Friday, 31 October 2014

மனதின் ஓசைகள் - கவிதை

மனதின் ஓசைகள்
மயங்கிடச் செய்கிறன
மனவெளிதனை

நிலாவின் காய்தலில்
நேற்றுக் கண்ட கனா
காலையில் காணாமல்
போவதுபோல்.......
நெஞ்சின் நினைவுகளும்
அப்பப்போ வந்து
நெகிழ்த்திப் போகின்றன

சொல்ல மறந்ததை
சொல்லாமல் விட்டதை
காதினிக்க வந்து
கதையாகிப் போனதை
கூடிக் களித்ததை
கொஞ்சி மகிழ்ந்ததை
நட்பாகி நிறைந்ததை
நடுவில் சென்றதென
நாற்புறமும் மனம்
தென்றலாய் புயலாய்
நெஞ்சு நிறைத்துப்
போகின்றன


நிவேதா உதயன்
31.10.2014


Thursday, 30 October 2014

மனிதர்கள் - கவிதை


மனிதர்கள் ஏன் இப்படி இருக்கின்றனர் ??????
நல்லவர் கெட்டவர் அறியாது
நயவஞ்சகப் பேச்சுக்கள் புரியாது
பல்லிளித்துப் பழகும் எவரையும்
பால்போல என நினைத்து .....

மற்றவர் மனதறியாது
மார்க்கம் எதுவும் தெரியாது
மதிநுட்பமும் புரியாது
மடையர்களாய் இன்னும் ....
தரம் பிரிக்கத் தெரியாது
தன் தரமும் அறியாது
தவிலின் பக்கங்களாய்
தம்பட்டம் அடித்தபடி......
மனதின் வலி புரியாது
மயக்கும் வார்த்தை கண்டு
மறையும் அறிவு கொண்டு
மறைந்து வாழ்ந்தபடி .......
காற்றுக் கொள்ளுமட்டும்
கதவு திறந்தாலன்றி
சுவாசம் நிலைத்திடாது
சுத்தமாய் ஆகிடாது ....
இறைவன் அறிவு தந்தான்
இயன்று பார்க்கச் சொன்னான்
சிந்தனைச் சிறகடித்து
சோர்வுகள் அறுத்து நீ
மாயைகள் மட்டற
மனதைப் படிக்கவேண்டும்
விந்தை மனிதா நீ
விழிப்புற வேண்டும் இன்னும்
சிந்தை முழுதும்
செழிப்புற வேண்டும்
பகுத்து அறியும் பக்குவம்
படித்து அறிதல் வேண்டும்

07.06.2014
Nivetha

நினைவுகள் - கவிதைநீண்ட நெடு மரங்களிநூடு
நிதானமாய் நடக்கிறேன் நான்
மழைத்தூறல் முகம் நனைக்க
மகிழ்வாக மழையில் நனைந்த நாள்
மனதில் வருகிறது.

மனதின் ஓரங்களில் என்றும்
ஒட்டிக்கொண்டே இருக்கும்
காய்ந்துபோன சிலதும்
பழுப்பாகிக் கொண்டிருக்கும்
சில நினைவுகளுடனும்
கவலையும் மகிழ்வுமாய்
மனம் பயணிக்கிறது

காததூரம் வந்துவிட்டோம்
மீண்டும் வர முடியாத
அந்த நாட்களின்
நினைவுகளுடன் மட்டுமாய்
என்பது மனம் கனக்க
மாற்ற முடியாததான நாட்களின்
வலுவிழந்த இறந்த காலத்தின்
வரிகள் மட்டுமே நினைவில்

எல்லாமும் எப்போதும் என்
நினைவில் இல்லை
சிறுபராயத்து சிதிலமடைந்த
நினைவுகளில் சில மட்டும்
செருக்கடையா மனதின்
சிலும்பல்களாய் வந்துபோக
மீட்டல் செய்ய முடியாத
மறந்து போனவைகளுக்காக
வருந்த மட்டுமே முடிகிறது


26.08.2014
Nivetha

மறக்க முடியாத - கவிதை


மறக்க முடியாத மரணத்தின் வலியாகி
துறக்க முடியாத துயரத்தின் வடிவாகி
கடக்க முடியாத காலத்தின் கனவாகி
சுமக்க முடியாத சுமையாய் இருப்பது காதல்

தடுக்க முடியா தவிப்பில் உருவாகி
தவிர்க்க முடியா தடைகள் உடைத்தாகி
விடுக்க முடியா வேர்கள் விழுதாகி
விலக்க முடியா வினைகள் கொண்டது காதல்


