ஆண்டுகள் ஆயிரம் ஆனது
எம் ஆசைகள் நூர்ந்து போனது
காத்திருப்புக்கள் கரைந்து
காரணம் அற்றதாய் இருப்புக்கள் ஆனது
சுதந்திர தேசம் சுடுகாடாய் ஆக
சுரணை அற்ற தமிழர் செருக்கழிந்து போக
சுற்றி இருந்தவர் எருக்களாய் ஆக
சோகம் மட்டுமே மிச்சமாய் ஆனது
எத்தனை ஆண்டுகள் கட்டுகள் உடைத்து
எதிரிகளின் தூக்கம் தொலைத்து
எங்கணும் எம் தடம் பதித்து
எத்தர்களை எட்டி உதைத்தோம்
அத்தனையும் அன்று எம்மை விட்டு
எதிரியிடம் மொத்தமாய்ப்
போனது
ஆறுதல் சொல்லவும் ஆரும் அற்றதாய்
அந்திமக் காலத்தின் அவலமாய் ஆனது
அறிவின் தடங்கள் அழிக்கப்பட்டு
உயிர்ப்பின் தடங்கள் உருக்கப்பட்டு
இருப்பின் தடங்கள் நெருப்பிலிட்டு
இல்லாமை ஒன்றே தமிழனதாய்
எழவே முடியா இயல்பினதாய்
எம்மை எல்லோரும் ஆக்க முனைத்தனர்
விடுதலையின் விலங்ககற்ற
வேதனைகள் பல விழுங்கி
வீரர்கள் பதித்த தடம் இன்னும்
ஈரமாய் எம் மண்ணில் இருக்கிறது
ஆன்மாவின் அடங்கா ஆவலுடன்
எங்கள் எழுகையை எதிர் பார்த்தபடி
அழிவின் அகழ்வைப் பிளந்து
அறிவின் செறிவைப் பகிர்ந்து
விடிவின் வெளிகள் கடந்து
தடம்புரளா திடங்கொண்டு
தடைகள் தாண்டித் தடம் பதித்து
தமிழர் நாம் மீண்டும் தலைநிமிர்வோம்
No comments:
Post a Comment