யாழ் உறவுகளைச் சந்தித்து மூன்று வாரமாகிறதே. சுமே ஒன்றுமே எழுதவில்லையே
என்று பலர் முனுமுனுப்பது என் காதுக்குக் கேட்டதனால் இன்று எப்படியாவது
எழுதிவிடுவதேன்று முடிவெடுத்தேன். அதை எழுத ஆரம்பிக்குமுன் அதற்குமுன்
நடைபெற்ற மறக்க முடியாத நிகழ்வு ஒன்றும் நினைவில் வர சரி அதையும்
எழுதுவோம். யாழ் உறவுகள் வாசிப்பார்கள் தானே என இதை முதலில் எழுதினேன்.
எனது பட்டறை 22 தொடக்கம் 26ம் திகதிவரை. நானும் மகளும் பாரிஸ் - கார் டு
நோர்ட் புகையிரத நிலையத்துக்கு அண்மையில் உள்ள Mercure Paris Terminus
நோர்த் என்னும் தங்குவிடுதியில் மூன்று நாட்கள் தங்குவதற்கு பதிவு
செய்திருந்தோம். கோமகன் தனது தள்ளுபடி அட்டையைப் பயன்படுத்தி அதை
எமக்காகப் பதிவு செய்திருந்தார். என் மகள் 27ம் திகதிதான் என்னுடன் வந்து
சேர்ந்துகொண்டாள்.
கோமகனின் துணைவியோ சந்திப்புக்கு முன்பே என்னைப் பார்க்கவேண்டும் என்றதனால்
ஒருநாள் மாலை அவரை 5 மணிக்குப் பின்னர் வரும்படி கூறினேன். அவர் வந்தவுடன்
என்னை தன்னுடன் தமது வீட்டுக்கு அழைத்துப் போகப்போவதாகவும் திரும்பக்
கொண்டுவந்து விடுவதாகவும் கூறியதால் நானும் சரி என்று அவருடன் கிளம்பினேன்.
அவரும் யாழ்கள உறுப்பினராதலால் யாழ்ப்புதினங்களையும் மற்றவற்றையும்
மகிழ்வாகக் கதைத்தபடி தொடருந்தில் பயணித்தோம். நீங்கள் எங்கள் வீட்டிலேயே
தங்கலாம் என்றார் அவர். பார்ப்போம் என்று கூறினேனே தவிர உடனே பதில்
கூறவில்லை. நான் எங்கும் சமாளிப்பேன். மகளிடம் விடுதியில் தங்குவதாகக்
கூறிவிட்டு வீடு ஒன்றில் போய் இருக்கச் சம்மதிக்கிறாளோ என்றும் ஒரு யோசனை.
அடுத்து கோமகனின் வீடு எப்படியோ தெரியாது. போய்ப் பார்த்து முடிவு செய்வோம்
என்று இருந்துவிட்டேன். தொடருந்து நிலையத்தில் இருந்து பேருந்தில் 10
நிமிடம் பயணம் செய்ய அவர்கள் வீடு வந்தது.
சுற்றிவரப் பென்னம்பெரிய மரங்களுடன் மிக அழகான இடமாக இருந்தது. அவர்கள்
வீடு 5வது மாடியில் இருந்தது. அங்கிருந்து பார்க்க மரங்கள் அருகில் தெரிவது
எனக்கு ஒரு வித்தியாசமான அனுபவமாக இருந்தது. அவர்களுடன் கதைத்துவிட்டு
சுவையான இரவு உணவையும் அதிகமாக உண்டதில் நேரத்தைக் கவனிக்கவில்லை. அங்கு
இரண்டு மூன்று நாட்களாக தொடருந்துத் தடங்கல் ஏற்பட்டிருந்தது அவர்களுக்கு
நினைவில் வந்தது. நீங்கள் இங்கேயே நின்றுவிட்டு காலையில் போகலாமே என்றார்
திருமதி கோ. நான் என் பொறுப்பாளரிடம் சொல்லவில்லை. எனவே கட்டாயம்
போகவேண்டும் என்றேன். சரி வாங்கோ போவம் என்று மைத்திரேயி புறப்பட்டார்.
கோமகன் வரவில்லையா என்றதற்கு அவர் இரவு உணவு உண்டால் வெளியே வரவே
பஞ்சிப்படுவார். அவரைக் கிளப்புவதர்க்கிடையில் நானே உங்களைக் கொண்டுவந்து
விடுகிறேன் என்றவுடன் கொஞ்சம் யோசனையுடனேயே கிளம்பினேன்.
பத்து நிமிடத்தில் நடந்து போய்விடலாம் என்றவர் பத்து நிமிடம் தாண்டியும்
நடந்துகொண்டு இருப்பது தெரிந்தும் வேறு வழியின்றி அவருடன் நடக்கிறேன்.
நேரம் இரவு 10.25. தூரத்தில் தொடருந்து வரும் சத்தம் கேட்க சுமே வாருங்கள்
ஓடிப்போனால் இதைப் பிடிக்கலாம் என்கிறார் மைத்திரேயி. எனக்கோ தெரியாத பாதை,
கும்மிருட்டு, மழை பெய்த சேற்றுநிலம், சாப்பிட்ட மயக்கத்தோடு நடந்த
களைப்புவேறு ஓடுவதற்கு மனம் இடம் கொடுக்கவில்லை.
என்ன சுமே நீங்கள். நானென்றால் இவ்வளவத்துக்கு ஓடிப்போய் ஏறி இருப்பன்
என்று மைத்திரேயி உசுப்ப கொஞ்சம் விரைவாக நடந்து போனால் கிட்டப்போக வண்டி
கிளம்பிவிட்டது. சரி ஒரு 20 நிமிடம் இன்னும் நிக்கவேணும் என்று
எண்ணிக்கொண்டிருக்க இனி இன்று தொடருந்து ஓடாது என்று எழுதிப்
போட்டிருக்கிறான். தொடருந்துக்குப் பதிலாக பேருந்து விட்டிருப்பார்கள்.
வாங்கோ அங்கே போவோம் என்றார்.
சரி என்று அங்கு போய் நின்றால் ஒரு ஆண் மட்டும் நிக்கிறான். நேரமும்
இருபது, முப்பது நிமிடம் என்று போக எனக்கு பஸ் வருமா என்று சந்தேகம்.
மைத்திரேயியிடம் அந்த ஆணிடம் கேட்கும்படி கூறுகிறேன். அவரும் கேட்டுவிட்டு
வந்து வருமாம் என்கிறார். ஒருவாறு எனது பொறுமையை அளவுக்கதிகமாகச்
சோதிக்காது பேருந்து வருகிறது. பேருந்தில் நானும் மைத்திரேயியும்
ஓட்டுனரும் அந்த ஆணும் மட்டுமே. சாதாரணமாக இரவில் பேருந்துகளில்
மின்விளக்குகள் நன்றாக ஒளிரும். ஆனால் இந்த பஸ்ஸில் மங்கலாக இரு விளக்குகள்
மட்டுமே.
எல்லா இடங்களிலும் நிறுத்த மாட்டார்கள். ஆனபடியால் விரைவில் போய்விடலாம்
என்றதில் மனம் கொஞ்சம் சமாதானமடைகிறது. எம்முடன் ஏறிய மனிதன்
ஓட்டுனருக்குப் பக்கத்தில் நின்றுகொண்டு பிரெஞ்சு மொழியில் எதோ
கதைக்கிறான். எனக்கோ ஒன்றும் புரியவில்லை. ஆனால் அந்த மனிதனிடமிருந்து
வரும் மது வாடை மட்டும் என் மூக்கில் மோதி அருவருப்பை உண்டாக்குகிறது.
எல்லா இருக்கைகளும் வெறுமையாக இருக்கின்றன. ஆனால் நாம் இருக்கவில்லை. நான்
வெளியே பார்த்துக்கொண்டு வருகிறேன். நான் இருப்பது மிற்றி மோறி என்னும்
இடத்தில். வந்து மூன்று நாட்களிலேயே எனக்கு அந்த இடத்தின் பெயர் நினைவில்
பதிந்துவிட்டது. நான் பார்த்துக்கொண்டு நிற்க மிற்றி மோறி என்று
பெயர்ப்பலகை காட்ட, அந்தப்பக்கம் போகாமல் பேருந்து வேறுபக்கம் போவது
தெரிந்தது.
