எப்போதும் இரவு ( சிறுகதை ) / நிவேதா ( இலண்டன் )
அமலி வேலைக்குச் சேர்ந்து இரு வாரங்களாகிவிட்டன. இப்போதுதான் மனது
கொஞ்சம் இலேசாகி இருக்கிறது. இளம் பெண்களுக்கு எங்கு சென்றாலும் ஆண்களால்
பிரச்சனை தானோ? என எண்ணிய மனதை அப்படி இருக்காது. யாரும் இல்லை என்னும்
நினைப்பே மற்றவர்களை அத்து மீற வைக்கிறது என்று எண்ணிக்கொண்டாள்.
அவளே எதிர்பார்க்கவில்லை. இதனை விரைவில் அவளுக்கு யாழ்ப்பாணத்தில் ஒரு
நல்ல வேலையும் பாதுகாப்பாகத் தங்குவதற்கு ஒரு நல்ல வீடும் கிடைக்குமென்று.
இவள் கேட்ட உடனேயே கடை முதலாளி வேலையைக் கொடுத்து தங்குமிடத்தையும்
ஒழுங்குசெய்துவிட்டார். அவள் இங்கு வந்தது நல்லதாகப் போய்விட்டது என்று
மனதில் நின்மதி ஏற்பட்டது.
இன்று வெள்ளனவே வந்து புதிதாக வந்து இறங்கிய உடுப்பு மூட்டையைப்
பிரித்து அடுக்கியவள், அந்த நீல நிறச் சுடிதாரை எடுத்து ஆவலுடன் தடவிப்
பார்த்தாள். எத்தனை வேலைப்பாடுகள். முன்பெனில் இவளுக்குப் பிடித்திருந்தால்
பெற்றோர் உடனே வாங்கிக் கொடுத்துவிடுவார்கள். இப்ப யாருமற்று எதுவுமற்று
அனாதையாகியபின் வாழ்வை மூன்று நேர உணவுடன் கொண்டுசெல்வதற்கே பெரும் பாடு
படவேண்டி இருக்கு என்று எண்ணிக்கொண்டு நிமிர்ந்தவள் முதலாளி இவளையே
பார்த்துக்கொண்டு நிற்பதைக் கட்டு ஒருகணம் தன்னுள்ளே கூனிக் குறுகியபடி
அந்தச் சுடிதாரை மடித்து அந்தப்பக்கம் வைத்தாள்.
என்ன அமலி உடுப்புப் பிடிச்சிருக்கே என்று முதலாளி கேட்கமுதலே
பதட்டத்துடன் இல்லை நான் சும்மா தான் போட்டுப் பாத்தனான். இப்ப
என்னட்டைக்காசும் இல்லை இதை வாங்க என்று கூறிக்கொண்டு எழுந்தாள். உமக்குப்
பிடிச்சிருந்தா எடும் பிறகு காசைத் தாரும் என்றார் முதலாளியும் விடாமல்.
இல்லை முதலாளி. நான் காசு சேர்த்துப் பிறகு வாங்கிறன் என்று கூறிவிட்டு
தொடர்ந்து அந்த இடத்தில் நிற்காது உடைகளை முன்பக்கமாகக் கொண்டு சென்றாள்.
எத்தனை பேருக்கு வேலை கொடுத்தார் அப்பா. எல்லோரும் இவள் தந்தையை ஐயா
என்று மரியாதையாக அழைப்பதைக் கேட்டு இவளுக்கும் பெருமிதமாக இருக்கும்.
இப்போ யாரோ ஒருவரை முதலாளி என்று அழைக்க வேண்டிய கொடுமையில் தன் வாழ்வு
இருப்பதை எண்ணி நெஞ்சு அடைப்பது போல் இருந்தது. இந்தப் போர் எத்தனை பேரின்
வாழ்வை இப்படிப் புரட்டிப் போட்டுவிட்டது என எண்ணியவாறே வேலையுள் புதைந்து
போனாள்.