கொடுக்க முடியாக் கொடைகள் கொடுத்தாகி 
இழக்க முடியா எல்லாம் இழந்தாகி
துறக்க முடியா துறப்பும் துறந்தாகி 
அடக்க முடியா மனதும் கொண்டது காதல்

எதிர்க்க முடியா எல்லாம் எருவாகி
ஏற்க முடியா எல்லாம் ஏற்றாகி
எதுவும் முடியா எண்ணம் முடித்தாகி
எதிர்வினை அற்றிருபது காதல் 

தொடங்குவது தடுக்கா முடிவாகி 
தொடர்வது திருட்டின் வழியாகி
தேடல்கள் தெவிட்டலில் முடிவாகி
தீராப் பகை சொல்வதும் காதலே

 நிவேதா உதயன்
22.09.2014

வானம் இன்று - கவிதை


வானம் இன்று வண்ணமிழந்து அழுகிறது
மேகம் கூட நிறமிழந்து பொழிகிறது
ஊசிக் காற்று உடலை வருத்த
உணர்வுகள் எல்லாம் உடல் சுருக்கி
ஒன்றுமற்று ஓடியே செல்கின்றன

இளவேனில் மழை இதமாய் நனைத்திடும்
கோடையில் மழை குதூகலம் தந்திடும்
மாலை மழை மனதை மயக்கிடும்
குளிர்கால மழையோ குலை நடுங்கிக்
கூதல் ஓடக் கொட்டமடக்கிடும்

கோடையை நனைக்க மழை வேண்டும்
குழந்தைகள் நனைய மழை வேண்டும்
காதலர்களுக்கும் மழை வேண்டும்
கனவுகள் கடந்து காலம் காட்டவும்
நினைவுகள் களைந்து நின்மதியுறவும்
நினைந்து நினைந்து நீ வாராது மழையே
நினைக்கும் பொழுதில் மட்டும் நீ வா


08.10.2014
Nivetha

மனதில் இருந்து விடுதலை - கவிதை


மனதில் இருந்து விடுதலை வேண்டும்
மறக்க முடியா நினைவுகள் இன்றி
மயங்க முடியா மனதும் இன்றி
மெலிதல் இல்லாச் செய்யல்களுடன்
மேன்மை பெற ஒரு மனம் வேண்டும்

செயற்கை அற்ற நட்பினதாய்
செயல்கள் எல்லாம் இயல்பினதாய்
சுவாசம் எங்கும் நிறைந்திட
சுத்தமான மனம் வேண்டும்

உயர்ந்த எண்ணம் கொண்டதுவாய்
உண்மை என்றும் உள்ளதுவாய்
உணர்வு கொண்டு துடிப்பதுவாய்
உயர்வாய் ஒரு மனம் வேண்டும்

ஆதிக்கம் என்பது அற்றதுவாய்
அகந்தை முற்றும் துறந்ததாய்
அன்பு கொண்டு என்னைச் சேர
ஆண்மை கொண்ட மனம் வேண்டும்

நம்பிக்கை கொண்டதுவாய்
நம்பிக் கை கொடுப்பதுவாய்
நம்பி நானும் நடப்பதற்காய்
நெகிழ்வுடனே ஒரு மனம் வேண்டும்

நட்டாற்றில் விடுவதுவாய்
நம்பிக்கை கொன்று நின்மதி தின்று
நினைக்கும் நேரம் நினைத்தபடியாய்
நிர்க்கதியாக்கியே நிதம் கொன்றிட
நிட்சயமற்றதாய் ஒரு மனம்
எப்போது எனக்கு வேண்டினும் வேண்டா

22.10.2014
Nivetha

இனிய இளகிய காலை ஒன்றில் - கவிதை


இனிய இளகிய காலை ஒன்றில்
மனவெளியில் மட்டற்று மயக்கங்கள்

நீண்டு தெரியும் நெடுமரங்களோடு
நட்பாய் நடக்கையில்
நிமிர்வற்ற மரங்களின் உதிர்ப்பில்
நிலம் முழுதும் நிறைந்து கிடக்கும்
நிழல் தந்த இலைகள்
நெஞ்சமதை நெகிழ்க்கின்றன

