Saturday 16 November 2013

நீலோற்பலம்

Posted 12 March 2013 - 09:54 AM
ambal-water-lily-nymphaea-nouchali-nymph



எனக்கு பூக்கள் என்றால் மிகவும் பிடிக்கும் என்று முப்பே சொல்லியிருக்கிறன் தானே. வீட்டுத் தோட்டத்தில் ஒரு சிறிய குளம் ஒன்று செய்து அதில் அல்லிகள் இரண்டும் மீன்களும் வளர்கிறேன். கடந்த இரு வருடங்களாக அல்லியும் மீன்களும் நல்ல விளைச்சல். கிட்டத்தட்ட நான்கு மாதங்கள் தொடர்ந்து பூத்தன அல்லிகள்.

எனக்கோ வித்தியாசம் வித்தியாசமாகப் பூங்கன்றுகள் வாங்குவதும், அதற்காகக் கணவரிடம் திட்டு வாங்குவதும் பிடித்த பொழுதுபோக்கு. கடந்த வருடம் தற்செயலாக  தமிழ் பாடப் புத்தகத்தில் ஆம்பல் பற்றிப் பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுத்தபோது என் வீட்டிலும் வளர்த்தால் நன்றாக இருக்குமே என எண்ணினேன்.

ஒன்லைனில் தேடியும் கிடைக்கவில்லை. ஈழத்துக்கு தொலைபேசியில் கேட்டால் அவர்கள் யாழ்ப்பாணத்தில் ஒரு இடத்திலும் கண்டதில்லை எனக் கையை விரித்தனர். நானோ விடவில்லை.
வன்னியில் இருக்கும் ஒருவராய் தொடர்பு கொண்டு கேட்டபோது அது இப்பொழுதெல்லாம் அழிந்துவிட்டது. அதுக்கும் வெள்ளை அல்லியோ அல்லது வேறு நிற அல்லியோ இருந்தால் மற்ற அல்லிகளை வரவே விடாது அழித்துவிடும் என்றும்
கூறினார்.

எனக்கு எப்பிடியாவது ஆம்பல் வேண்டும் என்று நான் அடம்பிடித்தேன். இன்று பார்க்கிறேன் நாளை பார்க்கிறேன் என ஆறு மாதங்கள்ஓடிவிட்ட நிலையில் கடந்தவாரம் அவர் உங்களுக்கு ஆம்பல் கிடைத்துவிட்டது இன்றே அனுப்பிவிடுகிறேன் எனக் கூறியதும் என் மகிழ்ச்சிக்கு அளவில்லை.

நேற்றுத்தான் வந்து சேர்ந்தது. அனுப்பியவர் இலைகள் பூக்கள் மொட்டுக்கள் எல்லாவற்றுடனும் சேர்த்து வேருடன் பறித்து அனுப்பியிருந்தார். இலைகள் எல்லாம் அழுகியிருந்தன. ஆனால் மொட்டுக்களும் பூவும் அப்படியே இருந்தது.

இப்போது குளிர் அதிகமானதால் குளத்துக்குள் போடாது பிளாஸ்டிக் தொட்டி ஒன்று வாங்கி நீர் நிரப்பி அவற்றைப் போட்டேன். எல்லாமாக நான்கு செடிகள்.

நான்கில் எதாவது ஒன்று தப்புமா?? அல்லது எல்லாமே தப்பிவிடுமா??? அல்லது
பட்டுவிடுமா?? என மனதில் கேள்விகளோடு அது துளிர் விடும் நாளுக்காய்க்
காத்திருக்கிறேன்.

அது துளிர்க்கும் என்னும் அசையாத நம்பிக்கையும் கூடவே வருகிறது ஏனெனில்
நந்திக்கடலிலே தானே எம் உறவுகள் பலர் தொலைந்து போனார்கள். அவர்களின் குருதி சிந்திய நந்திக்கடலில் இருந்து வேருடன் கிளப்பப்பட்டு என்னிடம் வந்திருக்கும் ஆம்பல் நிட்சயம் தளிர்க்கும் என்னும் நம்பிக்கை எனக்கு இருக்கிறது.


No comments:

Post a Comment