Wednesday 27 August 2014

தொலையும் நின்மதி - கவிதை


தொலையும் நின்மதியே நிரந்தரமாகி
நிற்கதியாக்கி விடுகின்றது

உரிமையற்ற நிலைகளின் ஈடாட்டம் கண்டு
ஏதுமற்றதாக ஆசை கொள்கிறது மனது
மனதில் கூடுகட்டும் குப்பைகளும்
ஆற்றாமைகளில் அழுந்தும் எண்ணங்களுமாய்
எல்லாவற்றையும் எதிரியாய் நோக்க
எந்நேரமும் எதுவுமாகிவிடாதிருக்க
எனக்கே நான் எதிரியாகிறேன்

செய்கைகளும் செயற்கையாய்க்
கோர்க்கப்படும் வார்த்தைகளும்
எந்நேரமும் செயல்களின் பிரதிபலிப்பை
எதிர்மறை எண்ணங்களின் பிரதிநிதியாக்க
பகுக்கப்படும் சிந்தனையின் செயல்களில்
பக்கவிளைவாகின்றன வார்த்தைகள்

உண்மையற்ற புரிதலற்ற அன்பும்
காரணங்களுக்கானதான செயலும்
எங்கோ ஓரிடத்தில் ஏதுமற்றதாகிவிடுகிறது
உண்மை அன்பு எந்தவித எதிர்பார்த்தலுமின்றி
என்றும் வற்றாத நதியாய்
எப்போதும் ஓடிக்கொண்டே இருக்கிறது

எனக்கானதாக எதுவும் இல்லாததில்
எனக்கானதாய் எண்ணிய பொய்மையில்
உணர்வுகளின் கருக்கூட்டலில்
எதுவுமே புரிந்துகொள்ளப்படாது
அன்னியமாக்கப்படுகின்றது
அதன் வலியை எதிர் கொள்ள முடியாது
எதிர்கொண்டபடியே எப்போதுமானதான
ஏமாற்றத்துடன் எதிர்வினை புரிந்தபடி நான்

No comments:

Post a Comment