Saturday 26 April 2014

Eurostar இல் ஒரு பயணம்

ஒரு முக்கிய அலுவல் காரணமாக இரண்டு நாட்கள் பிரான்சுக்குப் போக வேண்டி இருந்தது. மற்றும்நேரம் வேறு ஆட்களுடன் சேர்ந்தோ அல்லது எமது வாகனத்திலோ ரணல் வழியாக பலதடவை போயிருக்கிறேன். ஆனால் அதிவேகத் தொடருந்தில் செல்வது இதுதான் முதற்தடவை.

இம்முறை கோமகனையும் சுசீலாவையும் சந்தித்துவிட்டு வருவோமா என்று ஒரு எண்ணம் எழுந்தாலும், இரண்டு நாட்கள் நின்மதியாக இருப்பதை விட்டு கோவிடம் போய் நெருப்புப் பிடிச்ச கதையையும் எப்பிடி எத்தனை மணித்தியாலம் பல்கனியில் நின்றோம் என்பதையும், எத்தனை வாகனங்கள் எத்தனை மணிநேரம் அங்கு நின்றன, யார் யார் போன் செய்தார்கள் என்னும் விபரங்களைக் கேட்க மனம் வராததால் அங்கு போவதில்லை என்று முடிவெடுத்தேன்.

பயண நேரம் இரு மணித்தியாலங்களும் பதினைந்து நிமிடங்களும். டிக்கெட் புக் செய்யும் போது இரண்டு மணி நேரத்துக்கு முன்பே போடிங் என்று போட்டிருந்ததால் வெள்ளணப் போய், வாற போறவையை ஆவெண்டு பார்த்துக்கொண்டே இருந்ததில நேரம் போட்டுது.

இருபது நிமிடம் இருக்க எல்லோரும் ஏறும்படி அறிவிப்பு வந்தது. எனக்கு வாகனம் ஓடும் பக்கம் இருந்தால் தான் பிரச்சனை இல்லை. எந்த சீட் வருதோ என்று தேடிக்கொண்டே போக நான்குபேர் இருக்கும் நடு இருக்கையில் இடம் கிடைச்சிட்டுது. அதிலும் மேலே குத்துமதிப்பா இலக்கத்தைப் போட்டிருக்கே ஒழிய எந்த இருக்கைக்கு எந்த இலக்கம் என்று இல்லை. என்ன செய்வது. எனக்கு யன்னல் கரையோரம் இருக்கத்தான் ஆசை. ஆனால் யாராவது வந்து எழும்பச் சொன்னால் என்ன செய்வது என்று எண்ணி அடுத்த பக்கம் இருந்த ஒரு கிழவனை இதில் எப்படி எனது சீற்றைக் கண்டுபிடிப்பது என்று கேட்டேன்.

உனது இலக்கம் உள்ள மின்குமிழ் அழுத்தியில் அழுத்து. எந்த இருக்கைக்கு வெளிச்சம் விழுகிறதோ அதுதான் உன் இருக்கை என்றார். அழுத்தியவுடன் யன்னலோட இருக்கையில் வெளிச்சம் விழுந்தது.பெரியதொரு மன நின்மதியுடன் எனது பொருட்களை தலைக்கு மேல உள்ள தட்டில் வைத்துவிட்டுக் கைப்பையை மட்டும் மடியில் வைத்துக்கொண்டு அமர்ந்தேன்.

சிறிது நேரத்தில் ஒரு வயதுபோன பெண் எனக்குப் பக்கத்தில் வந்தார். என்னை மேலும் கீழும் ஒருமாதிரிப் பார்த்துவிட்டு எனது பொருட்களுக்குப் பக்கத்தில் தனது பொருட்களை வைத்துவிட்டு அமர்ந்தார். அமர்ந்தவுடன் அங்கால் திரும்புவதும் இங்கால் திரும்புவதுமாக சிறிது நேரம் நெளிந்தார். எனக்குப் பக்கத்தில் இருப்பது அவருக்குப் பிடிக்கவில்லை என்று தெரிந்தது. நான் என் பாட்டில் அமர்ந்திருந்து அவரின் செயல்களைப் பார்த்துக்கொண்டு இருந்தேன். மீண்டும் சிறிது நேரத்தில் தன் கைகள் இரண்டையும் பக்காவாட்டில் அகட்டி எனக்கு கைகளால் இடிப்பதுபோல் அழுத்துவதும் நெளிவதுமாக, எனக்குக் கோபம் ஏற்படத் தொடங்கியது.

சுமே இன்னும் மெலியவில்லை அதுதான் இருவருக்கும் இடம் போதவில்லை என்று நீங்கள் எண்ணுவது புரிகிறது. இடம் தாராளமாகப் போதும். எதோ ஒரு துவேசத்தில் அவர் அப்படிச் செய்கிறார் என்று புரிந்தது. நானும் ஒரு பத்து நிமிடங்கள் பொறுத்துப் பார்த்தேன். அவரின் குரங்குச் சேட்டை தாங்க முடியவில்லை. அவர் பக்கம் திரும்பி உனக்கு என்ன பிரச்சனை என்றதும் அந்தப் பெண் அதை எதிர்பார்க்காதது அவரின் பதட்டமான செயற்பாடுகளில் தெரிந்தது. உனக்கு எனக்குப் பக்கத்தில் இருக்க விருப்பம் இல்லை என்றால் எழுந்து சென்று வேறு இடத்தில் இருந்துகொள் என்று கூறியவுடன் எமக்கு முன்னால் இருந்த ஒரு கறுப்பினப் பெண் சிரிக்கத் தொடங்கிவிட்டாள். அதன் பின் அந்தக் கிழவி  பேசாமல் நல்ல பிள்ளைபோல் வந்திது.

அதன்பின்தான் நான் பார்த்தேன் தொடருந்து கிளம்பிச் சென்றுகொண்டிருந்ததை. கையோடு கொண்டு சென்ற கதைப்புத்தகத்தைத் திறந்து வாசிக்கத் தொடங்கினேன். கதை மிகச் சுவாரசியமாகப் போய்க்கொண்டு இருந்தது. நான் நிமிர்ந்து பார்க்கும் நேரம் எல்லாம் வயல்வெளிதான் தெரிந்தது. இன்னும் நிலக்கீழ் பாலம் வரவில்லையே??? எவ்வளவு நேரம் நிலத்துக்குக் கீழே ஓடும் என்ற கேள்விகள் எல்லாம் என்னுள் எழ, சரி வரும்போது பார்ப்போம் என்று மீண்டும் புத்தகத்துள் புதைந்தேன்.

கதைப் புத்தகம் வாசித்து முடிந்து நிமிர்ந்தால், இனி என்ன செய்வது வெளியேதான் புதினம் பார்க்க வேண்டும் என்று எண்ணி பார்த்துக்கொண்டே இருக்கிறேன் பாலம் வரவே இல்லை. முன்னுக்கு இருக்கும் கறுப்பி நட்புணர்வுடன் காணபட்டதால், பாலம் எப்போது வரும் என்றேன் அவளைப் பார்த்து. பாலம் கடந்து நாற்பத்தைந்து நிமிடங்கள் ஆகிவிட்டது. இன்னும் பதினைந்து நிமிடத்தில் கார்டிநோரில் நிக்கும் என்ற பின்தான் நேரத்தைப் பார்த்தால் நேரம் எனக்குத் தெரியாமல் ஒன்றரை மணி ஓடி இருந்தது.

தரிப்பிடத்தில் இறங்கி வெளியே வர எனது நண்பியும் நண்பனும் ஒருவரை ஒருவர் பார்க்காமல் நின்றிருந்தனர். அவர்களுடன் உரையாடியபடியே நண்பியின் வீட்டுக்குச் சென்று உணவருந்தி, அரட்டை அடித்து அன்றைய பொழுது போனது.

அடுத்தநாள் காலை வெள்ளனவே எழுந்து வந்த அலுவலைப் பார்க்கப் புறப்பட்டு, மீண்டும் லண்டன் நோக்கிய பயணம். ஒரு சக ஆசிரியை என்னைக் கொண்டுவந்து தொடருந்து நிலையத்தில் விட்டுவிட்டுப் போய் விட்டார். அங்கே மதிய உணவு உண்டதுதான் ஆனாலும் உணவைப் பார்த்ததும் ஆசை எழுந்தது,

சரி ஒரு மணிக்குச் சாப்பிட்டது. எப்பிடியும் வீட்டை போக ஆறுமணி ஆகும் ஏதாவது வாங்குவம் எண்டு கடையில் வரிசையில் நின்று காம் (Ham) தக்காளி, சலாட் எல்லாம் வைத்துப் பார்ப்பதற்கு அழகாக இருந்த ஒரு பகற் (Baghuette) தண்ணீர், மற்றும் சொக்ளற் பெட்டி வாங்கிக் கொண்டு வந்து தொடருந்தில் ஏறியாச்சு. திரும்பவும் புத்தகத்தைத் திறந்து வைத்துக்கொண்டு அதில் மூழ்கிப்போனேன்.

எனக்குப் பக்கத்தில் இம்முறை இருந்தது ஒரு இளம் பெண். அவரின் நான்கு பிள்ளைகளும் அக்கம் பக்கத்தில். ஒரே சந்தைக்கடை. தொடருந்து புறப்பட்டு நாற்பது நிமிடம் ஓடியிருந்தது. பிள்ளைகளும் அம்மாவும் போட்டி போட்டுக்கொண்டு கடைபரப்பி வைத்துக்கொண்டு விதவிதமாக வயிற்றுக்குள் எல்லாவற்றையும் போட்டுக்கொண்டிருந்தனர்.

எமது உணவு போல் வாசனையாக இல்லாவிட்டாலும் உணவின் மணம் மூக்கின் வழியாக உள்ளே சென்று என்னை நின்மதி இழக்கச் செய்துகொண்டிருந்தது. பொறுத்துப் பார்த்து தண்ணீர் குடித்துப்பார்த்தும் சரிவரவில்லை. சரி இதைச் சாப்பிட்டு ஒரு கிலோ கூடப்போறனோ என்று எண்ணியபடி பகற்றை (Baghuette) எடுத்து உண்ணத் தொடங்கினேன்.

புத்தகத்தை வாசித்தபடியே எவ்வளவு மெதுவாக உண்ண முடியுமோ உண்டு முடித்து குப்பையைப் போட்டு முடிய ஏதோவொரு வித்தியாசம் என்னால் உணர முடிந்தது. இரண்டு அலகுகளும் உள்பக்கமாக வீங்கி வாயைத் திறப்பதற்கு சிரமமாக இருந்தது. பயம் பிடித்துக்கொண்டதனால் உடனே எனது பாரிஸ் நண்பிக்குத் தொடர்புகொண்டு விபரத்தைக் கூறினேன்.

அவரும் என்ன நீர் தேவையில்லாமல் உதுகளை வாங்கிச் சாப்பிட்டுக்கொண்டு என்று சொல்ல முதலே போனின் தொடர்பு துண்டிக்கப்பட்டுவிட்டது. என்னடா என்று பார்த்தால் தொடருந்து நிலக்கீழ் பாலத்துள் செல்லத் தொடங்கியிருந்தது. வரவர தொண்டை எங்கும் வீங்கி என்ன செய்வது என்று தெரியவில்லை. மூச்சு முட்டுவதுபோல் ஒரு நினைவா உண்மையா என்று தெரியாத நிலை. எதற்கும் முன்நெச்சரிக்கையாக இருக்கட்டும் எனப் பக்கத்தில் இருந்த பெண்ணிடம் விடயத்தைக் கூறினேன்.
அவர் உடனே பயப்பிட வேண்டாம். நன்றாகத் தண்ணீரைக் குடி என்றார்.

தண்ணீரைக் குடித்துவிட்டு கண்களை மூடியபடியே பின்னால்ச் சார்ந்து அமர்ந்து கொண்டேன்.

இத்தனைக்கும் அன்றுமுழுவதும் எனது இடது கண் துடித்தபடியே இருந்தது. எனக்கு ஒன்றும் ஆபத்தில்லை என மனம் சொல்ல என்னை அறியாமலே தூங்கத் தொடங்கினேன். எனது தொலைபேசியில் மணி அடிக்க எழுந்து பார்த்தால் இன்னும் பத்து நிமிடங்களில் தரிப்பிடம் வந்துவிடும் என்று அறிவிப்புக் கேட்டது.

ஊரோடும் உறவோடும் உயிரிற்கு மேலான மண்வாசனையோடும் உறவாட

http://poongkaadu.blogspot.uk/

 20 February 2014

பெண்ணின் மனது - கதை

தேவகிக்குத் தன்னை நினைக்கவே ஒருபுறம் சிரிப்பாகவும் மறுபுறம் பச்சாதாபத்துடன் கூடிய அழுகையும் வந்தது. வாற மாதம் வந்தால் இவ்வுலகில் எண்பது ஆண்டுகளைக் கழித்துவிட்ட நிறைவு. இன்னும் எத்தனை நாட்களோ மாதங்களோ வருடங்களோ யாரறிவார் என்னும் எண்ணம் தோன்றினாலும் நான் இன்னும் கொஞ்சக் காலம் இருப்பன். அவ்வளவு லேசில போயிடமாட்டன் என்னும் ஒரு நம்பிக்கையும் ஏற்பட்டு ஏனோதெரியவில்லை அதனூடே சிரிப்பும் வந்தது.

சிறிய வயதில் எல்லாம் தன் நாட்களை நினைத்துப் பார்த்தால் துன்பங்களும், நிறைவேறாத ஆசைகளும், போராட்டங்களுமாக வாழ்வின் இளமைக்காலம் கழிந்தது. பின்னர் வந்த காலங்களில் தன் முயற்சியில் மனம் சோராது போராடியிராவிடில்  இன்று இப்படி ஒரு நிலையினை அடையக்கூடியதாக இருந்திருக்குமா என்று மனம் பெருமையும் கொண்டது.

தான் இல்லாவிட்டால் தன் குடும்பம் மாத்திரமல்ல தன்  கணவர் கூட இந்த நிலையை அடைந்திருப்பாரா என்பது சந்தேகம்தான். ஆனால் அந்த மனிசனுக்குத்தான் அது விளங்குதில்லையே என மனதில் ஒரு ஆற்றாமையும் வந்து சேர கண்களில் கண்ணீர் எட்டிப் பார்த்தது.

என் கணவருக்கு நான் என்ன குறை விட்டேன். என்னைத் தேய்த்து, என் முகம் வெளியே காட்டாது கணவரை இத்தனைதூரம் பேரும் புகழும் அடைய வைத்தும் எந்த வித நன்றியும் இன்றி ஆண் என்னும் மமதையில் என்னவெல்லாம் பேசிவிட்டார்.

சோமருக்கும் கொஞ்ச வயதில்லை. இன்னும் ஆறு மாதங்களில் எண்பத்தைந்தாகிவிடும். வயது போகப்  போக  பொறுமையும் அமைதியும் வந்துவிடுமென இவள் எண்ணியதற்கு மாறாக அவருக்கு சிறுசிறு விடயங்களுக்கெல்லாம் ஏற்படும் கோபங்களும் அதன் காரணமாக இவளை நோக்கி வீசப்படும் வார்த்தைகளும் வரவரத் தாங்கமுடியாது போய்விடுகிறது தேவகிக்கு.

எத்தனை தரன் சொன்னாலும் கேட்காது ஒவ்வொரு சின்னச் சின்ன விடயங்களுக்கெல்லாம் அவளை ஏவுவதும் உடனே செய்யாவிட்டால் வன்சொற்களால் வசைபாடுவதும் அவள் எதோ தனக்கு இட்ட பணிகளைச் செய்யவே வேலைக்கு அமர்த்தப்பட்டவள் போல் அவளை நடாத்துவதும் அவளால் தாங்கவே முடிவதில்லை.

இப்பிடிப் பாக்கப்போனால் வெள்ளைக்காரர் மாதிரி அவையவையே தன் தன் வேலை பார்த்திருந்தால் இந்த வயசுபோன காலத்தில எனக்கு இந்தக் கஷ்டம் வந்திருக்காது என எண்ணினாள்.எங்கட கலாச்சாரம் பண்பாடு என்று இப்ப நான் எல்லோ அவதிப்படுறன் என்று தனக்குள்ளேயே நினைத்தவளுக்குச் சிரிப்பு வந்தது.

அவள் சோமரைத் திருமணம் செய்து அறுபது ஆண்டுகள் ஓடிவிட்டன. இத்தனை ஆண்டுகள் கழித்து வெளிநாட்டில் வாழ்வதனால் இப்படிக்கூட எனக்கு எண்ணத் தோன்றுகிறதே. அப்ப எங்கட இளம் பிள்ளையளைக் குற்றம் சொல்லி என்ன என்றும் மனம் இவளைச் சாடியது.

பிள்ளைகள் தம்முடன் வந்து இருக்குமாறு எவ்வளவோ வற்புறுத்தியும் ஏனோ இவளுக்கு அவர்களைச் சார்ந்து இருப்பதர்ற்கு விருப்பம் இல்லை. இவளுக்கு மட்டுமல்ல சோமருக்கும் அதே கொள்கைதான். பென்சன் காசு வருது. நாங்கள் எங்கட பாட்டில இருக்கிறதுக்கு எதுக்கு மற்றவைக்குக் கரைச்சல் கொடுப்பான் என்று எண்ணியதும் ஒரு காரணம்தான்.

ஆனால் இப்ப கொஞ்சக் காலமாய் என்ன சமைக்கிறாய், ஆக ரண்டு கறிதான் வச்சனியோ, எனக்கு குளிசை போடவேணும் கெதியா சாப்பாட்டைத் தா, மத்தியானம் கட்டாயம் மூண்டு கறியாவது இருக்கவேணும் எண்டெல்லாம் சோமர் செய்யும் அட்டகாசத்துக்கு அளவே இல்லாமல் போனது. நான் மட்டும் என்ன குமரியே. எனக்கும் ஆரும் சமைச்சுத் தந்தால் சும்மா இருந்து சாப்பிட ஆசைதானே என எண்ணியவளுக்கு மனதெல்லாம் எதுவோ அடைத்தாற்போல் இருந்தது.

நேற்று சோமரின் பென்சன் கடிதம் ஒன்றைக் காணவில்லை என்று, இவள்தான் எங்கோ வைத்துவிட்டாள் என அவர் போட்ட கூச்சலில் இவளுக்கும் கோவம் வந்துவிட்டது. நான் ஒண்டும் உங் களுக்கு வேலைக்காரி இல்லை மரியாதையாக் கதையுங்கோ எண்டு இவளும் என்றுமில்லாதவாறு குரலை உயரத்தில் கத்த சோமருக்கு வந்த கண்மூடித்தனமான கோவத்தில் உன்னைச் சாக்காடிப் போடுவனடி என்று இவள் கழுத்தில் கையை வைத்துவிட்டார்.

ஒரு செக்கன்  இவளுக்கு மூச்சே வராமல் கழுத்தை அங்கும் இங்கும் ஆட்டி அவரிடமிருந்து விடுவித்துக்கொண்டு தன்னை அசுவாசப்படுத்தவே பெரும்பாடாகப் போய்விட்டது. தன்  அறைக்குள் போய் சின்னப்பிள்ளை போல் விக்கிவிக்கி அழுதபின் தான் அவள்மனம் ஆறுதல் கொண்டது. எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தால் என்ன ஆண்களின் அடக்கும் புத்தியை எண்ணி அவர்பால் ஒருவித வெறுப்பும் வந்தது.

