ஐந்தாம் வகுப்புப் படிக்கும் வரை நான் கல்வி பயின்றது கலவன் பள்ளியில்.
ஆண்களும் பெண்களும் ஒன்றாகவே படித்தோம். விளையாட்டில் நான்தான் முதல் எனது
பள்ளியில். ஓட்டப் போட்டியில் என்னை வெல்ல யாரும் இல்லை என்று அப்போது
எனக்கு கொஞ்சம் தலைக்கனமும்தான்.
மாவட்ட ரீதியான போட்டி இரு வாரங்களில் நடைபெற இருந்தது. அதற்காக ஆண்களில்
மூன்று பெண்களில் மூன்று பேராகத் தெரிவு செய்து ஆசிரியர்கள் எமக்குப்
பயிற்சி கொடுத்துக்கொண்டிருந்தனர்.
பெண்களில் நான் என்றால் ஆண்களில் கண்ணன் என்னும் ஒருவன் நன்றாக ஓடுவான்.
சாதாரணமாகவே எனக்கும் அவனுக்கும் சரிவருவதில்லை. எப்போது பார்த்தாலும்
எலியும் பூனையும் தோற்றுப்போகுமளவு சண்டை போட்டபடி இருப்போம்.
அவன் போய் வாத்தியாரிடம் கோள் சொன்னாலும் அடி அவனுக்குத்தான். அதனால் என்மேல் கடுப்போ கடுப்பு.
விளையாட்டுப் போட்டி நெருங்குவதால் சனிக்கிழமைகளிலும் பயிற்சி
ஆரம்பிக்கப்பட்டிருந்தது. நான் எப்போதுமே நேரம் தவறாததால் வெள்ளனவே
சென்றுவிட்டேன். அவனும் எனக்கு முன்னரே வந்துவிட்டான். எமக்குப் பொறுப்பான
ஆசிரியைகளில் ஒருவர் கூட வந்துவிட்டார். மற்றவர்களுக்காக சிறுது நேரம்
காத்திருந்ததில் ஆசிரியைக்கு கடுப்பு வந்திருக்கவேண்டும். சரி நீங்கள்
இரண்டு பேரும் தொடங்குங்கோ மற்றவை வரட்டும் என்று சொன்னவுடன் நாம் இருவரும்
ஆசிரியை கீறிய கோட்டில் போய் நின்றோம்.
என்ன இருந்தாலும் நான் தானடா முதலாவதா வரப்போறன் என்று நான் மனதுள்
எண்ணியபடி இண்டைக்கு இவனை விடக்குடாது என்று கங்கணம் கட்டிக்கொண்டேன்.
அவனும் அப்படி எண்ணியிருப்பான் என்று பின்னர்தான் எனக்குத் தெரிந்தது.
ஆசிரியர் விசில் ஊதியதுதான் தாமதம் இருவரும் ஓடத் தொடங்கினோம். அது ஒரு
சற்சதுரமான மைதானம். அதனால் வளைந்துதான் ஓடவேண்டும். நான் வெளிவட்டத்தில்
நின்றதனால் எனக்கு சிறிது முன்னே அவன் சென்றுவிட்டிருந்தான். ஆனாலும்
எனக்கு நம்பிக்கை நான் அவனை வென்றுவிடுவேன் என்று. மூச்சைப்
பிடித்துக்கொண்டு ஓடி அவனை முந்திவிட்டேன். இன்னும் சிறிது தூரம்தான்
ஆசிரியை கண்ணில் பட்டுவிட்டார். எனக்கோ அவனை முந்திவிட்ட சந்தோசம்.
திடீரென எதுவோ என்னை இடித்துத் தள்ள முகம் குப்புற விழுந்தது கொஞ்ச
நேரத்தில் ஆசிரியை என் அருகில் வந்தபோதுதான் தெரிந்தது. எருமை மாடு
என்னத்துக்கு அவளை இடிச்சனி. எவ்வளவு இடம் கிடக்குது இங்க என்று ஆசிரியை
அவனைத் திட்டித் தீர்த்தபோதுதான் அவன் என்னை இடித்து வீழ்த்தியது
புரிந்தது. அவனில் கோபம் ஏற்பட்டாலும் ஆசிரியரின் அர்ச்சனை அவன்மீது
தொடர்ந்துகொண்டு இருந்ததால் எனக்கு சந்தோசத்தில் ஒன்றும் தெரியவில்லை.
எழும்பு நீ என ஆசிரியை கூறவும் எழும்ப எத்தனித்த என்னால் எழும்ப
முடியவில்லை. இரு கைகளும், முழங்கால்களும் தேய்ந்து இரத்தம் வடிந்துகொண்டு
இருந்தது. அதன் பின் தான் எனக்கு நோவே தெரிய ஆரம்பித்தது. இன்னும் மூண்டு
நாள் இருக்கு போட்டிக்கு. என்னண்டு ஓடுறது எண்டு ஆசிரியை தனக்குத்தான
கதைத்தபடி எனக்கு முதலுதவி செய்ய மலங்க மலங்க விழித்தபடி கண்ணன் என்னைப்
பார்த்துக்கொண்டிருந்தான்.
அவன் திட்டம் போடாமலேயே என்னைத் தள்ளி வீழ்த்தியது கட்டிடம் கட்ட வைத்திருந்த சல்லிக் கற்களின்மேல்.........
அதன்பின் இருபத்தைந்து ஆண்டுகளின் பின் சிங்கப்பூரில் கோயில் ஒன்றில்
வணக்கிவிட்டு கணவர் பிள்ளைகளுடன் வெளியே வருகிறேன். என்பின்னால் என்
பெயரைச் சொல்லி யாரோ கூப்பிடுவது கேட்கிறது. இங்கே யார் என்னை என எண்ணியபடி
திரும்பினால் கண்ணன்.
உருவத்தில் கொஞ்சம் மாற்றம். ஆனால் அவனின் சிரிப்பு மட்டும் மாறவில்லை.
எப்பிடி என்னை அடையாளம் கண்டனீர் என்றவுடன் உம்மை மறக்க ஏலுமே என்றானே
பார்க்கலாம். என் கணவரின் முகம் போன போக்கை நினைத்தால் இப்போதும் சிரிப்பு
வருகிறது. நிலைமையை சமாளிக்க என்னுடம் ஐந்தாம் வகுப்புவரை ஒன்றாகப்
படித்தவர் என்று கூறியதும் கணவர் சமாதானமாகி அவனுடன் கதைக்கத்
தொடங்கிவிட்டார். இப்போது திருமணமாகி இரு பிள்ளைகளுடன் அவுஸ்றேலியாவில்
வசிப்பதாகக் கூறி, அங்கு வந்தால் தன் வீட்டுக்குக் கண்டிப்பாக வரவேண்டும்
என்றும் கேட்டு விடைபெற்றான்.
இப்போதும் எங்காவது விளையாட்டுப் போட்டி பற்றி தொலைக்காட்சியில் பார்த்தாலும் அந்தநாள் நினைவும் கூடவே வரும்.
No comments:
Post a Comment