******************
மாலை வேலை முடிய வீடுக்குச் செல்லும் போது அடுத்த நாள் சமைக்க சில
மரக்கறிகளை வாங்கிக்கொண்டு வீட்டுக்கு வந்தாள். அங்கு இருக்கும் மற்றைய
மூன்று பெண்களும் சேர்ந்து சமைத்துச் சாப்பிடுகின்றனர். இவளையும் சேர்ந்து
தம்முடன் சாப்பிடும்படி அவர்கள் கூறினார்கள் தான். ஆனால் ஒரு வாரம்
அவர்களுடன் சேர்ந்து உண்டதில் குறைவான பணமே செலுத்தவேண்டி இருந்தது.ஆனாலும்
மாறிமாறி அவர்கள் சமைக்கும் போது அதில் ஒருத்தி சமைப்பது வாயிலும் வைக்க
முடியாமல் இருந்தது. பெண்ணாகப் பிறந்துவிட்டு சுவையாகச் சமைக்கக்கூடத்
தெரியாமல் எப்படி இருக்கமுடியும் என்று மனதுக்குள்ளே எண்ணினாள். முகாமில்
இருந்தபோது இதைவிடக் கேவலமாக உண்டாய் தானே என மனம் இவளை இடித்தது. அங்கு
வேறு வழியே இருக்கவில்லை என்று சமாதானமும் சொன்னது.
இப்போது அவள் தானே தனக்குப் பிடித்ததைச் சமைத்து உண்பது நின்மதியாகவும்
சந்தோசமாகவும் இருந்தது. இவள் எத்தனை செழிப்பாக வாழ்ந்த வாழ்வை எண்ணியபடியே
சமையலைச் செய்து முடித்து, சுடச்சுடச் சுவையாக உண்டு பாத்திரங்களையும்
கழுவி வைத்துவிட்டு திண்ணையில் வந்து அமர்கிறாள்.
இவள் தம்முடன் சேர்ந்து சமைக்காததில் இருவருக்கு இவளில் கோபம். அதற்கு
இவள் என்ன செய்யமுடியும். மூன்றாமவள் கோகிலா மட்டும் கொஞ்சம் நாகரீகமானவள்.
இவளைப் புரிந்துகொண்டு வழமைபோல் இவளுடன் கதைத்தாள். அவளை நினைக்க அவள்
தூரத்தில் வருவது தெரிந்தது. கொஞ்சம் கொஞ்சமாகத்தான் இவர்களுடன் தன்னை
இணைத்துக்கொள்ள வேணும். ஒரே வீட்டில் இருந்துகொண்டு முகத்தைத் திருப்பி
வைத்துக்கொள்வதில் மனச் சங்கடம் தான் மிஞ்சும் என
எண்ணிக்கொண்டிருக்கும்போதே கோகிலா இவளருகே வந்துவிட்டாள்.
வந்தவள் ஒரு சிரிப்புடன் இவளுக்கு ஒரு பையை நீட்டினாள். இவள்
வாங்காமலேயே என்ன என்றாள். பிடியும் முதலாளி உம்மட்டைக் குடுக்கச் சொன்னவர்
என்றபடி இவளின் கைகளில் திணித்தபடி எடுத்துப் பாரும் என்றாள். பையைத்
திறந்து பார்த்தவளுக்கு ஒரு செக்கன் மகிழ்ச்சி ஏற்பட்டு அடுத்த கணமே ஒரு
திடுக்கிடலும் ஏற்பட்டது. இதை ஏன் தந்துவிட்டவர் என்று வாய் கொகிலாவைக்
கேட்டாலும் இவளுக்கே காரணம் தெரிந்துதான் இருந்தது.
