Thursday, 12 June 2014

தேரோடும்வீதி - கவிதை


எழில் பொங்கும் என்னூரின்
ஏகோபித்த நினைவுகளோடு
என் பயணம் தொடர்கிறது

திருவிழாவின் தெருக்களில்
தென்றலாய் வந்துபோனவைகளும்
வீதியில் தேரோட நீரோட்டமாய்
வந்து போனவைகளும்
மனதில் மங்கலாக வந்து போகின்றன

மார்கழி மாதத்து மரகதத் துகள்களாய்
இன்னும் நெஞ்சத்து அடிப்பரப்பில்
அடர்த்தியாய் ஒட்டிக்கொண்டபடி
அணைத்து ஆறுதல் தருகின்றன

வீட்டோரத்து வெடிப்புக்களின்
இடைவெளிகளில் தவழும்
எறும்புகளின் வரிசையின் கூட்டுப்போல்
எல்லைகளற்று நீள்கின்றன நினைவுகள்

கால்கள் புதையும் கனவுகளோடு
கண்விழித்த காட்சிகள் இன்னும்
பசுமை குலையாத பச்சை வயலாய்

பள்ளிகொள்ளும் போதில் வந்து போகின்றன

எத்தனை கடந்தும் அத்தனையும்
அசைக்க முடியா ஆணிவேராய்
அடிமனத்தின் படிக்கட்டுகளில்

ஆழப்பதிந்து அல்லல் செய்தபடியே



3 comments:

  1. வணக்கம்
    வீட்டோரத்து வெடிப்புக்களின்
    இடைவெளிகளில் தவழும்
    எறும்புகளின் வரிசையின் கூட்டுப்போல்

    ஆகா ...ஆகா....நினைவுக்கு மிக அருமையான உவமையை ஒப்பிவித்துள்ளீர்கள்
    வாழ்த்துக்கள்.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-



    ReplyDelete
  2. வணக்கம்.
    சகோதரர் ரூபன் சொல்லியிருப்பது போல //வீட்டோரத்து வெடிப்புக்களின்
    இடைவெளிகளில் தவழும்
    எறும்புகளின் வரிசையின் கூட்டுப்போல்// இவ்வரிகள் அருமையான கவிதைக்கு முடி சூட்டுகின்றன.
    வாழ்த்துகள்!

    ReplyDelete
  3. சிறப்பான உவமைகளுடன் சிறந்த கவிதை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete