என் மனதில் தோன்றிடும் எண்ணங்களின் பிரதிபலிப்பை வார்த்தைகளாக்கி இங்கு கோர்த்திருக்கிறேன்.
Saturday, 26 July 2014
பைத்தியமா ????? - கதை
எனது கடைக்கு நீண்ட காலமாக வரும் ஒரு லண்டன் காரன் பெயர் யோன். அவரின் தலை முடி கருப்பாக இருக்கும். அவர் கலப்பினமாக இருக்கலாம் என்று எண்ணி நீ எந்த நாட்டவன் என்று கேட்டுவைக்க நான் பிரிட்டிஷ். இங்குதான் பிறந்து வளர்ந்தேன் என்றதுடன் மேற்கொண்டு அவனை நான் அவன் யார் எவர் என்று கேட்பதில்லை.
அவன் தூரத்தில் வரும்போதே ஒரு நாற்றம் என் மூக்கை அடைக்கச் செய்யும். நான் அவன் கடையில் நிற்கும் நேரம் அத்தனையும் எவ்வளவு விரைவில் அவனை அனுப்பிவிட முடியுமோ அத்தனை விரைவாக அணிப்புவேன். குடிவகைகளின் நாற்றமோ அன்றி குளிக்காமல் இருப்பவரின் நாற்றமோ இல்லை. பிணங்களின் வாடைபோல் அது இருக்கும். எனவே அவனைப் பார்க்கும் நேரம் எல்லாம் வழியில் தென்படும் சவக்காலைகள் எல்லாம் என் கண்முன்னே வந்து போகும். அவனிடம் என்ன என்று கேட்பதே இல்லை.
கணவர் நிற்கும் நேரங்களில் அவன் வரும் போது நான் பின் பக்கமாக நழுவிவிடுவேன். அவன் சென்றபின் கணவர் கதவைப் பெரிதாகத் திறந்துவிட்டதன் பினரே நான் மீண்டும் வருவேன். ஆனால் அவனது முகம் பார்க்க நட்புடன் இருக்கும். வந்த உடனேயே பிள்ளைகள் எப்படி இருக்கிறார்கள். படிப்பு எப்படிப் போகிறது, விடுமுறை செல்லவில்லையா என்று அக்கறையாக விசாரிப்பான். அதுமட்டுமன்று ஒவ்வொருநாளும் கடையில் பதினைந்து தொடக்கம் இருபது பவுண்டுகளுக்குக் குறையாது பொருட்களை வாங்குவான்.
என் கணவரின் மூக்கு மாலையில் வரும் குடிகாரக் கஸ்டமர்களிடம் எல்லாம் இசைபாக்கம் அடைந்து இவனது மணம் பெரிதாகத் தெரிவதில்லை என்பார். அவன் பிணங்களுடன் தான் வேலை செய்வதாக ஒருநாள் கணவர் கூறினார். அதன் பின் அவன் தரும் பணத்தைப் பெற்றுக்கொண்டு அவன் சென்றபின் கைகளைக் கழுவியபின் தான் நின்தியாக இருக்கும்.
நான் விடுமுறையில் நின்றதனால் கன நாட்கள் அவனைக் காணவில்லை. இன்று மதியம் அவன் கடைக்கு வரும் போதே அவனில் மாற்றம் தெரிந்தது. கன்னங்கள் ஒட்டி முகத்தில் மலர்ச்சியின்றி, நான் இன்னொரு கஷ்டமரிடம் நின்றிருந்தபடியால் அவனைப் பார்த்து ஹலோ என்றுவிட்டு என் அலுவலைப் பார்த்தேன். அவன் கடையின் பின் பக்கமாகச் சென்றவன், எதோ பெரிதாகக் கதைப்பது கேட்டது. அவன் என்னிடம் தான் எதோ சொல்கிறான் என எண்ணியபடி உனக்கு ஏதும் உதவி தேவையோ என்றேன்.
நான் புதியவனல்ல எனக்கு உதவி தேவை இல்லை. எனக்கு டெற்றோல் பெரியதில் ஆறு வேண்டும் என்றான். அங்கு இல்லையா முடிந்துவிட்டதா என்று நான் கேட்டேன். நான் இப்ப இரண்டு கொண்டுபோகிறேன் எனக்கு இன்னும் ஆறு வேண்டும் என்றான். எம்மிடம் வேறு இல்லை என எண்ணியபடி நாளை வா வாங்கி வைக்கலாம் என்றேன். ஏன் எனக்கு ஆறு வைக்க முடியாதா என்று அவன் கேட்டபோதுதான் அவன் சொல்வதில் எதோ சிக்கல் இருப்பது புரிந்தது.
அவனின் பொருட்களைக் கொண்டுவந்து மேசையில் அடுக்கியவுடன் நான் ஒவ்வொன்றாக அடிக்கத் தொடங்கினேன். அவனுக்குப் பின்னால் இன்னொரு பெண் குழந்தையுடன் பொருட்களையும் காவியபடி வந்து நிற்க, பொருட்களை வாங்கி வைப்பதற்காக நான் அவள் பக்கம் கையை நீட்டினேன். எனக்கு முதலில் சேவ் பண்ணு என்று என்னை உறுக்குவது போல் கத்தினான். அந்தப் பெண் அதிர்ந்ததில் அவள் கையிலிருந்த பொருளொன்று கீழே விழுந்தது. நான் அவளது பொருட்களை வாங்கி ஓரமாக வைத்துவிட்டு இவனது பொருட்களை அடித்து முடித்தேன். பதினெட்டுப் பவுன்கள் சொச்சம் வர அதை நான் அவனுக்குக் கூறினேன்.