இன்றுவரை அவருடன் பேசவுமில்லை. அவருக்கு எதுவும் செய்யவில்லை. மனதில் ஒரு கோபத்தோடு இனி நான் உவருக்கு ஒண்டும் செயிறேல்ல. தனிய எல்லாம் செய்தால்த்தான் விளங்கும் என்று மனதுள் கறு வியபடி காலையில் எழுந்து தனக்கு மட்டும் தேநீர் போட்டு பாணுக்கு சலாமி வச்சு தனியச் சாப்பிட்டு, நீர் இல்லா விட்டாலும் என்னால் எல்லாம் செய்ய முடியும் என்று காட்டுவதாய் அன்று முழுவதும் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டு காலம் கழித்தாள் தேவகி.

மதியம் இரண்டுமணியாகியும் அவள் எழும்பவில்லை. அவளுக்குக் காலமை சாப்பிட்ட சாப்பாடு செமிக்கவும் இல்லை. சோமர் இரண்டு மூண்டு தடவை அவளைக் கடந்து போனார்தான். அவள் அவரை நிமிர்ந்தும் பார்க்கவுமில்லை. ஒரு பத்து நிமிடம் கழிஞ்சிருக்கும். என்னப்பா இண்டைக்கு ஒண்டும் சமைக்கேல்லையே. பசிக்குதப்பா என்று வெட்கம் கெட்டு சோமர் இவள்முன் வந்து நின்று கேட்கவும் இரண்டுநாட்களாக இருந்த கோபம் வெறுப்பு எல்லாம் எங்கோ ஓடிப்போக இன்னும் நீங்கள் சாப்பிடேல்லையே என்று எதுவும் நடக்காததுபோல் எழுந்து சமையலறைக்குச்  செல்கிறாள் தேவகி.

 23 January 2014

மறந்திடோம் வீரர்களே!! - கவிதை

 
எம்தமிழ் தேசத்திலே ஏற்றமுடன் நாம் இருந்தோம்
செந்தமிழ் தேசத்திலே சேர்ந்து நாம் வாழ்ந்திருந்தோம்
அத்தனை உறவுகளும் ஆவலாய்க் காத்திருந்தோம்
அண்ணன் பிரபாகரனின் ஆணையில் வாழ்ந்திருந்தோம்
விடுதலை விலங்ககலும் வேளைதான் பார்த்திருந்தோம்
விதி செய்த வலையினதில் வெந்தே நாம் வீந்துவிட்டோம்


அஞ்சி அஞ்சி நாம் அடிமையாய் வாளோமென
அன்னை மண்ணின் அடிமை விலங்கொடிக்க
வெஞ்சினம் கொண்டே வேங்கைகள் எழுந்தனர்
போராட்ட வீரராய் போர்க்கோலம் பூண்டனர்

சொத்து சுகங்கள்  சொந்தங்கள் இழந்தனர்
பருவ வயதின்  பற்றெல்லாம் துறந்தனர்
அன்னை மண் காத்திட அத்தனை பேரும்
ஆயுதங்கள் தாங்கி ஆணைகள் காத்தனர்

புன்னகையுடன் அன்று பொருதிடச் சென்றனர்
புறநானூறு படைத்தே புனிதராய் நின்றனர்
சுதந்திரம் வேண்டி சுவாசத்தைச் சிறைப்பிடித்து
விடுதலை வேட்கையின் வடுக்கள் ஆயினர் 

பொன்னான மேனியையே போருக்காய்த் தந்தனர் 
போராட்ட வீரர்களாய் புண்ணாகி வெந்தனர்
பகைவன் படை துரத்தி பார் புகழ வைத்தனர்
பார்த்தோர் வியக்க நம் தேசம் அமைத்தனர்

அத்தனையும் எத்தர்களால் அழிந்து போனதுவே
உத்தமர்கள் எல்லாம் உருக்குலைந்து போயினரே
யார் கண் பட்டதுவோ யாம் செய்த பாவமதோ
உலகமெலாம் சேர்ந்தெம்மை உழுது போட்டனரே

என்ன சொல்லி நாமழுதும் ஏதும் வரப்போவதில்லை
எத்தனை பாடுபட்டோம் எள்ளளவும் பயனுமில்லை
ஏங்கி நாம் உமை நினைந்து எப்போதழுதாலும்
என்றும் நீர் எம்முன்னே எழுந்து வரப் போவதில்லை

காலத்தின் கோலமடா கார்த்திகை தீபமடா
கண்களில் நீரலைய காத்திருக்கின்றோமடா
காலங்கள் கரைந்திடினும் கனவை நனவாக்க
காரிருளில் கரைதேடி கால்பதிக்க காத்திருக்க

கார்முகில் கரையொதுங்க கண்மணிகள் உங்கள்
கனவு நிறைவேற்றும் கணப்பொழுது  வந்திடும்
போராசை கேட்கும் பூமியின் விலங்கொடியும்
புனிதர்கள் உம்கனவு நம் மண்ணில் நனவாகும்

நன்றியுடன் நாமும் நிதமும் உமை நினைந்து
மலர் தூவி மணிவிளக்கேற்றிக் காத்திருப்போம்
மண் மீட்க மடிந்திட்ட  மகத்தான மனிதர்களே!!
மானுடம் உள்ளவரை மறந்திடோம் வீரர்களே!!


நிவேதா
21.11.2013

பேதைப் பெண்ணே - கவிதை

பெண்ணின் பெருமை பேசி
பெண்ணை அடிமை கொள்வார் 
பெண்ணைப் புகழ்ந்து பாடி 
பேதைமை கொள்ள வைப்பார்
பொன்னே மணியே என்றும்
பூவின் வாசமென்றும்
பேசிப் பேசிப் பெண்ணைப்
பேச்சிழக்க வைத்திடுவார்
பூரணை நிலவுபோல்
புகுந்தவீடு வருபவள்
பத்தும் தேய்த்து தான் தேய்ந்து
பழையதாய் ஆகியபின்
பெண்ணா நீ என்று
பேசியே கொன்றிடுவர்
பாலைவனத்தின் பசுந்தளிரே
போதை கொள்ள வைக்கும் 
பணக்கள்ளே பவளமே
பென்னரங்கே பொன்மணியே
போற்றி உனைத் தொழுவேன்
பவளமே எனக் கூறிப்
பத்திரமாய்ப் பூட்டிவைப்பார்
பாவையரை வீட்டினுள்ளே
பாழாய்ப் போன பெண்கள்
பூட்டியது தெரியாது
பெண்ணென்றால் இதுவென்று
பெருமை மிகக் கொண்டிடுவார்
பண்பாடு இதுவென்று
பட்டிகள் போல் நடத்துவதை
பெருமிதமாய் எண்ணி
பொங்கும் மனதடங்க
புத்தகமாய் ஆகிடுவார்
பேதைப் பெண்ணே நீயின்றி
பேருலகே இல்லையடி
பூமிப்பந்தில் நீயின்றேல் 
புருஷர்களும் இல்லையடி
போற்றி உனைக் கொண்டாடும்
பெரு மனதும் இல்லையடி 
போகட்டும் விட்டுவிடு
பாவமடி ஆணினமே
பொங்கி நாம் எழுந்திட்டால்
போக இடம் இன்றி 
புலம்பிப் புலம்பியே
பித்தராய் ஆகிடுவார்
பெருமனது கொண்டவளே
பெற்றவர்க்காய் உற்றவர்க்காய்
பெற்றெடுத்த பிள்ளைக்காய்
பெற்றிடும் இன்பங்கள்
பலதும் நீ துறந்து
பலன் எதுவும் பாராது 
பாடையில் போகும் வரை
பாங்குடன் நடந்திடடி

வண்ண முகம் கொண்டவளே

வண்ண முகம் கொண்டவளே
வடிவழகு யாழ்களமே
கண்ணழகு கொண்டவளே
கருத்தூன்றிப் பார்ப்பவளே
பன்முகம் கொண்டவளே
பவளவாய்ச் சொல்லமுதே 
பாடல் புனைகின்றேன்
பாராட்ட உன்னையடி
 
பதினாறு வயதில் பாவைநீ 
பார்த்து மயங்கிடும் அழகோடு
பருவ எழில் பொங்க
பார்ப்பவரை உன்பின்னே
அலைய வைக்கின்றாய்
 
கோல மயில் உன்னழகைக்
கண் குளிரக் காணவென்றே
கோடி மக்கள் நாடித் தினம்
காலநேரமின்றி
கண் விழித்து வருகின்றார்

கருத்தூண்றி உன்னைக்
கவனித்தும் வருகின்றார்

தம் திறமை காட்டி
உன்னைக் கவர்ந்திட
தம்மால் முடிந்த வரை
உன் தாள்களில் வரைகின்றார்
ஆசை மனம் காட்டி
ஆவலொடு நிதமும்
ஆர்பரிக்க நிற்கின்றார்

ஆனாலும் நீயோ
பகட்டில்லாப் பாவை
அனைவரையும் அரவணைத்து
ஆசைமுகம் காட்டாது
அன்பு மனம் காட்டி
ஆண் பெண் பேதமின்றி
அணைத்து நிற்கின்றாய்

நீ வாழி!
பல நூறு ஆண்டுகள்
பாரினிலே பவனிவந்து
பல்துறை சார்ந்து பேதமின்றி
பட்டொளி வீசிப் பறந்திட
பெண் மகளே நீ வாழி




வசந்தம் வந்தது



நாளும் பொழுதும்
மொட்டுக்கள் மலர்களாகி
மகரந்தக் கனிகளாகி
பூத்தும் காய்த்தும்
புதிய அழகு கண்டன

மழையில் நனைந்து
மயங்கி நின்றன
காற்றின் கவர்ச்சியில்
கவித்துவம் கண்டன
காலை வெயிலின்
கனதியற்ற ஒளியில்
கண் மூடிக் கிடந்தன

இரவின் அமைதி கிழிந்து
இனிமை கலைத்து
கோரக் காற்றின்
கொடுமுகம் காட்டி
சிரித்த விதியின் சினத்தில்
பூவும் காயும் மொட்டுமல்ல
பூமியின் காலடி வேரறுத்து
புதைந்து போனது
பூத்து நின்ற புதுச்செடி

