Saturday 16 November 2013

நாட்டு வையித்தியமும் நானும்

வயது போகப் போக ஆசையள் கூடுறது இயற்கைதானே. நான் மட்டும் அதுக்கு விதிவிலக்கே.
ஒரு ஆறு எழு மாதங்களுக்கு முதல் தமிழரசு அலோவேரா( Aloe vera ) என்னும் கள்ளியின் பயன்கள் என்று நிறையப் போட்டிருந்தார். செடிகளில் ஆர்வம் உள்ள நானும் சரி எதுக்கும் ஒண்டை வாங்கி நானும் வீட்டுக்குள்ள வளர்ப்பம் எண்டு வாங்கி வச்சன். எண்ட கைராசியோ என்னவோ அதுக்கும் கிடு கிடு எண்டு வளர்ந்து காண குட்டியள் போட்டு பெரிதாகிக் கொண்டே வளர்ந்திது.

அதை உண்டால் நல்லது என்று பல மருத்துவக் குறிப்புகள் பார்த்தாலும் ஒரு பயத்தில தொட்டும் பார்க்கேல்லை. jitvil போடுற குறிப்புக்களையும் அடிக்கடி பாக்கிறனான். நேற்று சும்மா தட்டிக்கொண்டு போகேக்குள்ள கற்றாளைச் சாற்றை தேங்காய் எண்ணெயுடன் கலந்து தலைக்குத் தேக்க முடி நன்றாக வளரும் எண்ட குறிப்பு.

நானும் பாத்தன். சாப்பிடிற அலுவல் இல்லை. தலைக்கு வைத்துத் தேய்க்கும்படிதானே போட்டிருக்கு ஒருக்காச் செய்து பாத்ததா என்ன ஏன்டா ஆசை வந்திது. எனக்கு பெரிய கை. அதாவது எதைச் செய்தாலும் கனக்கச் செய்யிறது. கஞ்சத்தனம்   கொஞ்சமும் இல்லை. அதால பெரிசா ஒண்டை வெட்டிக் கொண்டு வந்தன்.

வந்தாப்பிறகுதான் அதில விரிவா அளவு ஒண்டும் போடேல்லை. என்ன செய்வம் என்று ஒரு செக்கன் தான் யோசிச்சனான். உடன கத்தியால வெட்டிப்போட்டுக் கையால புளிஞ்சு பாத்தன் முடியேல்லை. என்னட்ட சின்ன உரல்  இருந்தபடியா அதுக்குள்ளே போட்டுக் குத்த தோல் தனிய யெலி தனிய வந்திது.  அதைப் பாக்கவே நொழு நொழு என்று இழுபட்டுது. ஒருவித அருவருப்பும் எட்டிப் பார்க்க, இது தேவையா என்று மனச்சாட்சி இடிக்க, அப்பிடியே விடுவம் எண்டு நினைக்க, நீளமான கருங்கூந்தல் கண்முனால் விரிய ஆசைதான் வெண்டுது.

அதை ஒருவாறு உரலில் இருந்து எடுத்து ஒரு அலுமினியப் பாத்திரத்தில் போட்டு தேங்காய் எண்ணையும் விட்டுக் கலக்கினால் இரண்டும் ஒண்டோடை ஒண்டு ஒட்டாமல் சண்டைப் பிடிக்க அதைத் தூக்கி அடுப்பில வச்சு சூடாக்கினன்.
ஒரு நிமிசமும் இல்ல இரண்டும் கலபட்டுப் போச்சு. சந்தோசமா தலையில வச்சு, மசாச் செய்து ஒரு 20 நிமிடம் ஊறவச்சு இரவு 11 மணிக்குத் தோஞ்சு போட்டுப் படுத்திட்டன். இரவு கனவிலையும் நீண்ட கருங்கூந்தல்தான்.

எங்கட குளியல் அறைக்குள்ள பெண்ணாம்பெரிய கண்ணாடி கொழுவி இருக்கு. காலமை எழும்பி பல்லுத்தீட்டி முடிய, முக அழகைப் பார்க்கவேண்டி  கண்ணாடிப் பக்கம் திரும்பின எனக்கு அதிர்ச்சி. கண்ணாடியில வேறை யாரோ தெரிஞ்சினம். கண்ணைக் கசக்கிப் போட்டுத் திரும்பவும் பாத்தன்.என் தலை முடியெல்லாம் கருமை நிறமிழந்து  மண்ணிறமாய் மாறியிருந்திது.

No comments:

Post a Comment