அவன் உடனே அந்தப் பெண்ணை முடித்துவிட்டு என்னை அனுப்பு என்றான். உனது பொருட்கள் அடித்து முடித்துவிட்டேன் நீ பணத்தைச் செலுத்து என்றதற்கு, நான் சொல்வது உனக்கு விளங்கவில்லையா ?? அவளை முதலில் அனுப்பு என்று மீண்டும் எனக்குக் கட்டளையிட்டான். அவனின் அசாதாரண நிலை புரிந்து போனதால் நான் மீண்டும் எல்லாவற்றையும் கான்சல் செய்துவிட்டு அவளை முன்னே வருமாறு அழைக்க அவள் முன்னே வந்தால். பின்னால் சென்றவன், உனக்கு ஆங்கிலம் விளங்காமல் எப்பிடிக் கடையை நடத்துகிறாய் என்று கூற, எனக்கு ஆங்கிலம் கதைக்கத் தெரியும் என்று நான் கோபமானேன்.
உடனே அவன் பெரிதாகச் சிரிக்க ஆரம்பிக்க, அவனின் சிரிப்பின் கோரம் தாங்காது அந்தப் பெண்ணின் கையிலிருந்த குழந்தை வீரிட்டு அழ ஆரம்பித்தது. அந்தப் பெண்ணை ஒருவாறு அனுப்பிவிட்டு அவனை அழைக்க அவனோ மீண்டும் என்னை எதோ திட்டியபடி பெரிதாகச் சிரித்தபடி வந்தான். மீண்டும் அவனைக் கணக்கை முடித்து ரிசீற்ரைக் கொடுக்க எனக்கு சரியான றிசீட் வேண்டும். மீண்டும் அடி என்றான். மற்றும் நேரம் எனில் முடியாது வெளியே போ என்றிருப்பேன். இது ஒன்றும் செய்ய முடியாது இரு பைகளுள் அடக்கிய பொருட்களை வெளியே எடுத்து மீண்டும் அடித்தேன். பணத்தைத் தந்துவிட்டு அவன் வாசல்ப் பக்கம் செல்ல இன்னொருவன் வந்துவிட்டான். நான் வந்தவனைக் கவனிக்க இவனோ இன்னும் வாசல்ப் பக்கம் நின்று நாம் போட்டிருந்த மற்றை(matt) மற்றவளம் திருப்பிப் போட்டுக்கொண்டிருந்தான்.
சரி என்று இவனை அனுப்பிவிட்டுப் பார்த்தால் இன்னும் நின்றுகொண்டிருந்தான். கடையில் என்னையும் அவனையும் தவிர யாரும் இல்லை. கூடவே பயமும் எட்டிப்பார்க்க ஆரம்பித்தது. எதாவது மறந்துவிட்டாயா என்று கேட்க நீ எனக்கு ரிசீற் தரவில்லை. அதுதான் நிக்கிறேன் என்றான். என்னடா இது தொல்லை என்று மனதுள் எண்ணியபடி, உனக்குத் தந்துவிட்டேனே என்றேன். நீ தரவில்லையே என்றபடி ரில்லுக்குக் கிட்ட வர, என்ன தற்காப்பு முயற்சி எடுக்கலாம் என என் மனம் எண்ணத் தொடங்க, கீழே குனிந்து இன்னொரு ரிசீற்ரை எடுத்துக்கொண்டு, ஓ கீழே எறிந்துவிட்டாயா என்றான். நான் எறியவில்லை என்று நாக்கு நுனியாரை வந்த வார்த்தையை அடக்கியபடி சொறி என்றேன். அவனும் சந்தோசமாக எடுத்தபடி சரி ஆங்கிலம் கதைக்கத் தெரியாமல் எப்படிக் கடை நடத்துகிறாய் என்று கேட்டபடியே வெளியேறினான்.
அப்பாடா நின்மதி என எண்ணியபடியும் ஏன் இவனுக்கு இப்படி ஆனது என எண்ணியபடியும் இருக்க இதை யாழில் எழுதவேண்டும் என்று எண்ணம் தோன்றியது. சரி எழுதுவோம் என எழுத ஆரம்பிக்க மீண்டும் கதவைத் திறந்துகொண்டு அவன் உள்ளே வந்தான். நான் பயத்தை விழுங்கியபடி சிரித்துக்கொண்டே என்ன என்றேன். நீ ரிசீட் தரவில்லை என்ற பழைய பல்லவி. நீ எவ்வளவு காசுக்குப் பொருட்கள் வாங்கினாய் என்றதற்கு இருபது பவுண்களுக்கு வாங்கினேன் என்றான். இருபது பவுன்டுகளுக்கு ரிசீட் அடித்துக் கொடுத்தவுடன் நீ மறந்துவிட்டாய் என்று கூறியபடி வெளியே செல்பவனை இரக்கத்தோடு பார்த்தபடி நின்றேன் நான்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment