Friday, 12 December 2014

ஆசையில் ஒரு கோட்டை - கவிதை


ஆசையில் ஒரு கோட்டை
அவசரமாய்க் கட்டிவைத்தேன் 
அதன் மீது விதவிதமாய்
அலங்காரம் செய்தும் வைத்தேன்

சீமெந்துக் கல்லுதிர்ந்து 
சிதிலமாகும் என்பதனால் 
கருங்கல் பல எடுத்து
களிமண்ணால் கார் பூசி 
கட்டிவைத்தேன் கோட்டை

கடல் அலை ஓடி வந்து
கலைத்துவிட்டுப் போகுமென
கனவிலும் நினைக்கவில்லை
கண்டபின்னர் கலைந்தது 
கட்டிவைத்த கோட்டை

கறையான் பிடிக்காத
கட்டைகள் என எண்ணி
கருங்காலிகள் எடுத்து
கவனமாய் அடி புதைத்து
கட்டினேன் கோட்டை 

காற்றாய் விதி வந்து 
கட்டுக்களைத் தகர்த்து 
கூட்டாய் அள்ளிப் போனது
கொஞ்சம் கொஞ்சமாக நானும்
கட்டிவைத்த என் கோட்டை 

விதியது வலியதுதான்
பூவானமாய்ப் பூத்து
பொங்கி வழிந்து புவி நிறைத்து
பார் முழுதுமாய் விரிந்து
பகடைக்காய் ஆக்கிவிட்டு
பதைக்கும் என்னைப்
பள்ளத்தில் தள்ளியதேன்

சுவாசிக்கும் நேரமெல்லாம்
காற்றுக் கனதியாய் முகம் நிரப்பி
நெஞ்சக் கூடடைக்க வைத்துச்
சண்டித்தனம் செய்கிறது
மனமோ உடல்விட்டு மேலெழுந்து
உயிர் காவி அந்தரத்தில் நிற்பதுவாய்
உணர்விழக்கச் செய்கிறது 

என்ன சொல்லி என்ன ஒயிர் ஒன்றே
உறவுக்காய் தரித்து நிற்கின்றது 
உணர்வு கொன்று உருக்குலைந்து
உன்மத்தம் கொண்டு உயிர்ப்பிழந்து
உற்றவர் முகம் பார்த்து மறுத்து
ஊன் மட்டும் உள்ளக் கொதிப்புடன்
ஒன்றுமற்று அனாதியாய் நிற்கிறது

Wednesday, 10 December 2014

எப்போதும் இரவு - சிறுகதை

எப்போதும் இரவு ( சிறுகதை ) / நிவேதா ( இலண்டன் )

images (7)

அமலி வேலைக்குச் சேர்ந்து இரு வாரங்களாகிவிட்டன. இப்போதுதான் மனது கொஞ்சம் இலேசாகி இருக்கிறது. இளம் பெண்களுக்கு எங்கு சென்றாலும் ஆண்களால் பிரச்சனை தானோ? என எண்ணிய மனதை அப்படி இருக்காது. யாரும் இல்லை என்னும் நினைப்பே மற்றவர்களை அத்து மீற வைக்கிறது என்று எண்ணிக்கொண்டாள்.

அவளே எதிர்பார்க்கவில்லை. இதனை விரைவில் அவளுக்கு யாழ்ப்பாணத்தில் ஒரு நல்ல வேலையும் பாதுகாப்பாகத் தங்குவதற்கு ஒரு நல்ல வீடும் கிடைக்குமென்று. இவள் கேட்ட உடனேயே கடை முதலாளி வேலையைக் கொடுத்து தங்குமிடத்தையும் ஒழுங்குசெய்துவிட்டார். அவள் இங்கு வந்தது நல்லதாகப் போய்விட்டது என்று மனதில் நின்மதி ஏற்பட்டது.
இன்று வெள்ளனவே வந்து புதிதாக வந்து இறங்கிய உடுப்பு மூட்டையைப் பிரித்து அடுக்கியவள், அந்த நீல நிறச் சுடிதாரை எடுத்து ஆவலுடன் தடவிப் பார்த்தாள். எத்தனை வேலைப்பாடுகள். முன்பெனில் இவளுக்குப் பிடித்திருந்தால் பெற்றோர் உடனே வாங்கிக் கொடுத்துவிடுவார்கள். இப்ப யாருமற்று எதுவுமற்று அனாதையாகியபின் வாழ்வை மூன்று நேர உணவுடன் கொண்டுசெல்வதற்கே பெரும் பாடு படவேண்டி இருக்கு என்று எண்ணிக்கொண்டு நிமிர்ந்தவள் முதலாளி இவளையே பார்த்துக்கொண்டு நிற்பதைக் கட்டு ஒருகணம் தன்னுள்ளே கூனிக் குறுகியபடி அந்தச் சுடிதாரை மடித்து அந்தப்பக்கம் வைத்தாள்.

என்ன அமலி உடுப்புப் பிடிச்சிருக்கே என்று முதலாளி கேட்கமுதலே பதட்டத்துடன் இல்லை நான் சும்மா தான் போட்டுப் பாத்தனான். இப்ப என்னட்டைக்காசும் இல்லை இதை வாங்க என்று கூறிக்கொண்டு எழுந்தாள். உமக்குப் பிடிச்சிருந்தா எடும் பிறகு காசைத் தாரும் என்றார் முதலாளியும் விடாமல். இல்லை முதலாளி. நான் காசு சேர்த்துப் பிறகு வாங்கிறன் என்று கூறிவிட்டு தொடர்ந்து அந்த இடத்தில் நிற்காது உடைகளை முன்பக்கமாகக் கொண்டு சென்றாள்.
எத்தனை பேருக்கு வேலை கொடுத்தார் அப்பா. எல்லோரும் இவள் தந்தையை ஐயா என்று மரியாதையாக அழைப்பதைக் கேட்டு இவளுக்கும் பெருமிதமாக இருக்கும். இப்போ யாரோ ஒருவரை முதலாளி என்று அழைக்க வேண்டிய கொடுமையில் தன் வாழ்வு இருப்பதை எண்ணி நெஞ்சு அடைப்பது போல் இருந்தது. இந்தப் போர் எத்தனை பேரின் வாழ்வை இப்படிப் புரட்டிப் போட்டுவிட்டது என எண்ணியவாறே வேலையுள் புதைந்து போனாள்.

******************

மாலை வேலை முடிய வீடுக்குச் செல்லும் போது அடுத்த நாள் சமைக்க சில மரக்கறிகளை வாங்கிக்கொண்டு வீட்டுக்கு வந்தாள். அங்கு இருக்கும் மற்றைய மூன்று பெண்களும் சேர்ந்து சமைத்துச் சாப்பிடுகின்றனர். இவளையும் சேர்ந்து தம்முடன் சாப்பிடும்படி அவர்கள் கூறினார்கள் தான். ஆனால் ஒரு வாரம் அவர்களுடன் சேர்ந்து உண்டதில் குறைவான பணமே செலுத்தவேண்டி இருந்தது.ஆனாலும் மாறிமாறி அவர்கள் சமைக்கும் போது அதில் ஒருத்தி சமைப்பது வாயிலும் வைக்க முடியாமல் இருந்தது. பெண்ணாகப் பிறந்துவிட்டு சுவையாகச் சமைக்கக்கூடத் தெரியாமல் எப்படி இருக்கமுடியும் என்று மனதுக்குள்ளே எண்ணினாள். முகாமில் இருந்தபோது இதைவிடக் கேவலமாக உண்டாய் தானே  என மனம் இவளை இடித்தது. அங்கு வேறு வழியே இருக்கவில்லை என்று சமாதானமும் சொன்னது.
இப்போது அவள் தானே தனக்குப் பிடித்ததைச் சமைத்து உண்பது நின்மதியாகவும் சந்தோசமாகவும் இருந்தது. இவள் எத்தனை செழிப்பாக வாழ்ந்த வாழ்வை எண்ணியபடியே சமையலைச் செய்து முடித்து, சுடச்சுடச் சுவையாக உண்டு பாத்திரங்களையும் கழுவி வைத்துவிட்டு திண்ணையில் வந்து அமர்கிறாள்.

இவள் தம்முடன் சேர்ந்து சமைக்காததில் இருவருக்கு இவளில் கோபம். அதற்கு இவள் என்ன செய்யமுடியும். மூன்றாமவள் கோகிலா மட்டும் கொஞ்சம் நாகரீகமானவள். இவளைப் புரிந்துகொண்டு வழமைபோல் இவளுடன் கதைத்தாள். அவளை நினைக்க அவள் தூரத்தில் வருவது தெரிந்தது. கொஞ்சம் கொஞ்சமாகத்தான் இவர்களுடன் தன்னை இணைத்துக்கொள்ள வேணும். ஒரே வீட்டில் இருந்துகொண்டு முகத்தைத் திருப்பி வைத்துக்கொள்வதில் மனச் சங்கடம் தான் மிஞ்சும் என எண்ணிக்கொண்டிருக்கும்போதே கோகிலா இவளருகே வந்துவிட்டாள்.
வந்தவள் ஒரு சிரிப்புடன் இவளுக்கு ஒரு பையை நீட்டினாள். இவள் வாங்காமலேயே என்ன என்றாள். பிடியும் முதலாளி உம்மட்டைக் குடுக்கச் சொன்னவர் என்றபடி இவளின் கைகளில் திணித்தபடி எடுத்துப் பாரும் என்றாள். பையைத் திறந்து பார்த்தவளுக்கு ஒரு செக்கன் மகிழ்ச்சி ஏற்பட்டு அடுத்த கணமே ஒரு திடுக்கிடலும் ஏற்பட்டது. இதை ஏன் தந்துவிட்டவர் என்று வாய் கொகிலாவைக் கேட்டாலும் இவளுக்கே காரணம் தெரிந்துதான் இருந்தது.

காலையில் அவள் ஆசையோடு பார்த்த சுடிதாரை முதலாளி கோகிலாவிடம் குடுத்துவிட்டிருந்தார். கடைசி மூவாயிரம் ரூபாயாவது வரும் அது. எனக்கேன் அவர் தர வேணும் என்று கோகிலாவை கோபத்தோடு கேட்டாள் அமலி. அமலி கோபப்படாதையும். நீர் முதலாளியின் ஆசைக்குச் சம்மதித்தால் உமக்கு வீடும் வேலையும் நிரந்தரம். நாங்கள் மூண்டுபேரும் கூட அப்பிடித்தான். என்ன செய்யிறது ?? ஆமியிட்டை இருந்து வந்தனாங்கள் ஏன்டா உடனேயே எல்லா நாயளும் எங்களை படுக்கையில பாக்கத்தான் ஆசைப்படுறாங்கள். நானும் எத்தினை கடையா ஏறி இறங்கி பசிக்கொடுமை தாங்காமல் சரி பாதுகாப்பான ஒரு இடமும் சாப்பாடும் வேலையும் இருக்கு என்று வேற வழியில்லாமல் சம்மதிச்சன். ஆரம்பத்தில கொடுமையாத்தான் இருந்தது. இப்ப பழகிட்டுது. ஏன் நீர் கூட ஆமியிட்டை அகப்பட்டுத்தானே இருப்பீர் என்று கோகிலா சாதாரணமாகக் கூற, நான் ஆமியிட்டை அகப்படேல்லை என்று இவள் கத்திய கத்தில் கோகிலா திடுக்கிட்டாள்.

எல்லாரும் உப்பிடித்தான் சொல்லுறது என்று நக்கலாகச் சிரித்தபடி கோகிலா எழுந்து நடக்க, இவள் கோபத்துடன் அந்தச் சுடிதாரை சுழற்றி எறிந்தாள். உள்ளே சென்று தன் பொருட்களை எடுத்தவள் வாசல்வரை சென்றுவிட்டு மீண்டும் வந்து எறிந்த சுடிதாரையும் எடுத்துக்கொண்டு போய் உள்ளே வைத்துவிட்டு சுவரில் சாய்ந்து அழத் தொடங்கினாள். காலை விடியட்டும் இந்த நேரம் கடையில் முதலாளியும் இருக்கமாட்டார். ஐயோ நானும் செத்திருந்தால் நின்மதியாய் இருந்திருக்குமே. அதுக்குக் கூடத் துணிவு இல்லையே என்று அழுது முடித்து தீர்மானமும் எடுத்து பாயை விரித்து படுத்தபடி அடுத்த நாள் செய்யவேண்டியதை வரிசைப்படுத்திக் கொண்டாள்.

**********************

காலை எழுந்து பல்லை மட்டும் விளக்கிவிட்டு அமலி கிளம்பத் தயார் ஆனாள். கோகிலாவிடமாவது சொல்லிவிட்டுப் போவோமா என எண்ணியவள் பின்னர் அந்த நினைப்பைக் கைவிட்டு தன் பொருட்களையும் சுடிதாரையும் எடுத்துக்கொண்டு கடைக்குக்  கிளம்பினாள்.
இவளைப் பார்த்ததும் முதலாளியின் முகத்தில் ஒரு ஒரு சந்தோசச் சிரிப்புத் தோன்றியது. இவளுக்கு வந்த கோபத்தில் சுடிதாரை எடுத்து அவர் முகத்தில் வீசி எறியவேண்டும் போல் இருந்த நினைப்பை உடனே அடக்கிக் கொண்டாள். சுடிதார் பையை அவர் முன் வைத்துவிட்டு எதுவும் கூறாமல் திரும்பி நடப்பவளை நில்லும் அமலி.நான் சொல்லுறதைக் கேள் பிள்ளை என்று அவர் கூறுவது தேய்ந்துகொண்டே வர, சிறிது நேரத்தில் பேருந்து நிலையத்தை அடைத்து வன்னி போகும் பேருந்தில் ஏறி அமர்ந்தாள். சிறிது நேரத்தில் பேருந்து கிளம்ப இவள் மனதும் முன்னர் தான் வாழ்ந்த வாழ்வை எண்ணி ஊர்வலம் போனது.

