Friday 13 June 2014

முடிவுறாப்பயணம் - கவிதை


கால் கடுக்க நடந்து வந்தும்
கடுகளவும் முடிவுறாப் பயணத்தின்
முடிவு காணா வெற்றிடங்களில்
வினாக்கள் இன்றும் மிச்சமிருக்கின்றன

உயிர்ப்பற்ற உறவுகளின்
ஊழ்வினைகள் கொல்லும் நிலை
உருக்குலையா வாழ்விலும்
ஓரங்களில் ஒட்டியபடி இன்றும்

மகிழ்ந்தாடும் மனதின் மாடி அறைகளில்
மறைப்பதற்கு ஏதுமற்ற மனதோடு
மகுடியின் ஊதல்கள் கலந்து
மயக்கும் வரை கேட்கின்றன

கிழித்த கோடுகளின் எல்லையில்
கிடந்தது அல்லாடும் தடைகள் தாண்டி
கேடயமற்ற போர் வீரனின்
படிமமற்ற எதிர்த்தலிநூடே
பயணிக்கின்றது வாழ்வு

இறுதி மூச்சின் எண்ணங்கள்
எங்குமாக இருக்கப் போகின்றன
எட்டும்வரை முயல்வதாயும்
எட்டாவிடில் விடியலே அற்ற
இரவுகளின் எதிர்பார்ப்புக்களுடன்
தொடரும் வாழ்வின் வசந்தமாய்

Thursday 12 June 2014

தேரோடும்வீதி - கவிதை


எழில் பொங்கும் என்னூரின்
ஏகோபித்த நினைவுகளோடு
என் பயணம் தொடர்கிறது

திருவிழாவின் தெருக்களில்
தென்றலாய் வந்துபோனவைகளும்
வீதியில் தேரோட நீரோட்டமாய்
வந்து போனவைகளும்
மனதில் மங்கலாக வந்து போகின்றன

மார்கழி மாதத்து மரகதத் துகள்களாய்
இன்னும் நெஞ்சத்து அடிப்பரப்பில்
அடர்த்தியாய் ஒட்டிக்கொண்டபடி
அணைத்து ஆறுதல் தருகின்றன

வீட்டோரத்து வெடிப்புக்களின்
இடைவெளிகளில் தவழும்
எறும்புகளின் வரிசையின் கூட்டுப்போல்
எல்லைகளற்று நீள்கின்றன நினைவுகள்

கால்கள் புதையும் கனவுகளோடு
கண்விழித்த காட்சிகள் இன்னும்
பசுமை குலையாத பச்சை வயலாய்

பள்ளிகொள்ளும் போதில் வந்து போகின்றன

எத்தனை கடந்தும் அத்தனையும்
அசைக்க முடியா ஆணிவேராய்
அடிமனத்தின் படிக்கட்டுகளில்

ஆழப்பதிந்து அல்லல் செய்தபடியே



Wednesday 11 June 2014

விடிவெள்ளி -கவிதை




விடிவெள்ளி மீண்டும் வானில் தெரிகிறது
வெடி கண்ட நிலம் போல்
சிதறிய மனம் மீண்டும்
விண்மீன்கள் கண்டு சிரிக்கின்றது

கொடுவானின் இடி மின்னல்
கொடுங் காற்று எல்லாம்
கோரத் தாண்டவம் ஆடி முடித்து
காற்று அலைகளின் சீற்றம் குறைந்து
கோலங்கள் காட்டி நிற்கிறது

வேருடன் மரங்கள் வீழ்ந்தன
எனினும் வாடை அடங்கி
மீண்ட வானின் மிதப்பின் வேகத்தில்
மருண்ட மேகங்களின்
மகிழ்ச்சி ஒலியாய் மீண்டும்
மின்னல் கீறி மறைகின்றன

ஓசை அடங்கக் காத்திருந்தேன்
என் ஆசை அடக்கி மேகத் தீயுள்
மோதும் உன் முகம் காண
முடிவேதும் இல்லா
மழை வானின் எல்லையில்
மண்ணொடு மண்ணாய்
மங்கியும் நானும் மகிழ்ந்திருப்பேன்

முடிவுற்ற வெளியின் முகில்கள் கடந்து
முடிவற்ற என் பயணம் முடிந்து
மலர் கண்ட வனமாய்
மலர்கின்ற மனம் கொண்டு
மீட்டும் உன் இசை கண்டு
முடிவிலா வானில் முடிவுகள் அற்று
மேவும் இசையாய் மின் மினிப் பூச்சிகள்
மனதசைத்துப் பறக்கின்றன

அஸ்தமிக்கும் பொழுதில் - கவிதை



அஸ்தமிக்கும் பொழுதில்
எண்ணங்கள் எருக்களாகி
எட்டமுடியா எல்லைவரை
ஏகாந்தம் தொடரும்

கடுகளவு எண்ணங்கள்
காடளவு கருக்கொள்ளும்
கண்ணிமைக்கும் பொழுது கூட
காலாண்டாய் கனமாகும்