எனக்குள் பதட்டம் ஏற்பட நான் மைத்திரேயியைக் கூப்பிட்டு பஸ் என்
இருப்பிடத்திர்க்குச் செல்லவில்லை என்கிறேன். அவருள் என்மீது சந்தேகம்
ஏற்பட்டுதோ என்னவோ கொஞ்சம் பொறுங்கோ என்கிறார். எனக்கோ எரிச்சல். எனக்கு
மொழி தெரியாதபடியால்த்தானே கேட்காது நிற்கிறேன். தெரிந்தவர் போய்க்
கேட்பதற்கு என்ன என்று. மீண்டும் ஓட்டுனரிடம் கேட்கும்படி நான் வற்புறுத்த
மைத்திரேயி போய்க் கேட்டுவிட்டு வந்து, ஓம் சுமே மாறித்தான் விட்டுவிட்டான்
அவனுக்கு இடம் தெரியாதாம். இனிச் சுற்றி வேறுபாதையால்த்தான் அங்கு
போகவேண்டுமாம் என்று சொல்கிறான் என்றார். எனக்கோ ஒன்றும் புரியவில்லை.
இவங்கள் இருவரும் சேர்ந்து எம்மை எங்கோ கடத்திக்கொண்டு போகப்போறாங்கள் என்ற
பயமும் சேர என் கணவருக்குப் போன் செய்கிறேன்.
அந்த நேரத்தில் லண்டனிலிருந்து கணவர் ஒன்றும் செய்துவிடப் போவதில்லை.
இருந்தாலும் ஏதும் நடந்தால் அவராவது சாட்சியாக இருப்பார் என்பது என்
எண்ணம். உன்னை அவன் கடத்திக் கொண்டு போய் என்ன செய்யிறது என்று அந்த
இரவிலும் கணவர் நையாண்டி செய்வது வேறு எரிச்சலைக் கிளப்ப போனை வைக்கிறேன்.
நான் கதைத்துக்கொண்டிருக்கும்போதே கோமகனும் போன் செய்கிறார். மைத்திரேயி
நான் பயப்படுவது பற்றி அவரிடம் கூறிச் சிரிப்பது கேட்கிறது.
பெண்கள் இருவரையும் தனியே அனுப்பிவிட்டு அவருக்கு வீட்டிலிருந்து என்ன
விசாரிப்பு வேண்டிக்கிடக்கென மனதில் எரிச்சல் ஏற்படுகிறது. கணவர் ஆறுதல்
கூறிவிட்டு போனை வைத்துவிட்டார். இரவு 11.25. நான் எப்படி வீட்டுக்குத்
தனியாகப் போவது? எனவே பொறுப்பாளருக்கு போன் செய்கிறேன். அவரின் தொலைபேசி
வேலை செய்யவில்லை. இன்னொரு டென்மார்க்கிலிருந்து வந்த பெண். நல்ல
துணிவுள்ளவர். அவருக்கு எடுத்து விடயத்தைக் கூறுகிறேன். அவர் பொறுப்பாளரின்
கணவருக்குக் கூற அவரும் தொலைபேசியில் தான் தரிப்பிடத்துக்கு வருவதாகக்
கூறச் சற்று நின்மதி பிறக்கிறது.
சரியாகப் 11.35 க்கு பஸ் தரிப்பிடத்தை அடைய நின்மதியாக இறங்குகிறோம்.
இறங்கியவுடன் மைத்திரேயி திரும்பப் போவதற்கு பேருந்து அட்டவனையத்
தேடுகிறார். இப்ப 5 நிமிடத்துக்கு முன்தான் கடைசி பஸ் போனது இனி நாளை
விடியத்தான் என என்னைக் கூப்பிட வந்தவர் கூற, என்னுடன் வந்து தங்கிவிட்டு
நாளை போங்கள். பஸ் இருந்தாலும் நான் உங்களைத் தனியே அனுப்ப முடியாது.
கோவுக்குப் போன் போட்டுச் சொல்லுங்கள் என்று கூற அவரும் சரி என்கிறார்.
என் மறக்க முடியாத நினைவுகளில் ஒன்றாக இதுவும் அமைந்துவிட்டது.
No comments:
Post a Comment