தேவகிக்குத் தன்னை நினைக்கவே ஒருபுறம் சிரிப்பாகவும் மறுபுறம்
பச்சாதாபத்துடன் கூடிய அழுகையும் வந்தது. வாற மாதம் வந்தால் இவ்வுலகில்
எண்பது ஆண்டுகளைக் கழித்துவிட்ட நிறைவு. இன்னும் எத்தனை நாட்களோ மாதங்களோ
வருடங்களோ யாரறிவார் என்னும் எண்ணம் தோன்றினாலும் நான் இன்னும் கொஞ்சக்
காலம் இருப்பன். அவ்வளவு லேசில போயிடமாட்டன் என்னும் ஒரு நம்பிக்கையும்
ஏற்பட்டு ஏனோதெரியவில்லை அதனூடே சிரிப்பும் வந்தது.
சிறிய வயதில் எல்லாம் தன் நாட்களை நினைத்துப் பார்த்தால் துன்பங்களும்,
நிறைவேறாத ஆசைகளும், போராட்டங்களுமாக வாழ்வின் இளமைக்காலம் கழிந்தது.
பின்னர் வந்த காலங்களில் தன் முயற்சியில் மனம் சோராது போராடியிராவிடில்
இன்று இப்படி ஒரு நிலையினை அடையக்கூடியதாக இருந்திருக்குமா என்று மனம்
பெருமையும் கொண்டது.
தான் இல்லாவிட்டால் தன் குடும்பம் மாத்திரமல்ல தன் கணவர் கூட இந்த நிலையை
அடைந்திருப்பாரா என்பது சந்தேகம்தான். ஆனால் அந்த மனிசனுக்குத்தான் அது
விளங்குதில்லையே என மனதில் ஒரு ஆற்றாமையும் வந்து சேர கண்களில் கண்ணீர்
எட்டிப் பார்த்தது.
என் கணவருக்கு நான் என்ன குறை விட்டேன். என்னைத் தேய்த்து, என் முகம்
வெளியே காட்டாது கணவரை இத்தனைதூரம் பேரும் புகழும் அடைய வைத்தும் எந்த வித
நன்றியும் இன்றி ஆண் என்னும் மமதையில் என்னவெல்லாம் பேசிவிட்டார்.
சோமருக்கும் கொஞ்ச வயதில்லை. இன்னும் ஆறு மாதங்களில் எண்பத்தைந்தாகிவிடும்.
வயது போகப் போக பொறுமையும் அமைதியும் வந்துவிடுமென இவள் எண்ணியதற்கு
மாறாக அவருக்கு சிறுசிறு விடயங்களுக்கெல்லாம் ஏற்படும் கோபங்களும் அதன்
காரணமாக இவளை நோக்கி வீசப்படும் வார்த்தைகளும் வரவரத் தாங்கமுடியாது
போய்விடுகிறது தேவகிக்கு.
எத்தனை தரன் சொன்னாலும் கேட்காது ஒவ்வொரு சின்னச் சின்ன
விடயங்களுக்கெல்லாம் அவளை ஏவுவதும் உடனே செய்யாவிட்டால் வன்சொற்களால்
வசைபாடுவதும் அவள் எதோ தனக்கு இட்ட பணிகளைச் செய்யவே வேலைக்கு
அமர்த்தப்பட்டவள் போல் அவளை நடாத்துவதும் அவளால் தாங்கவே முடிவதில்லை.
இப்பிடிப் பாக்கப்போனால் வெள்ளைக்காரர் மாதிரி அவையவையே தன் தன் வேலை
பார்த்திருந்தால் இந்த வயசுபோன காலத்தில எனக்கு இந்தக் கஷ்டம்
வந்திருக்காது என எண்ணினாள்.எங்கட கலாச்சாரம் பண்பாடு என்று இப்ப நான்
எல்லோ அவதிப்படுறன் என்று தனக்குள்ளேயே நினைத்தவளுக்குச் சிரிப்பு வந்தது.
அவள் சோமரைத் திருமணம் செய்து அறுபது ஆண்டுகள் ஓடிவிட்டன. இத்தனை ஆண்டுகள்
கழித்து வெளிநாட்டில் வாழ்வதனால் இப்படிக்கூட எனக்கு எண்ணத் தோன்றுகிறதே.
அப்ப எங்கட இளம் பிள்ளையளைக் குற்றம் சொல்லி என்ன என்றும் மனம் இவளைச்
சாடியது.
பிள்ளைகள் தம்முடன் வந்து இருக்குமாறு எவ்வளவோ வற்புறுத்தியும் ஏனோ
இவளுக்கு அவர்களைச் சார்ந்து இருப்பதர்ற்கு விருப்பம் இல்லை. இவளுக்கு
மட்டுமல்ல சோமருக்கும் அதே கொள்கைதான். பென்சன் காசு வருது. நாங்கள் எங்கட
பாட்டில இருக்கிறதுக்கு எதுக்கு மற்றவைக்குக் கரைச்சல் கொடுப்பான் என்று
எண்ணியதும் ஒரு காரணம்தான்.
ஆனால் இப்ப கொஞ்சக் காலமாய் என்ன சமைக்கிறாய், ஆக ரண்டு கறிதான் வச்சனியோ,
எனக்கு குளிசை போடவேணும் கெதியா சாப்பாட்டைத் தா, மத்தியானம் கட்டாயம்
மூண்டு கறியாவது இருக்கவேணும் எண்டெல்லாம் சோமர் செய்யும் அட்டகாசத்துக்கு
அளவே இல்லாமல் போனது. நான் மட்டும் என்ன குமரியே. எனக்கும் ஆரும் சமைச்சுத்
தந்தால் சும்மா இருந்து சாப்பிட ஆசைதானே என எண்ணியவளுக்கு மனதெல்லாம்
எதுவோ அடைத்தாற்போல் இருந்தது.
நேற்று சோமரின் பென்சன் கடிதம் ஒன்றைக் காணவில்லை என்று, இவள்தான் எங்கோ
வைத்துவிட்டாள் என அவர் போட்ட கூச்சலில் இவளுக்கும் கோவம் வந்துவிட்டது.
நான் ஒண்டும் உங் களுக்கு வேலைக்காரி இல்லை மரியாதையாக் கதையுங்கோ எண்டு
இவளும் என்றுமில்லாதவாறு குரலை உயரத்தில் கத்த சோமருக்கு வந்த
கண்மூடித்தனமான கோவத்தில் உன்னைச் சாக்காடிப் போடுவனடி என்று இவள்
கழுத்தில் கையை வைத்துவிட்டார்.
ஒரு செக்கன் இவளுக்கு மூச்சே வராமல் கழுத்தை அங்கும் இங்கும் ஆட்டி
அவரிடமிருந்து விடுவித்துக்கொண்டு தன்னை அசுவாசப்படுத்தவே பெரும்பாடாகப்
போய்விட்டது. தன் அறைக்குள் போய் சின்னப்பிள்ளை போல் விக்கிவிக்கி
அழுதபின் தான் அவள்மனம் ஆறுதல் கொண்டது. எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தால் என்ன
ஆண்களின் அடக்கும் புத்தியை எண்ணி அவர்பால் ஒருவித வெறுப்பும் வந்தது.
இன்றுவரை அவருடன் பேசவுமில்லை. அவருக்கு எதுவும் செய்யவில்லை. மனதில் ஒரு
கோபத்தோடு இனி நான் உவருக்கு ஒண்டும் செயிறேல்ல. தனிய எல்லாம்
செய்தால்த்தான் விளங்கும் என்று மனதுள் கறு வியபடி காலையில் எழுந்து தனக்கு
மட்டும் தேநீர் போட்டு பாணுக்கு சலாமி வச்சு தனியச் சாப்பிட்டு, நீர்
இல்லா விட்டாலும் என்னால் எல்லாம் செய்ய முடியும் என்று காட்டுவதாய் அன்று
முழுவதும் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டு காலம் கழித்தாள் தேவகி.
மதியம் இரண்டுமணியாகியும் அவள் எழும்பவில்லை. அவளுக்குக் காலமை சாப்பிட்ட
சாப்பாடு செமிக்கவும் இல்லை. சோமர் இரண்டு மூண்டு தடவை அவளைக் கடந்து
போனார்தான். அவள் அவரை நிமிர்ந்தும் பார்க்கவுமில்லை. ஒரு பத்து நிமிடம்
கழிஞ்சிருக்கும். என்னப்பா இண்டைக்கு ஒண்டும் சமைக்கேல்லையே. பசிக்குதப்பா
என்று வெட்கம் கெட்டு சோமர் இவள்முன் வந்து நின்று கேட்கவும்
இரண்டுநாட்களாக இருந்த கோபம் வெறுப்பு எல்லாம் எங்கோ ஓடிப்போக இன்னும்
நீங்கள் சாப்பிடேல்லையே என்று எதுவும் நடக்காததுபோல் எழுந்து
சமையலறைக்குச் செல்கிறாள் தேவகி.
23 January 2014
No comments:
Post a Comment