ஒரு துளி வெள்ளத்தில்
ஓராயிரம் புளுதிகளாய்
எண்ணக் கோர்வையில்
ஏதேதோ வந்து போகும்

எல்லாம் இருந்தும்
ஏதுமற்ற ஏதிலியாய்
எல்லைகள் அற்று
எண்ணங்கள் நீண்டாடும்

வண்ணங்கள் நிறமிழந்து
வக்கற்று நிற்பதுபோல்
வகையற்ற கனவுகள்
வந்து வந்து நிழலாடும்

வார்த்தைகள் இழந்த மனம்
வாழ்வின்றி தவிப்பதுபோல்
வித்திட்ட நினைவுகள்
வெளிதனில் நிழலாடும்

ஒன்றெண்ணி ஒன்றற்று
ஓர விழி வரம்பில்
ஒவ்வொரு நினைவுகளாய்
ஓரங்கள் நனைத்திடும்

கானங்கள் அற்ற வரிகளின்
கனதியான காட்சிகளாய்
கட்டுப்பாடுகள் அற்று
கண்முன் கலைந்தாடும்

கரைகாண முடியாத கனவுகளின்
கடைசித் துளி மட்டும்
காட்சியில் விரிந்திருக்க
கண்ணயர முடியாது கரைகிறேன்

சொட்டுச் சொட்டாய் - கவிதை





சொட்டுச் சொட்டாய் இன்பம்
சொக்க வைக்கிறது
சுற்றிவர எல்லாம்
சுகந்தமாய் இனிக்கிறது

சித்திரங்கள் பலவும்
சிறகு விரித்து
சிங்காரமாய் வந்து
செம்மை கொள்ள வைக்கிறது

சில கனவு இனிக்கிறது
சிலது கனக்கிறது
சோர்வற்று மனம்
சொப்பனங்கள் காண்கிறது

சொந்தம் மறக்கிறது
சுமைகள் அறுகிறது
சோகம் மறந்த நிலை
சிகரங்கள் தோற்கிறது

செம்மை படர்ந்த மனம்
சினம் கொள்ள மறுக்கிறது
சிந்தை முழுதும் உன்னை
சிவனாய் நினைக்கிறது

செந்தமிழே உன்னை
சேர்ந்திடக் கண்டேன்
சிதம்பர ரகசியமாய்
சேவிக்க உளம் கொண்டேன்

நிவேதா 
10.05.2014

அன்னையர் தினம் - கவிதை




அன்னையர் தினமதில்
ஆயிரம்பேர் வாழ்த்திடுவர்

அக்கம் பக்கம் எல்லாம்
காணும் பெண்களுக்கு
முகம் மலர வாழ்த்தி
முகமன் செய்திடுவர்

முலை தந்த அன்னை
முனகிக் கிடக்கையிலே
மனம் வந்து ஒன்றும்
மாற்றுவழி செய்திடார்
மக்கள் என்று கூறி
மாய்மாலம் செய்திடுவர்

மலர்ந்த முகத்துடனே
மண்ணிற்குத் தந்தவள்
மனம் கோண நடந்திடுவர்
மதிகெட்டு நின்றிடுவர்
மலர் ஒன்று வாழ்வில்
மயக்கம் தந்தவுடன்
மாற்றான் போல் நின்று
மார்தட்டிப் பேசிடுவர்

மக்களை பெறுகையிலும்
மலர் மேனி நோவெடுக்க
மற்றவற்றை எண்ணாது
மனதாலும் காத்திடும் தாய்
முதுமையின் கொடுமையிலும்
மெலிந்த மனம் தளராது
மேன்மைகள் செய்தே
மேதினி விட்டகல்வாள்
மாதெனும் மகத்தானவள்
மாண்பில் மலையானவள்

காலைக் கதிரவன் - கவிதை




காலையில் கதிரவனின்
கதிரொளியில் கண்விழித்தேன்

கண்ணுறக்கம் தேய்ந்து
கட்டறுத்து ஓடிய
கனவுகள் விடைபெற
கற்பனைக் குதிரைகளும்
காணாமற் போக
கலங்கித்தான் போனது
கனவு தொலைத்த மனது

கோலங்கள் பலகொண்டு
கோடுகள் போட்டு
காண்பவை எல்லாம்
கண்முன்னே கொள்ள
கொஞ்சமும் தயங்காது
கொள்ளையிடத் துடிக்கும்

கோட்டையில் இருந்தாலும்
கொடுமதில் உடைத்து
கொல்லும் இரவதிலும்
கொழுகொம்பு அற்ற
கொடிகளைப் போல்
கோடியில் தவிக்கும்

கேடதுதான் என்றாலும்
கேட்கா மனம் மீண்டும்
கோர்த்திட முடியா
கூட்டுகள் அறுந்திட
குருட்டு நினைவில்
கும்மாளம் போடும்

கட்டுடைய கனிந்த
காலங்கள் காத்திருக்க
கொண்டமனம் என்றும்
குற்றுயிராய் கூறுபோட
கொடுமனம் கொஞ்சமும்
கொள்கை விட்டு வாராது

