ஆசையில் ஒரு கோட்டை
அவசரமாய்க் கட்டிவைத்தேன் 
அதன் மீது விதவிதமாய் 
அலங்காரம் செய்தும் வைத்தேன் 
சீமெந்துக் கல்லுதிர்ந்து 
சிதிலமாகும் என்பதனால் 
கருங்கல் பல எடுத்து 
களிமண்ணால் கார் பூசி 
கட்டிவைத்தேன் கோட்டை
கடல் அலை ஓடி வந்து 
கலைத்துவிட்டுப் போகுமென 
கனவிலும் நினைக்கவில்லை 
கண்டபின்னர் கலைந்தது 
கட்டிவைத்த கோட்டை
கறையான் பிடிக்காத
கட்டைகள் என எண்ணி 
கருங்காலிகள் எடுத்து
கவனமாய் அடி புதைத்து 
கட்டினேன் கோட்டை 
காற்றாய் விதி வந்து 
கட்டுக்களைத் தகர்த்து 
கூட்டாய் அள்ளிப் போனது
கொஞ்சம் கொஞ்சமாக நானும் 
கட்டிவைத்த என் கோட்டை 
விதியது வலியதுதான் 
பூவானமாய்ப் பூத்து
பொங்கி வழிந்து புவி நிறைத்து 
பார் முழுதுமாய் விரிந்து 
பகடைக்காய் ஆக்கிவிட்டு 
பதைக்கும் என்னைப் 
பள்ளத்தில் தள்ளியதேன் 
சுவாசிக்கும் நேரமெல்லாம் 
காற்றுக் கனதியாய் முகம் நிரப்பி
நெஞ்சக் கூடடைக்க வைத்துச் 
சண்டித்தனம் செய்கிறது 
மனமோ உடல்விட்டு மேலெழுந்து 
உயிர் காவி அந்தரத்தில் நிற்பதுவாய் 
உணர்விழக்கச் செய்கிறது 
என்ன சொல்லி என்ன ஒயிர் ஒன்றே 
உறவுக்காய் தரித்து நிற்கின்றது  
உணர்வு கொன்று உருக்குலைந்து 
உன்மத்தம் கொண்டு உயிர்ப்பிழந்து 
உற்றவர் முகம் பார்த்து மறுத்து 
ஊன் மட்டும் உள்ளக் கொதிப்புடன் 
ஒன்றுமற்று அனாதியாய் நிற்கிறது 

 
No comments:
Post a Comment