள்ள அரசுகள் தாராளமாக
வழங்குவதும், அதனால் பிறர் கையை எதிர்பார்க்க வேண்டிய தேவை
இல்லாதிருப்பதுவுமே பல பெண்களை துணிந்து முடிவுகளையும் எடுக்க வைக்கின்றன.
அன்புக்காக எங்கும் பெண் தன் கணவனிடம் உடனே அது கிடைக்காவிடினும்
காத்திருக்கிறாள். சிலருக்கு அதுவே பழகிப் போய் எதிர்பார்ப்புக்களை
ஓரங்கட்டி வைத்துவிட்டு அந்த ஏதுமற்ற வாழ்விற்கு தன்னைப் பழக்கப்
படுத்தியும் கொள்கிறாள். ஆனால் எல்லாப் பெண்களாலும் அப்படி இருக்க
முடிவதில்லை. எங்கே அந்த அன்பு கிடைக்கிறதோ அதை முன்யோசனையின்றி பற்றியும்
கொள்கிறாள். செக்ஸ் என்பதை விட தன்னில் ஒருவன் அன்பு செலுத்துகிறான்,
அக்கறையாக இருக்கிறான் என்பதே அவளுக்கு பெரிதாகப் படுகிறது. அதனால் தவறு
என்று தெரிந்தும் அவள் மாற்றானிடம் ஆசை கொள்கிறாள்.
பல ஆண்கள், வாழ்வில் ஒரு பெண்ணை பாலினச்சேர்க்கை மட்டுமே திருப்பதிப்
படுத்தப்போதுமானது என எண்ணுகிறான். பாலினச்சேர்க்கை வாழ்க்கையில்
முக்கியம்தான். அனால் கணவனின் ஆளுமை அதையும் மீறி அனைத்து விடயங்களிலும்
இருப்பதையே பெரும்பாலான பெண்கள் விரும்புகின்றனர். படித்த கணவன் தனக்குக்
கிடைக்க வேண்டும் என்பது பல பெண்களின் விருப்பமாக இருந்தாலும் கிடைக்கும்
வாழ்வை மகிழ்வுடன் ஏற்று வாழும் பெண்கள் பலர் இருக்கத்தான் செய்கின்றனர்.
ஒரு ஆண் பெண்ணைக் கவர படித்தவனாக இருக்கவேண்டும் என்பது இல்லை. அவனின்
பேச்சு வன்மையே ஒரு பெண்ணை வீழ்த்தப் போதுமானது. அதன்பின் அவன்
சமூகத்துடுடன் பழகக் கூடிய தன்மை, ஒரு விடயத்தை எதிர்கொள்ளும் துணிவு,
அவனின் நேர்மை என்பனவே ஒரு பெண்ணை, ஆணின் பால் செல்ல வைக்கிறது. ஆனால்
விதிவிலக்குகள் பலவும் உண்டுதான். வெளியே மிகவும் அப்பாவிகள் போல்
தோற்றமளிக்கும் பலர் இரட்டை வாழ்க்கை வாழ்வதை நான் கண்டு
பிரமித்திருக்கிறேன். பல ஆண்கள் அப்படியான பெண்களைக் உலகத்தில் இல்லாத
உத்தமிகள் போல் போற்றுவதும், அவர்களை உதாரணம் காட்டி, அவர்களுக்காகத் தன்
மனைவியை தூற்றுவதையும் கூட பல இடங்களில் அவதானித்தும் உள்ளேன்.
பெண்கள் வீட்டுக்குள் இருக்கும் வரை, பிரச்சனைகள் இருக்காது என எண்ணி
பெண்ணை வீட்டுக்குள் வைத்திருக்கும் ஆண்கள் பலர் இருக்கின்றனர். வீடுக்குத்
தேவையான அனைத்தையும் தாமே வாங்கிவந்து நீ ஏன் கஷ்டப் படுவான். அதுதான்
நானே எல்லாவற்றையும் உனக்குச் செய்கிறேன் என மார்தட்டும் பல ஆண்கள், தன்
மனைவியை வெளியே விட்டால் வேறு ஆண்களை பார்ப்பாளோ, வேறொருவன் என் மனைவி மனதை
மாற்றிவிடுவானோ என தம்மிடமுள்ள தாழ்வு மனப்பாங்கினால், மனைவியின்பால்
சந்தேகம் கொள்ளும் கணவர்களும் பலர் உள்ளனர். சில பெண்கள் அதை உண்மை என்று
நம்பி வாக்கை பூராவும் அவனுக்கு அடிமையாக இருந்தே காலம் கழித்து
விடுகின்றனர். அதை ஏற்றுக் கொள்ளாதவர்கள் வாழ்வில் சிறு சிறு பூசல்களில்
தொடக்கி பெரிதாகி குடும்பம் பிரியும் நிலையும் இதனால் ஏற்பட்டுப்
போகின்றது.
பல பெற்றோர் நன்மை செய்வதாக எண்ணிக் கொண்டு பல பெண்களின் வாழ்வை
தாமே சீரழித்த சம்பவங்கள் கூட எத்தனையோ உள்ளன. பல பெற்றோர் சுயநலம்
மிக்கவர்களாகவே இன்றுவரை உள்ளனர். எழுதுவதற்கும் பேசுவதற்கும் பெற்றோர்
உத்தமர்களாக இருப்பார்கள். பெரும்பாலானவர்கள் யதார்த்த வாழ்வில் முரண்பட்டே
இருக்கின்றனர். அதுவும் மூத்த பெண்கள் என்றால் அவர்கள் கீழே உள்ள
சகோதரிகளுக்காக சிலவேளைகளில் விருப்பமற்ற திருமண வாழ்க்கைக்கு சம்மதித்து,
காலம் முழுவதும் ஒரு இழப்பின் தாக்கத்துடனேயே வாழவேண்டிய
நிர்ப்பந்தத்துக்கும் ஆளாகின்றாள்.
பல ஆண்கள், மனைவியுடன் உறவில் ஈடுபடும்போது அவளின் விருப்பு
வெறுப்புகளிற்கு அப்பாற்பட்டு இயந்திரத்தனமான உறவை மேற்கொள்கின்றனர். ஓர்
இனிய தாம்பத்திய உறவுக்குப் பழக்கப்படாத பெண்ணிற்கு சிலநாட்களிலேயே கணவனில்
வெறுப்பு ஏற்பட்டுவிடும். அத்தகையவர்களும் வேறொருவனை நாடும் சந்தர்ப்பம்
உண்டு. புலம் பெயர் நாடுகளில் வாழ்ந்தாலும் இன்னும் கட்டுப் பெட்டிகளாக
இருக்கும் ஆண்கள் இங்கு நிறையவே இருக்கின்றார்கள்.
ஒரு பெண் தவறு செய்வதற்கான காரணம், அவளுக்கு தானாகவே ஒரு சந்தர்ப்பம் ஏற்படுகிறது அல்லது ஏற்படுத்தப் படுகிறது.
எப்போதும் மதுவில் மூழ்கிக் கிடக்கும் கணவன் தன் மனைவிக்கு நியாயமான
கிடைக்கவேண்டிய உடல் சார்ந்த உறவை வழங்கத் தவறிவிடும் பட்சத்தில், அவள்
இன்னொருவனை நாடுவதை எப்படித் தவறென்று கூற முடியும். இப்படி நான்
எழுதுவதற்கு கல்லெறியாது நியாயப்படி யோசித்தீர்களானால் உங்களுக்குக் கோபம்
ஏற்படாது. ஆனாலும் பெருப்பாலான பெண்கள் அதைக் கூடச் சகித்துக் கொண்டு
வாழ்கின்றார்கள். மேற்கத்தைய சமூகத்துடன் ஒப்பிடும் பொழுது தமிழ்ப் பெண்களை
கணவன்மார் கும்பிடத்தான் வேண்டும். மேற்கத்தேயப் பெண்கள் போல் நாம் வாழத்
தலைப்பட்டால் தமிழ் ஆண்களின் நிலை என்ன ஆகும்.
இன்னும் சில ஆண்கள் தாம் அடிக்கடி மனைவியுடன் உறவு கொள்வதை மனைவி
விரும்புவதாக எண்ணிக்கொண்டு அல்லது தன் பலவீனத்தை மூடி மறைப்பதற்கு
எப்போதும் விரசமாகக் கதைப்பதும், நேர காலம் பார்க்காது உறவில் ஈடுபட
நிர்ப்பந்திப்பதும் கூட பெண்களுக்கு ஆணின்மேல் வெறுப்பையே வளர்க்கும். பலர்
வீடியோ காட்சிகளைப் போட்டு இன்னும் வெறுப்பை அதிகரிக்கச் செய்வர்.
இவையெல்லாம் பெண்களுக்கு உடலுறவில் வெறுப்பைத்தான் ஏற்படுத்தும்.
இப்படியானவையால் நாட் செல்லச் செல்ல ஒருவித இயந்திரத் தனம் தலை தூக்கப்
பார்க்கும் என்கின்றனர் மனோவியலாளர்கள். இப்படியான காரணிகள் கூட பெண்ணை
தடம் புரள வைக்கின்றன.
பலர் வெளிநாடு தானே என எண்ணி மனைவியை மதுவகைக்களுக்குப் பழக்கப்
படுத்துவதும் தன் சொற்ப நேர ஆசைக்காக குடிக்கும்படி வற்புறுத்துவதும்
கட்டாயம் தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று. பெண் பெண்ணாக இருக்கும் வரைதான் ஒரு
குடும்பமும் குடும்பமாக இருக்கும். நாகரிகம் என்பது வேறு பண்பாடு பழக்க
வழக்கம் என்பது வேறு. எம் சமூகத்தில் அதி உன்னத குடும்ப வாழ்வியலை
ஏற்படுத்தியுள்ளனர். அவற்றை உடைந்து போகாது பாதுகாக்க வேண்டிய கடமை ஆண்
பெண் இருவருக்குமே இருந்தாலும் ஆண்கள்தான் வேலியாக இருந்து
காக்கவேண்டியவர்கள்.
ஆண்கள் தானே நாம் எதுவும் செய்யலாம் என்னும் மனப்போக்கும் பல ஆண்களுக்கு
உண்டு. உங்கள் மனைவியிடம் நேர்மையை உண்மையை எதிர் பார்க்கும் நீங்கள்
உங்கள் மனைவிக்கும் உண்மையாக இருக்க வேண்டாமா. என் நண்பியின் கணவன்
பொறுப்புள்ள அப்பா. நல்ல குடும்பத் தலைவன். சமுதாயத்தாலும் மதிக்கப் படும்
ஒருவர். ஆனால் தன நிறுவனத்தில் வேலை செய்யும் பெண்களிடம் அவருக்குத்
தொடர்பு இருப்பதாக பலர் கூறுவதைக் கேட்டு எனக்குக் கோபம் வந்தது.
நண்பியிடம் கூறுவோமா? சரியாகத் தெரியாது எப்படிக் கூறுவது என
எண்ணிக்கொண்டிருந்தவேளை, எனது தொலைபேசிக்கு நண்பியின் கணவர்
அழைத்திருக்கிறார். நான் எடுக்கவில்லை என்பதால் அது தானாகவே தகவல்ப்
பெட்டிக்குப் போய்விட்டது. நண்பியின் கணவர் தொலை பேசியை நிறுத்த மறந்து ஒரு
பெண்ணுடன் வார்த்தைகளில் சல்லாபித்தது என் தொலைபேசியில் பதிவாகிவிட்டது.
நான் செய்திகளை உடனுக்குடன் கேட்கும் பழக்கமற்றவள் என்பதனால் ஒரு வாரம்
செல்ல எல்லாச் செய்திகளையும் கேட்கும்போது இந்த செய்தி எனக்கு
அதிர்ச்சியையும் மகிழ்ச்சியையும் கொடுத்தது. அன்று மாலையே என் நண்பியிடம்
சென்று அதைப் போட்டுக் காட்டி உன் கணவரைக் கொஞ்சம் கவனித்துக் கொள்
என்றேன். அவள் சொன்னாள் என்னுடனேயே அவருக்கு முடிவதில்லை பல
நாட்கள் மற்றவர்களிடமா போகப் போகிறார். சும்மா பகிடிக்குக் கதைத்திருப்பார்
என்றாள் சிரித்துக் கொண்டே. எனக்கு என்ன செய்வது என்றே தெரியாது
மன்னிப்புக் கேட்டுவிட்டு வந்துவிட்டேன். இப்படிப் பட்ட அப்பாவிப் பெண்கள்
இருக்கும் வரை தவறு செய்யும் ஆண்களும் இருந்துகொண்டே இருப்பார்கள் தான்.
பல ஆண்கள் பெண்ணை முழு குடும்பச் சுமையை இழுக்கும் ஒரு வண்டியாகவே இன்றும்
கூட பயன்படுத்துகின்றனர். ஆண்கள் வேலைக்குப் போவது கடினம் தான் இல்லை என்று
கூறவில்லை. அதைவிட பிள்ளைகளை பராமரித்து, சமைத்து, வீட்டுவேலைகள் எல்லாம்
பார்த்து காலை எழுந்தநேரம் தொடக்கி இரவுவரை துன்பப்படும் பெண்களும் பலர்
உள்ளனர். கணவன் மனைவிக்கு ஒரு தேநீர் கூடப் போட்டுக் கொடுப்பதில்லை.
ஆனாலும் பல பெண்கள் சளைக்காமல் குடும்பத்துக்காக உழைத்துக் கொண்டே
இருக்கின்றனர். கணவனுக்கு நோய் ஏற்பட்டால் அதற்காக மனைவி கணவனை விட்டுப்
பிரிந்து போவதில்லை. தன் ஆசைகளை அடக்கி அவனுக்காகவே அவனுடன் வாழ்ந்தும்
விடுவாள். அப்படியிருக்க பெண் பாதை மாறிப் போகிறாள் எனில் காரணம் என்னவாக
இருக்க முடியும் ????நீங்கள் தான் கூற வேண்டும்.
No comments:
Post a Comment