கனவு

வெண் மணற் பரப்பில் கால் புதைய
கனவுகள் சுமந்து நடக்கையில்
காலில் இடறிய கல்லின் காயத்தில்
கண்ணீர் கனதியானது

காலங்கள் காத்திருக்கலாம்
என் காயம் ஆற்ற - ஆனாலும்
இழந்த நேரத்தின் இன்பங்கள்
கணக்கில் வாராது கனவுகளாய்
நீரில் போட்ட கோலம்
நினைவில் அழிந்து போவதுபோல்
காலத்தின் கணக்குகளும் - ஒருநாள்
காலாவதி ஆகலாம்

எண்ணற்ற எண்ணங்களின் குவியல்
எப்போதும் என்நெஞ்சிருக்க
போராடும் தெம்பின்றி
போருக்கும் எதிரே யாருமின்றி
பொங்கிடும் மனதின் பொழுதுகள்
போக்கிடமின்றி போட்டிபோட
ஏற்புடையது அல்லவெனினும்
ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்
எப்போதும் என்னுடனே இருக்கும்
சிதைந்துபோன கனவுகளின்
சேமிப்பின் நினைவுகள்

காகிதக் கப்பல்

காகிதக் கப்பல் செய்து
கடலினில் ஓடவிட்டு
கனவில் மிதந்த மனம்
காற்றுப் பட்டதும்
கனவாகிப் போனது

கோடை மழையைக்
கார்கால மழையென
கொண்டாடிக் குதூகலமாய்
வரவேற்ற வேளை
கோடையிடி இடித்து மழை
காணாமற் போனது

ஒன்று மட்டும் தெரிந்தது
ஏதும் எமக்கானதில்லை
எல்லைகள் கொண்டு
எட்டியே நின்றிடும்
எதிரி போல் எம்மை
ஏங்க வைத்திடும்
அதுவே எம் விதியாய்
எல்லாமே செய்திடும்

ஆகவே எண்ணமே நீ
எப்போதும் என்னதாய் இரு
எதுவும் எதிர் பார்த்து
ஏக்கம் கொள்ளாதிரு
எண்ணக் கருவை
உன்னுள்ளே பூட்டி
எவர் முன்னும் உன்னை
எழுதாதிரு

எப்போதும் உனக்கு மட்டுமாய்
இரவுகள் இருக்கின்றன
வான வெளியின்
வண்ணமிழந்த நிறத்திடையே
வேண்டிய மட்டுமாய்
உனக்கான வெற்றிடம்
அங்கே உன் மனம்
எதுவும் செய்யலாம்

எல்லைகளற்று எவருமற்று !!

ரயில் பயணம்

எனக்கு லண்டன் நிலக்கீழ்த்தொடருந்தில் பயணம் செய்வதுதான் பிடிக்கவே பிடிக்காத விடயம். ஆனாலும் சிலவேளைகளில் பயணம் செய்தே தீரவேண்டிய நிர்ப்பந்தம். ஏறிக் கொஞ்ச நேரத்திலேயே பார்த்தவற்றை மீண்டும் மீண்டும் பார்ப்பதனால் தூக்கமும் விரைவில் வந்துவிடும்.

இதற்கு முன்னொருமுறை பயணம் செய்தபோது தூக்கம் எப்படித்தான் என்னைத் தழுவியதோ கண்விழித்துப் பார்த்தபோது நான் இறங்கவேண்டிய இடம் கடந்து பதினைந்து நிமிடம் ஆகியிருந்தது. பிறகென்ன அடுத்த தரிப்பிடத்தில் இறங்கி மற்றத் தொடருந்து பிடித்து வீடுவந்து சேர ஒரு மணிநேரம் தாமதம்.

இன்று தூங்காது எப்பிடியாவது சரியான நேரத்துக்குப் போய்ச் சேர வேண்டும் என்று மனதுள் தீர்மானித்தபடி சுற்றுமுற்றும் பார்க்கிறேன். பலர் செய்தித்தாள்களில் மூழ்கிப்போய் உள்ளனர். ஒரு சீனப் பெண் தலையை எவ்விதத்திலும் சரிக்காமல் நேராக இருந்து தூங்கிக் கொண்டு இருக்கிறார். அவரைப் பார்த்ததும் எனக்கும் கொஞ்சநேரம் தூங்கினால் என்ன என்ற ஆசை எழுகிறது. மனதை அடக்கியபடி மீண்டும் மற்றவர்களில் பார்வையைப் பதிக்கிறேன்.

அடுத்த தரிப்பிடத்தில் பலரும் இறங்க இருக்கைகளில் பல வெறுமையாக, ஒரு தந்தையுன் மகனும் வந்து எனக்கு முன்னால் அமர்கின்றனர். தந்தை மொட்டைத் தலையுடன் பார்க்கும் போதே அவரில் ஒரு கள்ளப் பார்வை தெரிவதுபோல் என்மனம் உணர்கிறது. மகனுக்கு ஒரூ பத்து வயதாவது இருக்கும். ஆனால் கால்களைத் தூக்கி தந்தையின் கால்களில் போட்டபடி சூப்பிப் போத்தலில் பாலை அருந்தியவாறு இருக்கிறான். அவன் பாலை அருத்துகிறானா அல்லது சும்மா வாயுள் அதை வைத்திருக்கிறானா என்பதில் எனக்குச் சந்தேகம்.

நான் childcare படிக்கும்போது பலவிதமான சிறுவர் பாலியல்த் துர்ப்பிரயோகம் பற்றி ஆசிரியை கூறியவை எல்லாம் என் கண் முன்னால் வந்து என் நின்மதியைக் கெடுக்கின்றன.

இவர்கள் உண்மையிலேயே தந்தையும் மகனும்தானா??? அல்லது இந்தப் பையனை எங்கிருந்தாவது கடத்திவந்து இவன் வைத்திருக்கிறானோ ?? அப்படியாயின் அதைப் பார்த்துக்கொண்டு சும்மா இருந்துவிட்டுப் போவது தவறு என்று உள்மனம் கூற இவர்களைப் பற்றி அறியவே வேண்டும் என என்மனம் ஆசை கொள்கிறது. தெரியாத ஒரு அந்நிய ஆணிடம் அதுகும் எந்தவித அழகோ அன்றி நல்ல மனிதனுக்குள்ள உருவ அமைப்போ இல்லாத அவனிடம் எப்படிக் கதைப்பது என என்மனம் சண்டித்தனம் செய்கிறது.

பெரிய பெடியனாக இருக்கிறான். பாடசாலைக்குச் செல்லாது வீட்டில் இருப்பது சட்டப்படி குற்றம் என்று எண்ணியபடி அந்தப் பையனைப் பார்த்து நீ பாடசாலைக்குப் போகவில்லையா என்று கேட்கிறேன். அவன் எனக்கு எந்தப் பதிலும் சொல்லாது சூப்பிப் போத்தலை வாயில் வைத்திருக்கிறான். தந்தையைப் பார்த்தால் அவர் விளங் காததுபோல் முகத்தை வைத்துக்கொண்டு இருக்கிறார். மீண்டும் தந்தையைப் பார்த்தே கேள்வியைக் கேட்கிறேன்.

அவனோ நான் கேட்டது விளங்காததுபோல் என்ன என்கிறான் மீண்டும். உன் பிள்ளை பள்ளிக்குச் செல்வதில்லையா என்று பொறுமையை வரவழைத்துக்கொண்டு மீண்டும் கேட்கிறேன். அந்தச் சிறுவன் நேராக இருப்பதற்கு முயற்சி செய்கிறான். அவனோ அப்பையனை அப்படி இருக்க விடாது கால்களை தன் கால்களின் மேல் இழுத்து வைப்பதுமாக சிறுவன் மீண்டும் முயல்வதுமாக சிறுவன் என்ன விடு விடு என்று கூறியபடி கால்களை இழுக்கிறான். அவனோ விட்டபாடு இல்லை. பார்த்துக்கொண்டு இருந்த எனக்கு என்கால்களை அவன் இழுத்து வைப்பதுபோல் இருக்க, ஏன் அவனைத் தடுக்கிறாய். நேராக இருக்க விடு என்கிறேன்.

அவன் கோபத்துடன் புரியாத மொழியில் எதோ சொல்கிறான். அவனுக்கு ஆங்கிலம் தெரிந்திருக்க வேண்டும். ஏனெனில் சிறுவன் என்னை விடு என்று ஆங்கிலத்தில்த்தான் கூறினான். இவன் ஏன் வேறு மொழி பேசுகிறான் என்று எண்ணியவாறே உனக்கு ஆங்கிலம் தெரியாதா என்கிறேன். அவன் மீண்டும் அந்த மொழியிலேயே எதோ சொல்ல எனக்குக் கோவம் வருகிறது.

இப்பொழுது அந்தப் பெட்டியில் நானும் அவர்களும்தான். அவன் சிறுவனிடம் குனிந்து காதுக்குள் குசுகுசுக்கிறான். எனக்கு இவன் என்ன சொல்கிறான். பாவம் அந்தப் பையனை இவன் தவறாகத்தான் பயன்படுத்துகிரான்போல என்று எண்ணியபடி இவன் உன் மகனா என்று அவனைக் கேட்கிறேன். அவன் எந்தப் பதிலும் கூறாது எங்கோ பார்க்கிறான். நான் சிறுவனைப் பார்த்து இவர் உன் அப்பாவா என்று கேட்கிறேன். சிறுவன் இல்லை என்று தலை ஆட்டியவன் அவன் எதோ உறுக்க மீண்டும் ஓம் என்று மேலும் கீழுமாய்த் தலையை நிறுத்தாமல் ஆட்டுகிறான்.

