Thursday 30 October 2014

இனிய இளகிய காலை ஒன்றில் - கவிதை


இனிய இளகிய காலை ஒன்றில்
மனவெளியில் மட்டற்று மயக்கங்கள்

நீண்டு தெரியும் நெடுமரங்களோடு
நட்பாய் நடக்கையில்
நிமிர்வற்ற மரங்களின் உதிர்ப்பில்
நிலம் முழுதும் நிறைந்து கிடக்கும்
நிழல் தந்த இலைகள்
நெஞ்சமதை நெகிழ்க்கின்றன

உதிர்ந்த மரக்கிளைகளில்
கொஞ்சலும் கொற்றலும் கூச்சலுமாய்க்
கூடியிருந்த புலுனிகள் கூட்டம்
கூடி ஒன்றாய் புல்லமர்ந்து
கொற்றித் தின்றன எதையோ
பின் கூடி எழுந்து கோலமிட்டபடி
கண்ணிமை மூடித் திறக்குமுன்னே
காணாமலும் போயின

மீண்டும் அவை வந்து போகலாம்
மிடுக்காய் அமர்ந்து மின்னலாய்ப் பறந்து
மாயங்கள் செய்யலாம்
காலம் மாறிக் கடும்பனி போனபின்
குனிந்த மரங்கள் மீண்டும்
குளிர் விரட்டி தளிர் கொள்ளலாம்
நாம் மட்டும்
தொலைந்த எம் இருப்பை எண்ணி
தொலைவிலும் தெரியா துளிர்ப்பும் இன்றி
தொன்மை தொலைத்து எம்மைத் தொலைத்து
தூரம் தெரியா இடுட்டைத் துலாவி
வெளிச்சமற்ற வீதியற்ற வெளியில்
தொலை தூரம் செல்லக் காத்திருக்கிறோம்


No comments:

Post a Comment