காலையில் அவள் ஆசையோடு பார்த்த சுடிதாரை முதலாளி கோகிலாவிடம்
குடுத்துவிட்டிருந்தார். கடைசி மூவாயிரம் ரூபாயாவது வரும் அது. எனக்கேன்
அவர் தர வேணும் என்று கோகிலாவை கோபத்தோடு கேட்டாள் அமலி. அமலி
கோபப்படாதையும். நீர் முதலாளியின் ஆசைக்குச் சம்மதித்தால் உமக்கு வீடும்
வேலையும் நிரந்தரம். நாங்கள் மூண்டுபேரும் கூட அப்பிடித்தான். என்ன
செய்யிறது ?? ஆமியிட்டை இருந்து வந்தனாங்கள் ஏன்டா உடனேயே எல்லா நாயளும்
எங்களை படுக்கையில பாக்கத்தான் ஆசைப்படுறாங்கள். நானும் எத்தினை கடையா ஏறி
இறங்கி பசிக்கொடுமை தாங்காமல் சரி பாதுகாப்பான ஒரு இடமும் சாப்பாடும்
வேலையும் இருக்கு என்று வேற வழியில்லாமல் சம்மதிச்சன். ஆரம்பத்தில
கொடுமையாத்தான் இருந்தது. இப்ப பழகிட்டுது. ஏன் நீர் கூட ஆமியிட்டை
அகப்பட்டுத்தானே இருப்பீர் என்று கோகிலா சாதாரணமாகக் கூற, நான் ஆமியிட்டை
அகப்படேல்லை என்று இவள் கத்திய கத்தில் கோகிலா திடுக்கிட்டாள்.
எல்லாரும் உப்பிடித்தான் சொல்லுறது என்று நக்கலாகச் சிரித்தபடி கோகிலா
எழுந்து நடக்க, இவள் கோபத்துடன் அந்தச் சுடிதாரை சுழற்றி எறிந்தாள். உள்ளே
சென்று தன் பொருட்களை எடுத்தவள் வாசல்வரை சென்றுவிட்டு மீண்டும் வந்து
எறிந்த சுடிதாரையும் எடுத்துக்கொண்டு போய் உள்ளே வைத்துவிட்டு சுவரில்
சாய்ந்து அழத் தொடங்கினாள். காலை விடியட்டும் இந்த நேரம் கடையில்
முதலாளியும் இருக்கமாட்டார். ஐயோ நானும் செத்திருந்தால் நின்மதியாய்
இருந்திருக்குமே. அதுக்குக் கூடத் துணிவு இல்லையே என்று அழுது முடித்து
தீர்மானமும் எடுத்து பாயை விரித்து படுத்தபடி அடுத்த நாள் செய்யவேண்டியதை
வரிசைப்படுத்திக் கொண்டாள்.
**********************
காலை எழுந்து பல்லை மட்டும் விளக்கிவிட்டு அமலி கிளம்பத் தயார் ஆனாள்.
கோகிலாவிடமாவது சொல்லிவிட்டுப் போவோமா என எண்ணியவள் பின்னர் அந்த
நினைப்பைக் கைவிட்டு தன் பொருட்களையும் சுடிதாரையும் எடுத்துக்கொண்டு
கடைக்குக் கிளம்பினாள்.
இவளைப் பார்த்ததும் முதலாளியின் முகத்தில் ஒரு ஒரு சந்தோசச் சிரிப்புத்
தோன்றியது. இவளுக்கு வந்த கோபத்தில் சுடிதாரை எடுத்து அவர் முகத்தில் வீசி
எறியவேண்டும் போல் இருந்த நினைப்பை உடனே அடக்கிக் கொண்டாள். சுடிதார் பையை
அவர் முன் வைத்துவிட்டு எதுவும் கூறாமல் திரும்பி நடப்பவளை நில்லும்
அமலி.நான் சொல்லுறதைக் கேள் பிள்ளை என்று அவர் கூறுவது தேய்ந்துகொண்டே வர,
சிறிது நேரத்தில் பேருந்து நிலையத்தை அடைத்து வன்னி போகும் பேருந்தில் ஏறி
அமர்ந்தாள். சிறிது நேரத்தில் பேருந்து கிளம்ப இவள் மனதும் முன்னர் தான்
வாழ்ந்த வாழ்வை எண்ணி ஊர்வலம் போனது.