******************

மரங்கள் அடர்ந்த, வீடுகள் அற்ற அந்தப் பரந்த பிரதேசத்தில் வானத்து நட்சத்திரம் போல் தெரியும் வீடுகளில் ஒன்றே அமலியின் வீடும். பாலை மரங்களும் நாவல் மரங்களும் ஆங்காங்கே இருந்தாலும் சுற்றவரக் கட்டப்பட்டிருந்த மதில்கள் எல்லாம் உடைந்தோ அல்லது யாராலோ உடைத்து கற்கள் எடுக்கப்பட்டு வீட்டின் பாதுகாப்பையும் அழகையும் குறைத்தது.
வீட்டின் முன்னால் நின்ற மல்லிகைப் பந்தலும் வெய்யிலில் நீரின்றி வாடி இலைகள் கருகியபடி பந்தலில் காய்ந்து கிடந்தன. குரோட்டன்கள் ஒன்றிரண்டு தப்பிப் பிளைத்திருந்தனதான் என்றாலும் கவனிப்பாரற்றுக் கண்டபடி வளர்ந்திருந்தன. ஒற்றை மாமரமும் பின் வளவில் இருக்கும் தென்னைகளும் அவள் வீட்டதுதான் என்றாலும் உயிருடன் நடமாடிய ஐந்து பேர் இல்லாத வீடு எப்போதும் அவர்களை நினைவுபடுத்த பகலில் இருக்கும் கொஞ்சநஞ்ச நின்மதியும்  இரவில் தொலைய, என்ன நடக்குமோ எது நடக்குமோ என உயிரைக் கையில் பிடித்தபடி வாழ்வதே நிர்ப்பந்தமாகிவிட்டது.

கணவன் உயிருடன் இருந்தபோது எத்தனை மகிழ்வுடன் இரவில் வானில் தெரியும் நட்சத்திரங்களையும் நிலவையும் கணவன் முதுகில்  சாய்ந்தபடி பார்த்து மகிழ்ந்திருப்பாள். இன்று நினைக்க பெருமூச்சு மட்டுமே எஞ்சுகிறது.
தூரத்தில் வாகன ஓசை கேட்க வழமைபோல் இதயத்துடிப்புப் பன்மடங்காக வேறு வழியின்றி மனதையும் உடலையும் கல்லாக்கியபடி எதுவும் செய்ய முடியாதபடி சோர்வுடன் இருக்கமட்டுமே அவளால் முடிகிறது.

யுத்தம் முடிவுக்கு வந்தபின் மனிக் பாமில் இருந்த போதும் சரி பின்னர் வெளியே வந்தபோதும் கூட அரவணைத்து ஆறுதல் கூற யாருமற்று அனாதையாக நின்றது இப்போதும் கண்ணுக்குள் நிற்கிறது. பெற்றவரும் கணவனும் கூடிப்பிறந்தவரும் குண்டுகள் பட்டுச் சிதிலமாகிப் போக, ஏனோ இவளை மட்டும் சாவு தள்ளியே வைத்த கொடுமை இவளைப்போல் பலருக்கு நேர்ந்ததில், உடல் உறுப்புக்கள் சிதையாது என்னைக் கடவுள் காத்தாரே என்று தான் அப்போது எண்ணத் தோன்றியது.

தொடர்ச்சியாக ஏற்பட்ட மரணங்கள் மனதில் உணர்வுகளைத் துடைத்ததில் சொந்தம் என்று சொல்ல யாரும் அற்றவர்களாய் எஞ்சிப் போனவர்களுள் ஒருத்தியாகி வாழ்வை எதிர் நோக்க வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டது முன்வினைப் பயனோ என எண்ணி மறுகவே முடிந்தது அமலியால்.

பட்டப்படிப்புப் படித்திருந்தாலாவது என் காலில நிற்க முடிந்திருக்கும். வளமான வயல்களே இவர்களின் சொத்தாக இருந்து இவர்களை தலை நிமிர்ந்து வாழவைத்தது. எல்லாம் இராணுவம் சுவீகரித்துக்கொன்டத்தில் இந்த வீடு மட்டும் தான் அதிட்டவசமாக உடையாமல் தப்பி நின்றது.
அந்த அந்துவானக் காட்டில் அங்கொன்றும் இங்கொன்றுமான வீடுகளுடன் வந்து வசிப்பதற்கு அவளுக்கும் யோசனையாகத்தான் இருந்தது. அகதி முகாமில் இருந்தபோது அறிமுகமானவர்கள் கூட அதைவிட்டு வெளியே வந்தபின் எங்கே இவள் தம்முடன் ஓட்டிக்கொள்வாளோ என்னும் அச்சத்தில் தெரியாதவர்போல் நடந்துகொண்டது மனதை வருத்தியது.

உறவுகளை இழந்தவர்கள் ஒருவருக்கொருவர் துணையாக இருப்பார்கள் என்று எண்ணினால் சொந்தங்களை இழந்த கையோடு மனதையும் ஒட்டுமொத்தமாய்த் துடைத்துவிட்டார்களோ என எண்ணும்படி நடந்து கொள்ள எப்படித்தான் இவர்களால் முடிகிறது என்னும் எண்ணத்திநூடே பாவம் அவர்களும்தான் என்ன செய்வார்கள். எல்லாவற்ரையும் இழந்து நிற்பவர்களுக்கு ஒவ்வொரு சதமும் பெறுமதியானதுதான் என மனம் தனக்குத்தானே சமாதானமும் கூறியது.

தொண்டு நிறுவனங்களில் பதிந்து உதவிகளைப் பெற்றுகொண்டாலும் பிச்சை எடுப்பதுபோல் ஒவ்வொருதடவையும் உணர்வதை இவளால் தடுக்கவே முடியவில்லை. ஏதும் வேலை செய்து பிளைத்துக்கொள்வோம் என்றாலும் இவளுக்கு யாரும் இல்லை என்று தெரிந்தவுடன் பல ஆண்களுக்கு இவளை படுக்கையில் பகிர்ந்துகொள்ளும் ஆசைதான் வந்தது.
இரவில் சிம்னி விளக்கின் துணையோடு கதவைத் தட்டும் ஓநாய்களிடமிருந்து தன்னைக் காத்துக் கொள்வதற்காக இரவிரவாக விளக்கை எரியவிட்டாள். மின் விளக்குகள் மின்சாரம் இன்றி எரியாதுவிட்டு பல மாதங்களாகிவிட்டன.

நிவாரணப் பொருட்கள் பெற்றுக்கொள்ளக் கடைக்கு வரும்போதெல்லாம் கடைக்காரக் காத்திகேசின் இளிக்கும் பார்வையும், இவளுக்கு விளக்கெரிக்க அதிக மண்ணெண்ணெய் தேவை என்பதால் வேறு பொருட்களுக்குப் பதிலா மண்ணெண்ணையைக் கூடத் தரச்சொல்லிக் கேட்டதுக்கு, நீ ஓமெண்டு சொல்லு நான் கரண்ட எடுத்துத் தாரன் எண்டவனும் பொருட்களைத் தரும்போது வேண்டுமென்றே கையைத் தடவிக்கொண்டே தருவதும், இன்னொருத்தன் துணிவா இரவைக்கு வரட்டோ என்று கேட்க இவள் கோபத்தில் துப்பிவிட  ஓமடி எனக்குத் துப்புவாய். ஆமிக்காரங்களோடை மட்டும்தான் படுப்பியோ என்று கேவலமாய்க் கேட்டதை நினைக்க இப்பவும் கோபம் வருகிறது.

இந்த ஆண்கள் இத்தனை நாள் தம் முகங்களை எங்கே மறைத்து வைத்திருந்தார்கள்?? எல்லா ஆண்களும் இப்படித்தானா ??? யாருக்காகப் பயந்து இத்தனை நாள் இருந்தார்கள்??? தம் குடும்பத்துக்கு இழப்புக்கள் ஏற்படாததனால் மற்றவர் இழப்பு இவர்களுக்குப் புரியவில்லையா ??? அநாதரவான நிலை எனில் பெண் எதற்கும் உடன்படுவாள் என்று எப்படி எண்ணத் தோன்றியது என்றெல்லாம் தனக்குள் குமைந்ததில் இவள் எதுவுமற்று நிற்கத்தான் முடிந்தது.
இப்பிடியான விஷமங்கள் யாழ்ப்பாணத்தில் இருக்காது எண்டு நம்பி,  யாழ்ப்பாணப் பக்கம் போனால் வேலை வாய்ப்புக்கள் நிறைய என்று யாரோ கூறியதைக் கேட்டு இங்கு வந்தால் இங்கு நாகரீகமாக வலை விரிப்பு.
ஒட்ட முடியாத மனிதர்களுடன் இருப்பதை விட பிறந்து வளர்ந்த இடத்தில் எத்துன்பமும் பட்டுக்கொண்டாவது இருப்பது மேல் என்று எண்ணியபடியே வெளியே பராக்குப்பார்த்தாலும், பெண்ணாகப் பிறந்துவிட்டாலே அவள் ஆண் சார்ந்து இருந்தாலன்றி அவளுக்கு தகுந்த பாதுகாப்பு இருந்ததில்லை. வன்னியில் வாழ்ந்த காலத்தில் எத்தனை சுதந்திரத்தோடு வாழ்ந்தோம். புலிகள் என்னும் மந்திரச் சொல்லுக்குத்தான் எத்தனை வலிமை இருந்தது. இனி வரமுடியாத காலம் என்று எண்ணிப் பெருமூச்சு ஒன்றை விடத்தான் அவளுக்கு முடிந்தது.

*****************

ரோகித வெளியே பாயில் படுத்திருந்தான். மற்றையவர்கள் இன்னும் தண் ணியடித்துக்கொண்டும் காட்ஸ் விளையாடிக் கொண்டும் இருக்க அவனுக்கு அதிலெல்லாம் இப்பொழுது ஆர்வம் குறைந்துவிட்டது. போர் முடிந்தபின் விறுவிறுப்புக் குறைந்துவிட்டது. திரும்பி மொறட்டுவவுக்கு போகவும் விடுராங்களும் இல்லை என்று யோசித்தபடி இருக்க குணசிங்க மூலை வீட்டைப்பற்றிக் கதைத்தது கேட்டது. உடனே இவனுக்கு அந்த அழகிய பெண் நினைவுக்கு வந்தாள். இப்ப தமிழ்ப் பெண்களுடன் அதிகம் வைத்துகொள்ள வேண்டாம் என்று ஓடர்  வந்தபின் இரு மாதங்களாக எல்லோரும் அடங்கி ஒடுங்கித்தான் இருக்கிறார்கள். ஆனாலும் குணசிங்க ஒன்றைத் தொடங்கினால் முடிக்காமல் விடமாட்டான்.

இவனை அறியாமல் ஒரு பதைப்பு எழுந்தது. அந்தப் பெண்ணின் சோகமான முகம் அவனது மனத்தில் பதிந்துவிட்டது. உடனே செருப்பை மாட்டிக்கொண்டு குறுக்குப் பாதையால் ஓடத் தொடங்கினான் ரோகித. சாதாரணமாக யாருக்கும் சொல்லாமல் செல்வது தவறு. அதற்குத் தண்டனையும் உண்டு. ஆனாலும் இந்த நேரத்தில் அதை எல்லாம் யோசிக்கும் மனநிலையில் அவன் இல்லை. இவர்கள் இந்த இடத்துக்குத் தங்கள் இருப்பை மாற்றி இப்பொழுது இரண்டு வாரங்கள்தான். உடைந்தும் உடையாமலும் இடந்த வீடுகள் பலத்தைச் சுற்றி கம்பிவேலி அடைத்து, உள்ளே அகப்பட்ட சிரரையும் வெருட்டிக் கலைத்து அது இனி தமக்குச் சொந்தமான இடம் என்று ராணுவம் பலகையில் எழுதியும் நட்டிருந்ததில் இப்ப இவர்கள் இடமாகி இருந்தது.

அவர்கள் வரமுதல் போய்விடவேண்டும் என்னும் வேகத்தில் அவன் ஓட இரண்டு மூன்று நாய்கள் குரைத்தன. கையில் எதுவும் இல்லை. பார்ப்போம் என்னால் முடிந்ததைச் செய்து அவளைக் காப்பாத்தலாம் என்று எண்ணியபடியே ஓடியவன் எத்தனை பெண்களை இவனும் சேர்ந்து கெடுத்து, எத்தனை விதமாகச் சித்திரவதை செய்தும் தூக்கிப் போட்டிருக்கிறார்கள். ஆனாலும் இவள் மேல் ஏன் தனக்கு இப்படி ஒரு எண்ணம் ஏற்பட்டது என்று எண்ணியபடியே அவளின் வீட்டை அண்மிக்க தூரத்தில் ஜீப்பின் வெளிச்சம் கேட்டது. இவன் அவசரமாக நெருங்கிக் கதவைத் தட்டினான். வீட்டுக்குள் இருந்து எந்தச் சத்தமும் இல்லை. ஜீப் நெருங்கி வருவது தெரிய, வீட்டின் பின் பக்கமாகச் சென்று பார்ப்பதென முடிவெடுத்தான்

*****************

இவள் இறங்கும் இடம் வந்ததும் மிகுந்த மனச்சோர்வுடன் போரில் தோற்ற ஒருவன் நாடு திரும்புவது போன்ற மனநிலையில் பேருந்தை விட்டு இறங்கி வீடு நோக்கி நடந்தாள். இவளின் வீடு இருந்த பகுதியில் வீடுகள் பல இடிந்து போய்த்தான் இருந்தன எனினும் இவளதைப் போல் தப்பியிருந்ததில் அந்தக் குடும்பங்களில் எஞ்சியிருந்தவர்களும் சிலதில் அந்நியர்களும் கூட குடியேறி இருந்தனர். வளவில் நின்ற தென்னை மரங்கள் இவளுக்கு வருவாயை ஏற்படுத்தித் தந்தாலும் கூட அத்தனை பேர் கூடி வாழ்ந்த வீட்டில் தனிமையில் இரவின் பயமுறுத்தல்களில் அரைத்தூக்கத்தோடும் காத்தூக்கத்துடனும் நாட்கள் நகர்கையில் இவள் வாழ்வைப் பிரட்டிப் போடும் சம்பவம் நடந்தது.