ஒரு குற்றத்தைக் கண்டாலோ அல்லது சந்தேகம் கொண்டாலோ அதுபற்றி உரியவர்களிடம் அறிவிக்க வேண்டியது ஒவ்வொருப்வரின் கடமை. எனக்கு இவன் நேர்மை இல்லை என்று மனம் சொல்கிறது. ஆனாலும் அதை எப்படி நிரூபிப்பது என்று தெரியாமல் யோசனையுடன் இருக்கிறேன். மீண்டும் அவனைப் பார்த்து நீ எங்கே வசிக்கிறாய் என்று கேட்கிறேன். அவன் எதோ திட்டிவிட்டு அந்தப் பையனை இறுக்க அணைத்தபடி என்னைப் பார்ப்பதைத் தவிர்த்து அமர்ந்திருக்கிறான்.

இன்று இவனை விடுவதில்லை என்று மனதில் எண்ணிக்கொண்டு சில திட்டங்களைப் போடுகிறேன். ஆனாலும் மனதில் ஒரு படபடப்பும் கூட ஒட்டிக் கொள்கிறது. அவர்கள் இருவரையுமே பார்த்துக்கொண்டு இருக்கிறேன். ஒருமுறை என்பக்கம் திரும்பிப் பார்த்தவன் நான் அவர்களையே பார்ப்பதை கண்டதும் சடாரெனத் தலையைத் திருப்பிக் கொள்கிறான்.

அடுத்த தரிப்பு வந்ததும் எதிர்பாராது பையனை இழுத்துக்கொண்டு அவன் இறங்க நானும் விரைந்து என் கைப்பையைத் தூக்கியபடி பின்னால் இறங்குகிறேன். பையனுடன் விடுவிடு என்று கொஞ்சத்தூரம் சென்றவன் திரும்பிப் பார்க்கிறான். நான் வருவதைக் கண்டதும் அவனின் நடை துரிதமாகிறது. அவனை எப்படியும் தவறவிடக்கூடாது என்னும் ஆர்வத்தில் நானும் ஓட்டமும் நடையுமாகச் செல்கிறேன். எப்படியாவது வெளியே வந்தவுடன் போலிசுக்கு போன் செய்துவிட்டு அவனைப் பின்தொடர்ந்து செல்வது தான் என் திட்டம். அதனால் மற்ற எதுவும் கண்ணில் படவிடாது அவனையே பார்த்தபடி தொடர்கிறேன்.

எப்படியும் நகரும் படிக்கட்டில் வைத்து அவனைப் பிடித்துவிடலாம் என்று எண்ணியபடி அந்த திருப்பத்தில் திரும்ம எதுவோ என்னில் வேகமாக மோத, கைப்பை ஒருபுறமும் ஒரு காலணி ஒருபுறமும் போக விழ இருந்த என்னை ஒரு காப்பிலி இழுத்து நிறுத்துகிறான். என்னை இடித்துவிட்டு தொடருத்தைப் பிடிக்க ஓடிய வெள்ளையும் சொறி சொல்லிவிட்டு மீண்டும் ஓட, நான் காலனியை எடுத்து அணிந்துகொண்டு கைப்பையையும் எடுக்கிறேன்.

அதன் பின்தான் எனக்கு முதல் விடயம் நினைவுக்குவர விரைந்து சென்று படிகளில் தாவித்தாவி ஏறி பிரயாணச் சீட்டை அழுத்திவிட்டு வெளியே வந்தால் தேர்த்திருவிழா போல மக்கள் கூட்டம்.

விளையாட்டு

ஐந்தாம் வகுப்புப் படிக்கும் வரை நான் கல்வி பயின்றது கலவன் பள்ளியில். ஆண்களும் பெண்களும் ஒன்றாகவே படித்தோம். விளையாட்டில் நான்தான் முதல் எனது பள்ளியில். ஓட்டப் போட்டியில் என்னை வெல்ல யாரும் இல்லை என்று அப்போது எனக்கு கொஞ்சம் தலைக்கனமும்தான்.

மாவட்ட ரீதியான போட்டி இரு வாரங்களில் நடைபெற இருந்தது. அதற்காக ஆண்களில் மூன்று பெண்களில் மூன்று பேராகத் தெரிவு செய்து ஆசிரியர்கள் எமக்குப் பயிற்சி கொடுத்துக்கொண்டிருந்தனர்.

பெண்களில் நான் என்றால் ஆண்களில் கண்ணன் என்னும் ஒருவன் நன்றாக ஓடுவான். சாதாரணமாகவே எனக்கும் அவனுக்கும் சரிவருவதில்லை. எப்போது பார்த்தாலும் எலியும் பூனையும் தோற்றுப்போகுமளவு சண்டை போட்டபடி இருப்போம்.

அவன் போய் வாத்தியாரிடம் கோள் சொன்னாலும் அடி அவனுக்குத்தான். அதனால் என்மேல் கடுப்போ கடுப்பு.

விளையாட்டுப் போட்டி நெருங்குவதால் சனிக்கிழமைகளிலும் பயிற்சி ஆரம்பிக்கப்பட்டிருந்தது. நான் எப்போதுமே நேரம் தவறாததால் வெள்ளனவே சென்றுவிட்டேன். அவனும் எனக்கு முன்னரே வந்துவிட்டான். எமக்குப் பொறுப்பான ஆசிரியைகளில் ஒருவர் கூட வந்துவிட்டார். மற்றவர்களுக்காக சிறுது நேரம் காத்திருந்ததில் ஆசிரியைக்கு கடுப்பு வந்திருக்கவேண்டும். சரி நீங்கள் இரண்டு பேரும் தொடங்குங்கோ மற்றவை வரட்டும் என்று சொன்னவுடன் நாம் இருவரும் ஆசிரியை கீறிய கோட்டில் போய் நின்றோம்.

என்ன இருந்தாலும் நான் தானடா முதலாவதா வரப்போறன் என்று நான் மனதுள் எண்ணியபடி இண்டைக்கு இவனை விடக்குடாது என்று கங்கணம் கட்டிக்கொண்டேன். அவனும் அப்படி எண்ணியிருப்பான் என்று பின்னர்தான் எனக்குத் தெரிந்தது.

ஆசிரியர் விசில் ஊதியதுதான் தாமதம் இருவரும் ஓடத் தொடங்கினோம். அது ஒரு சற்சதுரமான மைதானம். அதனால் வளைந்துதான் ஓடவேண்டும். நான் வெளிவட்டத்தில்  நின்றதனால் எனக்கு சிறிது முன்னே அவன் சென்றுவிட்டிருந்தான். ஆனாலும் எனக்கு நம்பிக்கை நான் அவனை வென்றுவிடுவேன் என்று. மூச்சைப் பிடித்துக்கொண்டு ஓடி அவனை முந்திவிட்டேன். இன்னும் சிறிது தூரம்தான் ஆசிரியை கண்ணில் பட்டுவிட்டார். எனக்கோ அவனை முந்திவிட்ட சந்தோசம்.

திடீரென எதுவோ என்னை இடித்துத் தள்ள முகம் குப்புற விழுந்தது கொஞ்ச நேரத்தில் ஆசிரியை என் அருகில் வந்தபோதுதான் தெரிந்தது. எருமை மாடு என்னத்துக்கு அவளை இடிச்சனி. எவ்வளவு இடம் கிடக்குது இங்க என்று ஆசிரியை அவனைத் திட்டித் தீர்த்தபோதுதான் அவன் என்னை இடித்து வீழ்த்தியது புரிந்தது. அவனில் கோபம் ஏற்பட்டாலும் ஆசிரியரின் அர்ச்சனை அவன்மீது தொடர்ந்துகொண்டு இருந்ததால் எனக்கு சந்தோசத்தில் ஒன்றும் தெரியவில்லை.

எழும்பு நீ என ஆசிரியை கூறவும் எழும்ப எத்தனித்த என்னால் எழும்ப முடியவில்லை. இரு கைகளும், முழங்கால்களும் தேய்ந்து இரத்தம் வடிந்துகொண்டு இருந்தது. அதன் பின் தான் எனக்கு நோவே தெரிய ஆரம்பித்தது. இன்னும் மூண்டு நாள் இருக்கு போட்டிக்கு. என்னண்டு ஓடுறது எண்டு ஆசிரியை தனக்குத்தான கதைத்தபடி எனக்கு முதலுதவி செய்ய மலங்க மலங்க விழித்தபடி கண்ணன் என்னைப் பார்த்துக்கொண்டிருந்தான்.

அவன் திட்டம் போடாமலேயே என்னைத் தள்ளி வீழ்த்தியது கட்டிடம் கட்ட வைத்திருந்த சல்லிக் கற்களின்மேல்.........

அதன்பின் இருபத்தைந்து ஆண்டுகளின் பின் சிங்கப்பூரில் கோயில் ஒன்றில் வணக்கிவிட்டு கணவர் பிள்ளைகளுடன் வெளியே வருகிறேன். என்பின்னால் என் பெயரைச் சொல்லி யாரோ கூப்பிடுவது கேட்கிறது. இங்கே யார் என்னை என எண்ணியபடி திரும்பினால் கண்ணன்.

உருவத்தில் கொஞ்சம் மாற்றம். ஆனால் அவனின் சிரிப்பு மட்டும் மாறவில்லை. எப்பிடி என்னை அடையாளம் கண்டனீர் என்றவுடன் உம்மை மறக்க ஏலுமே என்றானே பார்க்கலாம். என் கணவரின் முகம் போன போக்கை நினைத்தால் இப்போதும் சிரிப்பு வருகிறது. நிலைமையை சமாளிக்க என்னுடம் ஐந்தாம் வகுப்புவரை ஒன்றாகப் படித்தவர் என்று கூறியதும் கணவர் சமாதானமாகி அவனுடன் கதைக்கத் தொடங்கிவிட்டார். இப்போது திருமணமாகி இரு பிள்ளைகளுடன் அவுஸ்றேலியாவில் வசிப்பதாகக் கூறி, அங்கு வந்தால் தன் வீட்டுக்குக் கண்டிப்பாக வரவேண்டும் என்றும் கேட்டு விடைபெற்றான்.