******************
மரங்கள் அடர்ந்த, வீடுகள் அற்ற அந்தப் பரந்த பிரதேசத்தில் வானத்து
நட்சத்திரம் போல் தெரியும் வீடுகளில் ஒன்றே அமலியின் வீடும். பாலை
மரங்களும் நாவல் மரங்களும் ஆங்காங்கே இருந்தாலும் சுற்றவரக்
கட்டப்பட்டிருந்த மதில்கள் எல்லாம் உடைந்தோ அல்லது யாராலோ உடைத்து கற்கள்
எடுக்கப்பட்டு வீட்டின் பாதுகாப்பையும் அழகையும் குறைத்தது.
வீட்டின் முன்னால் நின்ற மல்லிகைப் பந்தலும் வெய்யிலில் நீரின்றி வாடி
இலைகள் கருகியபடி பந்தலில் காய்ந்து கிடந்தன. குரோட்டன்கள் ஒன்றிரண்டு
தப்பிப் பிளைத்திருந்தனதான் என்றாலும் கவனிப்பாரற்றுக் கண்டபடி
வளர்ந்திருந்தன. ஒற்றை மாமரமும் பின் வளவில் இருக்கும் தென்னைகளும் அவள்
வீட்டதுதான் என்றாலும் உயிருடன் நடமாடிய ஐந்து பேர் இல்லாத வீடு எப்போதும்
அவர்களை நினைவுபடுத்த பகலில் இருக்கும் கொஞ்சநஞ்ச நின்மதியும் இரவில்
தொலைய, என்ன நடக்குமோ எது நடக்குமோ என உயிரைக் கையில் பிடித்தபடி வாழ்வதே
நிர்ப்பந்தமாகிவிட்டது.
கணவன் உயிருடன் இருந்தபோது எத்தனை மகிழ்வுடன்
இரவில் வானில் தெரியும் நட்சத்திரங்களையும் நிலவையும் கணவன் முதுகில்
சாய்ந்தபடி பார்த்து மகிழ்ந்திருப்பாள். இன்று நினைக்க பெருமூச்சு மட்டுமே
எஞ்சுகிறது.
தூரத்தில் வாகன ஓசை கேட்க வழமைபோல் இதயத்துடிப்புப் பன்மடங்காக வேறு
வழியின்றி மனதையும் உடலையும் கல்லாக்கியபடி எதுவும் செய்ய முடியாதபடி
சோர்வுடன் இருக்கமட்டுமே அவளால் முடிகிறது.
யுத்தம் முடிவுக்கு வந்தபின் மனிக் பாமில் இருந்த போதும் சரி பின்னர்
வெளியே வந்தபோதும் கூட அரவணைத்து ஆறுதல் கூற யாருமற்று அனாதையாக நின்றது
இப்போதும் கண்ணுக்குள் நிற்கிறது. பெற்றவரும் கணவனும் கூடிப்பிறந்தவரும்
குண்டுகள் பட்டுச் சிதிலமாகிப் போக, ஏனோ இவளை மட்டும் சாவு தள்ளியே வைத்த
கொடுமை இவளைப்போல் பலருக்கு நேர்ந்ததில், உடல் உறுப்புக்கள் சிதையாது
என்னைக் கடவுள் காத்தாரே என்று தான் அப்போது எண்ணத் தோன்றியது.
தொடர்ச்சியாக ஏற்பட்ட மரணங்கள் மனதில் உணர்வுகளைத் துடைத்ததில் சொந்தம்
என்று சொல்ல யாரும் அற்றவர்களாய் எஞ்சிப் போனவர்களுள் ஒருத்தியாகி வாழ்வை
எதிர் நோக்க வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டது முன்வினைப் பயனோ என
எண்ணி மறுகவே முடிந்தது அமலியால்.