 ஒருநாள் இரவு நல்ல தூக்கத்தில் இருந்தவள் கதவைத் தட்டும் சத்தம் கேட்டுத் திடுக்கிட்டு விழித்தாள். இப்படி அடிக்கடி நடப்பதுதான். யாராவது வந்து கதவைத் தட்டுவதும் இவள் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு மூச்சும் விட மறந்து உள்ள தெய்வங்களை எல்லாம் உதவிகேட்டு நேர்த்தி வைப்பதும், தெய்வங்களும் இவளில் இரக்கம் கொண்டோ அல்லது இவள் பொங்கிப் படைப்பவற்றிற்காகவோ இவளுக்கு ஒன்றும் நேராமல் தடுத்தனதான். ஆனாலும் அவர்கள் இன்று தொடர்ந்து தட்டுவதைப் பார்த்தால் எல்லாமே கைவிட்டதை உணர்ந்தவள் என்ன செய்வது எங்கே ஒளிவது, எப்படித் தன்னைக் காப்பாற்றுவது எனத் தெரியாது கை கால்கள் மட்டுமன்றி மொத்த உடலும் பயத்தில் நடுங்க குசினிக்குள் ஓடிக் கதவின் பின்னால் இருந்தவள், அவர்கள் கதவை இடித்த இடியில் பின் பக்கக் கதவைத் திறந்து வெளியில் ஓட எத்தனிக்கையில் எதனுடனோ மோதுண்டு நிலை தடுமாறிக்  கீழே விழுந்தாள்.
விழுந்த வேகத்திலும் ஓடித் தப்புவதற்கு எழுந்தவளை அவன் மறித்தான். நீ தப்ப இல்லாது. நிறையப்பேர். நான் தான் காப்பாத்தலாம் என்றபடி அவளின் கைகளை இழுத்துக்கொண்டு வீட்டுக்குள்ச் சென்றான். இவள் அவனிடமிருந்து கைகளை விடுவிப்பதற்காக இழுத்தபடி இருந்தாள். பேசாமல் இரு என்று உறுக்குவது போல் கூறிவிட்டு கதவுகளைத் திறந்தான்.

இன்றுடன் தன வாழ்வு முடியப்போகிறது என்னும் அசையாத நம்பிக்கை அவளுக்கு ஏற்பட்டிருந்தது. வெளியே நிற்பவர்களை நடுக்கத்தோடு பார்த்தாள். பசியோடிருக்கும் ஓநாய்கள் என்பது புரிய கால்கள் எல்லாம் தோய்ந்து மயக்கம் ஏற்பட சுவருடன் சாய்ந்து தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டாள். அவன் சிங்களத்தில் அவர்களுடன் எதோ கதைப்பது கேட்டது. கொஞ்ச நேரத்தில் அவர்களின் காலடி ஓசையும் அவர்கள் தமக்குத்தானே சிங்களத்தில் கதைத்துக்கொண்டு திரும்பிப் போவதும் புரிய, கதவைப் பூட்டிக்கொண்டு அவன் வந்தான்.
நான் கும்புடுற கடவுள் தான் அவனை அங்கு அனுப்பினது என்று அவர்களுக்கு நன்றி கூற, அவன் இவள் முன்னாள் வந்து நின்றான். இங்கபார் நான் உன்னை அடிக்கடி காணுறனான். இண்டைக்கு நான் ரோட்டால போக உன் வீட்டுக்கு முன்னால் அவர்கள் வான் நிக்கிறதைக் கண்டுவிட்டு பின்பக்கமா வந்தனான். நீ தனிய இருக்கிறது எண்டு எங்கள் ஆளுகளுக்குத் தெரியும். அதாலதான் நீ என்னோட ஆள் என்று சொன்னன். அவங்கள் நம்பிப் போட்டாங்க. இனிமேல் வர மாட்டாங்க என்றபடி அவள் அருகே அவனும் அமர்ந்தான்.

*****************

தூரத்தில் வாகன ஓசை கேட்க வழமைபோல் இதயத்துடிப்புப் பன்மடங்காக வேறு வழியின்றி மனதையும் உடலையும் கல்லாக்கியபடி எதுவும் செய்ய முடியாதபடி சோர்வுடன் இருக்கமட்டுமே அவளால் முடிகிறது. வாகனத்தின் சத்தம் மெல்லமெல்ல இவள் வீட்டு வாசலில் வந்து நின்றதும் யன்னலால் எட்டிப் பார்த்துவிட்டு ரோகிதவுக்காகக் கதவைத் திறந்தாள் அமலி.


 02.12.14

மனம் கொண்ட மயக்கம் - கவிதை


மனம் கொண்ட மயக்கம்
மங்குவதான தோற்றத்தில்
மகிழ்வும் துக்கமும் கலவையாய்
கண்ணாம்மூச்சி விளையாட்டாய்
கணநேரமும் கருத்தை விட்டு அகலாது
கருப்பு வெள்ளையாய் காலம் காட்டியபடி

விருப்பு வெறுப்புகளின் அப்பால்
விமோசனமடைய விளையும் மனம்
குரங்கின் தாவலில் அங்கும் இங்கும்
எந்நேரமும் தாவியபடியே தரையில்
எள்ளளவும் அமைதியற்று என்னை
எதிர்க் கேள்வி கேட்டபடி

அன்பின் திளைத்தலில் அடிமுடி தேடியும் 
அறியமுடியாத நிபந்தனைகளோடு
ஆண் என்னும் இறுமாப்பின் கூடுகட்டல்
ஆற்றமுடியாத ஆழங்களை என்றும்
ஆணிவேரில் பதித்தபடி அல்லல் செய்ய
ஆறுதலற்றதாகவும் ஆற்றுப்படுத்த முடியாத
அவலங்களையும் சுமந்தபடி

எண்ணற்ற கேள்விகளும் அவற்றுக்கு
எழுதமுடியாத விடைகளுமாய்
ஏக்கம் மட்டும் பாரங்கள் சுமக்க
என்றும் நம்பிக்கையற்றதான எதிர்பார்ப்பை
எப்போதும் எதிரியுடன் இருப்பதான
எதிர்மறை எண்ணத்தையே என்னுள்
எங்கணும் விதைத்தபடி

எப்போது தீருமோ எப்படித் தீருமோ
என்னும் எதிர்மறைக்கப்பால் எந்நாளும்
எண்ணத் தாள்கள் ஒவ்வொன்றையும்
எடுப்பதும் புரட்டுவதும் படிப்பதுமாய்
எல்லாவற்றையும் எதனுடனோ ஒப்பிட்டு
எதிர்வாதம் புரிந்தபடி என்னுள்ளே

என்ன செய்து என்ன மனிதர்களின்
ஏற்புரைகளற்ற எண்ணத்தின் வெளியில்
எதுமற்றதாகி எதுவும் புரியா நிலையில்
எந்நாளும் விடைகாண முடியா
ஏக்கங்கள் எத்தனையோ சுமந்து
எதிர்பார்ப்புக்களோடு ஏதிலியாய்
ஏழையாகிப் போனதான எண்ணம் மட்டும்
என்னுடன் மிஞ்சியதாய் என்றும்

Sunday, 30 November 2014

வசந்தங்களாய்த் தொடரும் - கவிதை


வசந்தங்களாய்த் தொடரும்
வாழ்வின் அத்தியாயங்கள்
அப்பப்போ ஊடல் என்னும்
கீறல் விழுவதாய் மாறிப்போகிறது

நித்தமும் காணும் முகங்களுள்
நித்தியமாகிப்போன நிதர்சனம்
நம்பிக்கையின் கயிற்றால்
இறுக வரிந்து கட்டியபடி

எதிர்பார்ப்பின் ஏக்கத்தில் எழும்
முரண்பாடுகளின் மயக்கம்
முட்களாய் நாக்கின் மீதமர்ந்து
வார்த்தைகள் விதைக்கின்றன

வினைகளின் ஆழம் அறியாது
எதிர்ப்படும் எல்லாம் எதிராகி
எங்குமாய் சலசலத்து ஓடி
எல்லை தாண்டி நிறுத்துகின்றன

மனமே நீ மகிழ்வை மட்டும் நினை
மனது தாண்டி மதில் உடைத்து
இருப்பதை இழந்து ஏங்காது
நிறை கண்டு குறை கொன்று
நித்தமுமாய் மகிழ்ந்திடு நீ

நிவேதா உதயன்
13.11.2014

மனதில் நாம் போடும் கோடுகள் - கவிதை


மனதில் நாம் போடும் கோடுகள்
மற்றவர் அறிவதில்லை

எமக்குள் எப்போதும் தோன்றும்
எண்ணத்தின் குவியல்களில்
எதிரும் புதிருமாய் பல
கோடுகளை வரைகிறோம்


நேராகி நீண்டு சிலவும்
நெளிதல்களோடு பலவும்
நெட்டிப் பாய்ந்தபடி சிலதுமாக
எப்படியெல்லாமோ வரைகின்றோம்

காரண காரியங்கள்
அறிந்திடாத மனத்தடத்தில்
தண்டவாளமற்றுப் பல
வண்டிகள் ஊர்ந்தபடி எப்பொழுதும்

மீட்சியற்ற வலைப்பின்னல்களாய்
எப்போதும் எம்மனதின்
நம்பிக்கை தகர்த்து
வலை பின்னும் சிலந்தியாய் வதை

புரிந்தும் புரிய மறுக்கும்
நிதர்சனம் கொல்லும் உண்மையின்
நீட்சியில்லா வாழ்தலில்
நித்தமும் கொடுக்குகளாய்
கொட்டியவண்ணம் மனம்
குருடாய் வெளிச்சம் தேடுகின்றது

16.11.2014
நிவேதா உதயன்

உயிரின் வலி அறிவாயோ - கவிதை


உயிரின் வலி அறிவாயோ மானிடா
ஊனுருக்கி உடல் கருக்கி
உள்ளனவெல்லாம் மறக்கும்
உயிரின் வலி அறிவாயோ

உள்ளக் கருவறுத்து
ஒவ்வொரு நொடிப்பொழுதும்
உயிர் வதைத்து உணர்வு கொல்லும்
உயிரின் வலி அறிவாயோ

எதுவுமற்று ஏதுமற்று
எங்கெங்கோ மனம் அலைத்து
ஏக்கங்கள் கொள்ளவைக்கும்
உயிரின் வலி அறியாயோ

எதிரியாய் எமை வதைத்து
எட்டி நின்றே வகுத்து
எல்லையில்லா துன்பம் தரும்
உயிரின் வலி அறியாயோ

எண்ணத்தை எதிரிகளாக்கி
எல்லையற்று ஓடவைத்து
என்புகள் மட்டுமே ஆனதாய் என்
உயிரின் வலி அறியாயோ

சரணடைந்து சரணடைந்து
சர்வமும் இழக்க வைத்து
சக்தியெல்லாம் துறந்து நிற்கும்
உயிரின் வலி அறியாயோ மானிடா
உயிரின் வலி அறிவாயோ
18.11.2014
நிவேதா உதயன்

ஒன்றுமில்லாத வெற்றிடமாய் - கவிதை


ஒன்றுமில்லாத வெற்றிடமாய்
ஓலமிடுகிறது மனம்
ஓய்வே இன்றி
ஒருமுகப்படுத்தமுடியாது
ஓதல்கள் செவிகளை நிறைக்க

வார்த்தைகளின் வடிவமைப்பில்லா
கோர்வைகளில் நிதம்
கொலைக்கருவிகளின்
கூர்தீட்டல்கள் எனை
குற்றாமல் குற்றி வதைத்தபடி

இலக்குகள் அற்று எல்லாம்
இங்கொன்றும் அங்கொன்றுமாய்
எதிர் திசைகளை ஈர்த்தபடி
எதிரி கைகளில் அகப்பட்ட
எதிர்ப்பே இல்லாக் கைதிபோல்

மனம் எட்டும் தீர்மானங்கள்
மற்றவர் மனதின் சூழ்வினைகளாய்
மார்க்கமேதுமற்று மடிந்துபோக
நிர்க்கதியாகி நிற்கும் மரம் போல்
இலைகள் உதிர்த்து வேர்கருக

வேதனையின் வரம்பு தாண்டி
வெம்பித் துடிக்கும் மனதை
வரவேற்பார் யாருமின்றி
வனாந்தரத்தின் வெளிகளில்
வெடிப்புக்கள் ஊடே
வேகும் கால் பதிய நடக்கின்றேன்20.11.2014
நிவேதா உதயன்

மண்ணிலிருந்து மரணம் வரை - கவிதை


மண்ணிலிருந்து மரணம் வரை

எங்களுக்காகத் தங்களை உதிர்த்து
எம்மினம் காத்திடத் தம்மைத் தந்து
உயிர் என்னும் கொடை தந்து
தம் உணர்வுகள் துறந்து நின்றார்

தாய் மண்ணின் தடையகற்ற
மன ஓசை அடக்கி மகிழ்வாய்
ஆசைகள் தாண்டி வந்தார்

பருவ வயதில் பாசம் அடக்கி
பசியடக்கிப் பலதும் அடக்கி
எதிரி அடக்கும் ஆசை கொண்டார்

எங்கள் நிலம் எமதேயாக
தங்கள் நிலம் தான் துறந்து
காடுமேடெல்லாம் கால் பதித்தார்

எத்தனை உயிர்கள் எம்மினமானதில்
அத்தனை பெரும் அவலம் தாங்கி
எத்தனை ஈனமாய் எருக்களாயினர்

எத்தனை தடைகள் எங்கு தாண்டியும்
அத்தனை பேரையும் ஆண்டுகள் தோறும்
ஓர்மத்துடன் நாம் எண்ணிடுவோம்

தோல்வி கண்டு துவண்டோமாயினும்
தோள்கள் துடிக்க திருக்களமாடிய
துணிந்தவர் உம் புகழ் பாட மறந்திடோம்

மண்ணை இழந்து மறுகினோமாயினும்
உதிரமிழந்து ஊனமாகி உருக்குலைந்து
மானம் காக்க மடிந்ததவர் மறந்திடோம்

