Wednesday 11 June 2014

என் வீடும் அயலும் - கவிதை





என் வீடும் அயலும் என் நினைவில் வந்து போனது
பக்கத்து வீட்டு பாட்டியும் பாட்டனும்
பொக்குவாய் கொண்டு சிரிக்கும் சிரிப்பும்
பாக்கு வெற்றிலை இடிக்கும் சத்தமும்
பழைய நினைவாய் வந்து போனது

எதிர் வீட்டு அக்காள் எமக்குத் தெரியாமல்
எம்வீட்டுப் பூக்களை பறித்து வந்ததும்
எதுவும் கூறாமல் கொடுப்புள் சிரித்து
எதிரி வேறென எமக்கே சொன்னதும்
இன்று நினைப்பினும் சிரிப்பு வருகுது

எங்கள் துலாவில் ஏக்கங்கள் அற்று
எவ்வளவு தண்ணியும் அள்ள முடித்ததும்
வாக்கால் வழிந்தோட கால்கள் நனைத்து
வரம்புடைந்து வளவு நனைந்ததும்
வீட்டுக்காரரின் வசைகள் கடந்து
வசந்தமாய் சிரித்ததும் நினைவில் நிக்குது

கிட்டிப் புள்ளும் கிளித்தட்டும்
கீரைக் கறியும் கிழங்குகளும்
பக்கத்து வீட்டில் பறித்த மாங்காய்
பருவம் தப்பிப் பழுத்த பலா
முறிந்து விழுந்த வாழைக்குலை
முற்றாது பறித்த மாவின் காய்
மூலையில் பூத்த முருக்கம் பூ
கோடியில் படர்ந்த முசுட்டை என
முழுவதும் நினைவில் நிற்கிறது

தொடருந்தின் தடம் பார்த்து
தொலைவுவரை தொடர்ந்ததுவும்
தூரத்தில் தெரிந்த பனந்தோப்பை
தாண்ட முடியாது தயங்கியதும்
தெரிந்த முகங்கள் தொலைவாய்ப் போக
தோப்புக்குள் இருந்த தோடம்பழத்தை
தொப்பியால் மூடிக் கடத்தியதும் ...

காலம் எங்கள் கனவு சிதைத்து
கோலங்கள் பல காட்டியே நிற்க
கனவுகள் கடந்து நாம் கண்விரிய
வாடைக்காற்றில் அகப்பட்ட வள்ளமாய்
வேர்கள் அறுத்து வெளிநாடு வந்தோம்
கோடை இடி என் தேசம் சிதைக்க
கொண்ட கொள்கை கோட்பாடிழந்து
காலத்தின் வசத்தில் கேள்விகளாகி
எத்திசையும் எம் திசையாக்கி
எல்லை மறந்து வாழ்கின்றோம்

ஏனோ எம் மண்ணின் நினைவு
எப்போதும் எம்முடனே இருக்கின்றது
ஆனாலும் எந்தையர் எமக்காய் வாழ
ஏதுமற்று ஏதிலியாய் இருக்கின்றது
காய்ந்து போன காட்சிகள் மட்டும்
கனவுகளின் மீட்டல்களோடு
கந்தலாகிப் போன சுற்றங்களுடன்
காற்றில் மட்டுமே கேட்கும் கானமாய்
கைவிட்டுப் போன எம் கனவுகள் போல
எப்போதாவது வரும் ஏக்கங்கள் தாங்கி
நிலையான நினைவாகி நிலைத்துப் போனது

நிவேதா  

29.05.2014

No comments:

Post a Comment