பட்டப்படிப்புப் படித்திருந்தாலாவது என் காலில நிற்க முடிந்திருக்கும்.
வளமான வயல்களே இவர்களின் சொத்தாக இருந்து இவர்களை தலை நிமிர்ந்து
வாழவைத்தது. எல்லாம் இராணுவம் சுவீகரித்துக்கொன்டத்தில் இந்த வீடு மட்டும்
தான் அதிட்டவசமாக உடையாமல் தப்பி நின்றது.
அந்த அந்துவானக் காட்டில் அங்கொன்றும் இங்கொன்றுமான வீடுகளுடன் வந்து
வசிப்பதற்கு அவளுக்கும் யோசனையாகத்தான் இருந்தது. அகதி முகாமில் இருந்தபோது
அறிமுகமானவர்கள் கூட அதைவிட்டு வெளியே வந்தபின் எங்கே இவள் தம்முடன்
ஓட்டிக்கொள்வாளோ என்னும் அச்சத்தில் தெரியாதவர்போல் நடந்துகொண்டது மனதை
வருத்தியது.
உறவுகளை இழந்தவர்கள் ஒருவருக்கொருவர் துணையாக இருப்பார்கள் என்று
எண்ணினால் சொந்தங்களை இழந்த கையோடு மனதையும் ஒட்டுமொத்தமாய்த்
துடைத்துவிட்டார்களோ என எண்ணும்படி நடந்து கொள்ள எப்படித்தான் இவர்களால்
முடிகிறது என்னும் எண்ணத்திநூடே பாவம் அவர்களும்தான் என்ன செய்வார்கள்.
எல்லாவற்ரையும் இழந்து நிற்பவர்களுக்கு ஒவ்வொரு சதமும் பெறுமதியானதுதான் என
மனம் தனக்குத்தானே சமாதானமும் கூறியது.
தொண்டு நிறுவனங்களில் பதிந்து உதவிகளைப் பெற்றுகொண்டாலும் பிச்சை
எடுப்பதுபோல் ஒவ்வொருதடவையும் உணர்வதை இவளால் தடுக்கவே முடியவில்லை. ஏதும்
வேலை செய்து பிளைத்துக்கொள்வோம் என்றாலும் இவளுக்கு யாரும் இல்லை என்று
தெரிந்தவுடன் பல ஆண்களுக்கு இவளை படுக்கையில் பகிர்ந்துகொள்ளும் ஆசைதான்
வந்தது.
இரவில் சிம்னி விளக்கின் துணையோடு கதவைத் தட்டும் ஓநாய்களிடமிருந்து
தன்னைக் காத்துக் கொள்வதற்காக இரவிரவாக விளக்கை எரியவிட்டாள். மின்
விளக்குகள் மின்சாரம் இன்றி எரியாதுவிட்டு பல மாதங்களாகிவிட்டன.
நிவாரணப்
பொருட்கள் பெற்றுக்கொள்ளக் கடைக்கு வரும்போதெல்லாம் கடைக்காரக்
காத்திகேசின் இளிக்கும் பார்வையும், இவளுக்கு விளக்கெரிக்க அதிக
மண்ணெண்ணெய் தேவை என்பதால் வேறு பொருட்களுக்குப் பதிலா மண்ணெண்ணையைக் கூடத்
தரச்சொல்லிக் கேட்டதுக்கு, நீ ஓமெண்டு சொல்லு நான் கரண்ட எடுத்துத் தாரன்
எண்டவனும் பொருட்களைத் தரும்போது வேண்டுமென்றே கையைத் தடவிக்கொண்டே
தருவதும், இன்னொருத்தன் துணிவா இரவைக்கு வரட்டோ என்று கேட்க இவள் கோபத்தில்
துப்பிவிட ஓமடி எனக்குத் துப்புவாய். ஆமிக்காரங்களோடை மட்டும்தான்
படுப்பியோ என்று கேவலமாய்க் கேட்டதை நினைக்க இப்பவும் கோபம் வருகிறது.
இந்த ஆண்கள் இத்தனை நாள் தம் முகங்களை எங்கே மறைத்து
வைத்திருந்தார்கள்?? எல்லா ஆண்களும் இப்படித்தானா ??? யாருக்காகப் பயந்து
இத்தனை நாள் இருந்தார்கள்??? தம் குடும்பத்துக்கு இழப்புக்கள் ஏற்படாததனால்
மற்றவர் இழப்பு இவர்களுக்குப் புரியவில்லையா ??? அநாதரவான நிலை எனில் பெண்
எதற்கும் உடன்படுவாள் என்று எப்படி எண்ணத் தோன்றியது என்றெல்லாம் தனக்குள்
குமைந்ததில் இவள் எதுவுமற்று நிற்கத்தான் முடிந்தது.
இப்பிடியான விஷமங்கள் யாழ்ப்பாணத்தில் இருக்காது எண்டு நம்பி,
யாழ்ப்பாணப் பக்கம் போனால் வேலை வாய்ப்புக்கள் நிறைய என்று யாரோ கூறியதைக்
கேட்டு இங்கு வந்தால் இங்கு நாகரீகமாக வலை விரிப்பு.
ஒட்ட முடியாத மனிதர்களுடன் இருப்பதை விட பிறந்து வளர்ந்த இடத்தில்
எத்துன்பமும் பட்டுக்கொண்டாவது இருப்பது மேல் என்று எண்ணியபடியே வெளியே
பராக்குப்பார்த்தாலும், பெண்ணாகப் பிறந்துவிட்டாலே அவள் ஆண் சார்ந்து
இருந்தாலன்றி அவளுக்கு தகுந்த பாதுகாப்பு இருந்ததில்லை. வன்னியில் வாழ்ந்த
காலத்தில் எத்தனை சுதந்திரத்தோடு வாழ்ந்தோம். புலிகள் என்னும் மந்திரச்
சொல்லுக்குத்தான் எத்தனை வலிமை இருந்தது. இனி வரமுடியாத காலம் என்று
எண்ணிப் பெருமூச்சு ஒன்றை விடத்தான் அவளுக்கு முடிந்தது.
*****************
ரோகித வெளியே பாயில் படுத்திருந்தான். மற்றையவர்கள் இன்னும் தண்
ணியடித்துக்கொண்டும் காட்ஸ் விளையாடிக் கொண்டும் இருக்க அவனுக்கு
அதிலெல்லாம் இப்பொழுது ஆர்வம் குறைந்துவிட்டது. போர் முடிந்தபின்
விறுவிறுப்புக் குறைந்துவிட்டது. திரும்பி மொறட்டுவவுக்கு போகவும்
விடுராங்களும் இல்லை என்று யோசித்தபடி இருக்க குணசிங்க மூலை
வீட்டைப்பற்றிக் கதைத்தது கேட்டது. உடனே இவனுக்கு அந்த அழகிய பெண்
நினைவுக்கு வந்தாள். இப்ப தமிழ்ப் பெண்களுடன் அதிகம் வைத்துகொள்ள வேண்டாம்
என்று ஓடர் வந்தபின் இரு மாதங்களாக எல்லோரும் அடங்கி ஒடுங்கித்தான்
இருக்கிறார்கள். ஆனாலும் குணசிங்க ஒன்றைத் தொடங்கினால் முடிக்காமல்
விடமாட்டான்.
இவனை அறியாமல் ஒரு பதைப்பு எழுந்தது. அந்தப் பெண்ணின் சோகமான முகம் அவனது மனத்தில் பதிந்துவிட்டது. உடனே செருப்பை மாட்டிக்கொண்டு குறுக்குப் பாதையால் ஓடத் தொடங்கினான் ரோகித.
சாதாரணமாக யாருக்கும் சொல்லாமல் செல்வது தவறு. அதற்குத் தண்டனையும் உண்டு.
ஆனாலும் இந்த நேரத்தில் அதை எல்லாம் யோசிக்கும் மனநிலையில் அவன் இல்லை.
இவர்கள் இந்த இடத்துக்குத் தங்கள் இருப்பை மாற்றி இப்பொழுது இரண்டு
வாரங்கள்தான். உடைந்தும் உடையாமலும் இடந்த வீடுகள் பலத்தைச் சுற்றி
கம்பிவேலி அடைத்து, உள்ளே அகப்பட்ட சிரரையும் வெருட்டிக் கலைத்து அது இனி
தமக்குச் சொந்தமான இடம் என்று ராணுவம் பலகையில் எழுதியும் நட்டிருந்ததில்
இப்ப இவர்கள் இடமாகி இருந்தது.
அவர்கள் வரமுதல் போய்விடவேண்டும் என்னும் வேகத்தில் அவன் ஓட இரண்டு
மூன்று நாய்கள் குரைத்தன. கையில் எதுவும் இல்லை. பார்ப்போம் என்னால்
முடிந்ததைச் செய்து அவளைக் காப்பாத்தலாம் என்று எண்ணியபடியே ஓடியவன் எத்தனை
பெண்களை இவனும் சேர்ந்து கெடுத்து, எத்தனை விதமாகச் சித்திரவதை செய்தும்
தூக்கிப் போட்டிருக்கிறார்கள். ஆனாலும் இவள் மேல் ஏன் தனக்கு இப்படி ஒரு
எண்ணம் ஏற்பட்டது என்று எண்ணியபடியே அவளின் வீட்டை அண்மிக்க தூரத்தில்
ஜீப்பின் வெளிச்சம் கேட்டது. இவன் அவசரமாக நெருங்கிக் கதவைத் தட்டினான்.
வீட்டுக்குள் இருந்து எந்தச் சத்தமும் இல்லை. ஜீப் நெருங்கி வருவது தெரிய,
வீட்டின் பின் பக்கமாகச் சென்று பார்ப்பதென முடிவெடுத்தான்
*****************
இவள் இறங்கும் இடம் வந்ததும் மிகுந்த மனச்சோர்வுடன் போரில் தோற்ற ஒருவன்
நாடு திரும்புவது போன்ற மனநிலையில் பேருந்தை விட்டு இறங்கி வீடு நோக்கி
நடந்தாள். இவளின் வீடு இருந்த பகுதியில் வீடுகள் பல இடிந்து போய்த்தான்
இருந்தன எனினும் இவளதைப் போல் தப்பியிருந்ததில் அந்தக் குடும்பங்களில்
எஞ்சியிருந்தவர்களும் சிலதில் அந்நியர்களும் கூட குடியேறி இருந்தனர்.
வளவில் நின்ற தென்னை மரங்கள் இவளுக்கு வருவாயை ஏற்படுத்தித் தந்தாலும் கூட
அத்தனை பேர் கூடி வாழ்ந்த வீட்டில் தனிமையில் இரவின் பயமுறுத்தல்களில்
அரைத்தூக்கத்தோடும் காத்தூக்கத்துடனும் நாட்கள் நகர்கையில் இவள் வாழ்வைப்
பிரட்டிப் போடும் சம்பவம் நடந்தது.