வன்மம் கொண்டு விடுதலை மூச்சுடன்
வேங்கையானவர் வீரம் மறந்திடோம்
கொடும் பகை வென்று கொடியது ஏற்றிய
கோட்டையின் வீரம் மறந்திடோம்
தோல்வி கண்டும் துவள்தல் இன்றி
துணிவுடன் இறந்த உம்மை மறந்திடோம்
மண்ணிலிருந்து மரணம் வரை மாவீரரே
21.11.2014
நிவேதா உதயன்

முந்தை வினை - கவிதை


முந்தை வினை முழுதும்
மூர்க்கத்துடன் அறுக்க முனைகிறேன்
ஆனாலும் முடிச்சவிழ்க்க முடியா
முடிவுகள் அற்றதாய் வாழ்வு
நீண்டுகொண்டே செல்கின்றது

பிறவிப் பயன் அறிந்திடா
பித்தம் தலைக்கேறிய மானிடராய்
பேசுபொருளாய் ஆனதில் வாழ்வு
படிந்தும் படியாமல் எப்பொழுதும்
பயத்துடனே நகர்கின்றது

பூனையில் காலின் எலியாய்
அகப்பட்டுக்கொண்டிருக்கும்
அர்த்தமற்ற வாழ்வின் நகர்வில்
அகலமாகிக் கொண்டே செல்கின்றது
ஆழ்மனதில் அசைக்கமுடியாது
வேர்விட்ட நம்பிக்கைகள்

இறுகப் பற்றியிருக்கும் இளையின்
இறுமாப்பும் இன்னும் சிறிது நாளில்
இல்லாமல் போய்விடுவதற்கான
எல்லாக் காரணங்களும் எதிரிகளாகி
என் மனத்துடன் ஏளனமாய்ச் சிரித்தபடி
எதிர் யுத்தம் செய்கின்றன எனக்காகவே

ஆர்ப்பரிக்கும் மனதின் அவலம்
ஆழ்கடலில் மோசமாய்ச் சுழலும்
அமுக்கக் காற்றாய் அச்சமூட்டி
அசைக்கமுடியாதென எண்ணிய
ஆசைகளின் வேர்களை எல்லாம்
ஆட்டம் காண வைத்தபடியே
அடித்துச் செல்வதற்குத் தயாராய்
அங்கும் இங்கும் அலைந்தபடி
இறுதியான கணங்களை எண்ணிக்
கலக்கத்துடன் காத்திருக்கின்றன
30.11.2014
நிவேதா உதயன்

Tuesday, 4 November 2014

உணர்வுகள் கொன்றுவிடு - கதை


முன்பெல்லாம் வானத்தில் நட்சத்திரங்கள் தெரியாவிட்டாலும் கூட நீலமற்ற வெண்சாம்பற் புகைகளாய்த் தெரியும் வானத்தைப் பார்த்தபடி இருக்க அருணா எப்போதும் சலித்ததில்லை. எமது ஊர் போல் வவ்வால்களும் பறப்பதில்லைத்தான். ஒரு குருவி கூடவா பறக்கக் கூடாது என்னும் ஆதங்கம் இன்று அவளுக்கு எழத்தான் செய்தது. மனதில் எழுந்துள்ள சோர்வின் வெளிப்பாடுதானோ இது என்று அவள் மனம் எண்ணியது. அங்குகூட இப்போதெல்லாம் வவ்வால்கள் பறப்பதில்லை என்று அங்கு சென்றபோது பக்கத்து வீட்டு ஜீவா கூறியது நினைவில் வந்தது. எல்லாமே கொஞ்சக் காலத்துக்குத் தானோ? மனிதர்கள் போல் பறவைகளும் மாற்றிடம் தேடிக்கொண்டு செல்லவாரம்பித்து விட்டன என எண்ணிக்கொண்டாள்.
நிர்மலன் இப்பொழுதெல்லாம் நன்றாகவே மாறிவிட்டான். வேலை முடிந்து ஆவலாக வீடு வருபவன் இப்போதெல்லாம் பிந்தியே வருகிறான்.  கேட்டால் வேலை அதிகம் என்கிறான். இரண்டு வயதாகும் ஆரணியுடன் கூடக் கொஞ்சிப் பேசுவதில்லை. எதோ கடனுக்கு அதன் தலையைக் கைகளால் தடவி விட்டபடி நிற்பான். பின் தன் அலுவல் பார்க்கப் போய்விடுவான். மகளும் தூக்கக் கலக்கத்துடன் அப்பா அப்பா என்று சொல்லிவிட்டுத் தூங்கிவிடும். அவள் அவனுக்கு உணவை எடுத்து வைக்க, அவளுடன் எதுவும் பேசாது ஹோட்டலில் உண்பதுபோல் உண்டுவிட்டு நல்லதா இல்லையா என்று கூடக் கூறாது எழுந்துவிடுவான்.
முன்பு சிறிது நாட்கள் அவன் வேலையால் வந்தவுடன் அவனுக்கு உணவு பரிமாறியபடியே அன்று நடந்த விடயங்கள் எல்லாம் இவள் சொல்ல அவனும் ஆர்வமாகக் கேட்டபடி உண்பான். போகப்போக அவள் ஏதும் சொன்னாலும் அதை அக்கறையுடன் கேட்காது "தொணதொணக்காதே. நான் களைச்சுப்போய் வந்திருக்கிறன்" என்று எரிந்து விழுந்தபின் இவள் அவனுக்கு எதுவும் சொல்வதை நிறுத்திவிட்டாள். இருவரும் படுக்கையைப் பகிர்ந்து கொண்டும் நிறைய நாட்களாகி விட்டன. இத்தனைக்கும் இருவரும் காதலித்துத்தான் திருமணம் செய்து கொண்டனர்.

************************************************************************************************************************************************************************
இவளின் அண்ணனுடன் தான் இவள் டொராண்டோவில் ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்துவந்தாள். அண்ணனும் இவளுமே குடும்பத்தில். அதனால் அண்ணன் பாசத்துடன் தங்கையை கனடாவுக்கு எடுத்துத் தன்னுடனேயே வைத்திருந்தான். இவள் கணணித்துறையில் நன்றாகப் படித்துச் சித்தியெய்தி வங்கிக் கணக்காளராக வேலைக்கும் சேர்ந்து ஒரு வருடத்தின் பின்னரே நிர்மலனை முதல் முறை வங்கியில் சந்திக்க வேண்டி வந்தது. வேறொரு வங்கியின் வேலையிலிருந்து இவளது வங்கிக்கு மேலாளராக மாற்றலாகி வந்தவனை எல்லோரும் போலத்தான் இவளும் எதிர்கொண்டது. அனாலும் முதல் சந்திப்பிலேயே இவளை அவன் பார்த்த பார்வையில் ஒரு வசீகரம் அவனிடம் இருப்பதை அவள் அவதானித்ததுதான். இவளைக் காணும் நேரங்களில் எல்லாம் அவனது கண்ணில் தோன்றும் பிரகாசத்தையும் அவதானித்தபடி இருந்தவளை அவன்தான் முதலில் கேட்டான் என்னை உனக்குப் பிடிச்சிருக்கா என்று. 
இப்படி அவன் நேரே கேட்டது அவளுக்கு மகிழ்வாக இருந்ததுதான் என்றாலும் எதற்குப் பிடிக்கவேண்டும் என்றாள் இவள் தன்னை வெளிக்காட்டாது. பிடிக்காவிட்டால் எப்படித் திருமணம் செய்வது என்று அவன் கேட்ட உடனே இவளுக்கு பதைப்புடன் மகிழ்ச்சியும் எட்டிப் பார்த்தது. முகம் உடனே செம்மை படர்ந்து தன் பூரிப்பைக் காட்டியபோதும் இவள் உடனே தன் சம்மதத்தைக் கூறாது அண்ணாவைக் கேட்கவேண்டும் என்றாள். மச்சான் மாட்டன் என்றால் என்னை கலியாணம் கட்ட மாட்டீரோ என்று அவன் கேட்டது மகிழ்வாக இருக்க இவள் சிரித்தபடி அண்ணாவை கேளுங்கள் என்றுகூறிவிட்டு நகர்ந்தாள். மச்சானின் போன் நம்பர் தராமல் எப்பிடிக் கேக்கிறது என்று அவன் சிரிக்க இவள் ஒரு தாளில் அதை எழுதி தமையனின் பெயரையும் தாசன் என்று எழுதிக் கொடுத்தாள்.
அடுத்த நாளே அவன் தாசனுடன் போனில் என்ன கதைத்தானோ தாசன் மாலை வீட்டுக்கு வரச் சொல்லிவிட்டான். இவளுக்கு மனம் நிறைந்து யாருக்கும் அதைப் பகிரவும் முடியாது கால்கள் நிலத்தில் நிற்கமுடியாது தாவின. உனக்கு நிர்மலனைப் பிடிச்சிருக்கா அருணா என்று தமையன் கேட்க ஓமண்ணா என்று வார்த்தைகள் தொண்டையில் சிக்கி வெளிவந்தன.
இவளுக்கு நண்பிகள் கிடையாது. படிக்கும் காலத்திலேயே பெரிதாக யாருடனும் பேசாது பொம்மை போல தன் படிப்புடன் இருப்பாள். கனடா வந்த பின்னும் மற்றவருடன் பெரிதாகத் தமையனும் பழகுவதில்லை. அதுவே அவளுக்கும் பழகிவிட்டது. மாலை நிர்மலன் இவளுக்கு ஒரு கொத்துப் பூக்களுடன் வந்து இவள் கையில் கொடுத்துவிட்டு என்னையே நினைத்தபடி இருக்கிறாயா என்று கேட்டவுடன், என் முகம் மகிழ்வைக் காட்டிக் கொடுக்கிறதா எனத் தன்னையே கேட்டபடி வாங்கோ என்று அவனை உள்ளே இருத்திவிட்டு அண்ணனின் அறைக்குள் எட்டிப்பார்த்து அவர் வந்துவிட்டார் அண்ணா என்றுவிட்டு குசினிக்குள் சென்று ஒரு வாசில் நீர் நிரப்பி அவன் கொண்டுவந்த பூக்களை அதில் அழகாக வைத்து வரவேற்பறையில் அவன் முன் இருந்த மேசையில் வைத்தபடி தாங்ஸ் என்று கூறிவிட்டு உள்ளே செல்ல இருந்தவளை, இரு அருணா என்று தமையன் கூற அவனுக்கெதிரில் கதிரையில் அமர்ந்தாள்.

முதல் நாளே தாசனும் அவனும் எல்லாம் கதைத்திருப்பார்கள் போல. முன்பே எல்லாம் தெரிந்தவர்கள் போல் கதைத்துச் சிரித்ததில் தன் திருமணம் நிட்சயமாகிவிட்டது புரிந்தது. ஒரே நாளில் எப்படி அண்ணன் ஒருவனை நம்பினான் என்று இவளுக்கு ஆச்சரியம் ஏற்பட அண்ணனை நிமிர்ந்து பார்த்த பார்வையில் அண்ணனும் இவள் மனம் புரிந்து நிர்மலனை என் நண்பன் அகிலன் குடும்பத்துக்கு நல்லாத் தெரியுமாம். நேற்றே எல்லாம் விசாரிச்சுப்போட்டுத்தான் இண்டைக்கு இவரை வரச்சொன்னனான் என்றுவிட்டு இருவரையும் பார்த்துச் சிரித்தான். அதன்பின் ஒரு மாதத்திலேயே திருமணம். நிர்மலனுக்கு தாய்தந்தை இல்லை. தமக்கை மட்டும் இலங்கையில். இங்கும் பெரிதாக யாரும் இல்லாததால் மிகச் சிக்கனமாகவே திருமணம் முடிந்தும் விட்டது. அவனின் நண்பர்கள் கொஞ்சமும் தாசனின் நண்பர்களும் இரண்டு மூன்று உறவினர்களும் மட்டுமே திருமணத்துக்கு. கோவிலிலேயே எல்லா ஏற்பாடுகளும். அதனால் இவர்களுக்கும் எந்தப் பிரச்சனையும் இல்லாமல் திருமணம் முடிந்தது.

இவளின் திருமணம் நடந்து ஒரு வாரத்தின் பின்னரே தான் அமெரிக்காவில் இருக்கும் ஒரு பெண்ணை விரும்புவதாகவும் தானும் அங்கேயே போய்விடப்போவதாகவும் தாசன் கூற, ஓ இத்தனை நாள் ஒழித்துவிட்டீர்களே அண்ணா என்று அண்ணனும் வாழ்க்கையில் இணையப்போகிறான் என்னும் மகிழ்வில் பூரிப்புடன் அருணா கூறினாள். அதன்பின் நிர்மலனுடனான அவளது வாழ்வு சொர்க்கமாகவே இருந்தது. இவளைத் தாங்கினான் என்றுதான் சொல்லவேண்டும். வயிற்றில் ஆரணி உருவானவுடனேயே வேலையை விடச் சொல்லிவிட்டான் அன்புக் கணவன். அவளுக்கும் அலைந்துகொண்டு வீட்டுக்கும் வேலைக்குமாகத் திரிய அலுப்பாகத்தான் இருந்தது.

குழந்தை பிறந்தது ஒருமாதம் லீவு எடுத்துவிட்டு இவளை ஒன்றும் செய்யவிடாமல் .... இப்ப நினைக்க கண்களில் நீர் எட்டிப் பார்த்தது. அண்ணன் திருமணமாகி அமெரிக்காவில் வசிக்க ஆரம்பித்த பின்னர் நிர்மலன் இரண்டு வார விடுமுறையில் அவளையும் அழைத்துக்கொண்டு அங்கு சென்றுவந்தான். அண்ணனின் வீட்டின் பிரமாண்டத்தைப் பார்த்து இவளுக்கு வாய் அடைத்தது. அண்ணா கட்டடக் கலைஞன் என்பதனால் திட்டமிட்டு அழகாக வீட்டைக் கட்டியிருந்தான். அண்ணி சுபத்திரா கூட நன்றாகத்தான் பழகுகிறாள். இவளுக்கு அண்ணனை எண்ணப் பெருமையாக இருந்தது. அண்ணா நன்றாக இருக்கிறது வீடு என்றாள் கள்ளங்கபடம் இன்றி. எல்லாம் உன் அண்ணியின் விருப்பப்படிதான். அவளே எல்லாம் தெரிவு செய்தாள். என் காதல் பரிசு இது அவளுக்கு என்று தாசன் சொல்ல பெருமிதமாய்ச் சிரித்துக்கொண்டு அண்ணி நின்றாள்.