இப்போதும் எங்காவது விளையாட்டுப் போட்டி பற்றி தொலைக்காட்சியில் பார்த்தாலும் அந்தநாள் நினைவும் கூடவே வரும்.

பள்ளிக்கூடப் பேருந்து


எங்கள் ஊரை ஊடறுத்து காங்கேசன் துறை  வீதி செல்கிறது. அப்பாதையில்  தெல்லிப்பளையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி 769 ம் இலக்கப் பேருந்தும் , காங்கேசன்துறையிலிருந்து யாழ் செல்லும் 768 ம் இலக்கப் பேருந்தும் செல்கிறது. அந்த பேருந்துக்கள் யாழ்ப்பாணம் தாண்டியும் செல்கிறதா அல்லது யாழ்ப்பாணத்துடன் நின்றுவிடுகிறதா என்பது பற்றி எனக்கு இதுவரை தெரியவில்லை.

இக்காலத்தில எப்படியோ தெரியவில்லை. நான் படித்த காலத்தில் பள்ளிக்குச்
செல்வதற்கு ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித் தனிப் பேருந்துகள் உண்டு.
எங்களுக்கு அது பெருங் கவலைதான் என்றாலும், பெண்களுக்கும் ஆண்களுக்கும் ஒரே பேருந்தை விடும்படி யாரையும் கேட்கும் நிலையிலா நாம் இருந்தோம். அத்தோடு அதில் ஆபத்தும் இருக்கும் என்பதையும் மறுக்க முடியாது தானே.

எமது ஊரில் பேருந்து வந்து நிற்கும்போது எல்லா இருக்கைகளும் நிறைந்துபோய்
இருக்கும். அதனால் பள்ளிக்குச் செல்லும்போது ஒருநாள்க் கூட இருந்து
சென்றதில்லை. அனால் பள்ளி முடிந்து வரும் வேளை, ஆகச் சுண்டுக்குளிப்
பெண்களும் கொன்வென்ற் பெண்களும் குறைந்தளவானவர்களே இருப்பதனால் அதிக இருக்கைகள் வெற்றிடமாக இருக்கும். ஆனாலும் வேம்படியில் அதிகமானவர்கள் ஏறுவதால் முண்டியடித்துக் கொண்டு ஏறினால் விரும்பிய இருக்கையில் இருக்கலாம். அல்லது நிக்க வேண்டியதுதான்.

எனக்கு பேருந்தின் பின்பக்கம் உள்ள உயரமான இருக்கைதான் பிடித்தமானது. அதில் இருப்பதற்காக எப்படியாவது இடித்துப்பிடித்துக் கொண்டு ஏறிவிடுவேன். எனக்குப் போட்டியாக நான்கு பேர் இருந்தார்கள் தான். நாங்கள் நான்கு பேரும் பக்கத்தில்
பக்கத்தில் பேருந்து வரும் நேரம், தடகள வீரர்கள் ஓடுவதற்குத் தயாராக
நிற்பதுபோல் நிற்போம்.  எனது அதிஷ்டம் என்றுதான் கூற வேண்டும்.
ஒவ்வொருமுறையும் நானே வெற்றிக்கொடி நாட்டுபவளாக அந்த உயரமான இருக்கையைப் பிடித்திருப்பேன்.

இந்த அதிஷ்டம் நான் ஒ/எல் படிக்கும் வரை தொடர்ந்தது. அதன்பின் வேறு விடயங்கள் மனதை ஈர்த்ததால் இடம் பிடிக்க ஓடுவது குறைந்துவிட்டது.

ஒருநாள் எனக்கொரு விபரீத ஆசை ஏற்பட்டுவிட்டது. இன்று கடைசியாக் நின்று பேருந்தில் ஏறினால் என்ன என்று. நண்பிகளிடமும் கூறினேன். அவர்களும் சரிஎன,  எல்லோரும் ஏறும் வரை நாங்கள் காத்திருந்தோம். இன்னும் ஏற இனது ஆறு பேர்தான் பேருந்து நகரத் தொடங்கியது.

எல்லோரும் பயந்துபோய் தள்ளிக் கொண்டு ஏற முயல  நான் தான் கடைசி ஆள். பேருந்து வேகமெடுக்கத் தொடங்கிவிட்டது. கடைசிப் படிவரை என் நண்பிகள் நிற்கிறார்கள். நான் கால் வைக்க இடமே இல்லை. எறடி எறடி என்கிறார்களே தவிர நான் ஏற இடம் விட எண்ணவில்லை. அவர்களுக்கும் பதட்டம். நான் கொஞ்சநேரம் கைபிடியைப் பிடித்தபடி ஓடினேன் இடம் கிடைக்குமென்று. அதன்பின் தொங்கிக் கொண்டு வரும் பழக்கம் இல்லாததால் கையை விட்டுவிட்டேன்.

பேருந்து தன்பாட்டில் போய்க்கொண்டு இருக்கு. எனக்கோ அவமானம் ஒருபுறம் ஏமாற்றம் ஒருபுறம். இனி என்ன செய்வது. யாழ் தரிப்புவரை தனியே  நடந்ததை
இன்றுவரை மறக்க முடியவில்லை. ஆனாலும் மனதுக்கு ஆறுதல் தந்த விடயம், நான் யாழ் தரிப்பிடத்தை அடைந்தபோது, எனக்காக நண்பிகள் நால்வரும் பேருந்தை விட்டு இறங்கி, எனக்காகக் காத்திருந்ததுதான்.

இப்படி எத்தனையோ நினைவுகள் மீட்டிப் பார்க்கும் போது இன்பத்தையும் துன்பத்தையும்
தருவன எம்முள்ளே உள்ளன.

 28 March 2013

வரம் வேண்டினேன்

இன்னும் இரண்டு மாதங்கள் தான். சுசீலாவுக்கு எல்லையில்லா அவஸ்தை, மகிழ்வு, பயம் என ஒன்றுசேர்ந்த கலவையான உணர்வு ஏற்பட்டது. எந்த நேரத்திலும் அவள் தயாராகவே இருக்கிறாள். எத்தனை நாட்களாகிவிட்டன ஓடியாடித் திரிந்து. கிட்டத்தட்டச் சிறை வாழ்க்கை போலத்தான். என்ன விரும்பிய உணவு, கணவனின் ஆதரவான விசாரணை, பெற்றோரின் தொடர் தொலைபேசி விசாரிப்புக்கள் என்று எத்தனை தான் இருந்தாலும் கணவன் அருகே இல்லையே என்னும் குறையும் பெரிதாகத்தான் தெரிந்தது.
இன்னும் ஒரு மாதத்தில் வந்துவிடுவேன் என்று சுதாகரன் கூறினாலும் அவன் தன்னிடம் வந்து சேரும் வரை சுசீலாவுக்கு நின்மதி இருக்கப் போவதில்லை. யார் என்ன ஆறுதல் கூறினாலும் கணவன் அருகிருப்பதே பெரிய பலம். நோய் வாய்ப்பட்டிருக்கும் தந்தையை விட்டுவிட்டு வரமுடியாததால் தாய் இவளுடன் வந்த நிற்கவில்லை. என்னதான் வசதிகளை ஏற்படுத்தித் தந்தாலும் எல்லாம் நல்லபடியாக முடிய வேண்டுமே என்ற பயம் எந்நேரமும் மனதில் ஓடிக்கொண்டிருப்பதை தவிர்க்க முடியவில்லை சுசீலாவால்.
ஒரு வருடங்களுக்கு முன்புவரை விரக்தியின் விளிம்பில் நின்று, யாரையும் பார்க்கப் பிடிக்காது, தொலைபேசியில் யார் அழைத்தாலும் பேசப்பிடிக்காது இருந்த எனக்கு இப்ப எல்லோருடனும் பேசவேண்டும் என்னும் ஆசையை நிறைவேற்ற முடியாது என் நிலை தடுக்கிறது. இரண்டு மாதங்களில் எல்லோரையும் வீட்டுக்குக் கூப்பிட்டு விருந்து வைத்து என் மகிழ்ச்சியைக் கொண்டாட வேண்டும் என்று எண்ணிக்கொண்டாள். 
திருமணமாகி எட்டு வருடங்கள் அவள் பட்ட பாடு சொல்லி முடியாது. காண்பவர் எல்லாம் என்ன விசேடம் ஒன்றும் இல்லையா என்று அறிவற்றுக் கேட்கும் போது திடீரென மனதில் எழும் கோபத்தை அடக்கிக் கொண்டு அவர்களுக்கு பதில் கூறியதை நினைக்க இப்ப சிரிப்பாக இருந்தது அவளுக்கு. இந்தச் சனங்கள் வாயை வச்சுக்கொண்டு பேசாமல் இருக்காமல் ஏனப்பா எங்கள் குடும்ப விசயங்களில் தலியிடுதுகள் என்று எரிச்சலுடன் இவள் கூறும்போதில், அதுதான் உலகமப்பா அவர்களை மாற்ற முடியாது என்று கணவன் கூறுவான். அதன் பின் அவள் பொது நிகழ்வுகளில், திருமண வீடுகளுக்குக் கூடச் செல்லாது வீட்டுக்குள்ளேயே ஒடுங்கப் பழகிவிட்டாள். ஏன் திருமணத்துக்கு வரவில்லை என்று யாராவது தொலைபேசியில் கேட்டாலும் ஏதாவது சாட்டுகள் கூறித் தப்பிக் கொண்டாள்.
எத்தனை வைத்தியர்களிடம் ஆலோசனை கேட்டு, எத்தனை பேரிடம் தலை குனிந்து, எத்தனை தரம் இவளுக்கும் கணவனுக்கும் பரிசோதனை செய்து, எத்தனையோ ஊசிகள் மருந்துகள் ஏற்றி கிட்டத்தட்டச் சித்திரவதைதான். எல்லாவற்றையும் இருவரும் தாங்கினார்கள்தான். ஆனாலும் எந்தப் பயனும் அற்றுப் போய் வாழ்வில் பிடிப்பே அற்று இருவரும் இருந்தபோதுதான் அவள் ஆனந்த விகடனில் வந்திருந்த ஒரு பேட்டியை வாசிக்க நேர்ந்தது. அதை கணவனையும் வாசிக்கச் செய்து இருவரும் நீண்டநேரம் அதுபற்றிக் கலந்து கதைத்து ஒரு முடிவுக்கு வந்தனர். அடிமனதில் ஒளிந்துகொண்ட ஆசை மீண்டும் இருவருக்கும் விஸ்வரூபம் எடுக்க ஒருவரை ஒருவர் நீண்டநாளின் பின் நம்பிக்கையோடும் ஆசையோடும் பார்த்து மகிழ்ந்தனர்.