ஒருநாள் இரவு நல்ல தூக்கத்தில் இருந்தவள் கதவைத் தட்டும் சத்தம்
கேட்டுத் திடுக்கிட்டு விழித்தாள். இப்படி அடிக்கடி நடப்பதுதான். யாராவது
வந்து கதவைத் தட்டுவதும் இவள் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு மூச்சும்
விட மறந்து உள்ள தெய்வங்களை எல்லாம் உதவிகேட்டு நேர்த்தி வைப்பதும்,
தெய்வங்களும் இவளில் இரக்கம் கொண்டோ அல்லது இவள் பொங்கிப்
படைப்பவற்றிற்காகவோ இவளுக்கு ஒன்றும் நேராமல் தடுத்தனதான். ஆனாலும் அவர்கள்
இன்று தொடர்ந்து தட்டுவதைப் பார்த்தால் எல்லாமே கைவிட்டதை உணர்ந்தவள் என்ன
செய்வது எங்கே ஒளிவது, எப்படித் தன்னைக் காப்பாற்றுவது எனத் தெரியாது கை
கால்கள் மட்டுமன்றி மொத்த உடலும் பயத்தில் நடுங்க குசினிக்குள் ஓடிக்
கதவின் பின்னால் இருந்தவள், அவர்கள் கதவை இடித்த இடியில் பின் பக்கக்
கதவைத் திறந்து வெளியில் ஓட எத்தனிக்கையில் எதனுடனோ மோதுண்டு நிலை
தடுமாறிக் கீழே விழுந்தாள்.
விழுந்த வேகத்திலும் ஓடித் தப்புவதற்கு எழுந்தவளை அவன் மறித்தான். நீ
தப்ப இல்லாது. நிறையப்பேர். நான் தான் காப்பாத்தலாம் என்றபடி அவளின் கைகளை
இழுத்துக்கொண்டு வீட்டுக்குள்ச் சென்றான். இவள் அவனிடமிருந்து கைகளை
விடுவிப்பதற்காக இழுத்தபடி இருந்தாள். பேசாமல் இரு என்று உறுக்குவது போல்
கூறிவிட்டு கதவுகளைத் திறந்தான்.
இன்றுடன் தன வாழ்வு முடியப்போகிறது என்னும் அசையாத நம்பிக்கை அவளுக்கு
ஏற்பட்டிருந்தது. வெளியே நிற்பவர்களை நடுக்கத்தோடு பார்த்தாள்.
பசியோடிருக்கும் ஓநாய்கள் என்பது புரிய கால்கள் எல்லாம் தோய்ந்து மயக்கம்
ஏற்பட சுவருடன் சாய்ந்து தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டாள். அவன்
சிங்களத்தில் அவர்களுடன் எதோ கதைப்பது கேட்டது. கொஞ்ச நேரத்தில் அவர்களின்
காலடி ஓசையும் அவர்கள் தமக்குத்தானே சிங்களத்தில் கதைத்துக்கொண்டு
திரும்பிப் போவதும் புரிய, கதவைப் பூட்டிக்கொண்டு அவன் வந்தான்.
நான் கும்புடுற கடவுள் தான் அவனை அங்கு அனுப்பினது என்று அவர்களுக்கு
நன்றி கூற, அவன் இவள் முன்னாள் வந்து நின்றான். இங்கபார் நான் உன்னை
அடிக்கடி காணுறனான். இண்டைக்கு நான் ரோட்டால போக உன் வீட்டுக்கு முன்னால்
அவர்கள் வான் நிக்கிறதைக் கண்டுவிட்டு பின்பக்கமா வந்தனான். நீ தனிய
இருக்கிறது எண்டு எங்கள் ஆளுகளுக்குத் தெரியும். அதாலதான் நீ என்னோட ஆள்
என்று சொன்னன். அவங்கள் நம்பிப் போட்டாங்க. இனிமேல் வர மாட்டாங்க என்றபடி
அவள் அருகே அவனும் அமர்ந்தான்.
*****************
தூரத்தில் வாகன ஓசை கேட்க வழமைபோல் இதயத்துடிப்புப் பன்மடங்காக வேறு
வழியின்றி மனதையும் உடலையும் கல்லாக்கியபடி எதுவும் செய்ய முடியாதபடி
சோர்வுடன் இருக்கமட்டுமே அவளால் முடிகிறது. வாகனத்தின் சத்தம் மெல்லமெல்ல
இவள் வீட்டு வாசலில் வந்து நின்றதும் யன்னலால் எட்டிப் பார்த்துவிட்டு
ரோகிதவுக்காகக் கதவைத் திறந்தாள் அமலி.
02.12.14