அண்ணனின் நினைவு வந்து அவளுக்கு இன்னும் கண்ணீரைப் பெருக்கியது. அண்ணனிடம் மனம்விட்டுச் சொல்லிப் பார்ப்போமோ என்று எண்ணியவள், வேண்டாம் இன்னும் கொஞ்ச நாட்கள் பார்ப்போம் என்று மனதை அடக்கிக்கொண்டு படுக்கை அறைக்குச் செல்ல எழுந்தாள். அடுத்த அறையில் கணவன் கணனியில் மும்மரமாக இருக்க, துவண்ட மனதுடன் சென்று தூங்கவாரம்பித்தாள்.


**************************************************************************************************************************************************************************

கணவன் சொன்னவற்றைக் கேட்டு அதிர்ச்சியில் நின்றாள் அருணா. அவனுக்கு இங்கு வேலை செய்வது பிடிக்கவில்லையாம். அதனால் வேறொரு வேலை தேடிக்கொண்டு அமெரிக்காவுக்குச் செல்கிறானாம் என்றவுடன் ஏன் இங்கு உங்களுக்கு என்ன பிரச்சனை என்று இவள் ஆரம்பிக்க முன்னரே எனக்கு இங்கு பிடிக்கவில்லை. கொஞ்சநாள் அங்க இருந்து பார்க்கப் போறன் என்று கத்துமாப்போல் சொல்பவனை வாயடைத்துப் பார்க்க மட்டுமே இவளால் முடிந்தது. நீயும் பிள்ளையும் இங்க இருங்கோ. நான் போய் பிறகு உன்னைக் கூப்பிடுறன் என்பவனை எதுவும் சொல்லாது பார்த்துக்கொண்டிருந்துவிட்டு அவன் வேலைக்குச் சென்றதும் தமையனுக்குத் தொலைபேசி எடுத்து தன் உள்ளக்கிடக்கையை எல்லாம் கொட்டி அழுது தீர்த்தாள். தமையனும் யோசனையுடன் நான் நிர்மலனுடன் கதைக்கிறன் என்றுவிட்டு போனை வைக்க, தனியாகக் காட்டில் அகப்பட்டவளாய் கலங்கும் மனதுடன் ஏதுமற்று இருக்க மட்டுமே அவளால் முடிந்தது.

அடுத்தநாள் தாசன் போன் செய்து, மச்சான் எதோ குழப்பத்தில இருக்கிறார். கொஞ்சநாள் விட்டுப்பிடிப்பம். இங்க வந்து என் வீட்டிலேயே நீங்கள் தங்கலாம் என்று சொல்ல அவர் சம்மதித்துவிட்டார். ஆனபடியால் பெரிதாக ஏதும் இருக்காது நின்மதியாய் இரு என்று அண்ணனின் ஆறுதல் வார்த்தைகள் மனதுக்குத் தெம்பூட்டின.

அவன் அமெரிக்கா சென்ற பின்னர் கூட விழுந்துகட்டி இவளுடன் போனில் பேசவோ அன்றி சுகம் விசாரிக்கவோகூட இல்லை. இவள்தான் அண்ணனுக்குப் போன் செய்து தன் ஆதங்கத்தைக் கொட்டுவாள். தாசனும் தான் என்ன செய்வது. கொஞ்ச நாளைக்கு நீ பேசாமல் இரு. என்ன செய்கிறான் பார்ப்போம் என்று கூறியபின் இவள் அண்ணனையும் தொந்தரவு செய்வதில்லை.

முன்பு அண்ணனும் பின்னர் கணவனும் இவளின் தேவைகளை எல்லாம் பூர்த்திசெய்வதால் இவள் பெரிதாக எதிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டதில்லை. இப்போ எல்லா வேலைகளையும் இவளே செய்ய வேண்டியதாகிவிட்டதில் இவளது நேரங்கள் அதில் கரைந்தனதான் எனினும் இரவில் மகள் தூங்கியபின் இவள் தூங்காது பலதையும் எண்ணி குமைந்ததில் உடல் இளைத்து பாப்பதற்கு நோயாளி போலானாள். தங்கையை ஆறுதல்ப் படுத்த வந்த அண்ணன் இவள் நிலை கண்டு கலங்கித்தான் போனான். அருமைத் தங்கை. யாருக்கும் கேடு எண்ணாதவள். ஏன் நிர்மலன் இவளிடம் பிடிப்பற்றுப் போனான் எனக் குழம்பியதில் தான் திரும்பிச் சென்றவுடன் அவனிடம் தெளிவாகவே பேசி இதுக்கு ஒரு முடிவு கட்டவேண்டும் என்று எண்ணினான்.


*********************************************************************************************************************************************************************

உணர்வு மழுங்கி உயிர்த்துடிப்பு அடங்கி யாருமற்ற உலகில் தன்னந்தனியனாக நிற்கும் உணர்வு ஏற்பட்டது தாசனுக்கு. இன்னுமே கூட எதையும் கிரகித்துக்கொள்ள அவனால் முடியவில்லை. ஐயோ அருணா இதை எப்படித் தாங்கிக் கொள்ளப் போகிறாள் ??? எப்பிடி இதை நான் அவளிடம் சொல்வேன் என்று எண்ணி அழுதபடி எத்தனை நேரம் இருந்தானோ தெரியவில்லை. ஆண்கள் அழுவதில்லை என்றும் அழக்கூடாது என்றும் சொல்வார்கள். ஏன் ஆண் மனிதன் இல்லையா??அல்லது மனமே இல்லாதவனா ??? என மனதில் எழுந்த நினைவில் அழுகையில் சிரிப்பும் வந்தது. தொடர்ந்து அவனது தொலைபேசி அடித்ததில் மனம் கலைந்து சிரமத்துடன் எழுந்து சென்று போனை எடுத்தான். வேலை இடத்திலிருந்து இவனைக் காணவில்லை என்ற விசாரிப்பு. எனக்கு எழும்பவே  முடியாது வருத்தம். ஒருவாரம் விடுப்பு வேண்டும் என்றுவிட்டுத் தொலைபேசியை வைத்தபின்னும் என்ன செய்வது என்றே தெரியாத நிலை.

முந்தநாள் கனடாவில் இருந்து வந்ததும் தங்கை கணவனை இருத்திவைத்து அவன் அப்படி இருப்பதற்கான காரணத்தைக் கேட்டான். என்னால் உடனே பதில் சொல்ல முடியாது. நாளை கூறுகிறேன் என்று மேற்கொண்டு இவனுடன் பேசாது எழுந்து செல்லும் நிர்மலனை எதுவும் கூறாது பார்த்துக்கொண்டு இருக்கவே இவனால் முடிந்தது. அடுத்தநாள் எப்போது விடியும் என்று சிறுபிள்ளை போல் காத்திருக்க மட்டுமே அவனால் முடிந்தது. அடுத்த நாள் காலை விடியாமலே இருந்திருக்கக் கூடாதா என்று இப்ப எண்ணம் எழ, பெருமூச்சு மட்டுமே பதிலானது.

நேற்றுக் காலை அவன் வேலைக்கு வெள்ளனவே செல்லவேண்டிய தேவை இருந்ததில் நிர்மலன் எழும்ப முதலே சென்றுவிட்டான். மாலை இருந்த வெளி வேலைகளை எல்லாம் ஒரத்தில் வைத்துவிட்டு தங்கையின் கணவன் என்ன சொல்லப் போகிறானோ என்ற பதைப்பில் வெள்ளனவே வீட்டுக்கு வந்துவிட்டான். சுபத்திராவும் அன்று வெள்ளனவே வந்துவி விட்டாள் என்பதை அவள் படுக்கை அறையில் படுத்திருந்ததிலே தெரிந்தது. என்னப்பா ஏதும் வருத்தமே என அக்கறையாக அருகில் சென்று விசாரித்தவனை, "சரியான தலையிடி. அதுதான் குளிசையைப் போட்டுக்கொண்டு படுத்திருக்கிறன்" என்று கண்ணைக்கூடத் திறக்காது அவள் சொன்ன விதம் அவளின் தலை வலியின் அளவை அவனுக்கு உணர்த்த, அவள் பாவம் படுக்கட்டும் என்று எண்ணியபடி உடைகளை மாற்றிக்கொண்டு வரவேற்பறைக்கு வந்து நிர்மலனுக்காகக் காத்திருக்கவாரம்பித்தான்.

இவனுக்குப் பசித்ததுதான் எனினும் நிர்மலனும் வரட்டும் சேர்ந்து சாப்பிட்டபடி கதைத்தால் இறுக்கம் குறையலாம் என்ற நப்பாசை எழவே மேசையில் கிடந்த ஒரு மகசினைப் புரட்டியபடி காத்திருந்தான். நிர்மலானோ வழமையாக வரும் நேரத்துக்கு வரவே இல்லை. தொலைபேசி எடுத்துப் பார்ப்போமோ என்று எண்ணியவன், அவன் என்ன சின்னப் பையனா ஏன் இன்னும் வரவில்லை என்று கேட்பதற்கு என எண்ணி அந்த நினைப்பைத் தள்ளி வைத்துவிட்டு தொலைக்காட்சியை இயக்கிவிட்டு அதில் தன் மனதைச் செலுத்தத் தொடங்கினான்.

எத்தனை நேரம் தூங்கினானோ தெரியவில்லை நிர்மலன் இவன் தோளைத் தொட்டு உலுப்ப திடுக்கிட்டு விழித்தான். வாங்கோ சாப்பிடுவம் என்று அவன் அழைக்க இவனுக்கும் அப்போது தான் பசி தெரிய ம் என்றபடி அவனைத் தொடர்ந்து உணவு அறைக்குள் வந்து இருக்கையில் அமர்ந்தான்.

சுபத்திராவும் எழுந்து உணவுகளைச் சூடாக்கிக்கொண்டிருந்தாள். தலையிடி குறைஞ்சிட்டுதே என இவன் அக்கறையாகக் கேட்க ம் என்பதே அவளின் பதிலாக வந்தது. மூவருமே பசியுடன் இருந்தவர்கள் போல் உண்பதிலேயே கவனமாக இருந்தனர். யாரும் யாருடனும் பேசவில்லை. சுபத்திரா வழமையாக ஏதாவது பேசியபடி தான் சாப்பிடுவாள். அவளின் கதைகளுக்கு நிர்மலன் சிரித்துப் புரையேறியதும் உண்டு. இன்று தலைவலியின் தாக்கம் அவளுக்கு என எண்ணியபடி அவளுடன் இவனும் எதுவும் பேசாது சாப்பிட்டு முடித்தான்.

மூவரும் வரவேற்பறையில் வந்து அமர்ந்ததும் நிர்மலன் தான் பேசவாரம்பித்தான். தாஸ் உங்களுக்கு விளங்கும் எண்டு நினைக்கிறன் நான் சொல்லுறது. எனக்கு அருணாவோட வாழ இனிச் சரி வராது என்று நிர்மலன் முடிக்கும் முன்னரே ஏன் சரிவராது என்று இவன் சிறிது கோபத்துடனேயே கேட்டான். எனக்கு சரிவராது. என்றான் நிர்மலன் எதுவுமே நடக்காததுபோல். நீர்தானே வலிய வந்து அருணாவைச் செய்யப் போறன் எண்டு கேட்டுக் கலியாணம் செய்தனீர். ஒரு குழந்தையும் பிறந்தபிறகு.... யோசிச்சுத்தான் கதைக்கிறீரோ நிர்மலன் என்றான் இவன் குரலை உயர்த்தி.

நானும் சுபத்திராவும் வடிவா கதைச்சுத்தான் இந்த முடிவுக்கு வந்திருக்கிறம் என்று நிர்மலன் சொல்ல சுபத்திராவோட என்ன கதை நான் தானே அவளிண்ட அண்ணன். என்னோட கதையும் என்று மரியாதையிலிருந்து ஒருமைக்கு மாறினான் தாசன். I am so sory. நானும் நிர்மலனும் ஒரு வருடமா முகப்புத்தகத்தில பழக்கம். நானும் அவரும் சேர்ந்து வாழப்போறம். எங்களை மன்னிச்சிடுங்கோ என்று கூறும் சுபத்திராவை அதிர்ச்சியுடன் வானே இடிந்து தன்மேல் விழுந்ததான எண்ணத்துடன் அவமானம் மேலிட வார்த்தைகளின்றிப் பார்த்துக்கொண்டிருந்தான் தாசன். இவ்வளவு கேவலமானவளா நீ. உன்னாலத்தான் என் குடும்பத்தில் இருவரின் வாழ்வில் இடியா என அவன் மனம் அலறியபடி இருக்க எதுவும் பேசாது எழுந்து தோட்டத்துக்கு நடந்தான் தாசன்.

Posted 30 July 2014 - 10:03 AM

நிவேதா உதயன்

Monday, 3 November 2014

நிலாவே நீ ஏன் - கவிதை


நிலாவே நீ ஏன்
நிதமும் எறிக்கின்றாய்
நீல வானின் நிமிர்வு கண்டு
நெகிழ்ந்தோ நீ வருகின்றாய்

மேகப் பொதி விலக்கி
மென் முகம் காட்டி
மதிகெட்ட மாந்தர்
மனதை மயக்குதற்கோ
மங்கையே நீ வருகின்றாய்

கோடி இன்பம் கொடுத்தே
மனம் கொள்ளை கொண்டு
மேன்மை கொள் மாந்தரை
மயக்கம் கொள்ளவைக்க
மாலையில் வருகின்றாய்

இரவின் எளிமையிலும்
இதமான தென்றலுடன்
அத்தனை பேருக்குமாய்
எதிர்பார்த்தல் எதுவுமின்றி
இத்தனை ஆண்டுகளாய்
எப்படி நீ எறிக்கின்றாய்???


