Saturday, 26 July 2014

காலைக் கதிரவன் - கவிதை


காலைக் கதிரவனின் கனலற்ற கதிர்கள்
குளித்தென்னை மகிழென்று
கூவி அழைக்கின்றன
இதமான சூடற்ற காலை வெயில்
எந்திர மனதுக்குப் புத்துணர்ச்சி தருகிறது

இரவின் குளிர்மையில் குளித்த மரங்கள்
பசுமையும் அழகு கூட்ட
பார்க்கும் இடமெங்கும்
பரவசம் தருகின்றன

குலை தள்ளிக் குனிந்து நிற்கும் வாழை
கூம்பான இதழ் கழற்றிக்
கொள்ளைச் சிரிப்புடனே
நிலம் பார்க்க நிற்கிறது

வாசனைப் பூக்களெல்லாம்
வாடியவை காற்றில் கழித்து
வசதியாய்ப் பார்த்தபடி
வகைக்கொன்றாய் இருக்கின்றன

வேர்விட்ட நீரல்லி கதிரவனின் வரவில்
கண்மலர்ந்து மடல்கள் விரித்தே
கதிரவன் கண்பார்க்க
காதலுடன் நிற்கின்றாள்

கடமை என் காட்சிகள் கலைக்க
கவிந்த மனம் கட்டறுத்து வீழ
கண்மூடிக் காட்சிகளைக் கைது செய்தபடி
காலத்தின் கணக்கில் கரைந்து போகிறேன்

No comments:

Post a Comment