தடைகள்



தடைகள் ஏற்படும் போது
தவிக்கும் மனதை
எது கொண்டு ஆறுதல் படுத்துவது

பகிர்தலும் எதிர்பார்த்தாலும்
எப்போதுமேயானதாய்
நம்பிக்கையின் ஒருவிளிம்பில்
நகர்கிறது வாழ்வு

மனமிருந்தும் மனமின்றி
அலைவோரை
புரிந்தும் புரிய மறுப்போரை
எது கொண்டு அளப்பது

மாறுதலின் நகர்வுக்குத்
தயார் எனச் சொன்னாலும்
மாற்றமுடியாது அல்லலுறும்
மனதைத்தான் என்ன செய்வது

உணர்தலற்ற நேசம்
உயிரற்ற நட்பு
புரிதலற்ற பாசம்
அகல மாட்டாத மனம்

இத்தனையும் கொண்டு
இன்னும் இருக்கிறது
மாசுபடா நேசம்
மல்லுக்கட்டிக் கொண்டு

எப்படி உரைத்திடினும்
என்மனதின் ஓலங்கள்
அடங்கமுடியா அவலத்துள்
அல்லாடிக்கொண்டே இருக்கிறது

ஆறாத்துயர் - கவிதை


அறுபது மாதங்களாய் ஆறாத் துயர் கடந்து
ஆற்றமுடியா வடுக்கள் சுமந்து
ஆற்றாமையுடன் காத்திருக்கின்றனர்
அடிமைகள் ஆக்கப்பட்ட எம்மக்கள்

கருகிய பூமியில் கால் பதிக்க இடமின்றி
கசங்கக் கிடக்கிறது கந்தகம் சுமந்த பூமி
கொடும் கனல் குருதி தோய்ந்து
கோரங்கள் சுமந்த நந்திக்கடல்
கேட்பார் ஏதுமற்றுக் கேவலுடன் கிடக்கிறது

வீறுநடை போட்ட வெற்றிகள் கொய்த தேசம்
ஏறுபோல் எழுந்து எதிகள் வீந்த தேசம்
எதிரி கைபட்டு எள்ளி நகைபுரியும்
எத்தர்களின் கைகளில் ஏக்கம் சுமந்து
ஏதுமற்று ஏற்றமிழந்து கிடக்கிறது

வந்தவரை வரவேற்று வயிறார வழிசெய்து
வள்ளல்களாய் வாழ்ந்தவர்கள்
வாய்க்கரிசி கூட இன்றி வக்கற்று
கருணையற்ற கயவனிடம் கையேந்தும்
கடை நிலையில் கண்ணிழந்து நிற்கின்றார்

மானத் தமிழரென மார்தட்டி வாழ்ந்தவர்
வீணாய் வீழ்ந்ததில் வலுவிழந்து வக்கற்று
விளலுக்கிறைத்தது போல் வீணாகிப் போகின்றார்
வருமுன்னே காத்து வாழ்ந்த இனம்
வந்தபின்னும் காப்பதற்கு யாருமின்றி
வருந்தி அழுதேதான் வடிகால் தேடுகின்றார்

உடலும் உயிரும் ஊரெல்லாம் இருக்கிறது
எதுவும் அற்றதாக எத்தனையோ இருக்கிறது
உணர்வைச் சொல்வதற்கு உடமை கொள்வதற்கு
உயிரோடு எரிந்தவரை உரிமையாய் நினைப்பதற்கு
உரிமையற்று நாம் உளம் எரிய நிற்கின்றோம்

நாமும் இருக்கின்றோம் நாடுகள் தோறும்
நலிந்தவர் நலம் நாடாது நிற்கின்றோம்
நாடிழந்து நமக்கானதெல்லாம் இழந்து
நாயை விடக் கேவலமாய் நாதியற்று நிற்கின்றோம்
நமக்காக எதுவுமின்றி நட்டாற்றில் நிற்கின்றோம்

எம்முறவு படும் பாட்டை ஏக்கத்துடன் கேட்டும்
கிடைக்காத நம்பிக்கையை கிடைத்ததாய் எண்ணி
வருந்தாதவர் எல்லாம் வருந்துவதாய் நடித்து
கொடுக்காததைக் கொடுத்ததாய்க் கூறி
கொட்ட முடிந்தவற்றைக் குப்பையாய் கொட்டி
மூட முடிந்தவற்றை எம்முள்ளே போட்டு மூடி
எங்கும் இருக்கின்றோம் எதுமற்றவர்களாக

வானம்


இன்றும் வானம் இருள் சூழ்ந்தபடி
கார்முகில்கள் கண்ணசைக்கக்
காத்திருக்கின்றன

காற்று வீசாது மௌனம் காத்து
கரைபுரளும் கார்முகிலின்
கண்ணீர் துடைக்க
கலங்கிக் காத்திருக்கிறது

ஆனாலும் இன்றின் போதில்
என் மனதில்
எதுவுமில்லை ஏக்கங்கள்
எதுவுமற்றதாயும்

அதனையும் எனக்காய்
ஆவலுடன் காத்திருப்பதாய்
ஆழ்மனதில் ஏற்பட்டுப் போன
அசைக்கமுடியாத
நம்பிக்கையின்பாற்பட்டு
நலிவுகளின் நம்பகத் தன்மையை
அறுத்தெறிந்ததாய்
ஏக்கங்கள் விடைபெற்று
எல்லாமும் எனக்கேயாகி
எதுவுமற்று நானிருக்கிறேன்

என் வீடும் அயலும் - கவிதை





என் வீடும் அயலும் என் நினைவில் வந்து போனது
பக்கத்து வீட்டு பாட்டியும் பாட்டனும்
பொக்குவாய் கொண்டு சிரிக்கும் சிரிப்பும்
பாக்கு வெற்றிலை இடிக்கும் சத்தமும்
பழைய நினைவாய் வந்து போனது

எதிர் வீட்டு அக்காள் எமக்குத் தெரியாமல்
எம்வீட்டுப் பூக்களை பறித்து வந்ததும்
எதுவும் கூறாமல் கொடுப்புள் சிரித்து
எதிரி வேறென எமக்கே சொன்னதும்
இன்று நினைப்பினும் சிரிப்பு வருகுது

எங்கள் துலாவில் ஏக்கங்கள் அற்று
எவ்வளவு தண்ணியும் அள்ள முடித்ததும்
வாக்கால் வழிந்தோட கால்கள் நனைத்து
வரம்புடைந்து வளவு நனைந்ததும்
வீட்டுக்காரரின் வசைகள் கடந்து
வசந்தமாய் சிரித்ததும் நினைவில் நிக்குது

கிட்டிப் புள்ளும் கிளித்தட்டும்
கீரைக் கறியும் கிழங்குகளும்
பக்கத்து வீட்டில் பறித்த மாங்காய்
பருவம் தப்பிப் பழுத்த பலா
முறிந்து விழுந்த வாழைக்குலை
முற்றாது பறித்த மாவின் காய்
மூலையில் பூத்த முருக்கம் பூ
கோடியில் படர்ந்த முசுட்டை என
முழுவதும் நினைவில் நிற்கிறது

தொடருந்தின் தடம் பார்த்து
தொலைவுவரை தொடர்ந்ததுவும்
தூரத்தில் தெரிந்த பனந்தோப்பை
தாண்ட முடியாது தயங்கியதும்
தெரிந்த முகங்கள் தொலைவாய்ப் போக
தோப்புக்குள் இருந்த தோடம்பழத்தை
தொப்பியால் மூடிக் கடத்தியதும் ...

காலம் எங்கள் கனவு சிதைத்து
கோலங்கள் பல காட்டியே நிற்க
கனவுகள் கடந்து நாம் கண்விரிய
வாடைக்காற்றில் அகப்பட்ட வள்ளமாய்
வேர்கள் அறுத்து வெளிநாடு வந்தோம்
கோடை இடி என் தேசம் சிதைக்க
கொண்ட கொள்கை கோட்பாடிழந்து
காலத்தின் வசத்தில் கேள்விகளாகி
எத்திசையும் எம் திசையாக்கி
எல்லை மறந்து வாழ்கின்றோம்

ஏனோ எம் மண்ணின் நினைவு
எப்போதும் எம்முடனே இருக்கின்றது
ஆனாலும் எந்தையர் எமக்காய் வாழ
ஏதுமற்று ஏதிலியாய் இருக்கின்றது
காய்ந்து போன காட்சிகள் மட்டும்
கனவுகளின் மீட்டல்களோடு
கந்தலாகிப் போன சுற்றங்களுடன்
காற்றில் மட்டுமே கேட்கும் கானமாய்
கைவிட்டுப் போன எம் கனவுகள் போல
எப்போதாவது வரும் ஏக்கங்கள் தாங்கி
நிலையான நினைவாகி நிலைத்துப் போனது

நிவேதா  

29.05.2014

வலிகள்


வலிகள் தாங்கி நட்புக்கு ஓர் கடிதம்

முகம் தெரியா முகப் புத்தகத்தில்
முதலும் முழுதுமாய்த் தெரியாது
கவிதைகளும் கதைகளும் கற்பனை கூட்ட
கண்டுணர்ந்தோம் நாம்

நல்ல நட்பென்றால் யாதெனில்
நன்மையையும் தீமையும்
உண்மையும் பொய்யும்
உள்ளதை உள்ளபடி உரைத்திடலே

முகம் பார்த்துத் தவறைச் சரியென்றும்
உண்மையைப் பொய்யென்றும்
முகத்துக்காய் உரைப்பது நன்றல்ல
முகமன் கூறும் நட்பல்ல

உள்ளொன்று வைத்து இன்னொன்று கூறும்
இல்லாதவற்றை இருப்பதாய்க் காட்டும்
வேடங்கள் போட்டு வேடிக்கை காட்டும்
வென்றிட உன்னை ஏதேதோ கூறும்

பகுத்தறிவை இறைவன் தந்தான்
பகுக்க உன்னால் முடியவில்லை
உந்தன் கூட்டில் உன்னை அன்றி
யாரும் வர முடியவில்லை

சொற்ப காலம் சொந்தமாய் எண்ணினேன்
சகோதரி போலென பொய்யா சொன்னாய்
உண்மை என நானும் நம்பிவிட்டேன்
உத்தமன் நீ என எண்ணிவிட்டேன்

எல்லாமே உந்தன் பொய் முகம் என
எனக்கு நன்கு காட்டிவிட்டாய்
நட்புப் புரியா மூடன் நீ
நாலு பேர்கள் போதும் உனக்கு
நாடு போற்ற வாழ்ந்திடுவாய்
நண்பா நீயும் பல்லாண்டு

வானப் பெருவெளி



வானப் பெருவெளியில் வாழ்வு
விரிந்தே கிடக்கிறது
எண்ண முடியாத
நட்சத்திரங்களின் கணக்குகளாய்
எதிர்காலம் எம்முன்னே

மின்மினிப் பூச்சிகளாயும்
மெர்க்குரி விளக்குக்காளாயும் மனிதர்
முகமூடி அணிந்தபடி
விட்டில் பூச்சிகளாயும் சிலர்
மீள முடியாத் தூரத்தில்

வேடம் கட்டும் மனித வாழ்வில்
விதவிதமாய் வெற்றிடங்களும்
வேதனையின் குவியல்களுமாய்
விவரிக்க முடியாத வினாக்களுடன்
வேகத் தடைதாண்டியுமாய்

வீணாகிப் போன காலங்கள்
கணக்குகளில் வரமுடியா புள்ளிகளாய்
எப்பொழுதும் ஏக்கத்தின் எதிர் வினைகளுடன்
தாக்கம் புரிந்தபடி
தாங்கொணா துயரம் சுமந்தபடி

தேசம் கடந்தும் தெருவோர திண்ணைகளில்
தூங்கும் மனிதர்களாய் சிலர்
நாட்களின் மீதப்பரப்பை நகர்த்தி
நம்பிக்கைகள் கொன்று
நகரமுடியா நினைவலைகளுள்
நிரந்தரமாய்ச் சிக்குண்டபடி

எதுவும் எப்போதும் நிலையற்றே இருக்கிறது
காட்சிகளின் நீட்சியில் கசந்தபடி
கண் மறைக்கும் கயமைகளின் காட்சிகளும்
மீதமிருக்கும் மானுடத்தின்
மிகைப்படுத்தலின் மிதப்பில் மனனம் செய்தபடி
நாட்கணக்கானாலும் நகராத வாழ்வுடனும்
தீரா ஆசைகளுடனும் திக்கித் திணறியபடி

எண்ணங்கள்



எண்ணங்கள் எப்போதும்
எதிரொலிகளாய் நிரப்பப்பட்டிருக்கின்றன
எல்லையற்ற வெற்றிடங்களின்
ஏகாந்தத்தில் கற்பனைகள்
கண்டபடி பாய்கின்றன

மனதின் விருப்பத்துக்கும்
ஆசைகளில் அலைதலுக்கும்
அங்கீகரிக்காதவை கூட
அகலக்கால் வைத்தபடி

எத்தனை தூரமும்
எத்தனை வேகமும் கொண்டதாய்
எந்திரங்கள் போலன்றி
எதிர்ப்பற்று எங்கெங்கோ அலைகின்றன

ஏன்தான் இத்தனை ஆசைகளோ
எவரோடும் ஒப்பிட்டு ஒப்பற்று
எதிரிகளாகின்றன எண்ணங்கள்
எப்போதும் எம் மனதுக்கு ஏற்ராற்போல்
எம்மை மட்டும் நினைவில் கொண்டபடி

இயற்கை







இயற்கை எம்மை இயன்றவரை
விட்டு வைத்திருக்கின்றது
எதோ தன்னாலான இரக்கத்தோடு
எல்லோரையும் இட்டு நிரப்பியபடி

தூயனவாய்க் காற்று துகள்களற்று
தலைவிரித்தாடாததால்
நாம் தப்பிப் பிழைக்கிறோம்
தரையில் நடக்கிறோம்

கோபத்தின் உச்சியில் ஆழ்கடல்
கொந்தளிக்காததால்
கூரைகளின் கீழ் நாம்
குதூகலங்கள் சுமந்தபடி
குளிர் காய்கிறோம்

தீயின் நாக்குகள் தீவிரமற்று
திசைமாறி இருப்பதனால்
தீங்குகள் அற்று நாம்
தில்லுமுல்லுகள் செய்தபடி
தினாவெட்டாய்த் திரிகிறோம்

பயிரிடா நிலங்கள் பரிதவிப்பின்றி
பக்குவமாய் இருப்பதனால்
பசுமை குன்றினும்
பாறைகளாகி பயன்பெறா மாந்தனின்
போலி முகம் கண்டும் தாம்
பொறுமை கொண்டு நிற்கின்றன

வானப்பெருவெளி வீழ்ந்துவிடாது
வெடிப் பிளம்புகள் சூழ்ந்துவிடாது
வெட்டி மாந்தரின் வேடிக்கை கண்டும்
வெஞ்சினம் கொண்டு வேரறுக்காது
வேடிக்கை பார்த்தபடி விண் முகடு தாண்டி
விடிகற்களாய் வீளாதிருக்கின்றன

ஆயினும் நாம் எப்போதும் எவற்றையும்
எண்ணியே பார்ப்பதில்லை
எல்லாம் இவ்வுலகில் எமக்கானதென்று
இறுமாப்புக் கொண்டு அக்கறையற்று
அல்லாடலோடு அகந்தை கொண்டு
ஆசைகளோடு ஆர்ப்பரித்திருக்கிறோம்

மனம்

 
 
 
 
அலை கடலாய் ஆர்பரிக்கும்
அப்பப்போ அமைதி கொள்ளும்
எட்டாத எல்லையெல்லாம்
எப்படியோ கடந்துவிடும்

ஏட்டிக்குப் போட்டியாக
எதுவும் செய்துவிடும்
ஏக்கம் கொண்டு பின்னர்
எதை எதையோ எண்ணிவிடும்

மார்க்கம் கண்டபின்னர்
மட்டிலா மகிழ்ச்சி கொள்ளும்
முந்தை வினைப்பயனை
முழுதுமாய் நம்பிவிடும்

அன்பு கொண்டு ஆட்படும்
அகந்தை கொன்று அகப்படும்
சிந்தை நிறைந்து சிரிக்கவைக்கும்
செம்மை கொண்டு சிலிர்க்கும்

சொந்தங்கள் தேடி சொர்கங்கள் கூட
சந்தங்களாகி சத்தங்கள் ஓய
நித்தமும் ஓய்வின்றி
நித்தியக் கடனாகி
நினைவின்றி ஓடும் மனம்
 
 
 

ஆதங்கம்



கொஞ்ச நாட்களாக நான் நின்மதியாக இருக்கிறேன். முன்பென்றால் எந்த நாள் என்றாலும் என் மனம் பதைபதைக்கத் தொடங்கிவிடும். கதைக்க ஆரம்பித்தால் நிறுத்தவே மாட்டாது தொடர்ந்து இரண்டு மூன்று மணி நேரம் என்னை அப்படியே விட்டுவிடுவாள். எப்போதடா இவள் கதைப்பதை நிறுத்துவாள் என ஒவ்வொரு நொடியும் எதிர்பார்த்தபடி நான் வேறொன்றும் செய்ய முடியாது பார்த்துக்கொண்டே இருப்பேன்.

ஆரம்பத்தில் எல்லாம் அவள் பேசுவது எனக்கு சந்தோசமாகத்தான் இருந்தது. போகப் போக எனக்கே சலித்துப்போய் விட்டது. யார் தான் தொலைபேசியை அதுவும் கைத் தொலைபேசியைக் கண்டு பிடித்தானோ என்று அவன் மேல் எரிச்சல் எரிச்சலாக வரும். அவன் கண்டு பிடித்தது நல்ல நோக்கத்துக்குத்தான். ஆனால் இவளைப் போன்ற பலர் அதை பயன்படுத்தத் தெரியாமல் துர்ப்பிரயோகம் செய்வதுதான் எரிச்சலைக் கொடுக்கிறது எனக்கு.

இப்படித் தொடர்ந்து கதைத்துக்கொண்டிருந்தால் இவளுக்கு நாளாக ஆக காதே கேட்காது விட்டுவிடும். அதை அவளிடம் கூறுவோம் என நினைத்தும் அவள் என்ன நினைக்கிறாளோ என எண்ணி இதுவரை கூறவே இல்லை. என்னதான் கதைக்கிறாள் என ஓட்டுக்கேட்போமா என ஒவ்வொரு தடவையும் எண்ணுவதுதான். பின்னும் எதற்காக மற்றவர் விடயத்தில் தலையிடுவது என்னும் நாகரிகம் கருதி கேட்பதே இல்லை.

திருமணமாகிக் குழந்தை குட்டி எல்லாம் கூட இருக்கிறது. முன்பு சில நாள் மாலையில் சமையல் செய்தபடி எல்லாம் கதைத்துக்கொண்டிருப்பாள். பார்த்துக்கொண்டிருக்கும் எனக்கு கறி அடிப்பிடிக்கப் போகிறதே என்று பதைப்பாக இருக்கும். ஆனால் இப்பொழுது மாலையில் சமைத்து நான் பார்த்ததில்லை. அதிகாலையில் சமைக்கிறாளோ??? அல்லது கடைச் சாப்பாடுதானோ தினமும் நானறியேன். காலை எழு மணிக்கு வேலைக்குச் செல்ல தயாராகும் போதுதான் நான் அவளைப் பார்ப்பேன். அதன்பின் இரவு ஒன்பது பத்து வரை அவளுடனேயே இருப்பது.

கணவனுக்கு முன்னாள் அவள் ஒருநாளும் தொலை பேசியில் யாருடனும் அரட்டை அடித்ததில்லை. தப்பித்தவறி யாராவது போன் செய்தால் ஒன்றில் போனை எடுக்காது விட்டுவிடுவாள். அல்லது எடுத்து நான் பிசியாக இருக்கிறன். பிறகு கதைப்பமோ என நல்ல பிள்ளையாகச் சொல்லிவிட்டு போனை வைத்துவிடுவாள். பார்த்துக்கொண்டு இருக்கும் எனக்குச் சிரிப்பு வரும் தான் ஆனால் சிரிக்கவே மாட்டேன்.

ஒருநாள் கூட என்னை மறந்து அவள் விட்டுவிட்டுச் சென்றதே இல்லை. ஒருமுறை மறந்துவிட்டாள் தான். எனக்கு மனதின் மகிழ்ச்சி சொல்லி முடியாமல் இருந்தது. ஆனாலும் எல்லாம் சொற்ப நேரம் தான். போனவள் பத்து நிமிடத்தில் மீண்டும் வந்துவிட்டாதனால் என் அற்ப சந்தோசம் அழிந்துபோனது.

தொலைபேசியில் கதைத்துக்கொண்டு வாகனங்களை ஓட்டக் கூடாது என்று என்னதான் சட்டம் போட்டாலும் இவள் மட்டுமல்ல இன்னும் பலரும் தொலையபேசியில் பேசாது வாகனத்க்தைச் செலுத்துவதே இல்லை. அப்படியிருந்தும் ஒரு தடவை போலீஸ் மறித்து அறுபது பவுன்ஸ் அறவிட்டுவிட்டதுதான். ஒரு வாரம் காருக்குள் அவள் தொலைபேசியை எடுக்கவே இல்லை. நானும் சந்தோசம் கொண்டேன். இனிமேல் இவள் காருக்குள் கதைக்கும் தொல்லை இல்லை என்று. அடுத்த வாரம் மீண்டும் தொணதொணப்பு ஆரம்பித்துவிட்டது.

நான் இவளிடம் வந்து கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகிறது. இதற்கு முன் யாரோ தெரியவில்லை. இன்னும் ஒரு ஆண்டு இவளின் சித்திரவதைகளைத் தாங்கிக் கொண்டு நான் இருக்கவேண்டித்தான் இருக்கும். அதன் பின் என்னை என்ன செய்வாள். தூரப் போட்டுவிட்டு புதிதாக ஒன்றை வாங்கிவிடுவாளோ என்று என்னும்போதே எனக்கு வலித்தது. என்னதான் துன்பம் என்றாலும் அவளுடன் கூட இருந்தே பழகிவிட்டது. அவள் குரலும் கேட்க இனிமைதான். அதனால் அடிமனதில் அவளுடன் தொடர்ந்து இருக்கும் ஆசை ஒட்டிக்கொண்டே இருக்கிறது. பார்ப்போம் என்ன செய்கிறாள் என்று.

மனிதர்கள்





மனிதர்கள் ஏன் இப்படி இருக்கின்றனர் ??????

நல்லவர் கெட்டவர் அறியாது
நயவஞ்சகப் பேச்சுக்கள் புரியாது
பல்லிளித்துப் பழகும் எவரையும்
பால்போல என நினைத்து .....

மற்றவர் மனதறியாது
மார்க்கம் எதுவும் தெரியாது
மதிநுட்பமும் புரியாது
மடையர்களாய் இன்னும் ....

தரம் பிரிக்கத் தெரியாது
தன் தரமும் அறியாது
தவிலின் பக்கங்களாய்
தம்பட்டம் அடித்தபடி......

மனதின் வலி புரியாது
மயக்கும் வார்த்தை கண்டு
மறையும் அறிவு கொண்டு
மறைந்து வாழ்ந்தபடி .......

காற்றுக் கொள்ளுமட்டும்
கதவு திறந்தாலன்றி
சுவாசம் நிலைத்திடாது
சுத்தமாய் ஆகிடாது ....

இறைவன் அறிவு தந்தான்
இயன்று பார்க்கச் சொன்னான்
சிந்தனைச் சிறகடித்து
சோர்வுகள் அறுத்து நீ
மாயைகள் மட்டற
மனதைப் படிக்கவேண்டும்

விந்தை மனிதா நீ
விழிப்புற வேண்டும் இன்னும்
சிந்தை முழுதும்
செழிப்புற வேண்டும்
பகுத்து அறியும் பக்குவம்
படித்து அறிதல் வேண்டும்

தேசம்



உனக்கும் எனக்குமான இறுமாப்பு
ஏகாந்த வெளிதனில்
எல்லைகளற்று விரிந்திருந்தது

அதுவே இன்று நிட்சயம் அற்றதாய்
நம்பிக்கையற்றதாய் நாளும்
நடுவானில் நூலறுந்த பட்டமாய்
நரகமாகிக் கொண்டிருக்கிறது

எந்நேரமும் உச்சரிக்கும்
இரகசிய மந்திரமாய் மனம்
ஏக்கங்கள் கண்டு இன்றும் வாழ்கிறது
ஏதிலியாய் எதுவுமற்று

வாழ்தலற்ற வகையின்றி
வரம்புகள் கடந்தோம் தான்
வகை தெரியா மூடர்களாய்
வெற்று வெளியில் நாமின்று

வேலிகள் எதுவும் இன்றி
விழுதுகள் கூட இன்றி
வேடர்களின் வில்லாய் நாம்
வசமானோம் வரப்புகள் இன்றி

விதியின் சதிதானா வீழ்ந்தது
மதியின் தவறிய கணக்காய்
மனிதம் தொலைத்த மனம்
மிச்சத்தின் எச்சங்களாக எங்கும்

எண்ணக் கணக்குகள் தவற
எதிரிகள் எண்ணற்றுப் போக
எதுமற்றவர்களாய் நாங்கள்
எப்படியோ வீழ்ந்தோம்

வீழ்ந்ததன் பின்னரான வலி
என்ன செய்து என்ன யார் வந்தும் என்ன
எதுகொண்டும் என் மனதை
ஆற்றவே முடியவில்லை

வாழ்வின் பாதைகள்







வாழ்வின் பாதைகள் எல்லாம்
வகுக்கப்பட்டிருக்கின்றன
கோடுகளோடு மேடு பள்ளங்களோடு
கோடுகள் அற்றதாயும்
நெளிந்தும் வளைந்தும்

ஆனாலும் நாமும் முயல்கிறோம்
மூழ்குகிறோம்
முடிவே அற்று ஓடுகிறோம்
முடிந்தவை எல்லாம் செய்து
மூர்க்கத் தனக்களோடு
மூழ்கி முத்தெடுக்கும் ஆசையுடன்
முடியாதவைகளுக்குமாய்
முடிந்தவரை மூச்சடக்கி

ஆனாலும் எல்லாம் அளவற்றதாகி
அல்லும் பகலும் ஆட்படுதளோடு
அகல்வினை நோக்காது
குறை வினை கொண்டு
கூர்ப்புகள் அறியா மானிடராய்
கார்ப்புகள் மறவா கடையராய்
ஈர்புவிசையில் இழுபடும்
இலத்திரனியல் சாதனமாய்

சிந்தனை அற்றதான
சிகரங்கள் தொட முடியா
சீர்கேடுகள் கொண்டு
சிறகுகள் அற்றதாகி
செக்கு மாடுகளாய் தினமும்
சினத்தின் வசம் வார்த்தைகள் இல்லை
சீராவதற்கும் வழியேதும் இல்லை
சொற்ப நாளின் சுவைகள் அறிய
சூத்திரங்கள் அற்றபடி வாழ்வு

வசந்த காலம் - கவிதை





வசந்த காலத்தின் வருகையோடு
மனம் வாசனை கொள்கிறது
இருண்ட வானின் எண்ணம் களைந்து
இயல்பாய் எல்லாம் இருக்கிறது

கோலங்களும் காலங்களும்
கோட்பாடுகள் மறந்து வாழ்வதில்லை
கோடு கிழித்து காலம் கடத்தாது
கடமைகளைச் சரிவரச் செய்கின்றன

ஏற்பாடுகளின் எதிர்த்தலின்றி
எல்லோர்க்கும் எல்லாமானதாய்
எள்ளளவேனும் எதிர்பார்ப்புகளின்றி
எல்லைகளே வகுக்க முடியாதபடி

பருவங்களின் செழிப்பில்
பார்க்குமிடமெங்கும் பக்குவமடைந்து
பலன் எல்லாம் படைப்பிற்க்காய்
பாகுபாடு கொஞ்சமுமின்றி
பாரெங்கும் சேவை செய்கின்றன

காய்களும் கனிகளும்
பூக்களும் புனைவுக்களுமாய்
புதுப்புது அர்த்தங்கள் காட்டி
புரையோடிப் போகாது
பசும் புரட்சி செய்கின்றன

ஆனால் நாம் நாளும் பொழுதும்
இயற்கையின் எச்சங்களை
இயல்பின் இருப்பற்றதாக்கி
ஏதுமற்ற எதிர்வினைகளோடு
எதிர்பாத்துக் காத்துக் கிடக்கிறோம்


நிவேதா 
10.06.2014

காலங்கள்


காலங்கள் கடந்தன தான் எனினும்
கடந்து வந்த பாதைகளின்
கால்த்தடங்களின் வடுக்கள்
இன்னும் மனதில் அடையாளமாய்

எத்தனையோ எண்ணங்கள் சுமந்து
எதிர்க்க முடியாத எதிர்பார்ப்புக்களுடன்
இறுமாப்புக்களும் கடந்து
கடத்த முடியாத நாட்களுடன்

கனவுகளின் கட்டவிழ்ப்புக்களும்
கரை காணா மொட்டவிழ்தல்களுமாய்
முகைவெடித்து மணம் பரப்பி
முற்றிலும் முடிவற்றதாய் வாழ்வு

வானம் அளாவி வால்நட்சத்திரங்களாய்
எதிர்காலத்தின் எண்ணிக்கையோடு
ஏகாந்தத்தின் எல்லைகளற்று
எப்போதும் எதிர்வு கூறல்களோடாய்

எப்படியோ கடந்து வந்த காலத்தின்
கருப்பும் வெள்ளையுமான பக்கங்கள்
கண்ணில் அப்பப்போ தெரிகின்றது
காட்சிப் பிழைகளின்றி கனவுகளில்

எதிர்க்க முடியா ஏக்கங்கள்
இன்னும் இருக்கின்றன என்னுடனே
எப்போதாகிலும் நனவாகும் நம்பிக்கையுடன்
பாடையின் படுக்கைவரை பசுமையாக