நிவேதா உதயன் 
03.11.2014

Friday, 31 October 2014

மனதின் ஓசைகள் - கவிதை

மனதின் ஓசைகள்
மயங்கிடச் செய்கிறன
மனவெளிதனை

நிலாவின் காய்தலில்
நேற்றுக் கண்ட கனா
காலையில் காணாமல்
போவதுபோல்.......
நெஞ்சின் நினைவுகளும்
அப்பப்போ வந்து
நெகிழ்த்திப் போகின்றன

சொல்ல மறந்ததை
சொல்லாமல் விட்டதை
காதினிக்க வந்து
கதையாகிப் போனதை
கூடிக் களித்ததை
கொஞ்சி மகிழ்ந்ததை
நட்பாகி நிறைந்ததை
நடுவில் சென்றதென
நாற்புறமும் மனம்
தென்றலாய் புயலாய்
நெஞ்சு நிறைத்துப்
போகின்றன


நிவேதா உதயன்
31.10.2014


Thursday, 30 October 2014

மனிதர்கள் - கவிதை


மனிதர்கள் ஏன் இப்படி இருக்கின்றனர் ??????
நல்லவர் கெட்டவர் அறியாது
நயவஞ்சகப் பேச்சுக்கள் புரியாது
பல்லிளித்துப் பழகும் எவரையும்
பால்போல என நினைத்து .....

மற்றவர் மனதறியாது
மார்க்கம் எதுவும் தெரியாது
மதிநுட்பமும் புரியாது
மடையர்களாய் இன்னும் ....
தரம் பிரிக்கத் தெரியாது
தன் தரமும் அறியாது
தவிலின் பக்கங்களாய்
தம்பட்டம் அடித்தபடி......
மனதின் வலி புரியாது
மயக்கும் வார்த்தை கண்டு
மறையும் அறிவு கொண்டு
மறைந்து வாழ்ந்தபடி .......
காற்றுக் கொள்ளுமட்டும்
கதவு திறந்தாலன்றி
சுவாசம் நிலைத்திடாது
சுத்தமாய் ஆகிடாது ....
இறைவன் அறிவு தந்தான்
இயன்று பார்க்கச் சொன்னான்
சிந்தனைச் சிறகடித்து
சோர்வுகள் அறுத்து நீ
மாயைகள் மட்டற
மனதைப் படிக்கவேண்டும்
விந்தை மனிதா நீ
விழிப்புற வேண்டும் இன்னும்
சிந்தை முழுதும்
செழிப்புற வேண்டும்
பகுத்து அறியும் பக்குவம்
படித்து அறிதல் வேண்டும்

07.06.2014
Nivetha

நினைவுகள் - கவிதைநீண்ட நெடு மரங்களிநூடு
நிதானமாய் நடக்கிறேன் நான்
மழைத்தூறல் முகம் நனைக்க
மகிழ்வாக மழையில் நனைந்த நாள்
மனதில் வருகிறது.

மனதின் ஓரங்களில் என்றும்
ஒட்டிக்கொண்டே இருக்கும்
காய்ந்துபோன சிலதும்
பழுப்பாகிக் கொண்டிருக்கும்
சில நினைவுகளுடனும்
கவலையும் மகிழ்வுமாய்
மனம் பயணிக்கிறது

காததூரம் வந்துவிட்டோம்
மீண்டும் வர முடியாத
அந்த நாட்களின்
நினைவுகளுடன் மட்டுமாய்
என்பது மனம் கனக்க
மாற்ற முடியாததான நாட்களின்
வலுவிழந்த இறந்த காலத்தின்
வரிகள் மட்டுமே நினைவில்

எல்லாமும் எப்போதும் என்
நினைவில் இல்லை
சிறுபராயத்து சிதிலமடைந்த
நினைவுகளில் சில மட்டும்
செருக்கடையா மனதின்
சிலும்பல்களாய் வந்துபோக
மீட்டல் செய்ய முடியாத
மறந்து போனவைகளுக்காக
வருந்த மட்டுமே முடிகிறது


26.08.2014
Nivetha

மறக்க முடியாத - கவிதை


மறக்க முடியாத மரணத்தின் வலியாகி
துறக்க முடியாத துயரத்தின் வடிவாகி
கடக்க முடியாத காலத்தின் கனவாகி
சுமக்க முடியாத சுமையாய் இருப்பது காதல்

தடுக்க முடியா தவிப்பில் உருவாகி
தவிர்க்க முடியா தடைகள் உடைத்தாகி
விடுக்க முடியா வேர்கள் விழுதாகி
விலக்க முடியா வினைகள் கொண்டது காதல்


கொடுக்க முடியாக் கொடைகள் கொடுத்தாகி 
இழக்க முடியா எல்லாம் இழந்தாகி
துறக்க முடியா துறப்பும் துறந்தாகி 
அடக்க முடியா மனதும் கொண்டது காதல்

எதிர்க்க முடியா எல்லாம் எருவாகி
ஏற்க முடியா எல்லாம் ஏற்றாகி
எதுவும் முடியா எண்ணம் முடித்தாகி
எதிர்வினை அற்றிருபது காதல் 

தொடங்குவது தடுக்கா முடிவாகி 
தொடர்வது திருட்டின் வழியாகி
தேடல்கள் தெவிட்டலில் முடிவாகி
தீராப் பகை சொல்வதும் காதலே

 நிவேதா உதயன்
22.09.2014

வானம் இன்று - கவிதை


வானம் இன்று வண்ணமிழந்து அழுகிறது
மேகம் கூட நிறமிழந்து பொழிகிறது
ஊசிக் காற்று உடலை வருத்த
உணர்வுகள் எல்லாம் உடல் சுருக்கி
ஒன்றுமற்று ஓடியே செல்கின்றன

இளவேனில் மழை இதமாய் நனைத்திடும்
கோடையில் மழை குதூகலம் தந்திடும்
மாலை மழை மனதை மயக்கிடும்
குளிர்கால மழையோ குலை நடுங்கிக்
கூதல் ஓடக் கொட்டமடக்கிடும்

கோடையை நனைக்க மழை வேண்டும்
குழந்தைகள் நனைய மழை வேண்டும்
காதலர்களுக்கும் மழை வேண்டும்
கனவுகள் கடந்து காலம் காட்டவும்
நினைவுகள் களைந்து நின்மதியுறவும்
நினைந்து நினைந்து நீ வாராது மழையே
நினைக்கும் பொழுதில் மட்டும் நீ வா


08.10.2014
Nivetha

மனதில் இருந்து விடுதலை - கவிதை


மனதில் இருந்து விடுதலை வேண்டும்
மறக்க முடியா நினைவுகள் இன்றி
மயங்க முடியா மனதும் இன்றி
மெலிதல் இல்லாச் செய்யல்களுடன்
மேன்மை பெற ஒரு மனம் வேண்டும்

செயற்கை அற்ற நட்பினதாய்
செயல்கள் எல்லாம் இயல்பினதாய்
சுவாசம் எங்கும் நிறைந்திட
சுத்தமான மனம் வேண்டும்

உயர்ந்த எண்ணம் கொண்டதுவாய்
உண்மை என்றும் உள்ளதுவாய்
உணர்வு கொண்டு துடிப்பதுவாய்
உயர்வாய் ஒரு மனம் வேண்டும்

ஆதிக்கம் என்பது அற்றதுவாய்
அகந்தை முற்றும் துறந்ததாய்
அன்பு கொண்டு என்னைச் சேர
ஆண்மை கொண்ட மனம் வேண்டும்

நம்பிக்கை கொண்டதுவாய்
நம்பிக் கை கொடுப்பதுவாய்
நம்பி நானும் நடப்பதற்காய்
நெகிழ்வுடனே ஒரு மனம் வேண்டும்

நட்டாற்றில் விடுவதுவாய்
நம்பிக்கை கொன்று நின்மதி தின்று
நினைக்கும் நேரம் நினைத்தபடியாய்
நிர்க்கதியாக்கியே நிதம் கொன்றிட
நிட்சயமற்றதாய் ஒரு மனம்
எப்போது எனக்கு வேண்டினும் வேண்டா

22.10.2014
Nivetha

இனிய இளகிய காலை ஒன்றில் - கவிதை


இனிய இளகிய காலை ஒன்றில்
மனவெளியில் மட்டற்று மயக்கங்கள்

நீண்டு தெரியும் நெடுமரங்களோடு
நட்பாய் நடக்கையில்
நிமிர்வற்ற மரங்களின் உதிர்ப்பில்
நிலம் முழுதும் நிறைந்து கிடக்கும்
நிழல் தந்த இலைகள்
நெஞ்சமதை நெகிழ்க்கின்றன

உதிர்ந்த மரக்கிளைகளில்
கொஞ்சலும் கொற்றலும் கூச்சலுமாய்க்
கூடியிருந்த புலுனிகள் கூட்டம்
கூடி ஒன்றாய் புல்லமர்ந்து
கொற்றித் தின்றன எதையோ
பின் கூடி எழுந்து கோலமிட்டபடி
கண்ணிமை மூடித் திறக்குமுன்னே
காணாமலும் போயின

மீண்டும் அவை வந்து போகலாம்
மிடுக்காய் அமர்ந்து மின்னலாய்ப் பறந்து
மாயங்கள் செய்யலாம்
காலம் மாறிக் கடும்பனி போனபின்
குனிந்த மரங்கள் மீண்டும்
குளிர் விரட்டி தளிர் கொள்ளலாம்
நாம் மட்டும்
தொலைந்த எம் இருப்பை எண்ணி
தொலைவிலும் தெரியா துளிர்ப்பும் இன்றி
தொன்மை தொலைத்து எம்மைத் தொலைத்து
தூரம் தெரியா இடுட்டைத் துலாவி
வெளிச்சமற்ற வீதியற்ற வெளியில்
தொலை தூரம் செல்லக் காத்திருக்கிறோம்


என்னுள் வியாபித்திருக்கும் - கவிதை


என்னுள் வியாபித்திருக்கும்
எண்ணத்தின் துளிகள்
எதிர்பார்த்து ஏங்கி
என்னுள்ளே எனைத்தாக்கி
எங்கெங்கோ சுற்றி வந்து
எண்ணற்ற எதிர்வினைகளை
என்னுள்ளே ஏவுகின்றன

புரிந்தும் புரியாது நிற்கும்
மனித மனங்களின் தகவுகள்
புரிந்திடக் கூடுமான
தருணங்களைத் தவிர்த்து
புரியமுடியாச் சூழல்களை
புரியாத கணக்குகளாய்
புதிராக்கி நிற்கின்றன

காலமும் கணக்கும்
மாறா எச்சங்களாய்
மாசுபடாத பகிர்தலை
மறக்கடிப்பதற்கான
மூச்சான முயல்வில்
முரண்கள் அதிகரிக்க
முட்டுச் சந்தில் நிற்பதாய்
முகம் உணரும்

ஆனாலும் தொடர்தல்
தொடர்பின்றித் தொடர
மனம் சூழும் மூச்சுக்கள்
காற்றாகிக் கரையாது
மதம்பிடித்தாடும் மனதின்
மடைதிறக்கும் காலத்துக்காய்
முகிள்வின்றிக் காத்திருக்கவே
முடிவற்று முடிகிறது


27.10.2014
Nivetha

கண்ணெதிரே காண்பவை - கவிதை


கண்ணெதிரே காண்பவை
கானல் நீராய்த் தெரிகிறது
 

மனிதமற்ற மனங்களின்
ஆசைகளின் ஓலங்களில்
அகப்படும் உயிர்கள்
உன்னதம் இழந்து
உயிர்வதை பட்டு
உழல்வதே வாழ்வாகி
உடைந்து நொறுங்கி
ஓட்டமுடியாததான
ஓர்மத்துடன் ...........

நகர்வின் அபிநயங்களில்
நல்லவராய் முகம் காட்டி
புறத்தே புழுவாய்
பேய் முகம் காட்டும்
பேடியராய்ப் பலர்
பித்தர்களாக்கி எமை
பரிதவிக்க வைத்து
பரவசம் கொண்டிடுவர்

வடிவங்கள் பலவெடுத்து
வக்கணையாய்ப் பேசி
வஞ்சப் புகழ்ச்சியுடன்
வாசனை அற்றவராய்
வன்மம் புடைசூழ
வஞ்சனையே அவராய்
வலிந்த விதியினதாய்
வடமிழுக்க முன்னிற்பர்

வகை தெரியா மனமே
வாழ்வைப் புரிந்திட
வண்ணங்கள் அல்ல
வாழ்வு ......
மேடுகள் காடுகள்
பகை நிறைத்த மாந்தர்
பகிர்தலற்ற பாள்மணம்
மிகைப்பட அனைத்தும்
மிகுந்ததே வாழ்வு

கல்லாய் ஆக்கிடு மனம்
கொல்லா வாழ்வது
கொண்டு சேர்த்திடும்
முள்ளாய் முரடர்
மூர்க்கமாய்க் குற்றினும்
வெல்லாமை கொண்டு
அவர் வெகுண்டு ஓடிட
நில்லாய் நீ மனமே
கருங்கல்லாய் நீ தினம்


29.10.2014
நிவேதா

Wednesday, 27 August 2014

தொலையும் நின்மதி - கவிதை


தொலையும் நின்மதியே நிரந்தரமாகி
நிற்கதியாக்கி விடுகின்றது

உரிமையற்ற நிலைகளின் ஈடாட்டம் கண்டு
ஏதுமற்றதாக ஆசை கொள்கிறது மனது
மனதில் கூடுகட்டும் குப்பைகளும்
ஆற்றாமைகளில் அழுந்தும் எண்ணங்களுமாய்
எல்லாவற்றையும் எதிரியாய் நோக்க
எந்நேரமும் எதுவுமாகிவிடாதிருக்க
எனக்கே நான் எதிரியாகிறேன்

செய்கைகளும் செயற்கையாய்க்
கோர்க்கப்படும் வார்த்தைகளும்
எந்நேரமும் செயல்களின் பிரதிபலிப்பை
எதிர்மறை எண்ணங்களின் பிரதிநிதியாக்க
பகுக்கப்படும் சிந்தனையின் செயல்களில்
பக்கவிளைவாகின்றன வார்த்தைகள்

உண்மையற்ற புரிதலற்ற அன்பும்
காரணங்களுக்கானதான செயலும்
எங்கோ ஓரிடத்தில் ஏதுமற்றதாகிவிடுகிறது
உண்மை அன்பு எந்தவித எதிர்பார்த்தலுமின்றி
என்றும் வற்றாத நதியாய்
எப்போதும் ஓடிக்கொண்டே இருக்கிறது

எனக்கானதாக எதுவும் இல்லாததில்
எனக்கானதாய் எண்ணிய பொய்மையில்
உணர்வுகளின் கருக்கூட்டலில்
எதுவுமே புரிந்துகொள்ளப்படாது
அன்னியமாக்கப்படுகின்றது
அதன் வலியை எதிர் கொள்ள முடியாது
எதிர்கொண்டபடியே எப்போதுமானதான
ஏமாற்றத்துடன் எதிர்வினை புரிந்தபடி நான்

Wednesday, 20 August 2014

இதயத்தில் கல் சுமந்து - கவிதை

 
இதயத்தில் கல் சுமந்து பிறந்திடு
மனதின் பாரம் அகன்றுவிடும்
கண்களில் கூர்மையற்று இருந்திடு
குற்றும் வலிகள் அகன்றுவிடும்
சிந்தையில் செயலற்று நின்றிடு
சேதங்கள் உனைவிட்டு அகன்றிடும்
செவிப்புலன் இருந்தும் செவிடராய் இருந்திடில்
சேதாரம் இன்றி வாழ்வு நகர்ந்திடும்
வார்த்தைகள் இன்றி வலிகள் சுமந்திடில்
வழிகள் ஆயிரம் வரிந்தே கண்டிடும்

நட்புக்காய் உறவுக்காய் ஊருக்காய் உலகுக்காய்
உருக்குலைந்து வாழ்ந்தே நாமும்
ஒட்டுண்ணிகளாய் ஓடற்ற விலங்கினமாய்
உள்ளும் புறமும் ஒளியற்ற வாழ்வை
ஏற்றும் ஏற்காது அலைகின்றோம்

எந்திரங்களற்று எதுமற்றவர்களாய்
எமக்காய் வாழ்வது எப்படி ????