********************************************************************************************************************
கணவனுடன் இந்தியா வந்து அந்தப் பெரிய மருத்துவமனையில் எல்லா டெஸ்ட் உம் செய்து தலைமை மருத்துவர் ராஜேஸ்வரி, எல்லாம் சரியாக இருக்கிறது. அடுத்த வாரமே ஆரம்பிக்கலாம் என்றதும் இருவர் மனதிலும் ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவே இல்லாமற் போனது. சுதாகரன் இன்னும் மூன்று வாரங்கள்தான் அவளுடன் நிற்கலாம். அதன் பின் அவன் வேலைக்குத் திரும்பவேண்டும். அந்த மருத்துவரிடமே ஆலோசனை கேட்டனர். எல்லாமாக எனக்கு நீங்கள்  மருத்துவச் செலவுக்கு மூன்று இலட்சம் தந்துவிட வேண்டும் . நீங்கள் இங்கே பக்கத்தில் தங்குவதற்கு நான் ஒழுங்கு செய்கிறேன். அது உங்கள் செலவு. ஒரு பெண்ணை வேண்டுமென்றால் சமைக்கவும் துணைக்கும் ஒழுங்கு செய்கிறேன் என்றுவிட்டார்.
பணம் என்ன பெரிதா?? பிள்ளை வரம் வேண்டி நொந்து நூலாகிப்போன எங்களுக்கு கடவுள் இப்பதான் ஒரு வழியைக் காட்டியிருக்கிறார். அதை எள்ளளவேனும் பிசக விடாது காப்பது எமது கடமை என்று இருவருமே எண்ணி அவர் கூறிய படியே செய்ய ஆயத்தமாயினர்.
அடுத்த வாரம் இருவருக்கும் மீண்டும்  விந்து, முட்டை ஆகியவற்றின் உற்பத்தியைப் பெருக்குவதற்காக மருந்துகள் ஏற்றப்பட்டுத் தயாராக்கி மூன்றாவது வாரம் இருவரிடமும் இருந்து விந்தும் முட்டையும் பெறப்பட்டு சோதனைக் குளாயில் செலுத்துவதாகக் கூறினார்கள். இவர்கள் இருவரும் வேண்டாத தெய்வம் இல்லை. முன்பு சுவிசிலும் இதுபோல் இரு தடவைகள் செய்ததுதான். ஆனாலும் சரிவரத்தான் இல்லை. இம்முறை சுசீலாவுக்கு ஏனோ அசைக்கமுடியாத ஒரு நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது. மனம் முழுவதும் ஏற்படும் ஒரு எல்லையில்லா உணர்வை  அடக்கு என மனதுக்குக் கட்டளையிட்டுவிட்டுக் காத்திருந்தாள். 
பதினைந்து நாட்களின் பின்னர் சரிவரும் போல இருக்கு. இன்னும் பதினைந்து நாட்கள் பார்க்கவேண்டும் என்று வைத்தியர் கூறியதும் இன்னும் பதினைந்து நாட்களா என்று இருவருக்கும் ஒரு சலிப்பும் ஏற்பட்டது. இன்னும் இரண்டு வாரங்கள் மெடிக்கல் லீவு கொடுத்துவிட்டு சுதாகரன் மனைவியுடனேயே நின்றான். இரண்டு வாரங்களின் பின்னர் உருவான கரு சுசீலாவுக்குச் செலுத்தப்பட்டது. வலிகளும் வேதனைகளும் கூட அவளது எதிர்பார்ப்புகளின் முன்னால் ஒன்றுமில்லாது போயின.
சுதாகரனுக்கும் இம்முறை எல்லாம் நன்றாக நடப்பதாக மனம் சொல்லியதில் நின்மதியாக மனைவியை விட்டுவிட்டு சுவிஸ் வந்துவிட்டான். முன்பே பலருடன் தொடர்புகள் விட்டுப் போனதில் மற்றவர்களின் கேள்விகள் கூட இன்றி நின்மதியானான் அவன். தன் நெருங்கிய நண்பர்களுக்குக் கூட அவனோ சுசீலாவோ இதுபற்றிக் கூறவே இல்லை.
நீங்கள் இரண்டு மாதங்கள் கவனமாக இருக்கவேண்டும் என்று சொன்னதுதான். இவள் தேவை இல்லாமல் வெளியே கூடச் செல்வதில்லை. இவள் தங்கியிருந்த விடுதி போன்ற ஒரு இடத்தில் இவளைப் போன்றே வெளிநாடுகளில் எல்லாம் இருந்து பல பெண்கள் குழந்தைக்காக வந்து காத்திருந்தனர். சிலருக்கு எத்தனை தடவைகள் முயன்றும் முடியாமல் திரும்பி ஏமாற்றம் சுமந்து அழுகையுடன் சென்றிருக்கின்றனர். அவர்கள் அழும்போது இவளுக்குக் கழிவிரக்கம் தோன்றும். தன்னால் முடிந்த ஆறுதலைக் கூறுவாள்.
இவளுடன் அந்த விடுதியில் இருந்த மற்றைய பெண்கள் நடக்காதே குனியாதே அது செய்யாதே என்று கூறுவதைக் கேட்க இவளுக்குப் பயமாகவும் இருக்கும். மாலையில் கணவன் கதைக்கும் போது தன் கணவனிடம் இவைகளைக் கூற அவனோ சனம் எல்லாம் சொல்லும். நீர் கவனமா இரும். என்ன எண்டாலும் வைத்தியரிடம் கேட்டு அவர் சொல்கிற படி நடவும் என்பான். இருந்தாலும் குழந்தை வளர வளர அதைக் கவனமாகப் பாதுகாத்துப் பெற்றெடுக்க வேண்டுமே என்ற அவாவிலும் பயத்திலும் மற்றவர்கள் கூறுவதைக் கேட்டும் நடக்கவாரம்பித்தாள். அதனால் நடைப் பயிற்சி இல்லாது உடல் ஊதியது.
மூன்றாம் மாதம் இவளைப் பரீட்சித்துவிட்டு இரட்டைப் பிள்ளைகள் உனக்கு என்றார். இவளுக்குச் சந்தோசத்தில் நெஞ்சை அடைத்து. சுதாகரனின் களிப்பைச் சொல்லி மாளாது. கடவுள் கருணை காட்டிவிட்டார். ஒன்றுமே இல்லாமல் இருந்த எமக்கு இரண்டா என கடவுளுக்குப் பலதடவைகள் நன்றி கூறிக் கொண்டான் அவன் .
********************************************************************************************************************
இன்னும் இரண்டு வாரங்கள்தான். சுதாகரனும் சுவிசிலிருந்து வந்துவிட்டான். சாதாரண பிரசவமாக இருக்காது என்று வைத்தியர் கூறிவிட்டார். சாதாரணமாகப் பிறக்கும் என்றாலும் கூடப் பணத்துக்காக வைத்தியர்கள் சத்திரசிகிச்சை செய்வது பற்றியும் கதை ஓடித்திரிந்ததுதான். ஆனாலும் அவர்களுக்கு இருந்த பயத்தில் குழந்தைகள் இரண்டும் சுகமாக வெளியே வந்தார் சரி என்ற நிலையில் மருத்துவர் கூறியதை எதிர்த்து ஒரு வார்த்தை கேட்கவே இல்லை.
அன்று அவளைப் பிரசவ அறையுள் அழைத்துக்கொண்டு சென்றபோது சுதாகரனும் தானும் வருகிறேன் என்று கூறினான். மருத்துவர் மறுத்துவிட்டார். இவனால் எதிர்த்தும் கதைக்க முடியவில்லை. உள்ள கடவுள்களை வேண்டியபடியே வெளியே காவல் இருந்தான்.
ஒரு மணி நேரத்தில் சத்திரசிகிச்சை முடிந்ததாகக் கூறி  அவனை உள்ளே அழைக்க மனம் முட்டிய மகிழ்வில் உள்ளே சென்றவன் தாய்க்குப் பக்கத்தில் பிள்ளைகளைக் காணாது மனதில் ஒரு திடுக்கிடலோடு தாதியைப் பார்த்து எங்கே பிள்ளைகள் என்றான்??? கால் கைகளில் நடுக்கம் பரவத் தொடங்கியது. மனைவி இன்னும் மயக்கத்தில் இருந்தாள். பிள்ளைகளை இன்னும் கொஞ்ச நேரத்தில் கொண்டு வருவார்கள் என்று அவள் கூறியதும் மனது ஒருநிலைப்பட்டது. நெஞ்சுக்கூடு மீண்டும் தன் இடத்தில் அமர்ந்தது போன்ற நினைப்பு வர நின்மதிப் பெருமூச்சொன்று வெளிவந்தது.
சுசீலாவுக்கும் ஒருவாறு நினைவு திரும்ப பக்கத்தில் பார்த்துவிட்டு அவள் கண்களும் வேதனையை மீறி எங்கே குழந்தைகள் என்று கேட்டன. இவன் கண்கள் கூறிய சமாதானத்துடன் மட்டும் நின்றுவிடாது, இப்ப கொண்டு வருவினம் என்று அவளுக்குச் சொல்லிவிட்டு வெளியே சென்று தாதியிடம் மனைவி கண் விழித்துவிட்டார். பிள்ளைகளைத் தேடுகிறார். எப்ப கொண்டுவருகிறீர்கள் என்றான். நீங்கள் அறைக்குப் போங்கள் இப்ப கொண்டுவருவார்கள் என்றதும் இவன் சுசீலாவுக்கு அருகில் சென்று கொண்டு வருகிறார்கள் என்று கூறிவிட்டு அவளின் தலையைத் தடவி நெற்றியில் முத்தமிட்டு கை ஒன்றை எடுத்து ஆதரவாகத் தடவிக் கொடுத்தான்.
கதவு திறக்கப்பட, இரண்டு தாதிகள் தொட்டில்களைத் தள்ளிவர, மனம் முழுவதும் மகிழ்வு பொங்க உடனே எழுந்த சுதாகரன் பக்கத்தில் சென்று பார்த்ததும் அதிர்ந்தான். தலையைத் திருப்பிப் பார்த்த சுசீலாவின் மனம் திடுக்கிட்டாலும் வெளியே காட்டிக் கொள்ளவில்லை. தாதியர் வெளியே சென்றதும் இருவரும் கேள்விக் குறியுடன் ஒருவரை ஒருவர் பார்த்தனர். பிள்ளைகள் இரண்டும் பச்சைக் கண்களுடன் வெள்ளைக்காரக் குழந்தைகள் போல் இருந்தன.
மாறி வேற ஆட்களின் பிள்ளைகளைக் கொண்டுவந்துவிட்டனரோ என்ற பதைப்பில் வைத்தியரின் அறையைத் தேடி ஓடினான் சுதாகரன். இவன் கூறியவற்றைக் கேட்டபின் முகத்தில் எந்தவிதப் பதட்டமும் இல்லாமல், இப்பிடியான விசயங்களில ஒண்டு இரண்டு மாறி நடக்கிறதுதான். சொறி. பரிசோதனைக் குளாயுள் செலுத்தும்போது ஏதோ தவறு நேர்ந்துவிட்டது.
உங்களுக்கு பிள்ளைகளை வைத்திருக்க விருப்பம் இல்லை என்றால் கூறுங்கள். பிள்ளைக்காக எத்தனையோபேர் காத்திருக்கிறார்கள். நீங்கள் சம்மதித்தால் அவர்களுக்குக் கொடுப்போம் என்று கூறிவிட்டு எதுவும் நடக்காததுபோல் இருந்தாள் வைத்தியர்.
உடலும் மனமும் சோர்ந்துபோக வேண்டாம் என்று தலையாட்டிவிட்டு எழுந்து நடந்தவன் அறையுள் சென்றதும், மனைவி இரண்டு குழந்தைகளையும் இரு கைகளாலும் அணைத்தபடி முகமெங்கும் பூரிப்புடன் இருப்பதைக் கண்டு தானும் அவளருகில் சென்று பெண் குழந்தையைத் தன் கைகளில் வாரி எடுத்துக் கொண்டான்.

  07 March 2014

களவாய் ஒரு படம்

எனக்கு மனதில் பயத்துடன் கூடிய ஒரு பெருமிதமும் தோன்றியது. செய்வது திருட்டு. இதற்குள் என்ன பெருமிதம் என்று மனதில் எண்ணம் எழ மனதுக்குள்ளேயே சிரித்தும் கொண்டேன். என்றாலும் இது ஒரு அசட்டுத் துணிவு என்பதும் தெரிந்தே தான் இருந்தது.
அம்மாவுக்குத் தெரிந்தால் என்ன நினைப்பா என்று ஒரு பயம் ஏற்பட்டாலும் இப்படி திருட்டுத்தனமாய் பள்ளிக்கூடத்தைக் கட் பண்ணிவிட்டு படம் பார்க்க வருவது ஒரு திரில்லான அனுபவமாகத்தான் இருக்கு என எண்ணிக் கொண்டது மனது.

இருந்தாலும் அடிமனதில் யாராவது ஊரவர்கள் பார்த்துவிடுவார்களோ என்னும் அச்சம் ஓடிக்கொண்டே இருந்தது. தனிய நான் வரவில்லைத்தான். இன்னும் மூன்றுபேர் மாலி, நந்தினி, ஹேமா, ரதி இத்தனை பேருடன் தான் வந்திருக்கிறேன். பாடசாலைக்குப் பக்கத்தில் இருக்கும் மாலியின் வீட்டில் ஆடைகள் கொண்டுவந்து நாகரிக ஆடைகளை மாற்றிக் கொண்டு தான் வந்தது எனினும், சீற்றில் வந்து அமர்ந்ததுமே, என்னடா வகுப்பைக் கட் பண்ணிவிட்டு வந்திட்டியோ என்று பின் வரிசையில் இருந்து  ஒருவன் கூறுவது கேட்டது.

கட்டாயம் கட் அடித்துவிட்டுத்தான் இந்தப் படம் பார்க்கவேண்டும் என்றில்லை. சில நேரம் அம்மாவைக் கேட்டிருந்தால் அவவே கூட்டிக் கொண்டும் வந்திருக்கலாம். ஆனால் கமலகாசனின் வாழ்வே மாயம் படத்தை அம்மாவோட வந்து பார்த்தால் ரசிச்சே இருக்கும்  ???

அந்த வயதில் எந்த ஹீரோ என்றாலும் கற்பனை செய்து கொண்டு, மற்ற நண்பிகளுடன் அவர்களைப் பற்றி அரட்டை அடிப்பதில் உள்ள சுகம் வேறெதிலும் இல்லைத்தான்.

படம் தொடங்கி லைட் எல்லாம் நிப்பாட்டின பிறகு யாராவது தெரிஞ்ச ஆட்கள் வந்திருக்கினமோ என்று பார்க்கத் தலையைத் திருப்பி சுற்றிவரப் பார்க்க, நல்ல காலம் ஊர்க்காரர் ஒருத்தரும் இல்லை. பின்னால இருந்த ஹீரோக்கள் தங்களைத்தான் திரும்பிப் பாக்கிறன் எண்டு நிமிர்ந்து இருந்து பல்லைக் காட்டினதையும் இண்டைவரை மறக்க முடியேல்ல.

இடைவேளையின் போது நான் பயத்தில எழும்பி எதுவும் வாங்கப் போகவுமில்லை. குனிஞ்ச தலையை நிமிர்த்தவுமில்லை. மாலியும் ரதியும் தான் துணிவாப் போய் ஒறேஞ் பார்லியும் உறைப்புக் கச்சானும் வாங்கிக் கொண்டு வந்தது. எப்பிடித்தான் அவர்களுக்கு அந்தத் துணிவு அங்கே அப்பவே எண்டு எத்தனையோ நாட்கள் வியந்தும் இருக்கிறன்.

படத்தின்ர கடைசிக் கட்டத்தில படம் எண்டு தெரிஞ்சும் லேன்சி நனையும் அளவு அழுததும், இனிமேல் கமலகாசன் திரும்பி வரமாட்டார் என்ற அளவில் பீல் பண்ணியதும் இப்ப நினைச்சாலும் சிரிப்பா இருக்கு.

படம் முடிஞ்சு உடன எழும்ப கேமாதான் இழுத்து இருத்தினவள். எல்லாரும் போகட்டுமடி என்று. களவு செய்த ஆட்கள் மாதிரி ஏனடி வாறாய் இயல்பாய் இரு என்று மாலி சொன்னாலும் யாழ்ப்பாணம் பஸ்டாண்டுக்கு வந்து பஸ் எடுத்து நெஞ்சிடியோட வீட்டை போய்ச் சேர்ந்த பிறகும் பயம் போகவில்லை.

அம்மா ஏன் லேட் என்று கேட்கவில்லை. ஏனென்றால் முதல் நாளே பள்ளியில் விளையாட்டுப் போட்டிக்கு பயிற்சி என்று சொல்லி வச்சதில் தப்பினது.

அடுத்த நாள் டீச்சர் கேட்டதுக்கு முதலே பிளான் பண்ணினபடி ஒரே சாட்டுச் சொல்லாமல் ஒவ்வொருத்தர் ஒவ்வொரு மாதிரிச் சொன்னதை டீச்சர் நம்பினாவோ இல்லையோ ஒன்றும் கதைக்கவில்லை.

ஒரு வாரம் செல்ல ஒரு சனிக்கிழமை. எங்கள் ஒழுங்கைக்கு அடுத்த ஒழுங்கையில் இருக்கும் பத்மா அக்கா, நான் டியூசனுக்குப் போகும் போது  சில நேரங்களில் நின்று அவவுடன் கதைத்துவிட்டுப் போவேன். அன்றும் வழமைபோல கதைத்தபோது என்ர தம்பி உம்மை தியேட்டறால வெளியில வரேக்குள்ள கண்டவனாம் என்றவுடன் நெஞ்சு உடனே திடுக்கிட்டதுதான்.

ஆனாலும் சமாளிச்சுக் கொண்டு, ஓமக்கா நானும் இன்னும் மூண்டு பெட்டையளும் போனனாங்கள். நல்ல படம் அக்கா என்று எந்த விதப் பதட்டமும் இல்லாமல் கூறியதில் அவரின் வாய் அடைபட்டுப் போனது. அத்தோடு அடுத்த முறை எங்களோட நீங்களும் வாங்கோவன் என்று விட்டு நான் சென்றதை அவர் வாய் பிளந்தபடி பார்த்துக்கொண்டு நின்றிருப்பா என்பதிலும சந்தேகம் இல்லை.

இரண்டு நாள் போக அவவின் தம்பி ரமேஸ், என்னைப் பார்த்து ஒரு அசட்டுச் சிரிப்புச் சிரித்தபடி கடந்து போனான். நான் கூட சிரித்து வைப்போமா என்று ஒருகணம் எண்ணிவிட்டு மறுகணம் வேண்டாம் என்று மனம் சொல்ல சிரிக்காமலே அவனைக் கடந்து போனேன்.

 22 April 2014