Wednesday 10 December 2014

மனம் கொண்ட மயக்கம் - கவிதை


மனம் கொண்ட மயக்கம்
மங்குவதான தோற்றத்தில்
மகிழ்வும் துக்கமும் கலவையாய்
கண்ணாம்மூச்சி விளையாட்டாய்
கணநேரமும் கருத்தை விட்டு அகலாது
கருப்பு வெள்ளையாய் காலம் காட்டியபடி

விருப்பு வெறுப்புகளின் அப்பால்
விமோசனமடைய விளையும் மனம்
குரங்கின் தாவலில் அங்கும் இங்கும்
எந்நேரமும் தாவியபடியே தரையில்
எள்ளளவும் அமைதியற்று என்னை
எதிர்க் கேள்வி கேட்டபடி

அன்பின் திளைத்தலில் அடிமுடி தேடியும் 
அறியமுடியாத நிபந்தனைகளோடு
ஆண் என்னும் இறுமாப்பின் கூடுகட்டல்
ஆற்றமுடியாத ஆழங்களை என்றும்
ஆணிவேரில் பதித்தபடி அல்லல் செய்ய
ஆறுதலற்றதாகவும் ஆற்றுப்படுத்த முடியாத
அவலங்களையும் சுமந்தபடி

எண்ணற்ற கேள்விகளும் அவற்றுக்கு
எழுதமுடியாத விடைகளுமாய்
ஏக்கம் மட்டும் பாரங்கள் சுமக்க
என்றும் நம்பிக்கையற்றதான எதிர்பார்ப்பை
எப்போதும் எதிரியுடன் இருப்பதான
எதிர்மறை எண்ணத்தையே என்னுள்
எங்கணும் விதைத்தபடி

எப்போது தீருமோ எப்படித் தீருமோ
என்னும் எதிர்மறைக்கப்பால் எந்நாளும்
எண்ணத் தாள்கள் ஒவ்வொன்றையும்
எடுப்பதும் புரட்டுவதும் படிப்பதுமாய்
எல்லாவற்றையும் எதனுடனோ ஒப்பிட்டு
எதிர்வாதம் புரிந்தபடி என்னுள்ளே

என்ன செய்து என்ன மனிதர்களின்
ஏற்புரைகளற்ற எண்ணத்தின் வெளியில்
எதுமற்றதாகி எதுவும் புரியா நிலையில்
எந்நாளும் விடைகாண முடியா
ஏக்கங்கள் எத்தனையோ சுமந்து
எதிர்பார்ப்புக்களோடு ஏதிலியாய்
ஏழையாகிப் போனதான எண்ணம் மட்டும்
என்னுடன் மிஞ்சியதாய் என்றும்

No comments:

Post a Comment