உதிர்ந்த மரக்கிளைகளில்
கொஞ்சலும் கொற்றலும் கூச்சலுமாய்க்
கூடியிருந்த புலுனிகள் கூட்டம்
கூடி ஒன்றாய் புல்லமர்ந்து
கொற்றித் தின்றன எதையோ
பின் கூடி எழுந்து கோலமிட்டபடி
கண்ணிமை மூடித் திறக்குமுன்னே
காணாமலும் போயின

மீண்டும் அவை வந்து போகலாம்
மிடுக்காய் அமர்ந்து மின்னலாய்ப் பறந்து
மாயங்கள் செய்யலாம்
காலம் மாறிக் கடும்பனி போனபின்
குனிந்த மரங்கள் மீண்டும்
குளிர் விரட்டி தளிர் கொள்ளலாம்
நாம் மட்டும்
தொலைந்த எம் இருப்பை எண்ணி
தொலைவிலும் தெரியா துளிர்ப்பும் இன்றி
தொன்மை தொலைத்து எம்மைத் தொலைத்து
தூரம் தெரியா இடுட்டைத் துலாவி
வெளிச்சமற்ற வீதியற்ற வெளியில்
தொலை தூரம் செல்லக் காத்திருக்கிறோம்


என்னுள் வியாபித்திருக்கும் - கவிதை


என்னுள் வியாபித்திருக்கும்
எண்ணத்தின் துளிகள்
எதிர்பார்த்து ஏங்கி
என்னுள்ளே எனைத்தாக்கி
எங்கெங்கோ சுற்றி வந்து
எண்ணற்ற எதிர்வினைகளை
என்னுள்ளே ஏவுகின்றன

புரிந்தும் புரியாது நிற்கும்
மனித மனங்களின் தகவுகள்
புரிந்திடக் கூடுமான
தருணங்களைத் தவிர்த்து
புரியமுடியாச் சூழல்களை
புரியாத கணக்குகளாய்
புதிராக்கி நிற்கின்றன

காலமும் கணக்கும்
மாறா எச்சங்களாய்
மாசுபடாத பகிர்தலை
மறக்கடிப்பதற்கான
மூச்சான முயல்வில்
முரண்கள் அதிகரிக்க
முட்டுச் சந்தில் நிற்பதாய்
முகம் உணரும்

ஆனாலும் தொடர்தல்
தொடர்பின்றித் தொடர
மனம் சூழும் மூச்சுக்கள்
காற்றாகிக் கரையாது
மதம்பிடித்தாடும் மனதின்
மடைதிறக்கும் காலத்துக்காய்
முகிள்வின்றிக் காத்திருக்கவே
முடிவற்று முடிகிறது


27.10.2014
Nivetha

கண்ணெதிரே காண்பவை - கவிதை


கண்ணெதிரே காண்பவை
கானல் நீராய்த் தெரிகிறது
 

மனிதமற்ற மனங்களின்
ஆசைகளின் ஓலங்களில்
அகப்படும் உயிர்கள்
உன்னதம் இழந்து
உயிர்வதை பட்டு
உழல்வதே வாழ்வாகி
உடைந்து நொறுங்கி
ஓட்டமுடியாததான
ஓர்மத்துடன் ...........

நகர்வின் அபிநயங்களில்
நல்லவராய் முகம் காட்டி
புறத்தே புழுவாய்
பேய் முகம் காட்டும்
பேடியராய்ப் பலர்
பித்தர்களாக்கி எமை
பரிதவிக்க வைத்து
பரவசம் கொண்டிடுவர்

வடிவங்கள் பலவெடுத்து
வக்கணையாய்ப் பேசி
வஞ்சப் புகழ்ச்சியுடன்
வாசனை அற்றவராய்
வன்மம் புடைசூழ
வஞ்சனையே அவராய்
வலிந்த விதியினதாய்
வடமிழுக்க முன்னிற்பர்

வகை தெரியா மனமே
வாழ்வைப் புரிந்திட
வண்ணங்கள் அல்ல
வாழ்வு ......
மேடுகள் காடுகள்
பகை நிறைத்த மாந்தர்
பகிர்தலற்ற பாள்மணம்
மிகைப்பட அனைத்தும்
மிகுந்ததே வாழ்வு

கல்லாய் ஆக்கிடு மனம்
கொல்லா வாழ்வது
கொண்டு சேர்த்திடும்
முள்ளாய் முரடர்
மூர்க்கமாய்க் குற்றினும்
வெல்லாமை கொண்டு
அவர் வெகுண்டு ஓடிட
நில்லாய் நீ மனமே
கருங்கல்லாய் நீ தினம்


29.10.2014
நிவேதா