சூதுகளற்று வாதுகள் செய்து
சுதந்திரமாய் வாழ்வதெப்படி ????

பாதைகளற்றுப் பறவைகளாக
பறந்து திரிவது எப்படி????

கோதுகளற்று கொடுமைகளற்று
கொள்கை வகுப்பது எப்படி????

கூடுகளற்று காடுகள் எங்கும்
கரைந்து திரிவது எப்படி ????

கோடுகள் கடந்து கொண்டவை துறந்து
கோலங்களாக காலங்கள் கனியக்
காத்திருப்பாயா பெண்ணே நீ ????

மனித மனங்கள் - கவிதைமனித மனங்களைப் பகுத்தறிய முடியவில்லை
எண்ணங்களை ஏதோவாக்கி
இனம்புரியா அர்த்தங்களை இணைவாக்கி
ஏக்கம் கொள்ள வைக்கின்றனர் மனிதர்

நம்பிக்கைகளை நிரந்தரமற்றதாக்கி
பரிவற்ற பகிர்தலைத் தம்முடையதாக்கி
எண்ணாதனவெல்லாம் எண்ணியபடி
உள்ளம் உறுதியறக் குமைக்கின்றனர்

வேடங்கள் விரும்புதலற்றதாகி
வார்த்தைகள் கபடுகள் கொண்டதாய்
விரும்பாதவற்றிலும் வில்லங்கமாக
வார்த்தைகளால் வஞ்சனை கொள்கின்றனர்

போலியான அன்பை வார்த்தைகளில் விதைத்து
வஞ்சனையை மனமெங்கும் கொண்டு
மற்றவரின் துன்பத்தில் தாம் இன்பம் கொண்டு
தமக்குள்ள தாமே குதூகலம் கொள்கின்றனர்

விதைத்தவர் எவரோ அறுவடை அவருக்கே
ஆண்டுகள் ஆயிரம் உலகின் நியதியாய்
ஆனாலும் நம்பிக்கையின் நாணறுத்து
நயவஞ்சகப் பேய்களாய் நடனம் புரிகின்றனர்

எல்லாமே ஒருநாள் அறுந்திட வேண்டும்தான்
ஆதலால் மனமே அடுத்தவரை எண்ணிக்
கல்மனம் நீக்கிக் கவலை கொள்ளாதே
கயமை கண்டு சோர்ந்துவிடாதே
கொடுமனம் கொண்டு நீயும் அவராகி

மழைத்தூறல் - கவிதை


எறித்த வெய்யிலை ஓரம் கட்டியபடி
எங்கும் எக்களித்தபடி காற்று
திடுமென வானம் திகைத்து நிற்க
கார்மேகக் கூட்டத்தின் கடைபரப்பல்
 

துமித்துத் தூவானத்துடன் தூறலாய்
ஆர்ப்பரித்தபடி மழை அதி வேகத்தோடு
சோவெனச் சோலைகளை நிறைத்து
சொல்லாமல் பெய்கிறது

கோடையில் மழை குதூகலம்தான்
ஆயினும் ............

எரிக்காத வெய்யிலை இரசித்தபடி
ஏகாந்தத்துள் திளைத்திருந்து
சுவாசத்தின் காற்றை சுத்தமாய் நிரப்பியபடி
மெய்மறந்திருந்த என்னை
குளிர்ந்து பட்ட துளி குதூகலம் கலைத்து
கூட்டினுள் கலைத்தது

ஆயினும் வீசும் குளிர் காற்றும்
மூக்கை நிறைக்கும் மழையின் மணமும்
சடசடத்துப் படபடத்து ஆடும்
இல்லை மரக் கொடிகளும்
வாசலில் நின்றெனை வர்ணிக்க வைத்தது

இயற்கை எப்போதும் இரசனைக்குரியதே
ஆனாலும் மாந்தர் நாம்
இரசிப்பை நிறுத்தி மனத்தைக் குறுக்கி
நிரந்தரமற்றவற்றுக்காய் நிதமும்
நிதானமற்று ஓடுகிறோம்

Saturday, 26 July 2014

வேண்டும் - கவிதை
உள்ளத்தில் மேன்மை வேண்டும்
உண்மையைப் பேசிட வேண்டும்
நெஞ்சத்தில் நிமிர்வு வேண்டும்
நேர்மையாய் நடந்திட வேண்டும்

வஞ்சங்கள் அழித்திட வேண்டும்
வாய்மையில் வீரம் வேண்டும்
விளைவுகள் நோக்கிட வேண்டும்
வீரமாய்ப் போரிடவேண்டும்

கொள்கைகள் வகுத்திட வேண்டும்
கொடுமையை மிதித்திட வேண்டும்
கோடுகள் கிழித்திட வேண்டும்
கொண்டதை முடித்திட வேண்டும்

துன்பங்கள் கொன்றிட வேண்டும்
தூணாய் நின்றிட வேண்டும்
துயரங்கள் சுமந்திட வேண்டும்
துச்சமாய் நோக்கிட வேண்டும்

தீயவை தெளிந்திட வேண்டும்
தீண்டாமை ஒழிந்திட வேண்டும்
தேசத்தில் நேசம் வேண்டும்
திடத்துடன் எழவே வேண்டும்

மண்ணிலே பற்று வேண்டும்
மடைமைகள் ஒழிய வேண்டும்
முடிவிலா முயற்சி வேண்டும்
மேன்மையுடன் வாழ வேண்டும்

விண்ணுந்து - கவிதை


 Photo: வானப்பரப்பில் மேகப் பொதிகளின் ஊடே 
இறக்கைகள் விரித்துப் பறக்கிறது 
விண்ணின் பறவை 

ஆயிரம் தூரம் கடந்தும் 
அசையாத நம்பிக்கை கொண்டு 
ஆடி அசைந்து செல்வதாய் எம்முன் காட்டி 
வேகம் கொண்டு செல்கிறது விமானப்பறவை 

எத்தனை பேரைச் சுமந்தும் இறுமாப்புடன்
எழில் கொண்டு பறக்கிறது எல்லைகள் கடந்து 
மேகப்பொதிகளை  ஊடறுத்து மெல்ல மேலேறி 
மாயாயாலம் தான் செய்கிறது மேகப்பறவை

வெண்பஞ்சு மேகங்கள் அள்ளி விளையாட ஆசை காட்ட 
தொடமுடியாத் தூரத்தில் தோகை விரித்தாடி 
திக்கெட்டும் வான்பரப்பு நெஞ்சைக் கொள்ளை கொள்ள
திகட்டாது மனதை மகிழ்வித்துப் பறக்கிறது  

எல்லைகளற்ற வானப்பரப்பு  எதுவுமேயற்று 
நீலங்கள் நிறைந்து நிதர்சனம்று இருக்கின்றது 
பயமும் பயமற்ற நிலையம் மனதை நிறைக்க 
பயணம் தொடர்கிறேன் பல நினைவுகளோடு 

ஆனாலும் வீட்டின் கணவன் பிள்ளைகள் 
காச்சிவச்ச கருவாட்டுக் குழம்பு கண்மணக்க
என்னவானதோ வீடு எனும் ஏக்கமும் கூட 
எப்படியோ எட்டிப்பார்க்கத்தான் செய்கிறது 

என்னதான் செய்வது பெண்ணின் நிலை 
எப்போதும் இதுதான் உலகில் மாற்ற முடியாததாய்
காலம் கடந்தென்ன கரைகள் கடந்தென்ன 
குடும்பக் கூட்டுக்குள் அடைபட்டு இருக்கும் 
குறுகிய மனம் எப்போதும் உள்ளபடி எம்மோடு
வானப்பரப்பில் மேகப் பொதிகளின் ஊடே
இறக்கைகள் விரித்துப் பறக்கிறது
விண்ணின் பறவை

ஆயிரம் தூரம் கடந்தும்
அசையாத நம்பிக்கை கொண்டு
ஆடி அசைந்து செல்வதாய் எம்முன் காட்டி
வேகம் கொண்டு செல்கிறது விமானப்பறவை

எத்தனை பேரைச் சுமந்தும் இறுமாப்புடன்
எழில் கொண்டு பறக்கிறது எல்லைகள் கடந்து
மேகப்பொதிகளை ஊடறுத்து மெல்ல மேலேறி
மாயாயாலம் தான் செய்கிறது மேகப்பறவை

வெண்பஞ்சு மேகங்கள் அள்ளி விளையாட ஆசை காட்ட
தொடமுடியாத் தூரத்தில் தோகை விரித்தாடி
திக்கெட்டும் வான்பரப்பு நெஞ்சைக் கொள்ளை கொள்ள
திகட்டாது மனதை மகிழ்வித்துப் பறக்கிறது

எல்லைகளற்ற வானப்பரப்பு எதுவுமேயற்று
நீலங்கள் நிறைந்து நிதர்சனம்று இருக்கின்றது
பயமும் பயமற்ற நிலையம் மனதை நிறைக்க
பயணம் தொடர்கிறேன் பல நினைவுகளோடு

ஆனாலும் வீட்டின் கணவன் பிள்ளைகள்
காச்சிவச்ச கருவாட்டுக் குழம்பு கண்மணக்க
என்னவானதோ வீடு எனும் ஏக்கமும் கூட
எப்படியோ எட்டிப்பார்க்கத்தான் செய்கிறது

என்னதான் செய்வது பெண்ணின் நிலை
எப்போதும் இதுதான் உலகில் மாற்ற முடியாததாய்
காலம் கடந்தென்ன கரைகள் கடந்தென்ன
குடும்பக் கூட்டுக்குள் அடைபட்டு இருக்கும்
குறுகிய மனம் எப்போதும் உள்ளபடி எம்மோடு


எண்ணங்கள் நகர்கின்றன - கவிதை
எண்ணங்கள் நகர்கின்றன
எதிரிகளாய் எப்போதும்
எதையோ எதிர்பார்த்தபடி

எண்ணக் கரு நிறைந்து
அடைகாத்தல் ஏதுமின்றி
அத்தனையும் திசுக்களாகி
எல்லைகளற்று விரிந்துகொண்டே
எங்கும் நிறைகின்றன

இல்லாத வினாக்கள் காணும்
இடைவெளியற்ற விடைகளால்
எப்போதும் மனம் எங்கெங்கோ அலைந்து
எண்ணமுடியாத் தூரங்களை
எப்படியோ கடக்கிறது

மனதின் இசைபிற்கேற்ற
மாற்றமுடியா நம்பிக்கைகளொடு
மகுடியற்ற பாம்பாய்
படம்விரித்தாடிப்
பயம் கொள்ள வைக்கின்றது

எத்தனை நாள் இன்னும்
இருக்கும் வரை என்னும்
எண்ணத் தோன்றல் மீதமிருக்கும்
நம்பிக்கையின் சுவர்களை
நலிவடைய வைக்கின்றது

ஆனாலும் வாழ்வின் வலிந்த இழுப்பில்
வலியற்றிருக்க வேண்டி
வக்கரிக்கும் நினைவுகளை
விழி மூடி வசியம் செய்யப் பார்க்கிறேன்

பைத்தியமா ????? - கதைஎனது கடைக்கு நீண்ட காலமாக வரும் ஒரு லண்டன் காரன் பெயர் யோன். அவரின் தலை முடி கருப்பாக இருக்கும். அவர் கலப்பினமாக இருக்கலாம் என்று எண்ணி நீ எந்த நாட்டவன் என்று கேட்டுவைக்க நான் பிரிட்டிஷ். இங்குதான் பிறந்து வளர்ந்தேன் என்றதுடன் மேற்கொண்டு அவனை நான் அவன் யார் எவர் என்று கேட்பதில்லை.

அவன் தூரத்தில் வரும்போதே ஒரு நாற்றம் என் மூக்கை அடைக்கச் செய்யும். நான் அவன் கடையில் நிற்கும் நேரம் அத்தனையும் எவ்வளவு விரைவில் அவனை அனுப்பிவிட முடியுமோ அத்தனை விரைவாக அணிப்புவேன். குடிவகைகளின் நாற்றமோ அன்றி குளிக்காமல் இருப்பவரின் நாற்றமோ இல்லை. பிணங்களின் வாடைபோல் அது இருக்கும். எனவே அவனைப் பார்க்கும் நேரம் எல்லாம் வழியில் தென்படும் சவக்காலைகள் எல்லாம் என் கண்முன்னே வந்து போகும். அவனிடம் என்ன என்று கேட்பதே இல்லை.கணவர் நிற்கும் நேரங்களில் அவன் வரும் போது நான் பின் பக்கமாக நழுவிவிடுவேன். அவன் சென்றபின் கணவர் கதவைப் பெரிதாகத் திறந்துவிட்டதன் பினரே நான் மீண்டும் வருவேன். ஆனால் அவனது முகம் பார்க்க நட்புடன் இருக்கும். வந்த உடனேயே பிள்ளைகள் எப்படி இருக்கிறார்கள். படிப்பு எப்படிப் போகிறது, விடுமுறை செல்லவில்லையா என்று அக்கறையாக விசாரிப்பான். அதுமட்டுமன்று ஒவ்வொருநாளும் கடையில் பதினைந்து தொடக்கம் இருபது பவுண்டுகளுக்குக் குறையாது பொருட்களை வாங்குவான்.

என் கணவரின் மூக்கு மாலையில் வரும் குடிகாரக் கஸ்டமர்களிடம் எல்லாம் இசைபாக்கம் அடைந்து இவனது மணம் பெரிதாகத் தெரிவதில்லை என்பார். அவன் பிணங்களுடன் தான் வேலை செய்வதாக ஒருநாள் கணவர் கூறினார். அதன் பின் அவன் தரும் பணத்தைப் பெற்றுக்கொண்டு அவன் சென்றபின் கைகளைக் கழுவியபின் தான் நின்தியாக இருக்கும்.

நான் விடுமுறையில் நின்றதனால் கன நாட்கள் அவனைக் காணவில்லை. இன்று மதியம் அவன் கடைக்கு வரும் போதே அவனில் மாற்றம் தெரிந்தது. கன்னங்கள் ஒட்டி முகத்தில் மலர்ச்சியின்றி, நான் இன்னொரு கஷ்டமரிடம் நின்றிருந்தபடியால் அவனைப் பார்த்து ஹலோ என்றுவிட்டு என் அலுவலைப் பார்த்தேன். அவன் கடையின் பின் பக்கமாகச் சென்றவன், எதோ பெரிதாகக் கதைப்பது கேட்டது. அவன் என்னிடம் தான் எதோ சொல்கிறான் என எண்ணியபடி உனக்கு ஏதும் உதவி தேவையோ என்றேன்.

நான் புதியவனல்ல எனக்கு உதவி தேவை இல்லை. எனக்கு டெற்றோல் பெரியதில் ஆறு வேண்டும் என்றான். அங்கு இல்லையா முடிந்துவிட்டதா என்று நான் கேட்டேன். நான் இப்ப இரண்டு கொண்டுபோகிறேன் எனக்கு இன்னும் ஆறு வேண்டும் என்றான். எம்மிடம் வேறு இல்லை என எண்ணியபடி நாளை வா வாங்கி வைக்கலாம் என்றேன். ஏன் எனக்கு ஆறு வைக்க முடியாதா என்று அவன் கேட்டபோதுதான் அவன் சொல்வதில் எதோ சிக்கல் இருப்பது புரிந்தது.

அவனின் பொருட்களைக் கொண்டுவந்து மேசையில் அடுக்கியவுடன் நான் ஒவ்வொன்றாக அடிக்கத் தொடங்கினேன். அவனுக்குப் பின்னால் இன்னொரு பெண் குழந்தையுடன் பொருட்களையும் காவியபடி வந்து நிற்க, பொருட்களை வாங்கி வைப்பதற்காக நான் அவள் பக்கம் கையை நீட்டினேன். எனக்கு முதலில் சேவ் பண்ணு என்று என்னை உறுக்குவது போல் கத்தினான். அந்தப் பெண் அதிர்ந்ததில் அவள் கையிலிருந்த பொருளொன்று கீழே விழுந்தது. நான் அவளது பொருட்களை வாங்கி ஓரமாக வைத்துவிட்டு இவனது பொருட்களை அடித்து முடித்தேன். பதினெட்டுப் பவுன்கள் சொச்சம் வர அதை நான் அவனுக்குக் கூறினேன்.

அவன் உடனே அந்தப் பெண்ணை முடித்துவிட்டு என்னை அனுப்பு என்றான். உனது பொருட்கள் அடித்து முடித்துவிட்டேன் நீ பணத்தைச் செலுத்து என்றதற்கு, நான் சொல்வது உனக்கு விளங்கவில்லையா ?? அவளை முதலில் அனுப்பு என்று மீண்டும் எனக்குக் கட்டளையிட்டான். அவனின் அசாதாரண நிலை புரிந்து போனதால் நான் மீண்டும் எல்லாவற்றையும் கான்சல் செய்துவிட்டு அவளை முன்னே வருமாறு அழைக்க அவள் முன்னே வந்தால். பின்னால் சென்றவன், உனக்கு ஆங்கிலம் விளங்காமல் எப்பிடிக் கடையை நடத்துகிறாய் என்று கூற, எனக்கு ஆங்கிலம் கதைக்கத் தெரியும் என்று நான் கோபமானேன்.

உடனே அவன் பெரிதாகச் சிரிக்க ஆரம்பிக்க, அவனின் சிரிப்பின் கோரம் தாங்காது அந்தப் பெண்ணின் கையிலிருந்த குழந்தை வீரிட்டு அழ ஆரம்பித்தது. அந்தப் பெண்ணை ஒருவாறு அனுப்பிவிட்டு அவனை அழைக்க அவனோ மீண்டும் என்னை எதோ திட்டியபடி பெரிதாகச் சிரித்தபடி வந்தான். மீண்டும் அவனைக் கணக்கை முடித்து ரிசீற்ரைக் கொடுக்க எனக்கு சரியான றிசீட் வேண்டும். மீண்டும் அடி என்றான். மற்றும் நேரம் எனில் முடியாது வெளியே போ என்றிருப்பேன். இது ஒன்றும் செய்ய முடியாது இரு பைகளுள் அடக்கிய பொருட்களை வெளியே எடுத்து மீண்டும் அடித்தேன். பணத்தைத் தந்துவிட்டு அவன் வாசல்ப் பக்கம் செல்ல இன்னொருவன் வந்துவிட்டான். நான் வந்தவனைக் கவனிக்க இவனோ இன்னும் வாசல்ப் பக்கம் நின்று நாம் போட்டிருந்த மற்றை(matt) மற்றவளம் திருப்பிப் போட்டுக்கொண்டிருந்தான்.

சரி என்று இவனை அனுப்பிவிட்டுப் பார்த்தால் இன்னும் நின்றுகொண்டிருந்தான். கடையில் என்னையும் அவனையும் தவிர யாரும் இல்லை. கூடவே பயமும் எட்டிப்பார்க்க ஆரம்பித்தது. எதாவது மறந்துவிட்டாயா என்று கேட்க நீ எனக்கு ரிசீற் தரவில்லை. அதுதான் நிக்கிறேன் என்றான். என்னடா இது தொல்லை என்று மனதுள் எண்ணியபடி, உனக்குத் தந்துவிட்டேனே என்றேன். நீ தரவில்லையே என்றபடி ரில்லுக்குக் கிட்ட வர, என்ன தற்காப்பு முயற்சி எடுக்கலாம் என என் மனம் எண்ணத் தொடங்க, கீழே குனிந்து இன்னொரு ரிசீற்ரை எடுத்துக்கொண்டு, ஓ கீழே எறிந்துவிட்டாயா என்றான். நான் எறியவில்லை என்று நாக்கு நுனியாரை வந்த வார்த்தையை அடக்கியபடி சொறி என்றேன். அவனும் சந்தோசமாக எடுத்தபடி சரி ஆங்கிலம் கதைக்கத் தெரியாமல் எப்படிக் கடை நடத்துகிறாய் என்று கேட்டபடியே வெளியேறினான்.

அப்பாடா நின்மதி என எண்ணியபடியும் ஏன் இவனுக்கு இப்படி ஆனது என எண்ணியபடியும் இருக்க இதை யாழில் எழுதவேண்டும் என்று எண்ணம் தோன்றியது. சரி எழுதுவோம் என எழுத ஆரம்பிக்க மீண்டும் கதவைத் திறந்துகொண்டு அவன் உள்ளே வந்தான். நான் பயத்தை விழுங்கியபடி சிரித்துக்கொண்டே என்ன என்றேன். நீ ரிசீட் தரவில்லை என்ற பழைய பல்லவி. நீ எவ்வளவு காசுக்குப் பொருட்கள் வாங்கினாய் என்றதற்கு இருபது பவுண்களுக்கு வாங்கினேன் என்றான். இருபது பவுன்டுகளுக்கு ரிசீட் அடித்துக் கொடுத்தவுடன் நீ மறந்துவிட்டாய் என்று கூறியபடி வெளியே செல்பவனை இரக்கத்தோடு பார்த்தபடி நின்றேன் நான்.

காத்திருப்பு - கவிதை


காலங்களின் காத்திருப்புகளில்
கருணைக் கொலையாய் அன்பும்
வேண்டியோருக்கு இல்லாமலும்
வேண்டாதோர்க்கு இருப்பதுமாய்
மனதின் உணர்வுகளை எல்லாம்
மழுங்கவைக்கின்றன

பகிர்தலற்ற பக்குவமாய்
பாறாங்கல்லாய் மனிதர்கள்
மிகைப்படுத்தப்படும் மனத்தின்
மீட்சியற்ற எண்ணங்களிநூடே
மறுதலித்து மனம் கொள்ளும் நினைவுகள்

நிமிடங்கள் நாட்களாகி
மாதங்கள் ஆண்டுகளாகி
அடைகாத்துவைத்த எண்ணக் குவியலில்
ஏமாற்றத்தின் உத்தரிப்பில்
அத்தனையும் அர்த்தமற்றதாகின்றன

இனிவரும் காலங்களின் வகுத்தல்
எதுமற்றதாகி இயலாமை நிறைந்ததாய்
எதிர்மறை எண்ணங்களின் எக்களிப்பில்
எல்லைகள் கடந்தும் எங்கும்
எல்லாமே இல்லாதாகின்றன

இருளற்ற காலங்களில் தெரியும்
தெளிவான காட்சிகள் கூட
தேவைகளின் நிர்ப்பந்தங்களில்
நிகரான நகர்த்தல்களின் காட்சி
இருப்பின் அர்த்தத்தைத் தகர்ப்பதாய்
எப்போதும்போல் ஏகாந்தத்தை
எட்டவே நிறுத்தியபடி

காலைக் கதிரவன் - கவிதை


காலைக் கதிரவனின் கனலற்ற கதிர்கள்
குளித்தென்னை மகிழென்று
கூவி அழைக்கின்றன
இதமான சூடற்ற காலை வெயில்
எந்திர மனதுக்குப் புத்துணர்ச்சி தருகிறது

இரவின் குளிர்மையில் குளித்த மரங்கள்
பசுமையும் அழகு கூட்ட
பார்க்கும் இடமெங்கும்
பரவசம் தருகின்றன

குலை தள்ளிக் குனிந்து நிற்கும் வாழை
கூம்பான இதழ் கழற்றிக்
கொள்ளைச் சிரிப்புடனே
நிலம் பார்க்க நிற்கிறது

வாசனைப் பூக்களெல்லாம்
வாடியவை காற்றில் கழித்து
வசதியாய்ப் பார்த்தபடி
வகைக்கொன்றாய் இருக்கின்றன

வேர்விட்ட நீரல்லி கதிரவனின் வரவில்
கண்மலர்ந்து மடல்கள் விரித்தே
கதிரவன் கண்பார்க்க
காதலுடன் நிற்கின்றாள்

கடமை என் காட்சிகள் கலைக்க
கவிந்த மனம் கட்டறுத்து வீழ
கண்மூடிக் காட்சிகளைக் கைது செய்தபடி
காலத்தின் கணக்கில் கரைந்து போகிறேன்

தடம் - கவிதைஆண்டுகள் ஆயிரம் ஆனது
எம் ஆசைகள் நூர்ந்து போனது
காத்திருப்புக்கள் கரைந்து
காரணம் அற்றதாய் இருப்புக்கள் ஆனது

சுதந்திர தேசம் சுடுகாடாய் ஆக
சுரணை அற்ற தமிழர் செருக்கழிந்து போக
சுற்றி இருந்தவர் எருக்களாய் ஆக
சோகம் மட்டுமே மிச்சமாய் ஆனது

எத்தனை ஆண்டுகள் கட்டுகள் உடைத்து
எதிரிகளின் தூக்கம் தொலைத்து
எங்கணும் எம் தடம் பதித்து
எத்தர்களை எட்டி உதைத்தோம்

அத்தனையும் அன்று எம்மை விட்டு
எதிரியிடம் மொத்தமாய்ப் போனது
ஆறுதல் சொல்லவும் ஆரும் அற்றதாய் 
அந்திமக் காலத்தின் அவலமாய் ஆனது 

அறிவின் தடங்கள் அழிக்கப்பட்டு 
உயிர்ப்பின் தடங்கள் உருக்கப்பட்டு
இருப்பின் தடங்கள் நெருப்பிலிட்டு
இல்லாமை ஒன்றே தமிழனதாய்
எழவே முடியா இயல்பினதாய் 
எம்மை எல்லோரும் ஆக்க முனைத்தனர்

விடுதலையின் விலங்ககற்ற 
வேதனைகள் பல விழுங்கி
வீரர்கள் பதித்த தடம் இன்னும்
ஈரமாய் எம் மண்ணில் இருக்கிறது
ஆன்மாவின் அடங்கா ஆவலுடன்
எங்கள் எழுகையை எதிர் பார்த்தபடி

அழிவின் அகழ்வைப் பிளந்து
அறிவின் செறிவைப் பகிர்ந்து
விடிவின் வெளிகள் கடந்து 
தடம்புரளா திடங்கொண்டு
தடைகள் தாண்டித் தடம் பதித்து
தமிழர் நாம் மீண்டும் தலைநிமிர்வோம்